
இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட போதுதான் விட்டல் ராவ் என்ற எழுத்தாளரின் பெயரை நான் முதலில் கேள்விப்படுகிறேன் . அவரை குறித்து தேடி வாசிக்கையில் இலக்கியம் மட்டுமல்லாது ஓவியக்கலை , திரை துறை என பல விஸ்தாரமான கலை துறைகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து பெரிதாக பொது வாசக வட்டத்திற்கு அறிமுகமில்லாத சிறந்த படைப்பாளி என்று அறிந்தவுடன் அவருடைய ஏதேனும் ஒரு படைப்பை தேர்ந்தெடுத்து வாசிக்க எத்தனித்த தருணம் நான் தேர்வு செய்த அவருடைய புனைவு நூல் தான் இந்த காலவெளி . தலைப்பே சற்று ஆழமான சிந்தனையை தூண்டக்கூடிய ஒன்று . நாவலும் அவ்வாறே விரியும் என்று நினைத்து வாசிக்க ஆர்வம் கொண்டேன் . மேலும் இதன் முன்னுரையிலும் , பின் அட்டையிலும் இது நாவல் அல்ல ஒரு சொல்லாடல் , இது புனைவு அல்ல உண்மை கதையின் மேல் புனைவு பூசப்பட்டுள்ளது என்ற வாக்கியங்கள் ஆர்வத்தை மேலும் கூட்டின . உண்மையில் காலவெளி எனும் படைப்பு நாவலா ? சொல்லாடலா ? புனைவா ? auto fiction ? என்ற கேள்விகளுடன் வாசிக்க தொடங்கினேன் .
நவீன இலக்கியத்தின் பிரதான வடிவமான முன் பின் கதை சொல்லல் பாணியிலேயே இந்த கதையும் சொல்லப்படுகிறது . the four என்று சொல்லப்படும் நால்வர் குழுவில் இலக்கியவாதியாக செயல்படும் பிரசன்னன் பார்வையில் கதை சொல்லப்படுகிறது . அந்த நால்வரில் சக்கரவர்த்தியை பிரதான கதாபாத்திரமாக பயன்படுத்தியிருக்கிறார் . சற்று intellectul ஆகவும் , சராசரியிலிருந்து சற்று விலகிய ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதனை முதண்மையாக்க முயற்சி செய்திருக்கிறார் . ஆசிரியரின் சாயலோ முழுதுமாக பிரசன்னன் கதாபாத்திரம் மேல் விழுவது போல தோன்றினாலும் பல தருணங்களில் அந்த நிழல் சக்கரவர்த்தி மேலேயும் விழுந்து விடுகிறது . 60-70 களில் மெட்ராஸில் நவீன ஓவியம் பயின்று அதன் மேல் ஈர்ப்புக்கொண்டு ஓவியக்கண்காட்சிகள் நிகழ்த்துவதிலும் ,அதே துறையில் தொடர்ந்து செய்லபடுவதிலும் இருந்த சிக்கல்களையும் அதனை ஆட்சி செய்த பத்திரிகை உலகமும் அதன் அட்சாணியாக சுழன்றுகொண்டிருந்த விமர்சகர்களையும் பற்றி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் குறுக்குவெட்டு தோற்றம் போல பதிவு செய்திருக்கும் ஒரு படைப்பு இந்த காலவெளி .
இது ஒரு நாவல் அல்ல ஒரு சொல்லாடல் என்று திரு வெங்கட் சாமிநாதன் கூறும் கூற்று ஏற்புடையதாக இல்லை. சொல்லாடல் என்றால் discourse – ஒரு நீண்ட நெடிய கருத்தார்ந்த விவாதம் . இந்த காலவெளியில் எது நவீன ஓவியம் ? நவீன ஓவியம் ஏன் அவசியம் ? நவீன ஓவியர்களின்ஏன் இந்த சமூகத்திற்கு அவசியம் ? தமிழக்கத்தில் ஏன் ஓவியக்கலை பெரிய வீச்சினை அடையவில்லை ? போன்ற கேள்விகளுக்கு ஓவியர்கள் – விமர்சகர்கள் – கண்காட்சியை நடத்துபவர்கள் – curator களின் இடையே நிகழும் விவாதங்களின் மூலம் வெகுஜனத்திற்கு புரிய வைக்கும் ஒரு முயற்சியை தான் இந்த கதை செய்கிறது . இதனை கதைக்குள் நிகழும் விவாதங்கள் மட்டுமே ஒரு வாசகனுக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்றுவிடுமா என்ற கேள்வி எழுகிறது . ஒரு கருத்தாக்கத்தையோ அதன் மீதான விமர்சனத்தையோ ஒரு வாசகனின் அருகில் கொண்டு செல்ல அந்த கருத்தாக்கத்தின் மேல் ஒரு விவாதம் நாவலுக்கு வெளியே , வாசகனுக்கும் நாவலுக்கும் இடையே நிகழ வேண்டும் . அத்தகைய விவாதமோ , சொல்லாடலோ நாவலுக்கு வெளியே இங்கு நிகழ்ந்ததாக தோன்றவில்லை . இங்கு வாசகன் அவ்விவாதங்களை பார்வையிடும் ஒரு பார்வையாளனாக மட்டுமே நிறுத்தப்படுகிறான் அதைத்தாண்டி அவனை கதை உள்ளே அனுமதிக்காத பொழுது இந்த கதை நாவலாக விரிவதும் நின்றுவிடுகிறது .
இந்த கதை நாவலாக உருவெடுக்கும் தருணங்கள் பல இடங்களில் பிரகாசமாக ஒளிவிட்டு மிளிர்ந்தன . அத்தகைய தருணங்களை சற்று ஆழமாக அணுகி எழுதியிருந்தால் நவீன ஓவியம் குறித்த காலம்கடந்த படைப்பாக இந்த நாவல் இருந்திருக்கும் . அதில் சில தருணங்களை கூறுகிறேன் .நாவலின் தொடக்கத்தில் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கும் , புதிதாக வரைய வரும் ஓவியர்களுக்கும் மாடல்களுக்கும் இடையே நிகழும் உறவினை பற்றிய ஒரு பகுதி வருகிறது . இந்த தருணம் நாவல் அதன் அடிநாதமான ஓவியனின் வாழ்க்கையை வாசகனுக்கு அருகில் கொண்டு செல்வதற்க்கு ஒரு சிறந்த பகுதி . ஆனால் , ஆசிரியரோ இதனை மேம்போக்காக கூறி கடந்து விட்டார் . அடுத்தது ஒரு வெள்ளை canvas முன் ஒரு ஓவியன் நிற்கும் தருணம் . அலைக்கழிக்கப்பட்ட ஒரு ஓவியனின் உளச்சிக்கலை இலக்கியத்தில் பதிவு செய்ய இதைவிட ஒரு சிறந்த தருணம் அமையாது . சக்கரவர்த்தி ஒரு குழம்பிய மன நிலையில் அந்த வெற்று canvas முன் நிற்கும் தருணத்தை ஒரு மிகச்சிறந்த இலக்கிய பதிவாக மாற்றியிருக்கக்கூடிய வாய்ப்பையும் ஆசிரியர் தவிர விட்டுவிட்டார் . இந்த கதையில் நவீன ஓவியங்களுக்கு வெகுஜனத்திற்கும் இருக்கும் இடைவெளியை பற்றிய ஒரு உரையாடலில் அதனை சினிமா இசையையும் – கர்நாடக சங்கீதத்தையும் ஒப்பிட்டு ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது . இந்த விளக்கம் வெறும் வார்த்தைகளாக மட்டுமேயல்லாமல் கதையின் முக்கிய தருணமாக மாற்றி அதனை இன்னும் ஆழமாக வாசகனின் மனதிற்குள் கொண்டு செல்லும் ஒரு வாய்ப்பு தர்மன் எனும் கதாபத்திரம் மூலம் ஆசிரியருக்கு இருந்தது . தர்மன் தான் நவீன ஓவியத்திற்கும் வெகுஜன கலை ரசிகர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறான் . அவனுடைய பாத்திர வடிவமைப்பை வைத்து இதனை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது . எனவே அவனுடைய பாத்திரத்தை இன்னும் சற்று ஆழமாக சென்று எழுதி பார்த்திருந்தால் மேலே கூறப்பட்ட அந்த விவாதம் சற்று உயிர்பெற்று நாவலுக்கும் பலம் சேர்த்திருக்கும் .
காலவெளி என்ற தலைப்பு கதைக்கு நன்கு பொருந்திவந்துள்ளது .ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு கதையில் எந்த கதாபாத்திரத்திற்கும் முன்கதையோ பின்கதையோ இல்லாமல் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட கதை களத்திற்குள் உலாவரும் பலவேறு வண்ணங்கள் போன்ற கதைமாந்தர்களின் கருத்து பரிமாற்றங்களையும் அதன் வழி அவர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும் தருணத்தை காட்டும் ஓவியம் போலவே காலம் -வெளி என்ற சட்டகத்திற்குள் கதை ஓவியம் போல காட்சியளிக்கிறது . ஆனால் , மேற்கூறப்பட்ட தருணங்களை பயன்படுத்தியிருந்தால் இக்கதை சொல்லாடலோடு நிற்காமல் நாவலாக விரிந்திருக்கும். கதையின் வடிவத்தில் இந்த காலம் வெளி என்ற உருவகம் பொருந்தி வந்த அளவிற்கு கதைக்குள்ளும் இந்த உருவகம் செயல்பட்டிருக்க வேண்டும் அவ்வாறு நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் பல இடங்களில் தென்பட்டன . நவீன ஓவியர்களுக்கும் – ஆங்கிலோ இந்தியர்களுக்குமான உறவு , curator – ஓவியர்களுக்குமான உறவு , விமர்சகர்களுக்கிடையேயான உறவு , வெகுஜன பத்திரிக்கையின் பங்களிப்பு , சிறுபத்திரிக்கைகளின் வீரியம் என அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளும் – கதை நிகழும் வெளிக்குள்ளும் சாத்தியக்கூறுகள் இருந்தன . இவையனைத்தும் வெறும் ஓவியம் மீதான உரையாடல்களாகவும் , ஓவியம் குறித்த கலைச்சொற்களின் குவியல்களாகவும் , தனிமனித விருப்பு வெறுப்பு நட்பு காதல் என சுருங்கி குறுகிய வட்டத்திற்குள் கதை சுழன்று கொண்டு காலவெளி என்பது வெறும் வடிவத்தின் உருவகமாக மட்டுமே நின்றுவிட்டது .
ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுனராக விளங்கும் ஒருவர் அதே துறை சார்ந்த ஒரு கதையை ஒரு இலக்கிய படைப்பாக வெளிக்கொண்டு வரும் தருணம் ஒரு மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது . தனக்கு அத்துறையில் இருக்கும் அனைத்து அறிவையும் எப்படியாவது கதைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தான் அறிந்தோ அறியாமலோ technical உருப்படிகள் கதைக்குள் வந்துவிடும் . இதனை விழிப்போடு கதைக்குள்ளிருந்து விலக்கி வைப்பது சவாலான ஒன்று . இதே சிக்கலில்தான் விட்டல் ராவுக்கும் நிகழ்ந்துள்ளது . இவ்வாறு நிகழும்போது எத்தகைய உணர்வுபூர்வமான கதையாக இருந்தாலும் , ஆழமான கதைமாந்தர்கள் அதற்குள் உலாவினாலும் மேற்கூறப்பட்ட அந்த தகவல்கள் யாவும் புனைவிற்கு ஒரு கட்டுரையின் தாக்கத்தை கொடுத்துவிடுகின்றன . என்னதான் அந்த தகவல்களை கதாபாத்திரங்கள் தங்களுடைய உரையாடல் வழியே பதிவு செய்தாலும், கதைக்கு அவசியமாக இருந்தாலும் அவையாவும் ஆசிரியரின் அறிவிலிருந்து வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக தோன்றிவிடுகிறது . இந்த கதையில் உள்ள ஓவியம் சார்ந்த தகவல்கள் யாவும் அவ்வாறே தோன்றுகின்றன . எனவே பின் அட்டையில் குறிப்பிட்டது போல இது புனைவல்ல உண்மை கதையின் மீது புனைவு பூசப்பட்டுள்ளது என்பதை தகவல்கள் மீது புனைவு பூசப்பட்டுள்ளது போன்றே தோன்றுகிறது .
ஒவ்வொரு நாவலும் ஒரு புதிய முயற்சியே . நாவல் என்ற சொல்லே ஆங்கிலத்தில் அந்த பொருளையே தாங்கி நிற்கிறது . அந்த வகையில் இந்த நாவலும் காலத்தை தன்னுடைய கதாபாத்திரங்கள் வழியாகவும் மற்றும் காலகட்டத்தின் சமூக நிகழ்வுகள் வழியாகவும் ஊடக செயல்பாட்டின் வழியாகவும் பதிவு செய்திருப்பது சிறப்பு . குறிப்பாக அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை சற்று ஆழமாகவே சித்தரிக்கிறது . கதை அவர்களுடைய வீட்டிற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் சென்று அவர்களின் உணர்வுகளை எண்ண ஓட்டங்களை நன்கு பதிய வைத்துள்ளது . அவர்களுடைய கையறு நிலை , ஏமாற்றம் , கேலிக்குள்ளாவது , நிரந்தரமின்மை , அகதி மனநிலை , காமப்பொருளாக பார்க்கப்படும் பெண்கள் , வெற்று கௌரவத்துடன் வாழும் ஆண்கள் என இத்தனையையும் ஒரு குறுகிய பகுதிக்குள் ஆசிரியர் உணர்வுபூர்வமாக பதிவுசெய்தது சிறப்பு . குறிப்பாக அவர்கள் இல்லாத அந்த தெருவை ” the living monument of british bastardy ” என்ற வாக்கியம் பல நூறு வருடங்களின் வரலாற்று மிச்சத்தை வாசகனின் மனதில் காலதிற்கும் நிலைத்து நிற்கும் படி பதித்துவிடுகிறது .
ஒவ்வொரு கதையும் ஒரு வாசகனுக்குள் நீங்காத வடுவாக ஒரு சில காட்சிகளை விட்டுச்செல்லும் . எத்தனை ஆண்டுகளானாலும் அவை மறைந்து போவதில்லை . ஒட்டு மொத்தமாக அந்த நாவலோ கதையோ அவனால் கூற முடியாமல் போகலாம் , கதை மாந்தர்களின் பெயர்கள் மறந்து போகலாம் , விமர்சன பார்வையில் நாவலை குறை கூறலாம் ,ஆனால் கதைக்குள் நிகழ்ந்த ஒரு சில தருணங்கள் அந்த எழுத்தாளரின் மொழித்திறனால் , சொல்லாட்சியால் நினைவில் நிலைத்து நிற்கும் தருணங்களாக மாறிவிடும். அத்தகைய தருணம் இரண்டு இக்கதையில் இருக்கிறது . நிர்வாண ஓவியங்களுக்காக மாடலாக வரும் இரண்டு பெண்கள் – தன்னுடைய குழந்தையுடன் வந்து போஸ் கொடுத்து கண்ணீருடன் திரும்பி செல்லும்பொழுது அவள் கையில் கொடுக்கப்படும் அந்த பத்து ரூபாயும் அவள் குழந்தைக்கு கொடுக்கப்படும் அந்த ஹார்லிக்ஸ் பிஸ்கட்டும் மறக்க முடியாத தருணம் . ஒரு முஸ்லீம் மாடல் நடுவயது பெண் நிர்வாண போஸ் கொடுக்க எங்கு கூப்பிட்டாலும் வருவேன் என்று ஒரு பொதுவெளியில் ஓவியர்களிடம் எந்தவித தயக்கமுமின்றி உரையாடியதும், போட்டோ கூட பிடிச்சிக்கோங்க ஆனா அதுக்கு தனி ரேட்டு என்று கூறும்பொழுது அவளுடைய அழுக்கு பாவாடையின் நாடாக்கள் வெளியில் தெரியும்படி அவள் கட்டிய சேலையை விட்டால் ராவ் பதிவு செய்த தருணமும் அத்தகைய ஒன்று . இவ்விரண்டும் கதை நிகழும் காலகட்டத்தின் வறுமையை சொல்லாமல் சொல்லிவிடுகிறது . இதுதான் ஒரு கதை நாவலாகும் தருணங்கள் . எங்கோ ஐரோப்பாவில் வரையப்பட்ட நிர்வாண மாஜா ஓவியம் கொடுக்கும் தாக்கத்தை விட மேற்கூறிய இவ்விரு வாழ்க்கை தருணங்கள் காலமெல்லாம் நிலைத்து நிற்கும் தாக்கத்தை ஒரு நாவல் கொடுத்துவிடுகிறது . இத்தகைய தருணங்கள் தான் ஒரு கதையை நாவலாக்கும் தருணங்கள் . இத்தகைய தருணங்கள் எண்ணற்றவை உருவாகும் வாய்ப்பு கதைக்குள் இருந்தாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே அவை முழுதுவதுமாக வெளிப்பட்டுள்ளன . தவறவிட்ட தருணங்கள் யாவையும் வெளிப்பட்டிருந்தால் நவீன ஓவியக்கலை குறித்த ஒரு செவ்வியல் நாவலாக காலவெளி காலத்திற்கும் நிலைத்து நின்றிருக்கும் .