தமிழ் இலக்கியம் எந்த பாகுபாடுகள் இல்லாமல் அனைவரையும் எழுதவும்,படிக்கவும் தூண்டும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை இதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?

இந்த அவல சமூகம் பேச தயங்கிய காதலையும்,காமத்தையும், வார்த்தைகளையும், அனுபவத்தையும் இந்த மீமிசை புத்தகத்தின் வாயிலாக குயர்கள் அனுபவித்த வலிகள் நிறைந்த வாழ்க்கையை அவர்களின் காயம் நிறைந்த மொழிகளில் அனைவரையும் சாட்டையால் அடித்தது போல மிகவும் ஆணித்தனமாக சொல்லி இருக்கிறார்
தோழர்.அழகு ஜெகன் அவர்கள்.

பல சோதனைக்கள், அசிங்கம்,அவமானம் கண்ணீர்,இவைகளை கடந்து குயர் வாழ்க்கைக்குள் வந்தோம் சில காலம் நின்றோம் என்று என்னாமல் ஏதோ தன்னால் ஆன உதவிகளை இந்த சமூதாய மக்களுக்கு செய்து குயர்கள் தோழர்களின் துயர்கள் துடைக்க தன் வாழ்நாளையே அர்பணித்து கொண்டிருக்கும் தோழர் அழகு மட்டுமல்ல இந்த ஆணவ சமூகத்திலையே பேரழகு.

இந்த சமுதாயத்தில் குயர்கள் என்றால் இப்படித்தான் என்ற நடைமுறையை மாற்றி எங்கள் சமூகத்திலும் பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களையும் சமூகத்தில் சாதனை படைத்தவர்களாக அறிமுகப்படுத்தும்
தோழர்.அழகு ஜெகன் அவர்களுக்கு அன்பான வாழ்த்தை தெரிவித்து அவர்களின் கடந்து வந்த துயர பாதையில் பயணிக்க நானும் முயல்கிறேன்.

முயலுமா என்று தெரியவில்லை;
இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

📍ஓரின பாலினத்தின் ஒரு தலை காதலை கண்ணியமாக ஒரு கவிஞரால் இப்படி மட்டுமே சொல்ல முடியும்.

🌈அனைத்தும் தெரிந்து ஏன் என்னிடம் பேசுகிறாய் என்றான்.
அனைத்தும் தெரிந்ததால் தான் காதலிக்கிறேன் என்றேன்.

📍இந்த கவிதையின் மூலமாக உண்மை காதலை உறக்க சொல்லி இருக்கிறார் நம்
தோழர்.அழகு ஜெகன் அவர்கள்.

🌈 நீயும் நானும் சேர முடியாது என்று தெரிந்தும் ஏன் என்னைக் காதலிக்கிறாய்?
ம்ம்…
அதைக் கேட்காதே;
சில கேள்விகளுக்கு விடையே இல்லை.

📍தனிமையின் பிரிவை தன்னிலை மறந்து சொல்லி இருக்கிறார்.

🌈அத்தனையும் கடந்து ஒருநாள் அவனைப் பார்ப்பேன்.
வியர்த்த விரல்களின் அனுமதி பெற்று உள்ளங்கையில் முத்தமிட்டு தனிமை பெருந்துயர் தீர்ப்பேன்.

📍தனக்கு தானே ஒப்பாரி பாடல் எழுதி வைத்த ஒப்பில்லா கவிஞர் எனக்கு தெரிந்து இவர் ஒருவரே.

🌈 சொட்டச் சொட்ட நனையும் ரயிலே
உன்னை விடவா சோகத்திற்கு வேறு அறிகுறி.

ஒருவேலை நான் இறந்து விட்டால் மெல்ல நகர்ந்து என் வீட்டிற்கு வா.

என் தாயின் சீலையில் மூக்கு சிந்திக்கொள்.

என் தந்தையை ரோசாப்பூ மாலை வாங்கி வரச் சொல்லி அனுப்பு.

என் அண்ணனை என் உடல் மீது பன்னீர் தெளிக்க சொல்.

திரும்பி பார் என் அலமாரியின் மூன்றாவது வரிசையில் கடைசியில் சாய்ந்து கிடக்கும் 2017 ஆண்டின் என் டைரியை மெல்ல திருப்பு எனக்கே எழுதிய நான்கு ஒப்பாரி பாடல்கள் இருக்கும்.

உலகத்தின் அதீத சந்தோஷமாய் ஒரு துளி கண்ணீர் கூட இல்லாமல் பாடித்தீர்த்து விடு.

ரயிலே..
முடிந்தால் என்னை நியே அடக்கம் செய்து விட்டு ரயில் நிலையத்துக்கு செல்.

நான் எரிந்த பின் தேவதையாகிவிட்டால் நீ நனையும் போதெல்லாம் உனக்கு நான் குடை பிடிக்கிறேன்.

பேரன்பு ரயிலே
கவலைப்படாதே.

🌈எனக்குப் பிடித்த இரண்டு அறைகள்.
ஒன்றில் அவன் இருக்கிறான். மற்றொன்றில் நான் இருக்கிறேன்.
உடல்களாக மட்டும்…

🌈காமத்தின் அலாதி
உறுப்பின் அளவில் இல்லை.

🌈யாருக்கும்
நாம் முதன்மையாக இல்லாமல் இருப்பதே ஒருவித சுதந்திரம் தான்.

🌈நான் வேற ஒருவரை காதலிக்கிறேன்.

நீ இன்னுமா என்னை காதலிக்கின்றாய்? என்றான்.
உன்னுடைய ‘இன்னுமா’ என்ற வார்த்தையையும் சேர்தது இரசிக்கிறேன்.
காதலிக்கிறேன்.
உன் மகிழ்ச்சியை இரசிப்பதை விடவா
காதலுக்கு வரையறை வந்துவிடப்போகிறது.

🌈 என் அறையின் கதவுகளை
தயவுசெய்து தட்டாதீர்கள்.

உதட்டுச்சாயமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கண்களுக்கு மையிட்டு கொண்டிருக்கிறேன்.

சுய இன்பம் செய்துக் கொண்டிருக்கிறேன்.

புருவங்கள் நறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

காதலனை நினைத்து கரைந்து கொண்டிருக்கிறேன்.

சிரிக்க பழகிக் கொண்டிருக்கிறேன்.

அழுது முடித்துக் கொண்டிருக்கிறேன்.

வானவில் கொடியை தைத்துக் கொண்டிருக்கிறேன்.

நிர்வாணம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஐயோ வேகமாக கதவுகளை தட்டாதீர்கள்.

உங்களின் சமூக வேஷம் பூண்டு வர எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்.

ஐயோ தயவுசெய்து தட்டாதீர்கள்.
ஐயோ வேண்டாம் தயவு செய்து என் கதவுகளை திறக்காதீர்கள்.

உங்களில் நான் இல்லை
என்னில் நீங்கள் இல்லை

திறந்தே விட்டீர்கள்…

நீங்கள்அடித்து கிழித்த
காதுகளைக் கொண்ட இந்த பிணத்தைப் பார்த்து விட்டீர்களா.

கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்தால்
உங்கள் பொல்லாத சமூகத்தில் இருந்து தப்பிச்செத்து புழுக்களுக்கு நான் பயன்பெற்றிருப்பேன்.

உயிர்தான் இல்லை உடல் கிடக்கிறது.

முடிந்தால் இதையும் கிழித்து புணர்ச்சி செய்து கொள்ளுங்கள் ஆனால்;
எங்கள் கதவுகளை மட்டும் திறக்காதீர்கள்…

🌈அவன் அலமாரியை
தயவு செய்து திறக்காதீர்கள்.

அவனின் அவன் தின்று துப்பிய சாக்லேட் கவர்கள் தேங்கிக்கிடக்கும்.

அவனின் காதல்கவிதைகள்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

அவனின் காதலன் மறந்து விட்டுச் சென்ற
கைக்குட்டைகள் பத்திரப் படுத்தப்பட்டிருக்கும்.

கல்யாண வீடுகளில் திருடிய கண்ணாடி வளையல்கள்
பாதுகாக்கப்பட்டிருக்கும்.

உள்ளாடை விளம்பரங்களில் வந்த
ஆண்களின் அரைநிர்வாண படங்கள்
சேகரிக்கப்பட்டிருக்கும்.

அவன் காதலனின் வேர்வை படிந்த சட்டை
பாதுகாக்கப்பட்டிருக்கும்.

அவன் காதலைச் சொல்லிய போதெல்லாம்
பரிசாகக் கிடைத்த எச்சில் நிறைந்த முகமூடிகள் சுருண்டு கிடக்கும்.

பாலியல்வரட்சி ஆண்கள் அவன் ஆசன வாயை
குத்தி கிழித்து ரத்தம் வழிந்த கால் சட்டைகள் சுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

கட்டாயப்படுத்தி அவன் வயிற்றில் தெளித்த விந்துக்களை துடைத்த சட்டைகள் ஓரமாக இருக்கும்.

ஊம்ப மாட்டியாடா பொட்டை என இழுத்து கிழித்த சட்டை ரத்தம் சுமந்து கொண்டிருக்கும்.

அத்தனையும் தீர்ந்து விட்டு தன்னையும் தீர்க்க தூக்குக் கயிறுகள் துணிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

சாக மனமில்லாமல் சமூகத்தை அழிக்க தீக்குச்சிகள் சேகரிக்கப்பட்டு இருக்கும்.

சமபால் காதலின் சமூக விடுதலை கிடைக்காதவரை திறக்காதீர்கள்.

அவன் அலமாரியைத் திறக்காதீர்கள்
உங்கள் தீண்டாமையின் மொத்த ஆவணம்
அவனின் அலமாரி.

தயவுசெய்து திறக்காதீர்கள்..

அவன் அலமாரிகள் தீண்டப்படாமலே மரணிக்கட்டும்.

🌈 நாங்களிடும் உதட்டுச் சாயத்தில் உங்கள் கலாச்சார அழுக்குகள் வெளுத்து போகட்டும்.

🌈அவன் விரல்களின் வாசம் சிகிரெட்டுக்கும். எனக்கும் மட்டுமே சொந்தம்.

🌈 அவனுக்கு மருதாணி பிடிக்கும்,
அவனுக்கு கண்மை பிடிக்கும்,
அவனுக்கு மூக்குத்திப் பிடிக்கும்,
அவனுக்கு உதட்டுச் சாயமும் பிடிக்கும்,
அவனுக்கு என்னையும் பிடிக்கும்.

🌈 ச்சீ அவன்கூட நின்னு பேசாத.

ச்சீ அவனை கல்யாணத்துக்கு கூப்பிட்டாத.

ச்சீ அவன்கூட ஒக்காந்து சாப்பிடாத.

ச்சீ பச்சைக் குழந்தையை அவன் கையில கொடுக்காத.

ச்சீ அவன்கூட செல்பி எடுக்காத.

ச்சீ அவனை எல்லாம் வீட்டுக்குள்ள விடாத.

ச்சீ அவன் என்னோட பிரண்டே கிடையாது.

ச்சீ அவனுக்கெல்லாம் வீடு வாடகைக்கு கொடுக்காத.

எத்தனை ச்சீக்கள் வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள்
ஆனால்;
சீக்கிரம் திருந்தி விடுங்கள்.
சாதி
மதம்
வர்க்கம்
நிறம்
இனம்
என உங்களை ச்சீ என்று சொன்னவர்களுக்கு
எதிராகவும்தான்
இந்த ச்சீக்கள் சுயமரியாதை பேரணியில் நடக்கிறோம்.

வாருங்கள் சேர்ந்து நடப்போம்.

🌈 இப்படியே நான் இறந்து விட்டால்
என்ன செய்வாய்?

மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பேன்.

பிறகு உனக்கான இரங்கல் கவிதைகள்
எழுதி காதலித்துக் கொண்டே
இருப்பேன்.

🌈 மிகப்பெரிய ஆசையெல்லாம்
ஒன்றுமில்லை.

பேருந்தில் உன்னுடன் பயணம் செய்ய வேண்டும்.

பூங்கொத்து வாங்கித் தர வேண்டும்.

உனக்கு தேநீர் செய்து தர வேண்டும்.

எந்தவித நெருடலும் இல்லாமல் சிக்கன் ரைஸ் ஊட்டிவிட வேண்டும்.

கோப்பையில் அளவாக உனக்கு மது ஊற்றி தர வேண்டும்.

உன் மடியில் படுத்துக் கொண்டு தேவதேவன் கவிதைகளை நீ வாசிக்க நான் கேட்க வேண்டும்.

உன் பெயரை என் உடலில் எழுத நீ அனுமதி தரவேண்டும்.
அவ்வளவுதான்…

நீங்கள் நினைப்பது போல் குதூகலமல்ல எங்கள் வாழ்வு;

நுணுக்கமான வார்த்தைகளையும் கொந்தளிக்கும் வெறுப்பு பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு வாழ்கிறோம்.

ஆமாம்
உங்களுக்கு நாங்கள்,
AfterAll Gay தான.

நூல்:மீமிசை
தமிழ் குயர் கவிதைகள்
ஆசிரியர்:அழகு ஜெகன்
வெளியீடு:அணியம் பதிப்புக்கூடம்
விலை:200/-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version