காலநிலைப் பொருளாதாரம்

காலநிலை மாற்றத்தால் பொருளாதாரம் என்னவாக மாறும் என்பதும், பொருளாதார சூழலானது காலநிலை மாற்றத்தின்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதும் மிக முக்கியமான கேள்விகள். உண்மையில் காலநிலை உச்சிமாநாடுகளில் நடக்கும் பெரும்பான்மையான கருத்து முரண்பாடுகள் பொருளாதாரத்தின் அடிப்படையில்தான் எழுகின்றன. வெளியிடும் உமிழ்வுகள் அதிகம் என்பதால் கூடுதலாகப் பொறுப்பேற்றுக்கொண்டு பிற நாடுகளுக்கு நிதி அளிப்பது, அதிகமான பணம் செலவழித்தாவது காலநிலைத் தீர்வுகளை நோக்கி முன்னேறுவது என்பதுபோன்ற அம்சங்களைப் பேசும்போது உடனடியாக உலக நாடுகள் முரண்படத் தொடங்கும். பொருளாதாரம், நிதி ஒதுக்கீடு போன்றவை இன்றும் சிக்கலான விவாதங்களைத் தோற்றுவிக்கக்கூடியவையாகத்தான் இருக்கின்றன.

இன்னொருபுறம், கடந்த சில ஆண்டுகளாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார சீரழிவு பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. வங்கிகள் இந்த விவாதங்களை முன்னெடுக்கின்றன. உலகளாவிய பொருளாதார அமைப்புகளும் “இது உண்மையிலேயே ஒரு பிரச்சனைதானோ” என்ற சந்தேகத்துடன் காலநிலை மாற்றத்தை கொஞ்சம் கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன. 

காலநிலை மாற்றமும் பொருளாதாரமும் இணையும் முக்கியப் புள்ளிகள் இரண்டு. முதலாவது, காலநிலை மாற்றத்தால் பொருளாதாரத்தில் ஏற்படும் சீர்குலைவு அல்லது பாதிப்பு. இரண்டாவது, சமகால பொருளாதார சூழலானது காலநிலைத் தீர்வுகளுக்குக் குறுக்கே நிற்கிறதா என்ற கேள்வி. இந்த இரண்டு அம்சங்களையும் விரிவாகப் பார்க்கலாம்.

பொருளாதார பாதிப்பு

2015ம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீவிரமாக ஆராய்ந்த இங்கிலாந்து வங்கி, சில முக்கியமான விஷயங்களை முன்வைத்தது. காலநிலை மாற்றம் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. காலநிலை மாற்றத்தின்மூலம் இரண்டு வகையான பொருளாதார பாதிப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்:

  1. இருப்புசார்ந்த ஆபத்துகள்  (Physical risks)- காலநிலை மாற்றத்தால் நேரடியாக ஏற்படும் பாதிப்புகள் இந்த வகையின்கீழ் வரும். இதில், அதீத காலநிலைப் பேரிடர்களால் உடனடியாக வரும் ஆபத்து, காலநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் மெதுவாக வரும் ஆபத்து என இரண்டு வகைகள் உண்டு.
  2. மாற்றம் சார்ந்த ஆபத்துகள் (Transitional risks) – காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண்பதற்காக, ஆற்றல் துறையிலோ பிற துறைகளிலோ ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும்போது, அதனால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவுகள் இந்த வகைமையின்கீழ் வரும்.

இந்த இரண்டு ஆபத்துகளையும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம். காலநிலை மாற்றத்தால் எதிர்பாராத மழைவெள்ளமோ வெப்ப அலையோ ஏற்படும்போது பொருளாதார பாதிப்பு ஏற்படலாம். அதே நேரம், கொஞ்சம் கொஞ்சமாக சராசரி வெப்பநிலை உயரும்போதும் பல பாதிப்புகள் வரலாம். விவசாய உற்பத்தி குறையலாம், அதுவும் பொருளாதாரத்தை பாதிக்கும். இந்த இரண்டுவகை பாதிப்புகளையும் இருப்புசார்ந்த ஆபத்து என்கிறார்கள். இரண்டாவதாக, காலநிலை மாற்றதுக்கான தீர்வாக, புதிய ஆற்றலை நோக்கி ஒரு நாடு நகர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு அதிகமான ஆரம்பகட்ட முதலீடு தேவைப்படலாம், ஏற்கனவே இருந்த ஆற்றல் துறையில் நிதி இழப்பு ஏற்படலாம், இதுபோன்ற பாதிப்புகளை மாற்றம் சார்ந்த ஆபத்து என்கிறார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். இதை நேரடியாகப் படிக்கும்போது, “மாற்று எரிபொருளை நோக்கிப் பயணித்தால் அது பொருளாதாரத்துக்கு ஆபத்தாக மட்டுமே முடியும்” என்ற ஒரு தொனி ஏற்படலாம். சொல்லபோனால் பொருளாதார வல்லுநர்கள் பலரும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மாற்றம் சார்ந்த பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கலாமே என்று எந்தத் தீர்வையும் முன்னெடுக்காமல் இருந்தால், இருப்பு சார்ந்த ஆபத்துகள் பலமடங்கு உயரும் என்பதை அவர்கள் அவ்வளவாக உணர்வதில்லை. மாற்றம் சார்ந்த பொருளாதார இழப்பு ஆரம்பகட்டத்தில் கையைக் கடிக்கலாம், ஆனால் காலப்போக்கில் அதுவே சிறந்த பாதையாக இருக்கும் என்பதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆகவே அதையும் சேர்த்தே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சரி… நாம் பொருளாதார பாதிப்பு பற்றிய புரிதலுக்குத் திரும்பலாம். காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் நாடுகளின் ஏற்றுமதி அளவு குறையும். ஒரு நாட்டில் பாதிப்பு இருக்கிறது என்றால், அந்த சூழலில் பிறநாடுகளுக்கு அந்த நாடு உதவி செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது எல்லா நாடுகளும் பாதிக்கப்படக்கூடிய சூழலும் வரும். அப்போது யார் யாரைக் காப்பாற்றுவார்கள்? தொண்டு நிறுவனங்களும் செழித்த நாடுகளும் ஒன்றிணைந்து வளரும் நாடுகளுக்குக் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

“காலநிலை மாற்றத்தால் விவசாயத்துக்கு மட்டுமே ஆபத்து என்ற நிலை ஒருகாலத்தில் இருந்தது. இப்போது எல்லாம் மாறிவிட்டது” என்கிறார் ஆஸ்திரேலிய வல்லுநர் கை டிபெலெ. காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது எல்லா துறைகளும் பாதிக்கப்படும். Demand-Supply என்கிற, பொருளாதாரத்தின் மையத் தூண் ஆட்டம் காணும். பணவீக்கம் அதிகமாகும். வளர்ந்த நாடுகளில் 80 விழுக்காடு, காலநிலை மாற்றத்தால் தீவிரமாக பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருக்கின்றன. ஆகவே இந்த நாடுகளின் அடிப்படை வளர்ச்சியே பாதிக்கப்படும்.

காலநிலை மாற்றம் தீவிரமடைந்துகொண்டே போனால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் 34 லட்சம் பணியிழப்புகள் ஏற்படும் என்று உலக வங்கி அறிக்கை சொல்கிறது. காலநிலை மாற்றத்தால் உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் கணிசமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, வெப்பமண்டல நாடுகள் ஏழைநாடுகளாகவும் இருக்கின்றன. காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது, இந்த நாடுகளின் வெப்பநிலையும் வறுமையும் அதிகரிக்கும். சராசரி வெப்பநிலை ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்போதும் வறிய நாடுகளின் ஏற்றுமதி விகிதம் 2.4% வரை குறையலாம், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.3% வரை குறையலாம். 2021-2022ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 விழுக்காடு காலநிலைத் தகவமைப்புக்காக செலவிடப்பட்டது என்று இந்திய அரசு தெரிவிக்கிறது. 2022ம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% இழப்பு ஏற்பட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

அதிகமாகக் காலநிலைப் பேரிடர்கள் ஏற்படும் சில இடங்களில், மறைமுகமான பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. ஒரு இடத்தில் புயல் வீசுகிறது என்று வைத்துக்கொள்வோம். அங்கு உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்படும். அது மட்டுமல்லாமல், அடுத்த சில நாட்களுக்கு அங்கே கடைகள் இயங்காது, பொருட்களின் விலை உயரும். தொடர்ந்து பேரிடர்கள் தாக்கும் பகுதிகளில் கடைவைக்க யாரும் முன்வர மாட்டார்கள், பங்குச்சந்தையும் வீழ்ச்சியடையும். இது காலப்போக்கில் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கும்.

பொருளாதாரம் சார்ந்த தரவுகளாக மட்டுமே இந்த இழப்புகளை மதிப்பிடமுடியாது. தொழிலாளர் செயல்திறன், வேலை இழப்பு போன்ற பிற அம்சங்களையும் சேர்த்துப் பார்த்தால் பாதிப்பு பல மடங்காகத் தெரிகிறது. உதாரணமாக, சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது தொழிலாளர்களின் செயல்திறன் பாதிக்கப்படும். குறிப்பாக விவசாயப் பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், தோட்டவேலை செய்பவர்கள் போன்றோரின் செயல்திறன் நிச்சயமாக பாதிக்கப்படும். சென்ற மாதம் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசியபோது பகல் நேரத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்ட செய்தி பலருக்கு நினைவிருக்கலாம். தமிழ்நாட்டின் சில இடங்களில் பழ வியாபாரிகளும் கட்டுமானத் தொழிலாளர்களும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட செய்திகளையும் நாம் கேள்விப்பட்டோம். 

நிலைமை இப்படியே தொடர்ந்தால் 2080ம் ஆண்டில் தெற்கு ஆசியாவின் பல பகுதிகளில் செயல்திறன் இழப்பு 27% வரை போகக்கூடும் என்று எச்சரிக்கிறது ஒரு ஆய்வு. அதாவது, ஒரு சராசரி தொழிலாளி, தனது வழக்கமான பங்களிப்பில் முக்கால் அளவை மட்டுமே தர முடியும். இதை சரி கட்ட வேண்டுமானால் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும், அல்லது கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அந்த சூழலில் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது காப்பீட்டால் நமக்குக் கிடைக்கும் பாதுகாப்பும் குறையும். இது வெறும் எதிர்காலக் கணிப்பல்ல, ஏற்கனவே பல அமெரிக்க மாகாணங்களில் இது நடந்துகொண்டிருக்கிறது. அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்களுக்குக் காப்பீடு கிடைப்பது கடினமாகியிருக்கிறது. அமெரிக்காவில் “500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்கள்” என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். அதை முன்வைத்து வெள்ளம்சார்ந்த காப்பீட்டை வடிவமைப்பார்கள். அந்தப் பட்டியலில் இருந்த பல பகுதிகளை “100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளம் வரக்கூடிய இடங்கள்” என்ற பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். ஆகவே அந்தப் பகுதிகளில் காப்பீடு தொடர்பான சிக்கல் ஏற்பட்டிருக்கிறது, மாதாந்திர ப்ரீமியம் தொகையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஃப்ளோரிடா, கலிஃபோர்னியா, லூயிசியானா உள்ளிட்ட பல மாகாணங்களில் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் அடிக்கடி பேரிடர்கள் ஏற்படுவதால் காப்பீடு வழங்கி அவர்களது இழப்புக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள காப்பீடு நிறுவனங்கள் தயங்குகின்றன. இந்த சிக்கல் சரிசெய்யப்படும்வரை சாமானிய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஒரு குறைந்தபட்ச பொருளாதாரப் பாதுகாப்புகூட இல்லாமல் காலநிலையோடு அவர்கள் நேரடியாகப் போராடவேண்டியிருக்கும்.

காலநிலைத் தீர்வுக்குக் குறுக்கே நிற்கும் பொருளாதாரம்

காலநிலை மாற்றத்துக்கும் பொருளாதாரத்துக்குமான தொடர்பில் இருக்கும் மிக விநோதமான அம்சம் இது. காலநிலை மாறும்போது பொருளாதாரம் சீர்குலையும் என்று விரிவாகப் பார்த்தோம். ஆனால் ஒருவகையில் காலநிலை மாற்றம் என்ற பேரிடரை நோக்கி மனித இனத்தைத் தள்ளியதே பொருளாதார அமைப்புதான் என்கிறார்கள் வல்லுநர்கள். சரியாக சொல்லப்போனால் நவதாராளமய பொருளாதாரம் என்ற அமைப்புதான் இப்போது உள்ள பிரச்சனைக்கு முக்கியக் காரணம். பிரச்சனையை உருவாக்கிய அதே அமைப்பு இப்போது தீர்வுக்குக் குறுக்கே நின்று சிக்கலையும் அதிகப்படுத்துகிறது. இந்த மிகப்பெரிய நகைமுரண் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம்.

“உலகம் அழிவதைக் கூட கற்பனை செய்து பார்த்துவிடலாம், ஆனால் முதலாளித்துவம் அழிவதைக் கற்பனை செய்ய முடியாது” என்பார் ஃபெடரிக் ஜேமிசன். இதற்கு என்ன பொருள் என்றால், இப்போது இருக்கும் வாழ்க்கை முறையும் பொருளாதார அமைப்பும்தான் ஒரே வழி என்றும், அதை அழித்துவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்றும் முதலாளித்துவம் ஒரு மாயையைத் தோற்றுவித்திருக்கிறது. இப்போது உள்ள அமைப்பை எந்த வகையில் மாற்றினாலும் ஆபத்துதான் என்று முதலாளித்துவம் அறிவிக்கிறது. இப்போது உள்ள அமைப்பே இயற்கையானது என்றும் அது அறிவுறுத்தி நமது மூளையை சிறைப்படுத்துகிறது. கிட்டத்தட்ட காலநிலை மாற்றம் சார்ந்த விவாதங்களிலும் இதேபோன்ற மனநிலையை முதலாளிகள் வெளிப்படுத்துகிறார்கள். 

வளர்ந்த நாடுகள் எப்படி மோசமாக சிக்கிக்கொண்டிருக்கின்றன என்பதை ஒரு பிரபலமான கோட்பாட்டின்மூலம் விளக்கலாம். அலன் ஷ்னாய்பெர்க் என்கிற சமூகவியல் வல்லுநர், “உற்பத்தியின் ட்ரெட்மில்” (Treadmill of production) என்ற ஒரு கோட்பாட்டை 1980ம் ஆண்டில் உருவாக்கினார். முதலாளித்துவத்தின்கீழ் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை இந்தக் கோட்பாடு சிறப்பாக விளக்குகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மேலை நாடுகளில் அதிகமான பணம் இருந்தது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தப் பணம் பயன்பட்டது. இந்தத் தொழில்நுட்பங்களை செயல்படுத்த அதிகமான ஆற்றலும் வேதிப்பொருட்களும் தேவைப்பட்டன, இதனால் ஒருபுறம் சுற்றுச்சூழல் அழிந்தது, மற்றொருபுறம் தொழிற்சாலைகளின் செலவும் அதிகரித்தது. செலவை சரிகட்டுவதற்காகத் தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரித்தன. தொழில்நுட்ப அதிகரிப்பும் உற்பத்தி அதிகரிப்பும் சுற்றுச்சூழல் சீரழிவுமாக ஒரு மீளா சுழற்சியில் வளர்ந்த நாடுகள் சிக்கிக்கொண்டன. இந்தப் பிரச்சனையைத் தீர்க்காமல் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியாது. 

ஆக, இதே உற்பத்தி முறை தொடர்ந்தால் காலநிலை மாற்றமும் தீவிரமடைந்துகொண்டே இருக்கும். உற்பத்தி முறையை அப்படியே வைத்துக்கொண்டு சிறிய மாற்றங்களை செய்வதன்மூலம் ஒன்றும் நடக்காது.

சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட நவதாராளமய பொருளாதாரத்தில் இயற்கைப் பாதுகாப்புக்கெல்லாம் இடமில்லை. இயற்கையில் இருக்கும் வளங்களை லாபம் எண்ற பெயரில் எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டுவதற்கு இந்தப் பொருளாதாரத்தில் இடம் உண்டு. பொதுமக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே பாவிக்கும் மனநிலைக்குள் இது எல்லாரையும் தள்ளுகிறது. அது மட்டுமல்ல, காலப்போக்கில் இந்தப் பொருளாதார அமைப்பில் சிக்கல்கள் ஏற்படும்போது, சிக்கல்களுக்கான தீர்வையும் தனிநபர்கள் தலையில் கட்டிவிடுவார்கள். 

“காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையைத் தனிநபர்களாக நின்று போராடும்படி நவதாராளமயம் நம்மிடம் சொல்கிறது, இந்தப் பொருளாதார அமைப்பு நம்மை ஏமாற்றுகிறது” என்கிறார் மார்டின் லூகாக்ஸ். “நுகர்வோரான நீங்கள் விழிப்புடன் இருங்கள், பசுமையான பொருட்களை வாங்குங்கள்” என்று நம்மிடம் பொறுப்பை விட்டுவிட்டு, தங்கள் இஷ்டப்படி பெருநிறுவனங்கள் இயங்குகின்றன. தங்களது செயல்பாடுகளால் சீர்கேடு ஏற்பட்டது என்பதையோ, தீர்வுகள் தங்களிடமிருந்து வரவேண்டும் என்பதையோ பெருநிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை.”முதலாளித்துவம் என்ற கோட்பாட்டுக்கும் கரிம உமிழ்வுகளைக் குறைத்துக்கொள்வது என்ற செயல்பாட்டுக்கும் அடிப்படையிலேயே முரண் இருக்கிறது” என்கிறார் காலநிலை எழுத்தாளர் நயோமி க்ளைன். முதலாளித்துவத்தில் இதுபோன்ற பொதுநல செயல்பாடுகளுக்கெல்லாம் இடமில்லை என்று வலியுறுத்துகிறார். 

கோட்பாட்டு ரீதியாக மட்டுமே இதைப் பார்க்காமல் சில தரவுகளையும் கவனிக்கலாம். நவதாராளமய பொருளாதார அமைப்பு இருக்கும் நாடுகளில் காலநிலை சார்ந்த தீர்வுகள் குறைவு என்று ஒரு ஆய்வில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தை சரிகட்ட வேண்டும் என்றாலும் அந்தப் பொருளாதார அமைப்பு மீண்டும் சந்தையிடமும் லாப-நஷ்ட கணக்குகளிடமும்தான் சரணடைகிறது. போகாத ஊருக்குப் பல வழிகள் என்பதைப் போல பெரிய பெரிய சொற்களால் தீர்வுகளை விவாதிக்கும் இந்த நாடுகள், கடைசியில் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவது இல்லை. காலநிலை மாற்றத்துக்கான தீர்வு என்பது ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையிலும் மாற்றம் வந்தால் மட்டுமே சாத்தியம். இது நடக்கவேண்டுமென்றால் சந்தையில் அரசின் தலையீடு ஏற்படும், இதை நவதாராளமயம் விரும்புவதில்லை. ஆகவே “முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்” என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தி, முதலாளிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தீர்வுகளை விலக்கிவிடுவார்கள்.

முழுமையான சுற்றுசூழல் சீர்குலைவைத் தடுக்கவேண்டுமானால் வளங்களை நாம் பயன்படுத்தும் விதமும் உற்பத்திமுறைகளும் நிச்சயம் மாறவேண்டும். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் அமைப்பில் எதாவது ஒரு கட்டத்தில் சூழல் நீர்குலையும். லாபத்தை முன்னிறுத்தி நடத்தப்படும் உற்பத்தி முறையிலிருந்து நாம் மாறவேண்டும்.  காலநிலை மாற்றத்தால் வளரும் ஏற்படும் பொருளாதார இழப்புக்கு வளர்ந்த நாடுகள் ஓரளவாயினும் பொறுப்பேற்கவேண்டும். பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும். “நமக்கும் பூமிக்குமான உறவு, இந்த பூமியை சுரண்டுவதாக இருக்கக்கூடாது. இந்த நிலை மாறினால்தான் காலநிலை மாற்றத்தை உண்மையாகவே கட்டுப்படுத்தலாம்” என்கிறார் மார்ட்டின் க்ரீன்வுட். 

காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் பல பாதிப்புகளில் பொருளாதார பாதிப்பு ஒரு அம்சம் மட்டுமே, ஆனால் பொருளாதாரம் என்பது அதிகார மையத்தில் இருப்பவர்களை கவனிக்க வைக்கும் என்பதால் அதை சொல்லியாவது தீர்வுகளை முன்னெடுக்கலாம் என்று சிலர் போராடிவருகிறார்கள். அதிகாரத்துக்கும் சந்தைக்கும் இடையிலான இறுக்கமான, நெருக்கமான பிணைப்பு உடைந்தால்மட்டுமே காலநிலை மாற்றத்தை நம்மால் தடுக்க முடியும்.

தரவுகள்

  1. Sandra Batten, 2018. Climate change and macro-economy: a critical review, Bank of England Working Paper. 
  2. Dean Curran, 2017. The Treadmill of Production and the Positional Economy of Consumption, Canadian Review of Sociology.
  3. Martin Greenwood. 2021. How neoliberalism destroyed the planet and why capitalism won’t save us. University of Manchester Report.
  4. Outdoor Labour Productivity and Climate Change – European Commission Report
  5. Tord Kjellstrom et al, 2009. The Direct Impact of Climate Change on Regional Labor productivity. Environmental and Occupational Health.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version