ஓடிடி(ஏ) உலகம்…

தொலைக்காட்சி  என்பதே  இல்லாத காலக்கட்டத்தில், மக்கள் எப்படி பொழுது போக்கினார்கள் என்று யோசித்துப் பார்த்தால் ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு. 1980 களில் தான் முதன்முதலில் கருப்பு  வெள்ளை தொலைக்காட்சி பெட்டி அறிமுகமானது. அப்போது பெரும்பாலானோர் வீடுகளில், இது ஒரு அத்தியாவசியப் பொருளாக மாறிப்போனது. ‘தூர்தர்ஷன்’ தான் முதலில் உருவாக்கப்பட்ட சேனல்.  அதில் ஹிந்தியில் விவசாயம், நடனம், இசை நிகழ்ச்சிகள், செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப் பட்டன…

பின்னர் தொண்ணூறுகளில், ஜுனூன், நுக்கட் என ஹிந்தியில் கொடி கட்டின தொலைக்காட்சி தொடர்கள், அதுவும் அந்த ஜுனூன் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியாக ஆரம்பித்த டிவி நிகழ்ச்சிகள், கேபிள், செட் டாப் பாக்ஸ் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் என்று பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று இணைய தளம் மூலம் இயங்கி கொண்டிருக்கும் ஓடிடி வரை வந்துள்ளது. 

இந்த ஓடிடி தளத்தில், “டிஸ்னி ஹாட்ஸ்டார்”, “நெட்ஃப்ளிக்ஸ்”, “ஆஹா”, “அமேசான்” போன்று ஏகப்பட்ட செயலிகள் உள்ளன. நமக்கு வேண்டிய செயலிகளை கட்டணம் கட்டி வாங்கி கொள்ளலாம். ஒவ்வொன்றிலும், பல மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள் என கொட்டிக் கிடக்கிறது.. நாம ஏற்கெனவே பார்த்து ரசித்த தொடர்கள் போக, ஓடிடி காகவே ப்ரத்யேகமா தயாரிக்கப்பட்ட தொடர்களும் எக்கச்சக்கம்…

இதில் விஷயம் என்னவென்றால், வலைதளம் மூலம் இது இயங்குவதால், எப்ப வேண்டுமென்றாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், நாம் பார்க்க விரும்பிய, பாதியில் நிறுத்திய படங்களை, தொடர்களை தொடர்ந்து பார்க்க முடியும்…

ஓடிடி வந்த பின்னர் தான், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், கொரியன் என பல மொழியில் வெளியிடப்படும் தொடர்களை/படங்களை, மொழி பாகுபாடின்றி, துணைத்தலைப்பு உதவியுடன் கண்டு களிக்கும் ஆர்வம் நம்மிடையே அதிகரித்திருக்கிறது…

ஓடிடியில் பிரபலமான தொடர்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

இதில் முதல் இடத்தை பிடிப்பது கொரியன் தொடர்கள் தான். நெட்ஃப்ளிக்ஸில் கொட்டி கிடக்கும் இவற்றுள் ‘எதை பார்ப்பது, எதை விடுப்பது?’ என்ற குழப்பம் வருமாயின் சமூக வலைதளங்களில் போடப்படும் விமர்சனங்களின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்த சில கொரியன் தொடர்கள் “Crash landing on you”, “Put your head on my shoulder”, “Extraordinary Attorney Woo” போன்றவை. கொரியன் நாடகங்களில் காட்டப்படும், அந்நாட்டின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஓரளவு நம்மோடு ஒத்துப் போவதால் தான், நம்மால் அவற்றை ரசிக்க முடிகிறது. முக்கியமாக, அதில் நடிப்பவர்களின் கண்ணாடித் தோலை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. எப்படித் தான் சருமத்தை இத்தனை அழகாகப் பராமரிக்கிறார்களோ! 

இப்பல்லாம் முகநூல், இன்ஸ்ட்டா போன்ற செயலிகளை ஒரு வலம் வந்தாலே போதும், அந்த வார இறுதியில் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை குறித்துக் கொண்டு விடலாம். அப்படி சமூக வலைத்தளங்களில், பலரால் வியந்து பாராட்டப்பட்ட ஹிந்தி வெப் தொடர்கள் தான் “The family man” மற்றும் “Panchayat”. “The family man” முழுக்க முழுக்க ஒரு அதிரடி த்ரில்லர். ஒரு சில தொர்களில், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயங்கரமான எதிர்பார்ப்பை, இயக்குநர் அந்தந்த எபிசோடின் இறுதியில் தூண்டி விடுகின்ற காரணத்தால் தான், ஒரே மூச்சில் முழு சீசனையும் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. “The family man”, “வதந்தி” போன்றவை அவ்வகையைச் சார்ந்தது.

“The family man” அதிரடி சரவெடி என்றால் “Panchayat” அதற்கு நேர்மாறான நகைச்சுவை ட்ராமா. ஒரு பொறியியல் பட்டதாரி, தன் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தால், இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள புலேரா என்ற கிராமத்து பஞ்சாயத்தில் பணிபுரிகிறார். அங்கு நிகழும் சாதாரண சவால்களை அலட்சியப் படுத்தாமல், நேர்மையாக அழகாக சமாளித்து, அந்த கிராமத்து மக்களுக்கு மிகவும் பிடித்தவராகி விடுகிறார். மக்களிடையே அமோக வரவேற்பு பெற்ற இந்த தொடர், தற்போது சீசன் 3 ல் அடியெடுத்து வைத்திருக்கிறது.

இது மட்டுமா? நாம் ஏற்கெனவே பார்த்து ரசித்த தொடர்களைக் கூட ஓடிடியில் மறுபடி கண்டு களிக்கலாம். 1994 ல் என்பிசியில் “Friends” என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்ட, 236 எபிசோடுகளைக் கொண்ட மிகப் பிரபலமான நகைச்சுவைத் தொடர், இதே சிட்காம் வகையைச் சேர்ந்த “Big bang theory”, தமிழில் “ரமணி Vs. ரமணி”, இவை எல்லாம் மலரும் நினைவுகளாய் நம்மை மகிழ்விக்க காத்துக் கொண்டிருக்கின்றன. 

காலம் போகிற போக்கைப் பார்த்தால், வேலைகளுக்கு நடுவே பொழுது போக்கு என்ற நிலை மாறி, பொழுது போக்குகளுக்கு நடுவே, ‘போனால் போகட்டும்’ என்று கொஞ்சமா வேலை செய்யும் நிலை வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை! 

2 thoughts on “ஓடிடி(ஏ) உலகம்…

  1. மிக அழகான, இனிமையான, முழுமையான பதிவு, எழுத்து. வாழ்த்துக்கள் மீனா. 👌👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version