
குழந்தை வளர்ப்பில் கணவன்-மனைவி என இருவரின் பங்கு மிகவும் அவசியம்.இருவரின் பங்கு இல்லாமலா குழந்தை வளருகிறது? என்று நீங்கள் கேட்கலாம்.
பெரும்பாலான குடும்பங்களில் இருவரின் துணையில்லாமல் ஒருவரின் உதவியோடு மட்டும் தான் குழந்தைகள் வளருகிறார்கள்.
அதற்காக தாய் அல்லது தந்தை இல்லாமல் தனியாக வளரும் சூழலில் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களைக் குறித்து கூறவில்லை.
கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து வாழும் இல்லங்களில் ஒருவர் இருந்தும் இல்லாதது போல வளர்ந்து வரும் குழந்தைகளைப் பற்றி தான் கூறுகிறேன்.
திருமணமானப் புதிதில் தம்பதியர்களுக்கிடையே இருக்கும் அந்நியோனியம் குழந்தைப் பிறந்ததும் காணாமல் போகிறது ஏன்?
குழந்தை வளர்ப்பை பற்றி பேசும் போது ஏன் தேவையில்லாமல் இதையெல்லாம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
உங்கள் இணையாரின் மனநிலைப் பொறுத்தே இங்கு குழந்தையின் மனநிலையும் மாறுகிறது என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பின் போது ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வைத் தேடி வெளியே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு குழந்தை வாழும் குடும்பச் சூழலும், பெற்றோர்கள் அவர்களை அணுகும் முறையும் தான் அவர்களின் பண்புகளையும், குணாதிசயங்களையும், மனநிலையையும் நிர்ணயிக்கின்றன என்ற புரிதல் இங்கு பலருக்கு இல்லை.
இன்றைய தலைமுறைகள் மீது பல கோணங்களில் அவர்கள் மீது பழி சுமத்த தயாராக இருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு உண்மை புலப்படாமல் போய் விட்டது.
பெற்றோர்களாகிய நாம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணம் என்று.
ஆரம்பத்தில் குறிப்பட்டுள்ளது போல குழந்தையின் வளர்ப்பில் கணவன்-மனைவி இருவரின் பங்கும் அவசியம் தேவை.
மேலும் தம்பதியர் இருவரின் மனநிலையும் , குழந்தைகளை அணுகும் முறையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ள பண்புகளில் மிக முக்கியமான ஒன்று.
குழந்தை சந்தோசமாக வளர வேண்டும் என்றால் உங்கள் இணையாரின் மனநிலையும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
சில குடும்பங்களில் குழந்தை பிறந்ததும், அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவதும், அவர்களுடைய பொருளாதாரத் தேவையைப் பார்த்து கொள்வது மட்டும் தான் ஆண்களின் கடமை என்றும், அவர்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய மொத்த பொறுப்பும் தாயை மட்டுமே சேரும் என்று ஒதுங்கி கொள்ளும் ஆணாதிக்க சமூகம் பலர் இருக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகளிடம் சிறப்பான பண்புகள் காணப்படும் போது “என் மகன்” , “என் மகள்” என்னை போலத் தானே இருப்பான் என்று மார்த்தட்டிக் கொள்ளும் பல ஆண்கள், அதே குழந்தைகளிடம் சில தவறுகளை காணும் போது மட்டும் நா கூசாமல் தன் இணையாரை மட்டும் சுட்டிக் காமித்து குறை கூறுவதோடு தன்னை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு போதும் தவறியதே இல்லை.
இன்று இம்மாதிரியான சூழ்நிலைகள் பல இடங்களில் மாறியிருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் தங்களை மாறி மாறி காரணங்களை சுட்டிக் காட்டிக் கொண்டு சண்டையிடும் தம்பதியர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதிற்கில்லை.
இப்படி பல விதமான கோணங்களில் ஒவ்வொரு குடும்பங்களில் நிகழும் சூழ்நிலைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
நமக்கு இங்கு தேவையானதெல்லாம் நம் குழந்தையின் மனநிலை சந்தோசமாக இருக்க வேண்டும்.
*முதலில் கணவன்-மனைவி இருவருக்குமிடையே சரியான புரிதல் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பின் ஆணி வேரே நீங்கள் தான். அதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்!
*குழந்தைகள் முன் உங்களுடைய உணர்வுகளை சரியான முறையில் கையாள பழகிக் கொள்ள வேண்டும்.
*நான் மட்டும் இந்த வேலைகள் எல்லாம் பார்க்கிறேன் . நீ மட்டும் எதுவுமே பார்க்க மாட்டிங்கிறாய் போன்ற நீயா? நானா? வாதங்கள் எல்லாம் குழந்தை வளர்ப்பில் களைந்தெறியப்பட வேண்டும்.
*உங்கள் இருவருடைய அன்பின் அடையாளம் தானே அக்குழந்தை. ஒருவரையொருவர் குற்றம் கண்டுபிடிப்பதை விடுத்து, உங்கள் இருவருக்கும் குழந்தை வளர்ப்பு முறை புதியது தான் என்ற புரிதல் முதலில் இருவருக்கும் உருவாக வேண்டும்.
*ஒருவரை ஒருவர் குறைச்சொல்லி கொண்டு மாறி மாறி குறை காண்பதை விடுத்து, இருவரும் அமர்ந்து குழந்தையின் அன்றாட தேவைகளை பகிர்ந்து கொள்வதற்கான திட்டமிடுதலைக் குறித்து கலந்து ஆலோசிப்பதன் வாயிலாக அவர்களை சிறப்பாக வழி நடத்தலாம்.
*காலையில் சமையலறையில் உங்கள் இணையார் வேலை பார்த்துக் கொண்டிருந்தால், குழந்தையை எழுப்புவதிலிருந்து காலை கடமைகளை முடிப்பதற்கு அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம்.
*பெற்றோரில் யாராவது ஒருவர் குழந்தையை கண்டிக்கும் படியான சூழல் உருவாகும் போது மற்றொருவர் அக்கணம் அந்தப் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது.
*அம்மாதிரியான சூழலில் நிச்சயமாக குழந்தை மற்றொரு பெற்றோரின் சமாதானத்தைத் தேடி நாடும். இருப்பினும் நீங்கள் அமைதியாக கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
*உங்கள் இணையாரிடம் குழந்தையில்லாத சமயங்களில் அப்பிரச்சனை குறித்து பேசுவது, அதை வேறு விதமாக எவ்வாறு சிறப்பாக அணுகிருக்கலாம் என்பது குறித்து கலந்து முடிவு எடுக்கலாம்.
*கடந்த தலைமுறைகளில் இது மாதிரியான பிரச்சனையை பெரியவர்கள் கையாண்ட விதம் பார்த்து வளர்ந்த நாமும் ஒருவர் கண்டிக்கும் போது, மற்றொருவர் ( அது தாத்தா, பாட்டி, உங்கள் இணையார் யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்) வேகமாக குழந்தையின் முன்பே அவர்களுக்காகப் பரிந்து பேசி பிறரைக் கடிந்து கொள்வது தான் வழக்கமாக இருந்திருக்கக் கூடும். அவ்வழக்கம் இன்றும் பல குடும்பங்களில் நீடித்து வருகிறது.
*இந்த அணுகு முறை முற்றிலும் தவறு என்கிறார்கள் குழந்தை மனநிலை உளவியலாளர்கள்.
*ஏனென்றால் இது குழந்தைகள் தொடர்ந்து தவறு செய்யும் வழக்கத்தை ஊக்குவிப்பதற்கு வழி வகுக்கிறதாம். ஒருவர் கண்டிக்கும் பட்சத்தில் மற்றொருவர் தட்டிக் கொடுப்பதால் குழந்தைகளின் மனதில் அவர்கள் செய்தது தவறு என்ற புரிதல் இல்லாமல் அச்சூழ்நிலையை வழக்கம் போல கடந்து விட வழி வகுக்கிறதாம்.
*தினமும் குழந்தையிடம் அவர்கள் பள்ளியில் நடந்தவற்றையும், இரவு உறங்கச் செல்லும் போது உங்கள் அலைபேசியெல்லாம் ஓரங்கட்டி விட்டு அவர்களுடன் கதை பேசத் தொடங்குகள்.
*கதை மட்டுமல்ல, அன்றைக்கு அவர்கள் செய்தவற்றில் ஏதாவது ஒரு குணநலனைப் பாரட்டும் விதமாக இருக்கலாம்.
*குழந்தைகள் மேலும் நற்பண்புகளை வளர்த்து கொள்ள உங்கள் பாராட்டுக்கள் மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்.
*எந்த வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, குழந்தை உங்களிடம் ஏதேனும் சொல்ல வரும் சமயங்களில் அதை மறுக்காமல் காது கொடுத்து கேட்கப் பழகுங்கள்.
*ஒரு வேளை, நீங்கள் முக்கியமான வேலைப்பளுவில் மாட்டிக் கொண்டால், அவர்களை அதட்டாமல், “செல்லம், அப்பா/அம்மா கொஞ்சம் இந்த வேலை முடிச்சதும் வந்து கேட்கட்டுமா? இப்போ சுருக்கமா சொல்லுறீங்களா?” என்று உங்கள் சூழ்நிலையை அவர்கள் போக்கில் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.
*இவ்வாறாக சூழ்நிலைகளை கையாளும் போது நமக்காக நம் பெற்றோர்கள் எப்போதும் இருக்கிறார்கள். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பெற்றோரிடம் கூறலாம் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் பிறக்கும். தாய், தந்தை என்றாலே கண்டிப்பு மட்டும் தான் என்ற பிம்பம் மாறி, அவர்களுக்கு நீங்கள் சிறந்த தோழனாக/ தோழியாக தெரிவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால் அவர்கள் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பேருதவியாக இருக்கும்.
*காலை எழுப்பும் போது அவர்களை அன்புடன் எழுப்ப முயற்சி செய்யுங்கள்.
*அவர்களை எழுப்பிக் கொண்டே சமையல் வேலை போன்ற பிற வேலைகளில் கவனம் செலுத்த முற்படாதீர்கள். குழந்தையை எழுப்புவதற்கு முன்பே உங்கள் வேலைகளை முடித்து விடுங்கள்.
*நாளைய தேவைகளைக் குறித்து முந்தைய நாள் இரவு உறங்க போவதற்கு முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
*கடைசி நேரத்தில் சுடு தண்ணீர் காலில் கொட்டியது போல காலை எழுந்ததும் குழந்தையிடமும், உங்கள் இணையாரிடமும் கடிந்து கொண்டு கத்தும் வழக்கத்தை மாற்றுங்கள். அந்த மாதிரியான வழக்கம் தொடர்ந்தால், அது உங்கள் உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது அல்ல.
*குழந்தை வளர்ப்பின் போது இணையார் இருவரும் சிறு சிறு தியாகங்களை செய்ய தங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
*ஆரம்பத்தில் அனைத்தையும் கடைப்பிடிப்பது மிகவும் கடினமாக இருப்பது போலத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழக்கமாக சேர்த்து கொண்டு நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் போது உங்களால் சுலபமாக அனைத்தையும் கையாள முடியும்.
இவையெல்லாம் நமக்கு புதியது தான். இதுவெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா? என்று கூட சில நேரங்களில் தோன்றலாம். நம்முடைய முன்னுரிமை குழந்தையாக இருக்கும் பட்சத்தில் இங்கு எல்லாம் சாத்தியம் தான்.
நாமும் அப்படி வளர்ந்திருந்தால் இந்த அணுகுமுறையெல்லாம் சாதாரணமாக கடந்து சென்றிருப்போம்.
பரவாயில்லை! நம் தலைமுறைகளுக்கு நாம் முன் மாதிரியாக இருக்க முயற்சித்துப் பார்க்கலாம்.
குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டையிடும் போது, அது அவர்களுடைய ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்து அவர்களுடைய எதிர்காலத்தையே பாதிக்கிறது.
குறிப்பாக சண்டையின் போது நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், பெற்றோரில் ஒருவர் மற்றொருவரை குற்றங்கள் சொல்வது, குழந்தையை திட்டும் போது, ‘உன் அம்மா மாதிரி’, ‘உன் அப்பன் புத்தி அப்படியே இருக்கு’ போன்ற வார்த்தைகள் எல்லாம் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
அன்றைய காலங்களில் ஆண்கள் பலர், தங்களுடைய மனைவியை மரியாதை குறைவாக நடத்தியது, அவர்களுடைய வேலைகளில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்வது, இவையெல்லாம் பெண்களுக்கான வேலை மட்டும் தான் என்று கூறுவது, அடுக்களை வேலைகள் பார்ப்பதற்காகவே படைக்கப்பட்ட பாவிகள் பெண்கள், வீட்டில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெண்களுக்கு எந்தவித உரிமையும் வழங்காமல் எப்போதும் பெண்களை அடிமைகளாகவே நடத்திய ஆணாதிக்க சமூகத்தை பார்த்து வளர்ந்த இன்றைய தலைமுறையினரின் பெற்றோர்களாகளில் சிலரும், நன்கு படித்து கை நிறைய சம்பளம் வாங்கி நல்ல நிலையில் இருந்தாலும் கூட , அக்கால அணுகுமுறையை பார்த்து வளர்ந்த அவர்களால், இன்று பட்டினங்களுக்கு இடம் பெயர்ந்து வந்திருந்தாலும் கூட பழைய ஆணாதிக்க சமூகத்தின் வழக்கங்களைத் தான் கடைப்படித்து வருகிறார்கள் என்பது மறுப்பட முடியாத கசப்பான உண்மை தோழர்களே!
உங்கள் இணையாரை நீங்கள் அணுகும் முறை, வீட்டின் அனைத்து வேலைகளையும் சரி பாதியாக பிரித்துக் கொண்டு அவர்களுக்கு உதவுவது, அவர்களுடன் அன்பாக இருப்பது, குழந்தையின் முன்பு அவர்களை மரியாதையாக நடத்துவது, அவர்களுடைய உணர்விற்கு முன்னுரிமை வழங்குவது, இப்படியாக ஒருவரின் உணர்வை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டு நடந்தால் மட்டுமே உங்களுடைய குழந்தையின் எதிர்காலம் வசந்தமாக இருக்க முடியும்.
பாலின வேறுபாடின்றி வீட்டின் வேலைகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது என்ற புரிதல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலம் தான் உணர்த்த முடியும்.
இன்று நம் வீட்டுச் சூழலில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சிறு வயதில் நாம் வளர்ந்த சூழல் தான்.
உங்கள் குழந்தையும் அவர்களின் வருங்கால இணையாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு அஸ்திவாரம் நம் வளர்ப்பிலிருந்து தான் தொடங்குகிறது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தனிமனிதனுடைய பழக்க வழக்கங்கள் தான் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு குடும்பமும் இணைந்து தான் சிறப்பான சமுதாயத்தை கட்டமைக்கிறது என்ற விழிப்புணர்வு நமக்குள் வந்தால் போதும், இந்த சமுதாயத்தில் நாம் எதிர்பார்த்த மாற்றம் விரைவில் வரும்.