“உணர்வுகளை கட்டுப்பாடின்றி, காலத்தின் குரலாக வெளிப்படுத்த வேண்டும்” என்ற தேவையிலிருந்தே புதுக்கவிதைகள் உருவாகிறது.
சுப்பிரமணிய பாரதி தமிழில் புதுக்கவிதைக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
கவிதை என்பது வெறும் சொற்களின் அலங்காரம் அல்ல; மனிதனின் உள்ளத்தின் பிரதிபலிப்பு.
சொல்ல முடியாத உணர்வுகளை சொல்லவும்
காதல், துயரம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளை பகிரவும்
சமூகத்தின் அநீதி, வலி, மாற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்தவும்
நினைவுகளை பாதுகாக்கவும்
மனஅழுத்தத்தை குறைக்கவும்
மற்றவர்களின் மனதைத் தொடவும்
காலத்தையும் மனிதர்களையும் பதிவு செய்ய கவிதைகள் உதவுகின்றன இவை யாவும் இந்த கவிதை புத்தகத்தில் கவிஞர் தமிழ் இலக்கியன் அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு சொட்டு தாய்ப் பால் கவிதை தொகுப்பை வாசித்த பின் என் மனதில் ஒரு திருக்குறள் நிழலாடின.
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.”
-குறள் 643
பொருள்:
கேட்பவரை ஈர்க்கவும், கேட்காதவரையும் கேட்கத் தூண்டவும் செய்யும் சொல்தான் சிறந்த சொல்.
இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதைகளையும் இந்த திருக்குறளுக்கு சரியாக பொருந்தி போகிறது.
ஒரு சொட்டுத் தாய்ப்பால் மனித உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. சமூக விழிப்புணர்வை ஏற்ப்படுத்துகிறது.
அழகுணர்வை வளர்க்கிறது.சிந்திக்க தூண்டுகிறது. மன நிம்மதியை தருகிறது. வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பதிவு செய்கிறது . ஒவ்வொரு கவிதையிலும் மொழியின் செழிமை தெரிகிறது தமிழ் இலக்கியத்திற்கு அற்புதமான ஒரு படைப்பு தான் ஒரு சொட்டு தாய்ப் பால்.
புத்தகத்திலிருந்து சில உங்களுக்காக…
“இளம்தளிரின் பசிக்கு மேகத்தாயின் மார்பிலிருந்து வடிந்த ஒரு சொட்டுத் தாய்ப்பால்”
இது கவிதையின் மிக அழகான உருவகம்.அதாவது இயற்கை ஒரு தாயைப் போல உலகை வளர்க்கிறது என்பதே கருத்து.என இந்த கவிதையில் நான் புரிந்துகொள்கிறேன்.
இந்தக் கவிதை சொல்ல வருவது,
“சிறிய நம்பிக்கையும் உலகிற்கு உயிர் தர முடியும்.
விடாமுயற்சி இருந்தால் வறண்ட நிலையிலும் புதிய வாழ்க்கை மலரும்.இயற்கை தாயைப் போல உயிர்களைப் பேணி வளர்க்கிறது.”
என்ற ஆழமான உணர்வு. என கவிஞர் தமிழ் இலக்கியன் மிக ஆழமாகவும் நுட்பமாகவும் எழுதி இருக்கிறார். கவிதையின் மொழி மென்மையாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த கருத்து மிகவும் வலிமையாக இருக்கிறது.
“சாதிப் புனிதம்”
என்ற கவிதையில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையையும், சமூகத்தின் போலித்தனத்தையும், அரசின் அலட்சியத்தையும் மிகக் கடுமையாகச் சாடுகிறார் கவிஞர்.
உயர் ரக சினைமுட்டையோடு
காலனி விந்து கலந்துவிடக்கூடாது என
சாதீப்புனிதம் பேசும் தலைவனின்
பரபரப்பு பேட்டி…”
இது சாதி தூய்மை, இனத் தூய்மை போன்ற வெறுப்புணர்வுகளைப் பரப்பும் சாதியத் தலைவர்களை நேரடியாக சாடுகிறது இந்த வரிகள்.
மனிதர்களை சமமாக பார்க்காமல், உயிரியல் தூய்மை போல பேசும் கொடூர மனநிலையை கவிஞர் வெளிப்படுத்துகிறார்.
பேரன்பின் குறியீடு என்ற தலைப்பில் அழகான காதல் கவிதை ஒன்றை எழுதி அசத்தி இருக்கிறார். ஒவ்வொரு வரிகளும் இரசிக்க கூடியவை.இது ஒரு சாதாரண காதல் கவிதை அல்ல;
இயற்கை, மொழி, இசை, மணம், சுவை ஆகிய அனைத்தையும் காதலின் வடிவமாக மாற்றிய கவித்துவ கவிதை. காத்திரம் நிறைந்த காதலை,
இயற்கையோடு இணைந்த அழகை,
சொல்ல முடியாத ஆழமான பாசத்தை,
கிராமிய மணமும் தமிழ்ச் சுவையும் கொண்ட உறவினை
மிக நுணுக்கமான உருவகங்களால் வெளிப்படுத்தி இருக்கிறார் கவிஞர் தமிழ் இலக்கியன் அவர்கள்.
வார்த்தைகள் அளபெடுக்கும் சொற்றொடர்களின் பிரிக்கவியலாத மரபுக்கவிதையொன்றின் ஆழமுள்ள நீட்சி உனதழகு.”
மழை என்ற தலைப்பில் ஒரு கவிதை தாய் அன்பின் உச்சம்.
என் பிள்ளை வீட்டிற்கு வந்த பிறகு பெய்திருக்கக்கூடாதா?”
இந்தக் கவிதை குடும்பத்தில் உள்ள அன்பின் பல நிலைகளையும், குறிப்பாக தாயன்பின் எல்லையற்ற பாதுகாப்பு உணர்வையும் அழகாகச் சொல்கிறது.
கவிதையின் மிகப் பெரிய அழகு என்னவெனில், யாரும் நேரடியாக “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு கண்டிப்பும் அன்பாகவே மாறுகிறது.
சக பயணி
என்ற தலைப்பில் உள்ள கவிதையை வாசித்த பின் என் மனம் அந்த கவிதை வரிகளில் இருந்து மீள்வதற்கு வெகு நேரமானது. ஒரு முறை ஆழ்ந்த மெளனம் கொண்டு கவிதை எழுதிய கவிஞரின் கரங்களை பற்றி கொள்ள விழைகிறேன்.
இந்தக் கவிதை, பொதுப் பயணங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் மறைமுக பாலியல் தொந்தரவையும், அதற்குள் மறைந்திருக்கும் பெண்ணின் சொல்லப்படாத துயரத்தையும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது.
கவிதையின் தொடக்கத்தில், பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவன் முன்னாள் அமர்ந்து இருக்கும் பெண்ணை தொடர்ந்து கவனிக்கிறான். அவனுடைய புன்முறுவல், பார்வை, அவளைப் பற்றிய யூகங்கள் இவை அனைத்தும் அவளுக்கு ஒரு அசௌகரிய உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றும் அவனது செயல்கள், மெதுவாக எல்லை மீறும் தொந்தரவாக மாறுகின்றன.
“கைபேசியின் தொடுதிரை மீது அவனது அலையும் கைகள்…” என்ற வரிகள், அவனுடைய மனநிலையின் அலைச்சலையும், கட்டுப்பாடற்ற ஆசையையும் சுட்டுகின்றன. அதன்பின் அவனது கைகள் இருக்கையின் மீது பரவத் தொடங்குவது, பெண்ணின் தனி இடத்தை மீறி நுழையும் செயலைக் குறிக்கிறது.
“தூங்குவதுபோல் பாவணை செய்யுமவனது கண்கள்…” என்ற இடத்தில், அவன் வெளிப்படையாக அல்லாமல், மறைமுகமாகத் தொந்தரவு செய்கிறான் என்பதை கவிஞர் காட்டுகிறார். அவனுடைய செயல்கள் பெண்ணை முழு இரவும் அச்சத்திலும் விழிப்பிலும் வைத்திருக்கின்றன.
ஆனால் கவிதையின் மிக ஆழமான பகுதி இறுதியில் வருகிறது.
இந்தப் பெண் சாதாரணப் பயணி அல்ல. தந்தையை இழந்த துயரத்தில், இரவு முழுவதும் அழுதுவிட்டு, வாழ்வாதாரத்திற்காக தூரதேசம் செல்லும் நிலையிலிருக்கிறாள். அவளது மனம் ஏற்கனவே பெரும் வேதனையில் மூழ்கியுள்ளது. ஆனால் அவளது அருகில் இருக்கும் ஆண், அவளது மனிதத் துயரத்தை அறியாமல், அவளை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிறான்.
அதனால் இந்தக் கவிதை இரு பார்வையில் பார்க்கலாம்.
1.
பொதுப் பயணங்களில் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் அத்துமீறல்.
2.
ஒவ்வொருவரின் பின்னாலும் தெரியாத காயங்களும் துயரங்களும் இருக்கின்றன; ஆனால் சமூகம் பல நேரங்களில் மனித உணர்வை விட உடலை மட்டுமே கவனிக்கிறது.
கவிதையின் மொழி மிக அமைதியாக இருந்தாலும், அதன் உள்ளே அடக்கப்பட்ட கோபம், பயம், வேதனை, சமூக விமர்சனம் ஆகியவை தீவிரமாக ஒலிக்கின்றன.
இந்த கவிதை தொகுப்பில் மொத்தம் 93 கவிதைகள் உள்ளன ஒவ்வொன்றும் ஆழமான பொருளை உணர்த்துகின்றன. இத்தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு புது வித அனுபவத்தை பெறுவார்கள் என்பதில் ஐய்யமில்லை. தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மகத்தான படைப்பு “ஒரு சொட்டுத் தாய்ப்பால்” நிச்சயம் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல்..
தொடர்ந்து இது போல காத்திரமான படைப்புகளை கொடுத்து வரும் கவிஞர் தமிழ் இலக்கியன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் கிராமத்தில் பிறந்தவர். இவர் செங்கம் ஒன்றியத்தில் உள்ள ஓர் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செங்கம் கல்வி மாவட்டச் செயலாளராகவும், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் செங்கம் கிளைச் செயலாளராகவும் இயங்கி வருகிறார். கல்வி, சமூகச் சேவை மற்றும் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
2019-ல் இவரது ‘கனவில் விழுந்த சொல்’ என்ற முதல் கவிதை நூலும், 2021-ல் ‘நீ முதல் நீ வரை’, 2022-ல் ‘மாயா’ ஆகிய கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன. பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘நன்னன் கோட்டத்து கவிஞர்கள்’ என்ற தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். இதில் இவரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
இவரது இலக்கிய பணி தொடரட்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தமிழுக்கு கிடைத்த சொற்சிற்பி கவிஞர் தமிழ் இலக்கியன் என்பேன்.
நூல்:ஒரு சொட்டுத் தாய்ப்பால்
ஆசிரியர்: தமிழ் இலக்கியன்
வகைமை: கவிதை
விலை:220
வெளியீடு:நவிரா
பக்கங்கள்:164