உலகெங்கிலும், கடந்த சில ஆண்டுகளில், பெண்கள் சுய நிர்ணய உரிமை அல்லது, ‘பெண்ணதிகாரம்’ என்ற வார்த்தை, பெண்களின் வளர்ச்சிக்கான தடையை நீக்கவல்ல சக்தியாகப் பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Empowerment என்ற வார்த்தை இருந்துள்ளது. ஆனால், Women empowerment என்ற வார்த்தை, 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தான் உரு பெற்று, வளர்ந்து வந்துள்ளது. தமிழ் அகராதியில், இச்சொல்லிற்கான மொழியாக்கம், பெண் ‘அதிகாரமளித்தல்’, ‘பெண் சுய நிர்ணய உரிமை’ என்றே கூகுள், எனக்குச் சொல்லித் தந்தது.
கூகுளைத் தாண்டி, இச்சொல்லின் தன்மையைப் பற்றி, சுற்றி உள்ள பெண் ஆளுமைகளின் கூக்குரல் என்னவாக இருக்கும், என்று தெரிந்துகொள்ள ஆசைப் பட்டேன். ‘தாகம் கொண்டவைத் தண்ணீர் தேடிக் கொண்டிருக்கும்’ என்பதைப் போல, புழுதி இயக்கம், ஓரு அருமையான வாய்ப்புடன் என்னைத் தேடி வந்தனர்.
பெண்களின் வளர்ச்சிக்கான தடையை, நீக்கவல்ல ‘பெண்ணதிகாரம்’ என்ற வார்த்தையே, இந்த சிறப்பிதழுக்கான தலைப்பானது.
நேர்காணலின் போது, திலகவதி அம்மாவும், மது சரண் அவர்களும், “அது என்ன ‘புழுதினு பேர் வச்சிருக்கீங்க?” என்று கேட்டனர். உழைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த இளைஞர்களின் பதில், “‘புழுதி’ என்பது, அழுக்கு, சூறாவளிக் காற்று, மணல், தூசு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. இவற்றை, உழைப்பு மற்றும் வியர்வையுடன் தொடர்புப்படுத்தலாம். அதே தென்றல் என்பது, மென்மையான, அலட்டிக்கொள்ளாத தன்மை கொண்டது” என்றனர்.
மாதம் ஒரு தலைப்பின் கீழ், பல புதிய எழுத்தாளர்களை உருவாக்குவது தான், ‘புழுதி’யின் செயல்பாடு. அந்த வகையில், ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்கு என்னை சிறப்பாசிரியராக்கி, நேர்காணல்களுக்கான வாய்பைத் தந்தனர்.
பெண்களின் ஆற்றலை மெச்சும் வண்ணம், நம் மூதாதையர்கள், பெண் தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டனர். பெண்ணை முன்னிலைப்படுத்தும் பெண் வழிச் சமூகமாகத் தான், நாம் இருந்து வந்தோம். காலப் போக்கில் எல்லாமே மாறிவிட்டது. இன்று தொலைந்து போன அல்லது கவனிக்கத் தவறிய பெண்களின் ஆற்றலையும், அறிவையும், மீண்டும் வளர்த்தெடுக்க வேண்டியதன் பொறுப்பும் கடமையும் நமக்குண்டு.
முன்னேற்றம் என்பது பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்ணிற்கு மட்டும் அல்ல. அனைத்துப் பெண்களுமே, தான் இருக்கும் நிலை எதுவானாலும், அந்நிலையிலருந்து, அடுத்தடுத்த நிலைக்கு உயர வேண்டும். பொருளாதார, அரசியல் மற்றும் சமூக கலாச்சார முறையில், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக உதவும் ஆயுதம் தான், இந்த ‘பெண்ணதிகாரம். பெண்கள் தங்கள் வாழ்க்கையின் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுவதற்கான, அறிவுப்பூர்வமான வழியாகும்.
தன் துறையில் சாதித்து, பெண் ஆளுமைகளிடம் இதை எப்படி உணர்கிறார்? சக தோழிகளுக்கும், அடுத்தகட்ட தலைமுறையினருக்கும், அவர்கள் சொல்ல வரும் கருத்தென்ன? இது தான் இந்த புத்தகத்தின் சாராம்சம். வயதுவரம்பின்றி, பெண்கள் அனைவருமே, இதை ஒரு கையேடாக, அவ்வப்போது வாசித்துப் பயனடைய வேண்டும். காரணம், வாழ்க்கையின் அணுகுமுறை மற்றும் முன்னேற்றதிற்கான ஆலோசனைகளை இந்த சாதனைப் பெண்கள், நம்முடன் பகிர்ந்துள்ளனர்.
இந்நூலின் உருவாக்கத்திற்கான என்னுடையப் பயணத்தைப் பற்றி நான் சிந்திக்கும்போது, நன்றியுணர்வும் உணர்ச்சிமிகுதலும், எனக்குள் நிறைந்திருப்பதை உணர்கிறேன். இந்தப் பக்கங்களுக்குள் இருக்கும் பேட்டிகள் வெறும் வார்த்தைகள் அல்ல; மாறாக, உலகெங்கிலும் உள்ள பெண்களின் நெகிழ்ச்சி, தைரியம் மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மைக்கான ஒரு சான்றாகும்.
பல துறையைச் சேர்ந்த ஆளுமைகளை, தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி பதிவிட்டும், சந்திப்பதற்கான அனுமதியைப் பெற்றேன். அனைவருமே, “யார்?” “எதற்காக?” என்ற கேள்விக்குப் பின் அடுத்த ஓர் இரு நாட்களிலேயே, என்னை நேரில் வந்து சந்திக்க அழைத்தனர். இதன் மூலம் நான் கற்றுக்கொண்ட இரண்டு பாடங்களை, இங்கு பதிவிட விரும்புகிறேன். ஒன்று, நம் நோக்கமும், செயலும் சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்தால், யாரையும் சந்திக்க, நமக்கு தடையேதும் இல்லை. இரண்டாவது, பெண்ணதிகாரத்தின் அவசியத்தையும், அதை இன்னும் பல பெண்களிடமும், இந்த சமூதாயத்திடமும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையை, இப்பெண்கள் அனைவருமே உணர்ந்துள்ளனர்.
“ஒரு மணி நேரம் போதுமா மா…?” என்று கேட்பார்கள். ஆனால், பேச ஆரம்பித்த பின், இரண்டு மணி நேரம் கடந்தும், தங்கள் ஆதங்கத்தை, ஆசையை, கோபத்தை, எதிர்பார்ப்பை, மிக அழகாக பகிர்ந்து கொண்டனர். தங்களின் பொன்னான நேரத்தை, ‘பெண்ணதிகாரம்’ நேர்காணலுக்காக ஒதுக்கிய, அனைத்து பெண் ஆளுமைகளுக்கும் ‘புழுதி’ இணையவழி இதழின் சார்பாக, மனமார்ந்த நன்றியை தெரிவி்த்துக்கொள்கிறேன்.
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நேர்காணலும் பெண்ணின் ஆன்மாவுக்கான ஒரு சாளரம். இந்த ஆளுமைகள் அனைவருமே, தன்னைச் சுற்றி உள்ள சமுதாயத்தை கருணையுடன் எதிர்கொண்டவர்கள், சவால்களை அசைக்க முடியாத மன உறுதியுடன் வென்றவர்கள், முன்பை விட வலிமையாகவும் அதிக அதிகாரமும் பெற்றுத் திகழ்பவர்கள். தங்கள் மீதுள்ள கண்ணாடிக் கூரைகளை உடைத்திருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் தங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் வழி வகுத்துள்ளனர்.
சொல்லப்பட்ட ஒவ்வொரு வரியும் உண்மைத்தன்மையுடன், நேர்மையாகவும், ஆழமாகவும் நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ‘பெண்ணதகிகாரம்’ என்பது ஒரு இலக்கு மட்டுமல்ல, அது ஒரு பயணம் என்பதே, இப்புத்தகம் எடுத்துரைக்கும் தாரக மந்திரமாகும்.
இன்று உலகளவில், கார்ப்பரேட் முதல் தொழிற்பட்டறைகள் வரை, வகுப்பறைகள் முதல் ஆய்வகங்கள் வரை, பெண்கள் தங்கள் அடையாளத்தை ஆணித்தரமாக நிரூபித்து வருகிறார்கள. அப்படி இருந்தும், குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் நீடிக்கத்தான் செய்கின்றன. ஊதிய இடைவெளி, LGBTQ+ பெண்கள், மற்றும் குறைபாடுள்ள பெண்கள், பல சவால்களை இன்றைக்கும் எதிர்கொள்கின்றனர்.
இனி தாங்கள் வாசிக்கப்போகும் இந்தப் பெண் ஆளுமைகளின் நேர்காணல் பதிவில், உங்களுடையப் பயணத்தைப் பற்றி சிந்தித்து, உங்களுக்குள் இருக்கும் எல்லையற்ற திறனைக் கண்டறிவீர்கள்.
இந்த சிறப்பிதழுக்காக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். இந்த பெருமை, என் ‘புழுதி’ இதழின் குழுவிற்கே போய் சேரும். பதிவுகளில் பிழை திருத்தம் செய்த சு.சுஜாதா அம்மாவிற்கும், வடிவமைப்பு பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடித்த திரு.சிறகன், திரு.தளபதி சல்மான் மற்றும் இக்குழுவிலிருந்து, முதன்முதலில் எனக்கு அறிமுகமான புழுதி இதழின் ஒருங்கிணைப்பாளர் திரு ஜெ.பி. என்ற ஜெயபிரகாஷ் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டும்.
இனி தடையேதும் இல்லை தோழிகளே, நாம் இருக்கும் நிலை எதுவானாலும், அதிலிருந்து உயர்வோம். நாமும் உயர்ந்து, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் உயர்த்த உதவுவோம்.
Evolve Encourage Empower.
Padma Amarnaath. நன்றி.
“ மாதா, பிதா, தெய்வம் “ , -இதிலிருந்தே பெண்மைக்கு நாம் தரும் முதன்மைப் புலப்படுகிறது.
இடைப்பட்ட காலத்தில் , பெண்களை சமுதாயம் எவ்வாறெல்லாம் துன்புறுத்தி உள்ளது என்பதும் வருந்தத்தக்க வரலாறு . இதே மண்ணில் சிறுமி ஏழு கயவர்களால் காயப்படுத்தி கொல்லப்பட்டதும் தலைகுனிய வைக்கிறது . ஸ்பானியப் மோட்டர் வாகனப்பயணி சீண்டப்பட்டதும் அரங்கேறியுள்ளது. இரண்டுமே பெண்மையை வணங்கும் நிலத்தில் இவ்வாரம் நடந்தது. அவமானத்தால் நாடே வெட்கி நிற்கும் நிலை .
“இனி தடையேதும் இல்லை தோழிகளே, நாம் இருக்கும் நிலை எதுவானாலும், அதிலிருந்து உயர்வோம். நாமும் உயர்ந்து, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் உயர்த்த உதவுவோம்.”- உங்களின் இந்த வரி அழகான வரி.
விதியொன்று செய்வோம் , மானத்தை மீட்போம் . பெண்கள் தினத்தன்று இந்த சபதமாய் செயல்படுத்துவோம்
Puzhuthi It was good effort to collect all the woman *herstories*.💞💞
Mesmerized🥰.
I read nivethitha Louis..
Excellent information in her words and her pain shows to realize the womans life 🤷♀️
This magazine make everywoman to be a strong…👍👍👍👍👍
Hats off to u and ur team….🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Congrats to all the supportive persons..
👏👏👏👏👏👏
Congratulations Padma mam for all your efforts.
As usual ur article is superb.
“இன்று உலகளவில் corporate முதல் தொழில் பட்டறை வரை ” என்கிற paragraph ல நீங்க சொல்லியிருக்கிற படி பெண்கள் எவ்வளவு தூரம் தான் முன்னேறி இருக்கிறார்கள் என்றாலும், சில தோல்விகள் இருக்க தான் செய்கின்றன என்பது முற்றிலும் உண்மை தான்.
முக்கியமாக இப்போதும் நடந்து கொண்டிருக்கிற பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் – அதிலும் சின்னஞ்சிறுமிகள் கூட பாதிக்கப்படுகிறார்கள் போன்றவற்றை கேள்விப்படும் போது மனதில் கோபம், துன்பம், ஆற்றாமை – அதிலும் இந்த விசயத்தில் பெண்கள் தோல்வியை தான் தழுவ வேண்டி இருக்கிறது என்பதை நினைக்கும் போது ஒரு கையாலாகாத தன்மை மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த மாதிரி விசயங்கள் முற்றிலுமாக ஒழிந்தால் மட்டுமே பெண்கள் முழுமையான சுதந்திரம், முன்னேற்றம் போன்றவைகளை அடைந்ததாக கருத/ சொல்ல முடியும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
All the best to புழுதி இதழ்.
புழுதி நிச்சயம் பறக்கும் என்றே தெரிகிறது, இங்கு புழக்கத்தில் இருக்கும் அநேக வார்தைகள் ஆண்களை மையமாக வைத்தே வருகிறது அதிலும் Empowerment என்ற வார்த்தை பெண்களுக்கும் உரித்தானது என அறிந்து கொற்வதற்குள் அரை நூற்றாண்டு ஓடி விட்டது, இப்போது தான் பெண்கள் தங்களுக்கானதை தேடி ஓடி கொண்டிருக்கிறார்கள். அந்த புழுதி பெண்ணதிகாரம் இதழ் நிச்சயம் அவர்கள் திறமையை எடுத்துரைக்க இது நல்ல தளமாக அமையும். புழுதி நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்