ஒரு புரட்சிகர எழுத்தாளரோ, ஒரு கவிஞரோ, மாபெரும் சினிமா அறிவு கொண்ட ஒருவர் இதை எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் நீங்கள் இதை படிக்க துவங்குகிறீர்கள் என்றால், மன்னித்துவிடுங்கள். நான் ஒரு சாதாரண, அடிப்படை சினமா மட்டுமே தெரிந்த, ஆனால் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தெரிந்த படங்களை கொண்டாடும் பெண் ரசிகை அவ்வளவே. நல்ல விமர்சனங்கள் கொண்ட படங்களை தேடிப் பார்ப்பேன். சலித்துப்போன வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சி தான் திரைப்படம் சிலருக்கு. ஒரு சிலருக்கு அது கொண்டாட்டம். ஒரு சிலருக்கு பொழுதுப்போக்கு. ஒரு சிலருக்கு அது என்னனா இருக்கட்டும் ஒரு ரெண்டு மணி நேர ஓய்வு. ஆனால் எனக்கு , ஒரு திரைப்படம் என்பது ஒரு நல்ல புத்தக அறிவை, ஒரு நல்ல நண்பனின் இருப்பை, ஒரு நல்ல அனுபவத்தை என அத்தனையும் ஒரு சேர ஒரு 2.30 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். எல்லா படங்களும் நிச்சயம் அதை தருவது கடினம். ஆனால், ஒரு சில படங்கள் நம்மை அப்படியே கட்டி போட்டுவிடும் சக்தி வாய்ந்தது..
நாத்திசராமி (கன்னடா 2018), புல்புல்(ஹிந்தி 2020) போன்ற படங்கள் பார்த்து பிரமித்து போயிருக்கிறேன். அந்த கதையின் நேர்த்தி, பெண்னின் வலிமை, சொல்ல வந்த விஷயத்தை சொன்ன விதம் என எல்லாமே மிக அழகாய் இருந்தது. அதே போல் மலையாளத்தில் இப்பொழுது நிறைய படங்கள் ஈர்த்தன.அதிலும் “The Great Indian Kitchen” இதோ பாருங்கடா நீங்க பெண்களை நடத்துற லட்சணம் என்று முகத்தில் முழிவது போல் இருந்தது. திருமணம் ஆகி புதிதாக வந்திருக்கும் பெண். மாப்பிள்ளை வீட்டில் இயல்பாய் இருக்கவே நாட்கள் பிடிக்கும். எல்லாமே புதிது, மனிதர்கள், அவர்களின் தினசரி வேலைகள், அவர்களின் இயல்பு, அடுப்பங்கறை, குளியலறை என எல்லாமே இனி இது தான் என அவள் பழக, மனதில் சொல்லிக்கொள்ள எத்தனை நாள் பிடிக்கும்? முக்கியமாய் ஒரு முன்பின் தெரியாத மனிதனுடன், அதுவும் அவன் மீது காதல் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என தெரிவதற்குள் அவனுடன் உடலை பகிர வேண்டும். நினைத்து பாருங்கள் ஒரே தாலி கயிற்றில் மொத்த வாழ்வும் மாறியிருக்கும் அவளுக்குள் என்னென்ன ஓடிக்கொண்டிருக்கும்? இதில் அவள் மாமனாருக்கு கையில் கொண்டு வந்து பிரஸ் குடுத்தா தான் அவரு பல்லு வெளக்குவாராம். குக்கர் வடிச்ச சோற திங்கமாட்டாராம். அதைவிட கொடுமை என்னவெனில்,தினமும் செய்த வேலைகளின் அலுப்பகளுடன் அந்த பெண் தன் உடலைப்பகிர வேண்டும். ஒரு காதலோ ஊடலோ இல்லாமல் ஏற்படும் கூடலில் என்ன இன்பம் இருக்க முடியும்? ஒரு முத்தம் கூட இல்லாமல் தான் உடலுறவு நடக்கிறது என்கிறார்கள் இந்தியாவில். இதெல்லாம் இங்கெல்லாம் தான் நடக்கும். ஏன்னா நாங்க தான் தாலி கட்டிட்டோமே, அப்புறம் உனக்கு புடிச்சாலும் சரி, புடிக்கலனாலும் சரி ,உனக்கு உணர்ச்சி வந்தாலும் சரி வரலனாலும் சரி எனக்கு செய்யனும் அவ்ளோதான். அதை தான் எழுத்தாளர் லதா, கழிவறை இருக்கையில் சொல்லியிருப்பார், டாய்லெட்டில் காலை கடன்களை கழிப்பதுப்போல தான் இந்தியாவில் பெரும்பாலான உடலுறவுகள் இருக்கிறது என. 100% உண்மை தான். அந்த காட்சி கணக்கச்சிதமாய் பொருந்தும் வகையில், அந்த பெண், “எனக்கு அப்படியே பண்ணா வலிக்குது, foreplay அந்த மாதிரி எதுனா… ” அப்படினு கேட்க வருகையில், “அதெல்லாம் பண்ணனும்னா உன்ன பார்த்தா எனக்கு எதுனா தோணனும்” என்பான். அப்ப இவர்கள் மண்டையில் ஆணி அடிச்சி யாரு சொல்லுவார்கள், அடேய்களா, செக்ஸ்னா வெறும் உடலும் உடலும் சேர்வது மட்டுமில்லை என?
சமூகம் அப்படித்தானே சொல்லிக்கொடுத்திருக்கிறது. ஆண்கள் இப்படித்தான் இருப்பாங்க பொண்ணுங்க நாம தான அட்ஜஸ்ட் பண்ணிட்டுபோகனும். எல்லா திருமணமான பெண்களுக்கும் கொடுக்கும் முதல் அட்வைஸ், காலைல சீக்கிரம் எழுந்து யாரு கண்ணுலையும் படாம குளிச்சிடு. அப்புறம், புருசன் குளிச்சி முடிச்சிட்டு வந்ததும் அவரோட உள்ளாடைய துவச்சி போட்டுரு ; அது புண்ணியம். புது பொண்ணு சீக்கிரம் எழணும்னா புது மாப்பிள்ளையும் சீக்கிரம் தான எழணும்? ஏன் புது மாப்பிள்ளையை எழுப்புவது இல்லை என்றால், முதல் இரவு முடிந்து அவரு டயர்ட்டா இருப்பாராம். அப்படி பார்த்தால் பெண்ணுக்கு தானே முதல் ஓய்வு வேண்டும்? என்னங்க சார் உங்க சட்டம்…… ???
பெண் மென்மையானவள். ஆண் வலிமை மிகுந்தவன் என சொல்லிச்சொல்லி வளர்க்கப்படுகிறோம். இதை ஆழமாக மனதில் நிறுத்தியும் கொள்கிறோம். திருமணமான பெண் கணவனால் தாக்கப்படும் போது, நம்மாள அடிக்க முடியாது என முடிவுக்கு வருகிறோம். ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு பெண் சண்டை போட கற்றுக்கொண்டு தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளகிறாள். திரும்ப அடிக்கிறாள். அதுவரை அமைதியாய் இருந்த பெண் வீட்டாரே, திரும்ப அடிக்கிறது தப்பு என மன்னிப்பு கேட்க சொல்லும் கொடுமை எல்லாம் நம் நாட்டில் தானே நடக்கும். இதுவே கதைக்களமாய் வந்திருக்கும் படம் தான்“ஜெய ஜெய ஜெயஹே”. இது தான் எதார்த்தம் எப்படி அடிவாங்கிட்டே இருப்பது ? ஒரு நாளாவது கோபம் வரும் தானே. அடிக்கணும்னு தோணும் தானே. எங்கே போய் கற்பது? யாரிடம் கேட்பது என யோசிக்க வேண்டாம்.இருக்கவே இருக்கு யூ டியூப். கற்றாள் அவள். திரும்ப அடி வாங்கும் போது தான் தெரிகிறது எப்படி வலிக்குமென. அப்படித்தானே இருந்திருக்கும் எனக்கும் என அந்த பெண் அடித்துவிட்டு பார்க்கும் போது, ஒரு நிம்மதி ஏற்படுகிறது. அது தான் பண்ணனும் ஒரு சினிமா. பெண் அதிக வலிமை வாய்ந்தவள். ஒன்றை நினைத்து தொடங்கிவிட்டாள் அதை நிச்சயம் முடிக்கும் வலிமை அவளுக்கு இருக்கிறது. அந்த கணவன் நினைத்து இருப்பானா ?தன்னை இவள் திரும்ப அடிப்பாள் என்று?
இவளால என்ன செய்ய முடியும், அடிச்சா வாங்கித்தானே ஆகணும், அப்புறம் போய் சமாதானம் செய்தால் முடிஞ்சது. ஒரு முழம் பூவும், அல்வாவும் தானே என நினைக்கும் ஆண்களுக்கு, நிச்சயம் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையின் எல்லை தெரியாது. அது அவனுக்கு எதிராய் அவன் கண்முன்னே, புதிதாய் தொழில் தொடங்கி அவனையே வாயை பிளக்க அண்ணாந்து பார்க்க வைக்கலாம். பெண்மை எனும் போது சமீபமாய் மலையாளத்தில் வெளிவந்த “Wonder woman” திரைப்படம் நினைவுக்கு வருகிறது. Pregnancy பற்றிய அத்தனை நுணுக்கங்களும் கொண்ட படம். மிக இயல்பாய் நகரும் கதைக்களம். Living relationship mother, IVF mother, single mother என எல்லா வகையிலான அம்மாக்களும் வரும் பிரசவக்கால பயிற்சி வகுப்பு அது. அதில் குழந்தை வளர்ப்பை படிப்படியாக விளக்கி அதற்கு ஏற்ப நம்மை தயார் செய்வார்கள். இதில் முந்தைய ஜெனரேசன் மாமியார்களுக்கு என்ன கடுப்பு இருக்குமோ தெரியவில்லை. நாங்கெல்லாம் எந்த கிளாஸ் போய் பிள்ளை பெத்துக்கிட்டோம்? எனக்கு அஞ்சு புள்ளையும் வீட்லதான் பொறந்துச்சு என இவர்களே தடுப்பு போடுவார்கள். இதை குழந்தைக்கு முன்னும், குழந்தை பிறப்புக்கு பின்னும் நிறைய கேட்டிருப்போம். இன்னும் கொஞ்சம் மேல போய், உங்க தாத்தா மூஞ்சியே பாக்காம நான் மொத பிள்ளை பெத்துக்கிட்டேன் எனும் பாட்டிகளும் உண்டு. அப்ப இருப்பது போல இவளுக ஏன் இல்லை என்பது தான் முந்தைய தலைமுறை மாமியார்களின் பிரச்சனை. பெண் தானே பெண்ணுக்கு முதல் எதிரி.
உங்களுக்கு கிடைக்காத சுதந்திரம் எங்களுக்கு கிடைத்திருக்கலாம். அதை உங்கள் மருமகளுக்கு நீங்கள் அனுமதித்தால் தானே உங்கள் மகளுக்கும் அது கிடைக்கும்?
பெண் யாருக்கும் அடிமை இல்லை என்பதை அவள் உணர்ந்துகொண்டால் போதும். தனி மனுஷியாய் அவளால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இந்த Pregnancy நேரத்தில் வரும் Moodswings, அப்போது வரும் இயலாமை, வெறுமை, என ஒரு பெண்ணின் பார்வையில் நகரும் இந்த கதை, கணவன் இந்த பிரசவகால பயணத்தில் எத்தனை முக்கியம் என்பதை அழகாய் சொல்லியிருக்கும். மனைவியை பிரசவ அறையில் வலியில் பார்க்கும் கணவனால் அதற்குப்பின், நிச்சயம் அவளை மனைவியாய் மட்டுமே பார்க்கமுடியாது. மற்றுமோர் மனம்கவர்ந்த படம் என்றால் சவுதி வெல்லக்கா (2023), ஒரு வயதான பெண்மணி, எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருக்கும் அந்த பாட்டி, பக்கத்து வீட்டில் சண்டை, எதிர் வீட்டில் சண்டை என எப்போது வாயை திறந்தாலும் சண்டை, மருமகளிடமும் சண்டை. ஒரு நாள் எதிர் வீட்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் சமயம் ஒரு தேங்காய் பிஞ்சு வந்து அந்த பாட்டியின் மண்டையில் விழ, கோபம் வந்த பாட்டி, அதை போட்ட அந்த பையனை அடிக்க போய் ,அதற்கு முன்பே ஆடிக்கொண்டிருந்த அந்த பையனின் பல் ஒரு அறை விட்டதும் விழுந்துவிடும். அதற்காக கேஸ் போட்ட பாவம் தான். எப்போதும் வளவளவென பேசும் பாட்டி அதற்கு பிறகு பேசவே மாட்டார். அடிபட்ட பையனை பார்க்க போன இடத்தில், அவனை பார்க்க விடமால் மேலும் சண்டை பெரிதாகும். கேஸீனால் வரும் கஷ்டங்களால் மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை பெரிதாக, அந்த பாட்டியை தனியாக கொண்டு போய் விடலாமா என யோசிக்கும் தன் மகனிடம், அம்மாவ எங்கனா தொலைச்சிடலாமானு யோசிக்கிறயா? கேட்கும் போது, நிச்சயம் நாதழுதழுக்கும்.
ஒரு தனி ஆளாய் அந்த பாட்டி நான் பாத்துக்கறேன் என ஆட்டோவை விட்டு இறங்குவார். எப்படியோ பணியாரம் போட்டு விற்க ஆரம்பிக்கும் அந்த பாட்டி, 10 வருடமாய் அந்த கேஸூக்காக அலைவார். வாழ்வின் பெரும் போராட்டங்களுக்கு பிறகு ஒரு நாள் அந்த கேஸ் கோர்ட்டுக்கு வரும். பாதிக்கப்பட்ட சிறுவன் பெரியவனாகி, பாட்டி படும் கஷ்டத்தை பார்த்து நாம் இந்த கேஸ்ஸில் தோற்றுவிடவேண்டும் என்று எண்ணுவான். அத்தனை போராட்டங்களுக்கு இடையே கடைசியாய் எல்லாரும் பொய் சாட்சி சொல்லி பாட்டியை விடுவிக்க பார்க்கும் சமயம். அந்த பாட்டி வந்து, இல்லை நான் தான் அவனை அடிச்சேன் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனா எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள், அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லுவார். அப்போது மனம் ஒரு பிசை பிசையும் பாருங்கள். அது தான் காட்சி. மிக இயல்பாய், தத்ரூபமாய் ஒரு கோர்ட்டில் நடக்கும் விஷயங்கள் காட்டி இருப்பார்கள்.
கடைசியாய் அந்த பாட்டியை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடவா? என அந்த பையன் அவன் அம்மாவிடம் கேட்கும் போது, நமக்கே இடம் இல்ல. அவங்கள எங்க வெச்சிகறது என்பார். கொஞ்ச நேரத்தில் அந்த பாட்டி டாய்லெட் ரூமில் மயங்கி விழ , அடுத்த frame ஹாஸ்பிடலில் அவனின் அம்மா, அக்கா இவன் என எல்லாரும் இருப்பார்கள். அவனின் அம்மா அந்த பாட்டிக்கு டீயும் பன்னும் குடுத்துக்கொண்டிருப்பார். எல்லாரும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். எதார்த்தம் என்னவென்றால், நாம் இப்படி என்று நினைத்து வைத்திருப்பதைவிட நாம் மிகவும் நல்லவர்கள் தான். மனிதம் எப்போதும் நம்மை முந்திக்கொள்ளும். ஏனென்றால் அது தானே நம் இயல்பு. இப்படி வெகு அற்புதமான விஷயங்களை, மிக இயல்பாய் மலையாள சினிமாக்கள் சொல்லி வருகின்றன. ஒரு திரைப்படம் ஒரு Revolution பண்ணுமா அல்லது பண்ணனுமா என்று கேட்டால்??? ஒரு அடிப்படை தேவையான விஷயத்தை நல்ல கதையோடு நல்ல frame களுக்குள் அழகான திரைப்படமாக கொண்டுவருதல் என்பது கலை. அந்த கலை தனி மனிதன் ஒருவனை அசைத்து பார்த்தாலே போதுமானது என்பேன். வேறு எந்த வெங்காய ரெவெல்யூஷனும் தேவையில்லை.
Every single word is a fire shot akka.. Thoroughly enjoyed reading the entire write up.. It’s refreshing to see this kinda perspective on movies especially for a movie buff like me.. Keep writing more.. Lots of love to you and your writing akka ❤
பெண்ணுக்கு பெண் எதிரி!!
ஆண் பெண்ணை எவ்வளவு கேவளமாக நடத்துகிறான் என்பதற்கு பதிலாக பெண் பெண்ணை எப்படி நடத்துகிறாள் என்று சிந்தித்தாள் உண்மை புரியும்.
ஆண் தன் சக ஆணை உறவில் விட்டு கொடுப்பதில்லை. இந்த நிலைபாடு பெண்ணில் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் தெரிந்தும் தெரியாததை போல் நடிக்கும் ஆண்களும் பெண்களும் பல்லை கடித்து கொண்டு வாழ்வது நிதர்சனம்.
மச்சானை சகோதரனாகவும், மாமனாரை தந்தையாகவும் பாவிக்கும் ஆண்களுக்கு மத்தியில் மருமகளை மகளாக பார்க்காமல், மாமியாரை தாயாக பார்க்காமல் பெண்கள் செய்யும் அட்டுழியம் மிக அதிகம்.
இந்த நூற்றாண்டில் பெண்ணை விட ஆண்தான் பெண்ணின் மீது அலாதி அன்பும், நம்பிக்கையும், அவளின் சுய மறியாதை அறிந்து தெளிந்து நடத்துகிறான்.
தனக்கு தன் மாமியார் செய்ததை தன் மருமகளுக்கு செய்யவும், தன் மகளுக்கு அது நடக்காமல் இருக்க அப்பெண் எடுக்கும் முயற்சிகளும் சுழற்சியாக தொடர்கிறது. பெண்களுக்கு அந்த சுழற்சியில் இருந்து வெளியில் வர விருப்பமில்லை.
பெண் திருந்தாவிடில் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் நிம்மதி இல்லை..
story narration is too good.. keep going…
The real mind voices of the women when saw those movies and questions are raised in our minds are sharply stabbed by Kani writtings …
Well said kani akka 👏👏