ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான குழப்பம் நிறைந்த பருவம் பதின் பருவம் பதின் பருவத்தில் குறிப்பாக 12 இருந்து 15 வயது வரை பூப்பெய்தும் நேரம் என்று சொல்லலாம் தற்பொழுது ஒன்பது வயதிலிருந்து பெண் குழந்தைகளின் பூப்பெய்தல் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக மாறத் துவங்கி இருக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிகழும் மூன்று முதல் ஏழு நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்றாலும் வெளியேறுவதை குறிக்கும்.
இதனை இடக்கரடக்கலாக வீட்டுக்கு தூரம், டேட், வீட்டுக்கு வெளியே, வீட்டு விலக்கு, நான் நல்ல பிள்ளை இல்லை மற்றும் பீரியட்ஸ் என்று சொல்வதுண்டு.
இந்தக் காலகட்டத்தில் மனச் சோர்வு, மன அழுத்தம், கவலை, கோபம் மற்றும் மார்பகங்களில் வலி ஏற்படும்.
முதுகு மற்றும் மேல் தொடைகளில் அடிவயிற்றில் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு எரிச்சல் உணர்வு, தலைவலி, அதிக பசி, வயிற்று தசை பிடிப்பு மற்றும் உடல் சோர்வு என்று ஒவ்வொருவருக்கும் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடும்.
மாதவிடாய் சரியாக வருவதற்கு ஈஸ்ட்ரோஜன் புரோஜஸ்டிரான் போன்ற ஹார்மோன்களின் சமன்பாடு தான் காரணம்.
மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசலாமா?
மாதவிடாய் பற்றி வீடுகளிலேயே பேசுவதில்லை. இது பெண்கள் சமாச்சாரம் என்று மறைக்கப்படுகிறது. பிறகு எப்படி பொது இடங்களில் அதுவும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடம்?
பேசத்தான் வேண்டும் பெண்களின் உடல் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உணர்வுகள் உடல்நிலை பற்றி குறிப்பாக மாதவிடாய் என்றால் என்ன என்பது பற்றி?
அது அருவருக்கத்தக்க ஒன்று இல்லை அதிலிருந்து தான் ஒரு குழந்தை உருவாகிறது என்பது பற்றி.
குறிப்பாக பள்ளிகளில் இது பற்றியான விழிப்புணர்வு ஆண் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் பெண் குழந்தைகளிடமும் இது பற்றி இருக்கும் மூடநம்பிக்கைகளையும் தவறான புரிதலையும் மாற்ற வேண்டும்.
ஆண் குழந்தைகளை பெற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றியும் பெண்களின் மன உணர்வுகள் அந்த நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் உடல் உபாதைகள் பற்றியும் தெளிவாக கூற வேண்டும். இது அருவருக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
பெண்கள் தங்கள் ஆண் குழந்தைகளிடம் பெண்களின் உடல் சார்ந்த மனம் சார்ந்த பிரச்சினைகளை பகிர வேண்டும் அப்படி பகிரும் போது தான் சமூகத்தில் தன்னுடைய வாழ்க்கையில் தங்கையாகவும் அக்காவாகவும் தோழியாகவும் மனைவியாகவும் இருக்கும் பெண்கள் மீதான பார்வை பெண்கள் மீதான சிந்தனை மாறுபடும். தடைகளையும் வலிகளையும் வேதனைகளையும் கடந்து தான் ஒவ்வொரு பெண்ணும் வருகிறாள் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
நாப்கின் வாங்கி வந்து கொடுப்பது ஒரு அசிங்கமான ஒன்று கிடையாது என்றும் ஆண் குழந்தைகளிடம் இதைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். மருந்தகங்களில் தைரியமாக காண்டம் கேட்கும் ஆண்கள் கூட நாப்கின் வாங்கி வர நெளிவது ஏன் என்று தெரியவில்லை?
இன்றும் நாப்கின் வாங்கும் பொழுது மேலே ஒரு செய்தித்தாளையும் அல்லது கருப்பு நிற பிளாஸ்டிக் பேப்பரையோ சுற்றி தான் கொடுக்கிறார்கள். ஏன்?
தான் நாப்கின் வாங்குகிறோம் என்று அடுத்தவருக்கு தெரிந்தால் என்னவாகிவிடும் கொடுக்கும் கடைக்காரரும் நாப்கினை இப்படி கவர் செய்து கொடுப்பது ஏன்?
என்றாவது யோசித்திருக்கிறோமா காலம் காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டு அது ஒரு தீண்டத்தக்க செயலாகவும் அந்த மூன்று நாட்கள் விலக்கி வைக்கப்பட்ட நிலையும் பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. இன்று எவ்வளவு தான் நாம் முன்னேறி இருந்தாலும் இன்னும் இன்னும் நாம் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.
நாப்கினை மறைத்து வாங்கும் கலாச்சாரத்தை மாற்றுவோம்.
மற்ற பொருட்களை போல நாப்கினையும் வெளிப்படையாக வாங்குவோம்.
மாதவிடாய் கால சுகாதாரம்
பெண்கள் தங்களது ஆயுட்காலத்தில் 2555 நாட்கள் ஏறக்குறைய 7 ஆண்டுகள் மாதவிடாய் எதிர் கொள்கின்றனர்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெண்கள் எதிர் கொண்டே ஆக வேண்டிய இயற்கை நிகழ்வு. இன்றும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. ஒரே நாப்கினை பல மணி நேரம் பயன்படுத்துவது. முறையற்ற உணவு சாப்பிடுவது. மருத்துவரின் பரிந்துரை இன்றி வலி நிவாரணிகளை சாப்பிடுவது. பிறப்புறுப்பு சுகாதாரமின்றி இருப்பது என்ற பல்வேறு தவறான விஷயங்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறையாவது மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு குறைவாக இருந்தால் நீண்ட நேரம் ஒரு நாப்கினைப் பயன்படுத்தலாம் என சிலர் நினைப்பார்கள். அது தவறு நாப்கினை மாற்றாவிட்டால் பிறப்புறுப்பில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். இது வெள்ளைப்படுதலில் தொடங்கி சருமப் பிரச்சனைகள் என ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். மாதவிடாயின் போது உள்ளாடைகள் அணிவதில் கவனமாக இருக்க வேண்டும்.
நைலான் உள்ளாடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
உள்ளாடைகளை வெயிலில் உணர்த்த வேண்டும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய உள்ளாடைகளை தூக்கி எறிந்து விட்டு புதிய உள்ளாடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்திய உள்ளாடைகளை மற்ற நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.
மாதவிடாய் காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். பொதுவெளிகளில் நாப்கினை அகற்ற முறையான வசதிகள் இல்லை என்பதால் அலுவலகம் செல்லும் பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாப்கினை நீக்க வசதி இல்லாத கழிப்பிடங்களில் உபயோகப்படுத்திய நாப்பினை பழைய காகிதத்தில் மடித்து கழிவறை குப்பைத் தொட்டியின் மூலம் அப்புறப்படுத்தவும். மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தம் கெட்ட ரத்தம் என்பது தவறான கருத்து.மனித உடலில் கெட்ட ரத்தம் ஒன்று இருக்காது. ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக அவதிப்படுபவர்கள் பலருக்கும் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். அப்படியானவர்கள் கெட்ட ரத்தம் தானே வெளியேறுகிறது என்ற எண்ணத்தில் அதை பொறுத்துக் கொள்வார்கள். அது ஆபத்தான போக்கு உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த அல்லது அதிகம் வருத்த உணவுகள், குளிர்பானங்கள், சர்க்கரை சத்து நிறைந்த உணவுகள் மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கீரைகள், காய்கறிகள், பழங்கள், உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வெந்தயம் மற்றும் மோர் போன்ற வற்றை உட்கொள்ளலாம்.
வலி அதிகமாக உள்ள நாட்களில் ரத்தப்போக்கு அதிகமான உள்ள நாட்களில் உடலுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.
மாதவிடாய் பற்றிய மூடநம்பிக்கைகள்.
மூட நம்பிக்கை : மாதவிடாய் காலத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது.
விளக்கம் : மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுய சுத்தத்தை பேணுதல் அவசியம்.அதனால் கட்டாயம் ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. காரணம் மாதவிடாய் காலங்களில் நாப்கின் உபயோகிப்பது பலருக்கு தொடை இடுக்குகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சுத்தம் செய்வதுடன் டயாபர் ராஷ் வராமல் இருக்க உதவும்.
மூடநம்பிக்கை : மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தயிர் புளிப்பு பொருட்கள் காரசாரமான பொருட்கள் கொடுக்கக் கூடாது. இந்த கட்டுப்பாடான உணவு அந்த பெண்ணின் உடலில் உள்ள தீய சக்தியை தடுத்து பெண்ணின் உடலை சுத்தம் செய்யும்.
விளக்கம் : இது உண்மை என்பதற்கான எந்த அறிவியல் விளக்கமும் இல்லை.இப்படிச் செய்வதால் நிறைய பெண்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்க வேண்டிய போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் என்று பெண்கள் நல மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கருத்தில் வைத்து பெண்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பது உண்மை.
மூடநம்பிக்கை : மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் பயிற்சி செய்தால் உடல்நிலைக்கு ஆபத்து.
விளக்கம் : மாதவிடாய் காலத்தில் அந்த காலங்களில் துணி பயன்படுத்தியதால் அந்த நேரத்தில் அவர்களால் நடப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது சானிட்டரி பேடுகள், டாம்பான்கள் மற்றும் மென்சுரல் கப் போன்றவை இருப்பதால் ஈசியாக ரத்தத்தை உறிஞ்சி கரை படியாமல் பார்த்துக் கொள்கின்றன. எனவே இப்போது எல்லாம் பெண்கள் உடற்பயிற்சி செய்யத் தடை வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள். சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறுகிறார்கள்.
பெண்கள் முதலில் மாதவிடாய் குறித்துபுரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் துன்பம் குறித்து எல்லோருக்கும் தெரியும் எனவே பெண்கள் முதலில் இது போன்ற மூடநம்பிக்கைகள் இருந்து வெளியே வர வேண்டும்.
நாப்கின், டாம்பான், மென்ஸ்ட்ருவல் கப், பீரியட் பாண்டீஸ் எது சிறந்தது?
முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களால் உண்டாகும் ரத்தப்போக்கை நிறுத்த பேண்டேஜ்களை பயன்படுத்தினர். இது ரத்தத்தை உறிஞ்சுவதால் செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் உதிரப்போக்கை உறிஞ்சுவதற்கு பயன்படுத்த நினைத்தார்கள். இதுவே இன்று நாம் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினின் தொடக்கம்.
இந்திய பெண்களின் 64 சதவீதம் பேர் மட்டுமே சுகாதாரமான மாதவிடாய் பொருட்களை பயன்படுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் 90% பெண்கள் சானிட்டரி நாப்கின்கள்தான் பயன்படுத்துகின்றனர்.
சானிட்டரி நாப்கின்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சானிட்டரி நாப்கினுக்கு மாற்றாக வேறு எதனை பயன்படுத்தலாம்?
நாப்கின்களைப் போலவே உறிஞ்சும் பொருள் டாம்பான். ஆனால் இவை நாப்கின்களை போல் பட்டையாக இல்லாமல் உருளை வடிவத்தில் இருக்கும். இதை யோனியின் உள்ளே பொருத்திப் பயன்படுத்த வேண்டும்.
இதில் கீழே உள்ள ஸ்ட்ரிங் போன்ற நூலை இழுத்து நீக்கலாம். மாதவிடாய் ரத்தப்போக்கின் தீவிரத்தைப் பொறுத்து நான்கு அல்லது ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை இதை மாற்ற வேண்டும்.
பெரும்பாலான பெண்கள் இதை பயன்படுத்த விரும்புவதில்லை.
மென்ஸ்ட்ருவல் கப் என்பவை ஃபேனல் அல்லது கூம்பு வடிவில் சிலிக்கானால் செய்யப்பட்டவை. அளவில் சிறியதாக உள்ள இந்த கப்பை மாதவிடாய் நாட்களில் நாப்கினுக்கு பதிலாக உள்ளே பொருத்திக் கொள்ளலாம். இது 12 நேரம் வரை தாங்கும் கப் நிறைந்த பின் சுத்தம் படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம். மென்ஸ்ட்ருவல் கப் நீண்ட நேரம் தாங்க கூடியது கசிவு பற்றிய டென்ஷன் இல்லாமல் வேலைகளில் கவனம் செலுத்த உதவும். பயணங்களையும் இது சலபமாக்கும். பயன்படுத்தத் தொடங்கும் பொழுது சற்று கடினமாக இருந்தாலும் பழகிக் கொண்டபின் மிகவும் சவுகரியமாக உணர முடியும்.
ஒருமுறை வாங்கிவிட்டால் ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லை என்றே கூறுகிறார்கள்.
பீரியட் பேண்டீசை உள்ளாடை போல் அணிந்து கொள்ளலாம். பல அடுக்குகள் கொண்டு செய்யப்பட்டு இருப்பதால் லீகேஜ் பற்றி கவலை இல்லை சுத்தம் செய்த மீண்டும் பயன்படுத்தலாம். பலவித அளவுகளிலும் கிடைக்கிறது.
இப்படி சந்தைகளில் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றது.
நமக்கு ஏற்றது எது என்று நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
உலகத்திலேயே ஒரே இந்து நாடு என்று பெயர் பெற்ற நேபாளத்தின் மத்திய மேற்கு மலைப் பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் இன்றளவும் கூட நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்வு அதை கொடூரமான நிகழ்வு என்றும் கூறலாம்.
நேபாள தலைநகர் காத்துமாண்டிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அச்சாம் மற்றும் போட்டி மாவட்டங்கள்.
கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 3800 மீட்டர் உயரம் வரை அமைந்துள்ள இந்தப் பகுதிகள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளாக இருக்கும்.
இந்தப் பகுதிகளுக்குள் வாகனங்கள் அவ்வளவு எளிதாகச் செல்ல முடியாது.
இந்தப் பகுதியில் 4×3 அளவே உள்ள அறையில் ஒரு பெண்ணுக்கு அவருடைய உறவினர் சிறுமி உணவு கொண்டு வந்து தருகிறாள். தன் விரல் கூட பட்டு விடக்கூடாது என்று மிகவும் கவனத்தோடு.
ஏன் அந்த அறையில் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்?
ஏதாவது தீண்ட தகாத வியாதியா? அவர் ஏதாவது தவறு செய்து ஊரால் ஒதுக்கப்பட்டு விட்டாரா? என்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா!
அப்படி எல்லாம் அவர் எதுவும் செய்து விடவில்லை அவருக்கு மாதவிடாய் நாள்.
மாதவிடாய் நாட்களில் அதாவது ஐந்து நாட்கள் இவர்களின் வீட்டுக்கு முன்புறம் அல்லது பின்புறம் குறிப்பாக மாட்டுக்கொட்டைக்கு அருகில் ஒரு குடிசை அமைக்கிறார்கள்.
மழைக்காலம் குளிர் காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக மாதவிடாய் நாட்களில் இந்தக் குடிசையில்தான் அவர்கள் தங்க வேண்டும். இந்த இடத்திற்குள் நுழைந்து காயம் படாமல் வெளியே வருவது அரிது.
அது மாதிரியான குறுகிய அறை கூனிக்குறுகித்தான் அந்த அறைக்குள் அமர வேண்டும்.
இதில் இன்னும் கொடுமை என்றால் குடும்பத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று நான்கு ஐந்து பேர் கூட மாதவிடாய் ஏற்பட்டு ஒரே அறையில் தங்க வேண்டிய சூழல் ஏற்படும். அல்லது மாதவிடாய் குடிசை கட்டும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள் இது மாதிரி சிறிய அறையில் சேர்ந்து இருப்பார்கள்.
கடும் குளிர், கும்மிருட்டு, காற்றோட்டமின்மை இன்னும் சொல்லி மாறாத துன்பங்கள் எத்தனை எத்தனை.
மாதவிடாய் காலத்தில் வரும் மன அழுத்தம் சோர்வு உடல் வலி இதையெல்லாம் உணர்வதற்குக் கூட இவர்களுக்கு வழியே இல்லை.
வீட்டிற்கு அருகில் கூட செல்லக்கூடாது. கோயிலுக்குச் செல்லக்கூடாது. பொதுவான தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. தான் பெற்ற குழந்தைகளை மட்டும் தொடலாம். ஆனால் மற்றவர்களைத் தொடக்கூடாது. இது காலம் காலமாக தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் ஒரு கலாச்சாரம் என்று கூறுகிறார்கள்.
இதை ‘சாவ்பாடி’ என்கிறார்கள். சாவ் என்றால் தீண்டத் தகாதது. ‘பாடி’ என்றால் ‘இருத்தல் நிலை’ என்று பொருள்படும். பூப்பெய்திய பெண்ணிற்கு மாதவிடாய் வரும்பொழுது இவர்களின் மரபுப்படி அவர் சாவ்பாடி ஆகிறார்.
அதாவது தீண்ட தகாதவராக மாறுகிறார். அதனால் இவர்கள் தனித்து வைக்கப்படுவதற்காக அந்தக் குடிசை கட்டப்படுகிறது.
2006 ஆம் ஆண்டில் நேபாள அரசு இந்த மூடப்பழக்க வழக்கத்தை ஒழிக்கும் வண்ணம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும் இந்தப் பழக்கம் இன்னும் இந்த பகுதிகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதால் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சில வீடுகளில் வீட்டுக்குள்ளேயே பதுங்கு குழி போன்று ஒன்று அமைத்து தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது ஒன்றரை மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும்.
அங்கிருக்கும் மக்களை இந்த நடைமுறையை ஏன் பின்பற்றி வருகிறீர்கள் என்று கேட்ட பொழுது,
கடவுளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறோம்.
மாதவிடாயின் போது ரத்தப்போக்கு இருப்பதால் அது கடவுளுக்கு எதிரானது எனவே வீட்டுக்குள் அனுமதிப்பது சரியில்லை என்று கூறுகிறார்கள்.
மூடப் பழக்க வழக்கங்கள் புரையோடிப் போன விழுமியங்கள் இன்னும் இங்கே நடைமுறையில் இருப்பதை நாம் காண்கிறோம்.
மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை அறியாமல் அது கடவுள் விடுக்கும் எச்சரிக்கை என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி அதைக் காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம்.
இவை எல்லாவற்றின் உச்சம் அவர்கள் நடந்து செல்வதற்கு கூட தனி பாதை.
(இதை வாசித்த போது பெரியாரின் வைக்கம் போராட்டம் தான் நினைவிற்கு வந்தது)
ஆதிகாலத்தில் நான்கு வர்ணங்கள் இருந்தது. நான்கு வர்ணங்களை விட கீழானவர்களாகத்தான் பெண்கள் நடத்தப்பட்டார்கள். அது நிஜம் என்றும் இன்றும் மாறவில்லை என்றும் தோன்றுகிறது.
எங்கோ சில இடங்களில் பெண்களுக்கு உரிமை கிடைத்துவிட்டது என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்துவிட்டது என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
பெண்கள் வளர்ச்சி அடைந்து விட்டார்கள் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்தமாக நடந்தால்தான் வளர்ச்சி. ஏதோ ஓரிடத்தில் நடந்தால் அது வீக்கம். இப்பொழுது நமது நாட்டில் நடைபெற்று இருப்பது வீக்கம் மட்டுமே வளர்ச்சி எப்பொழுது?
சரி நாம் மாதவிடாய் பிரச்சனைக்கு வருவோம்.
ஐந்து நாட்கள் முடிவில் அவர் அந்த ஐந்து நாட்களும் பயன்படுத்திய உடையை துவைத்து, அதன் பிறகு அவர் மீதும் அவர் வைத்திருந்த துணியின் மீதும் வீட்டிலும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்து தூய்மைப்படுத்துகிறார்கள்.
ஐந்து நாட்கள் முடிந்த ஆறாவது நாள் மாட்டு மூத்திரத்தைக் குடித்து புனிதமான பின்பு வீட்டுக்குள் நுழைய வேண்டும்.
மாதவிடாய் நாட்களில் உள்ளே சென்றால் கெட்டது நடக்கும் என்ற ஒரு மன நிலையை அங்கிருக்கும் பெண்கள் மனதிலும் ஆண்கள் மனதிலும் ஆதி காலத்தில் விதைத்த ஒன்று இன்று வரை யாராலும் வெளியேற்ற முடியவில்லை.
மாதவிடாய் காலத்தில் வீட்டுக்குள் உறங்கிய ஒரு சிறுமியை ஊரார் கடுமையாக துற்றப்பட, அந்த சிறுமியே நான் வெளியே படுத்துக் கொள்கிறேன் என்று கூறி மாதவிடாய் குடிசைக்கு ஒரு நாள் இரவு சென்று விட்டாள். மறுநாள் அந்த குழந்தை இறந்து கிடந்தது.
இறப்புக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் கடும் குளிரும் காற்று போக முடியாமல் இருந்த அந்த அறை முழுவதும் மூடிவிட்டதால் மூச்சு திணறி இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இவையெல்லாம் எங்கோ நேபாளத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்று நாம் படித்து கடந்து விட முடியாது. சமீபத்தில் என்னுடைய தோழி நித்யா எனக்கு ஒரு காணொளி அனுப்பி இருந்தார்.
அந்தக் காணொளியில் ஒரு பெண் கொங்கு மண்டலத்தில் ஒரு கிராமத்தில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று வெளியிட்டு இருந்தார்.
அந்தக் காணொளிக்குள் சென்று பார்க்கும் பொழுது ஒரு பெரும் அதிர்ச்சி நேபாளத்தில் என்ன செய்தார்களோ அதையே இங்கும் செய்திருந்தார்கள். இன்னும் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி அறை. ஒரு ஊருக்கே மாதவிடாய் வீடு. மூன்று நாட்களுக்கு அந்த அறைக்குள் அவர்கள் இருக்க வேண்டும்.
அவரவர் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து ஊரின் தெருவில் அமர வைத்து அவர்கள் மீது சுண்டுவிரல் கூட படாத அளவிற்கு தட்டை வைத்து உணவு பரிமாறுகிறார்கள். இது எப்படி கொண்டாட்டம் ஆகும் என்று அந்த காணொளியில் பேசும் பெண்மணி கூறுகிறார் என்றால் மூன்று நாளைக்கு எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. நாம் தனியாக அந்த வீட்டில் இருந்து கொள்ளலாம். மாதவிடாய் ஆன பிற பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் என்று கூறுகிறார்.
வேலை செய்யாதது ஒருவகையில் மகிழ்ச்சிதான் என்றாலும் தீண்ட தகாதவராக நம்மை பிரித்து வைத்திருக்கிறார்கள் என்பதை கூட உணர முடியாத மனநிலையில் தான் ஒவ்வொரு பெண்ணும் இன்றும் இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.
பல பேர் இதைப் பற்றி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூற அந்த காணொளியை எடுத்து விட்டார்.
கிராமப்புறங்களில் இன்றும் மாதவிடாய் நாட்களில் மூன்று நாட்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் அவர்களுக்கென்று தனித்தட்டு அவர்களுக்கு என்று தனி பாய் தலையணை இப்படி கொடுக்கப்படும் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மாதவிடாய் நாட்களில் துணியை பயன்படுத்தும் பொழுது அல்லது நாப்கினைப் பயன்படுத்தும் பொழுது அந்த நாப்கினை சரியாக அப்புறப்படுத்தாமல் விட்டு விட்டால் கருடனின் நிழல் அதாவது கழுகின் நிழல் அந்த நாப்கினில் விழுந்துவிட்டால் குழந்தை இருக்காது என்று மிக சமீபத்தில் ஒரு 15 வயது குழந்தையிடம் ஒரு பாட்டி கூறியிருக்கிறார் அந்தக் குழந்தை பயந்து கொண்டே அழுது கொண்டு தன் தாயிடம் வந்து இதைப் பற்றி கூறியிருக்கிறது.
அதை சரியாக அப்புறப்படுத்த வேண்டும் அது சுகாதாரக் கேடு என்று சொன்னாலே குழந்தைகள் புரிந்து கொள்வார்கள் ஆனால் இதுபோன்று இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
வாரிஸ் டைரியினா பாலைவன பூ நூலை எவ்வளவு பேர் வாசித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதில் வாரிஸ் தான் பட்ட கஷ்டங்களை துயரங்களை எழுதி இருப்பார். நம்மில் எவ்வளவு பேருக்கு பிறப்புறுப்பில் போடப்படும் தையல் பற்றி தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. முடிந்தால் அந்த புத்தகத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள் எத்தனை எத்தனை கஷ்டங்களை கடந்து இன்று பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பாலைவனத்தில் கூட ஒரு பூ மலரத்தானே செய்தது.
சமீபத்தில் நான் எழுதிய சரஸ்வதிக்கு என்ன ஆச்சு நாவல் கூட கழிப்பிட வசதி இல்லாத பள்ளிகளில் மாதவிடாய் காலங்களில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்களும் அதன் மூலம் அந்த குழந்தைகள் அனுபவிக்கும் பிரச்சனைகளையும் கூறியிருக்கிறேன்.
பெண்களின் பிரச்சனைகளை எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் எழுதிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். சென்று சேர வேண்டிய இடமும் அதிகம். தொடர்ந்து எழுதுவோம். இது பற்றிய மாபெரும் விழிப்புணர்வை வளர்ந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினரிடம் ஏற்படுத்துவோம். குறிப்பாக ஆண் குழந்தைகளிடம்.
உரையாடலை தொடர்வோம்…
An excellent article on the topic, highlighting how Period is being tgreated by the uneducated society.
1. Initially human-beings did not know, Sex led to the creation of babies in the woman’s body, as there was a gap of around 9 months between both of them. It took a long time for people to understand the association – the cause and the result – sex resulted in birth.
2. Anytime people got hurt or fell down or met with an accident, that had resulted in blood coming out of the body, causing pain along, they became fearful and uncomfortable.
When people saw blood coming out of the little girl’s body, they associated pain with it. As they didnt like it, they added a taboo to it. Being scared and not wanting to see anything associated with blood, they sent the girl away from home to a secluded place.
Both were wrong:
In those good old days, not knowing the association of sex with birth was wrong.
Today, associating blood with pain and shunning the girl away is also wrong.
As Neil deGrasse Tyson used to say, ‘Science alone can bring people out of all these kinds of superstitious mind-set’.
Happy to these beautiful articles creating scientific awareness in the minds of people – both men and women.
I look forward to the next chapter.
Kudos to the author Ms J Saritha.
சாவ்பாடி.அதிர்ச்சியான தகவல் தோழர்.
இன்னும் எத்தனை கொடுமைகள் வெளிவர வேண்டியுள்ளனவோ.
எழுதுங்கள் தோழர்
தேவையான விழிப்புணர்வு கட்டுரை .என்னைப் போன்ற படித்தவர்களிடம் கூட மூடப்பழக்க வழக்கங்கள் இந்த விஷயத்தில் படிந்து இருக்கின்றன .சிறிது சிறிதாகத் தான் மாற முடிகிறது தொடருங்கள் சரிதா!வாழ்த்துகள்.🌷💐
சாவ்பாடி…புதிய சொல் (எனக்கு ). தரவுகளின் அடிப்படையில் சிறப்பான கட்டுரை சரிதா மா❤️
மிக அருமையான கட்டுரை டியர்..மாதவிடாய் பற்றிய புரிதல் பெண்களுக்கே அதிகம் இல்ல..அதுவும் தவிர பேசக்கூடாத பொருளாக இதைப் பார்க்கிறார்கள்..ஆனால் பேச வேண்டிய முக்கியமான விசயம் இது..குறிப்பாக ஆண் குழந்தைகளிடம் பேச வேண்டும்..பெண்ணின் வலியை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..வாழ்த்துகள் டியர் ♥️💐💐