இறந்த பின்பு மனிதன் எங்கே செல்கிறான்? அவனின் பாவ கணக்குகளை வைத்து தான் அவன் சொர்க்கம் அல்லது நரகத்துக்கு அனுப்பப்படுகிறானா ? விண்ணுலக வாழ்வு என்பதை சரியாக ஊகித்து சொன்னது ஹிந்துமதமா, கிருஸ்த்துவமா, இஸ்லாமா, சமணமா, அல்லது பௌத்தமா? யுகம் யுகமாக மனிதரை துரத்தும் இந்த கேள்விகளுக்கு சரியான பதில் எதுவும் இன்றுவரை கண்டடையப்படவில்லை. ஆனால் சொர்க்கம், நரகம் என்ற கருத்துருவை ஒட்டி கதைகளும், திரைப்படங்களும் பல வெளியாகியுள்ளன. இறப்பிற்கு பின்பான வாழ்வு எத்தகையது என்பதை நகைச்சுவையாக ஆராய்ந்து விவரிக்கிறது நெட்ஃபிலிக்ஸ் தொடரான “தி குட் பிலேஸ்” (The Good Place).
ச்சீடி, நன்னடத்தை பற்றி விவரிக்கும் ஒரு தத்துவவாதி. அவனால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. பூலோக வாழ்வில் ஒருத்தருக்கு கூட நல்லதையே நினைக்காத, எந்த ஒழுக்க விதிமுறைகளையும் அறியாத பெண் எலினோர். வாழ்வில் எந்தவித கொள்கையும் இல்லாமல், அறிவை ஒரு நொடி கூட பயன்படுத்த தெரியாத வெட்டி ஆசாமி ஜேசன். மிகப்பெரிய செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து, ஆடம்பரதத்தில் திளைத்த த்தஹானி. இந்த நான்கு வெவ்வேறு விதமான ஆன்மாக்களும் விண்ணுலகத்தில் சந்தித்து கொண்டால் என்ன நிகழும்? அங்கே ஒரு சாத்தான் ஆட்சியாளராகவும், அதற்கு உதவியாளராக ஒரு செயற்கை நுண்ணறிவின் பெண் பிம்பம் இருந்தால், நால்வரின் இறப்புக்கு பின்பான வாழ்வு எப்படி இருக்கும் என்பது தான் “தி குட் பிலேஸ்” என்ற தொடரின் மையக் கதை. இறப்பிற்கு பின்னர் இந்த நால்வர் படும்பாடும் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் முயலும் முயற்சிகளும் இந்த தொடரின் விறுவிறுப்பை கூட்டுகிறது.
வரலாற்றில் பெரும் ராஜ்ஜியங்கள் உருவாகவும், சரியவும் “யுடோப்பியன் கனவு” பெரிய காரணியாக இருந்துள்ளது. இந்த தொடர் யுடோப்பிய சமூகத்தின் மூன்று முக்கியமான அம்சங்களை கையாளுகிறது.
சமூக பரிசோதனை : விண்ணுலகில் உள்ள “தி குட் பிளேஸ்” என்ற இடம் இயல்பாகவே நல்ல மனிதர்களால் ஒரு சிறந்த சூழலில் செழிக்க முடியுமா என்பதை சோதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக அவலங்கள் நிறைந்த சூழல்கள் இல்லாமல் இருந்திருந்தால் மோகன்தாஸ் காந்தியோ, சே குவேராவோ செழித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்குமா என்ன?. கற்பனாவாத நாவல்களின் மையக் கருப்பொருளாக இருக்கும் இப்படியான அடிப்படை கேள்விகள் பல இந்த தொடரில் விவாதிக்கப்படுகிறது.
நல்ல மனிதனாக இருப்பதன் அர்த்தம் என்ன? ஒரு சராசரி குணம் கொண்ட மனிதன் ஒழுக்கங்களை கடைபிடிப்பதன் மூலமே மட்டும் நல்லவனாக மாற முடியுமா? தார்மீக முழுமை என ஒன்று இருக்கிறதா (moral absolute) அல்லது அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதா? இந்தக் கேள்விகளை இந்த தொடர் விவாதிக்கிறது. மேலும் மனிதனை நன்மை செய்தால் நல்லவன், தீமை செய்தால் கெட்டவன் என்ற வரையறையில் வைத்து பார்ப்பது எளியது, அது அர்த்தமற்றது. இத்தகைய வகைப்படுதலை விட அதற்காக கையாளப்படும் ஒழுக்க நெறிமுறைகள் மிகவும் சிக்கலானது என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்த தொடர் சுட்டிக்காட்டுகிறது.
இந்த தொடர் நன்மை X தீமை என்ற அறநெறி பற்றிய இரட்டைப்படையான வகைப்படுத்துதலுக்கு சவால் விடுகிறது. அதற்கு மாற்றாக சுயமுன்னேற்றதுக்கு ஒருவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை, ஒருவரின் செயல்களுக்கு பின்னால் இருக்கும் உள்நோக்கம் ஆகியவை அவர்கள் செய்யும் செயல்களைவிட முக்கியம் என்ற கருத்தை முன்வைக்கிறது.
தத்துவத்தின் பங்கு: இந்த தொடரில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் அது தத்துவ உரையாடல்களையும், விவாதங்களையும் கையாளும் விதம். மிகவும் கடினமான தத்துவ சாரங்களை எளிய முறையில் எடுத்துரைப்பதற்கு மிகவும் நகைச்சுவையான உரையாடல்களும், காட்சிகளும் கையாளப்பட்டுள்ளது. சிக்கலான தலைப்புகளை ஆழ்ந்த அர்த்தங்களுடன் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறது.
சமூகத்துக்கான நெறிமுறைகள், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கதாபாத்திரங்களின் ஆய்வுகள் தொடரை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. உதாரணமாக கதையின் மைய பாத்திரங்களான எலினோர் மற்றும் ச்சீடி அடிக்கடி ஒழுக்க நெறிமுறைக் கொள்கைகள் (Ethical Values) மற்றும் தார்மீக சங்கடங்கள் (Moral Dilemmas) பற்றிய ஆழமான விவாதங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் பயன்பாட்டுவாதம் (utilitarianism), தியோன்டாலஜி (Deontology) போன்ற கருத்துக்களை ஆராய்கின்றனர். இது பெரும்பாலும் நகைச்சுவையான மற்றும் அறிவூட்டும் விவாதங்களுக்கு வழிவகுக்கிறது.
மேலும் மனித செயல்கள் விதியால் தீர்மானிக்கப்படுகிறதா அல்லது தனிநபர்களுக்கு அவர்களின் செல்களின் மேல் சுதந்திரம் உள்ளதா என்ற பழங்காலத் தத்துவக் கேள்வியை இந்தத் தொடர் பல அத்தியாயங்களில் ஆராய்கிறது. அதே போல் இந்த தொடரில் வரும் தி குட் பிளேஸின் நிறுவனர் மைக்கேல், இயற்கை யதார்த்தத்தின் தன்மை மற்றும் மனித புரிதலின் வரம்புகளைப் (limitations in human understanding) பற்றி அடிக்கடி சிந்திக்கிறார். பிரபஞ்சம் என்பது ஒரு உருவமா அல்லது பொருளற்ற மாயையா என்ற கேள்வியை அவர் எழுப்பி கொண்டே இருக்கிறார்.
குறைவற்ற வாழ்வு என்ற கருத்தில் உள்ள அபத்தங்கள் : இந்த தொடரின் ஒவ்வொரு அத்தியாயமும் மிகச்சரியாக இயங்கும் சமூகத்தில் உள்ள அபத்தங்களையும், ஆபத்துகளையும் பற்றி எச்சரிக்கிறது. இதில் வரும் கதாபாத்திரங்களின் போராட்டங்கள் மற்றும் “தி குட் பிளேஸின்” உண்மையான இயல்பு பற்றிய வெளிப்பாடுகள் கற்பனாவாத கொள்கைகளின் வரம்புகள் பற்றியும், மனித அபூரணத்தின் (human imperfectness) முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைக்கின்றது.
இந்த தொடரில் மைக்கேலுக்கும், எலினோருக்கும் இடையில் நிகழும் ஒரு உரையாடல் எனக்குள் ஆழ்ந்த கேள்விகளை விதைத்தது.
மைக்கேல் : “உலகில் இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு தத்துவஞானியும் நரகத்தில் தான் இருக்கிறார்கள். பிளாட்டோ, சாக்ரடீஸ், மைக்கேல் ஃபூக்கோ இவர்கள் அனைவரும்.”
எலினோர் : “ஆனால் ஏன்? அவர்கள் நல்லவர்களாக தானே பூமியில் வாழ்ந்தார்கள்!. அறம் சார்ந்த விழுமியங்களையும், நெறிமுறைகளையும் சிந்திக்க அவர்கள் மக்களுக்கு உதவினார்கள் அல்லவா?”
மைக்கேல் : “நிச்சயமாக, ஆனால் செயலற்ற கோட்பாடுகளாக மட்டுமே பல விழுமியங்கள் எஞ்சுவதற்கு அவர்கள் தான் காரணம். கடைகளில் அவர்களின் கோட்பாட்டு புத்தகங்கள் விற்பனையாகாமல்
உள்ளன. யாரும் அவற்றைப் படிப்பதில்லை. மேலும், அவர்களில் பலர் செயல் என்பதை அறியாத உண்மையான சிந்தனையாளர்கள்!”
கோட்பாட்டு நெறிமுறைகளுக்கும் நடைமுறை ஒழுக்கத்திற்கும் இடையிலான இடைவெளியை ஆராய்வதற்காக “தி குட் பிளேஸ்” இந்த வகை நகைச்சுவை முன்மாதிரிகளை பயன்படுத்துகிறது, எது சரியானது என்பதை அறிவது சரியானதைச் செய்வதைப் போன்றது அல்ல என்பதை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறது. அறம் சார்ந்த விழுமியம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். அதற்கு அறிவார்ந்த புரிதலை விட அதிகமாக தேவைப்படுவது செயல்முறைத் திட்டம், கனிவு மற்றும் பிறரின் ஆதரவு.
இந்த தொடரில் வரும் இது போன்ற உரையாடலின் விளைவு பல எண்ணங்களை எனக்குத் தூண்டியது. அதில் ஒன்று, இப்போது மார்க்ஸ் எங்கே இருப்பார்? ஒருவேளை அவரும் நரகத்தில் இருந்தால், மக்களை அதிகம் வாசிக்கவும், சிந்திக்கவும் வைத்த குற்றத்திற்காகவா? அல்லது புரட்சிகள் பலதை தோற்றுவித்து தேசங்களை துண்டாடிய ராஜ துரோகத்திற்காகவா? என எண்ணி சிரிக்கவும் சிந்திக்கவும் தோன்றுகிறது. எந்தவித தவறுகளுமே செய்யாமல் பிழைகள் அற்ற மானுடனாக வாழ்வது எத்தனை அபத்தமும், ஆபத்தும் நிறைந்தது என்பதை எண்ணிப்பார்க்கையில் ஹிட்லர் என்னைக் கண்டு புன்னகைக்கிறார்.
தத்துவ தரிசனங்களையும், புரிதல்களையும் நகைச்சுவையில் தோய்த்து திகட்டாமல் பார்வையாளர்களுக்கு “தி குட் பிளேஸ்” அளிக்கிறது. ஒருவர் தன் சொந்த வாழ்க்கை மற்றும் அவர்களின் தார்மீகத் தேர்வுகள் பற்றி சுயபரிசோதனை செய்ய இந்த தொடர் உதவுகிறது. பார்வையாளர் தத்துவ புலமை பெற்றவராக இருந்தாலும் சரி, வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி ஆராயும் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவர்க்கும் இந்தத் தொடர் ஒரு இனிமையான காட்சி நுகர்வு அனுபவத்தை அளிக்கும்.