ஆருத்ரா சிலம்பக் கலைக் கூடம் கத்தார்.

கலை என்றால் அது பொழுதுபோக்கு கலையான சினிமா மற்றும் தொலைக்காட்சி  என்கிற  மாயை கொண்ட  நவீன புரிதலோடு வாழும் இன்றைய தலைமுறையினருக்கு பாரம்பரிய  தமிழ் கலை பற்றிய அறிவையும், அதற்கான பயிற்சியும் அறிமுகம் செய்ய வேண்டியது நமது தலையாய கடமை.

சிலம்பு என்னும் தற்காப்புக்கலை பற்றி பெரியவரிடம் கேட்டால் எம்ஜிஆர் நம்பியாரோடு, வீரப்பாவோட பல கருப்பு வெள்ளை படங்களில் போட்ட சண்டை தானே என்று சட்டென்று சொல்லுவர். அதேபோல தொண்ணூறுகளின் இளைஞர்களிடம் கேட்டால், ‘சாந்து பொட்டு…சந்தனப்பொட்டு …’ என்று வரும் கமலஹாசனின் பாடலை நினைவு கொள்வார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக இந்த அரிய அற்புத கலை பற்றிய புரிதலும் தெரிதலும் கல்வியும் இந்த காலகட்டத்திலும் இருப்பது அதிசயம் தான்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்க்குடியின்  தன்னிகரற்ற ஒப்பற்ற கலையாம், போர்க்கலைக்கு எல்லாம் தாய்க்கலையாம், தமிழரின் சிலம்பகலையை பயிற்றுவிக்க, தமிழகத்திலேயே சொற்ப ஆசியர்கள் இருக்கும் நிலையில் அரபிக்கடல் தாண்டி சிறிய ஆனால் வளம் நிறைந்த நாடான கத்தாரில் இரண்டு வருடத்திற்கு முன்பு  வெறும் 10 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது தான் ஆருத்ரா சிலம்பக்கலைக்கூடம்.

கலை மற்றும் கலாச்சாரம் என்பது ஒரு சமூகத்தின் அடையாளம்.  தென் குமரியின் பண்டைய  லெமூரியாகண்டத்தில் பிறந்த தமிழ் சமூகத்தின் கலாச்சார அடையாளத்தின் சின்னங்களான கலைகளில் ஆதியும் ஆகச்சிறந்ததுமான கலை, சிலம்பம். நமது விலைமதிப்பற்ற கலைகளை நமது வருங்கால சந்ததிகளின் கைகளில் சீதனமாய் மிக பத்திரமாக கொண்டு சேர்த்து அதை அவர்களும்  அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றி காலத்துக்கும் அழியாமல் பொக்கிஷமாக பாதுகாக்க, பகிர்ந்து பயனுற  வழி செய்தலே ஒவ்வொரு கலை ஆசான்களின் தலையாய கடமை. அதை செவ்வனே செய்ய அடியெடுத்து வைத்த  ஆருத்ரா சிலம்பகலைக்கூடத்தில், தற்போது 85 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு  சிலம்பம், மான்கொம்பு, வேல்கம்பு, கத்தி, சுருள்வாள், அடிவரிசை , குத்துவரிசை, களரி, பூ நட்சத்திரம் போன்ற தமிழர் கலைகளை சிறந்த முறையில் கற்றுத்தருகிறார்கள்.

ஆருத்ரா சிலம்பக் கலைக்கூடத்தின் முதல் நோக்கம், இங்கு கத்தாரில் பயிலும் மாணவர்களை இந்தியாவில் நடைபெறும்  மாநில, தேசிய மற்றும் சர்வதேச சிலம்பபோட்டிகளில் கலந்து கொள்ள வைக்க வேண்டும்; அதற்கு தகுதி பெறும் விதத்தில், போட்டிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடல் உறுதி மற்றும் மன வலிமையை கட்டமைக்க மிகச்  சிறப்பான பயிற்சி கொடுத்து மேம்படுத்த  வேண்டும்.இந்த குறிக்கோளுடன்  மாணவர்களை தயார் செய்து உலக அரங்கங்களில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். 

இதை வெறும் சொல்லோடு நிறுத்திவிடாமல்,  ஆருத்ராவின் ஆசான்களான சரவணன் மற்றும் சீனிவாசன் தங்களது அலுவலகப்பணிகளையும் பார்த்துக்கொண்டு, மாணவச்செல்வங்களை வெற்றி இலக்குக்காக கடும் உழைப்பையும் தனி கவனத்தையும் செலுத்தி, செயல்படுத்தினார்கள். கத்தாரிலிருந்து முதன்முறையாக 10 மாணவர்கள் கொண்ட குழு ஆருத்ரா சிலம்பக்கலைக்கூடம் சார்பாக சென்னையில் நடந்த மாநில அளவிலான சிலம்பப்போட்டியில் தங்கம் வெள்ளி, வெண்கலமும், கொச்சின் மற்றும் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பபோட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலமும், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச உலக சிலம்பப்போட்டியில் வெள்ளியும் வெண்கலமும் மற்றும் புதுச்சேரியில் நடந்த உலகளாவிய சிலம்ப சாதனையில் கலந்து கொண்டு  5 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலகத்தரமான சிலம்ப சாதனைகளை செய்து  பரிசுகளை பெற்று, கத்தார் வாழ் தமிழர்களுக்கும் தமிழ் கலைக்கும் பெருமை சேர்த்து  வெற்றிவாகை சூடி வந்தனர்.

உலக அளவில் ஆருத்ரா சிலம்பகலைக்கூடம் தமிழரின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பக் கலையின் பெருமையை பறைசாற்றுவது மட்டுமல்லாமல் வருங்கால சந்ததிகள்  இக்கலையை திறம்பட கையாண்டு அதை உலகம் இயங்கும் வரை வளரும், வாழ்வில் வளம் சேர்க்கும் கலையாக, நிரந்தரமாக வீரக்கலைகளின் மகுடமாக இருத்தல் வேண்டும் என்கிற உயரிய சிந்தனையோடு சீரிய  பணியினை செய்து  கொண்டு இருக்கிறது.   

கத்தார் நாட்டிலிருந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச சிலம்ப வீரர் வீராங்கனைகளை முதலில் உருவாக்கி கத்தாருக்கே புகழ் சேர்த்த பெருமை ஆருத்ரா சிலம்பக் கலைக்கூடத்தின் அடையாளம்.

கத்தாரில் உள்ள தமிழ்ச்சங்கங்கள்,  தமிழ் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பறை, சிலம்பம் போன்ற தமிழர் கலைகளுக்கும்,  கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் தருவதும்,  கலைகளைப் போற்றி பாதுகாப்பதும் வழக்கமாகி வ்ருவதற்கு ஆருத்ரா சிலம்பக்கலைக்கூடம் பெரும் பங்குவகிப்பது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

சமீபத்தில், கத்தாரில் நடைபெற்ற தமிழ் மகன் விருது வழங்கு  விழாவில் ஆருத்ரா சிலம்பக் கலைக்கூடத்தின் மாணவர்கள், பார்வையாளர்களும் விருதுபெற்ற வெற்றியாளர்களும் ஆச்சர்யப்படும் விதமாக  உலக அரங்கில்  முதன்முறையாக நீர், நிலம், காற்று என்ற தலைப்பினை கருப்பொருளாக கொண்டு காணொளியின் பின்புலத்தில்  அச்சு அசல் போர் வீரர்கள் போன்று உடை, கேடயம் மற்றும் சிலம்பம் கொண்டு  சாகச நிகழ்வாட்டத்தை செய்து காட்டினர். இது சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்  போல கண்டவர் மத்தியில்  மிகப்பெரிய பிரமிப்பை உண்டாக்கியது. அதை நேரடியாக  கண்டு களித்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று கை தட்டி பாராட்டி ஆர்ப்பரித்து  மகிழ்ந்தது, நமது தமிழர்கள் இன்றளவும் கலைக்கு தந்த உயரிய மரியாதையாக கருதப்பட்டது மட்டுமின்றி கலை என்றும் நிரந்தரம் என்கிற நம்பிக்கையையும் விதைத்தது.

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை  கால்பந்து போட்டி 2022 இறுதி ஆட்டத்தின் கோலாகலமான  துவக்க விழாவில் ஆருத்ரா சிலம்பக் கலைக்கூட மாணவர்கள் லுஸைல் போலியர்ட் மற்றும் கார்னிச்சில் சிலம்பாட்ட கலையை உலக அரங்கில்  அசத்தலாக செய்து காட்ட,  அதை  பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ரசிகர்கள் நேராகவும் மற்ற உலகப்பார்வையாளர்கள் தொலைகாட்சி வழியாகவும் கண்டு மகிழ்ந்தனர்.  நமது தமிழரின்பாரம்பரிய கலைகள் உலகப்புகழ் கொண்ட கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவைத்து, வெகுவாக  பாராட்டுதலுக்குரியதானது. இதற்கு முழுமுதற்காரணம் கத்தாரில் இயங்கிவரும் ஆருத்ரா சிலம்பக்கலைக்கூடம் என்று சொன்னால் மிகையாகாது.

ஐந்து வயது சிறுவன்  சிலம்பு எடுத்து புலி போல சீறி பாய்ந்து சர்வதேச போட்டியில் வெற்றி பெறுவதும், ஐம்பது வயது கடந்த பெற்றோரும் ஆர்வமுடன் சிலம்ப பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை இளைஞர் போல கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் கத்தாரில் சாத்தியபடுத்தியது  ஒரே கலை; ஒரே கலைக்கூடம் தான். அது சிலம்பாட்டக்கலை; அதை கத்தாரில் செம்மையாக பயிற்றுவிக்கும் ஆருத்ரா சிலம்பக் கலைக்கூடம்.

வீட்டில் ஒடுங்கி அடங்கிக் கிடக்கும் பழமைப்பிணையை தகர்த்தெறிந்து ஆணுக்கு தானும் நிகரரென, பாரதி கண்ட புதுமைப் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள்  ஆருத்ரா சிலம்பக் கலைக் கூடத்தின்   மாணவிகள். 

வீரம் பேசும் தமிழரின் உதிரத்தில் பாய்ந்தோடும் சிலம்பக் கலை கற்பதில் மாணவிகள், பெண்கள் அதிக ஆர்வத்துடன் மும்முரமாய் செயல்பட்டு உலகம் உவந்து பேச, எல்லோருக்கும் , வல்லோருக்கும் எடுத்துக் காட்டாய் விளங்குகிறார்கள் என்பது மெச்சத்தகு சிறப்பம்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version