திரைமொழியின் நீண்ட வடிவம்

பத்தாண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன்.இயக்குநர் சேரன்,கமலஹாசன் போன்றோர் தொலைக்காட்சி வழியாக புதிய திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டார்கள்.அது படுதோல்வி அடைந்தது என நினைக்கிறேன்.திரைப்படம் என்றாலே பெரிய திரையில் பார்ப்பது மட்டுமே என இருந்தது நிலை.தொழில்நுட்பம் உச்சநிலையில் இருக்கும் காலகட்டத்தில் எதுவும் நடக்கலாம்.கொரோனா பேரிடர் காலம்.சகமனிதனிடமிருந்து விலகியிருக்க வேண்டிய கட்டாயம்.உயிர்பிழைத்திருப்பதைவிட எந்த பொழுதுபோக்கும் முக்கியமானதில்லை.சரி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் மனிதர்களுக்கு என்ன தான் பொழுதுபோக்கு? இணையவழியிலான ஒளிபரப்பு ஊடகங்கள் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டன.மத்தியதர குடும்பங்களுக்கு வேலை என்பது வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும்.வொர்க் ப்ரம் ஹோம்.திரையரங்குக்குச் செல்ல முடியாது.பெரிய திரையில் பார்ப்பதைப் போன்று வருமா என்று பலவாறான கேள்விகள்.ஆனால் சமூகம் மெல்ல மெல்ல இணைய வழியான திரை ஊடகத்திற்கு செல்ல ஆரம்பித்தது.ஒரு படம் பார்க்க திரையரங்கு சென்றால் ஆகும் செலவு என்ன?

இருவருக்கு 

டிக்கெட்,அங்கே சாப்பிடும் பொருள்கள் எல்லாம் சேர்த்து 500ரூபாய் தாண்டியிருக்கும்.இதே அதிக நபர்கள் என்றால் அதிக செலவு.இதற்கு ஆண்டு சந்தா 700 முதல் 1000 வரை கட்டி ஒரு ஆண்டிற்கு பலவிதமான படங்களை பார்க்கலாம்.எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்,எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம்,இடை இடையே நிறுத்திவைத்து பார்க்கலாம்,பார்த்த படத்தையே ஒரு நூறு முறை பார்க்கலாம்.இப்படி இணைய வழியில் சாத்தியப்பட்டது.இணையவழியிலான படங்கள் ஹிட் அடிக்க ஆரம்பித்தது.

திரைப்படங்கள் அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் முடிந்துவிடும்.ஆனால் இணையத் தொடர்களாக வரும் படங்கள் மிக அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றனவே என அவ்வளவு எளிதில் நெருங்குவதில்லை.ஆனால் சிறப்பான கதைக்களமும் தேர்ந்த திரைக்கதையும் கொடுத்தால் மக்கள் பார்ப்பார்கள் என அறிந்துகொண்ட இயக்குநர்கள்,மிகச்சிறப்பான இணையத் தொடர்களை கொண்டுவந்தார்கள்.குறிப்பாக கொரோனா காலத்தில் நீண்ட தொடர்கள் மிகச்சிறப்பான வரவேற்பை பெற ஆரம்பித்தன.(நாமெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் தானே).இந்தத் தலைமுறை மக்களும் கூட இணையத் தொடர்களை விரும்பி பார்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

இணையத் தொடர்களின் சிறப்புகளை சிலவற்றை கூற முடியும்.

1.பெரிய திரையில் காட்சிபடுத்த முடியாத கதைக்களத்தை, கதை சொல்லல் முறையை இணையத் தொடர் மூலமாக கடத்த முடியும்.

2.மிக முக்கியமாக படத்தின் கால அளவை ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

3.அரசியலை நெற்றிப் பொட்டில் அடித்தார் போல பேசமுடியும்.(நமக்குப் பிடித்த,பிடிக்காத எல்லா அரசியலையும்)

4.சென்சாரில் வெட்டி எடுக்கப்படும் காட்சிகள்,கெட்ட வார்த்தைகள் போன்றவைகளை இதில் வைக்க முடியும்.

5.எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நாவலைப் போல கதாபாத்திரங்களின் தன்மையை விளக்கிச்சொல்ல முடியும்.(அதையும் சுவாரஸ்யமாகச் சொன்னால் தான் பார்ப்போம்)

சரி இந்த இணையத்தொடர்களால் பிரச்சனையே இல்லை என்றால்,இருக்கிறது.

முதலில் நேரத்தை விழுங்குவது.பிறகு தொடர்ச்சியாக தொடர்களின் பக்கம் நம்மை திருப்பி அதற்கு அடிமையாக்குவது.தூக்க நேரம் மாறுபட்டு,உடல் பிரச்சனைகளை வரவழைத்துக்கொள்வது.(இதெல்லாம் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டால் ஒன்றும் பிரச்சனையில்லை).

இறுதியாக எல்லா இணையத்தொடர்களை திரையிடும் நிறுவனங்களும் தங்களின் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்வது.

எடுத்துக்காட்டிற்கு சொன்னால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமேசான் ப்ரைமின் சந்தா 750ல் ஆரம்பித்து 1000த்திற்கு சென்றது.தற்போது 1500.அதுவும் சில நாட்களுக்குப் பிறகு சில படங்களை உள்வாடகைக்கு வேறு விடுகிறார்கள்.

நிச்சயமாக இது ஒரு வியாபாரம் தான்.ஒரு தேர்ந்த உலக அளவிலான வியாபாரம்.அமேசான்,நெட்ப்ளிக்ஸ்,முபி,ஜீ5,சோனி,ஜியோ,ஹாட்ஸ்டார் எந்த பக்கம் திரும்பினாலும் படங்கள் உண்டு,இணையத்தொடர்கள் உண்டு. மூன்று ஊடகங்களை வைத்திருக்கிறீர்கள் என்றால் ஆண்டுக்கு 5000 வரை ஆகிவிடும்.ஏன் இவ்வளவு விலை வைக்கிறார்கள் என்றால்,இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் பொழுதுபோக்கிற்கு அதிகம் செலவு செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.அருந்ததி ராய் புதிய நூல் விற்பனைக்கு வருகிறதென்றால் அதிகபட்சமாக இரண்டாயிரம் பேர் வாங்குவார்களா?அதில் வரும் வருமானம் என்ன? ஆனால் ஏதேனும் ஒரு ஸ்டார் நடிகரின் முதல்நாள் வசூல் எவ்வளவு? இரண்டு விசயங்களுக்கும் தரைக்கும் வானத்திற்கும் இருக்கும் தூர இடைவெளி உண்டு.

இன்றைக்கு சினிமா ஊடக வடிவின் தவிர்க்கவியலா நிலையில் இருக்கிறது.கதைசொல்லல் முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்,சீட்டின் நுனியில் நம்மை உட்காரவைப்பது,எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.அரசியல் பேச வேண்டுமா? காமெடி படம் வேண்டுமா? என்னது பாடல்களே இல்லாமல் படமா? பேய்படமா?த்ரில்லர் படமா? எல்லா துறையிலும் இந்தியா முழுமைக்கும் சிறப்பான இயக்குநர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

இப்படி தான் கொரோனா காலத்தில் முதல்முதலாக ஒரு தொடரை பார்க்கலாம் என உட்கார்ந்தேன்.அன்று தூக்கம் வணக்கம்டா மாப்ள என்று சொன்னது தான் மீதி.இந்தத் தொடரை முழுவதுமாக பார்க்காமல் தூங்கக் கூடாது என விடியற்காலை 4மணியளவில் பார்த்து முடித்திருந்தேன்.Paatal Lok.

தொடரோ வட இந்தியாவின் அரசியலை நுட்பமாக பேசிக்கொண்டிருந்தது.நானும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.இடையே ஒரு எபிசோடில் ஒரு தலித் இளைஞன் ஒரு ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொள்ளும் இளைஞனை அடித்துவிடுவான்.(அந்த தலித் இளைஞம் ஒதுங்கியே தான் சென்றுகொண்டிருப்பான்).அடிவாங்கி ஆண்டை ஒரு வார்த்தை சொல்வான்.சரி எப்போது கோபத்தில் பெண்களைத் தானே வசைபாடுவோம்.அப்படியான வசவு தான் கடந்துவிட்டேன்.ஆனால் அடுத்த காட்சி என்னை ஒருபோல உலுக்கிவிட்டதும்ஆண்ட பரம்பரை இளைஞனின் தகப்பன் சில ஆண்களை அழைத்துக்கொண்டு அந்த தலித் இளைஞனின் வீட்டிற்கு செல்வான்.அந்த அடிவாங்கிய இளைஞன் அடித்தவனிடத்தில் சொன்னதைப் போலவே,ஆண்டபரம்பரை இளைஞனின் அப்பன் அந்த தலித் அம்மாவை தன் மாமனாரின் முன்னாலேயே வன்புணர்வு செய்யப்படுவார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது.இப்படி எல்லாம் நடக்குமா என எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.பீகாரில் இருக்கும் ஒரு நண்பனிடத்தில் கேட்டேன்.ஆமாம் இதெல்லாம் இங்கே சாதாரணம், இதைவிட மிக மோசமாக எல்லாம் நடக்கும் என சொன்னதும் எனக்கு வியர்த்துவிட்டது.இப்படியான அரசியல் தன்மையை இணையத்தொடர்களின் மூலம் கொண்டுவர முடிகிறது.

எனக்கு இந்தியத் தொடர்களைப் போலவே மேற்கத்திய தொடர்களை அதிமகாகப் பிடிக்கும்.ஏனெனில் அந்தத் தொடர்களின் வழியாக அவர்கள் காட்டும் நிலம்.சீன,கொரிய,இந்தோனேசிய,ஜப்பானிய,மேற்கத்திய எல்லா தொடர்களிலும் நிலம் ஒரு கதாப்பாத்திரமாகவே பயன்படுத்துகிறார்கள்.அந்த நிலங்களின் வழியே கதையைச் சொல்வதன் வழியாக நாமும் அந்த நிலத்தில் பயணிக்கக் கூடியவர்களாக மாறிப்போகிறோம்.உதாரணத்திற்கு Dutch படமான Chestnut Man என்கிற தொடரில் அந்த நிலம் கதையினூடே வந்துகொண்டே இருக்கும்.நான் மிக அதிகமாக த்ரில்லர் வகை தொடர்களையே அதிகமாகப் பார்ப்பதால்,அதில் காட்டப்படும் நிலங்களை கூர்ந்து கவனித்தவாரே வரக்கூடிய பழக்கம் உண்டாகிவிட்டது.

இவ்வாறாக இணையத் தொடர்களின் ஆதிக்கம் தமிழ்நிலமெங்குக் அதிகமாகிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம்.வேற்று மொழியல்லாத நம் தமிழ் மொழியிலும் தேர்ந்த தொடர்கள் வந்தவண்ணம் உள்ளன.

இறுதியாக நான் அதிக நாட்கள்,அதிக அத்தியாயங்களாகப் பார்த்த இணையத்தொடர் The Mentalist.என்ன நடக்கப்போகிறதென ஓரளவிற்கு கணிக்கக்கூடிய ஒருவன்(மனதாலும் அறிவாலும்) ஒரு கொலைகாரனைப் பற்றிய தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துவான்.அந்த கொலைகாரனை மிகச்சாதாரணமானவன் என்றும் பொருட்படுத்தக் கூடியவன் அல்ல என்றும் சொல்லும் வார்த்தைகளினால் கோபமுண்டாகி கதாநாயகனிம் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிடுவான்.கதாநாயகன் ஒரு துப்பறியும் குழுவில் இருந்துகொண்டே அவர்களுக்கு உதவிக்கொண்டும் கொலைகாரனை எப்படி கண்டுபிடித்தான் என்பதை சுவாரஸ்யமாகவும் மிக நீளமாகவும் தொடராக எடுத்திருப்பார்கள்.எவ்வளவு நீளம் என்றால் 7 பகுதிகளாக 150 அத்தியாயங்கள் கொண்டது இந்தத் தொடர்.மிகுந்த பொறுமை உள்ளவர்களுக்கு இத்தொடரை நான் பரிந்துரைக்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version