இன்றைய தினத்தில் சுற்றுச்சூழல் அறம், நெறி, நியாய உணர்வு என்று பார்க்கும்போது அதைக் காலநிலை மாற்றம் சார்ந்த ஒன்றாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. காரணம், உலகில் நிலவிவரும் அனைத்து சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் கூட்டிணைவாக, பிரம்மாண்டமானதாக காலநிலை மாற்றம் உருவெடுத்துவிட்டது.
2008இல் ‘கொதிக்கும் பூமி’ என்கிற காலநிலை மாற்றம் பற்றிய அறிமுகப் புத்தகத்தைத் தமிழில் நான் எழுதியபோது இருந்த நிலைமையையும் 15 ஆண்டுகளுக்குப் பிந்தைய இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டால், தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லலாம். அதற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குத் காலநிலை மாற்றம் குறித்த பெரிய விவாதங்கள் தமிழில் நடைபெறவில்லை. இடையில் மேல்தட்டு வர்க்கத்தினரையும் தனிநபர்களையும் மையப்படுத்திய சில அமைப்புகள் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழ்நாட்டில் பேசத் தொடங்கின. ஆனால், அந்த விவாதம் பரவலான மக்களைச் சென்றடையவில்லை. காரணம், 1. அந்த விவாதம் அறிவியலை மையமாகக் கொண்டிருக்கவில்லை. 2. அவர்களது கருத்துக்கும் செயலுக்கும் இடையில் இருந்த பாரதூரமான இடைவெளி.
இது மிகவும் முக்கியமான, நம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிற ஒரு கேள்வி. ஒரு பக்கம் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசிக்கொண்டே அதைத் தீவிரப்படுத்தும் செயல்பாடுகளை ஒவ்வொரு கணமும் செய்துகொண்டிருப்பவர்கள் எப்படி நியாயமாகச் செயல்படுவதாகக் கூற முடியும்? முந்தைய தலைமுறை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களிடமிருந்து இந்தத் தலைமுறையினர் வேறுபடும் இடம் இது.
கடந்த 15 ஆண்டுகளில் 2010 புயல், 2015 வெள்ளம், 2016 வர்தா புயல், 2022 மாண்டூஸ் புயல், 2023 வெள்ளம் என புயல், வெள்ளங்கள் சென்னையில் அதிகரித்துவிட்டன. ஒவ்வொரு கோடையிலும் வெப்பம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. ஒரு பக்கம் மழை வெள்ளம், மறுபக்கம் வறட்சி, தண்ணீருக்குத் தத்தளிப்பு என இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்துவிட்டன, தீவிரமடைந்துவிட்டன.
இப்படி நிலைமை எவ்வளவு மோசமாகப் போனாலும், இதற்கும் காலநிலை மாற்றத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கூட்டாக பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவை குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தொடர்புகளை புரிந்துக்கொள்ள முயலாமல் இருப்பது அல்லது கண்டுகொள்ளாமல் விலகியிருப்பது என்பது என்ன விதமான மனநிலை?
ஆனால், சமூகத்தில் பெரும்பாலோர் ஆசுவாசமாகத்தான் இருக்கிறார்கள். இன்றைக்கு சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஏன் நன்கு படித்தும் வசதியாகவும் இருக்கிற மேல்தட்டு வர்க்கத்தினர் காலநிலை மாற்றம் குறித்து எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் அல்லது அவர்களுடைய எத்தனை செயல்பாடுகளில் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், செயல்பாடுகள் பிரதிபலிக்கின்றன?
இந்தியா ஒரு வளரும் நாடாக, Common But Differentiated Responsibilities (CBDR), survival emissions vs luxury emissions ஆகிய இரண்டு கோட்பாடுகளின்படி நிலக்கரியை எரித்து மின்சாரம் பெறுவது, பெட்ரோலியப் பொருள்களை எரிப்பது என கார்பன் டைஆக்சைடை மிக அதிகமாக வெளியிடும் செயல்முறைகளைத் தொடர தனக்கு உரிமை உண்டு என்று சர்வதேச பேச்சுவார்த்தைகளில் வாதாடுகிறது. ஆனால், இந்தியாவுக்குள்ளோ, நாட்டின் 10 சதவீதப் பணக்காரர்கள் 77 சதவீத சொத்துகளை வைத்திருக்கிறார்கள். 67 சதவீதம் உள்ள ஏழைகள் ஏழைகளாகவே தொடர்கிறார்கள். இந்த ஏழைகளை முகமூடியாகப் பயன்படுத்தி சர்வதேச பேச்சுவார்த்தைகளில் வாதிட்டு இந்தியா பெறும் உரிமை, இந்தியாவுக்குள் யாருக்கு உதவுகிறது?
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும், வளங்களைச் சுரண்டக் கூடாது, மின்சாரத்தை, தண்ணீரை வீணடிக்கக் கூடாது, ஞெகிழியை கண்மண் தெரியாமல் பயன்படுத்தக் கூடாது என்கிறோம். என்னைச் சுற்றி இருப்பவர்கள் கார் வாங்கும்போது, ஏசி வாங்கும்போது, எனக்குமே அது சார்ந்த குற்ற உணர்வு மேலோங்குவதற்கு பதிலாக நாமும் இதுபோல் செய்யக் கூடாதா என்று தோன்றும். ஆனால், நம்முடைய தீர்மானம் தீவிரமாக ஆட்டம் காணும் நிலைக்குச் செல்கிறது. காரணம், நம்மைச் சுற்றியிருக்கும் காலநிலை அதிவேகமாக மாறிவருகிறது. நடப்பு விஷயங்களை சமாளிக்க முடியவில்லை.
ஆனால், நம்மை ஆளும் அரசுக்கோ காலநிலை மாற்றம் பற்றி எந்தக் கவலையும் இல்லை. வெப்ப அலை போன்ற மிக மோசமான தீவிர வானிலை நிகழ்வுகள் நடைபெறும் காலத்தில்தான் நம் நாட்டில் தேர்தலும், தேர்தல் பிரசாரமும் நடைபெறுகின்றன. நாடாளுமன்றத்தில் 2019 வரை முடிந்த 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றம் பற்றி நடைபெற்ற விவாதங்கள் 0.03 சதவீதம்.
தமிழ்நாட்டில் நெடிய பாரம்பரியம் கொண்ட இடதுசாரி இயக்கங்கள் காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தற்போது அந்த திசையில் பேசத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும் மேல் நடுத்தவர்க்கத்தினர், ஆழமான புரிதல் இல்லாதவர்கள்தான் காலநிலை மாற்றம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். துறைசார்ந்த நிபுணர்களுக்கு பதிலாக ஆர்வலர்கள் என்பவர்கள் முக்கியத்துவம் பெறுவது கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
சற்று ஆசுவாசம் அளிக்கும் வகையில் சமீபத்தில் ராஜஸ்தானில் ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் அரிய கானமயில் குறித்த வழக்கு ஒன்றில், காலநிலை மாற்ற பாதிப்புக்கு எதிராக தம்மைக் காத்துக்கொள்ளும் உரிமை இந்தியக் குடிநபர்களுக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் அதற்கு சட்ட உரிமையை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்த சட்ட உரிமை நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ஒரு கருத்தாக, உரிமையாக இது மிக முக்கியம். ஆனால், நடைமுறையில் இதுபோன்ற உரிமைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்கிற கேள்வி தீவிரமாக எழுகிறது.
30 ஆண்டுகளாகக் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், பூமியைக் காப்பாற்றும் பெரிய முன்னேற்றம் எதுவும் நிகழவில்லை. ஒரு சமூகமாக-அறிவியல் உணர்வுமிக்கவர்களாக நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோமோ என்கிற கேள்வியும் எழுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்த பேரழிவுகளில் 90 சதவீதம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை. ஒவ்வோர் ஆண்டும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் 3-4 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். ஆண்டுகள் செல்லச்செல்ல இது அதிகரிக்கும். உக்ரைன் போர், காஸா போர் குறித்துக் கவலை கொள்கிறோம். காலநிலை மாற்றம் என்பது அறிவிக்கப்படாத ஒரு போர்தானே? இதிலும் லட்சக்கணக்கானோர் பலியாகிக்கொண்டிருக்கிறார்களே.
சர்வதேச அளவில் கிரெட்டா துன்பர்க் தொடங்கி இந்தியாவில் ரிதிமா பாண்டே, தமிழ்நாட்டில் வினிஷா உமாசங்கர் எனப் பலரும் நம்பிக்கை தரும் இளம்பெண்கள், இளைஞர்கள் செயல்பட்டுவருகிறார்கள். தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம் குறித்த தீவிர விவாதங்களை முன்னெடுக்கும் வகையில் யுவன் ஏவ்ஸ் உள்ளிட்டோர் செயல்பட்டுவருகிறார். சு.அருண்பிரசாத், நாராயணி சுப்ரமணியன் உள்ளிட்டோர் அது சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருகிறார்கள். என்னதான் விரக்தி மேலெழுந்தாலும் பாரதியார் சொன்னதுபோல்,
ஓயுதல் செய்யோம்
தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம்
பல வண்மைகள் செய்வோம்
என்கிற நம்பிக்கையுடன் மனிதர்களாக செயல்பாடுகளை தொடர்வோம்.