ஒற்றையடிப்பாதை

கேள்விகளோடு துவங்குகிறது வாழ்க்கை. பிறந்து, வளர்ந்து, படித்து, சம்பாதித்து, சாதித்து, இறந்து என்ற புரியாத முற்றுப்புள்ளியே பதிலாகி நிற்கிறது. இறக்க பிறந்தோமா?  என்ற கேள்வி பிறந்த அனைவருக்குள்ளும் நிச்சயம் முளைத்திருக்கும்.  அதற்கான பதில் அவர்கள் அவர்களுடையது.  ஒருவர் பதில் மற்றவருக்கு பொருந்தாது. ஒற்றை  பதில் சாத்தியமுமில்லை. இருந்தும்  மற்றவர்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு பொறி நமக்கும் வெளிச்சம் தரலாம்,  இருள் விலகி  வழி பிடிபடலாம். ஏதோ ஒரு பதிலை ஏற்றுக்கொண்டு நீள்கிறது வாழ்வு. பிறந்து, வளர்ந்து, படித்து, திருமணமாகி, குழந்தைகளுடன் ஒரு சராசரியான வாழ்க்கையில்,  சுழலாக வந்து நிற்கும் பல பெருந் துயரங்கள். அதில் ஒன்று தான் ஒற்றைப் பெற்றோராக, தனி நபராக குடும்பத்தின் நூறு சதவீத தினசரி வேலைகளையும், முக்கிய முடிவுகளையும், நிதி தேவைகளையும், எதிர்கொள்ளும் நிர்பந்தத்துக்குள்ளாகி  நிற்பது.

ஒற்றைப் பெற்றோர் என்பது புதிதல்ல. இந்தியாவில்  கீழ்க்கண்டவாறு ஒற்றைப் பெற்றோரின் புள்ளிவிவரம் ஐக்கிய நாடுகள் சபையால்  வெளியிடப்பட்டுள்ளது.

          வருடம்       சதவீதம்
2000 4.76%
2005 5.69%
2010 5.42%
2015 6.26%
2020 7.22%

இருபது வருடங்களில் ஒற்றைப் பெற்றோரின் சதவீதம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இந்தியாவில்  76% ஒற்றைப் பெற்றோர் அம்மாக்களாகவே இருக்கிறார்கள். மீதி 24% தான் அப்பாக்கள். 

 உலகளவில் 13 மில்லியன் தாய்மார்கள் ஒற்றை பெற்றோர்களாக இருக்கிறார்கள். தற்போது அதிகமாக மாணவர்கள் அப்பா இல்லை என்றுக் கூறுவதை கேட்க நேரிடுகிறது.  தமிழ் நாட்டில் ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பத்து பள்ளி குழந்தைகளுக்கு, படிப்பை பாதியில் விடாமல் தொடர கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் AICTE போன்ற மத்திய அமைப்புகள் மூலம் மாணவர்களுக்கு ஸ்வநாத் ஸ்காலர் ஷிப் திட்டம் போன்ற உதவிகளும் வழங்கப்படுகின்றன. மேலும் சமுதாயத்தில் சரியான நிலையை அடைய பல சட்ட திட்டங்களும் ஒற்றைப் பெற்றோருக்கு உதவும் வகையில் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

நடுத்தர வயதில் ஒற்றைப் பெற்றோராகிய ஒரு தாய், உலகம் புரியாத பாதி கனவுகளோடும், இலக்குகளோடும் நிற்கும் குழந்தைகள் கைப்பிடித்திருக்க, வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி  என்பது தான் இந்த எழுத்துக்களின் நோக்கம். ஒற்றை அம்மாவாக, படிக்கும் இரண்டு குழந்தைகளையும், குடும்பத்தையும் சமாளித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் எனது அனுபவம் கலந்த கண்ணோட்டத்தை  இங்கு சமர்பிக்கின்றேன். 

ஒற்றைப் பெற்றோராவதற்கு காரணங்கள் என்ன வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும், அந்த மாற்றம் நிகழ கூடிய காலங்கள் வலி நிறைந்தது. துக்கம் கலையாத தூக்கமற்ற தருணங்களில், நிறுத்தி, நிதானித்து மீண்டும் வாழ்க்கை பயணம் தொடர்வது அவ்வளவு எளிதல்ல.

மேலோங்கிய பிரச்சனையாக உருவெடுப்பது நிதி. பணத் தேவைகளை எப்படி எதிர்கொள்வது  என்று முடிவு செய்து விட்டால் பாதி தைரியம் உருவெடுத்து நிற்க வைக்கும். ஒரு கதவு மூடினால் மறு கதவு  ஒன்று திறக்கும் என்ற நம்பிக்கையுடன், யாரையும் பணத்தேவைக்கு சாராது தனியே சம்பாதிக்கும் வழி தேடுதல் முதல் கடமை.

வீட்டு வேலைகள், வெளி வேலைகள், குடும்ப தேவைகள், பிரச்சனைகள் ஒன்று சேர்ந்து ஆங்காங்கு முளைத்து நிற்கும். வேலைகளை காலத்திற்கேற்றவாறு வரையறுத்துக்கொண்டால், சுமை குறைவதாக தோன்றும். வலி சுமந்துக்கொண்டிருக்க, வேலை சுமையும் சேர சோர்ந்து போகும் உடலும், மனமும். நம் நலனை நம்மைத் தவிர யாராலும் முழுவதாக புரிந்துக் கொள்ள இயலாத நிலையில், தன்னை தானே சுமையாக நினைப்பதை தவிர்க்க வேண்டும். சுயபச்சாதாபம் மேலும் ஒருவரை பலவீனப்படுத்தும். இந்த வலிகளை வழிகளாக மாற்றும் தந்திரம்,  காலம் கற்றுத்தரும். ஏதோ ஒரு குறை, பல நிறைகளை மறுபக்கம்  நிறைக்கும்.

 ஒற்றையாக நிற்கும் ஒரு பெண்ணிற்கு  வாழ்க்கை துணைவரின்  சொந்தங்கள் தள்ளியே நிற்க முனைகிறார்கள்.  ஒருவரை இழக்கும் போது அவர்களுடைய  சொந்தங்களையும் சேர்த்து இழக்க நேரிடுகிறது. எங்கே வீழ்ந்து கிடக்கும் இவர்களுக்கு கைக்கொடுத்தால் கையோடு ஒட்டிக் கொண்டுவிடுவார்களோ என்று குறைகளால் இடைவெளிகளை  பெரிதாக்கிகொள்ளவே முற்படுகிறார்கள். விலகி நின்று என்ன நடக்கிறது என்று மட்டும் தெரிந்துக்கொள்ள விழைகின்றனர். அவர்களின் பார்வை முன்பை விட வித்தியாசப்படும். யாரையும் சாராமல், நம் குடும்பத்தை நாமே பொருளாதார  ரீதியாகவும்  மற்றும் கடமைகளை ஏற்று  சீராக நடத்தி காண்பிக்கும் போது மெது மெதுவாக தென்படுவார்கள். அவர்களை சார்ந்து நாம் இல்லை, அவர்களிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களிற்கும் புரிய வைக்க வேண்டியிருக்கிறது.  தமக்கு வேண்டியதில்லை என்றாலும் குழந்தைகளுக்காக  சொந்தங்கள் தேவைபடுகிறார்கள். அவர்களிடம் சுமூகமாக போவது என்பதும் தேவையானதாகவே இருக்கிறது.

சொந்தங்களைவிட  நண்பர்களே பல சமயம் துணை நிற்கிறார்கள். இக்கட்டான பல சமயங்களில் தோள்கொடுக்கிறார்கள், ஊக்கம் கொடுக்கிறார்கள். அவர்களின் வாய் வார்தைகள்  கூட மிகவும் தெம்பளிக்கிறது. நண்பர்களுடன் வருத்தங்களையும், சந்தோஷங்களையும் பகிர சுமைகள்  குறையும். என்னை எதிலும் விலக்கி வைக்காது அனைத்து நிகழ்வுகளிலும் சமமாக பாவிக்கும் நண்பர்களே என் பலம்.

சமுதாயமும் வேறு மாதிரி தோன்றும்.  அவர்கள் தங்களை பார்க்கின்ற கோணம் வேறுபடலாம். அவர்கள் அளவீடுகளிற்கு நம்மை நாமே செப்பனிட்டு திணித்துக் கொள்வது தேவையற்றது.  தைரியமும் தன்னம்பிக்கையும்  தானே துளிர்விட்டு துணை நிற்கும்.

குழந்தைகள் புரிந்தும் புரியாது நிற்பர். அவர்களிற்கு இவ்வலி புதியது புரியாததும் கூட. இதனால் ஏற்படும் மன அழுத்தும் வெவ்வேறு வகையில் வெளிபடும். ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் சுயமாக முடிவெடுக்கும் திறன் படைத்தவராக இருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.  அதே சமயம் அவர்கள் மன அழுத்தத்திற்குள்ளாகி படிப்பில் கவனமின்மை, தயக்கம், பதற்றம், தீய பழக்க வழக்கங்கள் போன்றவைக்கும் உட்படுகிறார்கள். இந்த பலவீன பொழுதில் அவர்களிற்கு தேவை முறையான படிப்பு, பராமரிப்பு., பகிர்வு போன்றவையேயாகும். அவர்களிற்கு நம்பிக்கை கொடுத்தல் அவசியம். இந்த இழப்பால் எதிர்காலம் பாதிக்காது என்று கூறி புரியவைக்க வேண்டும்.

அவர்களுடன் நேரம் செலவிடுதல் முக்கியமாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் நேரம் ஒதுக்குதல் அவசியம். குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு எடுத்துக் கூறி புரிய வைத்தல் இன்றியமையாதது.

   ஒற்றைப் பெற்றோராகிய சில மாதங்களில்,   பத்தாம் வகுப்பு வரலாற்று பாடம் படித்துக் கொண்டிருந்த எனது மகன்  திடீரென்று ஒன்று கூறினான். அது எனக்கு அதிர்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்தது.  அப்பா இறந்து விட்டார், உன் வாழ்கையை நீ உனக்கு பிடித்தவாறு அமைத்துக்கொள், அதே சமயம் என்னையும் விட்டு விடாதே நான் படிக்க வேண்டும் என்றான். எதற்காக இப்படி  பேசுகிறாய் என்று திருப்பிக்கேட்டேன்.  பாடத்தில் மறுமணம் பற்றி எல்லா தலைவர்களும் பெண்களிற்கு அவசியம் என்று  குறிப்பிடுகிறார்கள், அதனால் அது உன் உரிமை தானே என்றான். அந்த பெரு எண்ணம்  எனக்கு சிரிப்பு கலந்த அழுகையும் தந்தது. ஒரு பக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுப்பட்ட தலைவர்களின் கூற்று இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மகிழ்ச்சி பெற, அவன் எனக்காக சிந்தித்தது நெகிழ்ச்சியை தந்தது. நான் அவ்வாறு செய்யப்போவதில்லை,  உங்களுக்காக நானும் எனக்காக நீங்களும் இருக்கிறீர்கள் என்று சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்ட வேண்டியிருந்தது. எனக்கும் ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் கலந்த பதற்றம் இன்றளவும் விடுதியில் தங்கி படிக்கும் மகளிற்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது.  ஆகையால் வீட்டில் நடக்கும் அன்றாட  நிகழ்வுகளைக் கூட  நம்பிக்கை கலந்து என் மகனிடமும், மகளிடமும் கூறி விடுகிறேன்.  எது செய்தாலும் அவர்களிடம் கருத்து கேட்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி கொண்டேன்.  எனது  சேமிப்பு, சொத்துக்கள், கடன் எல்லாவற்றையும் சொல்லி  வைத்திருக்கிறேன். அவர்களிற்கு வேண்டியதை அவர்களே சம்பாதித்து கொண்டு சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்று அவர்களிற்கு உணர வைக்க சிறிது தன்னம்பிக்கையும், வழிகாட்டலும்  தேவைப்படுகின்றன.

      ‘” தற்காத்துத்  தற்கொண்டாற் .பேணித் தகைசான்ற

           சொற்காத்துச் சோர்விலாள் பெண்”    – திருக் குறள் 56

மேற்கண்ட குரலிற்கிணங்க துன்பமோ, இன்பமோ அனுபவிக்க உடல் நலம் பேணுதல் அவசியம். யாராவது நம் மீது அக்கறை காட்டுவார்களா என்று எதிர்பாராமல் தேவையான மூச்சு பயிற்சி, உடற்பயிற்சியில் ஈடுபட்டால் புத்துணர்ச்சி  கிடைக்கும்.  பிடித்த உணவு,  உடை, பொழுதுபோக்கு ஒரு நிறைவான வாழ்க்கை தரும். நமக்காக  நாம் நேரம் செலவழிக்க, நம் பலம் புரியும். எனக்கு கவிதை படிக்க மிகவும் பிடிக்கும், அவ்வப்போது எழுதுவதுமுண்டு. இருந்தும் ஒரு புத்தகம் எழுதுமளவிற்கு கவிதை எழுத வருமென்று எனக்கே தெரியவில்லை. இத்தருணத்தில் நீர் நிலா என்ற கவிதை புத்தகம் எழுதி வெளிபிட்டது நம்பிக்கையையும் நிறைவான மகிழ்ச்சியையும் தந்தது. குழந்தைகள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும் கூடியது.  இந்த சமுதாயத்தில் ஒரு புதிய வாசல் திறந்திருப்பது புரிந்தது. 

     வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இலக்கு அவசியம். இலக்கை அடைவது மட்டும்  வெற்றியல்ல, அதை அடைய பயணிக்கும் பாதைகளையும்  மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்களே வெற்றியாளர்கள்.  எனவே அவர்கள் அவர்களுக்கான வாழ்க்கை பாதையில் மாற்ற முடிந்தவைகளை மாற்றி அமைத்து, முடியாதவைகளை எதிர் கொண்டு  அனுபவித்து மகிழ்ச்சியுடன் கடக்க  ஒரு நிறைவான வாழ்க்கை அமைத்துக்கொள்ள முடியும்.

ஒற்றையடிப்பாதை

அகலம் குறைவு தான்

ஒரு காலடிக்கு இது போதும்

மறு காலடிக்கு தானே விரியும்

சிகரத்திற்கான மலைப்பாதைகளும்

கோபுரங்களின் மேலேறும் படிப்பாதைகளும்

ஒற்றையடி தான்

உயரம் தொடுதல் வெற்றியெனில்

உயரும் பயணத்தையும் 

தன்னம்பிக்கையால் நிறைத்தால்

வெற்றி நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version