கல்வி

1901 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மெட்ராஸ் ராஜதானியில் கல்வி பற்றிய தகவல்கள்..

“1000 பேருக்கு 63 பேர்கள் தாம் எழுத, படிக்க தெரிந்தவர்கள். 1000 பெண்களில் 9 பேர் மட்டுமே எழுத படிக்க தெரிந்தவர்கள். 1000 ஆண்களில் கிறித்தவர்கள் 198 பேரும், முசல்மான்களில் 141 பேரும், இந்துக்களில் 116 பேருக்கும் எழுத படிக்க தெரியும். வேறுவகையில் கூறினால் இந்துக்களில் 94% பேரும், முசல்மான்களில் 93% பேரும், கிறித்தவர்களின் 86% பேரும் படிக்காதவர்கள். அதாவது, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் படித்தவர்கள் 6%மட்டுமே. அதிலும் பெண்கள் 1%க்கும் குறைவு. இதில் இந்துக்களின் நிலைதான் மிகவும் மோசம். அவர்கள்தாம் மக்கள் தொகையில் மிக அதிகமானவர்கள், ஆகப்பெரும்பான்மையினர்.

ஆனால் பிராமணர்களின் 1000பேரில் 308 பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும். பல தலைமுறைகளாக அந்த சாதியினருக்கு மட்டும் அனைத்து அறிவும் வசமாகியிருந்தது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஆட்சி நடந்த போது பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் பிரதிநிதியாக வந்த மெக்காலே பிரபு அதுவரை சமஸ்கிருத வேத பாடசாலைகளுக்கும், அரபி மொழியினை பயிற்றுவித்த மதரசாக்களுக்கும் அரசு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி, வாழ்க்கை கல்விக்கான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து சமூக விடியலுக்கு வழிவகுத்த சமூகப் புரட்சியாளர்கள் பண்டிதர் அயோத்தி தாசர், சிங்கார வேலன், தந்தை பெரியார் போன்றவர்கள் மாநிலம் முழுவதும் பயணித்து பிராமணர் அல்லாத மற்ற சாதியினருக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.”வயிற்றுப் பிழைப்பு, சுயமரியாதை, சுதந்திரம், அன்பு,

பரோபகாரம் முதலியவற்றோடு கண்ணியமாக வாழ்க்கை நடத்த தகுந்த அறிவைத் தரும் கல்வி.- அத்தகைய கல்வியை இலவசமாக வழங்கிட வேண்டும். ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு கல்வி அவசியம். 22 வயது வரை பெண்களுக்கு கல்வி அளித்து வேலை பெறுவதற்குரிய தகுதிகளையும், வருமானம் ஈட்டுவதற்கு வழிவகையும் செய்து தரவேண்டியது இந்நாட்டின் கடமை” என்று தந்தை பெரியார் தமிழகத்தின் தெருத்தெருவாக முழங்கினார். கல்விக் கண் திறக்க காமராசரின் ஆட்சி வந்தது. ஊரெங்கும் ஆயிரக் கணக்கில் ஆரம்ப பள்ளிகள் துவங்கப்பட்டன. மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர மதிய உணவுத் திட்டமும் கொண்டுவரப்பட்டது. இது ஏற்படுத்திய சமூக மாற்றத்தை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு தருகிறது.” தமிழ்நாட்டில் கல்வி பெற்றவர்கள் 39%பேர். ஆண்கள் 51%பேர் என்றால் பெண்கள் 27%பேர். இதனை எழுபது ஆண்டுகளுக்கு முந்திய கணக்கெடுப்புடன் ஒப்பிட்டு பார்த்தால் மாநிலத்தில் ஏற்பட்ட மகத்தான மாற்றம் புரியும்.

ஒன்றிய அரசு இன்னும் 2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. எனவே 2011 கணக்கெடுப்பை எடுத்துக்கொள்வோம். அதன்படி, ‘‘தமிழ் நாட்டில் கல்வி அறிவு பெற்றவர்கள் 80%பேர். ஆண்கள் 87%பேர். பெண்கள் 73%பேர். இது ஒரு மாபெரும் பாய்ச்சல். தமிழகத்தை தொடர்ந்து ஆண்ட அனைத்து அரசுகளுக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக விரித்த அமரர் எம்.ஜி.ஆர் அவர்களையும், உயர் கல்வி வரை இலவச கல்வி வழங்கி, பல புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கி, பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த தலைவர் கலைஞர் அவர்களையும் நன்றியுடன் நினைக்க வேண்டும்.

கல்வி பரவலாக்கப்பட வேண்டியதற்காக பத்து காரணங்களை கல்வியாளர்கள் வரிசைப்படுத்துகின்றனர்.

1) கல்வி தனி மனித வாழ்க்கையை திடப்படுத்துகிறது. (Stability)

2) பொருளாதார பாதுகாப்பை தருகிறது.  (financial security)

3) சமத்துவத்தைத் தருகிறது. (Equality)

4) யாரையும் சார்ந்திருக்க வேண்டாத தற்சார்பின்மையை தருகிறது (self dependency)

5) உங்கள் கனவுகளை வசப்படுத்த உதவுகிறது.

6) பாதுகாப்பான உலகை உருவாக்கக் கல்வி அவசியம்.

7) கல்வி தன்னம்பிக்கையை (confidence ) உருவாக்கும்.

8) கல்வி சமூகத்தில் அங்கீகாரத்தையும், மதிப்பையும் (recognition and respect)

 பெற்றுத் தரும்.

9) ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும்.

10) கல்வி, கல்வியாளர்களையும், அவர்கள் வாழும் சமூகத்தையும் பாதுகாக்கும்.

“கல்வி என்ற ஆயுதத்தால் மட்டுமே மக்களை சமூக அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறச் செய்தும், அடித்தளத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களையும் சமூக, பொருளாதார அரசியலில் மேம்பாடு அடையச் செய்யவும் முடியும்” என்றார் பாபா சாகேப் அம்பேத்கர்.

“கல்வி என்ற மிகவும் சக்தி வாய்ந்த கருவியால் மட்டுமே உலகத்தில் மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வர முடியும். அத்தோடு தனி மனிதனும் தரமான வாழ்வுபெறுவதோடு உலகத்தையும் வளர்ச்சி பெறச் செய்ய முடியும்” என்றார் நெல்சன் மண்டேலா.

“கல்விக் குறைவால் அறிவு சீரழிந்தது. அறிவுக் குறைவால் நல்லொழுக்கம் அழுகியது. நல்லொழுக்க குறைவால் முன்னேற்றம் நின்று போனது. முன்னேற்றம் நின்று போனதால் செல்வம் மறைந்தது. செல்வக் குறைவால் சூத்திரர்கள் அழிந்தார்கள். கல்லாமையிலிருந்தே அனைத்து தீமைகளும் ஊற்றெடுக்கின்றன”என்று எச்சரித்தார் மகாத்மா ஜோதி ராவ் பூலே.

இவ்வளவு பெரும் வரங்களை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கைகளோடும்,  எதிர்பார்ப்புகளோடும் பரவலாக்கப்பட்ட கல்வியும், அது தந்த அறிவும், அறிவின் மூலம் பெறப்பட்ட அறிவியலும், தொழில் நுட்பமும் நம்மையே அழிக்கின்ற சாபங்களாக மாறுகிறதா? என்பதுதான் கல்வியாளர்கள் முன் இன்று நிற்கின்ற பெருங்கேள்வி.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னருள்ள தருமங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர் நிறுத்தல் 

அன்னவாயினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் மகா கவி பாரதியார்.அறவோர் கரங்களில் “புண்ணியம்” ஆக இருந்த கல்வி இன்று “கடைச்சரக்காக” மாறி தெருவெல்லாம் ஏலம் விடப்படும் வியாபாரிகளின் ஏகபோகமாக மாறியுள்ளதே!

அதை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்?

கல்வி தனது சமூக நோக்கையும், அறம் சார்ந்த தன்மையையும், பொதுநலம் சார்ந்த பார்வையினையும் இழந்து, முழுக்க முழுக்க ஒரு சுயநல சமூகத்தை கட்டமைக்கும் காரணியாகிவிட்டது என்ற குற்றச்சாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence),  உயிரியல் தொழில்நுட்பம் (biotech),, மற்றும் தகவல் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட கல்வியினை பொருளாதார வசதி உள்ளவர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில், அவர்களுக்கும் அந்த கல்வியைப் பெற வாய்ப்பில்லாத மக்களுக்கும் இடையில் பெரும் சமூக இடைவெளி (Technological divide) ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கல்வியை பெற்றவர்கள், தங்கள் கைவசம் இருக்கும் கல்வியினை, அந்த கல்வி பெறமுடியாத மக்களை அடித்து சாப்பிடும் “ஆயுதமாக” பயன்படுத்துவதுதான் இன்று நமக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் சோகம்.

ஆன் லைன் மோசடிகள், சமூக ஊடகங்கள் மூலம் பொய் செய்திகளை பரப்பி சமூகங்களுக்கு இடையே வெறுப்பையும், மோதல்களையும் உருவாக்குதல், பெண்கள் -குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பலவீனமானவர்களின் அனுமதியின்றி அவர்களது தனிவாழ்வில் அத்துமீறி நுழைந்து அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தல் அல்லது திருடுதல், போன்ற கயமைத்தனங்களுக்கு சிலருக்கு கிடைத்த கல்விதாம் காரணம் எனும்போது அத்தகைய கல்வி தேவையா என்ற கேள்விக்கும் இன்றைய கல்வியாளர்கள் பதில் காண வேண்டும்.

“படித்த டாக்டரிடம் போனேன். எனக்கு இல்லாத வியாதிக்கு மருந்தெழுதி என் உடல் நலம் கெடுத்தார். 

வழக்கொன்று நடத்த படித்த வழக்கறிஞரிடம் போனேன். அடுத்த வாய்தாவின் போது அவரே கொலை வழக்கில் குற்றவாளியாக ரிமாண்டுக்கு வந்தார்.”

வருமான வரி கட்ட படித்த பட்டய கணக்காளரை பார்த்தேன். வரி ஏன் கட்டவேண்டும் என கேட்டு கள்ளக்கணக்கு எழுதித் தந்தார்.

படிக்காத பக்கத்து கடை அண்ணாச்சி. நேர்மையான நல்ல வியாபாரி. எம்.பிஏ படித்த மகன் போன வருடம் அவரது கடைக்கு வந்தான். அணணாச்சியும் மகனும் இப்போது கலப்பட வழக்கில் கம்பி எண்ணுகிறார்கள்.

மகனுக்கு டியூஷன் வைக்க படித்த ஆசிரியரை வைத்தேன்! படிக்காமலே, தேர்வெழுதாமலே மகனை பாஸ் பண்ண வைத்தார் மகராசன்!

வெளிநாடு போய் படித்து வந்த இஞ்சீனியர் எங்கள் ஊர் ஆற்றில் நூறு கோடிக்கு பாலம் கட்டினான். அமைச்சர் வந்து திறந்த ஆறாவது நாள், முதல் மழையில் பாலம் இருந்த இடமே காணோம்!

மூன்றாம் தெரு மாமா மகன் பொலிடிகல் சயன்சில் பிஹைச்டி, தேர்தலில் நின்றான். படித்தவன் என்று ஓட்டு போட்டேன். ஊரில் ரயில்வே ஸ்டேஷனும், பஸ் ஸ்டாண்டும் தவிர அனைத்தையும் அவன் பேருக்கு மாற்றிக் கொண்டான். இப்போது ஊழல் வழக்கில் ஆறு ஆண்டு சிறை தண்டனை..

இப்போதெல்லாம் படித்தவர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது..

என்று ஒரு புது கவிதை படித்தேன். அதுதான் இன்றைய யதார்த்தமோ என்ற சிந்தனை வந்தது.

கல்வி அறம் சார்ந்த கல்வியாக இருக்க வேண்டும்.

கல்வி பொருள் தேட மட்டுமே என்ற மனநிலை மறைந்து நம் முன்னோர்கள் சொன்னதுபோல் நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உயர்த்துவதாக அமைய வேண்டும்.

தனி மனித ஒழுக்கத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். அத்தகைய கல்வியை வழங்குவதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு.

சென்ற நூற்றாண்டில் கற்பிக்கப்பட்ட கல்விக்கும், இந்த நூற்றாண்டில் கற்பிக்கப்படும் கல்விக்கும் பெரும் வேறுபாடு உண்டு. சென்ற நூற்றாண்டில் படித்த மாணவர்களுக்கு அப்போது உலகில் நடந்துகொண்டிருந்த மாற்றங்களை உள்வாங்கி புரிந்து அதற்கு தகுந்தாற்போல் தங்களை தயார் செய்துகொள்ளும் கால அவகாசம் இருந்தது. இன்றைய தலைமுறை இளைய சமூகத்தினருக்கு அந்த வாய்ப்பு இல்லை. மனித வாழ்கையையே புரட்டிப் போடும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் அடிக்கடி நிகழ்வதாலும், ஒவ்வொரு மணி நேரமும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு சந்தைக்கு வரும் அதி நவீன தொழில் நுட்பங்களாலும் ஒரு “நிலையற்ற தன்மை (Instability) உலகம் முழுவதும் நிலவி வருகிறது.பல வேலை வாய்ப்புகளை நினைத்து தற்போது உயர் கல்வி நிறுவனங்களில் படித்துக்கொண்டிருக்கும் இத்தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு பெரிய தொழில் நுட்ப அதிர்ச்சி (technological shock) காத்திருக்கிறது. வேலை வாய்ப்பு சந்தையில் இன்று இருக்கும் பல வேலை வாய்ப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் நடைமுறையில்  இருக்காது. பல வேலைகளை மனிதர்களை விட மிகச் சிறப்பாக செய்கின்ற ரோபோக்கள் பல நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பதே புரியாத, போய் சேரவேண்டிய இடமும் பாதையும் தெளிவில்லாத சூழ்நிலையில், தெரியாத அந்த பயணத்திற்கு நம் இளைஞர்களை எப்படி தயார் செய்வது என்பதுதான் இன்றைய கல்வி திட்டத்துக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version