நம்மில் அநேகருக்கு இருந்த, இருக்கும் ஆசை எனக்கும் இருந்தது. அமெரிக்க மண்ணில் காலூன்றுவது. அது ஒரு மாயாஜால உலகம், பணத்தில் வசதியில் மகிழ்ச்சியில் புரளலாமென ஒரு உருவகம் மனதில் வேரூன்றியிருந்தது. அத்தனை கனவுகள் ஆசைகளோடு அயல் மண்ணில் வந்திறங்கிய தினம் ஒரு ஓவியமாய் மனதில் பதிந்துவிட்டது.
ஒரு ஜனவரி மாதத்தில் பனியால் மூடிய பாஸ்டன் நகரம் அத்தனை அழகாய் இருந்தது. என் இரண்டு கண்களுக்குள் அதன் அழகு அடங்காததாய் மனம் விரிய குளிர் காற்று மூச்சடைக்க இந்நகரம் வெண்பட்டு கம்பளத்தோடு எனை வரவேற்றது.
அந்த நாள் முதல் இந்நாள் வரை எத்தனையோ அனுபவங்கள்…இருந்தும் இம்மண் என்னைக் கை விடவில்லை. மாயாஜாலங்களால் ஆனதில்லை இவ்வுலகம் என கற்றுக்கொடுக்கவும் தவறவில்லை இந்நகரம்.
ஒரு இல்லத்தரசியாய், கல்லூரி மாணவியாய், இரு மகள்களின் தாயாய், தனியார் நிறுவனப் பணியாளராய் இங்கே பல பாத்திரங்களை ஏற்கும் வாய்ப்பு கிட்டியது என் வரமே. நம் நாட்டில் பட்டப் படிப்பென்பது சாதாரணமாகிவிட்ட நிலையில், இங்கே நான் முதுகலை பட்டதாரியென சொன்னதும் வாய்பிளந்து என்னைப் பார்த்தவர்களைக் கண்டு புன்னகையே மிஞ்சியது.
கல்லூரியிலோ, பணியிடத்திலோ முதலில் எனை வியப்பூட்டியது ஆண் / பெண் பேதமென்பதே இல்லை என்பதே. ஒரு நாள் மாலை அமெரிக்க நண்பரொருவர் அவசரமாய் விடைபெற்றுக் கொண்டு, “நான் வீட்டிற்கு செல்லும் நேரமாகிவிட்டது..என் மனைவிக்கு சமைக்க வராது, நான் சென்று தான் சமைக்க வேண்டும். எங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதெல்லாம் அவளே. அதிலேயே அவளுக்கு நேரம் போதவில்லை” என தன் மனைவியைப் பற்றி உயர்வாய் கூறிக்கொண்டே கிளம்பிப் போனார். அந்த நொடியில் சரலென மனதிலேறி உயரத்தில் அமர்ந்துவிட்டவரை கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சமையல் மற்றும் மற்ற வீட்டு வேலைகளை ஆண் பெண் இருபாலரும் அவர்தம் கடமையாய் பாகுபாடின்றி செய்வதும், சுயமரியாதையோடு பெண்களை நடத்துவதும், பள்ளிப் பருவம் முடிந்ததுமே பெற்றோரை சார்ந்திராமல் சுயமாய் நிற்க உழைக்கத் துவங்கும் இளைஞர்களும் என இவர்களின் வாழ்க்கை முறை ஈர்த்துக் கொண்டது எனை.
பள்ளிப் பருவத்தில் பதினைந்து வயதிருக்கும் போதே சிறார்களுக்கு வாகனம் ஓட்ட முறையாய் கல்வியும், பயிற்சியும் அளிக்கப் படுகிறது. பள்ளிப் படிப்பு முடிக்கும் பொழுதே அநேகமாய் அனைவரும் ஓட்டுநர் உரிமம் வாங்கி விடுகிறார்கள். சொந்தக்காலில் நிற்க இது முதல் படியாய் உதவுகிறது. உயர்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு விடுமுறையின் போதும் ஏதாவது சின்னச் சின்ன வேலைகளுக்கு சென்று சம்பாரிக்க ஆரம்பிப்பது, மருத்துவமனை பள்ளிகள் முதியோர் இல்லங்களில் தன்னார்வ தொண்டு புரிவது இப்படி பல விஷயங்களில் ஆச்சர்யப் படுத்துகிறார்கள். பள்ளி முடிக்கும்பொழுதே அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் வளர்ந்து வருகிறார்கள்.
கல்லூரிகளில் தேர்ந்தெடுக்க எண்ணிலடங்கா படிப்பு பட்டங்கள் வாய்ப்பிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் கல்லூரிப் படிப்பென்பது அதிக செலவுள்ள ஒன்று இங்கே. வாழ்நாளில் பாதிக்கு மேல் கல்லூரிக் கடனை கழிப்பதிலேயே அயர்ந்து போகின்றனர். தற்பொழுது உயர்கல்வி கற்க ஏராளாமாய் நம் நாட்டினர் வருகிறார்கள். கல்லூரி முடிக்கும் தருவாயில் நல்ல வேலையிலும் அமர்கிறார்கள்.
நிறுவனங்களில் பெண்களுக்கு ஆணுக்கு சமமாய் ஊதியம் என்பது அப்போது (பதினைந்து வருடங்களுக்கு முன்) பெருவியப்பே. அப்படி சமமில்லாத இடங்களில் பெண்கள் போராடவும் ஆரம்பித்தனர்.
எங்கும் எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது, வாகன விதிகளை மீறாமல் இருப்பது, சாலையில் சக வாகன ஓட்டிகளை மதிப்பது, சட்டத்தை மதித்து நடப்பது, காவலர்களின் மேல் அத்தனை மதிப்பு வைத்திருப்பது என வியந்து பார்க்கும் விடயங்கள் அநேகம். தனிமனித ஒழுங்கு சிறார் கல்வியில் இருந்தே புகட்டப்படுகிறது.
இப்படி எத்தனையோ பிரமிக்க வைக்கும் அளவிற்கு விஷயங்கள் அயல் மண்ணில் இருந்தாலும், நம்மூரைப் போல் இலவச மருத்துவக் கட்டமைப்பும், இலவசக் கல்வி முறையும் இங்கே இல்லை. இந்த இரண்டிலும் நம் நாட்டினர்தான் முன்னோடிகள். நாம் மிகப் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.
நாங்கள் இருக்கும் பகுதியில் வருடத்தின் நான்கு பருவங்களும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. இலையுதிர் காலங்களில் வண்ணமயமாய் மரங்கள் கண்கொள்ளா காட்சியாய், குளிர் காலங்களில் வெள்ளைப் பனி போர்த்திய வெளிகளும் பார்க்கப் பார்க்க சலிக்காத காட்சிகள்.
அநேக குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். அப்பொழுது தான் கொஞ்சம் வசதியான வாழ்வு முறைக்கு சாத்தியம். இங்கே வந்த புதிதில் சற்றே தனிமை, ஏதோ இழந்துவிட்ட தவிப்பு எல்லாமே இருந்தது. தற்பொழுது ஏராளமாய் நம் நாட்டினர் இங்கு வந்துவிட்டதும், நமக்குத் தேவையான சமையல் பொருட்கள் உணவகங்கள் வந்ததும் அந்தத் தவிப்பெல்லாம் பெருமளவில் குறைந்துள்ளது.
இங்கே பிறந்த நம் அடுத்த தலைமுறையினர் இந்த வாழ்வு முறையில் இயல்பாய் பொருந்திப் போகிறார்கள். அங்கே வேரூன்றி இங்கே கிளை பரப்பிய நம்மைப் போன்ற தலைமுறையினர் தான் சற்றே திண்டாட வேண்டியிருக்கிறது. நாள்பட நாள்பட அந்தத் திண்டாட்டத்தையும் சமாளித்து நிற்க வாழ்க்கை கற்றுக்கொடுத்தும் விடுகிறது.
இப்பொழுதும் அயல் மண் மாயாஜாலமா என்றால் இல்லை, நம் தாய் மண் மீது தான் அந்த ஈர்ப்பு வியப்பு தற்பொழுது. எது எட்டாக்கனியோ அதில் தானே ஈர்ப்பென்பது மனித இயல்பு!
அருமை