யாதும் ஊரே யாவரும் கேளிர்

“சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்று நாம் பலரும் பல நேரங்களில் யோசித்து இருப்போம். அதில் நானும் ஒருவர். 20 ஆண்டுகளுக்கு முன்னால் நான் இந்தியாவை விட்டு சிங்கப்பூருக்கு வரும் பொழுது ஒரு விதமான பயம் கலந்த எண்ணத்துடனே வந்தேன். என்னுடைய முதல் அடி சிங்கப்பூரில் வைத்த பிறகு எனக்கு முதலில் ஆச்சரியமாக தோன்றியது, சிங்கப்பூரில் உள்ள சுத்தம் சுகாதாரமான சூழ்நிலைகளும், நேர்த்தியான சாலைகளும் மற்றும் வானளாவிய அடுக்குமாடி கட்டிடங்களும் தான். அன்று நான் பார்த்த அந்த வியப்பான விஷயங்கள் இன்றும் எனக்கு தோன்றி கொண்டே தான் இருக்கின்றன. ஏனென்றால், இவை அனைத்தும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அது மேலும் மெருகூட்டப்பட்டு வருகிறது. மற்றும் ஒரு பெண்ணாக எனக்கு, தனிமனித பாதுகாப்பு மிகவும் முக்கியம். இங்கு என்னால் எந்த நேரத்திலும் எந்த பயமும் இன்றி தனியாக எங்கும் சென்றுவர முடியும். இதனால் நான் வெளிநாட்டிற்கு வந்துவிட்டேன் என்ற கவலை குறைய ஆரம்பித்தது. நம் நாட்டில் எப்படி இருப்போமோ அதேபோலவே இங்கும் இருக்க முடிகிறது என்ற உணர்வு எனக்கு அதிகரித்தது. 

அடுத்ததாக, மருத்துவம் நமக்கு மிக முக்கியமானது. இங்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகள் இருக்கிறது. மேலும் மருத்துவர் மற்றும் செவிலியர் சேவை மிகவும் சிறப்பாக இருக்கிறது.

தமிழராக வெளிநாட்டில் என்றாவது நம் ஊரை மிஸ் செய்கிறோமா? என்று நினைத்து பார்க்கிறேன். இங்கு தமிழ் மொழி அரசாங்க மொழிகளில் ஒன்றாகும். பள்ளிகளில் தாய் மொழியாக தமிழை ஏற்று படிக்க முடிகிறது. மேலும், இங்கு பல தமிழ் அமைப்புகள் இருக்கின்றன, அவர்கள் தமிழின் வளர்ச்சிக்காக, தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் பல முயற்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். சொல்லப்போனால், சிங்கப்பூரில் வருடா வருடம் தமிழ் மொழி மாதம் என்று ஒன்று வைத்து அனைத்து அமைப்புகளும் சேர்ந்து தங்களால் முடிந்த நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மற்றும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் பழகுவதற்கும் ஏற்ற சூழல் உள்ளது. எந்த தமிழர் பண்டிகையையும் நம்மால் எளிதாக இங்கு கொண்டாட முடியும். அந்த விதத்தில் நான் தமிழராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும், எனது அடையாளத்தை நான் இங்கு விட்டுக் கொடுக்கத் தேவையில்லை, என்னால் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து எங்கும் செல்ல முடியும், அதை பெருமையாகவும், உயர்வாகவும் நினைக்கிறேன், இதை மற்ற இனத்தினவரும் மகிழ்ச்சியோடே பார்ப்பார்கள்.

புலம்பெயர்ந்த இடத்தில் வாழ்க்கை தரம் நன்றாக, நினைத்தது போல் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து விட்டோம், நண்பர்களை விட்டுப் பிரிந்து விட்டோம் என்று கவலை இல்லையா என்று கேட்டால், அது இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்கு சென்று வரும்போது நம் ஓர கண்ணில் வழியும் கண்ணீர் அதற்கு சாட்சி. ஆனால், சிங்கப்பூர் வந்த பிறகு இங்கு உள்ள நண்பர்களையும், பிற மக்களையும் பார்க்கும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுகிறது. ஏனென்றால், நாம் புலம் பெயர்ந்த இடத்தை சொந்த நாடாகவே, சொந்த மக்களாகவே நினைப்பதால் தான் இது சாத்தியமாகிறது.

இறுதியாக, என்னதான் நமக்குள் ஒரு சில கவலைகள் இருந்தாலும், வெளிநாட்டில் நாம் வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கூற்றுக்கு ஏற்ப இந்த உலகமயமாதலில் நாம் உலகமெங்கும் வியாபித்து இருக்கிறோம். 

உலகமே ஒரே நாடாக மாறிவிட்டது. அனைவரும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலைமை இருக்கும் பொழுது, நாம் இருக்கின்ற இடத்தில் நாம் எப்படி நம் தனித்தன்மையோடு வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகின்றேன்.

என்னைப் போலவே பல நண்பர்கள் உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். நீங்களும் இதே போன்ற எண்ணத்துடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்

3 thoughts on “யாதும் ஊரே யாவரும் கேளிர்

  1. சிறப்பான பதிவு. உணர்வுகளை மிகைப் படுத்தாமல் உள்ளதை உள்ளவாரே உரைத்த விதம் அருமை.வாழ்த்துக்கள் 💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version