காடழித்தலும் காலநிலை மாற்றமும்

 முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் அரசு வேலை கிடைத்தவர்கள் பெரும்பாலும் மறுத்து விட்டு வேறு  இடங்களுக்கு  செல்வதுண்டு. எப்போதும் மழையும் குளிருமாக இருக்கும் பொள்ளாச்சியில் பெண் எடுக்கவும் கொடுக்கவும் கூட தயங்குவார்கள்.   

தை மாத பட்டிப்பொங்கலின் போது மழை எப்போது நிற்கும் என கவலையுடன் வானத்தை பார்த்தபடிக்கு  பதின்பருவம்வரை நாங்கள் காத்திருந்தது  பசுமையாக நினைவிலிருக்கிறது. பொங்கலின் குதூகலங்களை  மழை இல்லாமலாக்கிவிடுமோ என்னும் கவலை பொங்கல் பண்டிகையின் முதல்நாளிலிருந்தே எங்களுக்கெல்லாம் இருக்கும். 17ம் நூற்றாண்டின் ’’ரெயின் ரெயின் கோ அவே’’ என்னும் சிறார் பாடல் இப்படித்தான் உருவாகி இருக்கக்கூடும் . 

பருவ மழைக்காலங்களில்  எங்களது  தோப்பை சுற்றி ஓடும் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் நாங்கள் மாட்டுவண்டியுடன் பலமுறை சிக்கியிருக்கிறோம்.

 மழை நாட்களில் காட்டுக்கிணறுகள் நிறைந்து கடவோடி சாலையெங்கும் சிற்றாறுகள் பெருக்கெடுத்திருக்கும். வீட்டு மதில்களில் ஓட்டுக்கூரைகளில் படுவப்பாசிகள்  பசும்பட்டுப் போர்வைபோல வளர்ந்திருக்கும். 50 அடி ஆழமுள்ள   எங்கள் வீட்டுக்கிணறு பல முறை நிறைந்து வழிந்து, கைகளால் கிணற்று நீரை அளைந்து விளையாடியிருக்கிறோம். 

அப்படி பருவமழை பொய்க்காதிருந்து பொருளாட்சி நடந்து செழித்திருந்த அதே  பொள்ளாச்சியில் கடந்த 5 மாதங்களில் விசும்பின் ஒரு துளி கூட வீழாமல் அசாதாரணமான வெப்பம் நிலவுகிறது.

42 பாகை வெப்பம் பொள்ளாச்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. காலை எழுந்து நாளை துவக்குகையிலெயே 32 பாகை வெப்பமிருந்த இந்த சில மாதங்கள் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையின்மையை உண்டாக்கி விட்டது.   அடுத்த சந்ததியினருக்கு எதை விட்டுவிட்டு போகப்போகிறோமென்னும் கேள்வி பேருருவம் கொண்டு எதிரில் நிற்கிறது

வெப்பம் தாளமுடியாமலாகி பொள்ளாச்சியில் பல நூறு வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது, ஏராளமான தென்னைகளும் பனைகளும் உச்சி கருகிச் சாய்ந்தன, வானம்பார்த்த பல வெள்ளாமைகள் வீணாகின.  

பொள்ளாச்சியின் காலநிலை மெல்ல மெல்ல சீர்கெட்டதற்கு பல காரணங்களை சொல்லலாம்.  கோவை  பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப்பணிகளுக்காக தொடர்ந்து நூற்றுக்கணக்கில்  முதிர்ந்த பெருமரங்கள் வெட்டப்பட்டதும், ஏராளமான நிலப்பரப்பில் உண்டாக்கிய தென்னை ஒருமரப்பயிரிடுதலும் (Monoculture) முக்கிய காரணங்கள்.  

ஒரு பிரதேசத்தின் பலவகைப்பட்ட தாவரங்களை அழித்துவிட்டு பொருளாதார காரணங்களுக்காக ஒரு பயிரை மட்டும் தொடர்ந்து  பயிராக்குகையில் அந்த நிலப்பரப்பின் நீர்ச்சுழற்சி (Water cycle) வெகுவாக மாற்றமடைந்து அச்சூழல் சமநிலையை இழந்து விடுகிறது.

ஒரு நிலப்பரப்பில் பல வகையான தாவரங்கள் வளர்கையில் அவற்றின் வேர்கள் ஒவ்வொன்றும் நிலத்தடியில் வேறு வேறு ஆழங்களில் இருப்பதால் நிலத்தடி நீரின் பல அடுக்குகளிலிருந்து அவை நீரை எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். சேமித்து வைத்த நீர் வறண்ட காலங்களில் உபயோகப்படும். 

தனிமரப்பயிரிடல் இந்த சாத்தியங்களை முற்றாக இல்லாமல் செய்துவிடுகின்றது. ஏனெனில் ஒரே மாதிரியான வேர் ஆழம் கொண்டிருக்கும் ஏராளமான மரங்கள் நிலத்தின் குறிப்பிட்ட அடுக்கில் இருக்கும் நீரை மட்டுமே நம்பி இருக்கின்றன.  

கடல், நிலம், வளிமண்டலம் என  தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் நீர் சுழற்சியில் தனிமரப்பயிரிடுதல் உண்டாக்கும் விளைவுள் மிக முக்கியமானவை. 

ஒரே மாதிரியான மரங்கள் விரிந்த நிலப்பரப்புகளில் பயிராகும்போது அந்த பிரதேசத்தின்  இயற்கை பேரிடர்களையும்,  பயிர்களில் உண்டாகும் நோய் தாக்குதல்களையும்   எதிர்த்து நிற்கும் ஆற்றலை அச்சூழல் இழந்துவிடுகின்றது.  காடுகளை அழித்து தனிமரங்களை பயிரிடுகையில் அந்த நிலப்பரப்பின் நீர் சேமிக்கும் திறனும் வெகுவாக குறைந்து விடுகிறது

எனவேதான் வறட்சியான காலங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை உண்டாகின்றது. சில வருடங்களாக தனி மரப்பயிரிடல் நடக்கும் பகுதிகளில்  மழைக்காலங்களில் கூடுதல் வெள்ளமும், பருவமழை பொய்த்து  கடும் வறட்சியும் உண்டானது இதனால்தான்.

இந்த குறிப்பிட நிலப்பரப்புக்கள் இந்த சூழல் மாறுபாட்டால் பேரிடர்களை அடிக்கடி சந்திக்கும் பிரதேசங்களாகி விட்டிருக்கின்றன.

கோவை பொள்ளாச்சி  நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகளின் போது நூறும், ஐம்பதும் வயதான நூற்றுக்கணக்கான பெருமரங்கள்  எளிதாக வெட்டிச்சாய்க்கப்பட்டன.  பலவீனமான எதிர்ப்பு கூட எந்த துறையிலிருந்தும் இதற்கு எழவில்லை

ஒரு சில பெருநிறுவனங்கள்  வேருடன் பெயர்த்தெடுத்த சில  மரங்களை எடுத்துச்சென்று அவர்களின் வளாகத்தில் நட்டன எனினும் அவை எதுவும்  பிழைக்கவில்லை. மாதக்கணக்கில் வான் பார்த்தபடி சாலையோரம்  கிடந்தன பெருமரங்களின்  பிரம்மாண்ட வேர்ப்பகுதிகள்

6 மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி முத்தூர் சாலையில்  50 க்கும் மேற்பட்ட பெருமரங்கள்,  (ஒவ்வொன்றும் நான் சிறுமியாக இருக்கையிலேயே பெருமரங்களாக இருந்தவை, அனேகமாக அனைத்துமே 100 ஆண்டுகளை கடந்தவை) அனைத்தும் சாலை விரிவாக்கம் என்னும் பெயரில் முழுக்க வெட்டி அகற்றப்பட்டன. இன்று வரை அச்சாலையில் எந்த விரிவாக்கமும் செய்யப்படவில்லை இருகிராமங்களை இணைக்கும் அச்சாலை விரிவாக்கம் செய்யவேண்டிய அத்தனை முக்கிய வழிச்சாலையும் அல்ல. 

தற்காலிக லாபத்தின் பொருட்டு வெட்டப்பட்டிருக்கும் அப்பெருமரங்கள் எல்லாம் சில லட்சங்களாகியிருக்கக்கூடும். அச்சாலையெங்கும் இன்றும் வீழ்ந்து கிடக்கின்றன   காரணமின்றி வெட்டப்பட்ட மரங்களின் ஒரு உணவு மேஜையின் அகலம் கொண்ட அடிவேர்க்கட்டைகள்.

மார்ச்சின் காற்றும், ஏப்ரலின் மழைச்சாரலும் மே மாதத்தின் மலர்களை திறக்கும் என்னும் பிரபல சொற்றொடர்  சென்ற பல வருடங்களாக பொய்த்து விட்டது. ஆடிப்பட்டம் தேடி எதுவும் விதைக்கப் படவில்லை, தை தான் பிறந்தது வழியொன்றும் பிறக்கவில்லை. 

தீவிரமடைந்துவரும் காலநிலை மாற்றத்தினால் சென்னையை மூழ்கடித்த மாமழையை, கூட்டம் கூட்டமாக ஒட்டகங்களை அடித்துச்சென்ற பாலையின் பெருவெள்ளத்தை, பருவத்தே பயிர்செய்யமுடியாத கடும் வறட்சியை  நாம் சமீப காலங்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மழை இல்லாமல் போவதற்கும் மரங்கள் வெட்டப்படுவதற்கும் இருக்கும் மிகநேரடியான தொடர்பை ஒருவரும் அறிந்திருப்பதில்லை  இப்படி மரத்தை  வெட்டியவர்களும், மரங்கள் வெட்டப்படுகையில்  வேடிக்கை பார்த்தவர்களும், ஆட்சேபிக்காதவர்களும், மரங்களை வெட்டி கிடைத்த பணத்தை அனுபவித்தவர்களுமாகத்தான் குடிநீர் பற்றாக்குறைக்காக குடங்களுடன் சாலை மறியலும், மழை வேண்டி வருண ஜெபமும் செய்கிறார்கள்

பொள்ளாச்சியின் அணைகளும் வாய்க்கால்களும் முற்றிலும் வறண்டு  காய்ந்து போனபின்னர் கோவில்களில் கூழ் ஊற்றி  மழையை வேண்டிக்கொண்டார்கள் . பொள்ளாச்சி அருகே இருக்கும்தெய்வகுளம் காளியம்மன் கோவிலில் ஒரு சிறுமி அருள் வந்து மூன்று நாட்களில் மழை வருமென்றாள் ஆனால் வரவில்லை. தெய்வத்தின் வாக்கும் பொய்த்துப் போனது.

பல்வேறு பொருளாதார காரணங்களுக்காக மரங்களை வெட்டி அகற்றுதலும், காடழித்தலும் உலகெங்கிலும் தொடர்ந்து நடக்கிறது.

உலகெங்கிலும் தீவிரமாகி வரும் பருவ நிலை மாற்றங்களின் வேகத்தை குறைக்கவேண்டும் வாழிடப்பற்றாக்குறையால் அழியவிருக்கும் காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும், எட்டு பில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்னும் தற்போது உலகு எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான பெரிய சிக்கல்களுக்கான தீர்வில் நிச்சயம் மரங்களின் பங்களிப்பு இருக்கிறது

 எனினும் பெருமளவில் மரங்கள் அழிக்கப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

காடழித்தல் என்பது  இயற்கையாகவே உருவாகும் காட்டுத்தீயினால் மரங்கள் அழிவதல்ல. தேயிலை காபி போன்ற மலைப்பயிர் தோட்டங்களையும் வணிகக்காடுகளையும் அழிப்பதையும் இது  குறிப்பிடுவதில்லை. மனிதர்களின் பல பொருளாதார காரணங்களுக்காக இயற்கையான பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்திருக்கும் காடுகள் அழிக்கப்படுவதைத்தான்  காடழித்தல் என்று குறிப்பிடுகிறது.

 கடந்த 8000 வருடங்களில் மனிதர்களால்  விவசாயநிலங்களை உருவாக்கும் பொருட்டு பூமியின் பாதியளவு காடு அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் காடழித்தலின் வேகம் மிக மிக கூடியிருகிறது என்பது மிகவும் கவலையளிக்கும் ஒன்று

பூமியின்  31% நிலப்பரப்பை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் காடுகளே உலகின் நீர்த்தேவைக்கு பிரதான காரணிகளாக இருக்கின்றன.

 உலகளவில் 300-லிருந்து 350 மில்லியன் மக்கள் காடுகளுக்கருகிலும் காடுகளை சார்ந்தும் வாழ்கிறார்கள். ஒரு பில்லியன் மக்கள் காடுகளின் விளைபொருட்களைக் கொண்டே வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் பல லட்சம் பேருக்கும் காடுதான் வாழ்வாதாரமாக இருக்கிறது. லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் நேரடியாக காடுகளில் அச்சூழலைசார்ந்தே வாழ்கிறார்கள்.

மழைப்பொழிவில், மண் பாதுகாப்பில், வெள்ளத்தடுப்பில் புவி வெப்பமாவதை தடுப்பதில்  காடுகளின் பங்கு இன்றியமையாதது.

 உலகின் மொத்தப்பரப்பளவில் சுமார் 30 % காடுகளால் ஆனது ஆனால் அவை மிக அபாயகரமான வேகத்தில் அழிந்துகொண்டே இருக்கின்றன. 1990 களிலிருந்து நாம் சுமார் 420 மில்லியன்  ஹெக்டேர் காடுகளை(100 கோடி ஏக்கர்) முற்றிலுமாக இழந்திருக்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் காடுகள் சூழ்வெளியிலிருந்து சுமார் 2 பில்லியன் மெட்ரிக் டன் கார்பனை தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. காடுகளின் மரங்கள் சூழலில் இருக்கும் கரியமில வாயுவை உறிஞ்சி அதை  கார்பனாக  மாற்றி கிளைகள், இலைகள், மரத்தண்டு, வேர்கள் மற்றும் நிலத்தில் சேமிக்கிறது. இந்த கார்பனை தேக்கி வைக்கும் காடுகளின் பணி காலநிலை மாற்றத்தை வெகுவாக மட்டுப்படுத்துகிறது. மிதவெப்ப காடுகளை காட்டிலும் வெப்பமண்டலக்காடுகளே அதிக கார்பனை தேக்கி வைக்கின்றன

கடந்த 50 வருடங்களில் அமேஸான் மழைக்காடுகளில் 17% த்தை இழந்து விட்டிருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில்  பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டன. வருடத்திற்கு 10 மில்லியன் ஹெக்டேர் காடழிப்பு 2015-லிருந்து 2020-ற்கு இடையில் மட்டும் நடந்தது. இதில் பெரும்பங்கு சோயா மற்றும் எண்ணெய்ப் பனைக்காக அழிக்கப்பட்டதுதான்.  இறைச்சிக்கான பன்றிகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாக அளிக்கத்தான் சோயாப்பயிர்  அழிக்கப்பட்ட காடுகளில் பயிரிடப்படுகிறது  

மிகச்சிறிய பொருளாதார லாபத்தின் பொருட்டு செல்வாக்குள்ளவர்களால் உலகநாடுகளெங்கும் மரங்கள் வெட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும்  சிறுகச்சிறுக பலநாடுகளில் தொடர்ந்து மரம்வெட்டுதல் நடக்கையில் அதன் விளைவு காடழிதலின் விளைவுகளுக்கு இணையானதாகிவிடுகிறது

இப்போது புழக்கத்தில் இருக்கும் விவசாய முறைகளும் தொழிற்சாலைகளுக்கு  அடுத்தபடியாக பசுங்குடில் வாயுமிழ்தலை செய்கின்றன. இரசாயன உரங்களை அதிகம் உபயோகிக்கும் பயிர்ச்சாகுபடி முறைகளினால் மீத்தேன் நைட்ரஸ் ஆக்ஸடு ஆகியவை சூழலில் வெளியேறுகின்றன.

பசுங்குடில் வாயு உமிழ்வு என்னும்  பேராபத்துடன் பல உயிரினங்களின் வாழ்விட அழிப்பு, பழங்குடியினரின் வாழ்வாதார அழிப்பு, சூழல் சமநிலை குலைப்பு போன்ற பலவற்றிற்கும்   காடழித்தல், காரணமாகி விடுகின்றது. கொசுக்களால் மனிதர்களுக்கு பரவும் நோய்களும், காபி இலைத்துருநோயான ரோயா போன்ற பெருங்கொள்ளை நோய்களும் காடழித்தலினாலும் புவி வெப்பமடைந்ததினாலும் உண்டான  மறைமுகமான பாதிப்புக்கள் தான்

காகிதத்திற்கும், மரக்கட்டைத்தேவைகளுக்குமாக உலகின் எல்லா காடுகளிலும் கணக்கற்ற மரங்கள் வருடா வருடம் வெட்டப்படுகின்றன. மரம் வெட்டுபவர்களில் சிலர் கள்ளத்தனமாக அடர் காடுகளுக்குள்ளும் பாதையமைத்து காடழித்தலை மேலும் விரைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காடுகள் நகர விரிவாக்கதின் பொருட்டும் வேகமாக அழிந்து கொண்டு வருகின்றன.

உலகநாடுகள் அனைத்திலும் தொழிற்சாலைகள் ஏராளமான பசுங்குடில் வாயுக்களை சூழலில் வெளியேற்றுகின்றன. குறிப்பாக  நிலக்கரித் தொழிற்சாலைகள்  ஒவ்வொருநாளும் ஏராளமான கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. உதாரணமாக நாளொன்றுக்கு 34,000 டன் நிலக்கரியை எரிக்கும் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஷீரர் (Scherer)  ஒவ்வொரு வருடமும்  25 மில்லியன் டன் கரியமில வாயுவை   சூழ்வெளியில் கலக்கிறது.

காடழித்தலால் மற்றுமோர் ஆபத்தும் இருக்கிறது.  வாழிடங்களை இழந்த காட்டு விலங்குகளால் மனிதர்களுக்கு  60 % வைரஸ் உள்ளிட்ட தொற்று வியாதிகள் உருவாகின்றன. இயற்கையான வனச்சூழல் அழிந்து மனிதர்களுக்கான வாழிடங்கள் காடுகளின் எல்லையை தாண்டுகையில் விலங்குகளால் மனிதனுக்கு உண்டாகும் நோய்களும் பெருகுகின்றன.

2014-ல் வடக்கு ஆப்பிரிக்காவில் காடழிந்ததால் வாழிடம் இழந்த பழந்தின்னி  வவ்வால்கள் ஊருக்குள் நுழைந்து மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை கடித்ததால், பரவிய எபோலா வைரஸ் சுமார் 11,000 மக்களை காவு வாங்கியது

1997-ல் இப்படி இந்தோனேசியாவின் காடுகள் விவசாயப் பயிர் சாகுபடிக்காக பெருமளவில் நெருப்பிட்டு எரிக்கப்பட்டபோது அங்கிருந்த மரங்கள் வெப்பத்தினால் கனியளிக்க முடியாமல் ஆனது. 

அப்போது உடலில் இருந்த கொடிய நுண்ணுயிர்களுடன் பழந்தின்னி வவ்வால்கள் உணவுக்காக வேறு வழியின்றி ஊருக்குள் நுழைந்தன இந்த வவ்வால்கள் மலேசிய பழப்பண்ணைகளுக்குள் வாழத்தொடங்கிய சிறு காலத்திலேயே அவை கடித்துத் துப்பிய பழங்களை உண்ட  இறைச்சிக்கென வளர்க்கப்பட்ட பன்றிகள் நோயுற்றன. 

பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கும் நோய் பரவி 1999ல்- 265 பேருக்கு தீவிரமான மூளைவீக்கம் உண்டாகி அவர்களில் 105 பேர் மரணமடைந்தனர்.  நிபா வைரஸால் உண்டாகிய  இந்த முதல் சுற்று மரணங்களுக்குப் பிறகு தென்கிழக்காசியாவில் அதன் பாதிப்புகள் தொடர்ந்தன.

வெப்பமண்டலங்களை சுற்றி இருக்கும் பழமையான காடுகள் பயிர்ச் சாகுபடிக்கென ஏராளமாக அழிக்கப்படுகையில் காடுகளில்  சேகரிக்கப்பட்ட கார்பன் மீண்டும் கரியமில வாயுவாக  சூழலில் வெளியிடப்படுகிறது.  

 காடழித்தல் போன்ற   பூமியின் நிலப்பரப்பில் உண்டாகும் பெருமளவிலான மாற்றங்கள் 12-20% பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வை அதிகரிக்கின்றன. பசுங்குடில் வாயுக்கள் அகஊதா கதிர்களைத் தடுத்து நிறுத்திவிடுவதால் புவி மேலும் வெப்பமாகிறது. 

1850-லிருந்து 30% கரியமில வாயுமிழ்வு காடழித்தலினால் மட்டுமே உண்டாயிருக்கிறது. பெருமளவிலான காடலித்தலினால்தான் வடஅமெரிக்காவிலும் யுரேஷியாவிலும் வெப்ப அலைகள் உண்டானதை அறிவியலாளர்கள்  உறுதி செய்திருக்கிறார்கள்.  காடழித்தல்தான் தென்கிழக்காசியாவின் கரியமில வாயு உமிழ்வுக்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

2020-ல் உலகக்காடுகள் அழியும் வேகம் 21 % அதிகமாகிவிட்டிருக்கிறது என்கிறது அமேஸான் மழைக்காடுகள் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனம்

மலேசியா, இந்தோனேஷியாவின் காடுகள் எண்ணெய்ப்பனை சாகுபடியின் பொருட்டு வேகமாக அழிக்கப்படுகின்றன. மலேசியாவிலும் இந்தோனேஷியாவிலும்    பெரும்பாலும் அனைத்து உபயோகப்பொருட்களிலும் பனை எண்ணெய் கலந்திருக்கும்

காட்டு மரங்களின் இலைப்பரப்பினால் மட்டும் சுமார் 23 சதவீத காலநிலை மாற்றத்தைத் தணிக்க முடியும். ஆனால்  காட்டின் தரைப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் வராமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மரங்களின் இலைப்பரப்புக்கள் மரங்களை வெட்டும்போது இல்லாமல் போவதால் அந்த இடைவெளியில் காட்டின் உள்ளே நுழையும் சூரியனின் வெப்பம் அங்கே வாழும் பல தாவர விலங்கு உயிரினங்களுக்கும்,  மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருக்கும் சிறு பூச்சிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.

காடழித்தலால் காடுகள்  எடுத்துக்கொண்ட கார்பனின் அளவைவிட சூழலில் வெளியேற்றும் கார்பனின் அளவு அதிகரிக்கிறது. அதாவது  கார்பன் தேக்கிடங்களாக (Carbon sink) இருக்க வேண்டிய காடுகள் கார்பனை வெளியிடும் முக்கிய காரணிகளாகி (Carbon source) விடுகின்றன.

புதைப்படிவ எரிபொருள்கள் எரிக்கப்படுவது, காடழிவதால் கார்பன் தேங்கிடங்கள் சிதைவது  போன்ற செயல்பாடுகளால் இப்போது மீதமிருக்கும் காடுகளால் எடுத்துக் கொள்ளப்படுவதை காட்டிலும் அதிக அளவு கரியமில வாயு சூழலில் சேர்கிறது.

அமேஸான் மழைக்காடுகளின் தென்கிழக்கு பகுதிகளில் எவ்வளவு கார்பன் சேகரமாகிறதோ அதற்கு இணையாகவே கார்பன் அங்கிருந்து சூழலில் வெளியேறுகிறது.

  2015—2017 க்கு இடைப்பட்ட காலத்தின் வெப்ப மண்டல காடழித்தல் மட்டும் வருடத்திற்கு  4.8 பில்லியன் டன் கரியமில வாயுவை சூழலில் வெளியேற்றி இருக்கிறது.   இப்போது சூழலில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்திருக்கிறது.

வறட்சி, வெப்பமண்டல புயல், பாலையாகுதல் மற்றும் கடுங்கோடைக்காலம் ஆகியவை உலகெங்கிலுமே அதிகரித்துக் கொண்டு வருவதன் நேரடிக்காரணமும் இதுதான். மேலும் மேலும் காடுகள் அழிக்கப்படுவது மேலும் மேலும் காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்துகிறது.

 உலகின் 80 சதவீத தாவரங்களும் விலங்கினங்களும் காடுகளில்தான் வாழ்கின்றன. காடழிதலால் இவற்றில்   பல உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

 .

நாம் சுவாசிக்கையில் வெளியேற்றும் கரியமில வாயுவையும், மனிதர்களின் பல்வேறு செயல்களால் வெளியேற்றப்படும் பசுங்குடில் வாயுக்களையும் எடுத்துக்கொள்ளுவது உள்ளிட்ட பல பயன்கள் நமக்கு மரங்களால் கிடைக்கின்றன. மிகச்சிறிய பொருளாதாரப் பலன்களுக்காக,காடுகளும் மரங்களும்  அழிக்கப் படுகையில் அவை அளிக்கவிருக்கும்  நெடுங்காலத்திற்கான  முக்கியமான சூழல் பங்களிப்புக்களும் அவற்றுடன்  சேர்ந்தே அழிகின்றன

மேய்ச்சல், விவசாயம், சுரங்கம் தோண்டுதல் ஆகியவற்றிற்காக மட்டுமே இதில் பாதியளவு காடுகள் அழிக்கப்படுகின்றன. பிரத்யேகமான காட்டு நடவடிக்கைகள், காட்டுத்தீ, நகரமயமாக்கல் ஆகியவை மீதமிருக்கும் காடுகளை அழிக்கின்றன

தென்னமரிக்காவின் அமேஸான் பகுதி  மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ பகுதி மற்றும் தென்கிழக்காசியாவில் தான் உலகின் மாபெரும் மழைக்காடுகள் இருக்கின்றன. இந்த பிரதேசங்களில் நடைபெறும் காடழித்தலின் விளைவுகள் புவிவெப்பமடைதலில் குறிப்பிட்ட பங்காற்றுகின்றன

பிரேசிலின் காடழித்தல் உருவாக்கும் பசுங்குடில் வாயுமிழ்வு 2020-ல் மிகவும் உயர்ந்திருந்தது.   நாடோடி வேளாண்மை முறை எனப்படும் மரபான (traditional shifting cultivation) விவசாய முறை நடைமுறையில் இருப்பதால் காங்கோ பள்ளத்தாக்கில் காடழித்தல் மற்ற இரு பிரதேசங்களைக் காட்டிலும்  சற்றுக்குறைவு.

 தொழில்துறை வளர்ச்சி மிகஅதிகமாக இருக்கும் சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்காதான் உலகின் மிக அதிக பசுங்குடில் வாயு வெளியேற்றுகின்ற  ( 80 % மற்றும் 70% ) முதலிரண்டு நாடுகளாக இருக்கின்றன.  இந்தோனேசியா மற்றும் பிரேசில், மூன்று மற்றும் நான்காவது இடங்களில் இருக்கின்றன.

காலநிலை மாற்றத்தின் வேகத்தை மட்டுப்படுத்த நமக்கிருக்கும் ஒரே வழி மீதமிருக்கும் காடுகளை பாதுகாப்பதும் மேலும் மரங்களை நட்டு வளர்ப்பதும்தான். இப்போது நட்டுவைக்கும் மரங்களாலான காடுகள் குறைந்தது 19-20 வருடங்கள் ஆனபிறகுதான் 5%  கரியமில வாயுவை தேக்கிக்கொள்ளத் துவங்கும் என்பதிலிருந்து வளர்ந்த மரங்களை வெட்டிச்சாய்ப்பதின் ஆபத்துகளை உணரலாம்.

ஏற்கனவே சுற்றுலா என்னும் பெயரில் மலைவாசஸ்தலங்கள், பல்லுயிர்ப்பெருக்கு நிறைந்த பகுதிகளை குப்பை மேடாக்கி இருக்கிறோம். காடுகளையும் முழுக்க அழித்துவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்ல மாசும், நோயும், கிருமிகளும் நிறைந்த உலகு மட்டும்தான் இருக்கும்.

  இறைச்சி உணவுகளுக்காக சோயா பயிரிடுதலும், சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் போன்ற திண்பண்டங்களுக்காகவும் ஷாம்பு போன்ற  செயற்கை அழகுப்பொருட்களுக்கான தயாரிப்புக்கான எண்ணெய்ப் பனை வளர்ப்பும் காடழிதலில் பெரும் பங்காற்றுவதால் நம் உணவு மற்றும் வாழ்க்கை முறையும் புவிவெப்பமாதலில் ஒரு காரணம்தான்

2021-ல் நடந்த  COP26 மாநாட்டில் (UN Conference of Parties) உலகின் 85% காடுகளை கொண்டிருக்கும் 100 நாடுகள் 2030-க்குள் காடழித்தலை முழுக்க நிறுத்திவிடுவதாக உறுதிபூண்டிருப்பது ஒரு நல்ல செய்தி

 உலகமே முடங்கிக்கிடந்த இரண்டு வருடங்ளுக்கும் அக்காலத்தில் நாம் பறிகொடுத்த லட்சக்கணக்கான உயிர்களுக்கும் காரணமாயிருந்த கோவிட் வைரஸ் பெருந்தொற்று இயற்கையுடனான நமது உறவில் உண்டாகி இருக்கும் மாற்றங்களால்தான் உருவானது. இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது இது நமக்கான கடைசி வாய்ப்பு.

இயற்கையை மட்டுமல்ல நமது எதிர்காலத்தையும் பாதுகாக்கவே காடழித்தலை உடனே நிறுத்த வேண்டி இருக்கிறது ஆரோக்கியமான காடுகளே ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதிசெய்கின்றன.

2011 -ம் ஆண்டு சர்வதேச வன ஆண்டாக அறிவிக்கப்பட்டதும் காடழிப்பின் விளைவுகளை உலகநாடுகள் கவனத்துக்குக் கொண்டு வரும் பொருட்டுத்தான். 

தீர்வுகள்:

காடு உருவாக்கம், மீள் காடாக்குதல் இயற்கை மீளுருவாக்கம் இவற்றின் மூலமாக மட்டுமே காடழித்தலால் உருவாகி இருக்கும் காலநிலை மாற்றங்களை படிப்படியாக குறைக்கமுடியும்

  1.  காடு உருவாக்கம் என்னும் Afforestation  குறைந்தது 50 வருடங்களுக்காவது  காடுகள் இருந்திராத இடங்களில் காடுகளை  உருவாக்குவதைக் குறிக்கிறது.  
  2. மீள் காடாக்குதல், என்னும். Reforestation   காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் மரங்களை நட்டுவைத்து மீண்டும் காட்டை உருவாக்குவது
  3.  இயற்கை மீளுருவாக்கம் என்னும் Natural regeneration, மரங்களை நட்டுவைப்பதில்லை, மாறாக சேதமுற்ற காடுகளின் மரங்களின் வெட்டப்பட்ட அடிப்பகுதிகளில் coppicing எனப்படும் மறுதாம்பு துளிர்த்தலுக்கு உதவுவது, மலர்ந்து கனி அளிக்காமல் இருக்கும் மரங்களை மீண்டும் இனப்பெருக்கதுக்கு தயாராக்குவது போன்ற  செயல்பாடுகளின் மூலம் காடுகளை   இயற்கையாக மீட்டெடுப்பது

இம்மூன்று செயல்பாடுகளையும் மிகக்கவனமாக செயல்படுத்தினால் மட்டுமே காடழித்தலின் ஆபத்துக்களை சற்றேனும் ஈடுசெய்யமுடியும். ஏனெனில் காலநிலை மாற்றதுக்கெதிரான போரில் நம்மை முற்றாக தோற்கவைப்பது காடழித்தலாகத்தான் இருக்கும் 

இயற்கைச் சூழல்களை பேணிப்பாதுகாப்பது,காடுகளை பொறுப்பான முறையில் மேலாண்மை செய்வது, அழிக்கபட்டக் காடுகளை மீண்டும் உருவாக்குவது ஆகியவற்றால் பசுங்குடில் வாயு உமிழ்வுகளை குறைக்கமுடியும். காடுகள் மீளுருவாகப்படுகையில் சூழல்வெளியிலிருக்கும் கரியமிலவாயுவின் அடர்த்தியை வெகுவாகக் குறைக்கமுடியும், இதனால்  புவிவெப்பம் அடைவதையும் தவிர்க்கலாம்.

நிலக்கரி பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்ற புதைப்படிவ எரிபொருள் உபயோகத்தையும் நாம் வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இவையனைத்தையும் செய்யும் போதுதான் காலநிலைமாற்றத்தின் தீவிரத்தைக் கொஞ்சமாவது குறைக்க முடியும்.

2050ல் உலகமக்கள் தொகை 9 பில்லியனை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கையில் மீதமிருக்கும் காடுகளை அழிப்பதை நிறுத்துவதற்கு இணையாக காடுகளை உருவாக்குவதும் நடக்கவேண்டும்.

குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சல், காடுகளைப் பாதிக்காத வகையிலான வாழ்வுமுறை போன்ற காலநிலை மாற்றத்துக்கான பிற தீர்வுகளையும் முயற்சிக்கலாம்.

ஐந்தாவது மாதமாக மழைபொய்த்துப்போன பொள்ளாச்சியில் கோடை மழையாவது வரவேண்டி வீடுகளில்  விநாயகர் சிலைகளை   நீரில் அமிழ்த்தி வைத்திருக்கிறார்கள்.  

யானை முகமும் தும்பிக்கையும் தொப்பை வயிறுமாக நாம் ஒருபோதும் பார்த்தே இராத  ஒரு தெய்வவடிவம் குளிர்ந்தால் மழைவரும் என்று நம்பிக்கை கொள்பவர்களால்,   இருந்த இடத்திலிருந்தபடியே மக்களின் உணவு, உடை,மருந்து, காற்று,மழைநீர், புவிவெப்பத்தை தடுப்பது   என  உயிரினங்களின் சகலதேவைகளையும் பூர்த்திசெய்யும் மரங்களை ஏனோ இறைவடிவமாக காணமுடிவதில்லை.

நினைவில் கொள்ளுங்கள் இந்த கட்டுரை  வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே எங்கேனும் கால்பந்து மைதானத்தின் அளவிலிருக்கும் ஒரு  பெருங்காட்டின்பகுதி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கலாம்.  நாம்  அழிக்க அனுமதித்துக்கொண்டு இருப்பது காடுகளை மட்டுமல்ல நாளைய சந்ததியினரின் வாழ்வையும்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version