புழுதி பெண்ணதிகாரம் சிறப்பிதழுக்காகப் பல தொழில் நிறுவனத்தினை நடத்தும் பெண் ஆளுமைகளிடம் மட்டுமில்லாமல் வீட்டை நிர்வகிக்கிற, சிறு குறு தொழில் செய்யும் பல பெண் ஆளுமைகளிடம் நேர்காணல் செய்யப்பட்டது அவற்றின் தொகுப்பே இவை..
1.பெண்கள் ஏன் தொழில் முனைப்பில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் கருதுவது?
2.சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களாக நீங்கள் கருதுவது?
3.புழுதி, பெண்னதிகாரம் வழியாக நீங்கள் சொல்ல விரும்புவது?
*******
1. நிதி சுதந்திரம் என்பது பெண்களுக்கு மிகவும் அவசியம். ஒரு பெண் தன் ஆசைக்காக அல்லது கனவுக்காக ஆணிடம் நிதி கேட்கும் நிலை தான் முதலில் அவள் தன்னம்பிக்கையைத் தடுக்கிறது. தொழில் முனைப்பில் ஈடுபட வேண்டியது அவளுக்கான போதிய நிதியை அவளே ஈட்ட வழி வகுக்கும்.
2. முதலில் அவள் வீட்டிலேயே கனவுகளை முடக்குவது. பெண்ணின் லட்சியங்களை உதாசீனப் படுத்துவது. குடும்பப் பொறுப்புகளைப் பெண்ணின் தோளில் சுமத்துவது.
3. பெண்களின் கனவுகளுக்கு நாம் துணை நிற்பது. பெண்கள் தைரியமாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் சூழலை உருவாக்குவது. எப்போதும் பெண்ணை தராசுக் கல்லில் வைத்துப் பார்க்காமல் இருப்பது. இந்த மாற்றங்கள் மனிதராய் நம்மை இன்னும் மேம்படுத்தும்.
-மலர்விழி, கவிஞர், பெங்களூர்
*******
1.அன்றைய நாள் தொடங்கி இன்றைய நாள் வரையில் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டும் என்கிற நிலைமை காணப்படுகிறது. சமூகத்தின் பொதுப் புத்தியில் பரவலாக அந்த எண்ணம் புரையோடியுள்ளது. இச்சமூகப் போக்கை மாற்றுவதற்குப் பெண்கள் பல்துறைகளில் பணியில் அமர்வதும், சுயமாகத் தொழில் செய்து முன்னேற்றம் காண்பதும் அவசியமாகிறது. இதன் மூலம் பெண்கள் சுயமாக இயங்கக்கூடிய சூழல் உருவாகும். மேலும், பெண்கள் சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக விளங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது என் எண்ணம்.
2.சமூகத்தில் பெண்கள் வீடு, கல்விக்கூடம், பணியிடம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் எண்ணற்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளன. இன்றைய காலச் சூழலில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக உரிமைகளை அடைந்து விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டாலும், ஒடுக்கப்பட்ட பாலினமாகவே பெண்கள் இருந்து வருகின்றனர். உளவியல் அடிப்படையிலும், பாலியல் அடிப்படையிலும், உழைப்பில் அடிப்படையிலும் என எல்லா நிலைகளிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர் என்பது வெளிப்படை.
3. சமுதாயத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்றைய சூழலில் பெண்களின் அதிகாரம் குறித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் புழுதி இணைய இதழ் முன்னெடுத்திருக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. புழுதியில் வெளியாகும் பெண்கள் அதிகாரம் குறித்த பதிவுகள் பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் சென்றடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே ஒட்டு மொத்த பெண்கள் சமூகம் சார்பாக என் வாழ்த்துகள்.
-இர.இரசிகா,
முதுகலை ஆங்கில ஆசிரியை,
திருவண்ணாமலை.
*******
1.பெண்கள் தொழில் முனைவராக இருக்கும்போது பெண்களுக்கு நிறைய விஷயங்களைப் புதிதாக அறிமுகப்படுத்த முடியும், அது பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். பெண்கள் தொழில் முனைவராக இருக்கையில் நிறையப் பெண்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க முடியும், அவர்கள் பணிக்கு அமர்த்தப்படுபவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்கவும் மாட்டார்கள். ஒரு ஆரோக்கியமான சூழலைத் தொழில் முனைவராக இருக்கும் பெண்கள் அவர்களிடம் பணிபுரியும் பணியாறயளர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும்.
2. இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளக் கூடிய சிக்கலாகக் கருதுவது அவர்கள் மனநிலை தான். குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைப்பது. அவர்களும் இவர்களும் உங்கள் முன்னேற்றத்திற்காக உழைக்கமாட்டார்கள் எனும் போது, அவர்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் தேவையற்றது. இந்த மனநிலையை உடைத்தெறிந்தாலே சிக்கல்கள் தீர்ந்துவிடும். மாற வேண்டியது நாம் தான். அவரவர் அவர்களது வேலையை செல்வனே புரிதலோடும், நிதானத்தோடும் செய்தால் இந்த சமூகத்தில் சிக்கல்களாக எதுவும் இருக்காது.
3. டியர் பெண்களே, நம்மைத் தியாக உள்ளமே, தாய்க் குலமே எனத் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய காலகட்டத்தையெல்லாம் நாம் கடந்து விட்டோம். சம உரிமைக்காகப் போராட வேண்டிய சூழலும் மாறிவிட்டது. நம் பசிக்கு நாம் தான் உழைக்க வேண்டும், காலம் மாறிவிட்டது. கால ஓட்டத்தினோடே சேர்ந்து பயணித்து, உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முற்படுங்கள். தூக்கிவிட யாரும் வரப் போவதுமில்லை, அதற்கான நேரமும் யாருக்குமில்லை. இருப்பது ஒரு லைப், நிறையச் சம்பாதித்து, நிறைவா வாழலாம். அது பணமோ, அன்போ நிறையச் சம்பாதித்து, நிறைவா வாழலாம்.
பெண்கள் தினத்திற்கு உங்கள் எல்லோருடனும் சில கருத்துகளைப் பகிர வாய்ப்பளித்த புழுதி நண்பர்களுக்கு நன்றிகள். அவர்களின் இந்த இலக்கிய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
–எழிலரசி குமரேசன்.திருப்பத்தூர்.
*******
1. பெண்கள் என்றாலே சமைப்பதற்கும் வீட்டைக் கவனிப்பதற்கும் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் இன்ன பிற இத்தியாதி வேலைகளுக்கும் தான் என்று இன்னும் கூட நினைத்துக்கொண்டிருக்கும் மடசாம்பிராணிகளுக்கு எங்களுக்குச் சம்பாதிக்கவும் தெரியும் எனக் காட்ட நிச்சயம் பெண்கள் தொழில் முனைப்பில் ஈடு படவேண்டும்.
2. சமூகத்தில் பெரும் சிக்கல்கள் எத்தனை வந்தாலும், திடக்காத்தரமான மன நிலையுடன் போராட கூடியவள் பெண்…. எதையும் ஒரு கை பார்த்து விடுவாள், அவள் சமூகத்துடன் போராடும் முன் அவளின் குடும்பத்துடன் போராட வேண்டியுள்ளது… குடும்பத்தை ஜெயித்துவிட்டால் அவள் உலகாளுவாள்…
3. ஒரு சமூகம் என்பது குடும்பத்திலிருந்து தான் தொடங்குகிறது என்று நான் நம்புகிறேன் … ஒரு ஆண் பொருளாதாரத்தில் பெரிதும் சாதிக்கத் துணையாக நிற்கும் குடும்பம், பெண் சாதிக்க முனையும் பொழுது ஏன் புறக்கணிக்கிறது ? ஆண் சம்பாதிக்கும் பணத்தைப் போலவே பெண் சம்பாதிக்கும் பணமும் சரியாக மதிக்கப்பட வேண்டும்.
பெண் பிரதமர்கள் வரும் இந்த காலத்திலும் , தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க மூன்று பேரைத் திருமணம் செய்துகொண்ட அவலமும் நிகழ்கிறது.மாற்றம் வேண்டும் தான், ஆனால் எல்லோருக்குமானதாக அது இருக்க வேண்டும். புழுதி தற்போது பெரும் அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது, அதனின் வழியே என் பதில்கள் வருவது பெரும் மகிழ்வை அளிக்கிறது.
-கனி விஜய் திருவண்ணாமலை.
*******
1.திறன்களைப் பயன்படுத்துதல் என்பது முதன்மையானது. தங்கள் விருப்பங்களுக்கு எவரையும் சார்ந்து இருக்காமல் இருக்கலாம்
2.ஒழுக்கம் மீதான பழி தூற்றுதல், அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாமல் இருத்தல், இல்லற பணி ச் சுமையினால் அலுவலகப் பணியினை திறம்படச் செய்து முடிக்க இயலாமை.
3.வாழ்க்கை வாழ்வதற்கே எந்த தெளிவுடன் நம் திறன்களை வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழ்வது நலம்
-மான்விழி ரஞ்சித், திருவண்ணாமலை
*******
1. தற்காலப் பெண்கள் பெரும்பாலும் கல்வி கற்றவர்களாகவேதான் இருக்கிறார்கள். தங்கள் கல்வியறிவின் துணையுடனோ அன்றி தங்கள் திறமை அறிவு அனுபவத்தின் துணையுடனோ பெண்கள் தொழில்முனைப்பில் ஈடுபடவேண்டும். பெரும்பாலான பெண்கள் தொழில்முனையும்போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் இல்லாமல் தீர ஆலோசித்து நஷ்டம் ஏற்படாதவாறு மிகுந்த கவனத்தோடு ஈடுபடுவார்கள். தொழில்சார்ந்து இயங்கும்பொழுது அவளது அறிவு மேம்படுகிறது. பிரச்சனைகளைக் கையாளும் பக்குவம் கிடைக்கிறது. முக்கியமாக குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார உதவி தரமுடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் பயனளிக்கிறது. பெண் தொழில்முனைப்பில் ஈடுபடும்போது தன் சுயசார்புப் பொருளாதார மேம்பாட்டினால் மிகுந்த தன்னம்பிக்கைப் பெண்ணாகிறாள்.
2. சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய முதல் சிக்கலே பெண்கள்தான். அதன்பிறகு அவளே அவளுக்குச் சிக்கல். தன் பாதையைத் தானே தீர்மானித்தபிறகு எதிர்வரும் தடைகளிலோ அல்லது கீழான விமர்சனங்களிலோ தேங்கிவிடாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
3.புழுதி பெண்ணதிகாரம் சிறப்பிதழ் ஒவ்வொரு துறை சார்ந்த பெண்களின் வாழ்வியல் முறைகளையும் கடந்து வந்த பாதையும் அதன் பின்பான வெற்றிச் சுவட்டையும் வெளியிட்டிருக்கிறது. நாடுகடத்தும் பெருவாரியான பெண்களின் வாசிப்புக்குச் சென்றடைய வேண்டும். இதுவும் ஏற்றப்படாத பெண்ணொளிக்குத் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயப்பாடே இல்லை.
-விஜயராணி மீனாட்சி,இராஜபாளையம்
*******
1.பாலினத்தை தவிர எவ்விதத்திலும் ஆணுக்கு நிகரானவர்கள்.
2.பாலியல் துன்புறுத்தல்கள்.
3.பெண்கள் என்பவர்கள் எதிர் பாலினத்தவர்கள் அன்றி வேரேதுமில்லை..
-சங்கரி விக்ரம்பிரபாகரன்
*******
1. முதலில் பெண்கள் கண்டிப்பாக வேலைக்கோ அல்லது சுய தொழிலோ செய்ய வேண்டும். யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டாம். women should be independent… No one is permanent in life even those parents, husband, boyfriend and friends எல்லாம் சிலகாலமே one certain time la financially issue வரும் போது யாரும் உதவி பண்ண மாட்டாங்க்க As a girl ha marriage பிறகு husband வீட்டுக்கு அனுப்பி வைச்சிடுவாங்க்க அப்போ அந்த வாழ்க்கை சரியா இல்லாம தனியா இருக்க வேண்டிய ஒரு சூழல் வரும் போது யாரை நம்பி நாம் இருக்கிறது, if I have job means I don’t want to depend on anyone… I’ll live my life how I want to be.
2. நாம எல்லாம் performance பண்ணி மேல வந்தா அந்த பொண்ணு சரி இல்லனுன் சொல்ற society இது, எதுவுமே பண்ணலனா.ஒன்னுமே தெரியலனா நி எதுக்குமே லாய்கி இல்லனு சொல்லி ஒதிக்கிவிடுற societyல இருக்கோம் அத பண்ணாத இத பண்ணாத…. நி பொண்ணு you have to do it அப்படினு பண்ற men’s even parents… Adjust பண்ணிக்கோ என்றூ சொல்ற parents… அவர்களே போண்ண புரிஞ்சிக்கத போது then society யாருமே புரிஞ்ச்சிக்க மாட்டாங்க்கா..
3. Simple don’t depend on anyone working for yourself love yourself don’t marry a successful man… Be a successful woman everything will come automatically.
-சங்கீதா சேகர், Media banking, Banglore.
******
1. குடும்ப பொருளாதாரம் என்பது சாதாரண சமூகத்தில் பெண்களின் ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நடைப்பெறுகிறது. பெரும்பாலான ஆண்களின் ஊதியம் மதுக்கடைகளுக்கு மட்டுமே சென்றுவிடுகிறது. இந்த நிலையில் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் கூடுதலாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதில் வயது வித்தியாசமே இல்லை. கால் வயிறு உணவிற்காக பெற்ற பிள்ளைகளுக்காக பெற்றவர்களுக்காக, உடன் பிறந்தவர்களுக்காக என்று சூழ்நிலை காரணமாக கிடைக்கும் தொழிலை செய்கின்றனர்.
விடியற்காலை கீரை, பூ முதல் இட்லி கடை, . அதேபோல் மாலையில் வடை, சுண்டல், தள்ளுவண்டி கடை என்று பலவிதங்களில் தங்களால் இயன்ற அளவு பெரிய முதலீடு இல்லாத சிறு தொழில்களில் பெண்கள் ஈடுபடுகின்றனர்.
2. ஒரு பெண் தன் கடின உழைப்பால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடையும் போது அவளின் பெண்மையை இழிவுப்படுத்தும் பெண் என்பதாலேயே வெற்றி கிடைக்கிறது என்று புறனி பேசும் மக்களால் அந்த பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்திற்காக தன் இலட்சியத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் பெண்களை வருடத்தில் ஒரு நாள் மட்டும் கொண்டாடாமல் வாழ்நாள் முழுவதும் தன்னுடன் பயணிக்கும் சக மனிதி என்று அனைவரும் உணர வேண்டும்.
3. உங்கள் உடல் நலனிற்காக எளிமையான சத்தான உணவு, போதுமான ஓய்வு, தேவையான நீர் அருந்துதல், ஓரளவு முற்பகல் வெயில் படும் படி இருத்தல், நடைப்பயிற்சி, சீரான ஆழமான சுவாசம், மண்ணோடு தொடர்பு கொள்ளுதல், நேரம் இருக்கையில் அதிகாலை கடற்கரை செல்வது, அன்றாடம் நிகழும் தவிர்க்க முடியாத பிரச்சனைகளை அவ்வப்போது சமாளிப்பதும் அதை மனதிற்குள் தூக்கி சுமக்காமல் இந்த கணம் தவிர்க்க முடியாது என்று ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டால் பெண்ணதிகாரம் என்பது சாத்தியமாகும்.
— சாந்தாதேவி
அக்குயோகா மருத்துவர் & வாழ்வியல் வழிகாட்டி, சென்னை.
********
1. பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்துவது சிறப்பாக இருக்கும், இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும் கிரியேட்டிவ் திறமை நினைத்தவற்றை சரியாக மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் போன்ற பன்முகத் திறமை கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பிள்ளைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக பெண் இருப்பாள் அவற்றால் நிறைய பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும், தானும் உயர்ந்து சமூகத்தினை உயர்த்துவார்.
2.பெண்கள் அவர்களின் இலட்சிய கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியான சமூக கட்டமைப்பு நம் நாட்டில் இன்னும் கிடையாது.இங்கு குடும்பப் பொறுப்புகள் அனைத்தும் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே கவனிக்கும் வகையில் இருந்து கொண்டிருக்கின்றது. வீட்டிலும் அலுவலகத்திலும் அவர்களின் வேலையை திறம்பட செய்ய பல சிக்கல்களை அனுபவிக்கிறார்கள்.அலுவலகத்தில் அவர்களின் வேலையில் மேன்மேலும் வளர்ச்சி அடைய அல்லது விருப்பமான துறையில் சாதிக்க பெண்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லை. Work-Life Balance செய்வதும் கடினமாக இருக்கின்றது. மேலை நாடுகளில் உள்ளதைப் போல Part time, Work from home வேலைவாய்ப்புகள் இங்கு கிடைப்பதில்லை.covid -க்கு பிறகு தான் Work from home வாய்ப்புகள் இங்கு வந்தன. தற்போது அவை மிக மிகக் குறைந்த அளவிலே உள்ளன.மேலை நாடுகளில் எந்த இடத்தில் வசித்தாலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.நம் நாட்டில் மக்கள் தொகை நகரத்தை விட புறநகர் பகுதியில் அதிகமாக உள்ளன.ஆனால் இங்கு மாநகரங்கள் தவிர மற்ற இடங்களில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.இதனால் சிறு நகரங்களில் உள்ள பெண்கள் நன்குப் படித்திருந்தாலும் வேலைக்குப் போக முடிவதில்லை.இன்னும் சில மாநிலங்களில் புறநகர் பகுதிகளில் பெண்களை படிக்க வைப்பது குறைவாகவே உள்ளது.
3. பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கடைபிடித்து அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதில் பெண்களுக்கு அதிக பங்கு உள்ளது தற்போது பெண்களால் வேலைப்பளு காரணமாகவும் அதனைப் பற்றி புரிதல் இல்லாததாலும் பண்டிகைகளின் பாரம்பரியத்தை சரியாக கடைபிடிக்க முடிவதில்லை இதில் சில முக்கியமான பாரம்பரியங்களை தெரிந்து வைத்துக் கொண்டு கடைப்பிடிப்பதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு அவற்றை உணர்த்த முடியும் தலைமுறை தலைமுறையாக நம் பாரம்பரியத்தை கடத்துவது நம் கடமையாகும்.
- சரளா ஜெயபிரகாஷ், எழுத்தாளர், அமெரிக்கா.
Q&A helps in understanding the concepts better 👍