
கதாசிரியர் அமுதா தன் பெயரிலேயே ஆர்த்தி என்று தன் மகளின் பெயரைச் சேர்த்திருப்பதே அவர்களுக்குள்ளான நேசத்தைச் சொல்கிறது. மகளே தன் முதல் வாசகி என்று தன்னுரையில் சொல்லிவிட்டார்.
தொகுப்பின் அட்டைப்படம் தலையற்ற பெண்ணின் வடிவம். அது ஆணால் ஆட்டிவைக்கப்படும் அல்லது அலைக்கழிக்கப்படும் உணர்வை வெளிப்படுத்துகிறது.
தொகுப்பின் முதல் கதை “ரயிலைத் துரத்தும் இரவு”. இரவு நேர நீண்ட ரயில் பயணம். இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு பண்டிக்கைக்கு முந்தைய நாள் பதிவு செய்யப்படாத ரயில் பயணம். இரவும் தனிமையும் தனித்துப் பயணிக்கும் பெண்ணை ஆக்கிரமிக்கப் பிறாண்டும் மனதுமாக டிடிஆர்.
குற்றவுணர்வின் தவிப்பைப் போக்க தனது போன் நம்பரை எழுதித் தருவதும் அடுத்த டிடிஆர் வந்தும் இறங்கும் வரையிலான நம்பிக்கையை அந்த எண் தந்ததும் மிக அழகாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
அதே போல ஏறும் போது விருத்தாச்சலத்தில் கணவன் மடியில் படுத்திருக்கும் பெண்ணையும் இறங்கும் போது நாகர்கோவிலில் பெண் மடிமீது ஆண் படுத்துறங்கும் காட்சியும் நம்மையும் விசனத்தோடு கடந்துசெல்ல வைக்கிறது.
“காகிதப்பொதி” என்ற கதையில் பிரிண்ட்டிங் பிரஸ்ஸில் தூய்மைப்பணியில் இருக்கும் கணவனை இழந்த தனது ஏழைத் தாயாரிடம் பள்ளியில் தரும் இலவச சைக்கிள் வாங்கித்தரும்படி மன்றாடுகிறான் சித்திக் எனும் சிறுவன்.
பாவம் அவனது அம்மாவும் வெள்ளைரோஜாவின் மகனுக்கான சைக்கிளை விலைபேசி வாங்கிக் கொடுக்கிறாள். அந்த சைக்கிள் கலர்நூல் கலர் ஸ்ட்ரா என்று அத்தனை அலங்காரங்களோடு கரகாட்டப் பெண் போல வெகுஜோராக நான்குநாள் வலம்வந்த பிறகு சைக்கிளுக்குச் சொந்தக்காரப்பையன் வந்து வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்து மீண்டும் தன் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.
சித்திக் எதுவும் பேசாமல் நிச்சலனமாக அலங்காரங்களைக் களைந்து காகிதப்பொதியில் மடித்து வைக்கிறான். பாவம் அவனது அம்மாவுக்குத்தான் அவனது மௌனமும் காகிதப்பொதியும் அத்தனை கனம் கனக்கிறது.
நேசர் உணவகம் என்றொரு கதை. இயல்பிலேயே சிரித்த முகத்துடனான ஒருத்தியின் கைப்பக்குவத்துக்காகவே வரும் வாடிக்கையாளர் கூட்டம். அதற்காக தீ நாக்காய்ச் சுழலும் அவள் கணவனின் கொடுஞ்சொல். இப்படியான சூழலில் சிக்கிய பெண்கள் பெரும்பாலும் கையில் எடுக்கும் ஆயுதம் உடல்வலி பொருட்படுத்தாது தீவிரமாகத் தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொள்வது மட்டுமே தங்களை மீட்டெடுக்கும் வழி என்று அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
செம்மண்” இதில் ரெட்டியாரும் பாவாடையனும் வீட்டுக்காரனும் வாடகைக்குக் குடியிருப்பவனுமாக… எதேதோ பிரச்சனையாகி பக்கத்திலேயே வேறுவீட்டில் குடியிருந்துகொண்டே செய்யும் அலும்பல்கள்… என்ன இருந்தாலும் பெண்கள் இளகிய மனதுடையவர்கள் தான்.
இறுதி வாக்கியமான “பக்கத்து வீட்டுல இருந்து ரெட்டியார் வாங்கிக் கட்டிக்கொண்டு போறாரு” எத்தனை பொருத்தமான நமக்கும் பாவாடையன் மனைவிக்கும் மட்டுமே புரிந்த மறை பொருள் வாக்கியம்.
பள்ளிப்பருவத்து சின்ன வயது குரூப் போட்டோ காசு கொடுத்து வாங்க இயலாத துயர வடு வாழ்வின் சகல வசதியும் வந்தபிறகும் துரத்துவது யதார்த்தம். பிரியமான மனைவியால் பெறும் அந்த சம்பவம் நமக்கும் நெகிழ்வு “தென்னம்பஞ்சில்”..
அம்மாவோடு தனித்து குளக்கரையில் குடிசைபோட்டுக் குடியிருக்கும் அப்பாவி ஒருவனின் கதை. தான் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரியாமலே தனக்கான நிலம் பறிபோவது தெரியாமல் கையெழுத்துப் போட்டுத்தரும், கூடவே சாட்சிக் கையெழுத்துப் போட வருபவர் தான் தந்தை என்றே அறியாத வெள்ளந்தி.
இப்படியாக தொகுப்பின் எல்லாக்கதைகளுமே பத்திரிக்கைகள் இணைய இதழ்கள் மற்றும் போட்டிகளில் வென்ற கதைகளாக இருப்பதே கதைகளின் தரத்தை உணர்த்துகிறது.
பந்தயம் (சிறுகதைகள்)
ஆசிரியர் : அமுதா ஆர்த்தி
எதிர் வெளியீடு
விலை ரூ.180/-