இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்…. (influencer marketing)

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் என்றால் என்ன? 

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் என்பது சமூக வலைதளங்களில் ஒருவர் தன்னை பின்தொடரும் நபர்களுக்கு ஒரு பொருள் அல்லது ஒரு சேவையை விளம்பரம் செய்து சந்தைப்படுத்தும்  யுக்தி / முறை. 

உதாரணம் 

ஒரு திரைப்பட நடிகர், தன் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில், அதிக ரசிகர்களால் பின்தொடரப்படும் அவர் ஒரு பதிவு செய்கிறார். அந்த பதிவில் ஒரு மொபைல் நிறுவனத்தின் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மொபைல் ஒன்றை தான் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், அந்த மொபைல் மிக அற்புதமாக இருப்பதாகவும் சொல்லி நீங்கள் இந்த மொபைல் வாங்க அவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் நான் தரும் தள்ளுபடி கூப்பன் பயன்படுத்தி சலுகை விலையில் வாங்கலாம் என்கிறார்.

இதை பார்த்து அவரது ரசிகர்கள் ஒரு 5 சதவீதம் நபர்கள் அந்த பொருட்கள் வாங்கலாம்.

இதை பிரபலங்கள் மட்டும் தான் செய்கிறார்களா ? 

தன்னை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது ஆயிரம் நபர்கள் கொண்ட ஒருவர் கூட இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மூலம் பணம் ஈட்ட முயற்சி செய்கிறார்கள். 

ஏதன் அடிப்படையில் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் இயங்குகிறது ? 

நம்பகத்தன்மை தான். தன்னை பின்தொடர்பவர்கள் தன் மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்ற அடிப்படையிலும். தான் பின்தொடரும் நபர் நம்பிகையானவர் என்ற அடிப்படையிலும். பணம் மூலதனமாக இருந்தாலும் நம்பகத்தன்மை தான் பிரதானம். 

இதை தொழில்நுட்ப ரீதியாகயும் சந்தைப்படுத்தும் ரீதியாகவும் பார்த்தால் ஒரு பொருளை தொலைகாட்சியில் அல்லது வானொலியில் விளம்பரம் செய்தால் அந்த பொருள் சென்றடையும் மக்கள் வெகு சிலர் (இன்றைய காலகட்டத்தில்) இதற்கான செலவு அதிகம். இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மூலம் ஒரு பொருளை எளிதாக மக்களிடத்தில் சேர்த்து விடலாம் இந்த விளம்பரத்தின் ஆயுட் காலம் இல்லை அதாவது இன்ஃப்ளூயன்சர் தன் பதிவை நீக்கும் வரை ஆனால் அதை அவர் செய்யமாட்டார் அது ஒப்பந்தம் அடிப்படையில் இருப்பவை. இதுவும் நிறுவனங்கள் மூலம் விளம்பரம் செய்தால் மட்டுமே.

சரி இதில் என்ன சிக்கல் இருக்கிறது மக்களுக்கு ? 

நம்பகத்தன்மை உடையும் போது தான் பிரச்சனை. அதாவது தன்னை பின் தொடர்பவர்கள் மீது சிறிதும் பொறுப்பு இல்லாமல் எனக்கு பணம் ஈட்ட வேண்டும் என ஒருவர் நினைக்கும் போது அங்கே எல்லாம் மாறிவிடும். அதாவது போலியான நிறுவனத்திற்கு விளம்பரம் செய்வது, போலியான தரமற்ற பொருட்கள் விளம்பரம் செய்வது தான். இதனால் பெரிதும் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் மக்கள் தான். 

இதுவரை நிகழ்ந்த ஒரு பெரும் ஏமாற்று வேலை , ஊழல் (scam ) பற்றி பார்ப்போம். 

ஒரு (YouTube channel) வலைஒளி சேனல் தாங்கள் வெளியிடும் காணொளிகளில் ஒரு நிறுவனத்தை விளம்பரம் செய்கிறார்கள். அந்த நிறுவனம் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் தருவதாக விளம்பரம். இந்த விளம்பரம் ஒரு பன்னிரெண்டு காணொளியில் உள்ளடக்கமாக வெளியிட்டனர். இதை நம்பி அந்த காணொளி பார்த்த நபர்கள் அவர்கள் சொன்ன நிறுவனத்தின் வலைத்தளத்தில் மொபைல்கள் வாங்க ஆரம்பித்து உள்ளார்கள் முதலில் ஆர்டர் செய்யப்பட்ட இருபது நபர்களுக்கு மொபைல் வீடு தேடி வந்து உள்ளது. சிறிது நாட்களுக்கு பிறகு ஆர்டர் அதிகம் வரத் தொடங்கிய உடன் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் அனுப்புவதை நிறுத்திவிட்டு அதில் கிடைத்த பணத்தோடு நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவு ஆனார்கள்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்த நிறுவனம் ஒரு போலியான நிறுவனம் முறையே பதிவு செய்யப்படாத நிறுவனம் என தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் விளம்பரத்தைப் பிரசங்கம் செய்த அந்த யூடியூப் (YouTube) சேனல் எங்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது எங்களுக்கும் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என சொன்னதால் கடைசியில் அந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இப்போது எல்லாம் இதை போல் விளம்பரம் செய்யும் பலர் இந்த வாசகத்தை எச்சரிக்கை அறிவிப்பாக மிக சிறிய எழுத்தில் விளம்பரத்தின் ஒரு ஓரத்தில் போடுகிறார்கள் 

” இது ஒரு விளம்பரம் இதனால் உங்களுக்கு எந்த பணம் இழப்பு நேர்ந்தாலும் நாங்கள் பொறுப்பு இல்லை ”  என்று. 

உண்மை தான். சட்டத்தின் படி வாடிக்கையாளர்கள், தான் வாங்கும் பொருட்கள் சரி பார்த்து வாங்க வேண்டும் என்று இருக்கிறது. வாங்கிய பின் ஏதேனும் பிரச்சனை என்றால் நிறுவனம் தான் பொறுப்பு என்று அதுவும் அவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆனால் அதை விளம்பரம் செய்த யாருக்கும் தண்டனை இல்லை. 

ஒரு போலியான நிறுவனத்தின் போலியான பொருளை வாங்கிப் பின் நீங்கள் எந்த நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யமுடியும். போதிய ஆவணங்கள் இல்லை என்பதே நிதர்சனம். காவல் துறையில் புகார் கொடுக்கலாம் குற்றவாளி சிக்கி பணம் மீட்பது நம் நாட்டில் எளிதாக நடக்கும் காரியம் இல்லை.

உதாரணம். 

ஆப்பிள் மொபைல் நிறுவனம் ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்தது “ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் ” விலை சுமார் 85000. இதன் முதல் பிரதி (first copy ) என சொல்லப்படும் நகல் வாட்சின் விலை வெறும் 1499 என விளம்பரம் செய்கிறார்கள் நிறைய சிறிய கடைகள் , இணையவழி வர்த்தக தளங்கள். இதை இன்ஃப்ளூயன்சர்கள் எளிதில் மக்களிடத்தில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். 

இப்போது இந்த வாட்ச் வாங்கும் நபர்கள் வாங்கிய மறுநாள் அல்லது ஒரு வாரத்திற்கு பிறகு வேலை செய்யவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஏமாற்றம் மட்டுமே. ஏன் என்றால் இதைத் தயாரித்த நிறுவனம் பெயர் எதுவும் இருக்காது, முறையான ஆவணகள்(bill) கொண்டு வாங்கி இருக்க போவது இல்லை. அப்படியே பில் (bill) போட்டு வாங்கி இருந்தாலும் அந்த கடையின் உரிமையாளர் எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றே சொல்லி விடுவார். இதை நீதிமன்றம் வரை எடுத்து செல்வதற்கு போதிய விவரமும் வசதியும் இல்லை என்னும் போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். கொஞ்சம் தைரியம் நிறைந்த நபர் என்றால் சண்டையிட்டு வேறு பொருள் வாங்கி விடுவார். 

சரி எப்படி இதில் ஏமாறாமல் / சிக்காமல் இருப்பது ? மற்றும் எப்படி ஒரு பொருளை வாங்குவது ? 

நீங்கள் பின் தொடரும் ஒருவர் ஒரு பொருளை விளம்பரம் செய்தால் 

அது இணையவழி விற்பனை மட்டுமே (eCommerce business ) என்றால் 

  • முதலில் அந்த நிறுவனம்/ வலைதளம் எத்தனை நாட்களாக இயங்குகிறது, எங்கு இருந்து இயங்குகிறது என்ற தகவல் சரி பார்த்து கொள்ளுங்கள். இதை அவர்கள் வலைத்தளத்தில்  தொடர்பு பக்கத்தில் உள்ள தகவல் கொண்டு சரி பார்க்கலாம்
  • அந்த நிறுவன TIN எண் மற்றும் GST எண் கொண்டு சரி பார்க்கலாம்.
  • குறைந்தது ஒரு ஆறு வெவ்வேறு துறை நண்பர்களோடு இதை பற்றி விவரம் கேட்டுக்கொள்ளுங்கள்.
  • ஒரு நம்பகத்தன்மை வந்த பிறகு அந்த பொருளை ஆர்டர் செய்யுங்கள். நீங்கள் பணம் செலுத்தும் ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். 
  • அந்த வலைத்தளத்தில் அல்லது நிறுவனத்தின் return/ replacement கொள்கைகள் பற்றி விவரம் தெரிந்துகொள்ளுங்கள். அதாவது அந்த பொருள் உங்களை வந்து அடையும் போது ஏதேனும் சேதாரம் இருந்தால் அல்லது பொருள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வேலை செய்யவில்லை என்றால் பொருளை மீண்டும் எடுத்து கொள்வார்களா? அல்ல வேறு பொருள் மாற்றி தருவார்களா ? என்பதே  return and replacement policy.

இப்போது சிலர் வலைதளம் இல்லாமல் வாட்சப் செயலி மூலம் விற்பனை செய்கிறார்கள் அப்போது நீங்கள் செய்யவேண்டியது

  • (Cash on delivery ) பொருள் பெறும் போதும் பணம் செலுத்தும் முறை தேர்வு செய்யுங்கள்.
  • உங்கள் உரையாடலை ஸ்கிரீன் ஷாட் (screenshots) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பொருளை பெறும் பொழுதும் அதை திறக்கும் போது வீடியோ எடுத்து கொள்ளுங்கள்.
  • அவர்கள்  return/ replacement கொள்கைகள் பற்றி அவர்களிடமே விவரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதாவது அந்த பொருள் உங்களை வந்து அடையும் போது ஏதேனும் சேதாரம் இருந்தால் அல்லது பொருள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வேலை செய்யவில்லை என்றால் பொருளை மீண்டும் எடுத்துக் கொள்வார்களா? அல்ல வேறு பொருள் மாற்றி தருவார்களா ? என்பதே return and replacement policy. 

நீங்கள் பின் தொடரும் ஒருவர் ஒரு பொருளை விளம்பரம் செய்தால் இணையவழி இல்லாத ஒரு கடையில் வாங்கும் பொருட்கள் என்றால் நன்கு , நான்கு பேரிடம் கடை பற்றி விசாரித்து வாங்குங்கள்.

எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இயங்குகிறது. ஏமாற்றுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். நீங்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நீங்கள் பின்தொடரும் நபர்களை முழுவதும் நம்ப வேண்டாம் அவர்களும் உங்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள் தான். 

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மூலம் பொருட்கள் மட்டும் இல்லை  உணவகம், தங்கும் விடுதி, சுற்றுலா ஏற்ப்பாடு செய்யும் நிறுவனம், வர்த்தக செயலிகள் , கடன் வழங்கும் செயலிகள், மகப்பேறு என எல்லா துறை சார்ந்தும் விளம்பரம் செய்யப்படுகிறது. இன்றும் சிலர் சூதாட்ட விளையாட்டு செயலிகளை விளம்பரம் செய்கிறார்கள். சூதாட்ட செயலியால் உயிர் இழந்த நபர்கள் ஏராளம்.

இப்போதும் இன்ஃப்ளூயன்சர்கள் சூதாட்ட செயலிகளை அதிகம் விளம்பரம் செய்கிறார்கள். குறைந்த முதலீட்டில் அதிக லாபம், இந்த விளையாட்டை ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் விளையாடினால் போதும் ஆயிரம் ரூபாய் உங்கள் கையில் என ஆசை காட்டும் வசனங்கள் தான் அதிகம். ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டு நீங்கள் பொது வெளியில் நான்கு பேர் அமர்ந்து விளையாடினால் அது குற்றம்,ஆனால் அதையே இணையதளத்தில் விளையாடினால் எந்த குற்றமும் இல்லை. செயற்கை நுண்ணறிவு  மூலம் இயங்கும் இந்த ரம்மி விளையாட்டில் நீங்கள் முதல் நான்கு போட்டியில் வெற்றி பெறுவீர்கள் பின் ஒன்று இரண்டு தோல்வி,பின் வெற்றி,  உங்களை உளவியல் ரீதியாக அவர்கள் அடிமையாக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும். பின்பு மிகவும் முனைப்புடன் அதிகம் முதலீடு செய்து விளையாடுவீர்கள், அதன் பின் உங்களை அறியாமலே அந்த விளையாட்டில் அடிமையாக மாறி விடுவீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கை, குடும்பத்தின் நிதி நிலைமை , நிம்மதி என எல்லாம் கேள்விக்குறி தான். சிலர் இந்த பிரச்சினையில் இருந்து விடைப்பெற தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். தவறுகள் செய்துவிட்டு அதன் விளைவுகளை வேறு ஒருவருக்கு பாரமாக அவர்கள் தலையில் கட்டிவிட்டு செல்கிறார்கள். 

பணம் சம்பாதிக்க எளிய வழி என இன்ஃப்ளூயன்சர்கள் சொல்லிவிட்டு அவர்கள் சம்பாதித்து விடுவார்கள் கடைசியில் கடன், இழப்பு என உளவியல் ரீதியாகவும், பொருட்கள் ரீதியாகயும் சிக்கி தவிப்பது நடுத்தர, ஏழை மக்கள் மட்டுமே. 

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்  விளம்பரம் சார்ந்த ஒன்று தான் இதை விளம்பரமாக பார்க்கும் பட்சத்தில் விழிப்பாக இருந்து விடலாம். இன்ஃப்ளூயன்சர்கள் மீது ஆதீத நம்பிக்கை வேண்டாம்.

இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் பற்றிய சில விடயங்கள்

  • இந்தியாவில் அதிக பாலோவர் கொண்ட நபர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
  • இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மதிப்பு 12 பில்லியன் ரூபாய்.
  • இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் செய்ய அதிகம் பயன்படுத்தப்படும் தளம் இன்ஸ்டாகிராம்.
  • இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மூலம் நகரம் முதல் கிராமம் வரை சென்றடைய முடியும். கிராமப்பகுதிகளில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து விட்டது.
  • இந்தியாவில் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் சார்ந்த அதிகாரப்பூர்வ தனிச் சட்டம் இல்லை. இதை கண்காணிக்க சுயக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற ஒரு ஏஜென்சி மட்டுமே இருக்கிறது. (Advertising Standards Council of India)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version