ஏழு தலைமுறைகள்

‘வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து இருவரும் சம பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்க கருப்பினம் போராடிக் கொண்டிருக்கிறது’ – நூலின் உள்ளிலிருந்து…
உலகிலேயே மிகக் கொடுமையான ஒன்றென்றால் மனிதனே மனிதனை அடிமையாக வதைப்பது தான். ஆணாதிக்கம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முன்னிலை என்பது அன்று மட்டுமல்ல, இன்றும் அது தொடர்கிறது. எளிய மக்களை சிதைப்பதில் என்ன சுகம் தான் இருக்கிறதோ. கேட்காமல் , போராடாமல் ஆட்சியாளர்கள் எதையும் தரமாட்டார்கள். இதுவரையில் அப்படி நடைபெற்றதில்லை. இனி நடக்கப் போவதுமில்லை. சுரண்டலுக்குட்படுபவர்களின் பொறுமையைக் கொண்டு சுரண்டுபவர்கள் பாதுகாப்பு அரணை அமைத்துக் கொள்கிறார்கள். ஆப்பிரிக்கா என்றாலே அருவருப்பான மக்கள், நாகரிகம் இல்லாத மக்கள், காட்டு மிராண்டிகள் என்ற பிம்பமே மற்ற மக்களிடம் நிலவுகிறது. இதைத் தான் சரித்திர எழுத்தாளர்கள் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அறியாமைகள்; புரட்டுகள்; பொய்கள். ஒரு மனிதனை அடிமையாக விலைக்கு வாங்கி வேலையே செய்யாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? கி.பி. 1619-ல் 20 பேரோடு ஆரம்பித்த அடிமை முறை கி.பி. 1810-ல் 10 லட்சம் தாண்டி விட்டதாம். கேட்கவே பகீர் என்கிறதல்லவா! இந்த அடிமை முறைக்கு எதிராக போராடியவர்கள் ஒரு பக்கம் முளைக்கத்தான் செய்தார்கள். காப்ரியல், டென்மார்க் வெஸி, நாட் டர்னர் இவர்களை கைது செய்து தூக்கிலிட்டு வேடிக்கை பார்த்தது வெள்ளையர் அரசு. மார்ட்டின் லூதர் கிங்-ன் பேச்சு ஒரு வீச்சு தான். இந்த அடிமை முறைக்கு எதிராக புத்தகங்கள் வெளியாகி உலகையே உலுக்குகிறது. இந்த புத்தகமும் அந்த வகையில் அமைந்தது தான். ஒரு தலைமுறை அல்ல ஏழு தலைமுறைகள் அடுத்தடுத்து கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர். இன்றும் அவ்வெச்சம் காணப்படுகிறது ஆப்பிரிக்காவில். வேதனையின் உச்சம் இக்கொடுமைகளெல்லாம். வாசித்தால் வருத்தம் மட்டுமே சூழும் இப்புத்தகத்தை வாசிக்க தவறவேண்டாம். எப்படிப்பட்ட கொடுமைகளை மக்கள் அனுபவித்து கடந்துள்ளனர் என்பதெல்லாம் வரலாற்றின் அழியாச் சுவடுகள்.

😔 ஏழு தலைமுறைகள் நூலை ஏழாம் தலைமுறையான அலெக்ஸ் ஹேலி தான் எழுதியுள்ளார் வேதனையோடு. அழகுற மொழிபெயர்த்துள்ளார் ஏ.ஜி.எத்திராஜுலு.

😔 கி.பி.1750-ல் மேற்கு ஆப்பிரிக்கா காம்பியா நாட்டின் ‘ஜப்பூரில்’ துளிர்க்கிறது நாவல். குண்ட்டா என்ற குழந்தையுடன் பிறக்கிறது நாவல். ஜப்பூர் மக்களின் வாழ்வியல் எளிமையானது. ஆண்கள் காடுகளுக்கு, பெண்கள் வயல்வெளிகளுக்கு சென்று உழைக்கின்றனர். வெங்காயம், மரவள்ளி கிழங்கு, பெர்ரி பழங்கள், பருத்தி விளைச்சல் என மக்கள் மகிழ்வாக வாழ்கின்றனர். நியோபோட்டோ பாட்டியின் கதை சொல்லலில் குழந்தைகள் மகிழ்கின்றனர். இப்படியே வாழ்ந்திருக்கக்கூடாதா நியோபோட்டோ எட்டாம் நாளில் நடைபெறும் பெயர் சூட்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குதூகலமாக வாழ்ந்த வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பிக்கிறது சில அத்தியாயங்களை தாண்டியதும் (15-ம் அத்தியாயம் முதல்). வெள்ளையர்கள் குண்ட்டாவை கடத்திச் சென்று முதுகில் நெருப்பில் சுட்டு இரும்புக் கம்பியால் LL என்ற முத்திரையை பதிக்கிறார்கள். சொல்லொண்ணாத் தடியடிகள், சூடான இரத்தம், பசியால் துடிப்பு என பல கொடுமைகளை செய்துள்ளார்கள் வெள்ளையர்கள். துர்நாற்றம் நிறைந்த அறையில் கட்டிபோட்டு கொடுமை, பெண்களை நிர்வாணமாக்கி ஓட விடுதல் அதனினும் கொடுமை, வெள்ளையர்களுக்கு துணை போகும் கருப்பர்கள் செய்யும் கொடுமை, ஒவ்வொரு கருப்பரையும் விலைக்கு விற்றல் என கொடுமைகள் பல நூலில். நூலில் ஒரு சுவாரசியம் இருந்தது. மாண்டிங்கா இனத்தில் பைராகாங்கோ என்னும் இரகசிய மொழி பயன்படுத்தப்பட்டது தான். தப்பித்துச் செல்பவர்களை வேட்டை நாய்கள் விரட்டி பிடிக்கும். காட்டு மிருகங்களை விட கொடுமையானவர்கள் வெள்ளையர்கள்.

ஒவ்வொரு தலைமுறையிலும் கொடுமைகளுக்கு பஞ்சமில்லை. ஏழு தலைமுறைகளிலும் வலிகள் தொடர்கின்றன. புதிய தலைமுறைக் குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்ந்த கடந்த வாழ்க்கையை அப்படியே கதைகளாக சொல்லிக்கொண்டே காலத்தை கடக்கின்றனர். எல்லாம் துயர் நிறைந்த கதைகளே. துயர்களுக்கு இடையில் குண்ட்டா – பெல் காதலும் வந்து மோதுகிறது. நூலில் விதவைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் 14 முதல் 16 வயதிற்குள் திருமணம் முடித்தாக வேண்டும். கிஜ்ஜியின் வாழ்க்கையை வாசிக்கும் போது கண்ணீர் திரள்கிறதை தவிர்க்கமுடியாது. ஜார்ஜ் வாழ்க்கையில் சற்று மாறுதல்கள் நிகழ்கிறது. ஆனால் வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் வாழ்கின்றனர். 1860-களில் பல மாற்றங்கள் நடைபெறுகிறது. சுதந்திரம் முளைக்கிறது ஆபிரகாம் லிங்கனால் 1863-ல். சொல்ல முடியாத மகிழ்ச்சியில் மூழ்கிப் போகிறார்கள் அடிமைப் படுத்தப்பட்ட கருப்பர்கள். 1918- ஏழாம் தலைமுறையான அலெக்ஸ் ஹேலி முதல் உலகப்போரில் பங்கேற்று உடல் நலம் பெற்று பெர்த்தா ஜார்ஜை திருமணம் முடிக்கிறார். 1959-ல் வேலையில் ஓய்வு பெற்றப்பின் முழு நேரத்தையும் எழுதுவதில் கழித்திருக்கிறார். ஏழு தலைமுறைகள் உருவான கதையும் இதுதான். வலி நிறைந்த வரலாறு இது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆணாதிக்ககாரர்கள் மட்டும் இன்றும் அழியவில்லை. இன்றைய போர் முழக்கங்களே அதற்கு சான்று. இந்த நூலை வாசித்தவர்கள் அமெரிக்காவை அறவே வெறுத்துவிடுவார்கள். மனிதனின் இரத்தம் குடித்தவர்கள் அவர்கள். வரலாற்றில் கொடுமையானவர்களின் பட்டியலில் நீடித்து நிற்பார்கள். மனம் கனக்க வைத்த புத்தகமிது வாசிக்க தவறாதீர்கள். வலிகள் அதிகம்; துயரங்களும் அதிகம்.
பேரன்புடன்,
ரசல்

புத்தகம் : ஏழு தலைமுறைகள்
ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி
தமிழில்: ஏ. ஜி.எத்திராஜூலு
பதிப்பகம்: சிந்தன் புக்ஸ்
பக்கங்கள்: 304

விலை : 300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!