
கோடிக்கணக்கான சிந்தனைகள் கூடிக் கைசேர்ந்து நகர்த்தும் வாழ்வையே எல்லா மனிதர்களும் வாழ்ந்தார்கள் ,வாழ்கிறார்கள், வாழ்வார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை வழிநடத்திச் செல்வதெல்லாம் அவனுக்குள் எழும் எண்ணங்களும் அதன் வழியே அவன் நடக்கும் பயணங்களும் எனலாம்.
தனக்கான வாழ்வை கட்டமைப்பதில் ஒவ்வொரு மனிதனும் சொந்த அனுபவத்தின் வழியாகவும் பிறரது அனுபவத்தை உணர்வதன் வழியாகவும் பற்பல முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும். அவனுக்குள் அவன் வாழ்வு, ஏற்படுத்திக்கொடுத்த நினைவுகள் இனிமையாகவும் இருக்கலாம். அவை துன்பத்தின் சுமைகளை ஏற்றிவைத்தும்,கை கொட்டி சிரிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தனக்குள்ளே நிலை நிறுத்தி தராசுக்கோலின் அளவீட்டைப் போல எதிர்கால வாழ்வைக் கட்டமைப்பதில் அவனுக்கு நினைவுகளே நல்லதொரு வழிகாட்டிகளாக அமைகின்றன.
தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த எல்லாவற்றையும் நினைவுகளின் ஏட்டில் இருந்து மீட்டெடுத்து புனைவு கலந்து எழுதி இருக்கும் இந்த வாழ்வனுபவங்கள் வாசிக்கும் நமக்கும் நல்ல பாடங்களை ஏற்படுத்தித் தருகின்றன.
“”வந்தவர்களுக்கு எல்லாம் தோட்டத்தின் இளநீர் கொடுத்தவர்,பசி என்று வந்தவருக்கு உணவிட்டவர், கையில் இருந்த காசை எல்லாம் காட்டுக்காக செலவழித்தவர், தனக்கு ஆறு அடி இடம் இன்றி பொது இடுகாட்டில் புதைக்கப்பட்டார்”” என்று தனது அப்பாவின் வாழ்வை எழுதிச் செல்கிறார் கதைச் சொல்லி.
இந்தியா ஆங்கிலேயர் வசம் அடிமைப்பட்டுக் கிடந்த போது விடுதலை வேண்டி எத்தனையோ பேர் தனது உறவுகளை, உரிமைகளை இழந்து போராடியிருக்கிறார்கள். தங்கள் இன்னுயிரையும் நாட்டிற்காக தியாகம் செய்திருக்கிறார்கள். அப்படியான விடுதலைப் போராட்ட தியாகியை இந்த தேசம் எப்படி மரியாதை செய்தது என்பதில் தொடங்குகிறது நாவல். தியாகிகள் என்றால் உயிரைக் கூட துறக்க நினைத்தவர்கள் என்று பாராட்ட வேண்டிய சூழலில், அவரது தியாகத்திற்கு இலவசம் என்ற பெயரில் சாலைகள் இல்லாமல், உடனடியாக பயன்படுத்த முடியாமல், ஊருக்கு வெகு தொலைவில் கற்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மேட்டங்காட்டை பரிசாக கொடுக்கிறது அரசு. தியாகி ஆன தாத்தாவின் கதையிலிருந்து தனது தந்தையின் வாழ்க்கையையும் அத்தைகளின் தொடர் நச்சரிப்பையும் இணைத்தபடி தங்களின் வாழ்வனுபவங்களை நூலாசிரியர் நாவலாக்கி இருக்கிறார்.
சீராக நகரும் வாய்க்கால் நீரை போல எல்லோருக்கும் வாழ்க்கை வாய்த்துவிடுவதில்லை. மேடு பள்ளங்களைத் தாண்டி மலைமுகடுகளைத் தீண்டிய மேகங்களிலிருந்து அருவியாகி குளங்களின் மீது குதியாட்டம் போட்டு நதியென நகர்ந்து நாகரீகம் விதைக்கும் நீரின் ஓட்டத்தைப் போல வாழ்வும் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்து ஓடிச் செல்கிறது. தெளிந்த நீரின் பரப்பில் அடியாழத்தின் அத்தனையும் தெரிவது போல தனது மனதின் ஆழத்திலிருந்து வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் காட்சிப்படுத்தி இருக்கும் நூலாசிரியரின் நினைவுச் சேகரிப்பு அபாரமானது.
தம்மிடம் இருக்கும் நிலமோ வீடோ தமக்கான சொத்து என்பதோடு நின்று விடாமல் தமது வாழ்வின் ஓர் அங்கம் என்று நினைத்துக் கொண்டால் அதன் மீதான பற்று அதிகரிக்கத் தொடங்கும். யாரோ சொல்லும் ஒற்றைச் சொல்லிக் கொண்டு எதற்கும் பயன்படாது என்று முடிவு செய்து நிலத்தையோ வீட்டையோ அவசர தேவைக்காக விற்க நேர்ந்தால் அதனால் ஏற்படும் பேரிழப்புகளையும் பின் விளைவுகளையும் நாம் சந்திப்பதில் மிகவும் துன்பப்பட்டு போய் விடுவோம். வார்த்தை தூண்டில்களால் நம் மனதை வசீகரிக்கும் உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் பணத்தாசையைக் கண்டு கொள்ளாது ,அவர்களின் வலையில் விழுந்துவிட்டால் நமது வாழ்வு கேள்விக்குறியாக மாறிவிடும்.
குழந்தைப் பருவ விளையாட்டுகள், பள்ளிச் செல்வதில் ஏற்பட்ட அனுபவங்கள், மாடுகளை பராமரிப்பதன் வழிகள், கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின் முறைகள், பண்டிகைகளுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவது, அவற்றை சேகரிப்பது, ஜோதிடத்தை நம்பி எதிர்காலத்தை அடகு வைப்பது, அடிக்கடி ஒன்று கூடும் உறவுகளின் பாசப்பிணைப்புகள், அதன் வழியே ஏற்படும் சச்சரவுகள், தாத்தா பேரன் உறவுப்பிணைப்பு, கல்விக்காகவும் வேலைக்காகவும் எடுத்து வைக்கும் முயற்சிகள், பள்ளியில் நண்பர்களுடனான நட்பின் அவசியம், இல்லறத்தைப் பேணுவதில் பெண்களின் பங்கு, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் அம்மாக்களின் பற்று என ஒவ்வொருவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை படம் பிடிக்கிறது நாவல்.
தனது சம்பாத்தியம் அனைத்தையும் தாத்தாவிற்கு கிடைத்த இடத்தை சரி செய்வதற்காகவும், அதில் விவசாயம் செய்வதற்காக தனது அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்த அப்பாவின் அனுபவங்கள் நூலில் விரிகின்றன.
பாதைகளற்ற வெளியில் வெகு தூரம் நடந்து சென்று கல்வி பயின்ற சின்னஞ்சிறு காலங்களின் நினைவுத் தடங்களை, உறவுகளின் சுயநலம் தீண்டியப் பின் எல்லாவற்றையும் துறந்து விட்டு கண்காணாத இடத்திற்குச் சென்றுவிட்ட குடும்பத்தின் துயரங்களை தாழ்வரை நமக்கு நினைவுபடுத்துகிறது. நாமே திரும்ப நினைத்தாலும் காலம் நம்மை நமது ஆதியின் இருப்பிடத்திற்கு வர அனுமதிப்பதில்லை. அதைப்போல திரும்பிப் பார்க்க முடியாத நிலத்தின் மீதான ஒரு குடும்பத்தின் உறவை சீரான எழுத்து நடையிலும் தொடர் நினைவுகளின் கடைவிரிப்பிலும் கண்ணன் விஸ்வகாந்தி சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
தாழ்வரை
கண்ணன் விஸ்வகாந்தி
வேரல் வெளியீடு
முதல் பதிப்பு ஜனவரி 2026
பக்கம் 168
விலை ரூபாய் 200