புழுதி: நவீன கலை இலக்கியத்தின் கூடுகை

“இயக்கமே எல்லாம்;  இறுதி இலட்சியம் என்பது ஒன்றுமில்லை”

– பெர்ன்ஷ்டைன்

புத்தகம் வாசிப்பது. வாசித்த புத்தகத்தை நண்பர்களுடன் கூடிப்பேசுவது. ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த வாரத்தில் படித்த புத்தகத்தை முன்வைத்து பேச ஆரம்பித்தோம் அவை புத்தகத்தின் அறிமுகமாகவோ அல்லது விமர்சனமாகவோ அமைந்திருக்கும். 

  திருவண்ணாமலையில் 2015ஆம்  ஆண்டிலிருந்து தமிழ் நாடு கலை  இலக்கிய பெருமன்றத்துடன் இணைந்து பயணிக்கு சூழல் ஏற்பட்டது அப்போது இருபதிற்கும் மேற்படட இளைஞர்கள்  கூடி பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம், கவிதை, சிறுகதை, சுற்றுசூழல், அரசியல், சினிமா,  என  பல துறை சார்ந்த ஆளுமைகளுடன் ஒரு நாள் முழுக்க உரையாடல் என்று இயங்கிக் கொண்டிருந்தோம். 

தொடர் வாசிப்பும் விவாதமும் மிகுந்த ஆக்கப்பூர்வமாகவும் ஜனநாயக தன்மையுடன் மிக எளிமையான வடிவத்துடன் எந்த துதிபாடலும் இல்லாமல் குறைந்த பட்சமாக மூன்று நபர்களில் இருந்து இருபது நபர்கள் கூடி  பேச ஆரம்பித்தோம்  வாரந்தோறும் அவரவர்கள் வாசித்தப் புத்தங்களை முன்வைத்து தொடர் கூட்டங்கள் நடத்தினோம்.  

ஒவ்வொரு வாரமும் பல  புத்தகங்கள்  சினிமாக்கள்  தொடர்பான  கருத்துக்களும்  அதன் மீதான  விவாதங்களும்  கூட்டத்தை  அடுத்த  கட்டத்திற்கு  நகர்த்தியது. ஒவ்வொரு புழுதி சந்திப்பும் ஒவ்வொரு நண்பர்களின் வீட்டில் குடும்ப நிகழ்வைப் போல நடந்தது. அப்போது  வீட்டில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் பங்கு பெற்றனர். பொதுவாக  இலக்கியக் கூட்டங்கள் ஆண்கள் முன்னேற்ற கழக  கூட்டமாக  அல்லது அறிவுசீவிகளின் கூட்டமைப்பாகவும்  உருக்கொண்டிருந்ததை தளர்த்து குழந்தைகள், பெண்கள்  என அனைவரையும் வாசிக்கவும் அவற்றைப் பற்றி பேசவும் வைத்தோம்.  அதன் விளைவாக  நூற்றுக்கும் மேற்பட்ட  கூட்டங்களுக்கு பிறகு  05.03.2016 அன்று  புழுதி அச்சிதழாக வெளிவந்தது. இளம் பட்டாளத்தின் கன்னி முயற்சியாக அவை துவங்கப்பட்டது. 10.03.2017  அன்று  புழுதி இரண்டாம் இதழ் வெளிவந்தது அதனை தொடர்ந்து 11.05.2018 அன்று மூன்றாம் இதழ் வெளிவந்தது. தனிச் சுற்றுக்கு மட்டுமிருந்த இதழ்     காலத்தின்  பல்வேறு   மாறுதலுக்கு  உட்பட்டு  இனி  தொடர்ந்து  இணைய இதழ்களாக வரவிருக்கிறது. 

புதியதாய்  எழுத்துலகில்  நுழையும்  படைப்பாளிகளுக்கு சிறந்ததொரு வழிகாட்டுதலையும், அவர்களுக்கான வெளியையும் அளித்து ஊக்கமளிக்கும் தளமாக புழுதி இயங்கும். தென்றலை  அழகியல்  நோக்குடன் பார்க்கப்படுகிற  சூழலில், புழுதி உழைப்பை, இயக்கத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கிறது. திருவண்ணாமலை  நகரிலிருந்து  இதழ்  இயங்கினாலும்  உலகம்  முழுவதிலிருந்து  கலை,  இலக்கியம்,  அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம்,  கல்வி   என  இன்னும் பல தளங்களிலிருந்து படைப்புகளைக் கொண்டுவரும் முயற்சியில் இயங்க உள்ளோம். இது தொடர்பான பல்வேறான விடயங்களையும், விவாதங்களையும் உருவாக்கி பல திறப்புகளை ஏற்படுத்தி தெளிவதற்கான வெளியை புழுதி இதழ் உருவாக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.

சமகால மலையாள சினிமா சிறப்பிதழ்  2023 ,மே 1 ஆம் தேதி எழுத்தாளர் எஸ்.கே.பி. கருணா, கல்வியாளர் சினி.கார்த்திகேயன்  மற்றும் கவிஞர் வேல்கண்ணன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. 

அதனை தொடர்ந்து பறவைகள் சிறப்பிதழ் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் 2023, 16 ஜூலை அன்று வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து  மாதவிடாய் சிறப்பிதழ் 20.08.2023 அன்று கவிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி  தங்கபாண்டியன் அவர்கள் வெளியிட்டார். நான்காவது இதழாக தொழில்நுட்ப சிறப்பிதழ் பத்திரிக்கையாளர் அ.தா.பாலசுப்ரமணியன் அவர்களால் 24.10.2023  அன்று வெளியிடப்பட்டது.06.12.2023 அன்று அமெரிக்காவின் மழலை எழுத்தாளர்  ஒபுமித்ரா பார்த்திப கார்த்திகேயன் அவர்கள் எழுதிய “Burning Souls” என்றபுத்த வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு  நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. மேலும் இன்னும் பல சிறப்பிதழ்களுக்கான வேலைகளை முன்வைத்து புழுதி நகர்ந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version