“பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா” என்ற சொல்லுக்கு பின்னால் இருக்கும் வலியை ஆதி காலத்தில் இருந்தே பெண்கள் தங்களுக்குள்ளே சுமந்து கொண்டிருக்கின்றனர் அல்லது அதற்கு பழக்கப்படுத்தபட்டிருக்கிறார்கள்.
எனக்கு முந்தைய தலைமுறைவரையில் ஆண்களைவிடவும் பெண்களே பெண்களுக்கு குடும்பத்தில் அதிக கட்டுப்பாடுகளையும் மூடநம்பிக்கை விதிமுறைகளையும் அமல்படுத்தினர்.
மாதவிடாய் காலத்தின் அவதியை நன்கு அறிந்த பெண்ணே இவற்றையெல்லாம் இன்னொரு பெண்ணின் மீது திணித்திருக்கிறாள் என்றால் குடும்பம் என்ற கட்டமைப்பும் சமூகமும் “மாதவிலக்கு” என்ற சொல்லால் அக்காலங்களில் பெண்களை விலக்கி ஒதுக்கி வைத்திருந்தார்கள். “மாதவிலக்கு” என்ற வார்த்தையில் இருந்து “மாதவிடாய்” சொல்லுக்கு வரவும், மாதவிடாய் கால அவதிகளை இன்று வெளிப்படையாக பேச எழுத துணிவதற்கு பல நூறு வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். பெண் உடல், பெண் வாழ்க்கை இன்றும் குடும்பத்தில், சமூகத்தின் கௌரவமாக பார்க்கப்படுகிறது. இன்றும் தனக்கு பிடித்த இணையை தேர்வு செய்வதில் கூட அவளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. குடும்ப கௌரவம் பெண்ணின் மீது தான் சுமத்தப் படுகிறது. ஒரு ஆண் தன் காதலை வீட்டில் சொல்லும்போதும் ஒரு பெண் தன் காதலை வீட்டில் சொல்லும்போதும் அந்த குடும்பமும் சமூகமும் எப்படி அவற்றை எதிர்க் கொள்கின்றனர் என்பதில் இருந்து தெரிந்துவிடும் பெண்ணின் சுதந்திரமும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம். இயல்பாக வீட்டில் இருந்தவளை பெரிய மனுஷியாகியவுடன் அவளின் உலகம் வேறு ஒன்றாகிவிடுவதை அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” சிறுகதையில் ஒரு சிறுமியின் மன ஆழத்திற்கு நம்மை இட்டுச் சென்று அவளின் உணர்வுகளை கூறு போடப்படும் காட்சிகள் நமக்கும் அப்படித்தானே நடந்தது என்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாதவிடாய்க்கு முன்
மாதவிடாய்க்குப் பின் என்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை பிரித்துப் போடுகிறது. குழந்தைமை உடைந்து வறட்டு தனமான கௌரவ பிடிக்குள்ளும் மூட நம்பிக்கைக்குள்ளும் தள்ளப்படும் சூழல் அதன்பிறகு பிறந்த வீடு புகுந்த வீடு, குழந்தைப் பிறப்புக்கு முன் குழந்தைப் பிறப்புக்குப் பின் என்று ஒரு பெண்ணின் வாழ்க்கை அடுக்கடுக்காக பிரித்து அனுபவங்களைக் கொடுக்கிறது.
இதில் பிரச்சனை என்னவென்றால் இவை எல்லாம் தவறு இவை எல்லாம் நம் சுதந்திரத்திற்கு எதிரானவை என்று நமக்குத் தெரியாமலே இருப்பது தான். நாமாக அதற்கு பழக்கப்பட்டுப் போவதும் தான் ஒரு கணம் நின்று இது ஏன் என்று யோசிக்கும் போது தான் தெரிகிறது.
மாதவிடாய் ஒரு இயற்கையான நிகழ்வு, ஒரு சுழற்சி. அறிவியல் ரீதியாக அவற்றைப் புரிந்துக் கொண்டாலும். அடுத்த தலைமுறைக்கு நாம் புரியவைத்துவிடலாம். ஆனால் நமக்கு முந்தைய தலைமுறைக்கு புரியவைப்பதில் தான் சிக்கலாக இருக்கிறது.
“மாதவிடாய் இல்லையேல்
உலகமில்லை
மனித இனமும் இல்லை”
“மாதவிடாய் அருவருப்பு என்றால்
உலகம் அருவருப்பு
மனிதர்கள் அருவருப்பு”
“மாதாவிடாய் அழுக்கு என்றால்
மனிதன் அழுக்கு”
கறை நல்லது என்பது போல மாதவிடாய் ஒரு பெருமையான விசயம் தான். அருவருக்கக் தக்க விசயமில்லை.
Keep publishing to my frd