மய்யழிக் கரையோரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வாசித்த நல்லதொரு நாவல். மய்யழி பெயரில் மட்டுமல்ல நாவலிலும் அழகான ஊராக வலம் வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஊரானது அமைதியாக வாழ்ந்துள்ளது. எந்தவித அடக்குமுறையும், அடாவடித்தனமும் அதிகமிருந்ததில்லை. 1942- முதல் 1960 வரையிலான காலக்கட்டங்கள் நாவலில் தென்படுகிறது. இக்காலக் கட்டத்தில் தான் இந்திய சுதந்திர போராட்டங்கள், உணர்வுகள் உச்சத்தில் இருந்தன. ஆனால் மய்யழியில் சுதந்திர உணர்வே காற்றில் கலக்காதிருந்துள்ளது. 1981-ன் கணக்கெடுப்பின் படி 28000 மக்கள் தொகை கொண்ட சிறிய ஊர் தானாம் மய்யழி. இன்று மாஹி என்று அனைவருக்கும் தெரியும்படியாக உள்ளது தான் அன்றைய மய்யழி. மலையாள வாசமும், பிரெஞ்சு நேசமும் கலந்து களித்த ஊர் தான் மய்யழி. பாண்டிச்சேரியிலிருந்து தான் காவலர்கள் மய்யழிக்கு வந்தார்கள்; சரக்குகளும் தான். நாடே ‘வெள்ளையனே வெளியேறு’ என்று உரக்கக் கூவி விடுதலைக்காக போராடியபோது, மய்யழியின் மக்களில் பெரும்பாலோர் வெள்ளையர்கள் எப்போது வருவார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்ததெல்லாம் அவர்கள் மேல் மய்யழி மக்கள் கொண்ட அன்பும், மரியாதையும் தான் காரணமாய் வெளிப்படுகிறது நாவலில். அடித்து துன்புறுத்தி தங்கள் ஆணவத்தை அதிகாரத்தை வெளிப்படுத்தியிருந்தால் மக்கள் எப்படி ஆங்கிலேயர்களை ‘எப்போது வருவார்கள்’ என வழி மேல் விழி வைக்க முடியும்.

நாவல் தாசனின் மைய கதாபாத்திரத்தின் வழியாக தாசனின் பிறப்புக்கு முன், பிறந்த பின் என இரண்டாக பிரிகிறது. நாவலை வாசித்து முடித்தப்பின் தாசனோடு நாம் உலாவிய இடங்கள் மனதில் நிழலாடும்; வருடும்; சோகம் சூழும். எக்கச்சக்க கதாபாத்திரங்கள் நாவலில் சுவாரசியம் ததும்ப உலா வருகிறது. தாசனின் தாத்தா கதை, அப்பாவின் கதை, தாசனின் உலகம் என மூன்று தலைமுறைகளின் உலகம் நாவலில் விரவியுள்ளது. எல்லாம் நடுத்தர குடும்பங்களின் கதை தான். அன்றாடங்காய்ச்சிகள் தான். பெண்கள் வீட்டில் மட்டும் உலா வருகிறார்கள். 12- வயது தான் பெண்களின் திருமண வயது. வயதுக்கு வந்தபின் பள்ளியை நாடுவது குறைய ஆரம்பிக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆராதிக்கும் பெண்கள் அதிகம். விபச்சாரம் வெளிப்படையாகவே நடந்துள்ளது. ஆண்கள் 18-வயதில் திருமண வாழ்வில் நுழைந்துவிடுகிறார்கள். குடிப்பழக்கத்திற்கு மய்யழி பெயர் பெற்றதாக விளங்குகிறது. மது விலக்கு அமலில் இருந்த காலக்கட்டத்தில் மய்யழி மட்டும் தனித்து செயல்பட்டுள்ளது. மூப்பரின் கார் வருவதை அதிசயமாக மக்கள் பார்த்து வியந்துள்ளனர். சினிமா வந்த புதிதில் அதே அதிசயப் பார்வை படந்துள்ளது மய்யழி மக்களின் விழிகளில். கல்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தாசன் படிப்பில் படுசுட்டியாக வலம் வருகிறான். மெல்லிய காதலும் மலர்ந்து மணம் வீசுகிறது மய்யழியில். புரட்சி செய்யும் கூட்டமும் ஆங்கிலேயர்களை சீண்டத் தவறவில்லை.

தாசனின் பாட்டியாக வரும் குறம்பியம்மா நாவலின் இறுதி வரை கையில் யானை தந்தத்தால் செய்த மூக்கு பொடி டப்பாவோடு வருகிறார். தாசனின் பள்ளிப் பருவத்தில் கிளைக்கதைகள் பலவற்றை உதிர்த்துக்கொண்டே வருகிறார். ஊரில் யார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை குறம்பியம்மா மட்டுமே அறிந்தவள். பிரெஞ்சு அதிகாரியான மிடுக்குள்ள லெஸ்லீ துரை மேல் அளவற்ற அன்பு கொண்டவள். லெஸ்லீ துரையும், மிஸ்ஸியும் மாலை நேரத்தில் கடற்கரையில் உலா வருவதை மய்யழி மக்கள் புன்னகை மலர ரசிப்பார்கள். ஊர் மக்களுக்கே விருந்தும் பரிசும் கொடுத்துக்கொண்டே இருப்பார் லெஸ்லீ துரை (பிறகெப்படி மய்யழி மக்கள் இவர்களை வெறுப்பார்கள் 😊)

தாசன் தான் நாவலில் நம் இதயத்தில் குடியிருப்பவன். சிறு வயதிலேயே பாட்டியான குறம்பியம்மாவிடம் கதைகளால் வளர்க்கப்படுகிறான். படிப்பில் முதலிடம். அதுமட்டுமல்ல குஞ்ஞனந்தன் மாஸ்டர் கம்யூனிசத்தின் விதையை விதைக்க அதில் முளைக்கிறான் தாசன். கேரளாவில் கம்யூனிசம் இல்லையென்றால் தானே ஆச்சரியம். கனாரன் காந்தி பக்தனாக உலா வருகிறான். பப்பன் சுபாஷ் சந்திரபோஸை ஆதரிப்பவன். இப்படியாக ஒரு புரட்சி இயக்கம் உருவாகி சுதந்திர காற்றை சுவாசிக்க முயல்கிறது. நாவலில் மாற்றம் ஏற்படுவதே தாசனால் தான். பாண்டிச்சேரிக்கு கல்வி கற்க துரைகளால் அனுப்பி வைக்கப்படுகிறான். குறம்பியம்மா, தாமு, கிரிஜா குடும்ப சுமைகள் குறையுமென்ற கனவில் இருக்க, மய்யழி திரும்பும் தாசன் பிரெஞ்சு துரைகளின் கனவை சுக்கு நூறாக்குகிறான். குடும்ப கனவுகளையும் தான். விடுதலை வேட்கையில் குதிக்கிறான். தாமு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். ஒரு நேர சாப்பாட்டின் அரிசிக்காக குடும்பம் பட்டினி கிடக்கிறது. சந்திரிகாவின் காதல் அலை தாசன் மீது மோதுகிறது. அற்புதமான காதல்; அழகான காதல். வாசிக்கும் இடங்களெல்லாம் வசந்தம் தான்; வண்ணங்கள் தான். நாவலில் கண்ணீருக்கான இடங்கள் அங்கங்கு தென்படும்; மனது இளகும். வசதியான சந்திரிகாவின் அப்பா பரதன் காதலுக்கு மட்டும் எதிரி (வேலையே இல்லாதவனை எந்த மகளின் அப்பா தான் ஏற்றுக்கொள்வார்). நாவல் வாசித்த பின் மனதில் நிலையாக மனதில் குடியிருப்பதற்கான காரணம் கடைசியில் தான் உள்ளது. கரைந்தே போய்விடுவோம். கரைந்தே போனேன்.
சோகங்கள் சூழும் போதெல்லாம் குறம்பியம்மாவின் கண்கள் மாதா கோவிலின் உச்சியிலுள்ள சிலுவையை பார்க்கத் தவறாது.
நாவலில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் மனதை கவரும். முறட்டு சுவாபம் கொண்ட அச்சு கூட கிரிஜாவால் மனமாற்றமடைந்து மனிதனாக நடந்துகொள்வதெல்லாம் நாவலின் ஈர்ப்பே. பிரெஞ்சு அரசின் காற்று இன்றும் மய்யழியில் வீசுகிறது. 1954-க்கு பிறகு பிரெஞ்சு துரைகள் விடைபெற்றார்கள். என்றாவது அவர்கள் திரும்பிவருவார்கள் என குறம்பியம்மா, உன்னிநாயர் என கடற்கரையிலேயே கண் பதித்தார்கள். அயர்ச்சியே இல்லாத அழகான மலையாள படைப்பு. அதை தென்றலாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் இளம்பாரதி. மய்யழி நம் நினைவினின்று என்றும் மறையாது. மய்யழி ஆற்றின் கரைகளில் உலா வரும் தும்பிகளில் நாமும் ஒன்றாக உலா வருவோம். மய்யழியை அறியாதவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய இந்திய நாவல்களில் ஒன்றே இந்நாவல். நாவல் மனதை ஆட்கொள்ளும். மய்யழியின் வெள்ளியாங்கல் பிரகாசமானது என்றுமே மறையாது.

பேரன்புடன்,
ரசல் 🌹

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version