மலையாள சினிமாக்களின் போஸ்டர்களை வாய்ப்பிளந்து பார்த்து எதிலாவது முட்டிகொள்வது எங்காவது விழுந்து கிடப்பது என்று சொல்லித் தொடங்குவது அரதப்பழையதொரு அற்ப நகைச்சுவை. முந்தைய செம்மீன் தலைமுறை நிஜமாகவே அப்படித்தான் இந்த கட்டுரையைத் தொடங்கியிருக்கும் . எங்கள் தலைமுறையில் அப்போதுதான் அறிமுகமான தூர்தர்ஷன் திருவனந்தபுரம், கருப்பு வெள்ளையில் மலையாளப் பாட்டுகளை,நீள் நாடகங்களை, சனிக்கிழமை சலசித்ரங்களை அறிமுகப்படுத்தி எங்களைச் சற்றே மேம்படுத்தியிருந்தது. பதினாலு இன்ச் கருப்பு வெள்ளை சதுரத்தில் தெரிந்த உருவ அசைவுகளை சன்னமான ஒலியை இருபத்துநாலுக்கு குறையாத பேர் பார்த்த சொப்பனச் சித்திரங்கள் … மழைக் காலத்தில் ஆன்டனாக்களைத் திருப்பியும் திருக்கியும் கிட்டாத பரிபாடிகளை இழந்த சோகக்கதைகள்… கருப்பு வெள்ளையில் தூர்தர்ஷனின் நிலையாக நிற்கும் இரண்டு வளை துளிகள் சேர்ந்த வட்டத்தோடு ஹூம் என ஒலிக்கும் பொழுதுகள் எங்கள் சின்ன பொழுதுபோக்கில் விழுந்த இடியோசைகள். ..என ஏராளம் நினைவுப் புள்ளிகள்.
கருப்பு வெள்ளை வண்ணமயமானது , சட்டு சட்டென வாடகை வீ.சி.ஆர்கள், வீ.சி.பிகள், வீடியோ கேசட் கடைகள் சுற்றிலும் புதிது புதிதாய் முளைத்து எங்கள் மலையாள சலசித்திர ஞானத்தை கூட்டிக் கொண்டே இருந்தன. அனந்தரம் , சிதம்பரம், ஓரிடத்தே ஒரு பயில்வான் போன்ற பின்னணி இசை குறைந்த ஒருமணிநேரம் பல்தேய்ப்பதையே பார்க்க நேரும் ஞாயிறு மதிய நேர, மாநில மொழித் திரைப்படங்களில் பார்த்த மலையாள சினிமாக்கள் அல்ல இவை. அடூர், ஜான் ஆபிரஹாம், பத்மராஜன் , அரவிந்தன் என்றெல்லாம் பின்னால் அறிந்த ஜாம்பாவான்களின் சினிமாக்கள் அப்போது எங்களைக் கவரவில்லை. அதில் ஆச்சரியமுமில்லை. பிரேம் நசீர், உமர், மது, பரத் கோபி, சோமன், ஜெயன், சத்யன், இரண்டாம் நிலையில் மம்மூட்டி, மோகன்லால் ஒருதலை ராகம் சங்கர் , அசோகன் இவர்களை இவர்களின் பெயர்களை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டோம். சங்கராடி, அடூர் பாஷி, நெடுமுடி வேணு, திலகன், மம்மூக்கோயா, மாளா அரவிந்தன், ஜகதி, இன்னொசென்ட், ஜனார்த்தனன், ஒடிவில் உன்னிகிருஷ்ணன், மணியம்பிள்ள ராஜூ, பப்பு போன்றவர்களை பரிச்சயப் படுத்திக்கொண்டபோது எங்கள் மலையாளமும் ஓரளவு தேறியிருந்தது.
அதே தூர்தர்ஷனில் டெய்சி, நமக்குப் பார்க்கான் முந்திரி தோப்புகள் படங்களை பார்த்துவிட்டு யாரும் அறியாமல் அழுத ராத்திரிகளும், துக்கத்தை ஏந்தி நெடுநாட்கள் அலையும் பதின்பருவத்து சோக பாவனைகளும் இப்போதும் காரணமறியா கேவலொன்றை ஆழத்தில் எழுப்புபவை.
நாங்கள் வளர்ந்தோம். அம்மாவின் கருவறை போலொரு இருட்டுக்குள் அமர்ந்து டென்ட் கொட்டகைகளுக்குள், பின் திரையரங்குகளுக்குள் எங்களுக்கே எங்களுக்கான சினிமாவை அகவயமாகத் தரிசிக்க ஆரம்பித்தோம். மெல்ல நாங்கள் சினிமாவின் ரசிகர்கள் ஆனோம். ஒருபக்கம் வெள்ளிதோறும் வெளிவரும் ஏராளம் தமிழ் படங்கள், அவற்றின் மீதான கிண்டல்கள். மறுபுறம் கையருகே மலையாள சினிமாவில் காணக்கிடைத்த கிளாசிக் அனுபவங்கள். நாங்கள் சினிமா விமர்சகர்களும் ஆனோம்.
தூக்கிச் சுமந்த மம்மூட்டி மோகன்லால் படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் இருக்கும். சித்ரம் பார்த்து விரல்களை மடித்து போட்டோ எடுத்ததும், சதயம் பார்த்து குலை நடுங்கியதும் , கிரீடம் திலகனை கொல்லத் திட்டமிட்டதும், பிறகும் , தாளவட்டம், தனம், பரதம், கிலுக்கம் (இன்னும் தீராத கிலுகில் பம்பரத்தின் சாம் சக்கம்/ மீன வேனலின் ராஜ கோபுரம் ), ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா, உள்ளடக்கம், கமலதளம், அகம், அத்வைதம், மிதுனம், செங்கோல், பவித்ரம், மின்னாரம், ஸ்படிகம், குரு (மிரட்டும் ராஜாவின் இசையில் முதன் முதல் ஹங்கேரி இசைக்குழுவினர் தென்னிந்தியத் திரையில் பங்காற்றியது.) என மோகன்லாலின் அந்த காலகட்டமும் மம்மூட்டியின் ஆவநாழி, ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு , ஒரு வடக்கன் வீரகதா , அதர்வம், மகாயானம் , மிர்கயா, அமரம் , கௌரவர், சூர்ய மானசம், கிழக்கன் பத்ரோஸ், பொந்தன்மாடா என ஒரு கூட்டம் படங்கள் நினைவின் தாழ்வாரங்களில் ஒரு செவ்வியல் அந்தஸ்தோடு வீற்றிருக்கின்றன. சுரேஷ் கோபி, சீனிவாசன், முகேஷ், ஜெயராம், மனோஜ். கே. ஜெயன், ஜகதீஷ் , சித்திக், முரளி, வினீத் ஆகிய அடுத்தகட்ட நடிகர்களும் அவ்வபோது தங்களுக்கான இருப்பை தக்க வைத்தனர்.
நடிகர்களின் பிடியைத் தாண்டி இயக்குனர்களின் காலமான தொண்ணூறுகள் குறிப்பிடும்படியாக லோகிததாஸ், சத்யன் அந்திக்காடு , பரதன், பவித்ரன், கமல், பாசில், பிரியதர்ஷன், லால் ஜோஸ், சிபி மலயில், ப்ளெஸ்ஸி என்று அடையாளம் கண்ட படங்கள் பலவுண்டு . இவையல்லாது ஷாஜி கைலாஸ்களின் வணிக அதிரடிகள் ஒருபக்கம், விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காமடி படங்கள் ஒருபுறம் என தொண்ணூறுகளும். இளம் கலைஞர்களாக திலீப், குஞ்சாக்கோ கோபன், ஜெயசூரியா, கலாபவன் மணி குணசித்திரத்தில் ஹரிஸ்ரீ அசோகன் , சலீம் குமார் கலவையான பங்களிப்பை புதியவர்களோடு தொடர்ந்து இரண்டாயிரத்தின் தொடக்கம் வரைக்கும் தந்தனர்.
தொண்ணூறுகளின் கடைசியும் இரண்டாயிரங்களின் தொடக்கமும் மலையாள சினிமா தன நிறத்தை இழக்கத் தொடங்கி மெல்ல மசாலா சினிமாவின் சாயத்தைப் பூசத் தொடங்கியிருந்தது. அதுவரை இல்லாத ஆக்சனும் நடனங்களும். மலையாள சூப்பர் ஸ்டார்களின் வணிக ஹிட்கள், சூப்பர் ஸ்டார் ஆகத் துடிக்கும் அடுத்த தலைமுறையின் ஏக்கமுமாக ஒருவிதத்தில் மலையாள சினிமா எங்கள் மனதிலிருந்து விலகத் தொடங்கியிருந்தது. பிறகொரு நீண்ட இடைவெளி
எதேச்சையாகப் பார்த்த புண்ணியாளன் அகர்பத்தீஸ் என்கிற ஜெயசூர்யா நடித்த படம் யானை சாணியிலிருந்து ஊதுபத்தி தயாரிக்கும் ஒரு திருச்சூர்காரனின் கதை. படம் முழுக்க திருச்சூர் சுற்று வட்டாரமும் அதன் மொழியுமாக ஒரு புது அனுபவத்தை தந்தது. மீண்டும் மலையாள சினிமா தன் வசீகரத்தை திரும்பபெற்றது. பிறகு தொடர்ந்து மெல்ல மலர்ந்தது மலையாள சினிமாவின் புத்தம் புதிய அலை. முழுமையாக இரண்டாயிரத்து பத்துக்குப் பிறகு பிரெஞ்சு புதிய அலை போல மலையாள சினிமாவின் புது தேடல் நிகழ்ந்தது. ஒடேசாவின் தொடர்ச்சியாக பிலிம் சொசைட்டிகள், பிலிம் ஸ்கூல்கள், கேரள உலகத் திரைப்பட விழா, கலை இலக்கிய பின் நவீன/பின் காலனியத் தாக்கம், உலகளாவிய அரசியல் நிலவரங்கள், சந்தைப் பொருளாதாரம், பண்பாட்டு நுகர்வு கலாசாரம், சாட்டிலைட் சானல்களின் பெருக்கம், உத்திரவாதமான சாட்டிலைட் வியாபாரம் என இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மலையாள புதிய இயக்குநர்கள் மண்ணுக்கே உரிய எளிமையும் கூர்மையும் கூடிய கலை யதார்த்தத்தை கைக்கொண்டது புதிய அலையின் தொடக்கமாகியது. தொழில்நுட்பம் , செய்நேர்த்தியை வணிகப் படங்களிலிருந்தும் உள்ளடக்கத்தை பழைய கிளாசிக்குகளிருந்தும் வரித்துக் கொண்ட அலை இது. இந்த அலையின் தன்மைகளாக மேலோட்டமாக:
1) பிரதேச சினிமாக்கள்
2) அந்தாலஜி சினிமா எனும் தொகுப்பு சினிமாக்கள்
3) சித்தாந்த சினிமாக்கள் (தலித்திய /பெண்ணிய/ கம்யூனிச ஆதரவு /விமர்சன)
4) பரிட்சார்த்த சினிமாக்கள்
5) நவீன/அதிநவீன வாழ்வியல் சிக்கல்களின் சினிமாக்கள்
6) சிற்றூர் சினிமாக்கள்
எனும் வகைமைகளைச் சொல்லலாம்.
பிரதேச சினிமாக்கள்
திருவனத்தபுரம், கோட்டயம், ஆலப்புழ, கொச்சின் என கேரள முக்கிய நகரங்களிலும் தமிழ்நாடு,பெங்களூர், பாண்டிச்சேரி, மாஹி, கோவா, ஹைதராபாத் , மும்பை, துபாய், ஆப்ரிக்கா, சவுதி என பல்வேறு வட்டாரங்களை தங்கள் கதை நிகழும் களங்களாக மலையாள சினிமாக்கள் முன்வைத்தன. பெரும்பாலும் வெறும் களமாக மட்டுமே இந்த வட்டாரங்களை பயன்படுத்தியதால் இவற்றின் தனித்துவம், மொழி, பண்பாடு பதிவாகவில்லை. டைமண்ட் நெக்லஸ், எஸ்கேப் ஃபிரம் உகாண்டா, மாலிக், எந்நாலும் என்ற அளியா போன்றவை பிரதேச சினிமாக்களின் உதாரணங்கள்.
அந்தாலஜி சினிமா எனும் தொகுப்பு சினிமாக்கள்
முதன்முதலில் மலையாளத்தில் சத்யஜித் ரேயின் தீன் கன்யா (மூன்று பெண்கள்) சினிமாவின் தாக்கம் கொண்டதாக இருப்பினும் அந்தாலஜி வகை சினிமாவின் முன்னோடியாக அடூர் கோபாலகிருஷ்ணனின் நாலு பெண்ணுங்கள் எனும் தொகுப்பு சினிமா 2007-ல் வெளிவந்தது. அடுத்த 2009-ள் வெளிவந்த கேரளா கஃபே திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ப்ரீடம் பைட், அஞ்சு சுந்தரிகள், டி.கம்பனி, கதவேடு, சோலோ, கிராஸ் ரோட், ஆணும் பெண்ணும். குறிப்பிடும்படியான படங்களாக பாப்பின்ஸ் (2012) , அஞ்சு சுந்தரிகள், சோலோ ஆகியவற்றைச் சொல்லலாம்.
சித்தாந்த சினிமா
கம்யூனிச/ தலித்திய / பெண்ணிய ஆதரவு, விமர்சன சித்தாந்த சினிமாக்கள் என இவற்றை பிரித்துக்கொள்ளலாம்.
கம்யூனிச சினிமாக்கள்
பழைய அறுபதுகளின் துலாபாரம், நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி, புன்னப்புரா வயலார் ஆகியவற்றின் தொடர்ச்சியாக தொண்ணூறுகளின் ரத்த சாட்சிகள், ஓர்மகளுண்டாயிரிக்கணும், அரபிக்கத, புது அலையில் ஒரு மெக்சிகன் அபராத, சகாவு, காம்ரேட் இன் அமெரிக்கா, லெப்ட் ரைட், படவெட்டு இவற்றுள் சில.
தலித் சினிமாக்கள்
பிராமண மேலாண்மையும் நாயர் தரவாட்டு பிரஸ்தாபங்களையம் தாங்கி வந்த முந்தைய மலையாள சினிமாக்களில் தலித் மக்களுக்கான இடம் என்பது செட் ப்ராப்பர்டிகளின் இடமாகவே தொடர்ந்தது. மேலிருந்து கீழான தலித் சித்தரிப்புகளே பெரும்பான்மையாக இடம்பெற்றன. ஆனால் கலை இலக்கிய வெளிகளிலும் அரசியல் வெளியிலும் தொடர்ச்சியான போராட்டமும் ,உரையாடலும் மலையாள சினிமாவில் தலித்துகளின் இடத்தை மறு பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கின்றன. தலித்திய கதையாடல்களின் புதிய படங்களாக கம்மாட்டிப்பாடம், நாயாட்டு, கிஸ்மத், இவற்றில் தனித்துவம் கொண்டவையாக பாப்லோ புத்தா, அட்டென்ஷன் ப்ளீஸ், பட போன்றவற்றை குறிப்பிடலாம்.( பாப்லோ புத்தா கேரள உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட வேண்டி நடந்த போராட்டம் கவனம் ஈர்கப்படாமலேயே போனது.)
பெண்ணிய சினிமாக்கள்
பெண்களின் சினிமா பெண்ணிய சினிமா என்ற கறாரான வகைப்படுதல்களோடு கேரள பெண் சினிமாக்கள் முகிழ்ந்துள்ளன. உயரே, ஹவ் ஓல்ட் ஆர் யூ?, ஃபீமேல் கோட்டயம், ஆர்டிஸ்ட், சக்கரியயுடே கர்பிணிகள், பாங்கு, களிமண்ணு, ட்ரிவான்ட்ரம் லாட்ஜ், பரிணயம் தற்போது வொண்டர் வுமன் வரை புதிய தலைமுறை பெண் சினிமாக்கள் சமூகம் இன்னும் பேசவேத் தயங்கும் கருக்களோடு புதிய கண்ணோட்டங்களோடும் அமைகின்றன.
பரிட்சார்த்த சினிமாக்கள்
அம்மா அறியானின் பாதையில் மலையாளம் புதிய அலையிலும் பலபடங்கள் குறிப்பிடும்படியாக ஜல்லிக்கட்டு, தீர்ப்பு, சுருளி, தள்ளுமால, ஸீ யூ சூன், சன்னி, ( இரண்டும் கோவிட் கால படங்கள்) ஆறு க்ளைமேக்ஸ்சுகளுடன் யூ டூ ப்ரூடஸ் , அகம், ஈ.மா.யு ,நண்பகல் நேரத்து மயக்கம் , ஆகியன நினைவில் .
நவீன/அதிநவீன வாழ்வியல் சிக்கல்களின் சினிமாக்கள்
சால்ட் அண்ட் பெப்பர், சாப்ப குருசு, நெத்தோலி, ஒரு சிறிய மீனல்லா, டேக் ஆஃப் ,டியர் பிரெண்ட், பெங்களூர் டேஸ், வொண்டர் விமன் இன்னும் பல படங்கள் நவீன வாழ்வியல் நெருக்கடிகளை பல்வேறு தரப்பிலும் கோணத்திலும் அலசியவை.
சிற்றூர் சினிமா
இந்த கட்டுரையின் மையப்பொருளாக பேசவிருக்கும் சினிமா வகைமை இதுதான்.
கேரளத்தில் பயணம் செய்தவர்களுக்குத் தெரியும் ஒரு ஜங்க்ஷன், அதில் ஒரு காப்பிக்கடை, ஒரு பார்ட்டி ஆபீஸ், ஒரு கொடிமரம், ஒரு தையல் கடை, ஒரு ஸ்டுடியோ , ஒரு போடோஸ்டாட் கடை(ஜெராக்ஸ்), ஆட்டோ ஸ்டாண்ட், ஏதேனும் நல்ல பெரிய மரநிழலடி, பேப்பர் வாசித்துக்கொண்டிருக்கும் பெருசுகள், அரசியல் சர்ச்சை செய்து கொண்டிருக்கும் சேட்டன்கள், நேந்தரம் பழம்பொரியோடு கட்டஞ்சாயா அடிக்கும் மாமன்கள், கல்லூரி, டுடோரியல் அல்லது டைப் கிளாசுக்கு செல்லும் சேச்சிகள், கப்பையும் மீனும் வாங்கி திரும்பும் அம்மச்சிகள், பழங்கதைகளை புளித்த ஏப்பங்களோடு பேசிக்கொண்டிருக்கும் தரவாடிகள்.. மரங்களின் பச்சையமும் வெட்டுக்கல்லில் பாசி படர்ந்த முடுக்குகளும் குளங்களும் காவுகளும் புழையும் காயல்களும் கடலும்.. ஓடு வேய்ந்த அம்பலங்களும் கல்விளக்குகளும்… இவற்றோடு நவீன மாடி வீடுகளும் அதிநவீன கார்களும் கண்ணுக்குள் வந்து போகும். இந்த சிற்றூர்களில் சிறு ஜங்க்ஷங்களில் வாழும் மனிதர்களின் கதைகளைத்தான் புதிய அலை மலையாள சினிமா நமக்கு காட்டித்தந்தது.
இரண்டாயிரத்து பத்துக்குப்பின் தோன்றிய இந்தப் புதிய அலை சினிமாவை சிற்றூர் சினிமா என்றே அழைக்கலாம் .பெருநகரங்களிலிருந்து விலகி சிறு டவுன்களை, சின்ன ஜங்க்ஷங்களை அதன் மனிதர்களை நமக்கு அருகில் காட்டும் சினிமாக்கள்.கும்ப்லாங்கி, அங்கமாலி, கம்மாட்டிபாடம், மங்காவு, ஆனக்கோயப்போயில், சேர்த்தல, பீமா பள்ளி, போன்ற சிறு ஊர்களின் சினிமாவாக சிற்றூர் சினிமாக்கள் மலையாள ரசனையின் மீது புத்தன் ஒளி பாய்ச்சி பார்வையை விசாலப்படுத்தின.ஒரு பஸ் பயணத்தில் நாம் கடந்துபோகும் சந்திப்பில் நிகழும் கதைகளாக நாம் மிக நெருக்கமாக உணரும் மனிதர்களை இந்த சினிமாக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. பிரெஞ்சு நியூ வேவின் இயல்புவாதத்திலிருந்து சற்று விலகி யதார்த்தவாதம் அன்றாட யதார்த்தமாக, உளவியல் யதார்த்தமாக, அரசியல் யதார்த்தமாக , பண்பாட்டு யதார்த்தமாக, வரலாற்று யதர்த்தமாக , சமூக யதார்த்தமாக, கலை யதார்த்தமாக விதம் விதமாய் விரிகின்றன. புதிய கதையாடல்களும், உள்ளடக்கமும், சற்றே ததும்பும் மலையாளிகளுக்கு உரிய பஷீரியப் பகடியும் பழைய யதார்த்தத்தின் சலிப்பை, திரும்பசெய்தல்களை கடக்க உதவுகின்றன.
இந்த சிற்றூர் ‘செறிய’ சினிமாக்களின் முக்கிய கூறுகளாக அதிநாயக பிம்பங்களுக்கு மாற்றாக சாதாரண மனிதர்களைக் காட்டியது, ஆண்மைய சினிமாவிலிருந்து மனிதநேய சினிமாவாக பரிணாமம் கொண்டது, புதிய கதையாடல்களைக் கைக்கொண்டது, பேசாப் பொருட்களைப் பேசத் துணிந்தது, களங்கப்படாத இடங்கள், அதன் சொந்த எளிய மொழி, போன்றவற்றோடு பேப்பூர் சுல்தான் பஷீரின் தாக்கத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. சிற்றூர் சினிமாவில் பஷீரின் கதாபாத்திரங்கள் உலவும் காட்சிகளை உணர முடிந்தது. பழைய மீச மாதவனில் போலீசுக்கு உதவும் கள்ளன் மாதவனிலும் தொண்டி முதலில் செயினைத் திருப்பித் தரும் பிரசாத்திலும் பஷீரின் பொன்குருசு தோமாவை தரிசிக்க முடிகிறது. மண்டன் முஸ்தபாக்களும், ஆனவாரி ராமன்களும், சக்கரியாவும், பாத்துமாவும், குஞ்சுபாத்துமாவும் சைனபாவும் ,சாராம்மாக்களும், கேசவன் நாயர்களும், வெறும் குரலாக ஒலிக்கும் நாராயணிகளும், ஆந்தக்கண்ணன் அந்த்ருவும் , சுகறாவும்,மஜீதும் இன்னும் ஏன் கொச்சு நீலாண்டனும் பாருகுட்டியும் கூட கண்டுகொள்ள முடிகிறது.
பஷீர் இன்று இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பாரோ யாரை எழுதியிருப்பாரோ எப்படி எழுதியிருப்பாரோ அதையே இந்த சிற்றூர் சினிமாக்கள் காட்டுகின்றன. கள்ளுக்கடையிலேயே பழிகிடையாய்க் கிடந்து செத்துப்போன திவாகரக் குறுப்பு செத்தபிறகு அவர் எழுதின கடிதங்கள் ஒவ்வொன்றாய் அனுப்புனர்களுக்கு வந்து சேர்வதில் பஷீரின் தன்மையை அதிகம் மெனக்கெடாமல் உணரலாம்.(ஆனந்தம் பரமானந்தம்). சுபாஷ் சந்திர போஸில் நமக்கும் நேர்ந்திருக்கும் பக்கத்துக்கு வீட்டில் டி.வி பார்க்கச் சென்றதில் உண்டான சண்டையை, மகேஷின் செருப்பிடாத பழிவாங்கலை , சாலோமோனும் சூசன்னையும் இணைத்து வைக்க சாட்சாத் ஜார்ஜ் புண்ணியாளன் வந்துதிப்பதை, ரவுடி பாதிரியை, தங்கக் குருசு திருடும் கள்ளனை, நிலச்சரிவில் வெறுத்தொதுக்கும் மலையன்குஞ்சிற்காக உயிரைப் பணயம் வைக்கும் மின்சாதனம் பழுது பார்ப்பவனை, விளையாட்டு குரூரமாகி கூட இருப்பவனைக் கொல்லும் அளவிற்கு போவதை, கட்டுகளற்று உலகைச் சுற்றும் சார்லிக்களை, சாப்பாடு கொடுப்பதில் இருக்கும் ஆத்ம சமாதானத்தை உணரும் இளைஞனை,வீட்டுக்கு செல்லும் வழிக்காக போராடும் கொச்சு பீமனை, ,எந்த நாட்டு மனிதனாயிருந்தாலும் அவர்களோடு சுரக்கும் அம்மாக்களின் அன்பை, திருடிய செயினை திருப்பிக் கொடுத்து அறம் போற்றும் கள்ளன் பிரசாத்தும், பிடித்த பாடகரான முகமது ரஃபிக்கு தனி எப்.எம். வைக்கும் ரசிகனும், அறியாத வயதில் செய்த தவறில் மாட்டிக்கொள்ளும் முதியவளின் வலியை வளர்ந்தபின் புரிந்துகொள்ளும் வெள்ளக்காய்களும், சிறு அவமானத்தின் மனவலியோடு உழலும் ஒலிவர் ட்விஸ்டுகள், அறங்களற்ற காலத்தின் புது அறங்களைப் பேசும் முகுந்தன் உண்ணிகள், இவர்களெல்லாம் பஷீரின் ஆன்மாவிலிருந்து வந்தவர்கள் அல்லாமல் வேறு யார்? புண்ணியாளன்களின் சொந்த சினிமாக்களில் இவர்கள் வாழ்கிறார்கள். நமக்கும் வாழ்வின் தரிசனங்களைச் சொல்லித் தருகிறார்கள்.
பஷீர்’ நானே பூ நானே தோட்டம்’ என்றார் .அதாவது நானே கதை நானே மொழி என்றார். கடந்து போகிறவர்களை நிலைத்து நிற்கச் செய்த பஷீரின் எழுத்து திருடர்களும், மூன்று சீட்டுக் காரர்கள், எளிய விளிம்பு மனிதர்களை மலையாளத்தின் வரலாற்று மாந்தர்களாக மாற்றியது. சாதாரண மனிதர்களின் சரிதத்தை சரித்ரமாக்கும் விதையை பஷீர் அனாயசமாக செய்தார்.அது மலையாள உலகின் அசலான ஆன்மாவாக பரிணமித்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு அது புதிய சிற்றூர் சினிமாக்களில் பிரதிபலிக்கிறது. பஷீருக்கு இலக்கிய யுத்திகள் கோட்பாடுகளை விட மனிதர்களில் ஆன்ம ஒருமையில் நம்பிக்கை இருந்தது. அதையே இன்றைய சிற்றூர் சினிமாக்கள் வழிமொழிகின்றன. ஒரு நல்ல புனைவு சிரிக்கவும் அழவும் காத்திருக்கவும் வைக்கும் என்பார் வில்கி கொலின்ஸ் பஷீரின் புனைவு அதை செய்தது செய்கிறது சினிமாக்களிலும் அதன் வீச்சு தொடர்கிறது.
புதிய தலைமுறை இயக்குநர்களான ஷ்யாம் பிரசாத் , (ஆர்டிஸ்ட்) ஆஷிக் அபு,(சால்ட் அண்ட் பெப்பர் / மாயநதி/ 22 ஃபீமேல் கோட்டயம்/ நீலவெளிச்சம்) அமல் நீரட்,(அன்வர்/இயோபின்றே புஸ்தகம்) சி.மது நாராயணன்,(கும்ப்ளாங்கி நைட்ஸ்) ஜீது ஜோசப்,(மெமரீஸ்/ திரிஷ்யம்/12-த் மேன்) அல்போன்ஸ் புத்திரன், (நேரம்/ப்ரேமம்) ஜோமேத்யூ, (ஷட்டர்) அஞ்சலி மேனன், (பெங்களூர் டேஸ்/கூடே/வொண்டர் வுமன்)) திலீஷ் போத்தன்,(மகேஷின்றே பிரதிகாரம்/ தொண்டி முதலும் த்ரிக்ஷாக்ஷியும்) அன்வர் ரஷீத்,(உஸ்தாத் ஹோட்டல்) லிஜோ ஜோஸ் பள்ளிசேரி,(அங்கமாலி டைரீஸ்/ ஜல்லிக்கட்டு/ஈ.மா.யு ) பசில் ஜோசப்,(மின்னல் முரளி), சலீம் அஹ்மத்,(ஆதாமின்ற மகன் அபு/ பத்தேமரி) சக்கரியா,(சூடானி ப்ரம் நைஜீரியா/ஹலால் லவ் ஸ்டோரி) ராஜீவ் ரவி,(கம்மாட்டிப்பாடம்/அன்னயும் ரசூலும்) காலித் ரஹ்மான்,(உண்ட) மார்டின் பரக்கத், (சார்லி) வேணு ( முன்னறியிப்பு) அப்ரிட் ஷைன் ( 1983) சமீர் தாஹிர்( நீல ஆகாசம் பச்ச கடல் சுவன்ன பூமி ) அனில் ராதாக்ருஷ்ண மேனன் ( நார்த் 24 காதம்) சனல் குமார் சசிதரன் (ஒழிவு திவசத்தே களி/செக்சி துர்கா) டினு பாப்பச்சன்( ஸ்வாதத்ந்திரம் பாதிராத்ரியில்) ஆர்.எஸ்.விமல்( என்னும் நின்றே மொய்தீன்) ஜீன் மார்கோஸ் (குட்டன் பிள்ளயுடே சிவராத்திரி) சங்கீத் பி.ராஜன் ( பால்து ஜன்வர்) இயக்குனர்களோடு பக்கபலமாக முன்பு எம்.டி.வி போலவே எழுத்தாளர்களின் பங்களிப்பும் புதிய அலை மலையாள சினிமாவுக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது, ஷ்யாம் புஷ்கரன், உண்ணி ஆர், அஞ்சலி மேனன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
புதிய அலை கதைகளின் உடல்களைச் சுமந்தவர்களாக பிஜு மேனன், பிருத்விராஜ் , இந்த்ரஜித்,பகத் பாசில், துல்கர் சல்மான் , டோவினோ தாமஸ், நிவின் பாலி, வினித் ஸ்ரீனிவாசன், ஆஷிப் அலி , குணசித்ரத்திலிருந்து கதைநாயகர்களாக ஆன விநாயகன், சுராஜ் வெஞ்ஞாறுமூடு, ஜோஜூ ஜார்ஜ், ஷோபின் ஷாகிர், அனூப் மேனன் , அஜூ வர்கீஸ் , விநாயகன், நீரஜ் மாதவ், ஸ்ரீநாத் பாசி, ஷானே நிகம், காளிதாஸ் ஜெயராம், தியான் ஸ்ரீனிவாசன், பிரணவ் மோகன்லால் , திலீஷ் போத்தன், ஷைன் டாம் சாக்கோ,பாலு வர்கீஸ், லுக்மன் அவரன் நடிகைகளில் மஞ்சு வாரியார், பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், நித்யா மேனன் , நஸ்ரியா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சம்யுக்தா மேனன், நிவேதா தாமஸ், அன்னா பென், அபர்ணா பாலமுரளி இவர்களோடு பதின்பருவ பிரகாஷனாக மேத்யூ தாமஸ், ஆதர்ஷ மனைவியாக நிமிஷா சஜயன் , அயல்வீட்டு அம்மாவாக ரெம்யா சுரேஷும் புத்தன் அலையின் புத்தாயிரம் ஆண்டை முழுக்க ஆக்கிரமித்தவர்கள்
ஒரு கேரள தமிழக எல்லையோர சிறு நகரில் வசிப்பவர்களாக எங்களுக்கு மலையாள சினிமா குறித்து பேதங்கள் இல்லை. நாங்களும் ஐம்பது வருடங்களுக்கு முன் அங்கு ஒட்டியிருந்தவர்கள்தாம். எனினும் தமிழில் இதுபோல் சிற்றூர் சினிமாக்கள் வரவில்லையே என்ற ஏக்கம் மனத்தை பிசைகிறது. சின்ன பட்ஜெட்டில்; சின்ன ஊர்களை, அதன் எளிய மனிதர்களை, அவர்களின் வட்டார மொழியை, அன்பை, உணவை, உடையை, வீட்டை, நம்பிக்கையை, பண்பாட்டை என் திரையில் கொண்டு வர இயலவில்லை என்கிற கேள்வி சமகால மலையாள சினிமாக்களைப் பார்கையில் தொக்கி நிற்கின்றது. புதிய மலையாள சினிமாவைப் பேசுவதன் மூலம் நாங்கள் தமிழ் சினிமாவின் மீதான ஏக்கத்தைப் பேசுகிறோம் நம் சொந்த மனிதர்களைப் பற்றிய கதைகளை திரையில் தேடுகிறோம்.