
கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.
சிறுவயதில் பள்ளிப் பாடப் புத்தகத்தில் பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் கவிதைகளுக்குப் பிறகு நான் படித்த முதல் கவிதை கல்யாண்ஜியின் மேற்கண்ட கவிதை.
இதில் அர்த்தம் புரியாமல் விட்டாலும் ஏதோ ஒன்று இருப்பதாகப்பட்டது. யோசிக்கத் தெரியாமல் அம்மாவிடம் பக்கத்து வீட்டு அக்காக்களிடம் கேட்ட பொழுது, “ உனக்கு இந்த வயதில் இதெல்லாம் புரியாது”,என்று அவர்களுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டனர். மனம் எப்படி குப்பை ஆகும்? மனதிற்குள் குப்பை எப்படி வரும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் புரியவே பல வருடங்கள் ஆகிவிட்டன.
மனதில் உள்ள குப்பைகளை பிறகு பார்ப்போம். நம்மைச் சுற்றி வீட்டிலோ வீதியிலோ வேறு எந்த ஊர்களுக்கு எந்த இடங்களுக்குச் சென்றாலும் முதலில் கண்ணில் படுவது குப்பை மட்டுமே. மக்கள் தொகை பெருகப் பெருக, மக்கள் வாங்கும் பொருட்களின் பயன்பாடுகள் கூடக் கூட மக்கள் தொகைக்கும் மேலாக குப்பைகள் தான் மலையளவு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் பதின்ம வயதில் ஏன் இப்படி எங்கு பார்த்தாலும் குப்பையை போடுகிறார்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் மீது, பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது, ஊரில் உள்ளவர்கள், அரசாங்கம் என நாம் பார்க்கும் அனைவரின் மேல் கோபம் பொங்கியது. அதற்குப் பிறகு அந்த மக்கள் கூட்டத்தில் நாமும் ஒரு ஆள் என்று உணர்வதற்குள் வருடங்களும் ஓடி விட்டன.
குப்பையைப் பற்றி இயற்பியல் வேதியியல் உயிரியல் பற்றிய விஷயங்களை இங்கு நான் எழுத வரவில்லை. நமக்குத் தெரிந்து நம் வீட்டில் நம் தெருவில் நம் ஊரில் குப்பை எங்கெல்லாம் கிடக்கிறது அதை
வெளியேற்ற நாம் என்னென்ன செய்கிறோம், அரசு என்னென்ன முயற்சிகள் செய்கிறது என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.
எளிமையாகச் சொன்னால் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தெரியும். அதற்குப் பிறகு திடக்கழிவுகள் திரவக்கழிவுகள், வாயுக் கழிவுகள் இருக்கின்றன. முன்பு நாலைந்து தெருக்களுக்கு ஒரு குப்பைத் தொட்டி தென்படும். விவேக் சொன்னது போல் குப்பைத் தொட்டியை தவிர சுற்றி தான் மக்கள் குப்பையைப் போட்டுச் செல்வார்கள். இந்த காலத்தில் மக்கள் வாங்கும் பொருள்களுக்கு ஒரு தெருவுக்கே ஒரு குப்பைத் தொட்டி என்றாலும் போதாத நிலைமை தான் இருக்கிறது.
பொருட்கள் பொருட்கள் பொருட்கள்..
துணிமணிகள், ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், சமையலறை சாமான்கள், பர்னிச்சர்கள், மின் உபயோகப் பொருட்கள் என தேவையோ தேவையில்லையோ மக்கள் வாங்கிக் குவிக்கின்றனர். ஒரு பேனாவை ஒரு வருடம் உபயோகித்த காலம் எல்லாம் போய், ஒரே சமயம் பத்து வகை பேனாக்கள் பையில் இருக்கின்றன. எழுதவில்லையா சரி பண்ண யாரும் முயற்சிக்கவில்லை தூக்கி போடு வேற புதிதாக வாங்கலாம். இதே நிலைமைதான் எல்லாப் பொருள்களின் மீதும். பிறகு ஊரெல்லாம் குப்பைமயம் தான்.
எங்கள் பகுதியில் முன்பெல்லாம் தினமும் துப்புரவுப் பணியாளர்கள் வண்டியில் வருவார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று குப்பைகளை வாங்கிச் செல்வார்கள். இப்போது அவர்களை எல்லாம் காணவில்லை. அப்படியே வருபவர்களும் அந்த இடியாப்பக் காரர் போல் குப்பையை எடுத்து வருவதற்குள் பறந்து விடுகின்றனர். குப்பைத்தொட்டி வைப்பதற்கும் அத்தனை பஞ்சாயத்து. எங்கள் வீட்டில் முன் எங்கள் தெருவுக்கு முன்னால் எங்கள் கடைக்கு முன்னால் வைக்காதீர்கள் என்று. வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணோம் என்று சொல்வது போல குப்பைத் தொட்டி காணாமல் போய்விடுகிறது. பிறகென்ன.. போடுறா குப்பையை ரோட்டோரத்தில்..
எங்கள் வீடு தெரு முனையில் இருக்கிறது. தெருவுக்குள் இருந்து வருபவர்கள் எல்லாம் எங்கள் வீட்டு பக்கத்திலே அசால்டா போட்டுட்டு போவாங்க. சத்தம் போட்டால் இது உங்க தாத்தா தெருவா என்பார்கள். பக்கத்திலேயே ஒரு பெரிய சாக்கடை கால்வாய் ஓடுகிறது. வருபவர்கள் அங்கிருந்தபடியே சாக்கடைக்குள் குப்பையை வீசி விட்டுச் செல்வார்கள். சாக்கடைகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ குப்பைகளால் நிரம்பி உள்ளது. நாங்களும் மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று எத்தனையோ மனுக்கள் கொடுத்து விட்டோம். கவுன்சிலரிடம் புகார் பண்ணி விட்டோம். குப்பையை அள்ள வரும் பணியாளர்களிடமும் சொல்லிவிட்டோம். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. ஆனால் தூய்மை பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு தடவை எங்களிடம் 200 300 ரூபாய் என்று கேட்பார்கள். நாங்கள் இங்கே போடவில்லை என்றாலும் உங்கள் வீட்டுக்குப் பக்கத்துல தானே இருக்கு. அதனால் நீங்கள் தான் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பார்கள். இல்லையென்றால் குப்பை போட வருபவர்களிடம் இங்கே குப்பையைப் போடாதீர்கள் என்று நீங்கள் சொல்லுங்கள் என்பார்கள். 24 மணி நேரமும் வெளியே உட்கார்ந்து காவல் காக்க முடியுமா? எங்காவது ஊருக்குப் போய்விட்டு இரவு 12 மணியளவில் வீட்டுக்கு வந்தாலும் கூட, எங்கிருந்து எல்லாமோ பைக்கில் வந்து குப்பையை போட்டு விட்டுச் செல்வார்கள். யாரை என்ன கேள்வி கேட்க?
இதுதான் இன்றைய வாழ்வின் அவல நிலை.
சும்மா ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒரு நாள் ஒரு வீட்டின் கழிவுப் பொருட்களே ஒரு கிலோ அளவுக்கு இருக்கும். அப்படி என்றால் ஒரு தெருவில் ஒரு ஊரில் ஒரு நகரில் ஒரு நாட்டில் உலகத்தில் தினமும் எத்தனை குப்பைகள் தேங்கும்?
நினைத்தாலே பகிர் என்று இருக்கிறது.
அல்லது இரவு நேரங்களில் தெருக்களில் அவற்றில் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அது அதைவிட ஆபத்தாக உள்ளது.
பார்க்கிறப் பொருள்களை எல்லாம் வாங்கும் பழக்கத்தை விட வேண்டும்.
நமக்குத் தேவையற்ற பயன்படுத்தக்கூடிய ஆடைகளை, குழந்தைகளின் துணிமணிகளை, தேவைக்கு மேல் உள்ள பைகள் புத்தகங்கள் சமையலறை சாமான்கள் செருப்புகள் போன்றவற்றை தேவைப் படுபவர்களுக்கு கொடுத்து விடலாம்.
ஒரு பொருளை இரண்டு மூன்று வருடங்களுக்கு நாம் உபயோகப்படுத்தவில்லை அதன் தேவை இல்லை என்றால் அதுவும் குப்பையே.
தோட்டம் வைத்திருப்பவர்கள் ஒரு குழியைத் தோண்டி அதற்குள் குப்பைகளை போட்டு உரமாக மாற்றலாம்.
எங்கெங்குப் பார்த்தாலும் இப்போது ரெஸ்டாரண்டுகள் உணவகங்கள் நடைபாதை வண்டிக் கடைகள் பெருகி உள்ளன. உபயோகித்த டம்ளர்கள், கப்புகள், கிண்ணங்கள், கரண்டிகள் என குப்பைக்குப் போகும் பிளாஸ்டிக் பொருள்கள். அந்தக் காலம் போல் இலைகளின் பயன்பாட்டைக் கூட்டி டிஸ்போசபில் பொருள்களின் அளவைக் குறைக்கலாம். காய்கறிகள் பழங்கள், இறைச்சி பிராய்லர் கோழிக் கழிவுகள் எல்லாம் தெருவில் தான் கொட்டப்படுகின்றன. இதற்கு அரசு கடும் நடவடிக்கைகள் இன்னும் எடுக்கலாம்.
பெரும்பான்மையான மக்கள் சுற்றுப்புறச் சூழல் மாசடைகிறது என்றெல்லாம் கவலைப்படுவதில்லை.
அந்தப் புரிதலை, குப்பையால் சுற்றுப்புறத்திற்கு வரும் கேடுகளை அரசு மற்றும் சமூக அமைப்புகள் இன்னும் விளக்கமாக விரிவாக மக்களை சேரும் வகையில் சொல்ல வேண்டும். அபராதங்களையும் அதிகரிக்க வேண்டும். எவ்வளவு சட்டங்கள் போட்டாலும் சட்ட மீறல்கள் என்பதெல்லாம் பொதுமக்களுக்கு சாதாரணமான ஒன்று. இன்னும் பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களில், சரியாக அகற்றப்படாத குப்பைகளால் வரும் இன்னல்களை நோய்களை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
கழிவுப் பொருட்களால் காற்று மாசடைதல், கொசுக்கள் ஈக்களால் உருவாகும் நோய்கள், சுகாதாரத்தின் மகத்துவம் போன்றவற்றை பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். முன்பெல்லாம் ஆறு, கடல் அருவிகளில் குளித்தாலே உடலுக்கு மனதுக்கு புத்துணர்வு வரும். இப்போது இரு பக்க குப்பை கறைகளுக்கு நடுவே தான் ஆறோ ஏரியோ குளமோ இருக்கிறது.
youtube ஜோசியர்கள் பேச்சைக் கேட்டு குளித்துவிட்டு பழைய துணியை அங்கேயே போட்டு விட்டு வருவதால் ஆறுகளில் தண்ணீருக்குப் பதிலாக அழுக்குத் துணிகள் தான் மிதக்கின்றன.
நமது வீடு நமது தெரு நமது ஊர்.. நாம் இருக்கும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தாச்சு. இருக்கும் பூமியும் அவ்வப்போது ஒரு ஆட்டம் காட்டுகிறது. கடல்களும் எச்சரிக்கை கொடுக்கின்றன.
இன்னும் நாம் மாறாவிட்டால் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் எதை கொடுத்துச் செல்வோம் குப்பையைத் தவிர.. மாசடைந்த பூமியைத் தவிர..
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐவகை நிலங்கள் இருந்தன..இருக்கின்றன…
ஒவ்வொரு நிலத்திற்கும் அதற்கு உண்டான மரங்கள் பூக்கள் பறவைகள் உணவுகள் என இருக்கும். ஆனால் தற்காலத்தில் எல்லா வகை நிலங்களுக்கும் பொதுவான ஒன்றே ஒன்றுதான். அது குப்பை தான் என சொல்லவும் வேண்டுமா…
வேடிக்கையாகச் சொன்னாலும் வேதனையாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அரசையே நம்பாமல் மாற்றங்கள் முதலில் நம்மிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் நல்ல மாற்றங்களும் இப்போது கண்ணில் படுகின்றன. அந்தந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக குளங்களைத் தூர் வாருவது, பசுமையாக இருக்க ஊரெல்லாம் மரக்கன்றுகள் நடுவது என எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்கின்றனர்.
இந்த விஷயத்திலும் ஒரு வீட்டில் உள்ளவர்கள் ஒரு தெருவில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து சேவை செய்ய வேண்டும்.
ஊழலற்ற ஆட்சியை நாம் எதிர்பார்க்கிறோம். அதேபோல் நமது அடுத்த தலைமுறைக்கு குப்பையற்ற நாட்டை, ஊரை,தெருவை கைகளில் கொடுக்க இன்றிலிருந்து முயற்சி செய்வோம்.
அருமை கல்பனா 💙💐 கல்யாண்ஜி கவிதையுடன் ஆரம்பித்து, சிறப்பான கருத்துகள் 💐💐