
நாம் குப்பையைக் கழிவென்று சொல்கிறோமா? உரமென்று சொல்கிறோமா? என்பதைப் பொறுத்தே நமக்கான பூமியை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று சூட்சுமமாக உணர்த்திவிட முடியும். நாம் வாழும் பூமிக்கு மாற்றாக வேறிடம் எதுவும் இல்லை. நாம் வாழ்ந்து சென்ற பிறகும் இந்த பூமியை அடுத்த தலைமுறைக்கு நல்ல நிலையில் தந்து செல்லவேண்டும்.
நாம் இந்த பூமியில் விதவிதமான குப்பைகளைச் சேகரம் செய்து வைத்திருக்கிறோம். இன்னுஞ்சொல்லப்போனால் நாளுக்குநாள் அதன் அளவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறோம்.
“குப்பை” இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் இந்தக் குப்பை தான் காணக்கிடைக்கிறது. ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்தனை பிரச்சனைக்குரியதாக குப்பை இருந்ததில்லை. கேட்டால் மக்கள் தொகை கூடியதால் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நவீனமும் வசதிவாய்ப்புகளும் பெருகும் அதே நேரம் குப்பையை மேலாண்மை செய்வதிலும் நவீனமும் பொறுப்பும் அதிகரித்திருக்க வேண்டும்.
கிராமமானாலும் நகரமானாலும் குப்பைகள் அதிலும் மக்கா குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மளிகைப் பொருளிலிருந்து எண்ணெய் வரை காதிதத்திலும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் எண்ணெய்க்கான ஜாடியிலும் வாங்கிவந்த பழக்கம் மாறி கைவீசிச்சென்றோ அல்லது கைபேசியில் ஆர்டர் போட்டோ வாங்கும் காலத்துக்கு மாறியாகிவிட்டது. விளைவு எல்லாமே பாலிதீன் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனையாகிறது. இவையெல்லாமே மக்கும் குப்பைகள் அல்ல.
முக்கியமாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள் என்பது ஏறக்குறைய இல்லாமல் ஆகிவிட்டது. உடற்பருமனை அதிகரிக்கச் செய்யும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கவர்களில் அடைக்கப்பட்ட பொருட்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. அவைகளும் குப்பை.
பணம் இருக்கிறதோ இல்லையோ தேவைக்கு அதிகமான நுகர்பொருட்கள் வாங்கப்படுகிறது. இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வதுபோய் ஒற்றைக் குழந்தையாகிவிட்டது. அவர்கள் மற்ற குழந்தைகளோடு இணைந்து இணங்கி விளையாடும் பழக்கமே அருகிவிட்டது. அதனால் அவர்கள் விளையாட விளையாட்டுச் சாமான்கள் அளவுக்கு அதிகமாக வாங்கப்படுகிறது. அது மட்டுமில்லை. வெளிநாடுகளில் குறிப்பாக சீனா போன்ற நாடுகள் தயாரித்த ஆனால் அவர்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒரு பருவத்துக்குப் பிறகு பெரும்பாலும் அவை குப்பைகளே. அதுவும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் குப்பைகளே.
ஆடைகள் என்று எடுத்துக்கொண்டால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆடைகளை சேமிக்கிறார்கள். வழிபாட்டுத் தலங்களில் யாரோ சொன்ன பரிகாரமென்று ஆறுகளிலும் கடல்களிலும் உடுத்திய ஆடைகளைக் குளித்து களைந்து விட்டுவிடுகிறார்கள். அவைகளும் நீர்நிலைகளைக் கெடுக்கும் குப்பைகளே.
உணவுப் பண்டங்கள் ஆரோக்கித்தை மையமாக வைத்து இல்லாதபட்சத்தில் வயிறும் உடம்பும் குப்பையாகிப் போகிறது.
அப்படி ஆரோக்கியம் கெட்டுப்போன உடம்பிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவக்கழிவுகள் ஒரு குப்பை. அத்தகைய மருத்துவக் கழிவுகள் அந்தந்த ஊர்களிலிருந்து அடுத்த ஊருக்கோ அல்லது அடுத்த மாநில எல்லையிலோ கொட்டப்படுகின்றன. கூடவே இறைச்சிக் கழிவுகளும். இவைகளாலும் மேலும் பல நோய்கள் உருவாகின்றன.
எல்லா ஊர்களிலும் பாதாளச் சாக்கடை கிடையாது. ஆக வீடுகளில் பெருக்கித்தள்ளும் குப்பைகள் சாக்கடையில் தஞ்சமடைகின்றன. பயன்படுத்திய கழிவுத்தண்ணீர் செல்ல வேண்டிய சாக்கடை குப்பைகளால் அடைபட்டு நாற்றமடித்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகின்றன. அதுமட்டுமில்லை, ஆறுகள் குளங்கள் கிணறுகள் கால்வாய்கள் கடல்கள் உட்பட எல்லா நீர்நிலைகளும் குப்பைகளால் அலங்கோலப்பட்டிருப்பதைக் காணலாம்.
பயணங்களின் போது சொல்லவே வேண்டியதில்லை; எடுத்துச் செல்லும் தின்பண்டங்கள் உணவுப் பொருட்கள் சுற்றிய கவர்கள் போதாததற்கு கண்ணில்கண்ட பொருட்களெல்லாம் வாங்கி அதையும் தின்றுதீர்த்து காலியான குப்பைக் கவர்களை செல்லும் வழியெங்கும் வீசி எறிகின்றனர். இவர்களே வெளிநாட்டுச் சுத்தத்தை சிலாகித்துப் பேசவும் செய்வார்கள்..
திருமண மண்டபங்களில் முன்பெல்லாம் சில்வர் தம்ளரில் தண்ணீர் வைப்பது போய் யூஸ் அண்ட் த்ரோ கப்பும் பாட்டில்களுமாக வைக்கிறார்கள். அவை பெரும்பாலும் மிகக் குறைந்த மைக்ரானில் தயாராகியவை. மேலும் அவை மறு சுழற்சிக்குச் செல்வதேயில்லை.!
குப்பையிலும் அரசியல் தான். சுகாதாரத்துறையின் கீழ் வருவதுதானே குப்பை மேலாண்மை? பஞ்சாயத்து, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி இவைகளுக்கேற்ப குப்பை மேலாண்மைக்கென்று வரி வசூலிக்கப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயன்பாடுகளைக் குறைக்கத் தவறிய மக்களால், குப்பைகளை நீர்நிலைகளிலும் சாக்கடையிலும் கொட்டும் மக்களால் சுகாதாரப் பணியாளர்கள் சிரமப்படுவது உண்மை. ஆனாலும் பெருநகரங்களைப் போலவே நகரங்களிலும் சிற்றூர்களிலும் அதிகாலையே குப்பை சேகரிக்க வந்துவிடுவதால் பிறகு சேரும் குப்பைகளை சேகரித்து மறுநாள் குப்பை வண்டி வரும்போது கொட்டுவதில்லை. வேலை முடிந்தால் யாரும் பார்க்காதபொழுது வீடுதாண்டி சற்றுத்தள்ளி இருக்கும் சாக்கடையில் சர்வசாதாரணமாகக் கொட்டி விடுகின்றனர்.
நீர்நிலைகளில் கரையோரம் என்று தொடங்கி கட்டுமானக் கழிவுகளைக்கொட்டி கொஞ்சம்கொஞ்சமாக அவைகளும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
பணியாளர்கள் கண்ணில் படுவதை அல்லது அள்ள முடிவதை அரைகுறையாக அள்ளிச்செல்வதோ அல்லது நெருப்பிட்டுக் கொளுத்துவதோதான் செய்கிறார்கள். இது அவர்களுக்கும் சுவாசக்கோளாறான ஆஸ்துமா நுரையீரல் தொற்று என்று பலவித நோய்களை உருவாக்கிவிடுகிறது. சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை என்பார்கள். சரியான கையுறை முகக்கவசம் மேலங்கி என்றும் நிறைவான ஊதியமும் வழங்கினால் எப்படிப் பற்றாக்குறை நேரும்?
குப்பைகளைச் சரியாகத் தரம்பிரித்து சேகரித்து குப்பை வண்டி வரும்போது கொட்டும்படி அரசு அறிவுறுத்துவதோடு தவறும் பட்சத்தில் தண்டனையும் அபராதமும் விதிக்க வேண்டும்.
ஆனால் அதற்கு முன்பு அரசாங்கம் சரியாக வேண்டும். சுகாதாரத்துறையில் குப்பைக்கென்று ஒதுக்கப்படும் நிதி தவிர மக்களிடம் வசூலிக்கப்படும் வரியும் சேர்த்து ஊழலின்றி சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லை தரம்பிரிக்கப்பட்ட குப்பைகளில் இருந்து வரும் உரம் போன்றவை மதிப்புக் கூட்டப்பட்டு மக்களிடம் விற்பனை செய்து அந்தப் பணமும் சுகாதாரப் பணியாளர்களின் சம்பளத்தோடு ஊக்கத் தொகையாக வழங்கப்பட வேண்டும்.
எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக பிளாஸ்டிக் பயன்பாடுகளையும் நெகிழிப்பைகளையும் பயன்படுத்தாதீர்கள்; மஞ்சள் பை பயன்படுத்துங்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு அவைகளை தயாரிப்பதைத் தடை செய்தாலே போதும்.
தயாரிப்பை நிறுத்திவிட்டால் எப்படி பயன்படுத்த முடியும்? இதெல்லாம் அரசியல் என்று பார்க்காமல் யார் ஆட்சிக்கு வந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நேர்மையாக இதனைக் கடைப்பிடித்தாலே நிலத்தடிநீர் பாதுகாக்கப்படும். வெள்ள அபாயம் கணிசமாகக் குறையும். நோய்த்தொற்று குறையும். இப்படி ஒன்றுதொட்டு ஒன்றாக சங்கிலித் தொடர்போன்ற தீமைகள் ஒழியும்.
குப்பை தானே என்று நாம் அலட்சியமாக எண்ணினால் முதல் குப்பையே நம் மனம் தான்.