மக்கட் செல்வம்

ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதற்கு முக்கிய காரணம் குழந்தைச் செல்வமே எனலாம். எத்தனையோ ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும். தாங்கள் பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை நோக்கியும் அவர்களை வளர்ப்பதற்காகவும் பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக குடும்பத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டிய கட்டாயத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். எத்தனையோ பெண்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை என் பிள்ளைக்காக தான் இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு உலகத்தில் வாழ்ந்து வருகிறேன் என்பார்கள். இதற்கு எல்லாவற்றிற்கும் முக்கிய காரணி குழந்தை செல்வம் தான். ஆத்தா என் செல்வங்களை நல்லவர் ஆக்குவதும் தீயவராக்குவதும் அன்னை வளர்ப்பில் தான் உள்ளது என்பதை பழைய திரைப்பாடல் மூலம் அறியலாம். யாரும் பிறக்கும் போது திருடனாக, கொலைகாரனாக, கெட்டவனாக பிறப்பதில்லை வளர்க்கும் விதமும் வளரும் சூழலுமே ஒருவரை மேன்மை அடைய செய்வதற்கு காரணமாக அமைகின்றன என்பதை நோக்கமாக கொண்டு அமைகின்றது.

குழந்தைச் செல்வத்தின் சிறப்பு

       சங்க காலம் தொட்டு இக்காலம் வரை குழந்தைகச் செல்வத்தைப் பற்றி பேசாத இலக்கியங்களும் இல்லை. பாடாத புலவர்களும் இல்லை எனலாம். குழந்தைச் செல்வம் என்பது ஒருவருக்கு கிடைக்கக் கூடிய அனைத்துச் செல்வங்களை விடவும் சிறந்த செல்வமாகும். ஒருவன் உடலாலும் மனதாலும் மகிழ்ச்சியும் நிறைவும் அடைவது குழந்தைச் செல்வத்தால் மட்டுமே என்பதனை,

“மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள் – 65)

என வரும் குறள் மூலம் திருவள்ளுவர் குறளிலும் குழந்தைச் செல்வத்தின் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார்.

மேலும் குழந்தைகள் கையால் பிசைந்த உணவு உண்பது அமிர்தத்தை அடையும் சுவையானது என்பதை,

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்” (குறள் – 64)

என வரும் குறள் மூலம் விளக்கியுள்ளார்.

பெற்றோர்களுக்கு இனிமை அளிக்கக்கூடிய இவ்வுலகத்தில் தம் குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்பதை விட வேறு எந்த ஒரு இசையும் கிடையாது என்பதற்கு,

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்” (குறள் – 66)

என்ற குறள் சான்றாகும். இவ்வாறாக குழந்தைச் செல்வம் என்பது ஒருவருக்கு கிடைக்கக் கூடிய அனைத்து செல்வங்களையும் விட மேலானது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் கடமை

      குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் முக்கிய கடமை தங்கள் குழந்தைகளை நன்னடத்தையுடனும் நல்ல சிந்தனையுடனும் மற்றவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்களோடு குழந்தையை நல்ல முறையில் வழி நடத்துவதே ஆகும். குழந்தைகளை செல்லமாக வளர்க்கின்றேன் என்ற பெயரில் குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கி கொடுத்து அவர்களை பிள்ளை பருவத்திலேயே சில பெற்றோர்கள் அவர்கள் போக்கிலேயே வளர இடம் கொடுத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் மனதில் தங்களுக்கு இஷ்டப்பட்டதெல்லாம் எளிதில் கிடைத்து விடுவதால் அவர்களுக்கு பெரியோர்களின் கஷ்டம் புரியாமல் வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதன் பின் இளமையிலேயே அவர்கள் பொறுப்பில்லாமல் வளர்வதற்கும் காரணமாகும்.

       பெற்றோர்கள் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை அவர்களின் படிப்பிற்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் எது சரியோ அவற்றை தேர்வு செய்து கவனம் செலுத்தி வர வேண்டும். பிள்ளைகளின் நட்டம் அறிந்து அவர்களை திறமையோடும் புத்திசாலித்தனத்தோடும் வளர்ப்பது பெற்றோரின் கடமை மிக முக்கியமானதாகும். எந்த வீட்டில் பெற்றோர் சரியில்லையோ அவ்வீட்டில் வளரும் குழந்தை எதிர்காலத்தில் எந்த ஒரு சிறந்த நிலைக்கும் வர இயலாது. பெற்றோர்களின் முக்கிய பணி தங்க

ள் பிள்ளைகளை நன்நெறியிலும் கவனிக்க வேண்டும். பெற்றோரின் கண்காணிப்பில் வளரும் எந்த ஒரு பிள்ளையும் வழிதவறி செல்வதில்லை. தவறான வழியிலும் செல்லமாட்டார்கள் என்று கணிசமாக கூறலாம்.

தந்தையின் கடமைகளில் மிகவும் முக்கியமானது

            தந்தையின் கடமைகளில் மிகவும் முக்கியமானது தன் பிள்ளைகளை இவ்வுலகத்தில் அனைவராலும் போற்றப்படக்கூடியதும் அனைவராலும் மதிக்கத்தக்கதுமான இடத்தில் ஒரு நிலைக்கும் நல்ல உதவிதுணையாக இருப்பதாகும். ஏதோ பிள்ளைகளை பெற்றோம் வளர்த்தோம் என்று இல்லாமல் அவர்கள் சிறந்து விளங்க முக்கிய காரணமாய் இருக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்திலேயே பின்வரும் குறள் மூலம் விளக்கியுள்ளார்.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்” (குறள் – 67)

            இவ்வாறு பிள்ளை பொறுப்புணர்ந்து வாழ்வதற்கும் எதிர்காலத்தில் சிறப்பானதொரு நிலைக்கும் செல்வதற்கும் முக்கிய காரணமாய் அமைவது பெற்றோர்களின் வழிநடப்பும் கண்காணிப்பும் முக்கிய சான்றாகும் என்பதை அறிய முடிகிறது.

பெற்றோர்களின் பொறுப்பும் பணியும்

            தாய் தந்தை இருவருக்குமே தங்களின் பிள்ளைகளைச் சரியான ஒருங்கு முறையுடன் மாறி வரும் காலத்தின் சூழ்நிலைக்குத் தக்கவாறு வளர்க்கும் பொறுப்பு இன்றியமையாத பணிச் சுமையாகவே உள்ளது. அக்காலத்தில் பிள்ளை வளர்ப்பு பற்றி கவலைப்படத் தேவைக் குறைவு. ஏனென்றால் அவர்களை முன்னால் பிறக்கும் குழந்தைகளை தங்களுக்குப் பிறகு பிறக்கும் தங்கை தம்பிகளை வளர்க்கும் பொறுப்பினை எடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஐந்து,ஆறு குழந்தைகளுக்கு மேல் இருப்பார்கள், அவர்களுக்கு பிறகு பிறக்கும் தம்பி தங்கைகள் அவர்களை பார்த்தே அனைத்தும் கற்றுக் கொள்வார்கள்.

      ஆனால் இன்றைய காலகட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே இருப்பதால் பெற்றோர்களை அவர்களை முழுமையாக கவனிக்கும் பொறுப்பு அதிகமாக உள்ளது எனலாம். ஒரு சில வீடுகளில் பெற்றோர் இருவரும் பணிக்கும் செல்ல வேண்டி வருவதால் அவர்களை வளர்க்கும் பொறுப்பில் இருந்து தவற நேரிடுகிறது. இப்படிப்பட்ட வீடுகளில் வளரும் குழந்தைகளும் ஏதும் தெரியாமல் தங்களுக்கு ஏதாவது ஒன்று தேவை என்றால் அழுது அடம் பிடித்து அதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற மனப்பான்மை குழந்தை பருவம் முதல் தங்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது எனலாம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவர்களிடம் இருப்பதில்லை.

       எனவே பணிக்கும் செல்லும் பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பிள்ளைகளோடு பேசுவது, அவர்களை வெளியே அழைத்துச் செல்வது என குழந்தைகளுக்காக நேரத்தை செலவிட வேண்டும். பிள்ளைகள்  வளரும் போது நேரத்தை செலவு செய்யவில்லை என்றால் பிள்ளைகள் வளர்ந்த பிறகு பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.

     பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்கின்றேன் என்ற பெயரில் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறார்கள். அவர்கள் வளர்ந்த பிறகுதான் தெரியும் தாங்களே தங்கள் பிள்ளைகளின் தவறான வழிக்குச் செல்ல தூண்டுகோலாக இருந்துள்ளோம் என்று எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள் பிற்காலத்தில் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக அமைதியாக கழிக்க வேண்டும் என்றால் தங்கள் பிள்ளைகளை பொறுப்புள்ள நல்ல பிள்ளைகளாக வளர்த்தால் மட்டுமே முடியும். அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு கல்வியைக் கொடுத்து அவர்களை நல்லதொரு பணியில் அமரும் வரை பெற்றோர்களின் பொறுப்பு தொடர வேண்டும்.

      பெற்றோர்களின் பணியில் மிக முக்கியமான பணி என்னவென்றால் மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்த்து வியக்கும் அளவிற்கு வளர்ப்பதில் தான் உள்ளது. ஒரு தாய் தன் பிள்ளையை பெற்று எடுக்கும் போது பட்ட துன்பத்தை விட பல மடங்கு மகிழ்ச்சி எப்போதென்றால் தன் மகனை பிறர் பாராட்டி பேசும் போது உள்ளது என்பதை பின்வரும் குறளில் அறிய முடிகிறது.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” (குறள் – 69)

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் நிலை

         இன்றைய சூழ்நிலையில் ஒன்றோ இரண்டோ குழந்தைகளைத் தான் பெற்றுக் கொள்கிறார்கள், அவர்களை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். அதனால் இன்றைய காலகட்டம், ஆனால் ஒரு காலத்தில் அனைத்து வீட்டிலும் அது ஒரு பிள்ளை என்று பெற்றோர்கள் கவலைப்படவே இல்லை. அவர்களாகவே வளர்கிறார்கள், தங்களுக்கான ஒரு பணியைத் தேடிக் கொண்டார்கள். படிப்பின் முக்கியத்துவம் அறிந்து படித்தார்கள். பெற்றோர்களும் அவர்களுக்கு துணை நின்றார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. வேலை என்று வரும்போது தான் தங்கள் பிள்ளைகளின் திறமை பற்றி பெற்றோர்களுக்கு தெரிய வருகிறது. நிறைய பிள்ளைகள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தினால் கிடைக்கும் வேலையை சிலர் செய்து வருகின்றனர். ஒரு சில தவறான ஊடகத்தின் மோகத்தால் கெட்டு சீரழிந்து வருவதற்கு இது முக்கியமான காரணம் எனலாம்.

       எனவே பெற்றோர்கள் எந்த சூழ்நிலை வந்தாலும் மனம் தளராமல் சனலத்திற்கு ஏற்ற வகையில் தைரியமாக வாழ தங்கள் பிள்ளைகளுக்கு வளரும் பொழுதே வாழும் முறையைக் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். காலத்திற்கு ஏற்ற வகையில் தங்களை திறமைப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் சொல்லி வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி சூழ்நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் யாரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்றும் தங்கள் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் எடுத்துக் கூறி வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளையாக இருந்தால் எதற்கும் மனம் தளராத உறுதி படைத்தவனாக வளர்க்க வேண்டும். பெண் பிள்ளையாக இருந்தால் எந்த சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க தைரியமாக வாழக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

      பெற்றோர்கள் தாங்கள் எவ்வாறு வளர்ந்தோம், எவ்வாறு படித்தோம், எவ்வாறு வாழ்ந்தோம் என்பதையெல்லாம் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தால் தான் பிள்ளை தன் பெற்றோர்களின் நிலையை அறிந்து வளர காரணமாக அமையும். தனக்கு வேண்டியது எல்லாம் கேட்ட உடனே கிடைத்து விடுவதால் அவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

      மேலும் தங்கள் பிள்ளைகளை இந்த சமூகத்தில் மிகச்சிறந்து விளங்கவும் உயர்ந்த பணிக்குச் செல்லக் காரணமாக இருப்பதும் பெற்றோர்களின் தலையாய கடமை எனலாம்.

பெற்றோர் எவ்வாறு வறுமை நிலையில் வாழ்கிறார்கள்

       பெற்றோர் எப்படி வறுமை நிலை வந்தாலும் தங்கள் பிள்ளை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட விட மாட்டார்கள். இந்நிலையை பிள்ளை உணர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டி ஆவார்கள். பிள்ளைகள் வளர்ந்த பின்பு பெற்ற பெற்றோர்களை ஏன் இவரைப் பெற்றோம் என்று நினைக்காமல் இப்பிள்ளையைப் பெற என்ன தவம் செய்தார்களோ? என்று பிறர் கூறும் படியாகச் செய்கின்ற செயலை செய்து மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும். இதனை பின்வரும் குறள் வழி அறிய முடிகிறது.

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்றந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்” (குறள் – 70)

      குழந்தைச் செல்வம் பற்றி பேசாத இலக்கியமே இல்லை எனலாம். இவ்வுலகம் நின்று நிலைக்க முக்கிய  காரணம் இணைய தலைமுறையே  ஆகும்.   இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகளை வளர்ப்பது என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் மிகக் கடினமான ஒரு நிலையாக உள்ளது. ஏனென்றால் ஒரு பிள்ளை இரண்டு பிள்ளை என்று இருப்பதே  சாதாரண எனலாம் . சமூக ஊடகங்களும் பிள்ளைகள் கெட்டு சீரழிவதற்கு ஒரு முக்கிய காரணி  எனலாம். என்னதான் பார்த்துப் பார்த்து வளர்த்தாலும் பெற்றோர் கவனிப்பில் பொறுப்பில் இருக்கும் பிள்ளைகளே சமூகத்தில் விளங்குவார்கள் என்பதனையே இக்கட்டுரையில் அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version