உனக்கு என்னப்பா. வெளிநாட்டு வாழ்க்கை எவ்வளவு ஜாலியா இருக்குற! இந்த மாதிரி பேச்சுக்களை நாம் நிறைய கேட்டிருப்போம். குடும்ப சூழல், கடன் சுமை காரணமாக, தான் குடும்பத்தோடு வாழ வேண்டிய காலங்களையும், தன் இளம் வயதையும் இழந்து, தான் கஷ்டப்பட்டாலும் தன் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக. அனைத்து சுமையையும் தாங்கிக் கொண்டு விமானம் ஏறுகின்றனர் பல ஆண்கள். அதில் நாங்களும் விதிவிலக்கல்ல.
6 வயதிலிருந்து 16 வயது வரை என் அப்பாவிற்கு வெளிநாட்டு வாழ்க்கை, 1990 காலகட்டத்தில் மாதம் ஒரு முறை தொலைபேசியில் பேசுவதே கடினம் தான், தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் தான் தொலைபேசி இருக்கும், அவர்களிடம் கூறி எங்களை அழைத்துப் பேசுவார். ‘அப்பா போன் பேசுறாரு’ என்று தெருவெல்லாம் சொல்லி கொண்டு நானும் என் தங்கையும் சந்தோசமாக ஓடுவோம். மாதம் ஒரு கடிதம், என் தாயே எங்களுக்கு தந்தையானார். சில வருடங்களில் என் திருமணம் ,அன்பான கணவன், அருமையான குடும்பம், அடுத்த வருடமே அழகான மகன், மனநிறைவான வாழ்க்கை…
ஆனாலும் திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்குள்ளேயே முதன்முறையாக பிரிவை சந்திக்க நேர்ந்தது. என் கணவரின் 2004 ஆம் ஆண்டு முதன் முதலில் மலேசிய பயணம். அவர்கள் கூறிய வேலையும் சம்பளமும் இல்லை. கடன் வாங்கி சென்றதால் வேறு வழியின்றி அந்த கடனையும் அடைக்க பெரும் போராட்டம். நினைத்த நேரத்தில் வீடியோ கால் எல்லாம் அப்பொழுது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அதெல்லாம் என்னவென்று தெரியாத காலகட்டத்தில் தான் ஆரம்பித்தது எங்கள் வாழ்க்கைப் பயணம். வாரம் ஒரு முறை, வார விடுமுறை அன்று தொலைபேசி அழைப்பு. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பேசிய பின் கடைசியாக பேசுவோம் (கடைசியாக பேசினால் நிறைய பேசலாம் என்பதால்) நீ இங்கு நலமே, நான் அங்கு நலமா என வாரம் ஒருமுறை கடிதத்தில் தான் அத்தனையும் பரிமாறிக் கொள்வோம். இத்தனை வருடம் கழித்து கிட்டத்தட்ட 18 வருடம் அந்த கடிதங்களை பார்க்கையில் சில தடவை கண்கள் நிறையும், சில தடவை வேடிக்கையாக இருக்கும்.
ஒருவருடம் கஷ்டப்பட்டு நகரத்தினோம் நாட்களை. சொந்த ஊருக்கு வந்ததும் சரியான வேலை இல்லை. கிடைத்த சம்பளத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டினோம். நானும் ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தேன்.
நான்கு தலைமுறை ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக, பண பற்றாக்குறை மட்டும்தான்.. ஆனால் மனதளவில் நிம்மதியாகவும், சந்தோசமாக இருந்தோம் குடும்பத்தினரோடு. மீண்டும் கடன் சுமையை குறைக்க விமானம் ஏற வேண்டிய நிலைமை. இரண்டு வருடம் கழித்து துபாய் பயணம். இங்கும் ஆரம்பத்தில் சரியான வேலை இல்லை, கிடைத்த வேலையை செய்து ஓரளவு வருமானம் ஈட்டி தன் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமை அவருக்கு. மூன்று வருடத்திற்கு பின் ஜூன் 25, 2009 ஆம் வருடம் எனக்கும் துபாய் செல்ல ஓர் வாய்ப்பு கிடைத்தது. அத்தனை சொந்தமும் என்னை வழி அனுப்ப வந்தனர். அனைவரும் என்னைப் பிரியப் போவதை நினைத்து வேதனை அடைந்தனர். என் மகனையும் அவர்களோடு விட்டுவிட்டு நான் மட்டும்தான் சென்றேன். மகனை மற்றும் உறவுகளை பிரியும் பெரும் துக்கத்தோடு & என் கணவரிடம் போய் சேரப் போகிறோமே என்ன ஆனந்தத்தோடு பயணித்தேன்….
முதல் விமான பயணம் திருவனந்தபுரத்திலிருந்து. உள்ளே சென்ற எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் என் அப்பா வயது இருக்கும் ஒருவரிடம் உதவி கேட்டேன்.அங்கு ஆரம்பித்து சில படிவங்களை பூர்த்தி செய்து விமானத்தில் தன் இருக்கைக்கு அருகிலே என்னையும் அமர வைத்து பெல்ட் போட சொல்லித் தந்து (நான்கு மணி நேரம் முதன்முறையாக சொந்த, பந்தம் நண்பர்களைப் பிரிந்து கனத்த இதயத்தோடு கடந்த காலம் மொத்தமும் காட்சியாக கண்முன்னே வந்து சென்றது.) துபாயில் இறங்கி சில ஃபார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்து என் கணவரிடம் என்னை ஒப்படைக்கும் வரை என்னுடனே வந்து ஒரு தந்தையாக எனக்கு பாதுகாப்பு அளித்தார். இத்தனை வருடமானாலும் அவருக்கு நான் நன்றி தெரிவிக்கும் வகையில் எப்பொழுது விமானம் பயணம் என்றாலும் நானே சென்று முதியவர்கள் யாராவது பயணித்தால் அவர்களுக்கு உதவி புரிவேன்.
நான் அங்கு ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்த பின் என் மகனையும் அழைத்துக் கொண்டோம். நான் வேலை பார்க்கும் பள்ளியிலேயே படித்தான். காலை 6:15 மணிக்கு பள்ளி வாகனம் வந்துவிடும் அதிகாலையில் எழுந்து சமையல் செய்து கணவரின் உதவியோடு சில பல வேலைகளை முடித்து பள்ளிக்கு ஓடுவோம். வீட்டிற்கும் பள்ளிக்கும் ஒரு மணி நேரம் பயணம் என்பதால், விட்ட தூக்கத்தை பேருந்தில் தொடர்வேன்.
விடுமுறை நாட்களில் நண்பர்களோடு செலவிடுவோம். இங்கு வாழ்க்கை செலவு அதிகம் என்பதால் கணவருக்கு உதவியாக இருக்க மாலையிலும் டியூஷன் என என் வாழ்க்கை பரபரப்பாக சென்றது. வருடம் இரண்டு மாத கோடை விடுமுறையில் தாயகம் திரும்புவோம். சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல் வருமா? ராஜபாளையத்தில் கால் வைக்கும் போது அப்படி ஒரு ஆனந்தம். இன்றோ தொலைபேசியில் அதிக மணி நேரம் எடுத்து அனைவரிடமும் பேசிக்கொள்கிறோம். ஆனால் அன்று அந்த வாய்ப்பு இல்லாததால் ஊருக்கு சென்று பத்து மாத வாழ்க்கையும் என் உறவினர்களோடும் குடும்பத்தினரோடும் பகிர்ந்து கொள்வதில் அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.
இதில் இருக்கும் ஒரே கஷ்டம் என்னவென்றால் ஊருக்கு வரும்போதும் ஊரைவிட்டு போகும்போதும் பார்சல் கட்டும்போதும் விமான நிலையத்தில் என்ன கேட்க போகிறார்களோ எதை தூக்கி வெளியே போடப் போகிறார்களோ. என்று இருக்கும். விடுமுறை முடிந்து ஊரை விட்டு வந்தாலும் அடுத்த ஒரு மாதமும் சொந்த ஊர் பற்றிய நினைவுதான் வரும். இயந்திரமான வாழ்க்கை காலையில் எழுந்து சமைத்து வேலை போய் மதியம் வந்து, வீட்டு வேலை ,மீதம் இருக்கும் பள்ளி வேலை, மாலையில் டியூஷன் என இயந்திரமாக ஓட வேண்டி இருக்கும். 2012 ம் வருடம் மீண்டும் ஒரு புதுவரவு ,சின்னவர் பிறந்த பின் மூவரையும் கவனிப்பதற்காக வேலையை விட்டு நின்றேன். ஆனாலும் டியூஷன் எடுத்துக் கொண்டுதான் இருந்தேன்.அத்தனை இன்பதுன்பங்களையும் தாண்டி படிப்படியாக முன்னேறி இன்று மூத்தவர் எம் காம் படித்துக்கொண்டும் சின்னவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டும் இருக்கின்றனர். துபாயில் இருக்கும் குடும்பத்தினருக்கு இன்னொரு வரப்பிரசாதம் என்னவென்றால். நான்கு மணி நேரம் பயணம் என்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் ஏதாவது அவசரம், போய் தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும் தாயகத்திற்கு உடனே கிளம்பி விடலாம்.
இதுவும் கிட்டத்தட்ட ஒரு மினி தமிழ்நாடு மாதிரி தான். தீபாவளி நாட்களிலும் பொங்கல், புத்தாண்டு நாட்களிலும் அந்தந்த வார விடுமுறையிலும் தமிழ் சங்கங்களின் மூலமாக நிறைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. நிறைய தமிழ் கடைகள் இங்கு இருக்கின்றது. நமக்கு என்ன தேவையோ அத்தனையும் நம் தமிழ்நாட்டில் கிடைப்பது போலவே இங்கும் கிடைக்கின்றது. சில பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு பாடமாக கற்றுக் கொடுக்கின்றனர். தமிழ் சங்கங்கள் மூலம் தமிழையும் நாம் தனியாக கற்றுக்கொண்டு தேர்வு எழுதும் ஒரு வாய்ப்பு இங்கு உள்ளது. கலை ஆர்வமிக்க குறிப்பாக திருமணத்திற்கு பின் தன் திறமையை வெளிப்படுத்த விரும்பும் மகளிருக்கும், ஆடவருக்கும் தங்கள் கலை திறமையை வெளிப்படுத்த நல்ல தளமாக உள்ளது அமீரகம்.
சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக இருப்பதால் இங்குள்ள விதிமுறைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். மீறினால் நாம் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அபராதத்திற்கே செலவிட நேரிடும். இதற்கு பயந்தே அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற தவறுவதில்லை. இன்று இவ்வளவு ஆனந்தமாக குடும்பத்தோடு இருப்பவர்கள் ஆரம்ப காலத்தில் இது எதையும் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் தான் இருந்திருக்கும். காலம் மாற, மாற அனைத்து வசதிகளும் பெருகி விட்டது. ஆரம்ப காலகட்டத்தில் அநேகரின் வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும்.
கணவனை வெளிநாட்டிற்கு அனுப்பும் பெண்களின் நிலைமை சொல்லவா வேண்டும். தன் பிள்ளைகளுக்கு, பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய அவளே தந்தையும் ஆகிறாள். தன் கணவரின் பெற்றோர்களை கவனித்துக் கொள்வதில் அவர்களுக்கு மகனுமாகி போகிறாள். இதையெல்லாம் விட தன் சொந்த பந்தங்களின் சுபகாரிய நிகழ்ச்சிக்கு செல்லும் போதும் , பண்டிகை காலங்களின் போதும் தான் எத்தனை உறவினர்களுடன் இருந்தாலும் தனிமையை உணர்கிறாள் அந்தப் பெண். இன்னும் அந்தப் பெண் வேலைக்கு சென்றால் அத்தனை கழுகு பார்வைகளிடமிருந்தும் தன்னை தற்காத்துக் கொள்ள தன்னை பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளவும் அவள் நிறைய கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறாள்.
அங்கு கணவனின் நிலைமையோ கூலி வேலை செய்பவர்களாக இருந்தால் அவர்கள் தங்கும் இடத்திற்கும், வேலை செய்ய போகும் இடத்திற்கும் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்ய வேண்டி இருக்கும் அதிகாலையில் எழுந்து அவசர அவசரமாக கடமைகளை முடித்துக்கொண்டு ஜன்னலோர இருக்கைகளை தேடி பிடித்து அமர்ந்து, விட்டு போன தூக்கத்தை தொடர்வர். கோடை கால கொடுமையோ கடுமையாக இருக்கும். அமீரகத்தில் அதிக வெப்பம் காரணமாக கோடை காலங்களில் தொழிலாளர்களுக்கு மதியம் 3 மணி நேரம் ஓய்வளிப்பார்கள்.
மாலையில் அவர்களது வாகனம் வரும்போது தன் களைப்பைப் போக்க ஓடிச் சென்று இருக்கையில் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும். அதன் பின் அவர்கள் சமைத்து, அதையே மறுநாளும் உபயோகப்படுத்துவதாக கேள்வி பட்டுள்ளேன்
ஒரு வருடமோ இரண்டு வருடமோ சிலருக்கு இரண்டு வருடம் விசா என்றால் இரு வருடத்திற்கு ஒருமுறை ஒரு மாத விடுப்புக்கு வரும் ஆண்மகனின் காண்கையில் சந்திப்பின் ஆனந்தம் ,ஏக்கம் அத்தனையும் தீரும். விட்டுப்போன உறவுகளைப் பார்க்கும் போது விமானத்தில் தான் உள்ளேன். 4 மணி நேரத்தில் வந்து விடுவேன் என்றோ.
விமானம் தரையிறங்கிய பின் கால் மணி நேரத்தில் வெளியே வந்து விடுவேன் என்று இருக்கும் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. ஒரு மாதம் முன்பு, கடிதத்தில் தான் வரும் செய்தியையும் ஒரு வாரம் முன்பு அலைபேசியில் சொல்லும் செய்தியும் தான் எங்களுக்கு எப்போது விமானம் வரும் விமானத்தில் எந்த பிரச்சினையும் இன்றி பயணம் செய்கிறார்களா. என்று பரிதவிப்போடு அவர்களை எப்போது காணப் போகிறோமோ என்று ஏக்கத்தோடு விமான நிலையத்தில் காத்திருப்போம். ஒவ்வொருவரும் வெளியே வரும்போது அவர்கள் கண்களும் குடும்பத்தினரைத் தேடிக்கொண்டே வரும். குடும்பத்தினரைப் பார்த்தவுடன் அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லாமல் போகும். கணவன் மனைவியின் நெற்றியில் தரும் ஒற்றை முத்தத்தில் ஒரு வருட பிரிவின் ஏக்கமும் தீரும். பெற்றோர் மகனையும் குழந்தைகள் தந்தையையும் அணைத்து ஆனந்தக் கண்ணீர் சிந்தும் காட்சி அங்கு நிற்பவர்களையும் கலங்கச் செய்யும். இன்றும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தாயகம் திரும்பும் ஆண்மகனின் நிலைமை இதுதான். விடுமுறைக்கு வந்தவர்களிடம் அனைவரும் கேட்கும் கேள்வி, எத்தனை நாள் விடுமுறை? எப்போது ஊருக்குப் போகப் போகிறாய்? என்பது மாறாமல் அனைவரிடமிருந்தும் வரும் ஒரே கேள்வி இதுதான். எக்ஸ்ட்ரா பத்து நாள் இருந்து விட்டால் போதும் இன்னும் போகலையா. ஏதாவது பிரச்சனையா ஏன் போகல. இன்று இந்த மாதிரி சங்கடமான கேள்விகளை இன்னும் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர் பலரும். அந்த விமான நிலையத்திற்கு மட்டும் தான் தெரியும் கணவன் மனைவி பிரிவின் பாதிப்பு… பெற்றோர் குழந்தைகளின் பாசப் பிரிவு. அவ்வளவு கண்களும் குளமாகும்.
இன்றும் எத்தனையோ சொந்த பந்தங்களின் நற்காரியங்களை ஆன்லைன் மூலமாக தான் காண முடிகிறது. கூட்டுக் குடும்பங்கள் அனைத்தும் குட்டித் தீவுகளாகி விட்டது. உலகமே ஆன்லைனில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய குழந்தைகளுக்கு தயவு செய்து தன் தாய்மொழியை கற்றுக்கொடுத்து எங்கோ உறவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தன் தாத்தா, பாட்டியிடம் பேச வைக்குமாறு என் விருப்பமாக கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து தாய்மொழியை கற்றுக்கொடுங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு.
Well said. Nicely written.
Still more then 90% of people are suffering for the same. One day everything will be alright. God bless everyone.
Tq brother. Hope all will be alright soon. Thanks a lot for ur valuable comment.
கஸ்தூரி,
எண்ணங்களை அருமையாக வடித்திருக்கிறாய். உன் கலைத் திறன்கள் கண்டு வியந்தபடி இருக்கிறேன். ஆடல், பாடல், நாடகம், கட்டுரை என பல துறைகளில் பரிணமிக்கிறாய். பன்முக ஆளுமையான கஸ்தூரிக்கு பரிபூர்ண வாழ்த்துகள்.
மிக்க நன்றி அம்மா, ஒவ்வொரு முறையும் உங்கள் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கிறது அம்மா. என்னை நான் அறிந்த கொண்ட தருணம் ஆனந்தாவில் இருந்து ஆனந்தமாக ஆரம்பித்த தருணம்
Really fantastic…. Each words are very true…
Thanks a lot Geetha.