மாதவிடாய் – பேசாப்பொருள்

ஒரு பெண்ணின் வாழ்வே மாதவிடாயை மையம் கொண்டே இயங்குகிறது. அந்த வகையில் பார்த்தோமானால் பெண் என்பவள் பூப்பெய்தாலும் பிரச்சனை; பூப்பெய்யாமல் போனாலும் பிரச்சனை. 

நான் பள்ளியில் படிக்கும்போது நான்காம் வகுப்பிலேயே என்னோடு படித்த ஒருத்தி வயதுக்கு வந்துவிட்டாள். எங்க டீச்சர் பதட்டமாகிட்டாங்க. பெற்றோரை வரச்சொல்லி அவளை அனுப்பி வைத்ததோடு ஆசிரியர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். 

பிறகு ஆறாம் வகுப்பில் ஓரிருவர் வயதுக்கு வந்தபோது என் அம்மாவிடம் இதுபற்றிக் கேட்டேன். அம்மா விளக்கமாக எனக்கு எடுத்துக்கூறியதோடு நான் அப்படியாகும்போது எந்தப் பதட்டமும் அடைய வேண்டிய அவசியமில்லை. அது ஒரு வளர்ச்சியின் படிநிலை என்று சொன்னதை மனதில் வைத்துக் கொண்டேன்.

அப்போது அம்மாவிடம் மெதுவாக “அம்மா என் வகுப்பில் ஒருத்தி நான்கு படிக்கும்போதே வயதுக்கு வந்தாளே! ஏன் அது சரியா? என்ன காரணம்?” என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டேன்.  (அப்போதே அவர்களில் சில பிள்ளைகளின் மார்பகம் பெரிதாக வளர்ச்சி அடைந்திருந்ததால்  அவர்கள் நடக்கும்போது சற்று சங்கோஜத்துடன் குனிந்தவாறு கூன்போட்டவாறு நடப்பதை  பழகிக் கொண்டார்கள். விளையாட்டு வகுப்பில்கூட சகஜமாக விளையாட மறுப்பார்கள்.) அதற்கு இப்போதுள்ள உணவு முறையும் முறையற்ற வாழ்வியலும் உட்கார்ந்த இடத்திலேயே விளையாட்டு முதற்கொண்டு என்று இருப்பது காரணமென்றார்.  ஆனாலும் நம் உடல்மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் வேண்டுமென்று கற்றுத்தந்தார். 

உண்மைதான் துரித உணவு ஒருபுறம் பிராய்லர் சிக்கன் இப்படிச் சாப்பிட்டு சாப்பிட்டு ஓடியாடி விளையாடுதல் என்று எதுவுமில்லாமல் உடல் எடை கூடித்தான் இருந்தார்கள் நான்கு ஐந்து ஆறாம் வகுப்பிலேயே வயதுக்கு வந்தவர்கள். 

இது ஒரு புறம் என்றால், கல்லூரியில் என் தோழி ஒருத்திக்கு வயதிற்கான உடல் வளர்ச்சி இல்லை என்று சக தோழிகள் கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் அவளே தான் வயதுக்கு வராததை நம்பிக்கையான தன் தோழி ஒருத்தியிடம் சொல்லிவிட்டாள். அதுதான் அவள் செய்த மாபெரும் தவறு.  அவள் தோழி விளைவுகளை யோசிக்காமல் வெளியே சொல்ல காட்டுத்தீ போல விடுதியெங்கும் பரவிவிட்டது.  அவமானம் தாங்காமல் விடுதியைவிட்டே .. ஏன் கல்லூரியை விட்டே சென்றுவிட்டாள்.

மாதவிடாய் ஆவதும் ஆகாமல் போவதும் நம் கையில் இல்லை. பெண்ணுக்கு இதுதான் தகுதியென்று யார் வரையறுத்தது? பெண் உடலை அரசியலாக்குவதும் அசிங்கப்படுத்துவதும் புனிதப்படுத்துவதும் தேவையற்ற ஒன்று. அன்றைய இதிகாச காலத்து திரௌபதி தொடங்கி இன்று மணிப்பூர் பெண்கள் வரையில் ஆடை உருவப்பட்டு அவமானப்படுத்தப்படும் அரசியல் உள்நோக்கம் மிகச் சரியாக தகர்க்கப்படவேண்டும்.

அதன் பிறகு உடல் சவால் நிலையில் (ஊனமுற்ற என்ற வார்த்தை வேண்டாமே) உள்ள பெண் குழந்தைகள் படும் சிரமமெல்லாம் வேறுவகையென்றால் சிறப்புக் குழந்தைகள் எனப்படும் ADHDS நிலைக் குழந்தைகள் படும் துயரெல்லாம் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதையெல்லாம் மனதில் நிறுத்தினாலே பெண் மீதான கீழான பார்வை நீங்கிவிடும். அப்படியான பெண் குழந்தைகளை பெரும்பாலும் தாய்தான் பராமரிக்கிறார்.  ஆண்பிள்ளைகளும் விதிவிலக்கல்ல. அவர்களையும் அம்மாக்களே கவனிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் அநேக கல்லூரிகள் இருபாலர் பயில்வதுதான். ஆகையால் ஆண்பிள்ளைகளின் பெற்றோர் குறிப்பாக அம்மாக்கள்  பெண்ணின் இந்த மாதவிடாய் பற்றி அறிவுறுத்தலாம். படித்தவர்களுக் கூட தன்னோடு பயிலும் மாணவி என்ற கரிசனமும் புரிதலும் இல்லை. அதனால்தான் இன்று வரை ஒரு பெண் மாதவிடாய் நாட்களில் இருக்கையைவிட்டு எழும்போது ஆடையைத் திரும்பிப் பார்த்து கறை ஏதும் இருக்கிறதா என பதட்டப்படாமல் எழுந்து போவதேயில்லை.

8 thoughts on “மாதவிடாய் – பேசாப்பொருள்

 1. பிரபா,
  உன் சொற்கள் பெண் சமத்துவம் நோக்கி நகர்த்தும் அற்புத புரிதல். என் உறவினர் ஒருவர் வீட்டில் வயதுக்கு வரவில்லை என்று இருபது வயது வரை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். காரணம் ஏன் இன்னும் திருமணம் பண்ணவில்லை என்று அக்கம்பக்கத்தில் பிடுங்கி எடுத்து விடுவார்கள் என்கிற அச்சம்.
  ஏற்கனவே ஆங்கிலத்தில் நீ எழுதிய உன் நூல் படித்து இருக்கிறேன்.
  உன் பாய்ச்சல் மகிழ்ச்சி அளிக்கிறது.
  மாதவிடாய் குறித்து ஒரு ஆவணப்படம் திவ்ய பாரதி எடுத்து இருக்கிறார். அதை பார்க்கிற உணர்வு, இந்த கட்டுரை படிக்கிறபோது.
  மாதவிடாய் சிறுபிராயத்தில் வருவதற்கு உணவு முறை மட்டுமல்ல. பல காரணங்கள் உண்டு. மன அழுத்தம், ஹார்மோன் சுரத்தலில் ஏற்படும் வேறுபாடு என் நிறைய உண்டு.
  மார்பகம் பெரிதாவது ஒரு பெண் பருவமடைய போகிறதற்காக இயற்கை அறிவிக்கிற அறிவிப்பு.
  பெண் உடம்பு மற்றும் மனது அந்தந்த பெண்ணின் உரிமை.
  மாதவிடாய் தீட்டு என்பது அறியாமையின் புரட்டு.
  மாதவிடாய் உயிர் சுழற்சியின் ஆதார சூட்சுமம். எளிமையான, ஆழமான கட்டுரை.
  வாழ்த்துகள் தனபிரபா.. 🤝💐

 2. அழகான மொழியில் ஒரு மாணவியின் பார்வையில் மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார் தனபிரபா. வாழ்த்துக்கள் குழந்தாய்…

 3. “உடல் சவால் நிலையில் (ஊனமுற்ற என்ற வார்த்தை வேண்டாமே) உள்ள பெண் குழந்தைகள்”

  எழுத்தாளரின் மேன்மையை உணர்த்தும் வரிகள்…

 4. பெண் உடலை அரசியலாக்குவதும்,
  அசிங்கப்படுத்துவதும்,புனிதப்படுத்துவதும் அவசியமில்லாத ஒன்று.
  wellsaid ma.வாழ்த்துகள் !

 5. //இன்று வரை ஒரு பெண் மாதவிடாய் நாட்களில் இருக்கையைவிட்டு எழும்போது ஆடையைத் திரும்பிப் பார்த்து கறை ஏதும் இருக்கிறதா என பதட்டப்படாமல் எழுந்து போவதேயில்லை.// என்ற வார்த்தைகளின் கனத்தில் நீண்ட நேரம் உறைந்து கிடந்தேன். தாய், சகோதரி, மனைவி, மகள், தினமும் நம் முன் எதிர்ப்படும் பெண்கள் என்று ( எதிர்ப்படும் பெண்களை எள்ளலுடன் பார்க்கும் அதுவும் மாதவிடாய் என்றால் கொச்சைப் பேச்சு பேசும் மனிதர்களை நான் செவியுற்றிருக்கிறேன்.) அனைவரின் மீதும் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் கட்டுரை. இந்தச் சிறு பெண் / மகள் மாதவிடாய் பற்றிய வலிகளை தன்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து எழுதும் போது தகப்பன்களுக்கெல்லாம் வலிக்கிறது. என்ன செய்வது இவர்களை வலியில்லாமல் காக்க வேண்டும் என்று மனம் பிதற்றுகிறது. ஒன்றும் செய்ய இயலாமல் கை பிசைந்து நிற்கிறது. இப்போது மகள் என்ன சொல்ல வருகிறார் என்று யோசிக்கும் போது, “ஒன்றுமே செய்ய வேண்டாம் தந்தைகளே, சகோதரர்களே, தோழர்களே , ” புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்” என்ற குரல் மட்டுமே தேம்பியபடி கேட்கிறது. இந்த மாதவிடாய் பற்றிய சிறப்பிதழில் மகளின் வலிநிரம்பிய வரிகளை கனம் நிரம்பிய இதயத்துடன் தான் வாசித்தேன். தனபிரபாவின் எழுத்து அனாயசமாக அதேசமயம் எளிமையாக, தீர்க்கமாக வலிநிரம்பிய ஒரு புரிதலை அனைவருக்குள்ளும் விதைத்துள்ளது. வணங்குகிறேன்.
  எழுத்து உலகம் தனபிரபாவிற்கென்று தனித்த புதிய பாதையொன்றை, ஆயிரம் சூரியன்களின் பிரகாசத்துடன் பட்டுக் கம்பளம் விரித்துத் தயாராக வைத்துள்ளது. சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version