உலகளவில் மனிதன், தற்காலச் சுமைகளிலிருந்து சிறிது நேரம் ஓய்வு பெற, கடந்த கால நினைவுகளை எண்ணிப் பார்க்க ஆரம்பிப்பான். எந்த காலத்திலும் சுமை என்பது, கடந்த காலமாக மாறிய பின் சுகமான நினைவாக மாறிப்போகும். அப்படி சில ஆண்டுகள் பின் நோக்கி நாம் பெறும் ஆறுதலை விட, பல பல நூற்றாண்டுகள், நினைவுகளில் அல்ல, நிஜத்தில் பின் நோக்கி, தனக்கு மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த சமூகத்தையே பெருமிதம் அடையச் செய்பவர் தான் நம்  வரலாற்றாய்வாளர் திருமிகு சுபாஷிணி அவர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்குதியில் ஜெர்மனியிலும் பிற இடங்களிலும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் உருவாகி வந்த பிறகு தான், தொல்லியல் ஆய்வாளர்கள் பெரும் அளவில் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தனர். பள்ளியில் நாம் வாசித்த வரலாற்றையும் கடந்து, இன்றளவும் எதை கண்டறிகிறார்கள்? நான் கேட்ட ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்…

போராளி ஃபிடல் காஸ்ட்ரோ, தன் நாட்டு மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கினார். அம்முயற்சியில், 103 வயது மூதாட்டி ஒருவர், தன் பெயரை எழுத கற்றுக்கொண்டார். பெருமிதத்துடன் அந்த மூதாட்டி, அதை காஸ்ட்ரோவிடம் காண்பித்து, ‘காஸ்ட்ரோ நீ ஏதாவது சாதனை செய்திருக்கிறாய் என்றால், என்னைப் போன்ற ஒரு 103 வயது மூதாட்டியை எழுத படிக்கவைத்தது தான்’ என்றாராம்.

அதற்கு காஸ்ட்ரோ, ‘இதில் என்னுடைய சுயநலமும் உண்டு. 103 வருட காலம் நீங்கள் ஒரு கரும்புத் தோட்டத்தில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தீர்கள் அல்லவா? நீங்கள் உங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்பதற்காக தான், நான் உங்களை படிக்கவைத்தேன்’ என்றார் காஸ்ட்ரோ. ஒருவர் தன் இன்னல்கள், கடந்து வந்த பாதையை, இருந்த சூழலை எழுதுவது தான் உண்மையான வரலாறு. உண்மையில் ராஜாக்கள் ஆண்ட கதையும் போர் தொடுத்த கதையும் வரலாறு அல்ல.

இப்படிப் பட்ட உண்மை வரலாற்றைத் தேடி, கால இயந்திரத்தில் பின்நோக்கிப் பயணம் செய்து, பல பல தகவல்களை சேகரித்து, அனைத்தையும் ஆவணப் படுத்தி, புத்தகமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியைச் செய்துகொண்டிருக்கிறார் திருமிகு சுபாஷிணி அவர்கள்.

வரலாற்றை ஆராய்ந்தால், கடந்த கால நிகழ்வுகள், எப்படி இன்றைய நிலையை உருவாக்கியது, என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

அத்துடன் DNA science, அருங்காட்சியகம், தமிழ் பண்பாட்டை உலகளவில் கொண்டு சேர்ப்பது, என்று பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இனி தாமதிக்காமல், சிறப்புமிக்க ஒரு வரலாற்றாய்வாளரின் நேர்காணல், இதோ, புழுதி ‘பெண்ணதிகாரம’ வாசகர்களுக்காக.

கே.  வணக்கம். உங்களை பற்றிய அறிமுகம்?

ப.  வணக்கம். நான் சுபாஷினி. பிறந்தது மலேசியாவின் பிணாங்கு என்ற பகுதியில். எங்க அம்மா, தஞ்சாவூரைச் சேர்ந்தவர். அப்பாவின் குடும்பம், 3 தலைமுறைகளாக மலேசியாவில் இருக்காங்க. 1800களில், கப்பல் இங்கே நம் ஊரிலிருந்து (தமிழகம்) கிளம்பும். அதுல, ஒப்பந்தத் தொழிலாளர்களா, கங்காணிகளா வேலை செய்யக் கூட்டிட்டுப் போவாங்க. அந்த சமயத்தில், வேறு சில வியாபாரிகள், வெங்காயம், சாம்பிராணி, இது போன்ற பொருட்கள வணிகம் செய்யவும் போவாங்க. போகும் ஒவ்வொரு தடவையும், சொந்தகாரங்க யாராவது கூடவே கிளம்பிடுவாங்க. அப்படியாகப் போனவர் தான், என் அப்பாவுடைய அப்பாவுடைய அப்பா.

அங்கே போனாலும், ஆண்களுடைய எண்ணம் எப்படினா, இந்தியா வந்து தான் பெண் பார்த்து கல்யாணம் பண்ணுவாங்க. அந்த ஒரு காரணத்திற்காக, எங்க அப்பா வேலை பார்த்து, 32 வயசுல தஞ்சாவூர் வந்து, 40 நாள்ல பெண் பார்த்துக் கல்யாணம் பண்ணிகொண்டார். அப்பா முதல்ல கிளம்பி போனாரு. அம்மா 18 வயசுல தனியா கப்பலில் பயணம்செய்து, மலேசியா போயிருக்காங்க. அங்கே போய் பட்டப்படிப்பை முடிச்சாங்க. பின் சித்த மருத்துவம் படிச்சாங்க. எனக்கு ஆறு வயசு இருக்கும் போதே பொது சேவையில் ஈடுபட்டாங்க. அதன்பின் அரசியலுக்குப் போனாங்க. இவங்களைத் தொடர்ந்து, என் அக்காவுக்கு அரசியல் ஈடுபாடு உண்டு.

எனக்கு, படிப்பின் மீது மட்டுமே ஆர்வம். கம்பியூட்டர் சயின்ஸ் என்பது அப்போது மிகப்பிரபலம். It was an emerging science. டீச்சர் டிரெயினங் முடிச்ச கையோட, கம்பியூட்டர் கோர்ஸ்ல சேர்ந்தேன். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் IT படிப்பை முடித்தேன். பின் பிணாங்கு வந்து, ஒரு வருடம் கல்லூரியில் ஆசிரியராக வேலை செஞ்தேன்.  ஆசிரியராக வேலை செய்யும் போது, Automation engineering என்ற பைலட் புரோக்ராம் படிக்க ஜெர்மனி சென்றேன். பென்ஸ் கம்பெனியில் வேலை செய்துகொண்டே, படிப்பை முடித்தேன், முதுகலைப் பட்டமும் பெற்றேன்.  

எனக்குக் கல்வியின் மீது ஆர்வம் அதிகம். என் சிந்தனை என்னவென்றால், பெண்ணுக்குக் கல்வி இருந்தாலே, liberation வந்துடும். எல்லா விதத்திலும் தனி மனிதனுக்கான  மதிப்பைத் தருவது, கல்வி தான். இரண்டாவது, நமக்கான பெருமைனு ஒண்ணு இருக்கு. அது தான் அறிவு, knowledge. எவ்வளவு அறிவை நாம தேடிக்கிறோமோ, அந்த அளவுக்கு, நமக்கொரு satisfaction  கிடைச்சிட்டே இருக்கும். 

என்னுடைய ஆர்வம் இயந்திரம் எப்படி இயங்குதுங்கறதுல தான் இருந்தது. காரணம், உலகமே அதுலதான் இயங்கி கிட்டிருக்கு. மனித உழைப்பை உலகம் முழுவதும் குறைக்கப் பார்க்கிறார்கள். மனிதனுடைய திறமையை இன்னும் உயர்தரமான வேலைகளுக்கு உபயோகப் படுத்தணும்னு, மேலை நாடுகள் எல்லாம் முன்னேறிப் போயாச்சு. ஜப்பான் போன்ற நாடுகளில், ரோட்டை சுத்தம் செய்ய, சாக்கடை சுத்தம் செய்ய, பனியை அகற்ற, எல்லாமே இயந்திரம் தான். அதை இயக்க மற்றும் பழுது பார்க்க மட்டுமே மனித அறிவு பயன்படுது. 

கேகணினித்துறையில் இருந்து தமிழ் மரபு சார்ந்து இயங்கும் திருப்பம் எப்போது எப்படி நிகழ்ந்தது?

ப.   அம்மாவுக்கு இருந்த தமிழ் அறிவு காரணமா, எனக்கும் தமிழ் மொழில ஆர்வம் இருந்தது. இதன் அடிப்படையில், பேராசிரியர் கண்ணன் அவர்களை சுவிட்சர்லாந்தில் சந்தித்துப் பேசினேன். பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களையும் சந்திச்சேன். அவர் தான் ‘பிராஜெக்ட் மதுரை’யை ஆரம்பித்தவர். அதில் நானும் 14  புத்தகங்கள் டைப் பண்ணிக் கொடுத்திருந்தேன். 

பின் கண்ணன் அவர்கள் என்னிடம் சொன்ன விஷயம், “உங்களுடைய IT துறை அனுபவம் வைத்து ஒரு புது conceptஐ நாம உருவாக்கணும். தமிழோட antiquities, அதன் தொன்மை (originalities) குறையாமல் பாதுகாக்கணும். Digitalise பண்ணனும்” னு சொன்னாரு. சரி, எனக்கு அதற்கான அறிவும் இருக்கு, ஆர்வமும் இருக்கு. MITல இது மாதிரி நிறைய பண்ணிட்டாங்க. Project Gutenberg என்ற வேலையை அவங்க அப்பவே தொடங்கிட்டாங்க. உலகத்துல இருக்குற எல்லா மொழி manuscript ஐயும் நாம digitalise பண்ணனும் என்ற அடிப்படையில் கொண்டுவந்தாங்க. 

ஒரு தாளோ, புத்தகமோ, எத்தனை நாட்கள் தாங்கும்? புத்தகங்கள் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து காணாமல் போகும். அப்போ, பாதுகாக்க சிறந்த வழி என்னனு பார்த்தேன். இந்த ஆர்கைவ்  (archive) பண்ணுவதை, மைக்ரோ ஃபிட்ஜ் மற்றும் டிஜிடல் காப்பியாகத்தான் எல்லா நாடுகளிலும் செய்றாங்க. அதே சமயம், அதைப் பண்ண பிறகு, ஒரு இடத்தில் வைக்கக் கூடாது. மூன்று நான்கு இடங்கள்ல வைக்கணும். அப்போ தான் தகவல், ஓர் இடத்தில் காணாமல் போனாலும்,  வேறு இடத்தில் data பாதுகாக்கப்படும்.  

2001ல இந்த பணி தீவிரமாச்சு. அப்போதான் முதல் முறையா தமிழ்நாட்டுக்கு வர்றேன். அடுத்த வருடம் தமிழ்நாடு தொல்லியல் துறையோடு உட்கார்ந்துப் பேசுறோம். பின் நானே நண்பர்களுடன் சேர்ந்து பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வருடமும், ஜெர்மனியிலிருந்து தமிழ்நாட்டிற்கு மூன்று முறை வர ஆரம்பித்தேன்.  ஒவ்வொரு முறை வரும் போதும் பழமையான புராதன விஷயங்கள் பல இருப்பதைப் பார்ப்பேன். பின் தான் உணர்ந்தேன், வரலாறு என்பது மன்னர்கள் உருவாக்கியது மட்டும் அல்ல, அது மக்களுடன் சேர்ந்தது என்று. அப்போ, மக்கள் கிட்ட பேசுனாதான் வரலாறு தெரிய வரும். சின்னங்களா, ஓலைச்சுவடிகளா, சிற்பங்களா, கட்டிடங்களா, வாய்மொழி வரலாறா, பல வகையில வரலாறு  இருக்கு.  இது எல்லாமே ஆவணப்படுத்தணும், digitalise பண்ணனும். 

பின் ஒரு கேள்வி வரும். மக்கள் சொல்வது உண்மை வரலாறா என்று. ஒரு 5% வரலாற்று உண்மை அதில் இருக்கலாம். அதன்பின் வருவது data analysis. எதை ஏத்துக்கணும், எதை நீக்கணும், எது உண்மைத்தரம் இல்லாத தகவல்கள்னு  பார்த்து, அதோட மூடிவைக்க முடியாது.  இதை வேறு தகவலோட ஒப்பிட்டுப் பார்த்து, உறுதிப் படுத்தணும். இறுதியில் எல்லாமே ஆவணப்படுத்தணும். 

மொத்தம் ஐந்து விதமான வேலைகள் இருக்கு. 

  1. Identification- எது எங்கே இருக்குன்னு தகவலைத் தேடணும்.
  2. Digitalisation- கிடைத்த தகவல்களை, தரவுகளை பத்திரப்படுத்தணும்
  3. Cataloguing- தரவுகளைப் பிரித்து வரையறை செய்வது
  4. Transcribing- ஓலைச்சுவடிகளில் இருப்பதை அப்படியே எழுதுவது
  5. Publishing- புத்தகமாக வெளியிடுவது. 

கேதமிழ் மரபு அறக்கட்டளை துவங்குவதற்கான காரணமும், அதன் செயல்பாடுகளும் ?

ப.    இந்த பணிகள் ஒரு NGO, தன்னார்வத் தொண்டு நிறுவனம் மாதிரி நாங்களே செஞ்சுகிட்டிருந்தோம். இது ஏதோ நான்கு பேர் செய்யும் வேலையாக மட்டுமே இருக்கே, இத மக்கள் கிட்ட எப்படிக் கொண்டு போறதுன்னு  யோசிச்சோம்.  பல கல்லூரி மாணவர்களிடம் இதைப் பற்றி பேசி, ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்ந்த்தினோம். முன் குறிப்பிட்ட ஐந்து பணிகள்ல முதல்  இரண்டு மட்டுமே செய்து கொண்டிருந்தோம். அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்னேறிப் போக திட்டமிட்டோம். 

அதன் பின் தான் இதை THFIஎன்ற ஒரு இயக்கமா, தமிழ்நாட்டில் பதிவு செஞ்சோம். கிட்டதட்ட 3,000 நண்பர்கள் இதுல இருக்காங்க. யாருக்கு ஆர்வம் இருக்கோ, அவங்க வந்து சேரலாம். கட்டணம், பதிவு என்று எதுவும் இல்லை. 

இன்று, இலங்கையின் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திலும் எங்கள் ஆய்வு தொடங்கியிருக்கு. அதேபோல, ஐரோப்பியா போன்ற தமிழர்களைப் பற்றிய பதிவு ஒன்றை செய்துவருகிறோம், பின் மலேயா மற்றும் சிங்கப்பூர். எங்க வேலைகள் பரவிகிட்டேப் போகுது. இதுல, எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டியது preservation, காரணம், நம் வரலாறு  சார்ந்த விஷயங்கள் என்பது, இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு. 

கே.  உண்மை தான். முன்னோர்கள் சிலவற்றை ஆவணப்படுத்தியதால் தானே, இன்று  நம்மால் வரலாற்றைத்  தெரிந்து கொள்ள முடிகிறது?

ப.  கண்டிப்பாக…. நம்ம weakness என்னனா, ஆவணப்படுத்தும் எண்ணமே நமக்கு இல்லை. பலருக்கும் இது தேவையாங்கற எண்ணம் தான் மேலோங்கி இருக்கு. நா எந்த ஊருக்குப் போனாலும், அங்கிருக்கும் இடம், மக்கள், அவர்களின் உணவு, உடை, பழக்கவழக்கங்கள், எல்லாமே படம் பிடிச்சு எழுதி, ஆவணப்படுத்துவேன். It is information. 

தமிழ்நாட்டைத் தாண்டினால், எல்லாமே வேறதான். ஜெர்மனிக்கு டிசம்பர் மாதம் வந்தீங்கன்னா, காலை பத்து மணிக்கு சூரியன் வரும். மாலை நாலு மணிக்கெல்லாம் இருட்டிடும்.  அதேபோல வெய்யில் காலத்துல, காலை மூன்று மணிக்கே விடிஞ்சிடும். ராத்திரி11 மணிவரைக்கும் சூரியன் இருக்கும். பயிர்கள் வேகமா வளரும். இதெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. ஆக, ஆவணப்படுத்துதல் மிக அவசியம். 

முகநூல், டிவிட்டரில் பதிவிடுவதற்கான காரணமும் இதுதான். Search engineல தேடினா, உங்க பதிவு வரும். உங்க புகைப்படம் போட்டிருந்தால், அதுவும் வரும். அய்யோ.. படத்தையெல்லாம் ஏன் போட்டீங்கன்னு சில பெண்கள் கேள்வி கேட்பாங்க. நம் கண்ணு எப்பவுமே நல்லதை நோக்கியே போகணும். யாராவது தாக்க வந்தா, திரும்ப அடிக்கக் கத்துக்கணும். பயந்து ஒளியக் கூடாது. மேலை நாடுகள்ல, 50 ஆண்கள் ஆய்வு களத்துல வேலை செஞ்சிட்டிருப்பாங்க. அங்கே இரண்டு பேர் மட்டுமே பெண்கள் இருப்பாங்க. எப்படி முடியுது? அந்தப் பெண்கள் எப்படி போய் வேலை செய்றாங்க? தைரியத்தை வளர்த்துக்கணும். இப்ப தமிழ்நாட்டுல பல பெண்கள் தைரியமா முன் வர்றாங்க.

கே.  வரலாற்றில் ஆர்வம் இருந்ததா, அல்லது இதில் இறங்கியப் பின்னர், ஆர்வம் அதிகரித்ததா?

ப.  இது எப்படீன்னா, ஒரு சைக்கிள் மாதிரி. It is an infinity. ஒரு உள்ளுக்குப் போயிட்டா… இப்ப உதாரணத்துக்கு, நீங்க உங்க புத்தகத்தைக் கொடுத்திருக்கீங்க. வாசிக்கும் போது, திடீர்னு ஒரு ஆர்வம் வரும். இந்த குறள் ‘தனிப்படர் மிகுதி’னு போட்டிருக்கீங்க. உடனே பக்கத்துக்குப் பக்கம் கண்ணுல படும். பக்கத்துக்குப் பக்கம் கண்ணுல பட்டவுடனே, நான் ஏதாவது பண்ணனும்னு ஆர்வம் வரும். இது ஒரு தொடர்ச்சி. வரலாறும் அப்படி தான்.

இப்ப, ஒன்றைத் தேடிப் போறோம். அதில் கிடைத்த விவரங்களில், இரண்டு விஷயம் unknown ஆயிடும். Mist (பணி) மூடின மாதிரி இருக்கும். அதை நாம விலகிப் பார்க்க ஆரம்பிப்போம். அதுக்கான அடுத்த தேடலுக்குள்ள போகணும். ஒரு புத்தக வாசிப்பு, எனக்கு இன்னொரு புத்தகத்தை பற்றிச்  சொல்லும். இப்படிப் போய்க்கிட்டே இருக்கும்.

ஆக, வரலாற்றுத் தேடலுக்கு முடிவே இல்லை. உலகம் அவ்வளவு விஷயங்கள வெச்சிருக்கு. அந்தப் பயணத்தை நோக்கி நாம போகும்போது, வாழ்க்கை ரொம்ப சுவாரசியமா இருக்கும். 

கே. பெண் ஏன் ஆளுமையாக உருகொள்ள வேண்டும் ? அதற்கு நீங்கள் பரிந்துரைக்கும் சில அம்சங்கள்?

ப.  ஒரு தனி நபருன்னே வெச்சுக்குவோமே, ஆணோ பெண்ணோ, ஆளுமைங்கிறது ரொம்ப முக்கியம். கட்டாயம் தேவை. இதை இரண்டு வகையாப் பார்க்கணும். முதல்ல, ஆளுமை என்பது, தனக்கே ஒரு மன நிறைவு தரும். சொல்லும் வார்த்தைக்கு ஒரு மதிப்பு இருக்கும். Existence , நம்ம இருப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும். 

இரண்டாவது, ஒவ்வொரு நாளும் நாம மேம்பட்டுகிட்டே இருக்கோம். சரினு படும் ஒரு கருத்தை நாம சொல்லும் போது, அந்த கருத்துக்கு ஒரு value மதிப்பு வேணும். பிறர் மத்தியில் acceptance வேணும்னா, ஆளுமைத் தேவை. 

இதை எப்படிப் பெறுவது என்பதைப் பார்ப்போம். பேச்சுத் திறமை ரொம்ப முக்கியம். நிறைய கோர்ஸ்ஸ இருக்கு. ‘இதையெல்லாம் போய்ப்பாடமா படிக்கணுமான்னு’  யோசிப்பாங்க. என்னை எடுத்துக்கோங்க, சிறு வயதில் ரொம்ப introvertஆ தான் இருந்தேன். யாராவது வீட்டுக்கு வந்தா, பின்னாடி ஒளிஞ்சுப்பேன். மனசுல பட்டது பேசினா, நோகடிக்கிற மாதிரி இருக்குமோன்னு, பேசக் கூட மாட்டேன். இதிலிருந்து வெளிவர, என் குடும்பம் உதவியா இருந்துச்சு. 

எங்க அம்மா ரொம்ப சுறுசுறுப்பு. என்னை தேவாரப் பாடல் போட்டில கலந்துக்கச் சொல்லுவாங்க. பரதநாட்டிய வகுப்புல சேர்த்து விட்டாங்க, போட்டில கலந்துக்கணும்,விளையாட்டுத் துறைல ஈடுபடணும், ஜெயிக்கணும்னு முன்னே தள்ளிட்டே இருப்பாங்க. அவங்க போற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்க. எங்க அம்மா, அவங்க வயதுடையவங்க கூட பேசச் சொல்லுவாங்க. பொது சேவைக்கு போகும்போது அழைச்சிட்டுப் போவாங்க. 

நம்ப மாட்டீங்க, சிறைச்சாலைக்கு கூட்டிட்டுப் போவாங்க. தீபாவளி நாட்கள்ல உணவு கொடுக்க அங்கே போவாங்க. ‘அவங்களுக்கு நல்லது செய்’னு என்னை அழைச்சிட்டுப் போவாங்க. நமக்கு எவ்வளவு பயமா இருக்கும்? அப்போதைய  சிறை, ஒரு தீவில் இருந்தது. படகுல போய், பலகாரமெல்லாம் கொடுத்துட்டு, பாட்டெல்லாம் பாடிட்டு வருவோம்.  இது எல்லாமே, எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. 

பின், வெளிநாடுகளுக்குப் போன பிறகு, நம்ம survival முக்கியம்ணு தோணிச்சு. அப்பா அம்மாக்கு அதிக செலவு வைக்கக் கூடாதென்று தோணவே,. உழைப்போட அவசியத்தை உணர்ந்தேன். படிப்பும் நம்ம காசுல இருக்கணும்னு யோசிக்க ஆரம்பித்தேன். பின் மெதுவா புரிய வந்தது. எல்லோருமே இந்த மாதிரியான பயணத்துல தான்  இருக்கோம்னு. தவறுல இருந்து கத்துக்கணும், அதை மறுபடியும் செய்யாம பார்த்துக்கணும்னு முடிவு செஞ்சேன். 

இரண்டாவது, என்னைவிட சின்ன வயசா இருந்தாலும், அவங்க கிட்ட ஒரு நல்ல பண்பு இருந்தா, நல்ல திறமை இருந்தா, அத நான் கத்துக்குவேன். ஸ்பெயின்ல நான் வேலை செய்யும்போது, என்னுடைய மேலதிகாரி, என்னைவிட ஐந்து வயது சின்னவர். அவர்கிட்ட நிறைய நல்ல திறமைகள் இருந்ததை நான் பார்த்தேன். அதேபோல, என் கணவர்கிட்ட இருந்து, நிதானத்தை கத்துகிட்டேன். என்னுடைய கண்ணு எப்பவும் திறந்தே இருக்கும். 

அடுத்து, டிரெய்னிங் (பயிற்சி வகுப்பு) நிறைய கோர்ஸஸ் இருக்கு. ஒரு presentation கொடுக்க தயக்கமா இருந்தா, நாலு பேரோட சேர்ந்து நின்னு பண்ணும்போது, பயம் போகும். அந்த வகையில் நம்மை நாம தயார்படுத்திக்கணும். 

பின்னர், மற்றவர் நிலையில் நம்மை வைத்துப் பார்க்கக் கற்றுக்கொள்ளவேண்டும். பிறரைப் புரிந்து கொள்வதில் தான்,  நம்முடைய ஆளுமைத் திறன் இருக்கனும்.

ஆக, Self evaluation, better communication, negotiation skills ரொம்ப முக்கியம்.

கே.   உங்கள் பணியில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்? பெண் என்பதால் தடைகள் ஏதேனும் உண்டா?

ப.    இருக்கு. இரண்டு வகையில சொல்லுவாங்க. நீங்க சிக்கிரம் எதையாவது அடைஞ்சிட்டா, ஒரு பெண் என்பதால், உங்களுக்கு சீக்கிரம் கிடைச்சுடுச்சுன்னு சொல்லுவாங்க. இரண்டாவது, பெண்களின் பாதுகாப்பு. இரண்டாவது விஷயத்தை நான் முதல்ல பேசுறேன். 

நான் நிறைய டிராவல் பண்ணுவேன். பெரும்பாலும் தனியா தான் போவேன்.  நான் பயணிக்கும் நாட்டை பற்றிய முழு விவரமும் சேகரிப்பேன். எந்த மாதிரியான போக்குவரத்து பாதுகாப்பா இருக்கும்னு படிச்சு விசாரிச்சு தெரிஞ்சுக்குவேன். மேற்கத்திய ஐரோப்பியால, 24 மணிநேரமும் நீங்க பயமில்லாமல் பயணிக்கலாம். போலீஸ் ஸிஸ்டம் ரொம்ப நல்லா இருக்கும். கிழக்கு ஐரோப்பிய நாடுகள்ல, திருட்டு, அடிதடியெல்லாம் இருக்கும். அப்போ, ஒரு 9 மணிக்கு மேல, வெளியே போகாம பார்த்துக்கணும். ஆசிய நாடுகளும் அப்படி தான். 

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, பாதுகாப்பு இருக்கு. அன்பான ஒரு சொசைட்டி. அதுவும் வரலாறு தேடி வர்றோம்னு சொன்னா, ஒரு குடும்பத்தாரா தான் பார்க்குறாங்க. 

இன்னொரு முக்கியமான விஷயம், லேடீஸ் கிட்ட இருக்குற வீக்னெஸ்ஸையும் (weakness) நான் சொல்லணும். பெண்கள் என்ன பண்ணுவாங்கன்னா, பேச்சுவாக்குல, தன்னுடைய உள்ளத்தில் இருக்குற பாலியல் ஆசைகளை, ஏதோ வகையில வெளிப்படுத்திடுவாங்க. இந்த பிரச்சனை நிறைய பேர் கிட்ட இருக்கு. பின் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் வெளியே நடக்குது? நம்முடைய behaviourஐ பொறுத்துத் தான் ஆணுடைய reaction இருக்கும். கண்ணைப் பார்த்துப் பேச நிறைய பெண்கள் தயங்குவாங்க. வெட்கப்படுறது, தலையை சாய்த்துப் பேசுறது, இது போன்ற உடல் அசைவுகள் body language  அவங்கள trigger பண்ணும். 

பொத்தம் பொதுவா, ஆண்கள் பொல்லாதவங்கன்னு பேச வேண்டாம். It is just biological reaction. நம்மைத் தூண்டும் சில விஷயங்கள்னு இருக்கு. விலங்குகள் கிட்டயும் இருக்கு. உடை அணிவதைப் பற்றி நான் பேச வில்லை. பெண் எப்படி உடை அணிந்தால் உனக்கென்ன? எவ்வளவு மோசமா இருந்தாலும், வன்புணர்வு செய்வது தவறு தான். Justify பண்ண முடியாது. இதைத் தவிர, பெண்களின் வேறு நடவடிக்கைகள், மெசேஜ் பண்ணிட்டே இருக்கான… வாட்ஸ்ஆப்ல அனுப்பிட்டே இருக்கான்… னு சில பெண்கள் சொல்லுவாங்க. பொது வாழ்க்கைனு வந்தாலே இப்படி ஆயிடுதேனு சொல்லுவாங்க. ஆனா நாம சிந்திக்கணும். கோளாறு எங்கேன்னு பார்க்கணும். கால் பண்ணா, எதுக்குப் பேசனும்?  ‘மரியாதைக் குறைவா நெனப்பாங்களே….’ னு சில பெண்கள் பதில் சொல்லுவாங்க. ஏன் அப்படி நினைக்கணும்? தேவையற்றவங்க கிட்ட மரியாதையைப் பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லையே! 

ஆக, நம்முடைய ஒழுக்கத்தை நம் பார்வையாலேயும், செயலாலேயும் காட்டினால், சமூகம் நம்மை கரெக்கடா ஒரு நண்பரா, தோழரா தான் பார்க்கும். நான் இவ்வளவு ஆண்களோடு பழகுறேன். எப்படி முடியுது? நம்முடைய பார்வை, செயல், நாம் காட்டும் மரியாதை, இது மூன்றும் சரியா இருக்கணும்.

 தோழர் என்கிற வார்த்தை, ஒரு அருமையான வார்த்தை. இந்த சமூகத்துல ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் வாழறோம். இருவரும் சேர்ந்து தான் சமூக மாற்றத்தை உருவாக்கணும். 

அடுத்து, நான் முதலில் சொன்னது, பெண் என்பதால் இவங்களுக்கு சுலபமா வேலை முடிஞ்சதுனு சொல்லுவாங்க. இப்போ, நான் வாழும் ஜெர்மனியை எடுத்துக்கோங்க. Gender equality, பாலின சமத்துவத்தை 1960களிலேயே அடைஞ்சுட்டாங்க. பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள்ல பெண்கள் வந்தால்,  நாற்காலி போடுவாங்க, கதவைத் திறந்து விடுவாங்க. ஆனா, ஜெர்மனில அப்படி இல்ல. ‘நீயும் என்னை மாதிரி தானே, நீயே கதவைத் திறந்துகோ, நீயே சரியா உட்கார்ந்திகோ’னு சொல்லிடுவாங்க.

கே.   ஆனா நம்ம ஊர்ல கூடலேடீஸ் ஃபர்ஸ்ட்னு வெச்சிருக்காங்களே?

ப.  இது வந்து பிரிட்டீஷோட தொடர்பு. ஐரோப்பியால கூட, எல்லா நாடுகளும் ஒரே மாதிரியா இருக்காது. ஆனா பிரிட்டனில் இந்த பழக்கம் உண்டு. லேடி என்றால் மென்மை, elegance என்ற எண்ணம். ஜெர்மனில இப்படி சொன்னதே இல்லை. 

கே. அப்போ, இதுதானே உண்மையான சமத்துவம்?

ப.  ஆமாம். இது தான் சமத்துவம். வேலைக்குப் போகும் போதும் கூட, நீலம், வெள்ளை, கருப்பு, கிரே இந்த நாலு நிறத்துல தான் உடை அணியணும். பேண்ட் சட்டை  தான்  போடணும், இல்ல ஜீன்ஸ் , சட்டை. நாங்க பெண்கள் எல்லோருமே இப்படியேப் பழகிட்டோம். இப்ப லேடீஸ் கவுன்  போடலாம். ஆனா, கால் காட்டிட்டு செக்ஸியா எல்லாம் போடக் கூடாது. Stockings (முழு நீல சாக்ஸ்)  அணிந்து தான் கவுன் போடணும். ஜெர்மனில பாலின பேதம் இல்ல. பொது விஷயங்கள்ல போகும் போது, பெண்மைங்கறத குறிப்பிட்டு உணர்த்த வேண்டிய நிலை தான் அங்கே இருக்கு. 

ஆனா, தமிழர்களிடம் பண்பாடுன்னு ஒண்ணு இருக்கு. இங்கே உள்ளவங்களோட மனநிலைப் படி, சேலை, அல்லது நீங்க உடுத்தியிருக்குற  சுடிதார் தான் decent, நாகரீகமான உடைனு ஏத்துகிட்டாங்க. இந்த நாகரீகமான உடையில் சென்றாலே போதும். ஒருவருடைய அதிகப்படியான கவனத்தை நாம் ஈர்க்க வேண்டியதில்லை. காட்டன் புடவை, காட்டன் சுடிதார் அணிந்து போனாலே, she is decently dressed அப்படீன்னு சொல்லுவாங்க.

சினிமா நடிகைகள் வேற. அவங்க entertainment businessல இருக்காங்க. அந்த விஷயத்தை நாம புரிஞ்சிக்கணும். சில பெண்கள் மேக்கப் அணிவார்கள். அது அவர்களுடைய விருப்பம். நம்மைப் பார்க்கும்போது, நமக்கே ஒரு திருப்தி ஏற்படணும்.

அதேபோல, இந்த இடத்திற்கு இப்படித் தான் போகணும்னு இருந்தா, அப்படிப் போவதற்கான தைரியமும் வேண்டும். ஜெர்மனி ஓபெரா (Opera) நிகழ்ச்சிக்குப் போகும் பெண்களைப் பார்க்க வேண்டுமே, வைர நெக்லஸ் ஜொலிக்க, ரொம்ப அழகா, நீளமான கவுன் அணிந்து வருவாங்க.  அந்த இடத்திற்கான உடை அது. தமிழ் பண்பாட்டைக் காப்பாத்தறேன்னு சொல்லி, இதே புடவை நகையோட, நான் ஜெர்மனி அலுவலகத்துல போய் வேலை செய்ய முடியாது. 

ஆக, தைரியமா நாம சொல்லவேண்டியது என்னனா, நான் ஒரு பெண், என் முன்னேற்றத்திற்குப் பின்னாடி இவ்வளவு உழைப்பு இருக்கு, பெண்ணுங்கறதால இல்லைனு நமக்கு செல்லத் தெரியணும்.  

கே.   நீங்கள் சென்ற நாடுகளில் எல்லாம் நீங்கள் பார்த்து வியந்த பெண்களைப் பற்றி?

ப.  எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும் ஒரு பெண். அவளை நான் துருகி நாட்டில் சந்தித்தேன்.  அங்கே டூரிஸ்டாக வந்த ஒரு பெண், திடீரென்று monument (நினைவுச்சின்னம்) மீது கிறுக்க ஆரம்பித்தாள்.  உடனே இந்த மாணவி, சின்ன வயசு தான், குரலை எழுப்பி, இப்படி செய்யாதேன்னு சொல்லிட்டா. பலர் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாங்க. நானும் இருந்தேன். அந்த மாணவி சொன்னதை நாங்க யாருமே சொல்லல. இனிமே இப்படி தைரியமாகச் சொல்லணும்னு, அந்த மாணவியைப் பார்த்து நான் கத்துகிட்டேன். 

அடுத்து, மலேயா பெண்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். யாருமே வீட்ல உட்கார மாட்டாங்க. எல்லோருமே சம்பாதிப்பங்க. படிப்பறிவு இல்லாத ஒரு பெண் கூட, வீட்டு முன்னாடி ஒரு கடை போட்டு வியாபாரம் பண்ணி, காசு எடுப்பாங்க. தன்னுடைய வருமானத்தை, ரொம்ப பெருமையா உணருவாங்க. மலேசியாப் பெண்கள், உழைக்கும் பெண்கள். குழந்தை பெற்று, மூணு மாதம் தான் வீட்ல ஓய்வா இருப்பாங்க. பின் வேலைக்குப் போவாங்க. பெற்றோரும் உதவியா இருப்பாங்க. 

தமிழ்நாடும் எனக்கு வெளிநாடு தான். காசிமேடு மீன் மார்கெட் போவேன். அங்கே இருக்குற பெண்களை நான் பார்த்துகிட்டே இருப்பேன். மீன் வாங்குன உடனே, ‘மா.. நான் கிளீன் பண்ணிக்  கொடுக்கறேன்’னு டக்குன்னு எடுத்து சுத்தம் பண்ணுவாங்க. தினம் இவங்க வரவு என்னனு யோசிப்பேன். தினம் காலைல வர்றாங்க, சுயமா உழைக்கிறாங்க. இவங்க உண்மையிலேயே empowered women. 

அதன் பின் நான் வியக்கும் பெண், எங்க Chacellor Angela Merkel. ரொம்ப வியந்துப் பார்த்த லேடி. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்தவங்க. பதவிக்கு வந்த புதிதில், பலர் இவங்கள கேலி பேசுனங்க. பதவி ஏற்றுகொண்ட பிறகு, பிரான்ஸை விட, ஜெர்மனியை, பொருளாதார ரீதியில், ஒரு பலமான நாடாக மாற்றியவர் Angela Merkel. அவங்க கணவர் ஒரு பேராசிரியர். உலகளவில் சாதனைப் படைத்த பெண்மணி, பார்லிமென்ட் அருகே, ஒரு சாதாரண குடியிருப்பில் தான் இருக்காங்க. அவங்களுக்குக் குழந்தைகள் கிடையாது. அரசியலுக்காக தன் மொத்த வாழ்க்கையை ஒதுக்கிட்டாங்க. 

மூன்று முறை Chancellorஆக இருந்தவங்க. பெரிய அளவில் ஜெர்மனியை முன்னேற்றிக் கொண்டு வந்தாங்க. அமெரிக்காவுடன் சமரசம் செய்வதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதும், அரேபிய நாடுகளுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்துவதும் என்ன சாதாரணமா? அவங்க சொல்லுக்கு அவ்வளவு பவர் உண்டு. சிறந்த ஆளுமைத் தன்மைக் கொண்டவங்க. அவங்க தலை முதல் கால் வரை, உடை முதல் நிற்கும் தோரணை வரை, அத்தனையுமே நாம உதாரணம் சொல்லலாம். 

பேன்ட் சட்டை தான் போடுவாங்க. நேரே நிமிர்ந்து நிற்பதில் ஆளுமைத் தன்மை பிரதிபலிக்கும். அதே சமயத்தில், ஒரு தாயைப் போல அன்போடு பேசுவாங்க. தன்காலில், சுயமா, தைரியமா நிற்கும் அனைத்து பெண்களுமே எனக்கான motivation தான். 

கே.    வரலாற்று நெடுக்கிலும் பெண்கள் எப்படியாக கடந்து வந்திருக்கிறாள் / இனி எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது

ப.  2000 ஆண்டுகளுக்கு முன், ஜைன மதமும், பௌத்த மதமும் தான் இங்கே இருந்தது. அக்காலகட்டத்தில் பெண்களுக்கு சமத்துவம் இருந்தது. பெண்கள் ஆசிரியர்களாக கூட இருந்திருக்காங்க. அதனால் தான் ‘குரத்தி’ங்கற வார்த்தை வந்தது. குரத்தி என்றால் சமண லேடி டீச்சர். பௌத்தத்திலும் சங்க காலங்களிலும் கூட, நிறைய பெண் கவிஞர்கள் இருந்திருக்காங்க. ஔவையை மட்டும் தான் நாம சொல்லிகிட்டிருக்கோம். 

வைதீக தாக்கம் வந்த பிறகு, பெரும் பாதிப்படையறோம். பெண் போகப் பொருளா மாறிப்போறா. அழகு பொருள், போகப் பொருள், சமரசம் செய்ய, exchange பண்ணிக் கொள்ளும் by product ஆகவே, பெண் மாறிவிடுகிறாள். 

உதாரணத்திற்கு, சோழ ராஜா குலோத்துங்கனுக்கு, கம்போடியால இருந்து இளவரசியை அனுப்பி வைக்கிறாங்க. திருமணம் செய்து கொள்ள. இங்கே பாண்டிய மன்னன், தன் மகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார், கல்யாணம் பண்ணி வைக்க. இரு நாடுகளுக்கிடையே உறவை ஏற்படுத்திக் கொள்ள, இப்படி ஒரு முறை இருந்தது. 

ஆக, பெண் மன்னர் குலமாக இருந்தாலும் சரி, சாதாரண குலமாக இருந்தாலும் சரி, ஏதோ ஒரு பொருள் சார்ந்து பாக்கப் படுகிறாள். அதேபோல, நில உடைமை சமூகத்தில், பெண் ஒரு முக்கியமான சொத்தாகப் பார்க்கப்படுகிறாள். அந்த சொத்து, என் கையிலேயே இருக்கணும்னு அந்த ஆண் பார்க்கிறான். இது தான் வரலாறு. பின் வந்த ஃபிரெஞ்ச் புரட்சி, ஜெர்மனி புரட்சி, அமெரிக்க பெண்கள் புரட்சியால், 20ம் நூற்றாண்டில் பெண்களின் நிலை மெல்ல மாறியது. 

இதற்கிடையில், தனி நபர்களுடைய வேலைகளால், நமக்கு ஓட்டுரிமை கிடைச்சிருக்கு. பெரியார் போன்ற ஆண்களின் பங்கும் இதில் உண்டு. பெண்களிடம், ‘உனக்கு சரி என்று பட்டதை  நீ செய் என்றார்’. பின் அம்பேத்கார் வந்ததால், சொத்துரிமை கிடைத்தது. ஒரு பெண்ணும், தேவைப் பட்டால், விவாகரத்து பண்ணலாம் போன்ற விஷயங்களைல்லாம் வர ஆரம்பித்தது. ஆண் சார்ந்தே இருந்த பெண்கள், தனியாக இருக்க முடியும் என்கிற சவாலை சந்திக் ஆரம்பித்தனர். 

ஆண்களிடமிருந்து தாக்குதல் வரக் காரணம், ஒரு பெண்ணிடமிருந்து வரக்கூடிய பெரிய சக்தியை, ஆண் இழக்க விரும்ப மாட்டான். பெண்ணை தனக்குக் கீழே வைத்திருப்பதில் சந்தோஷப்படுவான். ஒரு நல்ல பெண்ணுக்கான குணம் என்ன என்பதை, ஒரு ஆண் தான் எழுதி இருப்பான். கவிதை, சினிமா பாடல்களில் கூட, பெண்ணுக்கான இலக்கணத்தை ஆண் தான் எழுதியிருப்பார். நாமும் அதையே பாடிகிட்டிருக்கோம். 

அடுத்து, ஒரு சில ஆணாதிக்க சிந்தனையை உள்வாங்கிய பெண்கள் இருக்காங்க. வீட்ல சொல்றபடி நடந்துட்டா, ஆண்களுடைய நல்லெண்ணத்தை நாம் பெறலாம் . நம்மை நல்லப் பெண்ணாக ஏற்று கொள்வார்கள் என்று நினைப்பார்கள். அவங்க, வேறு ஒரு பெண் தனியே போவதைத் தடுப்பாங்க. அது நம் அம்மாவோ, அத்தையோ, பாட்டியாகவோ இருக்கலாம். 

அடுத்து  சமூகம். இந்த மூன்று விதமான சவால்களைப் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.  இதற்கு சிறந்த வழி, வாசிப்பு. அடுத்து, தேர்ந்தெடுக்கும் நண்பர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, வாழ்க்கைகான நல்ல நோக்கங்களை அமைத்து கொண்டு, அதை நோக்கி பயணிக்கணும். உழைப்பு ரொம்ப முக்கியம். 

கேகல்வி, வேலை சமூக பொருளாதார அரசியலில் பெண்களுக்களுக்கான இடம் உலகளாவில்  எப்படி இருக்கிறது? அதற்கு அவர்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டியவை எவை?

ப.   இப்ப உலகளாவிய ரீதியில் பெண்களுக்குத் தடை இல்லை. ஆப்ரிக்கா கண்டத்திலும், இந்தியாவிலும் suppression பார்க்குறோம். ஆனா, அங்கேயும் சட்ட ரீதியான உதவிகளும் பாதுகாப்பும் இருக்கு. இது போன்ற நாடுகள்ல தான், சட்டம் உதவுது. இன்டர்நெட் வந்த பிறகு, வாய்ப்புகள் இன்னும் கூடுதலா இருக்கு. இப்போ, பெண்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பது தான் கேள்வி. 

சில கல்லூரிகளில் பெண்களிடம் பேசுவேன். ஒரு முறை, உங்க லட்சியம் என்னனு கேட்டேன். முதல்ல ஒரு பெண் பேசினா. இரண்டாவதாகப் பேசிய பெண், ‘எனக்கு கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணனும்னு’ தெரிவிச்சா. நான் அந்த பெண்கிட்ட உடனே சொன்னேன், ‘நல்ல விஷயம் தான் மா. இதை தான் எல்லா ஆடு மாடு பூனையும் செய்து, இதுக்கு நீ படிக்கணும்னு அவசியமே இல்லை. தலைவர்கள் ஏறக்குறைய 100 ஆண்டுகள் பாடுபட்டு, பெண்களுக்கு கல்வியை உருவாக்கி கொடுத்திருக்காங்க. உனக்கொரு liberation வேணும்னு நீ யோசிக்கலையா? இங்கே நீ கால் எடுத்து வெச்சது எதுக்க? அறிவை வளர்க்க. நான் உழைக்கணும், என் அறிவை வளர்த்துக்கணும்னு நீ நினைக்கணும். ஒரு பெரிய விஞ்ஞானியா வா னு யாரும் சொல்லல. ஆனா, நீ வாழும் இடத்துக்கு, உன் கிராமத்திற்கு ஒரு மேம்பாட்டை செய்யக்கூடிய பெண்ணா வாழலாமே. அந்த நோக்கத்தை வளர்த்துக்க” என்று அந்த பெண்ணிடம் சொன்னேன். 

உன்மையிலேயே எனக்கு மனக் கஷ்டமா இருந்தது. கிடைக்கிற வாய்ப்பை ஏன் பெண்கள் சரியா பயன்படுத்த மாட்டேங்கறாங்க? இந்த certificate ஐ கல்யாண சந்தையில தனக்குத் தோதான ஒரு மாப்பிள்ளையைத் தேடும் ஒரு சான்றிதழா பயன்படுத்தறாங்க பார்த்தீங்களா, உண்மையிலேயே இது ஒரு சிதைவு. 

அதேபோல, DNA science பற்றி தெரிந்து கொண்டால் தன்னைப் பற்றிய தெளிவு வரும். நம்மைச் சுற்றி நிறைய prejudices இருக்கு. இந்த சடங்கு செய்யணும், சாங்கியம் பண்ணனும், ஏன் இப்படி இருக்கான், உடனே ஒரு பூஜை பண்ணுனு சொல்றோம். இதையெல்லாம் ஒதுக்கிட்டு, நம் மரபணுவியல் ஆய்வு பார்த்தோம்னா, எதுக்காக ஒருத்தருக்கு இந்த பிரச்சனை வருது, ஏன் இப்படி இருக்கார்னு தெரிய வரும். 

உலகம் அறிவியலை நோக்கி போய்கிட்டே இருக்கு. மழை அதிகம் வர, புவியியல் காரணம்னு நமக்குத் தெரியும். அதை விட்டு, இந்திரன் சாபம்னு யாகம் பண்ண சொல்லமுடியாது. இதை அணுக அறிவியல் தேவை. இப்படிப்பட்ட அறிவியலை நோக்கிப் பெண்கள் முன்னேறணும். பட்டக் கல்வி இல்லை என்றாலும், இன்று முன்னேற பல வழிகள் இருக்கு.

கே.    உலக தமிழ்ப்பண்பாட்டின் போக்கும் அவற்றில் பெண்களின் பங்களிப்புகள் பற்றி

ப.  பண்பட்டை நாம் உடையில் பார்க்கிறோம். புடவை கட்டினால், தமிழ் பண்பாட்டை வாழவைத்ததாக நினைக்கிறோம். என்னைப் பொறுத்த வரை, பண்பாடு அதில் இல்லை. நம் வரலாற்று சிறப்புகளை, எப்படி கொண்டுபோய் வெளி நாடுகளில் சேர்க்கிறோம் என்பது முக்கியம். நாம இன்றைக்கு பல ஊர்களுக்குப் போயாச்சு, பல தமிழ் சங்கங்களும் வந்தாச்சு. தமிழ்ச் சமூகங்கள் என்ன பண்ணிகிட்டிருக்காங்க? தமிழ்க் கல்வி கொடுக்குறாங்க. பிறகு வருடத்திற்கு இரண்டு முறை கலை நிகழ்ச்சி நடத்துறாங்க. 

கலை நிகழ்ச்சிங்கற பேர்ல, சமீபத்திய சினிமா பாடலுக்கு குழந்தைகள ஆட வைக்கிறாங்க. இது எவ்வளவு மோசமா இருக்கு! அந்த குழந்தைகளைப் பார்க்க பயமா, பாவமா இருக்கும். இது நிச்சயம் நம் பண்பாட்டு வளர்ச்சி இல்ல.  அறவே நம் பண்பாடு இல்லை. 

நாம கவனிக்க வேண்டியது, வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் (museum) தமிழ் இருக்கா? வெளிநாட்டு museumல கீழடி பேசப்படுகிறதா? ஆதிச்சநல்லூர், கொடும்பாலூர் பற்றி இருக்கா? தமிழ்ப் பண்பாட்டு உணவை அங்கே கொண்டு போய் சேர்க்கிறோமா? 

இஞ்சி நம்ம ஊர் உணவு. கொரோனா காலத்துல பிரபலமாச்சு. அதை பற்றி அங்கே பேசினா என்ன?  ‘எங்க ஆரோக்கியமான காலை உணவுப் பாருங்க’னு அங்கே அறிமுகப் படுத்தலாமே. இது தான் பண்பாட்டைக் கொண்டு போவது. அதன் பின், அழகிய நம் கிராமிய நடனங்கள், நம்முடைய ஆடை, கைத்தறி. நெசவைப் பற்றி பேசலாமே, நம் பண்டைய அணிகலன்களை படம் போட்டு காட்டலாமே. 

இவற்றை கொண்டு, அயல்நாட்டவருக்குக் கற்றுக்கொடுக்கும் வகைல சில activities  நாம பண்ணனும். இது போன்ற செயல் தான் நம் பண்பாட்டை அங்கே கொண்டுபோக உதவும். இந்த காலகட்டமும், இனி வரும் காலங்களிலும், அங்கே வாழும் தமிழ்க் குழந்தைகள், அதே தமிழ் மக்களைக் கல்யாணம் பண்ணிக்குவாங்கனு எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் வேற்றினத்தவரைத் தான் கல்யாணம் பண்ணுவாங்க. அந்த சூழல்ல, தமிழ் பண்பாட்டின் நீட்சியை, நாம எப்படி கொண்டு போய் சேர்ப்பது? Scientificஆ, அழகியலோட கொண்டுபோய் சேர்த்தால் தான் முடியும். அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் சேர்க்கணும். 

பல மொழிகள் கொண்ட Smithsonian -ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் தமிழ் எழுத்து இல்லை. நான் வாஷிங்டன் தமிழ் சங்கத்தில் பேசும் போது கேட்டேன், ‘இங்கே இத்தனை நாளா, அத்தனை தமிழர்கள் இருக்கீவங்க, இங்கே ஸ்மித்ஸோனியன்ல இத்தனை மொழி இருக்கு, ‘நல்வரவு’னு தமிழ் மொழில போட்டா என்ன? இது நம்முடைய தோல்வி.  தமிழ் வளர்க்க, தமிழை பொது இடங்களில் கொண்டு சேர்க்க, தமிழ்ச் சங்கங்கள் இயங்கணும். 

இங்கே இருக்கிறவங்களும், அவங்க தேவையை உணர்ந்து செயல்படணும். அயல் நாட்டினர் பண்பாட்டு ரீதியா வர்றாங்க. உலகியல் ரீதியா வர்றாங்க. அப்போ நாம அவங்கள எப்படி அணுகணும்? கோயில் போகணும், ஷாப்பிங் போகணும், மக்களோட பேசனும்னு வருவாங்க. அப்போ, give and take மாதிரி, ஒரு சகோதரத்துவத்தோட நாம அணுகணும். இப்படிப்பட்ட உதவிகள் மூலமா, பண்பாட்டைக் கொண்டு சேர்க்கலாம். 

கே.   தொடர்ந்து இயங்குவதற்கான உந்துதலாக உங்களுக்கு அமைந்தவை?

ப.   எனக்கு வாசிப்பு தான். புத்தகம் இல்லைனா சுபா இல்ல (சிரிக்கிறார்). அடுத்து, மக்களோடு பேசுவது. என்னை மாற்றிக் கொண்டுப் போவதே, தொடர் வாசிப்பு தான். என்னுடைய பயணங்களின் மூலமா, என்னையும் இந்த உலகத்தையும் தெரிந்து கொள்கிறேன். சுபா யாருன்னு கேட்டா, I am a traveler. என்னுடைய ஆசையே, புதிய உலகத்தைப் பார்க்கணும், புதிய மக்களை சந்திக்கணும், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவது, உலகம் எப்படி இயங்குதுனு தெரிஞ்சுக்கணும். வாசித்து, பயணித்து, மக்களிடம் பழகணும். 

கேபயணத்தில் நீங்கள் வியந்து பார்த்த ஒரு இடம் அல்லது நிகழ்வு?

ப.    பல பல ஊர்கள் இருக்கு. ஒவ்வொன்றுமே எனக்கு inspiration தான். ஆனா, நான் போன இடங்களிலிருந்து புரிந்து கொண்ட ஒரு விஷயம், எல்லா மனிதர்களும் ஒன்று தான். அவன் Slovakian ஆக இருந்தாலும் சரி, இந்தியனா இருந்தாலும் சரி, பாகிஸ்தானியாக இருந்தாலும் சரி, அவனுக்கும் பசிக்குது, அவனுக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கு. வளரணும்ங்கற எண்ணம் இருக்கு. குடும்ப அரவணைப்பு தேவைப்படுது.  எல்லா மனிதர்களின் உணர்வும் ஒன்று தான். யாராவது ஒருத்தர் வீட்ல இறந்துட்டா, அவனும் அழறான். எப்படி வெளிப்படுத்துறாங்கறது தான் வேற. 

சில பேர் சொல்லுவாங்க, தமிழ்ப் பண்பாட்டுல தான் குடும்ப அரவணைப்பு இருக்கு. மேற்கத்திய நாடுகள்ல, விட்டு ஓடிடுவாங்கனு. அப்படியெல்லாம் இல்லை. சொல்லப் போனால், மேற்கத்திய நாகரீகத்தில் இன்னும் நல்ல நல்ல பண்புகளை நாம் பார்க்கலாம். ஜெர்மனில வயசான தம்பதிகள் ஒண்ணா தான் நடந்து போவாங்க. சைக்கிள் ஓட்டினால், குடும்பமாகத்தான்  போவாங்க. இரவு நேர உணவை ஒண்ணா சாப்பிடுவாங்க. 

இங்கே பெண்கள் டீவி முன்னாடி உட்கார்ந்திருப்பாங்க. ஆண்கள் பாரிலோ, கிளப்பிலோ, விளையாட்டு அரங்கிலோ இருப்பாங்க. அங்க அப்படி இல்ல. ஒரு ஜிம் (gym) போனாலும், கணவன் மனைவி சேர்ந்து தான் போவாங்க. 40, 50 வருடங்கள் சேர்ந்து வாழும் பல தம்பதிகள் அங்கே இருக்காங்க. 

வெளி பகுதிக்குப் போய் மக்களை சந்தித்தால் தானே தெரியும். இரண்டு சினிமா படத்தைப் பார்த்து முடிவு பண்ணிட்டா எப்படி? பயணித்து பாருங்கள். நிறைய தகவல்கள் தெரிய வரும்.

கே.   உங்களை வசீகரித்த புத்தகங்கள்?

ப.   ஒவ்வொரு காலகட்டத்திலேயும் புது புது விஷயங்கள் வரும்போது மாறும். இப்போ அண்மையில் என் வாழ்க்கையில்  ஒரு பெரிய opening கொடுத்தது David Reich எழுதிய Who we are and how we got here என்ற புத்தகம். இன்றைய காலகட்டத்தின் தேவையான புத்தகம்னு  சொல்லலாம். இதைத் தவிர ஆயிரம் புத்தகங்கள் இருக்கு. 

கே.   நீங்கள் குறிப்பிட்டதுசேப்பியன்ஸ்’ புத்தகத்தைப் போன்றதா?

ப.     சேப்பியன்ஸ்ல இருந்து  எல்லாமே synthesis பண்ணி கொண்டுவந்தது. DNA அறிவியல் என்பது, காலத்தின் தேவையை உணர்த்தும். இது முழுக்க முழுக்க DNA science பற்றிச் சொல்லும். எப்படி Neanderthals வந்தாங்க, Homo sapiens எந்த காலத்துல வந்தாங்க, எந்த பகுதிக்குப் போனாங்க என்பதையெல்லாம் இந்த புத்தகம் சொல்லும். 

அதைத் தவிர, என்னை ஆட்டிப்படைத்த நாவல்களைக் கொடுத்தவர் Dan Brown. Dan Brownஓட நாவல்கள் மீது எனக்கொரு craze. அவர் கதைல வரும் இடங்கள நான் குறிப்பெடுத்து வைத்து, பல நாடுகள் தேடிப் போய் அலைந்து பார்த்திருக்கேன். எல்லா இடங்களையும் பார்த்திருக்கேன். 

தமிழ் எழுத்தாளர்கள்னு பார்த்தா, பாலகிருஷ்ணன் சாரோட, Journey of Civilisation. அது எனக்குப் பிடித்த புத்தகம். இதை அடுத்து, ஆசிரியர்கள்னு பார்த்தா, நா. வானமாமலை, ஆ. சிவ சுப்ரமணியம், தொ. பரமசிவன், பக்தவட்சல பாரதி, இவர்களை மிகவும் பிடிக்கும்.  சில புத்தகங்களை மூன்று நான்கு முறை வாசிச்சிருக்கேன்.

வாழ்ந்த மனிதர்களில் என்னை inspire பண்ணினவங்கனு பார்த்தா, உ.வே. சுவாமிநாதன் அவர்கள். அவருடைய ‘என் சரிதம்’ பின் அவர் எழுதிய

 ‘என் ஆசிரியர்’. ஆவணப் பதிப்பகத்தில் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

கேசோர்வாக உணரும் போது..?

ப.   பயணிக்கலைனா, நான் சோர்வாயிடுவேன். மற்றபடி சோர்வெல்லாம் வராது. எனக்கொரு பழக்கமுண்டு. வருட இறுதி எனக்கு ரொம்ப special. அந்த கடைசி மூன்று நாட்களை, எனதாக்கிக்  கொள்வேன். உட்கார்ந்து, பகுப்பாய்வு செய்து கொள்வேன். என் வாழ்நாள் இறுதிக்குள் நான் அடைய வேண்டியது என்ன? அடுத்த 10 வருடங்களில் என் இலக்கு என்ன? அடுத்த 5 வருடங்களுக்கான என் பணி என்ன? அடுத் 3 வருட பயணம் என்ன? இப்படியாக goal setting செய்து கொள்வேன். 

இதைச் செய்ய, எனக்கு மூன்று நாட்கள் தேவை.  ஒரு சிறப்பான special eventஆ மாத்திப்பேன். எனக்குப் பிடித்த கேக் ஒன்றை செய்துகொள்வேன். எனக்கு பிடித்த டிரிங்க்ஸ், எனக்குப் பிடித்த மாதிரி காபி, எனக்குப் விருப்பமான உணவு வகைகள்னு, எல்லாமே சிறப்பா, தயாரா இருக்கும்.  ஒரு புதிய புத்தகத்தை கையில் எடுத்துக் கொள்வேன். புத்தகம் வாசித்துக் கொண்டே, மறு ஆய்வுப் பணியை மேற்கொள்வேன். 

கே.   சூப்பர்.. அப்ப இது தொடர்பா என்னுடைய அடுத்த கேள்வி, உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?

ப.    எனக்கு THFI organisation- இயக்கத்தை, ஒரு Institute – நிறுவனம் ஆக்கணும். மூன்று வருடங்கள் முன், அதுலேயே ஒரு பதிப்பகம் ஆரம்பித்து, 25 புத்தகங்களையாவது வெளியிடணும்னு யோசிச்சேன். ஆனா இப்ப 26 புத்தகங்கள் வெளியாகி இருக்கு. THFIல நிறைய கிளைகளை உருவாக்க எண்ணினோம். அதையும் செய்தாகி விட்டது.  

இது போக, தனிப்பட்ட முறையில் நான் எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கேன்னு பார்ப்பேன். தகவல் சேகரிச்சுகிட்டே இருப்பேன். ஒரு கட்டத்தில், ‘போதுமான தகவல் கிடைச்சாச்சு, இனி எழுதலாம்’ என்று மனசு சொல்லும்.  அதை என் பட்டியலில் எழுதி வைத்து, ஜெர்மனியில் என் அலுவலக டேபிள் முன்னால் மாட்டியிருப்பேன். நான்கு மாதத்தில் எழுதி முடிப்பேன்.

கே.     உங்களுக்குப் பிடித்த பொழுது போக்கு அம்சம்?

ப.    பயணம், தோட்டக் கலை, சமையல். நானும் என் கணவரும் சேர்ந்து சமைப்போம். ஆரோக்கியமான உணவு வகைகளை சமைக்கப் பிடிக்கும். 

கே.    சமையல்னு சொன்னதும் இந்த கேள்வி கேட்க தோணுதுஉங்க விருப்பம் என்ன, ஜெர்மனி உணவா? மலேயா உணவா? இல்லை தமிழ்நாட்டு உணவா?

ப.    அந்தந்த நாட்டுலிருக்கும் போது அந்தந்த உணவு. இந்த ஊர்ல இருந்துகொண்டு, வெளி நாட்டு உணவு தயாரித்தால், அந்த டேஸ்ட் வராது. இங்கே இருக்கும் போது, இந்த ஊர் உணவை தான் சமைப்பேன். விதவிதமா டிரை பண்ணுவேன். 

கே.    நீங்கள் பார்த்த அருங்காட்சியகங்களில்உங்களுக்குப்  பிடித்த அருங்காட்சியகம் எது? அதன் சிறப்பை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

ப.    எனக்கு பிரிட்டிஷ் மியுசியம் ரொம்பப் பிடிச்சிருக்கு. அங்கே தான் Indus Valley சின்னங்களைத் நான் பார்த்தேன். அப்படியே புல்லரித்து, என் உடலே ஆட்டம் கண்டு விட்டது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நம் தமிழ் நாட்டோட தொடர்பு அதில் இருக்கு. சிந்து சமவெளிக்கும் தமிழ்நாட்டின் திராவிட மொழிக்கும் உள்ள தொடர்பை பார்க்கப் பரவசமா இருந்தது. 

அடுத்து, கைரோ (Cairo) அருங்காட்சியகம். நமக்கு மம்மீஸ் (mummies) என்றாலே ஒரு fascination தானே. சின்ன வயசுல இருந்தே படிச்சிருக்கோம். அதே பிரமிப்போட, 12 மம்மீஸையும் நான் பார்த்தேன். 5000 வருட பழமையான ராம்ஸெஸ் 2 (Ramses 2) படுத்திருக்காரு, நெஃபெர்டாரி (Nefertari) படுத்திருக்காங்க (ஆச்சரியம் பொங்க சிரிக்கிறார்).

அடுத்து, வேட்டிகன் அருங்காட்சியகம். அங்கே நான் ரசித்தது, cartography (வரை படங்கள்). அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு  பிரிவு. நம்ம தமிழ் நாட்டுல அதை செய்ய தவரிட்டோம். இலக்கியமா வாசிச்சோமே தவிர, மேப் வரையல. செஞ்சுவெச்சதெல்லாம் பிரிட்டிஷ்காரங்க தான். வேட்டிகன் மியுஸியத்துல பண்டைய புராதன மேப் எல்லாமே பெருசு பெருசா இருக்கும். பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கும். 

அடுத்து கடைசியா ஒண்ணு, ஜெர்மனில,  ஒரு ஆறு ஊற்றெடுக்குற இடம். Danubeனு சொல்லுவாங்க. அந்த நதி ஊற்றெடுத்து, 10 ஐரோப்பிய நாடுகளைக் கடந்து, Black Sea, கருங்கடல்ல  போய்ச் சேரும். அந்த நதி ஊற்றெடுக்கும் இடத்தை, அருங்காட்சியகமா மாத்தி இருக்காங்க. அந்த ஊற்றை ஒரு மியூசியமா பார்ப்பது எப்படி இருக்கு! யோசிச்சுப் பாருங்க… very  refreshing !

கே.    இறுதியாக, புழுதி, ‘பெண்ணதிகாரம்சிறப்பிதழ் வாயிலாக, பெண்களுக்குச் சொல்ல வரும் கருத்து?

ப.    எல்லோருமே தன் மீது தைரியம் வைத்து செயல் படணும். அதற்கான தகுதியானவங்களா நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மை நாம் evaluate பண்ணிக்கணும். குறை நிறைகளை ஆய்வு செய்யணும். குறைகளை களைத்து, நிறைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கணுச்ம். 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *