முன்னுரை;
வாழ்வில் வானத்தைத் தொட ஆசை, இனி எண்ணியதையெல்லாம் எளிதில் செய்துவிடலாம் எனவும், சுற்றத்தாரின் எள்ளல் புறக்கணிப்புகளுக்கெல்லாம், அயராத உழைப்பை வைத்து, பதிலடி கொடுத்துவிடலா மென்ற, தன்னம்பிக்கையை மட்டுமே சுமந்து கொண்டு வானூர்தியில் ஏறி மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய காலம் அது, பிரமாண்டமாகத் தொடங்கிய பயணம், தரையிறங்கிய பிறகு எந்தவொருச் சலசலப்புமின்றித் தனிமையைப் பற்றிக் கொள்ளத் தயாராகிவிடுகிறது, அறியாத முகங்கள், புரியாத மொழி, பதட்டமும், பயமும் அந்தநொடியே சிறகோடு உரையாடத் தொடங்கிவிடுகிறது,
எதிர்பார்ப்புகள்;
கூண்டுக்குள் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் பறவைகளை நாம் அதிகம் பார்த்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் நான்கு சுவர்கள் எழுப்பிக் கட்டப்பட்டிருக்கும் கூண்டு வடிவில் இருக்கும் சிறைச்சாலையில் வாழும் செயலிழந்த சிறகுகளைக் கொண்ட பறவைகளே அயலகத்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், மனதில் ஏராளமான ஆசைகளை வளர்த்துக் கொள்வது மானுட குணத்தின் இயல்புதான், ஆனால் அதே தருணத்தில் அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, தனிமையோடும், கண்ணீரோடும், நம்முடைய தனித் திறமைகளை நாமே ஒடுக்கி வைத்துவிட்டு, ஒவ்வொரு நாட்களையும் நகர்த்துவதென்பது, நம் எதிர்கால கனவுகளுக்கு நாம் செய்யும் பெரும் துரோகம், வானை அளந்து எதிர்பார்ப்புகளோடு கைநிறைய மாத ஊதியம் கிடைக்குமென நம்பி வந்த பலருக்கு அந்த எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாவதிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது, உறவுகளைப் பிரிந்து வந்தும், ஆழியைக் கடந்து பறந்து வந்தும், கண்ணீரைக் காலமெல்லாம் வடித்தபடியே அன்றாடம் வாழ்கிறார்கள் அயலகத்தில் வாழும் தமிழர்கள்,
தவிப்புகள்;
தவிப்புகளென்ற தலைப்பை வைத்திருக்கிறேன் என நீங்கள் நினைக்கலாம், அயலகத்தில் வாழ்பவர்களுக்கு அப்படி என்ன தவிப்பான மனநிலை இருக்கப் போகிறதென நீங்கள் சிந்திக்கலாம், ஆனால் எங்களின் தவிப்புகளுக்கு ஆறுதல் நாங்களேதான் சொல்லிக் கொள்ள முடியும், மழலைப் பருவம், மற்றும் பள்ளிப் பருவம், பின்பு கல்லூரிப் பருவமென வாழ்க்கையில் இந்த மூன்று பருவக்காலத்திலும் பிறந்த ஊரில், தாய் தகப்பனோடும், நண்பர்களோடும் ஆனந்தமாக வருடங்களை நகர்த்திக் கொண்டிருந்த எங்களின் தலைமீது பெரு இடியொன்று விழும், அதை கடமை, பொறுப்பு என நாம் இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம், இத்தனை ஆண்டுகளாகச் சுற்றித்திரிந்த மகிழ்வான அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டு அயலகத்தை நோக்கிப் பயணிக்கும் எங்களுக்கு ஒவ்வொரு இரவுகளும் தவிப்புகளை அன்பளிப்பாகக் கொடுக்கின்றது, படுக்கையில் கூட சிந்தனைகள் எல்லாம் தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தோர், நண்பர்கள், காதலி மீதும் , சிறுவயதிலிருந்தே சுற்றித்திரிந்த வீதிகள் மீதும் உலாவிக் கொண்டே இருக்கும், ஆனால் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நாட்களை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவோம், எப்போது இந்த தவிப்புகள் உச்சநிலையை எட்டும் தெரியுமா? பண்டிகை நாட்களில், அல்லது இல்லத்தில் நல்ல நிகழ்வுகள் அரங்கேறும் தருணத்தில் நாங்கள் இங்கு இருந்து கொண்டு காணொளி வாயிலாக அதைக் காணும் போதெல்லாம், இந்த வாழ்க்கை இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன என்ற எண்ணங்கள் சிந்தையில் உயிர்பெறும், இருந்தாலும் காலத்தின் நகர்வுகளுக்கு ஏற்ப அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் பழகி விடுவோம், உறவுகளைப் பிரிந்து, உணர்வுகளை மட்டும் சுமந்து கொண்டு, தவிப்போடு வாழ்வது மரணத்தை விடக் கொடியது,
ஆற்றாமை;
வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்து, வலிகளைப் பொறுத்துக் கொண்டு, அதன் வாயிலாகப் பல அனுபவங்களைச் சேகரித்திருந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் மன உறுதியை நாங்கள் பெற்றிருக்கிறோம், இவற்றையெல்லாம் சந்தித்ததினாலே வெற்றியை நோக்கிய பாதையில் நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஆற்றாமை அயலகத் தமிழர்கள் வாழ்வில் ஒரு அங்கமாகக் குடியேறி விடுகிறது, அதற்கு முதல் காரணமாக நான் கருத்தில் கொள்வது உணவே, எவ்வளவு வலிமை மிகுந்தவனாக இருந்தாலும், உழைக்கத் தயாராகியிருந்தாலும், சரியான உணவின்றி அவர்களால் இதையெல்லாம் செய்துவிட முடியாது, அம்மாவின் கை பக்குவத்தில் உண்டே வாழ்ந்தவர்கள், சட்டென்று அதையெல்லாம் இழக்க நேரிடும் தருணத்தில் ஆற்றாமை ஆலைப்போல மனதில் அடித்து ஆடும், அயலகத்தில் வாழும் எங்களுக்கு நேரத்திற்கு உணவு கிடைக்காது, சரியான உறக்கம் கிடையாது, கிடைத்ததை உண்டுவிட்டு, வேகாத வெப்பத்தில் வெந்து போவோம் குளிர்காலத்திலும் கூட எங்களின் நிலை இப்படித்தான், ஒவ்வொரு நாளும் சோற்றை உண்ணும் தருணத்தில் அம்மா கண்முன்னே வந்து போவாள், கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அம்மா சமைத்த அறுசுவை உணவை எவ்வளவு உதாசீனப்படுத்தியிருப்போம், கோவத்தில் தட்டை வீசியெறிந்து, சோற்றை வாரி வீடு முழுக்கச் சிதறவிட்டு இருப்போம், ஆனால் இங்கு வந்து இந்தச் சுவையே இல்லாத உணவை நாவிற்கு உணர்வின்றி இருப்பதுபோல் உண்ணுகிறோமே, இதுதான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற வாக்கியத்திற்குப் பொருந்துமென்ற எண்ணங்கள் கண்ணீர் வடிய வடியச் சிந்தையில் ஓடும், பிறந்த மண்ணை விட்டு, ஆழியைத் தாண்டி வேறொரு மண்ணில் அன்னியர்களுக்கு உழைக்கத் தயாராகி வந்த பிறகு நாங்கள் வெறும் காசோலையை மட்டுமே சம்பாதிப்பதில்லை, அதனுடன் சேர்த்து அவமானங்களையும், அடிமைத்தனத்தையும் சேர்த்தே சம்பாதிக்கிறோம், எங்களை வேலைக்கு எடுத்த முதலாளிகளுக்கு நாங்கள் வெறும் தொழிலாளிகள் மட்டுமல்ல அடிமை நாய்களும் கூட , நம் வீட்டில் நாம் நாய்களைக் கூட அவமானப்படுத்தாமல் அதை அரவணைத்துக் கொள்ளுவோம், ஆனால் இங்கு எங்களின் மீது இவர்கள் அன்புச் செலுத்த வேண்டாம், அக்கறையோ காட்ட வேண்டாம், குறைந்தபட்ச மனிதநேயத்தோடு எங்களை நடத்தினாலே போதும், வீட்டில் நடக்கும் ஒரு நல்ல நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது, விழாக்களில் கலந்து கொள்ள முடியாது, பெற்ற தாய், தந்தைக்கு உடல் நிலைச் சரியில்லை என்றால் கூட அவர்கள் அருகாமையிலிருந்து கவனித்துக் கொள்ள முடியாதப் பாவிகளே நாங்கள், பிறந்த மண்ணிற்கும், பிறந்த வீட்டிற்கும் நாங்கள் வருடாந்திர விருந்தாளிகளாக மாறிவிடுகிறோம், ஆற்றாமையில் கொஞ்சம் கொஞ்சமாக நரைத்துப் போகிவிடுகிறது தலை மயிர்கள், குடும்பத்தோடும் இல்லாமல் நம்பி வந்த மனைவியையும் தனிமையில் தவிக்கச் செய்துவிட்டு, வாழ்க்கையில் பகுதிக் காலங்களைக் காசோலைக்காக இழந்துவிட்டு, போதும் டா இந்த பிழைப்பென நாடு திரும்பியதும், உடல் முழுக்க உபாதைகளைச் சுமந்து கொண்டு, மீதிக் காலங்களை மருத்துவமனைக்குச் சென்றே கழிக்க வேண்டிய சூழ்நிலையில் எங்களின் வாழ்க்கை நகரும் , இறுதிவரை சுய குடும்ப வாழ்க்கை வாழாமல் இன்பத்தை இழந்தவர்களே இந்த அயலகத் தமிழர்கள்.
புறக்கணிப்புகள்;
நாங்கள் அயலகத்தை நோக்கி வருவதற்கு மிக முக்கியமான காரணம் காசோலையைச் சம்பாதித்து குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மட்டுமல்ல, நீங்கள் நுட்பமாகக் கவனித்தால் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் உங்களுக்குப் புலப்படும், ஏன் எங்களால் தாயகத்தில் உழைத்துச் சராசரி குடும்ப வாழ்க்கையை நடத்தும் அளவிற்கு வருமானத்தை ஈட்ட முடியாதா? அங்குக் கிடைக்கு வருமானத்தை வைத்து மகிழ்ச்சியாகக் குடும்ப வாழ்க்கையை நகர்த்த முடியாதா? நிச்சயமாக நகர்த்தலாம், பின்பு எதற்கு இங்கு வருகிறோம் என்றால், எங்களை வசதியில்லாதவன் என்று எங்களின் உறவினர்கள் நல்ல நிகழ்வுகளில் கூட எங்கள் குடும்பத்தைப் புறக்கணிப்பார்கள், அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் எப்படியாவது நம் குடும்பத்தின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்தி, அவர்களுக்கு மனிதத்தைக் கற்பிக்க வேண்டுமென அயலகத்தை நோக்கி வருகிறோம், அதுமட்டுமா, சாதிய ஒடுக்குமுறைகளும், ஏற்றத்தாழ்வும், தீண்டாமைகளும் பிரதானக் காரணங்களே, சாதியை வைத்து ஒரு சமுகத்தையே ஒடுக்கி, அடக்கி அடிமைப்படுத்த வேண்டியது, இப்போது நீங்கள் எந்த சாதி மக்களைக் கல்வியறிவு, பண பலம், ஆதிக்கச் செருக்கை வைத்து அடக்கி ஆண்டீர்களோ அவர்கள் இன்றுக் கல்வியறிவில் மேம்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெற்று அவர்களின் சமூகத்தையே தலைநிமிரச் செய்வதற்காக இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் உழைக்கத் தயாராகிவிட்டார்கள், இப்படியும் நாங்கள் அயலகத்தை நோக்கிப் படையெடுத்து வருகிறோம், எங்களுக்கு இங்கு நிகழும் அவமானங்களுக்கு இந்த சுயநலம் மிக்க சமுதாயமும் ஒரு வகையில் காரணம்.அயலகத்தில் எங்கள் நிலையைப் பற்றி நான் என் கவிதை வாயிலாக உங்களுக்கு எடுத்துரைக்க விருப்பப்படுகிறேன், இந்தக் கவிதையை நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் மனவலியோடு எழுதியது,
கொடும் வெய்யில்
வீசும் பாலையில்,
நெடுங்கனவுகள்
தீயில் மிதக்கிறது,
வெறும் கால்களை
நிலத்தில் பதிக்க முடியாது
விழும் பனித்துளிகளைத்
தேகம் தாங்கிக் கொள்ளாது,
கதறி அழும் ஓசை
எவரிடத்திலும் ஒலிக்காது
கண்ணீர்த் துளிகளுக்கு
வறண்ட மனதில் இடமேது,
வற்றாத ஏக்கம் சிந்தையில்
நித்தமும் உறவாடும்
என்றாவது ஓர் நாள் விடைபெற
மாட்டோமா என மனம் ஏங்கும்,
வெற்று முகனமர்ந்து
பெற்றோருடன் கதைப்போம்
மாதத்தின் முதல் நாள்
அகனமர்ந்து முழுமையாய்
சோறு உண்போம்,
பிறந்த இடம் என்றைக்கும்
எங்களுக்கு நிரந்தரமில்லை ,
பிழைக்க வந்த இடத்தில்
எவ்விதச் சுதந்திரமுமில்லை.
இந்த சுருக்கமான கவிதையில் எங்களின் வாழ்வியல் உங்களுக்கு
நன்றாக விளங்கியிருக்குமென நம்புகிறேன்.
எங்களை அரவணைக்கும் அரசு;
இங்கு எங்களுக்கு நிகழும் அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஆதிக்கத்தை எதிர்த்து கேள்விகளை எழுப்பக் கூட எங்களால் முடியாது, வேலையில் பிரச்சனை, ஊதியத்தில் பிரச்சனை, ஒடுக்குமுறை, அடக்குமுறை, அடித்துத் துன்புறுத்துதல் எனப் பல்வேறு இன்னல்களை இத்தனை ஆண்டுகளாக அனுபவித்தோம், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது தாயகத்தை ஆளும் திராவிட அரசு எங்களுக்கானப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, வெளிநாடு வாழ்த் தமிழர்களுக்காகத் தனி அமைச்சகத்தை உருவாக்கி அதன் கீழ் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலவாரியத்தை அமைத்து எங்களின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்க்கின்றது, தொடர்ந்து பல்வேறு உதவிகளை எங்களுக்குச் செய்து கொண்டு வருகிறது, குறிப்பாக இருபது ஆண்டுகள் அயலகத்தில் பணியாற்றினால் மாத ஓய்வூதிய திட்டம், மற்றும் அயலகத் தமிழர்களின் நலன்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்களை அமைத்துத் தொடர்ந்து அயலகத் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறது, தமிழர்கள் பண்டிகையில் எத்தனையோ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது, ஆனால் வருடம்தோறும் ஜனவரி பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நாள் அயலகத் தமிழர்கள் தினமாக அரசு அறிவித்து பல்வேறு நாடுகளில் பணியாற்றும் தமிழர்களை ஒன்றிணைத்து சென்னையில் பெரு விழா ஒன்று எடுத்து எங்களை இந்த அரசு சிறப்பிக்கிறது, கடந்த வருடம் நடந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற்றேன் அங்கு நான் எழுதிய கலைஞரின் எழுதுகோல் நூல் வெளியிடப்பட்டது, அயலகத்தில் வாழும் எத்தனையோ எழுத்தாளர்களுக்கு அந்த பிரமாண்டமான நிகழ்வு தன்னம்பிக்கையை ஊட்டியது, இதையெல்லாம் எந்த அரசாலும் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத ஒரு சாதனை திட்டங்கள் , திராவிடச் சித்தாந்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் அரசால் மட்டுமே இத்தகைய அற்புதமான திட்டங்களைச் செயல்படுத்த முடியும், இதற்கு நான் நன்றி சொல்லாமல் மரணித்து விட்டால் என் வாழ்க்கையை வாழ்வது நியாயமாக இருக்குமா, முத்தமிழின் ஆளுமை புதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,இப்படி வெறும் நன்றிகளை மட்டுமே சொல்லி முடிப்பது என் மனதிற்கு ஒப்பவில்லை, நானொரு கவிஞன் என்பதாலே கவிதையில் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.