
முதலாம் ஆசிரியராகிய பெற்றோர்களுக்கும் இரண்டாம் பெற்றோராகிய ஆசிரியர்களுக்கும் “பெற்றோரறம்” சிறப்பிதழ் குழுவினரின் அன்பு வணக்கங்கள்.
ஏன் ஆசிரியரையும் பெற்றோரையும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சமூகம் சிறந்தோங்கித் தழைக்க இவர்கள் தான் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். இவர்கள் கைகளில்தான் அந்த மந்திரக்கோலே இருக்கிறது என்பது சமயத்தில் இவர்களுக்கே மறந்தும்விடுகிறது.
இந்தத் தலைப்பு மிகுந்த ஆழமான பொருண்மையான பொறுப்புடன் கூடிய தலைப்பு. இந்த இதழை வாசிக்கும் அனைவருக்கும் மனதைத் தொடுவதாகவோ சிந்தனையைத் தூண்டுவதாகவோ ஒரு சிறிய மாற்றத்தையேனும் ஏற்படுத்துமானால் இந்த இதழின் வெற்றி எங்களுக்கானதே அல்ல. ஒரு நல்ல மாற்றத்துக்குத் தயாராகும் அல்லது நல்லதொரு மாற்றத்தை விரும்பும் சமூகத்துக்கானது.
இதழ் முழுக்க பல்வேறு துறை சார்ந்தவர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் பொறுமையாக வாசியுங்கள். வாசித்து நேர்மையாக உங்களுக்குள் உள்ள குறைகளைக் களையுங்கள். ஏனெனில் குழந்தைகள் தான் எதிர்காலம். நமக்கு மட்டுமல்ல நாட்டுக்கே!
அவர்களின் குழந்தைப் பருவத்தை நினைக்குந்தோறும் இனிமையை இட்டு நிரப்புங்கள். மதிப்பெண்களை விரட்டி ஓடச் செய்யாமல் எதையும் நிதானத்தோடு கற்றுத்தேற வழி செய்யுங்கள். குழந்தைகளுக்கு விலையுயர்ந்த ஆடைஆபரணங்களும் விளையாட்டுப் பொருட்களும் மட்டுமே நிரந்தர மகிழ்ச்சி தராது என்பதை உணர்ந்து அவர்களுக்கு நேரம் செலவு செய்யுங்கள். அன்பையும் நேயத்தையும் கற்றுத்தாருங்கள்.
போட்டிகள் நிறைந்த உலகம் என்று பயமுறுத்தாமல் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவோம்.
என்றும் அன்புடன்,
விஜயராணி மீனாட்சி