மனித மனத்தை ஈரம் உலராமல் காப்பாற்றும் வல்லமை கொண்ட ஆர்.சூடாமணியின் எழுத்து.

உனக்கு யாரும் இல்லை என்று மனசு தளராதே. எழுதிக் கொண்டே இரு. உன் எழுத்தைப் படித்துவிட்டு யாராவது உன்னைத் தேடிக்கொண்டு வருவார்கள். உனக்குப் புதிய உறவுகள் கிடைக்கும்.

ஆர்.சூடாமணி

“அன்புள்ளம்” என்ற கதையை வாசித்த பிறகு தான் சூடாமணியின் படைப்புலகத்திற்குள் பயணிக்கத் துவங்கினேன். மாற்றாந்தாயான  பாரதியால்  வளர்க்கப்பட்ட ராமு என்ற இரண்டு வயது சிறுவனும், பிரசவத்திற்கு முன் தன்னுடைய தாய்வீட்டிற்குச்  செல்ல இருக்கும் பாரதியுடன் செல்ல அடம்பிடிப்பதும் ராமுவின் அப்பா அதை மறுக்கும் போதும், பாரதி ராமுவை தன் அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள்.  ஆரம்பத்தில் இருந்தே பாட்டிக்கு ராமுவைப் பிடிப்பதில்லை. பாரதி பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்ற தருணத்தில், பாரதி உன்னுடைய அம்மா இல்லை என்று ராமுவின் மனதில் வார்த்தைகளால் விதைக்க முனைகிறாள் பாட்டி. ராமுவுக்கு பாரதி வாங்கித்தந்தப் பொருட்களை வெடுக்கென பிடிங்கிக்கொள்ளும் போது ராமுவைப் பாட்டி அடித்துப் புறம்தள்ளுகிறாள். குழந்தையுடன் வீடு திரும்பும் பாரதியும் ராமுவும்  இரவு மாட்டு தொழுவத்தில் உரையாடும் தருணம் உடல் சிலிர்க்கும் தருணம். இக்கதைக்குப் பிறகு ஆர்.சூடாமணியின் மற்ற படைப்புகளையும் தேடிப் படிக்கும் ஆர்வம் உள்ளெழுந்தது. அப்படி தேடியதில் “தனிமை தளிர்” என்ற தலைப்பில் சூடாமணியின் 63 கதைகளை தேர்வு செய்து காலச்சுவடு வெளியிட்டிருந்த புத்தகம் கிடைத்தது. அதன் பிறகு    கே.பாரதி எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்ட இந்திய இலக்கியச் சிற்பிகள் ஆர்.சூடாமணி  புத்தகம் கிடைத்தது, அதில் ஆர்.சூடாமணியின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடிந்தது. அதுமட்டுமில்லாமல் அதன்பிறகு சூடாமணியின் கதைகளின் உலகம், அதில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள்  என தன் வாழ்வின் சாட்சியங்களை தன் படைப்பில் படைத்திருக்கிறார்.

என்னை அறியாமலே சூடமணியை நான் நேசிக்கத்துவங்கிவிட்டிருக்கிறேன்.  மௌனத்துடன் ஒளிவீசும் கண்கள், தீர்க்கமான கூரிய நாசியும், வெள்ளை உடையும், கருணை பொங்கும் முகமும், கொண்ட புகைப்படம் என்னை இன்னும் ஈர்த்ததுக் கொண்டிருக்கிறது. சுய இரக்கத்தின் கூட்டுக்குள் பதுங்கி விடாது எச்சூழ்நிலையிலும் சிறியதொரு கசப்புணர்வை வெளிக்காட்டாத எழுத்தாக சூடாமணியின் எழுத்து இருந்திருக்கிறது. 

வாக்கு வேறு, வாழ்க்கை வேறு என்று இல்லாத ஒரு மனுஷியாக அவர் இருந்திருக்கிறார். தத்துவ விசாரங்களுடனும், எளிய சிந்தனையுடனும், சாதாரண நடையிலும் கதை சொல்லும் ஆற்றலும் அநாயாசமாக பிரமிக்கவைக்கும் உயரங்களை அவர் கதைகளில் தொட்டுச் சென்றிருக்கிறார்.

 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 7 நாவல்கள், 8 குறுநாவல்கள், பல  நாடகங்கள் என மட்டும் அல்லாமல் நேரடியாக ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் கொண்டவராக இருந்திருக்கிறார். இவரின் கதைகள் கன்னடம், மலையாளம், மராட்டி, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்போதே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய பாட்டி ரங்கநாயகி அம்மாவினால்  1920ல்  டைரியில் எழுதப்பட்டவைகளை பிற்காலத்தில்   “சந்தியா” எனும் நாவலாக ஆர்.சூடாமணி வெளியிட்டிருக்கிறார்.

சூடாமணிக்கு  அம்மாவும்  குழந்தைகளும் மிகவும் பிடித்தமானவர்கள், அதனாலோ என்னவோ அவரின் பெருவாரியான கதைகளில் அம்மாக்களும் குழந்தைகளும் நிரம்பியிருக்கின்றனர். விளிம்பு நிலை மனிதர்களின்பால் கருணையுடன் கொண்ட எழுத்திலும்

நிஜத்திலும் மனித மதிப்புடன் அவர் நடந்திருக்கிறார்.  மனித உணர்வுகள், உறவுகள் பற்றிய மிக நுட்பமான நயத்துடனும் துல்லியமாக எழுதியிருக்கிறார். எந்த வகையான சமரசங்களும் செய்துகொள்ளாமல் தன்போக்கில் மிக இயல்பாய் படைத்திருக்கிறார். 

எழுத்து எனும் ஊடகம் சூடமாணியின் வாழ்வை உள்ளத்தை இன்றும் அறிந்திட  நம்முள் பாய்ந்து உலுக்கவும் தடவிக் கொடுக்கவும் அன்புசெய்யவும் கற்றுக் கொடுக்கிறது. தன் எழுத்துகளின் மூலம் ஒரு சமூக மாற்றத்தையே ஏற்படுத்தும் முனைப்புடனே அவரின் படைப்புகள் இருந்தது. உபதேசத்தொனி இல்லாது குடும்ப உறவுகள் ஆண்பெண் உறவு சிக்கல்கள் குழந்தைகள், இளவயது ஆண், பெண்கள், முதிர்கன்னிகள், விதவைகள், தாயுள்ளம் கொண்டவர்கள், மூதாட்டிகள்,  உடல் வளர்ச்சி குன்றியவர்கள் என எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள் இப்படியான எல்லா உருவசித்திரத்திலும் பிரதானமாக இருக்கும் பெண்களின் பாத்திர வடிவமைப்புகளின் மூலம் தனது ஆழமான கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஜே.கிருட்டிணமூர்த்தியின் அபுனைவின் வழி  தத்துவங்களை வாசிப்பதற்கும் ஆர்.சூடாமணியின் புனைவுலகத்தின் வழியில் தத்துவங்களை உள்ளுக்குள் எழுப்பும் பாங்கும் ஈர்ப்புடையதாகவும் சிந்தனையைத் தூண்டச் செய்வதாகவும் இருக்கிறது.

மனித உணர்வுக்கூட்டமைப்பின் அத்தனை பரிணாமங்களையும் இவரில் எழுத முடிந்தது அதனால் தான் குழந்தைகளின் உலகத்தை வெளிப்படுத்தும் கதைகளை  அவரால் கொடுக்க முடிந்தது. அதேபோல் ஊனமுற்றவர்களின் உளவியலை 1959ஆம் ஆண்டு வெளிவந்த அவரின் முதல் நாவலான  ” மனத்துக்கினியவள்” இந்நாவல் முழுக்க ஏராளமான உளவியல் போராட்டங்கள் சார்ந்த விவாதங்களை உள்ளடக்கியதாக இருக்கும். “மனிதனாய் பிறந்தவனுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அவமானம் இன்னொருவரின் பரிதாபத்திரமாவதுதான்” என்று அவர்களின் உணர்வையும் உளவியலையும் குழைத்து குழைத்து எழுதிய கதைகளாக  “சோதனையின் முடிவு” “அற்புதம் நிகழ்ந்தது” “எம் பேர் மாதவன்” ஆகிய கதைகளைச் சொல்லலாம். 

சூடாமணியின் கதையில் வரும் பெண்கள் யதார்த்தமாகவும் அதீதமாக யதார்த்ததை உடைத்து எறியும் தன்மையுடன், அவர்களின்  அகவுலகத்தை அழுத்தமாகவும் தன் கதைகளில் வடித்திருக்கிறார். பெண் சார்ந்து ஆணின் பார்வையை கேள்விக்கு உள்ளாக்கியும் எழுதி சென்றிருக்கிறார்.

 “சோபனாவின் வாழ்வு” என்றொரு கதை வேலைக்குச் செல்லும் ஒரு திருமணமாகாத நடு வயதுப்பெண் சோபனா மற்றும் தந்தையைச் சுற்றி அமைந்தது. தனியே வீட்டிலிருக்கும் தந்தையிடம் அவரது சமையல்காரர் சோபனாவை ஒரு விடுதியில் முகம் தெரியாத ஆணுடன் கண்டதாகச் சொல்கிறார். நாள் முழுவதும் அதனை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகும் அவளது தந்தை மாலையில் பெண்ணின் வருகைக்குப் பிறகு ஒரு பெரும் மனம் மாற்றத்திற்கு ஆளாகிறார். வீட்டினுள் நுழைந்தவுடனேயே தன்னைப் பார்த்து “சாப்பிட்டாச்சா அப்பா?” என்று பரிவுடன் கேட்கும் பெண்ணின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அவளிடம் தனக்குள்ள அக்கறையைக் குறித்து நினைக்க ஆரம்பிக்கிறார்.  அவளுக்கு பிடித்த நிறம் என்ன? அவள் விரும்பும் உடை எது? இவற்றைப் பற்றியெல்லாம் தான் அறியவோ அறிய முயற்சித்தோ இல்லை என்பதை உணர்ந்து மன வருத்தம் கொள்கிறார். இதுவே தனது மகள் மகனாக இருந்திருந்தால் தான் இப்படி சந்தேகப்பட்டோ பதட்டமடைந்தோ இருப்போமா என்று நினைத்து மனக் குழப்பத்திலிருந்து விடுபடுகிறார்”

 “நான்காவது ஆசிரமம்” என்ற கதை ஒரு பெண்ணின் அறிவு ரீதியிலான பயணத்தை விளக்குவதாக இருக்கிறது. இக்கதையில் அப்பெண் தன்னைப் பற்றி பேசுவதற்கு பதிலாக அவளது மறைவுக்குப் பிறகு அவளது இரண்டாவது மற்றும் மூன்றாவது கணவர்கள் அவளைப் பற்றி பேசுவதாக அமைந்துள்ளது. கேட்பதற்கோ, படிப்பதற்கோ மிகவும் முரண்பாடாகத் தோன்றும் இக் கதையின் வடிவம். எனில் 70களிலேயே ஒரு பெண்ணின் வாழ்வை திருமணம், குடும்ப அமைப்பு போன்றவற்றால் மட்டுமே கட்டமைக்க மறுக்கிறது இக்கதை. தனது பதினெட்டாவது வயதில் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கணவனை இழக்கும் அப்பெண்ணுக்கு அந்நிலையில் காதலும் ஆண்பால் ஈர்ப்பும் மட்டுமே முதன்மை பெறுகிறது. அதன் பின் மறுமணம் புரியும் அப்பெண்ணுக்கு குழந்தைபேறும் குடும்ப வாழ்வில் ஈடுபாடும் ஏற்படுகிறது. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவரும் ஒரு தருணத்தில் தனது அறிவுத் தேடலுக்கான ஒரு வழிகோலைத் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதன் காரணமாக மூத்த அறிஞர் ஒருவரை மணக்கும் அவள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்நிலையிலிருந்தும் விடுபட எண்ணி தனித்திருக்க முயல்கிறாள். அது மறுக்கப்படவே மாடியிலிருந்து கீழே விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்கிறாள்”.இன்றும்கூட இப்படியான கதையை எழுத தயங்கி நிற்கும் சூழலில் மிக துணிச்சலான கதை, பெண் குறித்த சனாதன மரபை உடைக்கும் கதை. 

“உடலுக்கு அப்பால்” இந்தக் கதையில் அமெரிக்காவில் இருந்து திரும்பும் இளைஞன் தான் காதலித்து காத்திருந்து, மணக்கவிருக்கும், அந்த பெண் பாலியல் வன்முறை என்ற விபத்துக்கு ஆளானதை அறிந்து சித்ராவை  எண்ணி எண்ணி  வெறுப்பும்  சோர்வும் கொள்கிறான். அவன் சிந்தனைப் போக்கை அவன் கேட்க நேர்ந்த ஒரு ஆன்மீக சொற்பொழிவு மாற்றுகிறது “அழியும் உடலை விட அழியாத ஆன்மாவே இன்றியமையாதது” “அழியும் உடலுக்குள் ஆன்மாவை காண வல்லோர் இறைவனையே காண்கிறார்கள்” என்ற செய்தி இந்திய சிந்தனை மரபையும் நடப்பு வாழ்வையும் தொடர்புப்படுத்தி அவனை யோசிக்க வைக்கிறது. ஆத்மாவைப் பற்றி மிக உன்னதமான ஒரு நிலையில் தர்க்கம் செய்யும் அதே வேளையில்  இந்திய சிந்தனைப்போக்கு இன்னொரு வகையில் பார்த்தால் உடலோடு அதுவும் பெண்ணின் உடலோடு மிக தீவிரமாய் படிந்து இருக்கும் முரணை எண்ணிப் பார்க்கிறான். உண்மையான ஆத்மீகம் மனிதநேயத்தோடு தான் இணைந்து இருக்க வேண்டும் என்ற முடிவோடு சித்ராவை மணந்து வாழ முடிவெடுக்கிறான்.

இக்கதையில் கற்பு என்ற நிலையை  கட்டுடைப்பது மட்டுமல்லாமல் தத்துவார்த்தமாக நம்மை அழைத்துச் செல்கிறார். மனிதன் என்பவன் தெய்வத்தை வழிபடும் போதும், தாய்மை என்ற உயர்ந்த நிலையை விழையும் போதும்கூட “தான்” என்பதை தொலைக்க முடியாதவனாக தன்னையே எல்லாவற்றிலும் பர்ர்த்துக்கொள்ளும் பிரதிபலிக்க நினைக்கும் பலவீனம் கொண்டவனாக இருக்கிறான் என்ற தன்மையில் ஆத்மவிசாரமாகவும் நகர்கிறது. 

கற்பு எனும் மனத்திண்மை பெண்கள் உடையதாக மட்டும் பார்க்கப்படவில்லை பெற்றோர் அல்லது கனவனின்/ ஆணின் கௌரவமாக பார்க்கப்படும் நிலை உலகம் முழுவதும் உள்ளது இதனால் சாதிக்கலவரம் ஆயினும் அந்நிய நாட்டு படையெடுப்பின் பகைவரின் வெளிப்பாடாய் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதும் என   முழுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இக்கொடுமை பெண்ணிய சிந்தனை வளருமுன் கற்பழிப்பு என்ற பெயரால் சூட்டப்பட்டது. கற்பழிப்பு என்ற சொல் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பை மட்டும் காட்டுகிறதா? பாலியல் வன்முறை என்ற சொல்லே, ஒரு பாலினத்தின் மேல் மற்றொரு பாலினம் தொடுக்கும் வன்முறைச் செயல் என்பதை தெளிவாக்குகிறது. மேலும் பெண்ணுடல் மேல் நிகழ்த்தப்படும் வரைக்கும் பெண்ணின் மன தன்மையான கற்புக்கும் தொடர்பு ஏதுமில்லை என்று உணர்த்தும் பாலியல் என்ற சொல்லாட்சி தேவையாகிறது, இவை தவிர்க்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இது குறித்த சமூக நோக்கும் மாற்றம் பெறுவது முக்கியம் என்பது படைப்பாளர் சூடாமணியின் கருத்து.

அதேபோல் இவரின் கதைகளில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் பாத்திரங்கள் தம்மை கறை பட்டவர்கள் என்றோ தம் உயிரை விட வேண்டும் என்றோ சமூகத்திலிருந்து ஓடி ஒளிய வேண்டும் என்றோ என பரவலாக காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது “ஒன்றும் தெரியாது” என்ற கதையில் உயர் சாதிக்காரனால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளி அபிராமி தனக்கு நேர்ந்ததை மூடி மறைக்கவில்லை கூசி ஒதுங்கவில்லை உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்பதோடு துன்பமும் அவமானமும் சீற்றமும் நிலைகுலைய வைத்தாலும் நிமிர்ந்து நின்று அப்படியே நோக்கி விரல் நீட்டி இவன் என்னை சிதைத்தவன் என்று அழுத்தம் திருத்தமாய் குற்றம்சாட்டினார்.

  அதேசமயம் பாலுறவு அம்சம் அற்ற ஆண் பெண் உறவு பற்றிய பார்வை தமிழ்ச்சமூகத்தில் மிகக் குறைவு என்று சொல்லும் சூழலே இன்றுவரை நீடிக்கிறது வணிக நோக்கத்தோடு பாலியல் உணர்வை வகைப்படுத்தி வெளிப்படும் திரைப்பட ஊடகம் பார்வைக்கோளாறு நிலைப்பட மிகுதியும் காரணமாகிறது சூடாமணி பாலுறவு அம்சம் இல்லாத பெண்ணுக்கு ஒரு சக மனித கௌரவத்தைக் கொடுக்கும்  தத்துவம் நம் சமுதாயத்தில் ஏன் வேர் பிடிக்கவில்லை என்று கவலைப்படுகிறார்.பாலியல் சிக்கல்களுக்கு ஆளாகக் கூடிய மனிதர்களை ஒரு தாயைப் போல பரிவுடன் பார்க்கிறார் அதுமட்டும் அல்லாமல் அதை பெரிது படுத்தாமல் பெருந்தன்மையுடன் அணுகும் தொனி மிகவும் வித்தியாசமானது. இப்படியான கதைகள் எல்லாம் ஜெயகாந்தனின் அக்னிபிரவேசத்தையே தூக்கிச் சாப்பிடும் பல கதைகள் இருந்தும் அவை ஏன் அந்த அளவிற்கு பேசப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது? 

சூடாமணியின் பெண்ணியம் ஆணை வெளியேற்றியது அல்ல!, மாறாக அது ஆணையும் உள்ளடக்கிய மானுட பெண்ணியம் இதன் சாரம் வெறுப்பு இல்லை மேல் கீழ் அல்ல. பெண்ணை அடிமையாக்கும்  ஆண் எப்படி சுதந்திர மனிதனாக இருக்க முடியும் அடிமை கொள்பவன் அடிமையாக தானே இருக்கமுடியும் பெண்ணும் ஆணும் காதலால் இணைந்து ஒருவரை ஒருவர் அன்பால் இணைந்து  அவரவர் பணிகளில் மேம்பட்டு கௌரவமான சமூக ஜீவிகளாக வாழ்தல் அறம், என்பது சூடாமணியின் புது உலகிற்கு சொல்லும் செய்தி இந்த தளத்தில் பல கதைகளை உதாரணமாகப் பார்க்க முடியும்

தன்னைக் கொடுமை செய்த கணவனால் விவாகரத்து அளிக்கப்பட்ட பெண் ஒருத்தி அந்தக் கணவன் உடல் நலமில்லாமல் இருக்கும் போது அவனுக்கு உதவி செய்ய வருவதை சூடாமணியால் வெகு இயற்கையாகவே சொல்லமுடிகிறது.  விவாகரத்துப்  பெற்ற இன்னொரு கணவனோடு  இணைந்து கொண்டு பெண்ணின் மானுட சிறப்பு இப்படி செல்கிற ஒரு கதையை நம்மால் யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை மனிதத்தின் ஆழத்துள் புதைந்துக்கிடக்கும் அன்பை தோண்டி எடுக்கும் கதைகள் இவை. அதேபோல்  10 வயது சிறுமிகள் தங்களுக்குள் விளையாடிக் கொள்ளும் கதை அதில்  பெண்பார்க்கும் விளையாட்டு அச்சுஅசலாக தங்கள் பெற்றோர்கள் பெரியோர்கள் செய்வதை அப்படியே பிரதிபலிக்கிறது, பெரியோர்களின் மேட்டிமைத்தனம் அடாவடித்தனம் பெண் வீட்டாரை மிரட்டியும் விரட்டியும் தொடங்கும் மனிதத்தன்மை அற்ற சடங்குகள் குழந்தைகளின் விளையாட்டு மொழிகளில் கேளிக்கைக்கு  உள்ளாக்கப்பட்டு எழுதியிருக்கிறார் சூடாமணி.

அடுத்தவர் நியாயத்தை அறிந்து கொள்ளும் பொறுமையையும், அவகாசத்தையும் இழந்து கொண்டிருப்பதே மனிதரைப் பகைமை கொள்ள வைக்கிறது என்பதாக வெளிப்பட்டாலும் நியாய உணர்வு மட்டும் சரியான தராசாக இருக்குமா மனிதர்களை அளக்க என்றால் இல்லை அந்த நியாயத் தராசை பிடித்திருக்கும் கை அன்பின் கரமாக இருக்க வேண்டும் என்று அன்பின் பின்னால் தன்னை ஐக்கியப் படுத்தியிருக்கிறார். 

மகனுக்கு பெண்பார்க்க போகும் ஒருவர், வீட்டை விட்டு ஓடிப்போகும் காதலர்கள், தன் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்ட மகனை வெறுத்து தேசாந்திரம் போகிற ஒரு தந்தை, குழந்தையின் மரணம் ஏற்படுத்திய மனக்காயம் தீர ஷேத்ராடனம் செய்யும் இளம் தம்பதியர், புதிய முகத்தைத் தேடும் ஓவியர், என  இவர்கள் அனைவரையும் நேருக்கு நேர் அமரவைத்த ரயில் பயணம் காலத்தின் கிளுகிளுப்பையை சூடாமணி ஆட்டிவைக்கிறார். பயணம் ஒரு அழகான மனதிற்கான  ஒத்தடம், மனதை திறந்து புன்னகை செய்து எதிர் மனிதர்களுக்கு காதுக் கொடுக்கிற தருணம். புதுமை புரட்சி போன்ற உணர்வுகளில் கதைகளை கட்டமைக்காமல் மனித நியதி, மனித இயல்பு, மனிதத்துவம் என்ற மானுடம் சாராம்சத்தையே தன் எழுத்தில் பிழிந்து தந்திருக்கிறார் அதனுள் புதுமையும் புரட்சியும் இல்லாமலும் இல்லை. 

தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்கவே முடியாத படைப்பாளி ஆர்.சூடாமணி ஆனாலும் அவரின் படைப்புகள் பரவலாகப் பேசப்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சிதான். ஒடுக்கப்பட்டோர் யாராயினும் அவர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் இறுதி இலக்கு மானுடவிடுதலையே. அவற்றில் ஆண்_ பெண் குறித்த சமத்துவமற்ற போக்கை உடைக்கும் ஒற்றைக் குரல் ஆர்.சூடாமணியினுடையது.  எல்லா உயிர்களின் மீதும் அன்பை பொழிந்து வேறுபாட்டைக் களைந்து அன்பை சமைக்கும் எழுத்து ஆர்.சூடாமணியினுடையது. அவரின் எழுத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது மிக அவசியமானது. பல பெண் படைப்பாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் ஒரு வேண்டுகோள் . ஆர்.சூடாமணியின் கதைகளில் இருந்து தேர்வு செய்து கதைகளை பாடநூல்களில் இடம்பெறச் செய்தலின் மூலம் சூடாமணி விரும்பிய அறமும் அன்பும் நியாயமும் கொண்ட நிலைபேறுடைய சமூகத்தை நாம் காணத்தான் போகிறோம்.

உதவிய நூல்கள்.

1.தனிமைத் தளிர் _ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.சூடாமணின் கதைகள்_ தொகுப்பும் தேர்வும் _சீதா ரவி மற்றும்  கே.பாரதி.காலச்சுவடு பதிப்பகம்.

2.இந்திய இலக்கியச் சிற்பிகள்_ ஆர்.சூடாமணி _ கே.பாரதி.சாகித்திய அகாதெமி வெளியீடு.

3.இன்னொரு முறை_ ஆர்.சூடாமணின் சிறுகதைகள்_ தொகுப்பாசிரியர்_ பிரபஞ்சன்_ கவிதா_ பப்ளிகேசன்.

4.அழியாச்சுடர் இணையதளம்.

5.ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை_ சு.வேணுகோபால்_ கனலி இணைய இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version