சூழல் நெருக்கடியும் மீன் வள பாதிப்பும்

Yale  பல்கலைக்கழகத்தின் Center For Environmental Law & Policy துறை மற்றும் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் Center for International Earth Science Information Networkம் இணைந்து 2024 ஆம் ஆண்டிற்கான Environmental Performance Index ஐ வெளியிட்டு இருக்கிறார்கள்.  

காற்றின் தரம், விவசாயம், நீர் வளம், நீர் மேலான்மை, பல்லுயிர்சூழல், மீன் வளம் உள்ளிட்ட 11 முக்கியச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும், அவற்றின் பாதிப்பு மற்றும் இவை தொடர்பான 58 வகையான வெவ்வேறு குறியீடுகளையும் தரவுகளையும் கவனத்தில் கொண்டு 180 நாடுகளுக்கான தர வரிசை பட்டியல் தயார் செய்யபட்டுள்ளது. இதில் 176ஆம் இடத்தை  பெற்றிருக்கிறது இந்தியா. 

ஆசிய நாடுகளில் இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த செறிவான  தரவுகளுக்கான போதாமை உள்ளதை உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டுவது வழக்கம். இந்த அறிக்கையை தயாரித்த ஆய்வாளர்களும் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் இந்த ஆய்வுக்கு தேவையான  standardized data வுக்கான போதாமையை  முக்கிய பிரச்சனையாக குறிப்பிடுகிறார்கள்.

ஆய்வு மேற்கொள்வதில் இத்தகைய சவால்கள் இருந்தாலும், மீன்வள (fisheries)  தரவரிசையில்   இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரட்சனையாக தெரிகிறது. 8 நாடுகளை கொண்ட  தெற்காசிய நாடுகளின் வரிசையில்   இந்தியா  கடைசி இடம் பிடித்து இருக்கிறது (உலக  அளவில் 116/141). 

உலகளாவிய சிக்கல்: 

இந்தியா மட்டுமல்லாது கடல் மற்றும்   இதர நீர்சார் உணவு உற்பத்தி & நுகர்வில் இருக்கும் சுற்றுச்சூழல் & தற்சார்பு (sustainability)  சார்ந்த  சிக்கல் குறித்த, உணவு மற்றும் விவசாய ஆய்வு நிறுவனத்தின் (FAO)  சில முக்கியமான கருத்துக்களை இந்த அறிக்கையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். உதாரணமாக, 1961 முதல் 2019 காலகட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 3% என்ற அளவில் நீர்நிலை சார் உணவுகளின் நுகர்வு அதிகரித்து இருப்பதாகவும், இது அதே கால கட்டத்தின் உலக மக்கட்தொகை பெருக்கத்தின் சராசரியை  விட இருமடங்கு அதிகமெனவும்… நிலையற்ற (unsustainable) மீன் பிடி முறைகள், கட்டுப்பாடற்ற மிக அதிக மீன் வளச்சுரண்டல், சட்ட விரோத உயர் தொழில் நுட்ப உதவியுடன் நடக்கும் ஆழ்கடல் மீன் பிடிப்பு போன்ற காரணங்களினால் கடலுயிர்ச்சூழல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும், பல மீன் இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.  இதனால், உலக  அளவில்,  கடல் மற்றும் இதர நீர்நிலை மீன் பிடிப்பு (wild-capture fisheries)  அதன் biophysical வரம்பை   எட்டிவிட்டதாகவும், கரைக்கு பிடித்து வரப்படும் மீன்களில் மூன்றில் ஒரு பகுதி அதன் நீட்டித்த உயிரியல் வரம்புகளுக்கு (biological sustainable limit) அதிகமாக சுரண்டப்படும் அவல நிலையை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  

தீர்வுகள்: 

தொடர்ந்து  அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, கடல் சார் மீன் உற்பத்திக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டு… கடந்த முப்பது ஆண்டுகளில் 600 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ள உள்நாட்டு மீன் உற்பத்தி (aquaculture) முறையை மேற்கொள்வதில் இருக்கும் பற்பல சுற்றுசூழல், உள்கட்டமைப்பு, செயல்திறன் மற்றும்  தற்சார்பு சார்ந்த சவால்களை பட்டியலிடும் அறிக்கை, இவற்றுக்கு புதிய மாற்றாக சிப்பி & கடல் பாசிகளை நிலைத்த  அகுவா கல்ச்சர் முறையில்  உற்பத்தி செய்வதையும், இவ்வுணவுக்கான தேவையை மக்களிடம் அதிகரிக்கும் வண்ணம் வளர்ச்சித் திட்டங்களை தீட்டுவதை  மிக முக்கியத் தீர்வாக  முன்வைக்கிறது. இது தமிழக & இந்தியச் சூழலுக்கு எந்த அளவுக்கு பொருந்தும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை வாசகர்களின் அனுமானத்திற்க்கே விட்டு விடுகிறேன். 

Mass production (vs.) Production by masses: 

உயர் தொழிற்நுட்ப உதவியுடன், அதிக செயற்திறன் கொண்ட ஆழ்கடல் & இதர மீன் பிடி முறைகளை பின்பற்றி அதிக மீன்கள் உற்பத்தி (mass production) செய்ய முற்படும் நாடுகள் (உ.ம் அமெரிக்கா, இரஷ்யா, சீனா, இந்தியா, வியட்னாம்) போன்ற நாடுகள் நீட்டித்த உற்பத்திக்கான குறியீடுகளில் பின்தங்கியிருப்பதையும்… அதே சமயம், பகுதி சார்ந்த பிரச்சனைகளைக்  களைந்து பாரம்பரிய கைவினை மீன் பிடி தொழில்நுட்ப   உதவியுடன், சிறிய மீனவக் குழுக்கள் மற்றும் படகுகள் மூலம், சிறிய அளவிலான (small-scale) மீன் பிடி தொழிலில்  ஈடுபடும் நாடுகளில் (உ.ம். பின்லாந்து, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு) சுற்றுச்சூழல் & தற்சார்பு குறியீடுகளில் சிறந்து விளங்குவதை இதே அறிக்கை குறிப்பிடுகிறது. 

நமக்கான செய்தி இதில் தான் அடங்கி இருக்கிறது. இந்திய / தமிழக சூழலில் சிறிய அளவில் மீன் பிடி தொழில் &  கடல் சார் தொழில்களில் ஈடுபடும் மக்களின் பிரச்சனைகள் இத்தகைய அறிக்கைகளுக்குள் அடக்க முடியாதவைகளாக   இருக்கின்றன. நூறு கிலோ மீட்டருக்குள்    இருக்கும் பழவேற்காடு, காசிமேடு, பெசன்ட் நகர் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள ஒரே மாதிரியானவையாக  இல்லை என்பது நாம்  அனைவரும்  அறிந்ததே. 

நிலைத்த உற்பத்தியை மேம்படுத்த அந்தந்த பகுதி சார்ந்த சிறிய படகு  மீனவர்களின் பிரச்சனைகளை அவர்களிடம் ஆலோசித்து ஆக்கப்பூர்வ   ஆய்வு செய்வதும் வாழ்தார மேம்பாடுகளுக்கான திட்டங்களை வகுப்பது, ஆழ்கடல் மீன் பிடிப்பை படிப்படியாக de growth  செய்து small scale தொழில்களிலும் இதர    கடல் சார்ந்த தொழில் வாய்ப்புகளை ஊக்குவிப்பதிலும் சட்ட விரோத மீன் பிடிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அரசும் விரைந்து செயல்பட வேண்டும். துறைசார் ஆய்வாளர்கள் இவை சார்ந்த விவாதங்களை எழுப்புவதற்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தர முன்வர வேண்டும்.

காலநிலை மாற்றம் (Climate change) என்கிற நிலையிலிருந்து இன்று காலநிலை பேரழிவு (climate catastrophe) என்ற கட்டத்தை அடைந்துவிட்டோம். 50 ஆண்டுகளில் நடக்க வேண்டிய  சூழல் மாற்றங்களும் சீரழிவுகளும் 5-10 ஆண்டு இடைவெளியில் நடந்துகொண்டு இருப்பதை கவனிக்கிறோம். ஆக, மீன் வளம் உள்ளிட்ட பல  சூழல் சார்ந்த பாதிப்புகளை  கையாள்வதில் இன்னும் வேகமும் மாற்று அணுகுமுறையும் தேவை என்பதே இத்துறை சார்ந்து சிந்திக்ககூடிய வேலை செய்யக்கூடிய பலரின் கருத்தாக உள்ளது. 

ஒரு சிக்கலை உருவாக்கும் போது இருந்த அதே சிந்தனை முறைமைகளை பயன்படுத்தி அந்த சிக்கலுக்கான தீர்வை ஒருபோதும் கண்டடைய முடியாது என்ற ஐன்ஸ்டினின் வார்த்தைகள் முன்பை விட இப்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

One thought on “சூழல் நெருக்கடியும் மீன் வள பாதிப்பும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version