இருட்டின் ஒரு சுளை __மாயக்கண்ணி

மனமே ஆதி. மனமே அந்தம். நம் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் மனதின் மூலமே உருவாகின்றன. மனித மனம் பல்வேறு அடுக்குகள் கொண்டது. மேலடுக்குகளில் அவன் சாதாரணம் போலத் தோன்றினாலும் அவன் மனதின் ஆழங்களில் பல்வேறு நுண்ணுணர்வுகளும், எதிர்மறை எண்ணங்களும், சிந்தனைத் தடுமாற்றங்களும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. அவற்றைத் தொடுவது, அவற்றினோடு பயணிப்பது, அந்த அடுக்குகளில் நிகழும் மாற்றங்களைக் கதாபாத்திரங்களின் வழியே உள்நுழைந்து தோண்டி எடுப்பது அசாதாரணத் தன்மை கொண்டது. தோண்டி எடுப்பதோடு நில்லாது அதை நம் கண் முன்னே எறிந்து நம்மையும் அதைக் காணச் செய்வது.. எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று தெரியாத மனதின் விஷயங்களைக் கையில் வைத்துக் கொண்டு ஆரம்பம், உச்சம், முடிவு, உரையாடல், கச்சித வடிவம், வடிவச்சிதறல், தன் போக்கில் போதல் போன்ற பல விஷயங்களை முயற்சி செய்திருக்கிறார் ஆதிரன். யாரும் பார்க்க விரும்பாத அப்படியான இருளின் பக்கங்களை அதிர அதிரத் திறந்து காண்பிப்பதில் அவருக்கு ஒரு தீராத வேட்கை இருக்கும் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவரின் இந்தத் தொகுப்பை அடையாளப்படுத்த “இருட்டின் ஒரு சுளை” என்று முதல் கதையில் டாலியின் கறுப்பு நிறத்தைக் கூறும் உவமையையேப் பயன்படுத்திக் கொண்டேன். தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுளை. ஒவ்வொரு சுளையிலும் ஒவ்வொரு இருட்டு. அதை விழுங்கவும் முடியாமல் தூக்கி எறியவும் முடியாமல் அவஸ்தைக்குள்ளாக வேண்டியிருந்தது. ஏனெனில் இருட்டை விரும்பாத சாதாரண மனிதர்கள் நாம். மேலும் இருள் என்பது எதிர்கொள்ள பயம் வாய்ந்த ஒரு சக்தி மிகுந்த பயணம். எத்தனை முறை கண்களை கசக்கிக் கொண்டாலும் இருட்டுக்குப் பழக சிரமப்பட வேண்டியிருக்கிறது. அது போலவே ஆதிரன் கதைகளுக்குப் பழகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஒரு நல்ல படைப்பாளியாக அந்தச் சிரமத்தை வாசகனுக்குக் கொடுப்பது கடமையாகும்‌. அந்தக் கடமையை வெகு நேர்த்தியாக உள்ளிருந்து எடுத்து நம் முன் வைக்கிறார்.
ஆதிரன் கதைகள் அனைத்திலும் மரணம் என்பது பொதுவான விஷயமாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் தொகுப்பு முழுவதும் மரணம் துரத்திக்கொண்டே இருக்கிறது. அந்த மரணத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக, எதிர்ப்பவர்களாக, தப்பி ஓடுபவர்களாக, ஏற்றுக் கொள்பவர்களாக, புரியாதவர்களாக கதாப்பாத்திரங்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்படிச் சிதறி ஓடுகையில் உருவாகும் சுயநலம், துரோகம், காமம், காதல், பயம், கழிவிரக்கம், தோற்றமாயை போன்ற உணர்வுகளால் சூழப்பட்டு அதில் உழன்று சிக்கி என்னவாகிறார்கள் என்பதைத் தன் கதைகள் வழியாக கடத்துகிறார் ஆதிரன். அப்படியான கூறல் முறையில் எந்த வித நியாயம், தீர்ப்பு போன்ற விஷயங்களைக் கையிலெடுக்காமல், மனிதனின் அக எண்ணங்கள், செயல்களாக மட்டுமே காட்டியிருப்பது ஆதிரன் கதைகளின் சிறப்பம்சங்களாக நான் கருதுகிறேன்.
இந்தக் கதைகள் வழியே எந்தவொரு தீர்வையோ, முடிவையோ அவர் நமக்குச் சொல்ல விரும்பவில்லை. இந்தந்த மனநிலையில் இந்தந்த செயல்கள் நிகழ்கின்றன. அதை ஒரு வழிப்போக்கனாக நின்று சுட்டிக் காட்டி நகர்ந்து கொள்கிறார். 
பிலோமினாவிற்குப் பின் ஜேக்கப்பின் ஒரே பிடிமானமான டாலியைக் கருணைக் கொலை செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவது சூழல் கைதியான சுயநல மனநிலை தான். அதைத்தாண்டி வேறென்ன செய்ய முடியும்?
யசோதரையை விட்டு நீங்க சித்தார்த்தன் கொள்ளும் கலவியில் அவன் கனவின் ஓவியத்தின் சிறகை யசோதரையே கண்டடையும் துர்ப்பாக்கிய நிலை யாருக்கு வாய்க்கும்? ஒன்றோடொன்று கலந்து உன்மத்தம் கண்ட உடல் வழியே கண்டடையும் காட்சிகள் அற்புதமான வாட்டர் கலர் சித்திரங்களாக வெளிப்பட்டிருக்கின்றன. ஈருடல் ஓருயிர் என வசப்படும் ஆழமான காதலில் மட்டுமே அது மாதிரியான சாத்தியப்பாடுகள் புரிதலோடு நிகழும்.
ஒரு பெண்ணிடம் உண்டாகும் தாபத்தைத் தீர்க்க வழியற்று பெருக்கெடுத்து ஓடும் காமத்தின் முன் எந்தவொரு குற்றவுணர்வுமற்று இன்னொரு பெண்ணைச் சிதைத்து தானும் சிதைந்து போகிற மனநிலையின் பின்னர் காமம் ஒரு மனிதனை எந்தளவு ஆட்டிப் படைக்கிறது என்பதை தத்ரூபமாகக் காண முடிகிறது பரமு வழியே. கறிக்கடை, ஆடு வெட்டும் காட்சிகள், கோழி அறுக்கும் நிகழ்வுகள் வழியே கதையின் குறீயீடுகளாக அவை வெளிப்படுகின்றன கோர மனதின் நுண்ணுணர்வுகளாக.
அம்மா கனகமணி, பால்யக்காதலி செண்பகராணி, சிறைத் தோழர்கள் கணேசன், அலி, நாகலிங்கம், அழகு சுந்தரம் எனும் ஆறு சுளைகளும் சங்கரன் வாழ்வில் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டு செய்கிறார்கள். ஏக்கத்துடன் மரணிக்க விரும்பும் சங்கரனுக்கு அவன் வாழ்வில் தான் யார் என்கிற கேள்வி இறுதி வரை துரத்துகிறது. அந்தச்சூழலை அவன் உருவாக்கினானா? அவர்களா? எனும் கேள்வி நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நந்தினி புற்றுநோயால் மார்பகங்களை எடுத்து விட்டு சலனப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம். சிவனேசனுடனான தாம்பத்ய உறவின் விரிசலுக்கு காரணமாகிவிடுமோவென அவள் மனம் ஓலமிடுவதை மார்பகப் புற்றுநோய் வந்த பெண்கள் மட்டுமே உணர முடியும் ‌.
அனுப்பவியலாத கடிதம் கதைச் சூழல் போல் எத்தனையோ பேருக்கு உண்டு. அடித்து, அழித்து, திருத்தி இறுதியில் அனுப்பாமல் விட்டு விடுகிற கடிதங்களால் தான் பல உயிர்கள் பிழைக்கின்றன. கொட்டுவதற்கு மனிதர்கள் இல்லாதபோது காகிதங்களே, கடிதங்களே துணை. ஒரு சூனிய மான தனிமை உணர்வின் தன்மையின் முகம் கதையில் நன்கு வந்திருக்கிறது. கூடவே ஓர் உடலின் வேட்கையும். 
திருகலின் காளிக்கு ராமின் மாயத் தோற்றம் ஒரு விடையைத் தந்துவிட முடிந்தால் வாழ்வு எவ்வளவு அழகானது. காற்றில் மரத்தில் தொங்கும் அவனது உடல் பெண்டுலம் போல இன்னும் மனதுக்குள் நீங்காது நிற்கிறது. அதை இரண்டாகப் பிரித்து நேர் உரையாடலாகவும், மாயத்தோற்ற எண்ணங்களாகவும் கொண்டு வந்து இறுதியில் இரண்டும் இணையும் இடத்தில் ஒரே பிம்பமாக மாற்றுவது தேர்ந்த கதை உத்தி.

கடந்த காலத்துயரங்கள், எதிர்கால பயங்கள் தாண்டி நிகழ்கால அவஸ்தைகளை தூக்கம் வராமல் தவிக்கும் மனநிலையில் நம்பர் எண்ணிக்கொண்டு படுத்திருக்கும் நாயகனின் விழிப்பும் தூக்கமும் கலந்த காட்சிகளில் நான் என்னைக் கண்டு கொண்டேன். நிகழ்காலம் கதை என்னை மிகவும் பாதித்தது.
மயங்கித் தொலைக்கும் யதார்த்தம் சிறுகதை யதார்த்தத்தை மீறிய மாய யதார்த்த கதையாக தன்னைப் பிரகடனம் செய்து கொள்கிறது. அந்தக் கதையில் வரும் பெயர்கள் சுவாரசியமானவை.
வேர் துளைத்த கிணறு கதையில் ஒரு கயிறு கிளம்பி வருவது போல் ஒரு படிமம் வைக்கிறார் ஆசிரியர் பட்டாம்பூச்சி வழியே. எனக்கு அது தாள முடியாமல் சொற்களின் கண்ணிகளால் பின்னப்பட்ட நீண்ட கயிறு போலத் தோன்றியது. சொல்லும் சொற்களுக்குத் தான் எவ்வளவு வலிமை. நீள் வலி கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். அது தாங்க முடியாத சொற்கள். சொற்களே வடிவையும், சந்திராவையும் அந்த முடிவுகள் நோக்கித் தள்ளியிருக்கின்றன.
தலைப்பு சிறுகதையான மாயக்கணியில் கல்லறை வாசகம், பார் உரையாடல்கள், நாயகியின் இரத்தம் வழியும் கனவு, அவள் காதலனைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுவது, நாயகனின் நண்பன் தன் இறப்பு பற்றி நாயகியிடம் பேசுவது இவை அனைத்தும் தொடர்புடையது போலவும், தொடர்பற்றது போலவுமான ஒரு தன்மையோடு பல கண்ணிகளால் பின்னப்பட்டிருக்கின்றன. உலகில் எங்கோ நடப்பதற்கும் மற்றொன்றுக்கும் ஒரு மாயத்தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அடர்த்தியான கருக்கள். செழுமையான மொழி. அளவான வர்ணனைகள், வலிந்து திணிக்காத அடர், மென் மொழி மாறிமாறி மேலும் கீழும் ஏறிஇறங்கி சீராக இடத்திற்குத் தகுந்தவாறு வருவது, சுருக்கமான தீர்க்கமான உரையாடல்கள், பிறழ்வு மனநிலையின் கொடுதரிசனங்கள், மீள் வாசிப்பின் மூலம் மட்டுமே கண்டடைய முடிகிற புரிதல்கள், மீயதிர்வான எண்ணவோட்டங்கள் மூலம் ஓர் அழகான தொகுப்பு தந்திருக்கிறார் ஆசிரியர் ஆதிரன்.
சில கதைகளை வாசித்து நிறுத்தி மீண்டும் அடுத்த கதைக்கு நகர நேரம் எடுத்துக் கொண்டு, கதைக்களங்களை சந்திக்கத் துணிவற்று என்னுடைய பிடிவாதமான குணத்தின் துணையோடு வாசித்துக் கடந்திருக்கிறேன். 

எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த புத்தகம் என்றாலும் இன்றைய சூழலுக்குத் தகுந்தவாறு தன்னைப் புதுப்பித்துத் தகவமைத்துக் கொள்ளும் கதைகளாக இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணமாக நான் நினைப்பது அத்தனைக் கதைகளிலும் அகநுண்ணுணர்வுகளைக் கூர்மையாக வெளிப்படுத்தியிருப்பதுதான். மனமார்ந்த வாழ்த்துகள் மஹி.
இன்னும் பல கதைகளை தமிழ்ச் சூழலுக்கு வழங்கவும் வாழ்த்துகள் ❤️.
ஒரு பக்கம் முழுவதிலும் கதைகள் பிரியாமல் தொடர் வாக்கியங்களாக வருவது தாண்டி பெரிய குறையாக எதுவும் தோன்றவில்லை.

புத்தகம்: மாயக்கண்ணி
வகைமை: சிறுகதைத் தொகுப்பு 
ஆசிரியர்: மஹி ஆதிரன்
பதிப்பகம்: புலம் 
விலை: 150₹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version