தென் கிழக்கு ஆசியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் சிங்கப்பூர் ஒரு மிகச் சிறிய தீவு நாடு. சிங்கப்பூர் என்றாலே வானுயர்ந்த கட்டிடங்களே நினைவுக்கு வரும். சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைவதற்கு முன்னால், புவியியல் அடிப்படையில் ஒரு மழைக் காடாகவே இருந்தது. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு மழைக் காடுகள் அழிக்கப்பட்டு நகரமாக உருப்பெற்றது. ஆனால் இப்போதும் சிங்கப்பூர் அரசு தன்னுடைய நிலப்பரப்பில் 27%காடுகளை மிச்சம் வைத்திருக்கிறது. இன்றைய சூழலில் ஒரு மிகச் சிறிய நாடு இந்த காடுகளை எளிதில் அழித்து மனிதத் தேவைகளுக்கு எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் காடுகளின் அவசியத்தை உணர்ந்த சிங்கப்பூர் அரசு 27% நிலப்பரப்பு காடுகளை பாதுகாக்கிறது. மேலும் 29% பசுமை பரப்பை நிலப்பரப்பில் குடியிருப்புக்குகளுக்கு நடுவில் பராமரிக்கிறது. தேசிய பூங்காக்களில் மழைக் காடுகளுக்கே உரிய உயரமான மரங்களை பார்க்க முடியும். மரங்களின் பருமனை அடிப்படையாகக் கொண்டு, பல மரங்களுக்கு சிறப்பு மரபுடைமை [Heritage Trees] அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது.
சிங்கப்பூர் ஒரு தீவு நகரம் என்பதால், கடல் பறவை இனங்கள், கழிமுகப்பறவை இனங்கள் மற்றும் ஈர நிலத்திற்கு வலசையாக வரும் பறவையினங்கள் என பல பறவையினங்களை இங்கே பார்க்க முடியும். சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் ஈர நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அங்கே வலசை பறவைகள் பூமியின் வடதுருவத்தில் இருந்து வருகின்றன. மேலும், மழைக் காடுகளின் மீதம், மழைக் காடுகளுக்கே உரித்தான பல பறவை இனங்களைக் கொண்டுள்ளது. சுங்கேய் பியூளா என்ற ஈர நிலத்திற்கு பறவைகளை அவதானிப்பதற்காக ஒரு காலை நேரம் சென்றிருந்தேன். உள்ளே நுழையும் போதே “இங்கே முதலைகள் உண்டு. கவனமாகச் செல்லுங்கள்” என்ற எச்சரிக்கை பலகை இருந்தது. ஆறு, கடல், கழிமுகம், அலையாத்தி மரங்கள், ஈர நிலம் என உயிர்ச்சூழல் நிறைந்த இடமாக இருந்தது.
அலையாத்தி மரங்கள் இருபுறமும் இருக்க நடுவே நடந்து செல்ல பாதை அமைத்திருக்கிறார்கள். எனக்கு முன்பாக இரண்டு பேர் மட்டுமே சென்று கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்த சாம்பல் நாரை [Gray Heron] ஒன்றை படம் எடுக்க என்னுடைய காமிரா வழியாக முயற்சித்தேன். ஒரு கண்ணை மூடியும், ஒரு கண் மூலம் காமிரா வழியாக அந்த பறவையை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, என் அருகே ஏதோ ஒரு பெரிய உருவம் தரையில் நின்று கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அங்கேயே அசையாமல் நின்றபடி என் கண்ணைத் திறந்து பார்த்தேன். எனக்கு மிக அருகிலேயே ஒரு நீர் நாய் [Smooth coated Otter] நின்று கொண்டிருந்தது. சிங்கப்பூரில் பெரும்பாலான இடங்களில் இன்றும் நீர் நாய்களை பார்க்க முடிகிறது. அவை ஓரளவு மனிதர்களுடன் வாழப் பழகிக் கொண்டன. இந்தியாவில் முன்பு இந்த நீர்நாய்கள் பல இடங்களிலும் இருந்த ஒன்று தான். தற்போது காடுகளுக்குள் அரிதாகவே பார்க்க முடிகிறது. ஆனால் இங்கு பூங்காக்களில் கூட நீர் நாய்களை பார்க்க முடிகிறது. ஆற்றின் கரையோரங்களில் முதலைகளை [Salt Water Crocodile] பார்க்க முடிந்தது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பல இடங்களில் இந்த முதலைகளை பார்க்க முடியும்.
தொடர்ந்து நடந்து சென்ற போது, ஒரு இலை காற்றில் வேகமாக சுழன்று வருவது போல இருந்தது. உற்று நோக்கியபோது, அது பறக்கும் பல்லி எனத் தெரிந்தது. பழனி மலைத் தொடரிலும் இதே போன்ற பள்ளிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு நான் பார்த்தது சுமத்ரா பறக்கும் பல்லி [Sumatran Gliding Lizard]. சிங்கப்பூரின் பெரும்பாலான இடங்களில் காணப்படும் மற்றொரு உயிரினம் உடும்பு [Malayan Water Monitor]. நான் நடந்து சென்ற பாதையிலே பார்க்க முடிந்தது. பறவைகளை அவதானிக்க ஒரு கோபுரம் அமைத்திருக்கிறார்கள். அதில் ஏறி நின்றால் பல பறவையினங்களைப் பார்க்க முடிகிறது. செவ்வரி நாரைகள், கொக்குகள், சாம்பல் நாரைகள், தேன் பருந்து போன்ற பறவைகளை காண முடிந்தது. மேலும் பறவைகளை அருகில் சென்று அவதானிக்க ஒரு மறைவான அறை அமைத்திருக்கிறார்கள். அதில் இருக்கும் துளைகள் வழியாக, பறவைகள் அறியாத வண்ணம் அவற்றுக்கு இடையூறு இன்றி பார்க்க முடியும். அங்கிருந்தவர்கள் மிகவும் அமைதி காத்தனர். நிறைய உள்ளான் பறவையினங்களைப் பார்க்க முடிந்தது. இங்கிருக்கும் ஆராய்ச்சி மையம் சில பறவைகளுக்கு வளையமிடுகிறது. பறவைகளின் வலசை பாதையை அறிந்து கொள்ள இது போன்ற வளையமிடும் முறையை பல்வேறு நாடுகளும் கடைப்பிடிக்கின்றன. நிறைய உள்ளான்களுக்கு ஏற்கனவே வளையம் இடப்பட்டிருந்ததை கவனித்தேன். சிங்கப்பூர் அடையாள நிறம் பச்சை மற்றும் வெள்ளை. சில பறவைகளின் கால்களில் அதே நிற வளையங்கள் இருந்தன. அநேகமாக கடந்த ஆண்டுகளில் இடப்பட்ட வளையமாக இருக்கலாம்.
சிங்கப்பூரின் மையத்தில் அமைந்திருக்கும் புக்கிட் திமா என்ற மலை இப்பொழுதும் மரங்கள் அடர்ந்த காடாக இருக்கிறது. மலாயன் புலிகள் [Malayan Tiger] சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் முக்கியமான ஒன்று. வங்கப் புலிகளை சற்றே சிறிய இந்த புலி இனம் வாழ்ந்து வந்ததன் அடிப்படையில், சிங்கப்பூரின் உயிர்ச்சூழல் எவ்வாறு இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறது. 1930 ஆண்டு சிங்கப்பூரில் வாழ்ந்த கடைசி புலி ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது. தற்போது இது பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக இருக்கிறது. இங்கே இருக்கும் அடர்ந்த மரங்களில் ஏராளமான பறவை இனங்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக கொண்டைக் குருவிகளின் பல இனங்கள், துடுப்புவால் கரிச்சான் [Rocket tailed Drongo], நீலச் சிட்டு [Asian Fairy Bluebird], தேன் சிட்டு இனங்கள், மலர் கொத்தி இனங்கள், மரங் கொத்தி இனங்கள், புறா இனங்கள் எனப் பல பறவையினங்களை காண முடிகிறது. மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள் தரைப்பரப்பு முழுவதும் அடர்ந்திருக்கிறது. மழை நேரங்களில், ஒரு மழைக் காட்டை பெரு நகரத்தின் மத்தியில் இன்றும் உணர முடிகிறது.
163 மீட்டர் கொண்ட இந்த புக்கிட் திமா மலையில் வாகனங்கள் சொல்லும்படியாக சாலைகள் இல்லை. நடந்தே செல்ல வேண்டும் என்பதால், அதிக பாதிப்புகளை சந்திக்காமல் இருக்கிறது இந்த மலை. மலையின் உச்சியில் நின்று சுற்றி இருக்கும் நெடு மரங்களில் பறவைகளை அவதானிக்க முடியும். மலையின் உச்சியை அடைந்தபோது, பகல் பொழுதிலும் அதிக ஒளி ஊடுருவ முடியாதபடி இருந்த மரங்களுக்குள் நீலச் சிட்டின் சிறகுகள் ஒளிர்ந்தன. இது போன்ற மழைக் காடுகளில் பறவைகளை அவதானிப்பதில் இருக்கும் ஒரு சிக்கல் அவை கவிகையில் [Canopy] இருப்பது தான். கீழிருந்து பார்க்கும் பொழுது அவற்றை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது.
சிங்கப்பூரில் ஓடும் சிராங்கூன் நதியின் கரையில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சிறிய பறவையை கண்டேன். மரத்தின் கிளைகளுக்கு நடுவில் இருந்து அவை ஒலியெழுப்பிக் கொண்டே இருந்தன. உயரமான மரங்களில் அமரும் பறவைகளையோ அல்லது அடர்ந்த கிளைகளுக்கு இடையே இருக்கும் பறவைகளையோ பார்ப்பது சற்று கடினமானது. நான் அவதானித்துக் கொண்டிருந்த போதே நான் வழக்கமாக பார்க்கும், மலேசிய விசிறிவால் குருவிகள் (Malaysian Pied Fantail) இரண்டு அதே மரத்தில் இருந்து பறந்து சென்றன. இருப்பினும் அந்த சிறிய பறவையை எப்படியும் காண வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது. நம் கை சுண்டுவிரல் அளவே உள்ள அந்த பறவை சிறிது நேரத்தில் வெளியே வந்து வேறொரு மரத்தில் சென்றமர்ந்தது. “ஆர்டிக் கதிர்குருவி” (Arctic Warbler) எனப்படும் இந்த சிறிய பறவை ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யாவிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வலசை வருகிறது. பறவைகளின் வலசை குணங்கள் இன்னமும் அவிழ்க்கப்படமுடியாத பெரும் முடிச்சாகவே இருக்கிறது.
பறவைகள் வலசைக்கு மிக முக்கிய காரணம், வட துருவத்தில் குளிர் காலங்களில் அவற்றுக்கு போதுமான உணவு கிடைக்காததால் அவை தென் துருவம் நோக்கி வருகின்றன. மீண்டும் வசந்த காலத்தில் அவை தன்னுடைய நிலத்திற்கே சென்று கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த நடைமுறையை பல ஆயிரம் ஆண்டுகளாக அவை தொடர்ந்து செய்கின்றன. ஓரிடத்திற்கு வலசை வரும் பறவை, அடுத்த வருடம் மீண்டும் அதே இடத்திற்கு வருவது மிகப்பெரிய ஆச்சர்யம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை தன் இயல்பூக்கத்தில் வருவதாகவே பல அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றின் மரபணுவில் பொதிந்த இந்த இயல்பூக்கம் அவற்றை சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி செலுத்தலாம்.
வலசைக்காக அவை தன்னை முன்பே தயார்படுத்திக் கொள்வதும் நடக்கிறது. சமீபத்தில் “Bar-tailed Godwit” என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியன் தீவுக்கு எங்கேயும் நிற்காமல் 11 நாட்கள் தொடர்ந்து பயணித்து வந்து சேர்ந்திருக்கிறது. இப்படி வலசை வரும் பறவைகள் பெரும்பாலும் ஈர நிலங்களை நம்பியே வருகின்றன. நம்முடைய தேவைக்காக இந்த நிலங்கள் மாற்றப்படும் போது அவை உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். நாடுகள், எல்லைகள், அவற்றுக்கு இடையே நடக்கும் சண்டைகள் அனைத்துமே மனிதர்களுக்கு மட்டுமே. இவை எதுவம் அறியாத பறவைகள் தங்களுக்கான வாழிடத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. ஈர நிலங்கள், காடுகள் தவிர்த்து சிங்கப்பூரின் நகரப்பகுதிகளிலும் சில பறவை இனங்களை பார்க்க முடியும். அவற்றில் முக்கியமானது காட்டுக்கோழி [Red Junglefowl]. வட இந்தியாவிலும் இவற்றை பார்க்க முடியும்.
தென் இந்தியாவில் காணப்படும் காட்டுக்கோழிகளை விடவும் கூடுதல் நிறத்துடனும் பொழிவுடனும் இவை காணப்படுகின்றன. சிறிய பூங்காக்களில் மாங்குயில்கள் [Black-naped Oriole], கிளிகள் [Red-Breasted Parakeet], சிட்டுக்குருவிகள் [Eurasian Tree Sparrow], காட்டுக்கோழிகள் போன்ற பறவைகளை பார்க்க முடிகிறது. தெரு நாய்கள் இல்லாததாலும், மனித இடையூறுகள் இல்லாததாலும் காட்டுக்கோழிகள் அச்சமின்றி நடமாடுவதை காண முடிகிறது.
ஜாவன் நாகணவாய்கள் [Javan Myna] நகரின் எல்லா இடத்திலும் நிறைந்து காணப்படுகிறது. திறந்தவெளி உணவகங்களில் நாம் உணவருந்தும் மேஜையிலேயே அமர்வதும், வாய்ப்பு கிடைத்தால் வீடுகளுக்குள் புகுந்து கிடைப்பதை எடுத்து தின்றுவிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இவை எல்லாவற்றை விடவும் ஆச்சர்யப்படுத்துவது இருவாச்சிகள்.
இந்தியாவில் காடுகளில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட இந்த இருவாச்சிகளை நகரின் உயரமான கட்டிடங்களில் கூட பார்க்க முடிகிறது. மழைக் காடுகளின் மகத்துவத்தை, அதன் மிச்சத்தை இன்றும் உறுதிப்படுத்துகின்றன இருவாச்சிகள். சிங்கப்பூரின் சில நூறாண்டுகளுக்கு முன்பிருந்த உயிர்ச்சூழலை ஒப்பிடும் போது, தும்பிப்பன்றி [Malayan Tapir], புலிகள் உள்பட பல உயிரினங்களை இழந்திருந்தாலும் இன்றைய சூழலில் ஒரு சிறிய நாடு தன்னுடைய இயற்கை வளத்தை பாதுகாப்பது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம்.
மிகவும்.. அருமை சார்.. நானும் சிங்கப்பூர் ஒரு தொழில் நகரம் என எண்ணியிருந்தேன்.. ஆச்சர்யபடுத்துகிறது.
Wow 🤩 This is an excellent article with great information 👏🏼👏🏼 Lovely pictures too