மண்ணோடு பிணைத்துக்கொண்ட மானுடப் பறவையின் வாழ்வளக்கும் தேடல்..

இயல்பான மனிதர்களை கலை நேர்த்தியுடனும் அவர்களின் மன உணர்வுகளை உள்ளது உள்ளபடியும் வட்டார மொழியில் எழுதிச் செல்லும் மீனா சுந்தரின் இந்த வெப்புள் மீண்டெழுந்து வெப்பத்தையும் சூட்டையும் தாண்டிச் சென்று உயிர்ப்பித்துக் கொள்ளும் பறவையென வேதனையும் வாழ்வு தரும் துன்பங்களையும் தனக்குள் புதைத்துக் கொண்டு உழைப்பின் நேர்கோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மானுடப் பறவையின் எளிய வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது.

தரணிக்கெல்லாம் சோறு கொடுத்து உடல்களை உயிர்ப்பித்து உணர்வுகளில் மனிதர்களாக உலவவிடும் நெற்களஞ்சியமாம் தஞ்சையின் நடுத்தரக் குடும்பத்து விவசாயக் கூலியின் அன்றாடப்பாடுகளை சேரும் சகதியுமென மண்மணம் கொண்டு வட்டாரச் சொற்களாலே அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் தெய்வானை என்ற ஒற்றை மனுஷியின் முழு வாழ்வையும் காட்சிப்படுத்துகிறது.

எந்த இடத்திலும் தொய்வோ நடுக்கமோ இடையூறுகளோ நேர்ந்திடாமல் இவரின் கதாபாத்திரங்கள் வாழ்வின் போக்கில் நடப்பவையெல்லாம் நன்மைக்கானவையென்றே நேர்மறைச் சிந்தனையில் வாழ்ந்திடும் அழகை ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.

நாச்சிமுத்து தெய்வானை காதலைச் சொன்ன விதம் மண்ணில் நீர் கலந்து விளையும் பயிரின் அறுவடை போலவே வயலுக்கும் வாழ்வுக்கும் கரம் கோர்க்கும் நீரைப் போலவே வாழ்வின் அடித்தளம் என அவர்களுக்கு அமைந்து விடுகிறது.. ஆனால் காலத்தின் தீர்ப்பு தெய்வானையின் மன உறுதியை சோதிக்கும்படியாக விரைவிலேயே நாச்சிமுத்துவை இழக்க வைக்கிறது. ஆண் ஒன்று பெண் ஒன்று என தன்னை நம்பி இருக்கும் பிள்ளைகளுடன் ஒற்றை மனுஷி என சொந்தங்களின் எந்தவிதமான உதவிகளும் கிட்டாத போது வாழ்வின் அடுத்த கட்டத்தை எட்டிப் பார்க்க உறுதி கொள்கிறாள் தெய்வானை

நாச்சிமுத்து அவளுக்கு வழங்கி இருக்கும் உடைந்த கல்லையே தினமும் நாச்சிமுத்துவாக பாவித்து வணங்கிவிட்டே எல்லா வேலைகளையும் செய்யும் தெய்வானை பிஞ்சுகளை வளர்த்து ஆளாக்குவதிலும் உழைப்பை மட்டுமே நம்பி களத்தில் இறங்குகிறாள். தூரத்து உறவினர்களின் உதவியுடன் கருவாடு விற்கத் தொடங்குகிறாள். நாளடைவில் அவளது நேர்மையும் கடின உழைப்பும் வாக்கு மாறாத கைச்சுத்தமும் அவளுக்கு நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுக்கிறது ஆனாலும் அண்டை வீட்டாரின் பொறாமை அடிக்கடி அவளை விஷப்பாம்பின் நாவைப் போல எட்டிப் பார்த்து தீண்டப் பார்க்கின்றது எவற்றையும் பொருட்படுத்தாமல் தான் உண்டு தன் பிள்ளைகளின் எதிர்காலம் உண்டு என்று வேகநடை போடும் தெய்வானையின் வாழ்வில் அவளது கனவுகள் என்னவாயின? என்பதையும் இலட்சியம் எப்படி நிறைவேறியது? என்பதையும் எவ்வித அலங்காரங்களும் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கும் நாவலாசிரியருக்கு தஞ்சை மண் முழுவதுமாக மனதுக்குள் இறங்கி வரம் அளித்திருக்கிறது..

காணும் திரைப்படத்தின் காட்சிகளுக்குள் ரசனைகளைத் துறந்துவிட்டு ஓடிக்கொண்டிருக்கும்
எந்த நிகழ்வையும் ஏற்றுக்கொள்ளமுடியாத மனதின் இயல்போட்டத்தைப்போல ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் கதை நெடுகிலும் நிறைய மனிதர்கள் வலம் வருகிறார்கள். மலைப்பாதையின் திடீர் வளைவுகளைப் போல திருப்பங்களும் துயரங்களும் எங்கேயும் நிகழ்வதற்கு சாத்தியமாக உள்ள பின்புலத்தில் வாழ்வை ரசித்து வாழப் பழகும் மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிப்படுத்தி நமக்குள்ளும் நம்பிக்கையை விதைப்பதில் எழுத்தின் வழியேயான நூலாசிரியரின் உயர் சிந்தனைகளை உணரமுடிகிறது.

தஞ்சை மண்ணிலும் அதைச் சுற்றியுள்ள நிலங்களிலும் மனிதர்கள் திருவிழாக்களை வெகு சிரத்தையாக கொண்டாடும் விதத்தையும் தங்கள் வீடுகளில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் மகிழ்ச்சிப்படுத்தும் காட்சிகளையும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அருமையாகச் சொல்லியிருக்கும் ஆசிரியர் சடங்குகளுக்கு பாடப்படும் பாடல்களையும் முழுமையாகத் தொகுத்து நூலுக்குள் வழங்கி அவற்றை ஆவணப்படுத்தி இருப்பது இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் மனதிற்குள் நிலைநிறுத்த வேண்டிய சிறப்பான செயலாக பார்க்கப்படுகிறது.

ஒரு முறை தனது அண்டை வீட்டுக்காரர் தன்னை எட்டி உதைத்து ஏக வசனத்தில் திட்டிய போதும் அந்த கோப உணர்வை மனதிற்குள் மட்டும் வைத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் வாழ்வின் சூட்டை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் தெய்வானை மறுநாளே அந்தப் பகைவனின் வீட்டில் விழுந்த சாவுக்கு முதல் ஆளாக ஒப்பாரி வைக்க ஓடுகிறாள். பிறப்பு ஒரு முறை என்பார்கள் அதுவும் மனிதப் பிறப்பு மகத்தானது. இதில் கோபங்களையும் அதன் வழியேயான விளைவுகளையும் மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டிருந்தால் சக மனிதர்களின் மீதான பேரன்பும் கருணையும் தொலைந்து ஒவ்வொருவரும் மிருகங்களாக மாறிவிடும் அபாயம் உண்டு என்பதை தெய்வானையின் வாயிலாக உணர்த்தப்படும் ஆகச் சிறந்த பாடமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெறும் உரைநடையாக எழுதப்பட்டிருந்தால் இந்த கதையின் தாக்கம் நமக்குள் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கப் போவதில்லை‌ தமிழின் சிறப்பே ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு அந்தப் பகுதி மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முன்நிற்பதே. அந்த வகையில் இந்த நாவலும் தஞ்சை வட்டார மொழியைச் சுமந்து கொண்டு கூலிகளின் வலியையும் வேதனையையும் மகிழ்ச்சியையும் குடும்பத்தின் சகல பரிணாமங்களையும் நமக்குள் கடத்துகிறது.

நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களது மன உணர்வுகளையும் இருப்பையும் முழுமையாக வெளிப்படுத்தி விடுகின்றன ஒரே ஒரு காட்சியில் வரும் சம்மனசம்மாள் உட்பட நாட்டாமை போத்தையன் அல்லிராணி பொன்னுராசு அவன் மனைவி என ஒவ்வொருவரும் தெய்வானையின் வாழ்வைச் சுமந்து கொண்டு அவளுக்கு சிறப்பானதொரு உயரத்தை அடைய உதவி செய்கிறார்கள்.

நாச்சிமுத்து தெய்வானைக்கு வழங்கியிருந்த சிதைந்து போன கல் நாவலின் இறுதிப் பகுதியில் நல்லதொரு முடிவுக்காக முன்னிலைப்படுத்தப்படுகிறது ஒரு எளிய கதைக்குள் தொல்பொருள் துறை ஆராய்ச்சியையும் புகுத்தி இருப்பது நாவலாசிரியரின் கற்பனை வளத்தை கோடிட்டுக் காட்டுகிறது

மழை நிறைந்த மரத்தின் கூட்டில் குஞ்சுகளைக் காப்பாற்ற தன் முறிந்த சிறகை விரித்தபடி மருத நிலத்தில் நின்று மண்கவுச்சியும் மீன்கவுச்சியும் வாசம்வீசிட வண்டல் களத்தில் விளையாடியிருக்கும் வெப்புளின் சூட்டில் வேதனைகள் மறையலாம். துயரங்கள் தொலையலாமே தவிர வஞ்சகமும் பழிவாங்கலும் என வன்முறையோ தீய எண்ணமோ எட்டிப்பார்க்கவே முடியாது.

மனிதர்களின் துயரங்களை விடுத்து நேர்மறைச் சிந்தனைகளை காட்சிப்படுத்திய விதத்திலும் தஞ்சை மண்ணின் வட்டார மொழியைச் சிறப்பாக கையாண்ட விதத்திலும் வயலும் வயல் சார்ந்த நிகழ்வுகளும் தொலைந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அவற்றை மீள் உருவாக்கம் செய்து ஆவணப்படுத்தியதிலும் இந்த நாவல் சிறந்ததொரு கருப்பொருளை வாசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் நிலை நிறுத்தி விடுகிறது.. இப்படியான எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அவர்களின் மொழியையும் தொடர்ந்து மீனா சுந்தர் ஆவணப்படுத்த வெப்புள் நல்லதொரு வழிகாட்டியாக அமைகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version