ஆனந்தமாய் ஆசையாய்
ஆடித் திரியையிலே
சட்டையெல்லாம் இரத்தமுன்னேன்
சடங்காகிப் போயிட்டன்ன….அம்மா
சடங்குன என்னனு கேக்க
சத்தங்காட்டாம இருடின ….
வாராத வியாதி தன்
வந்து தொலைச்சிடுச்சோ…
ஒத்த நொடி வுடாம
இருட்டுல பேய் இருக்கு
இறுக்கி என்ன அணைச்சிக்கடி
காகா கத சொல்லவா
கரடி கத சொல்லவான்னு
அல்லி தண்ட அணைச்சிக்கிவா
என்ன தப்பு செஞ்சேனோ
மொத்த பேரும் வுட்டுக்குள்ள படுக்க
என்ன மட்டும் இப்படி
தொழுவத்துல படுக்க வுட்டுட்டியே அம்மா ..
சின்னதா அடிபட்டாலும்
உயிர் துடுச்சி போய்டுவா
எங்க அடி படுச்சுதோ
இரத்தம் ஒரு எடத்துல வருது
வலி ஒரு எடத்துல எடுக்குதே
இப்படி துணியெல்லாம் இரத்தமாகி
நிக்கயிலே ஊர் கூட்டி வச்சிருக்க
கிறுக்கு கிறுக்கு புடிச்சிருக்கோ அம்மா ….
பேந்த பேந்த முழிச்சி
உன்முகத்த பாக்கையில
இனி மாசாமாசம் இப்படித்தான்னு
குண்ட தூக்கி போடுறியே ….
தவலுண்டு தித்திப்பு கேட்டாலும்
திட்டி தீத்துடுவா
தினுசு தினுசா பலகாரம் தின்ன தர
தீபாவளி பொங்கலுக்கு ஒரு சட்டையே
ஒசத்தின்னுவ
பட்டு சொக்க , பாவாட தாவணினு
வக வகையை வாங்கி தர ,
மஞ்ச தண்ணி ஊத்தி
மாரியாத்தா கணக்கா என்ன சிங்காரிக்கிற
பக்கத்துல என் சிநேகிதி இன்னும்
பத்து நாளைக்கு தாண்டிங்கற …
ஒன்னும் புரியலையே அம்மா…
பூப்பு என்பது எவ்வளவு அழகான தமிழ் சொல் . இயற்கையாக ஒரு பூ பூப்பதைப் போல ஒரு பெண் பருவம் அடைகிறாள். அந்த பூவின் நிலை தான் பெண்ணிற்கும். பூக்களுக்கும் பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. பூக்கள் இல்லாமல் பெண்கள் இல்லாமல் ஒரு விசேஷமும் இங்கே நிகழ்ந்திடாது. நிகழ்ந்தபின் இருவரின் நிலையும் என்னவென்று நமக்கே தெரியும். இதனால் தான் யாராவது பெண்களை பூக்களோடு ஒப்பிட்டால் சில சமயங்களில் கடுங்கோபம் ஏற்பட்டு விடுகிறது.
மாதவிடாய் பற்றிய புரிதல் கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி இன்னும் அடிமட்டத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது. வேண்டுமென்றால் இப்படி சொல்லலாம் கிராமங்களை விட நகரங்களில் சற்று நவீனமாகி இருக்கிறது இந்த தீண்டாமை. ஆம் தீண்டாமை தான். இன்னும் சொல்லப் போனால் பால் பகுத்துடன் கூடிய தீண்டாமை என்று சொல்லலாம்.என்னது பால் பாகுபாடா? என அதிர்ச்சி அடையாதீர்கள்.கிட்டத்தட்ட எல்லா இந்திய குடும்பங்களிலும் இந்த பாகுபாடு உள்ளது. ஒரு குடும்பத்தில் ஆண் பெண் என இரு குழந்தைகள் இருக்கையில் இரண்டு பேரும் பருவமடைகின்றார்கள்.இந்த பருவமடைதல் ஆண் குழந்தைக்கு மிக இயற்கையாக எந்த ஆரவாரம் இல்லாமல், மாலைகள் இல்லாமல் , ஊர்க்கூடி தேர் இழுக்காமல் , இயல்பாக ஒரு பூ பூப்பதைப்போல் நடந்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த குடும்பத்தில் பெரும்பாலும் தாய் தந்தையை தவிர இருக்கும் இப்படியான ஒரு நிகழ்வு நடந்தது கூட தெரிவது இல்லை. இப்படியான ஒரு நிகழ்வாகத்தான் பெண் குழந்தைகளுக்கும் நிகழ்ந்திட வேண்டும் இந்த நிகழ்வு.
ஊரைக்கூட்டி என் பெண் சடங்காகிவிட்டாள் என்பது ஒரு பெண்ணை திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என சொல்லாமல் சொல்வதை போல். பாவங்க அந்த பிஞ்சுகள் . முன்பெல்லாம் 13 வயதில் நடந்தது 10 வயதில் நடந்து விடுகிறது. பத்து வயது குழந்தையை பிடித்து அதற்கு வயதிற்கு மீறி பாவாடை தாவணி அணிவித்து தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அறியாத பருவத்தில் அந்த பிஞ்சு குழந்தையின் குழந்தை பருவத்தின் மீது நடத்தப்படுகின்ற வன்முறையாகவே தோன்றுகிறது. இந்த அத்துமீறல்களை நிகழ்த்துவதில் படித்த , படிக்காத குடும்பங்கள் என்ற எந்த பாகுபாடுகளும் கிடையாது.மேல்தட்டு கீழ்த்தட்டு என்ற எந்த சாதிய, மத, பொருளாதார பாகுபாடுகள் பொய்த்து போகிற இடம் இந்த சடங்கு தான். சடங்கு சுத்தலான குடும்பத்துக்கு ஆகாது என்பதே பெண் பிள்ளைகள் மேல் கட்டமைக்கும் முதல் குடும்ப வன்முறை.
பத்து வயதில் மாதவிடாய் என்பதே மரண வேதனை.மாறுபட்டு இருக்கும் உணவு கலாச்சாரமும் , நுகர்வு கலாச்சாரமும் நம் குழந்தைகளை மனதளவிலும் , உடல் அளவிலும் பெரிதும் மாறுபடுத்தி உள்ளது. இதை பேச்சளவில் பேசிக்கொண்டு இருக்காமல் பெற்றோர்கள் முழுமையாக உணரவேண்டும்.இங்கு பெற்றோர்களில் இரண்டு வகையினரை பார்க்க முடிகிறது. அளவுக்கு மிஞ்சி கவனிக்கும் பெற்றோர் , எதையும் கண்டுகொள்ளமல் இருக்கும் பெற்றோர். இதில் முதல் வகை தான் ஆபத்தானவர்கள், ஆச்சர்யம் அடைய வேண்டாம். இவர்கள் தான் toxic parenting வகையை சேர்ந்தவர்கள். பத்து வயது குழந்தை பருவமடையும் போது அதன் கரு உறுப்புகள் சரிவர வளர்ந்து மாதவிடாய் இயல்பாக வர சில மாதங்கள் ஆகலாம். அது வரை அக்குழந்தையின் போஷாக்கான சரிவிகித உணவினை மட்டும் கவனித்து வந்தால் மட்டும் போதுமானது. குழந்தை மாதவிடாய் பிரச்னையை பூதகரமாக்கி அறியாத வயதில் அக்குழந்தைக்கும் , தங்களுக்கும் ஒரு பெரிய மனஇறுக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுதலே toxic parenting .
அப்படி என்றால் குழந்தைகளை கவனிக்க கூடாதா ? கவனிக்க வேண்டுமே ஒழிய கட்டாயப்படுத்தக்கூடாது. இயற்கையில் ஒரு விதை துளிர் விட்டு , செடியாகி மரமாகி ,பூத்து, காய்த்து, அடுத்த தலைமுறைக்கான விதைகளைத் தந்து இயல்பாக வளருவதை போல் தான் குழந்தைகளும் வளர வேண்டும். இங்கு குழந்தைகளை நம் திட்டப்படி எல்லாம் வளர்த்தல் என்பது எத்தனை அபத்தமானது .இயற்கைக்கு முரணாக ஒரு விஷயம் நாம் திட்டமிட்டே குழந்தைகள் மீது கட்டமைத்து , அது தான் சிறந்த வளர்ப்பு என நம்மை நமே ஏமாற்றி கொள்கிறோம்.
இங்கு நாம் அறியாமல் இன்னொரு சிக்கலும் உள்ளதை சமீபத்திய ஒரு காணொளி உணரச்செய்கிறது. ஒரு 19 வயது மதிக்க தக்க ஆணிடம் நீங்கள் காலை எழுந்த உடன் பெண்ணாக மாறினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு அவர் சொன்ன பதில் தான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். அந்த இளைஞர் நான் போய் சமையலறையில் சந்தோசமாக இருப்பேன் . மாதவிடாய் என சொல்லி பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுத்து வயிறு வலிக்கிது வயிறு வலிக்கிதுன்னு சொல்லி ஏமாத்துவேன் . என்று பதில் அளிக்கிறார். அப்போது தான் தோன்றியது. இங்கே பெண் பிள்ளைகளை கொண்டாடுகிறோம் பேர்வழி என்று ஆண் பிள்ளைகள் மனதில் பெண் பிள்ளைகளைப் பற்றிய எண்ணங்களை எப்படி விதைத்து இருக்கிறோம் காலம் காலமா. பெண்களை உடல் அளவில் பலவீனமானவர்களாக பிம்பப்படுத்தி இருக்கிறோம். சமையல் அறையை பெண்கள் ஒளிந்துக் கொள்ளும் இடமாகவும், தப்பித்துக்கொள்ளும் இடமாகவும் உருவகப்படுத்தி இருக்கிறோம்.இந்த நிலை மாற பெண்களுக்கும் ஆண் பிள்ளைகளைப்போல பூப்பு சுகந்திரம் வேண்டும். பூப்பு தீண்டாமை ஒழிய குடும்பங்கள் முன்வர வேண்டும்.
மாறாக மாதவிடாய் எப்படி கொண்டாடலாம் ? மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான நிகழ்வு என்பதை பெண்பிள்ளைகளுக்கு குடும்பங்கள் முறையாக சொல்லித் தரவேண்டும். தனித்து விடப்படும் குழந்தையின் மன நிலையை கற்பனைகளும் , கற்பிதங்களும் ஆட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். சடங்குகள் என்ற பெயரில்,ஆரோக்கிய உணவுகளைத் தராமல் அதற்குப் பின் இருக்கும் அறிவியலோடு குழந்தைக்குச் சொல்லி கொடுக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் பேண வேண்டிய சுகாதாரத்தைக் கற்பிக்க முதலில் அது ஒரு மறைக்கத் தக்க மோசமான நிகழ்வு என்கின்ற பயத்தைப் போக்க வேண்டும். மாதவிடாய் பற்றி ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர வேண்டும். இப்படிப் பட்டதாக மாதவிடாயைக் கொண்டாடும் போது ஆண் பெண் வேறுபாடுகள் களையப்படும். ஆரவாரமில்லா ஆரோக்கிய கொண்டாட்டங்களாக மாறவேண்டும் பூப்பு. இப்படிச் செய்தால் பூப்பு புனிதம் தான்.
அருமையான பதிவு
கண்டிப்பாக நீங்கள் கூறுவது சரிதான்…..மருத்துவர் அவர்களே….சமூகம் விழிகட்டும்
நிதர்சனமான உண்மை…. பணியிடத்தில் கூட இதே அவலம்…. எல்லாருக்கும் வரர்துதானே… ஆனா ஒவ்வொரு பெண்ணுக்கும் வலியில் வேறுபாடு இருக்கும்னு புரிதல் இல்லை ( வீட்டிலும்) . என்ன ஆனாலும் டீ முதல் நைட் டிபன் வர வேணும்…
அந்த காலத்துல மூணு நாலு ஓரமா ஒதுங்கனும்னு சொன்னது தீண்டாமைக்கு இல்லை. நம்ம உடலுக்கும் மனதுக்கும் ஒரு ஓய்வு… வேணாம் நினக்குறவங்களுக்கு வேணாம்.. அவங்க normal work பண்ணட்டும்….
Real development is possible only when people understand the scientific reasons behind the so called myths on puberty and menstruation….
Aramai mam.
Arumai madam.
நான் எதிர்கொண்ட இன்னொரு விஷயம், இந்த சமூகம் இன்னும் விழிப்படைய வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. என் பெண்பிள்ளை படிக்கும் பள்ளியில் பூப்பு மற்றும் அதை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்தது. அதில் 7 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி. இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் பூப்படையாத மாணவிகளுக்கு கூட அனுமதி இல்லை. பூப்பு தீண்டாமையை உறுதி செய்யும் நிகழ்வாகவே இதை நான் கருதுகிறேன்.
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.