பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என்று குரலெழுப்பும் அதே சமயம், நம்மை சுற்றி நடந்து வரும் செயல்கள், செயல் திட்டங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். GoTN (Government of Tamil Nadu), கடந்த 2021ஆம் ஆண்டு, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், பெண்களுக்கான இலவச  பயண திட்டத்தை உருவாக்கி, அமல் படுத்தியது.

அதேபோல, பெண்கள் பாதுகாப்பைக் கருதி, ஒரு ஆய்வகம் இயங்கிக் பொண்டு வருகிறது. அது தான்,  பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம். Gender Policy Lab. இதைப் பற்றி எத்தனை பேர் கேள்விபட்டிருக்கறீர்கள்?

நம் நாட்டில், பொதுவாக, எந்த ஒரு நல திட்டத்தையும் அமல் படுத்தும்  போது, மக்கள் மத்தியில் ஒரு கருத்து அலை ஓங்கி அடங்கும். அவரவர் பார்வையைலிருந்து, கண்ணோட்டங்கள் மாறும். ஆனால், அத்திட்டத்தை செயல் படுத்திய நோக்கம் என்ன? திட்டம் எதன்  அடிப்படையில், எவர் தலைமையில் செயல்படுத்தப் பட்டது என்பதை, பொது மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகரம், 1990 களில் இருந்து, பாலின முக்கியத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட, ஒரு சிறந்த நகரமாகப்  பெயர் பெற்று வருகிறது.

அந்நகரத்தின் ஒவ்வொரு திட்டத்திலும், செயல்பாடுகளிலும், கொள்கைகளிலும், அனைத்து பாலினத்தினரின் தேவைகளை உணர்ந்து, அவற்றைப்  பூர்த்தி செய்யும் வகையில்,  அந்நகரம் செயல்பட்டு வருகிறது.

1992 இல், வியன்னா பெண்களின் பார்வையில் நகரத்தை ஆய்வு செய்ய, ஒரு  மகளிர் அலுவலகத்தை நிறுவியது. இப்பொழுது, சென்னை மாநகராட்சி, அதன் மக்களுக்காக, குறிப்பாக பெண்களுக்கு  இப்படிபட்ட கனவை  நனவாக்கும் நோக்கில், படிப்படியாக செயல்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வருட காலமாக, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அம்மா மாளிகையில், பாலினம், கொள்கை ஆய்வகம் (Gender Policy Lab) இயங்கிக் கொண்டு வருகிறது. பெண்களை மையமாகக் கொண்ட  நகரத்தை அமைக்க, முன்முயற்சிகளைப் பட்டியலிட்டு செயல்படுத்த, சென்னை கார்ப்பரேஷன், பிப்ரவரி 2022 இல் இந்த ஆய்வகத்தை (ஜிபிஎல்) நிறுவியது.

இந்தியவிலேயே, பெண்களின் நலனுக்கான இப்படி ஒரு ஆய்வகம், நம் தமிழ் நாட்டில் மட்டுமே இயங்கிக் கொண்டு வருகிறது.

 நிர்பயா நிதியின் உதவியால், இந்த ஆய்வகம்  நிறுவப்பட்டது. இதில், பொது இடங்கள் மற்றும் போக்குவரத்தில் அனைவருக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான  பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் என்பது,  நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இதில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வருபவர் திருமதி மீரா சுந்தரராஜன் அவர்கள். இந்த ஆய்வகத்தின் செயல்பாடுகளைப் பற்றி, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

கே.   வணக்கம் அம்மா.

உங்களைப் பற்றிய ஒரு அறிமுகம்?

ப.   வணக்கம். நான் மீரா சுந்தரராஜன். கடந்த முப்பது வருடங்களா, நான் development sector என்று சொல்லக்கூடிய வளர்ச்சி துறையில் பணியாற்றி வருகிறேன். தொண்டு நிறுவனங்கள், NGO’s உடன் பணியாற்றி உள்ளேன். ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா போன்ற பல இடங்களில் வேலை செய்திருக்கிறேன். 2002ல், அரசின் சார்பாக, தமிழ் நாடு (Women development corporation) மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில், பல நலதிட்டங்களைப் பெண்களிடம் கொண்டு சேர்ப்பதில் பங்கெடுத்துக் கொண்டேன். அவை பெரும்பாலும், பெண்களின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த செயல் திட்டங்களாக இருந்தன. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவது, இதுவே முதல்முறை.

கே.   பாலினக் கொள்கை ஆய்வகத்தில் (Gender policy lab)  உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தின் மூலம், பெண்கள் அதிகாரமளித்தலை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ப.   ‘பெண்ணதிகாரம்’ என்று சொல்லும் போது, முதலில், பெண்கள் பயமில்லாமல் வெளியே போவதற்கான சூழல் உருவாக வேண்டும். அந்த பாதுகாப்பு மிக அவசியம். ‘நிம்மதியா வெளிய போகவே முடியல’ எனும் போது, பெண்களால் எதையுமே செய்ய முடியாது. எல்லாமே தடை பட்டுப் போகும்.

‘சிடி டெவலப்மென்ட்’ என்று சொல்லும் போது, பொதுவாக ஆண்களை மட்டுமே கண்ணோட்டத்தில் வைத்து, செயல்படுவார்கள். ஆனால், பெண்களின் தேவை, வேறு மாதிரி. ஒரு பெண் பொதுவா வெளியே சென்றால், குழந்தைகள் உடனிருப்பார்கள், பைகளைச் சுமந்து கொண்டு போவார்கள், குறைந்த பட்சம், ஒரு பெரிய கைப்பையாவது (hand bag) இருக்கும்.

அதேசமயம், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். தனியார் வாகனங்களைப் பெரும்பாலும் ஆண்கள் தான் உபயோகிப்பார்கள். பெண்கள் அதிகம் நடப்பார்கள், they do more walking. So, pavements என்று சொல்லப்படும் சாலையோர நடை பாதைகள் சவுகரியமாக, பத்திரமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களை அதன் மீது நிறுத்தி வைக்காமல் இருக்க வேண்டும்.

அடுத்து, பூங்காக்கள். உடற் பயிற்சி சாதனங்கள் நிறைய இருக்கும். அவை, அனைவருக்கும் பொதுவானது. ஆனால் ஆண்கள் அங்கே இருந்தால், பெண்கள் உபயோகப் படுத்த மாட்டார்கள். நிறைய செடிகளும் புதர்களும்  இருக்கும். போதுமான விளக்கு ஒளி இருக்காது. அங்கே (dark spots) இருட்டாக இருந்தால், பெண்கள் பாதுகாப்பாக உணர மாட்டார்கள்.

பொது கழிப்பறைகளில் தேவையான விளக்குகள் இருக்காணு  பார்க்கணும்.

வீதியில் எரியும் விளக்குகள் பல இடங்களில் பளிச்சென்று இருக்காது. மரங்கள், தெரு விளக்கின் மீது படர்ந்து, வெளிச்சத்தை மட்டுப்படுத்தாத அளவிற்கு, அவ்வப்பொழுது அவற்றை  (tree trimmings) களைக்க வேண்டும். இருட்டாக இருந்தால், மறுபடியும் dark spots உருவாகும். தெரு இருட்டாக இருந்தால், பெண்களும் சிறுவர்களும் வெளியேப் போக பயப்படுவார்கள்.

குழந்தைகள் ஏதோ ஒரு வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை பட்டாலும், வெளிச்சம் இல்லையென்றால், பெற்றோர்கள் அவர்களை வெளியேச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.   ‘இருட்டிடுச்சு… பஸ் ஸ்டாப்பிலிருந்து கூட்டி வர, ஒரு துணை தேவைப் படும். சில நாட்களில்,  ‘இந்தத் தொந்தரவுத் தேவையா? இந்த வகுப்பிற்குப் போயாகணுமா?’  என்ற கேள்விகள் வரும்.

அடுத்து, பேருந்து நிறுத்தங்களில்,  போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். பஸ் ஸ்டாப்பில் பொதுவா விளக்குகள் இருப்பதில்லை. தெரு விளக்கு அல்லது, பின்புரம் உள்ள விளம்பரப் பலகைகளின் வெளிச்சம் தான் இருக்கும். அதேபோல், bus stop is a pre fabricated structure. சுவருக்கும் நிறுத்தத்திற்கும் இடையே இடைவெளி இருந்தால், அதுவும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும். இடையில் யாராவது ஒளிந்திருக்க வாய்ப்புண்டு. சாலைக்குச் சம தளத்தில் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்க வேண்டும். குழந்தைகள் அமர்வதற்கு இருக்கைகள் வசதியாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் நாங்கள் நிகழ்த்திய ஆய்வின்படி, பஸ் ஸ்டாப் அருகே, டாஸ்மார்க் கடை இருந்தால், பெண்கள் பயப்படுகிறார்கள். டாஸ்மார்க்கின் விதிமுறைகள் படி, எந்த ஒரு பள்ளிக்கு அருகாமையிலோ, வழிபாட்டு தளங்களுக்கு அருகிலோ, டாஸ்மார்க் கடை இருக்கக் கூடாது என்பது. ஆனால், பேருந்து நிலையத்தின் அருகே இருக்கக் கூடாது என்று எவரும் சொன்னதில்லை.

இது போன்ற பல கருத்துக்களை மனதில் கொண்டு செயல் பட வேண்டும். பொது போக்குவரத்து, பெண்களுக்குப் பாதுகாப்பா (women friendly) இருக்கணும்.

இது போன்ற பல ஆய்வுகள் நடத்தி, பல கணக்கீடுகளை, எங்கள் ஆய்வுக் கூடம், அரசாங்கத்திடம் ஒப்படைத்து வருகிறது.

கே.     இதை அரசாங்கம் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது?

ப.     இதுவரை யாரும் வேண்டாம் என்று சொன்னதில்லை. இந்தியாவிலேயே, முதல் GPL ஆய்வகம் ஆரம்பிக்கப்பட்டது, நம் தமிழ்நாட்டில் தான். சிறந்த  கல்வி திட்டத்திற்கான முன்னோடியான மாநிலம், நம் தமிழ்நாடு தான். முதல் (Women self-help group) பெண்கள் சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப் பட்டதும் நம் தமிழகத்தில் தான். கிராம்புறங்களிலும், மற்ற மாநிலங்களை விட, முன்னேறி இருக்கிறோம்.

கே.    பணியிடத்தில் பெண்களை மேம்படுத்துவதற்கு,  ஆய்வகத்தில் உள்ள முன்முயற்சிகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ப.    Chennai corporationல, we have reconstituted the PoSH Committee. Internal Complaint Committee (ICC) உள் புகார்கள் குழு, மறு பரிசீலனை செய்யப் பட்டு, தேவைகளுக்கேற்ப, மாற்றி அமைத்துள்ளோம். 15 மண்டலங்களில் இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கு. தலைமையகத்துடன் சேர்ந்து, மூன்று இடங்களில் வேலை பார்க்கிறோம். யாரிடம் புகார் கொடுக்க வேண்டும், யாரை அணுக வேண்டும், என்ன செய்ய வேண்டும் போன்ற விழிப்புணர்வு தகவல்களை, முதல் கட்டப் பயிற்சியாக சொல்லிக் கொடுத்துள்ளோம்.

கே.    உங்கள் கண்ணோட்டத்தில், பெண்களின் தூய நிர்ணய உரிமையில்,  பாலினக் கொள்கைகள் என்ன பங்கு வகிக்கின்றன, இதை நீங்கள் எவ்வாறு கையாள்கிரீர்கள்?

ப.    நாங்கள் நேரடியாக பாலின வேறுபாட்டையோ, வன்முறையையோ, கையாள மாட்டோம். அதற்கென்றுப் பிரிவுகள் உண்டு. ஆனால், பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலின வேறுபாட்டின் அடிப்படை அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு செல்கிறோம்.

Gender club மூலமாக, (Gender sensitisation program), பாலின உணர்திறன் என்று, மாதம் இரண்டு முறை, பயிற்சி நடத்தி வருகிறோம். சின்ன வயதிலேயே, இந்த உணர்வைக் கொண்டு வந்தால், பாலின வேறுபாட்டை அகற்றினால், கல்லூரிக் காலங்களில், அனைவரையும் சமமாக மதிப்பார்கள்.

கே.    உங்கள் பணியில், பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான ஏதேனும் சவால்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா, அப்படியானால், அவற்றை எவ்வாறு எதிர்கொண்டது?

ப.   2000 – 2001ல் பெண்கள் சுய உதவிக் குழுக்களில் வேலை செய்யும் போது, நிறைய எதிர்ப்புகள் வரும். பொதுவாக நம் சமூகத்தில், பெண்கள் கூட்டமாகக் கூடினாலே, கேள்வி எழுப்பப்படும். கோவிலிலோ, அல்லது பிரார்த்தனைக் கூட்டங்களில்  இருந்தால்,  கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஆரம்பத்தில், சுய உதவிக் குழு என்பது, வெறும் அரட்டைக்கான கூட்டமாகப் பார்க்கப் பட்டது. பின், நாங்கள் வீடு வீடாகச் சென்று, விளக்கம் அளித்து, மாமியாரிடம் அனுமதி யெல்லாம் பெற்றோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம். இது சேமிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான இயக்கம் என்று தெரிந்த பின்னர், குடும்பத்தினர் வீட்டுப் பெண்களை வெளியே அனுமதித்தனர்.

பின் சேமிப்பு, கடன் வசதி என்று வழங்கி, வீட்டுச் செலவுக்குப் பெண்கள் பணம்  கொடுக்க ஆரம்பித்த பின்னர், மொத்த குடும்பமும் ஒத்துழைத்தது. இப்படியாக வந்த பெண்களிடம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு என்று பேச ஆரம்பித்தோம்.  ‘டிரெய்னிங் னு சொல்லி அங்க போய் உட்கார வேண்டியது, உன்ன கேள்வி கேட்கத் தூண்டி விடறாங்க, எதிர்த்துப் பேச கற்றுக் கொடுக்குறாங்க..’ என்று பல விதங்களில் முற்றுகைப் போடுவார்கள்.

கே.   கார்ப்பரேட் துறையில் உங்கள் ஆய்வகத்தின் செயல்பாடுகளைப் பற்றி?

ப.    அடுத்து ஒரு திட்டம் இருக்கு. பொது மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வரும் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கு. இதற்கு இரண்டு மூன்று காரணங்கள். ஒன்று, சம்பவம் நடக்கும் பொது,  மக்கள் ‘நமக்கேன் இந்த வம்பு..’ என்று ஒதுங்கிச் சென்று விடுவார்கள். இரண்டாவது,  ‘தலையிட்டால் நமக்கேதாவதுப் பிரச்சனை வந்துடுமோ..’ என்றும் சிந்திப்பார்கள். மூன்றாவதாக,  ‘இந்த பெண்ணிற்கு, இந்த நேரத்தில் இங்கென்ன வேலை…?அவ டிரெஸ் பண்ணி இருக்குற விதத்தைப் பாரு…’ போன்ற கருத்துக்களும் வரும். 

இதுல, ஒரு சில விஷயங்களை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். By standard intervention னைக் கையாள வேண்டும். அதாவது, நேரடியாக, தவறு செய்பவனை கேள்வி கேட்டு, நிலமையை மேலும் சங்கடப் படுத்தாமல், பாதிப்பிற்குள்ளானவர்களிடம் நம் உதவிக் கரங்களை நீட்டவேண்டும். உதாரணத்திற்கு, ஒரு பெண்ணை, ஒரு ஆண் பிந்தொடர்ந்து வருவதை

 நாம் கவனித்தால், உடனே, அப்பெண்ணிடம் சென்று, ‘டைம் என்ன மா ஆச்சு..’ என்பது போல, ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர வேண்டும். பின் தொடருபவன், ‘அப் பெண்ணிற்குத் தெரிந்தவர் போல..’ என்று ஒதுங்கி விடுவான். இச்செயல், தற்காலீகமாக, அப் பெண்ணிற்கு விடுதலை அளிக்கும்.

இது போன்ற சிறு சிறு செயல்பாடுகளை, நாங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கற்றுத் தருகிறோம். Anyone can be a by standard intervention. இது ஒரு சின்ன உதாரணம் தான். இப்படியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

CCTV   கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப் பட்டிருக்கு. அனைத்தையும் கண்காணிப்பது சாத்தியம் இல்லை. தவறு நடந்த பின்னர் தான் கேமராக்களின் உதவி தேவைப்படுகிறது. ஆக, பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், பலவற்றை நாமே சமாளிக்கலாம்.

எல்லாப் பூங்காக்களிலும் காவலாளிகள் உண்டு. ஆனால், ஒரு அசம்பாவிதம் நடந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. பொதுமக்களுடன் சேர்ந்து, இவர்களுக்கும்  நாங்கள் பயிற்ச்சி அளித்து வருகிறோம்.

இதை பெரிய அளவில், காவல் துறை, மகளிர் குழு, சுய உதவிக் குழு (NGO’s) என்று, பல துறையைச் சார்ந்தவர்களின் உதவியுடன், நடத்தி வருகிறோம்.

கே.      உங்களுடைய பணி, கிராமப்புற மக்களையும் சென்றடைகிறதா?

ப.         இதுவரை இல்லை. இந்த ஆய்வகத்தைத் தொடங்கி இரண்டு வருடங்களே ஆகின்றன. ஆனால், மிக விரைவில், கிராமப் புறங்களிலும் எங்கள் பணி சென்றடையும். தமிழக அரசுக்கும், அவ்வாறே எதிர்பார்க்கின்றனர்.

கே.    பாலினக் கொள்கை ஆய்வகத்தில் செய்யப்படும் பணிகளுக்குத் தொடர்புடைய குறிப்பிட்ட எழுத்தாளர்கள், இலக்கியங்களைக் குறிப்பிட முடியுமா?

ப.    நிச்சயமாக. அடிப்படையில் ஒரு புத்தகத்தை நான் பலருக்குப் பரிந்துறை செய்து வருகிறேன். ஷில்பா பாட்கே (Shilpa Phadke) எழுதிய ‘Why loiter?‘வை லாயிட்டர்’.  லாயிட்டர் என்றால், வெறுமனே, ஊர் சுற்றி வருவது. வெறுமனே வீதியில் திரிவது. வெறுமனே சில நண்பர்களுடன் சேர்ந்து டீ கடையில் கதை பேசுவது. இச்செயலைப் பெரும் பாலும் யார் செய்வார்கள்? ஆண்கள் தான்.  ஒரு பெண், பொது வெளியில், தேவை இருந்தால் மட்டுமே வெளியே வருவாள்.

கடைக்குச் செல்லவோ, பிள்ளைகளைக் கூட்டி வரவோ, கோவிலுக்குச் செல்லவோ, வாக்கிங் போகவோ தான் வெளியே வருவாள். சும்மா பொழுது போகவில்லை என்று ரோட்டில் ஜாலியாக நடந்து போவது அபூர்வம். இந்த எழுத்தாளர், மும்பை நகரத்தைச் சேர்ந்த வங்க. ஆனால், எல்லா நகரங்களுக்கும் ஏற்புடையதாக எழுதி இருக்காங்க.

புத்தகத்தின் லிங்க் இதோ..

https://bit.ly/3Smx8mR

இதன் அடிப்படையில, நாங்க ஒரு நிகழ்வு நடத்தினோம். ஒரு குழு Heritage walk செல்வார்கள். நகரின் பாரம்பரிய கட்டிடங்களைப் பற்றி பேசிக்கொண்டே செல்வார்கள். நாங்கள்,  ‘மெட்ராசின் பெண்கள்’  என்று, இருபது பெண்கள் கொண்ட ஒரு குழு, அடையாறில் ஹெரிடேஜ் வாக்கை நிகழ்த்தினோம். இதில் குறிப்பிட்ட அம்சம் என்ன வென்றால், மாலை 6.45, 7 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணி வரை நடந்தோம். It was a night walk.

பெண்களை முதன்மை படுத்தும் பல இடங்கள் அடையாறில்  உண்டு. ‘ஆந்திரா மகில சபா’ வை நிறுவியவர், துர்கா பாய் தேஷ்முக்.  ‘தியோசாபிகல் சொசைட்டி’ ஆரம்பித்தவர் டாக்டர் ஆனி பெஸன்ட்.  புற்று நோய் சிகிச்சைக் கான ‘கேன்சர் இன்ஸ்டிடியூட்’ டைத் தொடங்கியவர், டாக்டர் சாந்தா அவர்கள்.

ஒரு 2கி.மி பரப்பளவில் உள்ள இடங்களை, 20 பெண்கள், சுற்றிப் பார்த்து, அதன் பாரம்பரியத்தை விளக்கிக் கொண்டே நடந்தோம்.  நாங்கள் நடந்து செல்கையில், காந்தி நகரில் பலர், ‘யார் இந்த பெண்கள்? இந்தேரத்துல சும்மா சுத்திட்டு இருக்காங்க..?’  என்று பேசினார்கள். நடந்து போகும் முன்னரே, காவல் நிலையத்தாரின் உதவியை நாடினோம், அவர்களும் ‘ஏன் மேடம், பகல்ல நடந்து போகக்கூடாதா? ஏன் இரவு நேரத்துல போறீங்க..? என்று கேள்வியை எழுப்பானார்கள்.

இந்த நடையின் நோக்கமே, இரவு நேரத்தில், பெண்கள் சுதந்திரமாக நடந்து செல்ல வேண்டும் என்பதுதான். பெங்களூரூ வில், பல குழுக்கள் இப்படி இரவு நேரங்களில் நடந்து செல்வதுண்டு. பெண்கள் கூடி, பூங்காவில் சினிமா பார்ப்பார்கள். பூங்காவின் புல் தரையில் படுத்துக் கொள்வார்கள்.

இவ்வளவு ஏன், பாகிஸ்தானில் கூட, இப்படியாக நிகழ்வுகள் நடைபெற்றது. அங்கும் டீ கடையில், பெண்கள் கூடி நிற்க மாட்டார்கள். இதை, ஒரு நிகழ்வாகவே அங்கே நடத்தினார்கள்.

பொது இடம் என்பது, அனைவருக்குமே பொதுவானது. ஆண்களுக்கு மட்டுமே உரியது, பெண்கள் வரக்கூடாது என்று எதுவும் இல்லை. இது எல்லாமே social control on Women. போன தலைமுறையை விடுங்கள், இந்தத் தலைமுறை கல்லூரி பெண்கள் கூட, டீ கடையில் நிற்க மாட்டார்கள். ஆனால், காஃபி ஷாப்பிற்க்குச் செல்வார்கள். காரணம், காஃபி ஷாப் என்பது, டீ கடை போல, ரோட்டின் மீது வெட்ட வெளிச்சமான இடம் அல்ல.  காஃபி ஷாப்பில், தலைமேல் கூரை உண்டு. அது ஒரு பாதுகாப்பான உணர்வை வழங்கும். அங்கே மேனேஜர் உண்டு, கவனித்து கொள்ள ஆள் உண்டு. இச்சிந்தனகளை நாம் மாற்றவேண்டும்.

கே.     உங்கள் எழுத்துப் பணி பற்றி?

ப.    Chronicles of unknown Indian என்ற தலைப்பில், 2005 முதல் 2010  வரை கட்டுரைகள் எழுதி வந்தேன். ஆனால், இப்போழுது யாரும் கட்டுரைகளை விரும்பிப் படிப்பதில்லை. நானும் எழுதுவதை குறைத்துக் கொண்டேன்.

கே.    பெண்ணதிகாரம் பற்றிய உங்கள் கருத்து?

ப.    ஒரு விஷயம் எனக்கு உறுதியாத் தெரிய வந்தது என்னனா, ஒரு பெண் சுய உரிமை பெற்று செயல்பட வேண்டுமென்றால், குடும்பத்தாரின் துணை, மிக அவசியம். இல்லையென்றால், அது ஒரு போராட்டமாகத் தான் இருக்கும். ஆண்கள் உதவியாக இருக்க வேண்டும்.

பாலின வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் போது, பெண்கள், ஆண்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இருவரின் மனநிலையையும் அதற்கேற்றவாறு  மாற வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதை போல, ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே, ஆண் இருக்க வேண்டும். அது தந்தையாக இருக்கலாம், கணவராக இருக்கலாம், மகனாக இருக்கலாம்.

கே.     ‘இந்த ஒரு விஷயத்தைப் பெண்கள் கடைப்பிடித்தால், மாற்றம் எளிதில் வரும்’ என்னு தாங்கள் நினைப்பது?

ப.        Patriarchy system – ஆண் ஆதிக்கம், gender stereotype. இவை இரண்டையும் மாற்ற வேண்டும். இன்றும் பல பெண்கள், ஆண்களை வேலை செய்ய விடுவதில்லை. காரணம், ‘நீ தாம்மா எல்லா  வேலையும் செய்யணும்’ என்று சொல்லி வளர்த்திருப்பாங்க. ஆண்களையும், இணைத்துக் கொண்டு, வீட்டு வேலை, வெளி வேலை என பகிர்ந்து செய்ய வேண்டும்.

குறிப்பாக, நம் வீட்டில், ஆண் குழந்தைகளை வளர்க்கும் போது, பாலின வேறுபாட்டை அகற்றும் விதமாக, ஒரு புரிதலுடன் வளர்க்க வேண்டும். நாமாக, அனைவருக்கும் வேலைகளை பகிர்ந்து கொடுத்து, அனைவரும் சேர்ந்து வேலை செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *