‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக பல பெண்களை நேரிலும் இணையவழி மூலமாகவும் சந்திக்கும் மாபெரும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நான் மிரட்சியுடன் பார்த்து வியந்த அற்புதமான தோழி, திருமிகு நிவேதிதா அவர்கள். நேரில் சந்திக்க முடியாத காரணத்தினால், ஜூம் வழியாக உரையாடினோம்.

“The best way to keep a prisoner from escaping, is to make sure he never knows he’s in prison “

  • Fyodor Dostoyevsky.

தோழி நிவேதிதாவுடனான உரையாடலின் ஒவ்வொரு வரியிலும், இந்த வரிகள் தான் பளிச்சிட்டன. எவ்வளவுத் தகவல்கள், எத்தனை சிந்தனைகள்… அடேங்கப்பா! இரண்டுமணி நேர உரையாடலில், இம்மியளவும் தெய்வில்லாமல், தேவையற்ற உரையாடல்கள் ஏதும் இல்லாமல், மிக அழகாக பல பல தகவல்களை முன் வைத்தார். தோழி நிவேதிதா உடனான இந்த இரண்டுமணி நேரத்தை, என் வாழ்நாளின் மிகப் பெரிய படிப்பினையாகக் கருதுகிறேன்.

பெண்ணியத்தை நாம் மேலோட்டமாகவே பார்த்துவருகிறோம். அதன் அடி வேர்களாக இருக்கும் சாதி கட்டமைப்புகளப் பற்றியும், பெண்களிடம் தோய்ந்து வரும் வளர்ச்சிக்கான மனநிலைப் பற்றியும், ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீதான சுதந்திரத்தைப் பற்றியும் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார்.  உலகளவில், ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நேர்காணல் பதிவு. ‘புழுதி’யின் ‘பெண்ணதிகாரம்’ வாயிலாக இதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருவதில் பெருமிதம் அடைகிறேன்.

கே. வணக்கம் அம்மா. உங்களை பற்றிய அறிமுகம்?

ப. வணக்கம். நான் நிவேதிதா. பிறந்தது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த விக்கிரமசிங்கபுரத்தில். தாமிரபரணியின் கரையில் இருக்கக்கூடிய, ஒரு அழகான ஊர். இயற்கையுடன் ஒன்றிய ஒரு பாதுகாப்பான வாழ்க்கை. அம்மா ஒரு ஆங்கில ஆசிரியை. வீட்டில் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும் மேற்கோள் காட்டிப் பேசுவார். ஒரு சாதாரண உரையாடலாகவே இருக்காது. இத்தன்மை, எனக்குள் நிறைய திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவியது. பள்ளியில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுவேன். வாசிப்புப் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது என் அப்பா. ஆறாம் வகுப்பு படிக்கும் போது, நேரு அவர்களுடைய Letters from a father to his daughter என்ற புத்தகத்தை விரும்பி வாசித்தேன். பத்தாம் வகுப்பு வரும்போதே ரஷ்ஷிய இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பத்தாம் வகுப்பு இறுதியில், தோழிகள் சிலர், மதுரைக்குச் சென்று ரயில்வே ஆட்சேர்ப்பு (recruitment) பரிட்சை எழுத மதுரைக்குச் சென்றனர். நானும் ஜாலியா மதுரைக்குச் செல்வோமே, என்று அவர்களுடன் சென்று எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று, தேர்வானேன். முதல் மதிப்பெண் பெற்றுவரும் எனக்கு, டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், இது மத்திய அரசாங்க வேலை, நிரந்தர வருமானத்திற்கான நல்ல வழி என்றுபெற்றோர்கள் இரயில்வே படிப்பிற்காக சென்னை SBOAவில் சேர்த்துவிட்டனர். அங்கே ரயில்வே கமர்சியல் கோர்ஸ், ரயில்வே துறைக்கான இரண்டாண்டு படிப்பாக, 11 மற்றும் 12ம் வகுப்பை முடித்தேன். படிப்பை முடித்து கிளம்பும் மோது, சிறந்த மாணவிக்கான சான்றிதழுடன் வெளியேறினேன்.

பன்னிரென்டாம் வகுப்பு முடித்த உடனே, திருச்சியின் ரயில்வே (goods shed) சரக்குக் கொட்டகையில் வேலை. Coal dock கரி கூடாரத்திற்குள் ஒரு முறை உள்ளே சென்று வெளியே வந்தால், தலை முதல் கால் வரை, கரி படிந்து, கருப்பா வெளியே வருவோம். ’என்னடா இது, நாம எங்க வந்து என்ன பண்ணிகிட்டிருக் கோம்’ னு கவலையா இருந்தது. ஆனா சம்பாதிக்கறோம்ங்கற திருப்தியும், அதற்கான தேவையும் இருந்ததால், தொடர்ந்து வேலை செஞ்சேன்.

அத்துடன் தபால் முறையில் B.Com, MBA படிப்பையும் முடித்தேன். திருமணம் ஆனது, கணவருக்கு வெளிநாட்டில் வேலை. இப்படியாக 35 வயது வரை திருச்சி ரயில்வேயில் பணியாற்றி, 2016ல் வேலையை விட்டேன். வேலையை விடும்போது, டிக்கெட் கவுண்டரில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

கே.  ”முதல் பெண்கள்” புத்தகத்தை எழுத வேண்டும் என்ற சூழல் எப்படி உருக்கொண்டது? அதற்கான அவசியமாக நீங்கள் கருதுவது?

ப. திருச்சி ரயில்வே பணியிலேயே முடங்கிவிடவேண்டாம் என்று நினைத்திருந்த சமயத்தில், மகனும் சென்னையில் உள்ள பள்ளியில் படிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தான். 2016கு பிறகு சென்னையில் குடியேறினோம். சென்னை எனக்கு ஒரு மிகப்பெரிய திறப்பு. இங்கு நண்பர்கள் சிலர் மரபு நடை (heritage walk) போகும் பழக்கம் கொண்டவர்கள். அதில் நானும் ஈடுபட்டு, அதை பற்றி வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தேன். என் எழுத்து என்பது, இப்படியாக ஆரம்பமானது.

அச்சமயத்தில், ஒரு விபத்தின் பேரால், கால் எலும்பு முறிந்து, ஆறு மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டிய சூழலில், முகநூலில் நிறைய பதிவுகள் போட ஆரம்பித்தேன். அதில் ஒன்று, ‘முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என்று இல்லாமல் விருப்பத்தின் பெயரால் அணிய வேண்டும்’ என்று பதிவிட்டேன். இதற்கு நிறைய சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடந்தன. யாரோ ஒருவர், என் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இவர் ஒரு கிறித்தவரை மணந்துள்ளார். வரதட்சனை கொடுமைக்கு ஆளாகி, உயிருக்குப் போராடி கொண்டிருக்கிறார்’ என்று பதிவிட்டார். தூத்துகுடி, கன்னியாகுமரி வரை இச்செய்தி பரவியது. உறவுக்காரர்கள் எல்லாம் தொலைபேசியில் அழைத்து பேச ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்வதென்று புரியாத நிலை. ஒரு வாரம் வலைதளங்களிலிருந்து ஒதுங்கி அமைதியாய் இருந்தேன்.

ஒரு வாரம் கழித்து, மீண்டும் ஒரு புதிய பதிவுடன் புதிதாய்ப் பிறந்தேன். ‘சமூக ஊடகங்களில் பிரச்சனையா? சமாளிக்க 25 வழிகள்’ என்று பதிவிட்டேன். நல்ல வரவேற்பு. என் தோழி இதை குமுதம் சிநேகிதிக்கு அனுப்பி வைத்தார். இப்படியாக தான் என் முதல் கட்டுரை வெளியானது. அதன் பின் எடிட்டர் என்னை அழைத்து மரபு நடை பற்றி கட்டுரையாக எழுதச் சொன்னார். பின் அவர் அவள் விகடனுக்கு மாறிப் போகவே, என் கட்டுரைகள் அதில் வரத் தொடங்கின.

அவள் விகடனின் 20ம் ஆண்டு சிறப்பிதழுக்காக, இந்தியாவின் முதல் சாதனை படைத்த பெண்களைப் பற்றி எழுதச் சொன்னார். இதை ஒரு தொடராக எழுத ஆரம்பித்தேன். பின் ஒரு நாள், கமலா சத்தியநாதன் என்பவரை பற்றிக் கேள்விப்பட்டேன். 1901ல் பெண்களுக்கான முதல் பத்திரிக்கையைத் தொடங்கியவர். அடுத்த நாள் கன்னிமரா நூலகத்திற்குச் சென்றேன். 1901 முதல் 1939 வரையிலான பெண்கள் பத்திரிக்கைகளைக் கேட்டு வாங்கினேன். பொடிந்து போன பழைய தாள்களாக இருந்தது. மின் விசிறியின் கீழ் பார்க்கக்கூடாது, அதிகம் வெளிச்சம் படக்கூடாது என்ற நிபந்தனைகளுடன், ஒரு பெரிய பொக்கிஷத்தை என் முன்னே வைத்தார்.

1901ல் வெளிவந்த புகைப்படங்களையெல்லாம் பார்த்து வியந்து போனேன். காரணம், அந்த காலத்துப் பெண்களைப் பற்றிய ஒரு பிம்பம் நமக்கிருக்கும் அல்லவா. படிக்காதவர்களாக, வீட்டிற்குள்ளேயே இருப்பார்களென்று.. ஆனால் நான் பார்த்த படங்கள் வேறு. ராஜா அண்ணாமலை டென்னிஸ் கிளப் என்று ஒரு படம். அதில், ஒரு 10 பெண்கள், புடவையை மேலே சொருகிக்கொண்டு, கையில் பேட்டுடன் ஒரு போஸ். முதன்முதலில் விமானம் செலுத்திய ஒரு முஸ்லிம் பெண்மணி, விமானத்தை இயக்கியவாறே ஒரு போஸ். புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் பெண் மாஜிஸ்டிரேட்டின் புகைப்படம். பார்க்க பிரமிப்பாக இருந்தது. இதை ஏன் யாருமே பேசவில்லை? ‘சுல்தான்ஸ் டிரீம்’ என்ற அறிவியல் புனைக்கதையை ஒரு இஸ்லாமிய பெண் 1905ல் எழுதி உள்ளார்.

இதை வைத்து, சாதனை படைத்த பெண்களைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். இது தான் ‘முதல் பெண்கள்’ன் ஆரம்பம். கிட்டதட்ட 45 தமிழ்ப் பெண்களை பற்றி எழுதினேன். இதை மைத்திரி பதிப்பகம் வெளியிட்டது. இச்சமயம், கிழக்குப் பதிப்பகத்திலிருந்து தொல்லியல் சார்ந்நு எழுதச் சொல்லிக் கேட்டார்கள். இதன் காரணமாக ஆதிச்சநல்லூர் போக ஆரம்பித்தேன். அங்குள்ள பொருட்களை ஆய்வு செய்து, சங்க இலக்கியங்களில் அதற்கான மேற்கோள்கள் மற்றும் திறவுகளுடன், ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’ என்ற புத்தகத்தை எழுதினேன். என் இரண்டு புத்தகங்களும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் வெளியாயின.

கே. பெண்களைப் பற்றி எழுத ஏதாவது குறிப்பிட்டக் காரணம்?

ப. வரலாறு என்றைக்கும் ஆண்களைப் பற்றி தான் பேசும். அந்த மன்னர் ஆண்டார், இந்த மன்னர் போனார் என்று வாசித்தே பழகி விட்டோம். 2000 வருடங்களாக பெண்கள் என்ன ஆனார்கள், எங்கே போனார்கள், என்ற கேள்விக்கான விடை கிடைக்காது. சங்க காலத்தில் ஔவையாரைப் பார்க்கலாம், பின் காரைக்கால் அம்மையார் அதன் பின்னர் நேரே 19ம் நூற்றாண்டு. ஆங்கிலத்தில் சொல்வதுண்டு, ஒரு வேடன் கதை சொல்வது கதையாக இல்லாமல், சிங்கம் தன் கதையை அதுவாகவேத் தான் எழுதவேண்டும், என்பது போல, நம் கதையை நாமாகவே தான் சொல்ல வேண்டும். அது மட்டும் அல்ல, ஒரு பெண்ணின் வரலாற்றை, பெண்ணின் உணர்வுகளுடன், ஒரு ஆணால் நிச்சயம் எழுத முடியாது. வரலாறு என்றைக்குமே History,  His – storyயாகத்தான் இருந்து வருகிறது. அதை Her- storiesஆக மாற்ற வேண்டும் என்பதற்காக தான், எங்கள் பதிப்பகத்திற்கு ‘Her stories’  என்று பெயரிட்டுள்ளோம்.

கே. சமூகத்தில் பெண்ணின் கவனத்தை சிதறடிக்கும் காரணிகளாக நீங்கள் பார்ப்பது எவற்றை,  மற்றும் அவற்றில் இருந்து எப்படி விடுபடுவது?

ப. முதலாவதாக, guilt ripping. குற்ற உணர்வு. குடும்பம் என்ற சுழற்ச்சிக்குள் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி சமூகம் என்ற இன்னொரு வட்டம். இப்படியாக, பல வட்டங்கள் பெண்களைச் சுற்றி இருக்கு. இந்த வட்டத்திற்குள்ளேயே நாம் சமரசம் செய்து கொண்டு பயணிக்கிறோம். இந்த பெண் ராத்திரி 10 மணிக்கு மேலே வெளியே போறா, இவ எப்படி பட்டவளா இருப்பா! என்ற பார்வையோடு சமூகம் பார்க்கும். பையனுக்கு பரிட்சை இருக்கு. ஆனா, இவ ஆய்வு செய்ப்போரேனு பையத் தூக்கிட்டு கிளம்பிப்போறா. இவ ஒரு நல்ல தாயா? என்ற கேள்வியை குடும்பம் எழுப்பும். அப்போ, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஒரு நல்ல பெண்ணாக காட்டிக் கொள்ளவேண்டிய கிரீடம் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கு. கட்டாயத்தின் பெயரால் நாமும் அதை சுமந்து கொண்டிருக்கிறோம். ஆக, ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு பாணியில் சபாளிக்கிறார்கள். நமக்கு எளிதான வகையில், நாம் நம் குடும்பத்தை சமாளிக்க வேண்டும்.

அடுத்து, வேலையும் குடும்பத்தையும் சமாளிக்கும் ஆற்றலை நாம் வளர்துக்கொள்ள வேண்டும். அந்த ஆற்றல் இல்லாத காரணத்தினால், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இதில் சிக்கித் திணறுவதை நான் பார்த்திருக்கிரேன். ஒரு கட்டத்தில், இனி வேலை செய்து என்ன ஆகப்போகிறது என்ற சிந்தனை வரும். நான் என்ற ஒரு பெண் தனியானவள். அந்த குடும்பத்தில் ஒரு பங்கு. அந்த பெண்ணே அந்த குடும்பம் அல்ல. ‘நான்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால், சுயநலம் பிடித்தவள், என்ற முத்திரை குத்தப்படுவாளோ என்ற பய உணர்வு தோன்றும். இதை ஒதுக்கி விட்டு, நான் என் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற புரிதல் இருக்க வேண்டும்.

நான் ஒரு எழுத்தாளர் என்பது எனக்கான அடையாளம்.

நான் ஒரு பெண்ணியவாதி என்பது எனக்கான அடையாளம்.

இன்னாரின் மனைவி, மகள் என்ற பிற அடையாளங்கள் நமக்கு இரண்டாம் பட்சம் தான், என்ற புரிதல் இருக்க வேண்டும்.

அடுத்து, பல பெண்கள் இன்று பாதிக்கப்படுவது peer pressureஆல். அலுவலகம் சென்றால், உடன் வேலை செய்பவர்கள் என்ன உடை அணிகிறார்கள், எப்படி உடுத்துகிறார்கள் என்று கவனிப்பது. உடனே வாங்க ஆசைப் படுவது. இந்த போட்டி மனப்பான்மை, நமக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது. என் தேவை என்ன என்ற சிந்தனையும், நான் யார் என்ற அடையாளமும் மட்டுமே உங்களைப் பற்றி பேசும்.

கே. இந்த ஒப்பீடுதல் வலைதளங்களின் மூலம் அதிகமாகிறதல்லவா?

ப. Exactly . ஒரு கணவன் மனைவி ஊருக்குப் போய் வந்து 10 புகைப்படங்கள் போட்டால், உடனே நானும் போகவேண்டும் என்ற மனப்பான்மை அதிகரிக்கிறது. வீடு வாங்கினேன், கார் வாங்கினேன், அதைச் செய்தேன் போன்ற பழமைவாத சூழலை உருவாக்கி வைத்துள்ளோம். நமக்கிருந்த அரண், விழுமியங்கள் எல்லாமே மாறி போச்சு.

அதை விட்டு, நான் படித்த பள்ளிக்கு என்ன செய்தேன், நான வளர்ந்த கிராமத்திற்கு என்ன செய்தேன், சமூகத்திற்கு என்ன கொடுத்தேன்,  ஒரு குழந்தையின் கல்விக்கு உதவினேனா போன்ற விஷயங்களில் போட்டி போடலாமே. கார் வாங்குவதிலும் நகை வாங்குவதிலும் போட்டிப் போடும் நாம், இது போன்ற சமூக மேன்மைக்கு போட்டிப் போடலாமே. ஆண்கள் ஒரு சிலர் இதைச் செய்து வந்தாலும், பெண்கள் அதிகம் செய்யாததற்குக் காரணம், பொருளாதார சுதந்திரம் இல்லாதது தான்.

கே. பெரும்பாலும் பெண்களை உயர் பதவிகளுக்கு வரவிடாமல் தடுப்பது எவை?

ப. பெரும்பாலும் ஒரு அலுவகத்தில் ஒரு பெண் உயர் அதிகாரியை, ஆண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவள் சொல்வதை நாம் கேட்கவேண்டுமா என்ற ஈகோ மனப்பான்மை குறுக்கே வரும். Character assassinationல் தொடங்கி, பல பிரச்சனைகளை உருவாக்குவார்கள். இது ஆண்கள். மட்டும் அல்ல, ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட பெண்களும் செய்கிறார்கள். ‘அவங்க அந்த நிலைக்கு சும்மாவா வந்திருப்பாங்க..’ என்று அந்த ஆணாதிக்க சிந்தனை கொண்ட பெண்ணும் சிந்திப்பாள்.  அதிகார வர்க்கத்தில் உள்ள ஒரு ஆண் தவறு செய்வதற்கும், அதே தவறை, ஒரு பெண் செய்துவிட்டால், அப்பெண்ணை இந்த சமூகம் அணுகும் விதமே வித்தியாசமாகத் தான் இருக்கும். ஒரு பெண்ணின் வாழ்க்கையை யாருமே பார்ப்பதில்லை.

கே. பெண்களுக்கான சமூக பொருளாதார மேம்பாடு பற்றிய புரிதலின் அவசியத்தை உங்கள் பார்வையிலிருந்துச் சொல்ல முடியுமா? 

அதற்கான முன்னெடுப்புக்கள் எப்படி இருக்க வேண்டும்?

ப. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நான் வாங்கின முதல் சம்பளம் 900ரூ. 17 வருடங்கள் நான் வேலை செய்து, பின் 2016ல் என் கடைசி சம்பளம் 80,000. வேலையை விட்டதால், திடீரென்று ஒரு நாள், என் கையிலிருந்து அந்த 80,000 போய்விட்டது. கணவர் எனக்கு துணையாக இருந்து வந்தாலும் கூட, என்றைக்காவது அவரிடம் வாய் திறந்து சற்றுக்கூடுதலாக பணம் கேட்க கூச்சமாக இருக்கும். ஆய்வுப் பணிகளுக்கு செல்லும் போது எனக்கு நிறைய செலவாகும். என் சம்பாத்தியம் என்று இருந்தால், எனக்கான சுதந்திரம் என்னிடம் இருக்கும்.

பல பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தின் அர்த்தம் புரியவில்லை. சம்பளம் வாங்கி, கணவரிடம் கொடுத்து விட்டால், வேலை முடிந்ததென்று இருக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. பெண்கள் பணத்தை மேலாண்மை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் பணத்தைக் கையாள முடியும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு அவசியம்.

கிராமப்புற பெண்களிடம் அந்த நம்பிக்கை உண்டு. அம்மா எங்கோ ஒரு இடுக்கில் பணத்தை சேர்த்து வைப்பார். அப்பாவுக்குத் தேவை என்றால், உடனே எடுத்துத் தருவார். நகரப் பெண்கள், நகைச் சீட்டு, பாத்திரக் கடை சீட்டு என்று போவார்களே தவிர, அதற்கு மேல் தன்னை பாதுகாத்துக்கொள்ள சிந்திப்பதில்லை.

பொருளாதார ரீதியில், கிராம பெண்களில் கூட, 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பெண்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். அத்திட்டத்தின் மூலம் பணம் கிடைத்தாலும், குடிகார கணவனை வைத்து கொண்டு சமாளிப்பது கடினம். அவர்களுக்கு சுய உதவ குழுக்கள் கடன் உதவி செய்து வருகிறார்கள். இது போன்ற சுய உதவி குழுக்களை, இன்னும் வளப்படுத்த வேண்டும்.

அதே போல, மாதம் 1000ரூ என்பது பெண்களுக்கு மிகப் பெரிய உதவி. பெண்களுக்கு Mobility ரொம்ப முக்கியம். அதற்கான கட்டணமில்லா பேருந்தும் மிகப் பெரிய உதவி. இதையும் தாண்டி, கிராமப்புறங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். நகரங்களில் உள்ள பெண்கள், பொருளாதார வசதி இருந்தும், அதை மேலாண்மை செய்யத் தெரியாத முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள். கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் தான், அவர்கள் படும் துன்பம், மற்றும் பணத்தின் தேவையை உணர்வார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக பணம் சம்பாதிப்பது ஆணின் வேலை, என்ற சிந்தனை மாற வேண்டும்.

கே.  தற்போதைய சூழலில் பெண் விடுதலை என்பது ?          

ப. அடுத்த தலைமுறையினர், சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு முறையான அரசியல் கல்வி கொடுத்திருக்கோமா, பொருளாதார சுதந்திரம் கொடுத்திருக்கோமா என்பது கேள்வி தான். முடிவெடுக்கும் சுதந்திரத்தை பெண்களுக்குக் கொடுத்திருக்கோமா என்றால், கிடையாது.

இன்று சில பெண்கள் தைரியமாக, தனியாக ஊர்சுற்றிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். முப்பது வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறார்கள். ஆனால், 45 வயது, 50 வயது பெண்களுக்கு அது ஒரு culture shock.

எனக்கு கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா; எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது, எப்போது பெற்றுக்கொள்வது, நான் எப்போ கருத்தடை செய்வேன், நான் தான் செய்யவேண்டுமா, என்ற முடிவுகளை பெண்கள் எடுக்க வேண்டும். அதற்கு மூத்தத் தலைமுறை பெண்கள் ஆதரவளிக்க வேண்டும். எனக்கு கிடைக்காத சுதந்திரம் என் பெண்பிள்ளைக்கு கிடைக்கட்டும் என்று சிந்திக்க ஆரம்பிப்போம். நல்லா வாழ்ந்துட்டுப் போகட்டுமே! இந்தப் புரிதல் அம்மாக்களுக்கு இருக்க வேண்டும். ‘நாலு பேர் என்ன சொல்வார்களோ..’ என்று அந்த நாலு பேர் பற்றி தான் இன்னும் கவலை பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சமூகம் தொடர்ந்து நம்மை அச்சுறுத்தத் தான் செய்யும். அதுவும் காதல் என்ற பெயரில் இருக்கும் அச்சத்தை, நாம் களைய வேண்டும். அதாவது, கற்பு என்பதிலும், கருப்பை என்பதிலும் நம் மக்களுக்கு ஒரு தூய்மைவாதம் தேவைப் படுகிறது. பெண்ணின்  கருப்பை என்பது ஆணின் உடைமையாக பார்க்கப்படுகிறது. அப்போ, அந்த கருப்பைக்குள் யாருடைய விந்து போக வேண்டும் என்பதை, அந்த ஆண் தான் முடிவு செய்கிறான். அதை அந்த பெண் முடிவு செய்து போகட்டுமே!

அதனால் தான், ஒரு பெண்பிள்ளை காதல் என்று சொன்ன உடனே, அந்த குடும்பத்திற்கு வலிக்கிறது. இத்தனை வருடங்கள் காப்பாற்றி வந்த சாதி தூய்மை கெட்டு விட்டதே என்ற கவலை தான், குடும்பத்திற்கு. ஆனா, இவர்களுக்குத் தெரியாது, ஒரு பத்துத் தலைமுறைக்கு முன்னர், இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது. DNA பரிசோதனை செய்து பார்த்தால், மங்கோலியர்களும், நீக்ரோகளும், ஆஸ்டிரோய்ட்களும் கலந்த கலவை தான் நாம் எல்லோரும். ஆக, சாதி என்பது பெண் விடுதலைக்கு எதிராக கட்டப்பட்ட மிகப் பெரிய சதி.

இன்றைய காலகட்டத்தில் சாதிச் சங்கங்கள், இதை மிக தீவிரமாக வளர்த்து வருகின்றனர். அக்குழுவைச் சேர்ந்தவர்கள், அதே சாதியினரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக வேலை செய்து வருகிறார்கள். இது எல்லாமே, பெண் விடுதலையில் தான் கை வைக்கும். இந்த குழுக்கள், தன் சாதி மக்களின் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும், மேம்பாட்டுக்கும் வேலை செய்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! மற்ற எல்லாமே பேசிப் புரிய வைத்து விடலாம். ஆனால் இந்த சாதி தூய்மைவாதமும் மதத் தூய்மைவாதமும் மிகவும் ஆரோக்கியமற்றது.

18வயது நிரம்பிய பெண்ணிற்கு, தனக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்று சட்டமே சொல்கிறது. அதை இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? அப்பா யார்? அம்மா யார்? “என் பிள்ளையின் தேவை எனக்குத் தெரியாதா? அவள் பாதுகாப்பு பற்றி எனக்கு அக்கறை உண்டு” என்பார்கள். அந்தத் தேர்வை அவர்களே எடுக்கட்டும். தப்பே செய்தாலும், விழுந்து எழுந்து வரட்டும். அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

நாம் கவனிக்க வேண்டியது, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் வரக்கூடிய காதல். அதை நாம் கண்டித்து, அவர்களை காத்திருக்கச் சொல்ல வேண்டும். அதுவும் அவர்கள் தன் காலில் நிற்க தேவையான வளர்ச்சிக்காகவே அன்றி, சாதியின் அடிப்படையில் அல்ல.

கே. கிறிஸ்துவத்தில் ஜாதி நூலினை எழுதுவதற்கான ஆரம்பப்புள்ளி எது?

ப.  ‘அறியப்படாத கிறித்துவம்’ புத்தகத்திற்காக நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளும் சமயம், வரதராஜன் பேட்டை ஊருக்கு கோவிட் சமயத்தில் சென்றிருந்தேன். அங்கே, மூன்று இரவுகளுக்குத் தொடர்ந்து செபஸ்தியார் கூத்து (நாடகம்) நடைபெறும். அந்த நாடகத்தை காணவும், அக்கலைஞர்களுடன் பேசவும் திட்டமிட்டேன். இரவு நாடகம் என்பதால், பகலில் அவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்றிருந்தனர். காத்திருந்து மாலையில் தான் அவர்களை சந்திக்க முடியும். கோவிட் சமயம் வேறு. யார் வீட்டிலும் தங்க முடியாது. சர்ச் வாசல்லியே துப்பட்டவை விரித்து படுத்துக்கொண்டேன்.

 நல்லா தூங்கிட்டேன். திடீரென்று கூச்சல் சத்தம். இரண்டு ஆண்களுக்கு இடையே அடி தடி சண்டை. “ஏன் அண்ட வீட்ல போய் வேல செய்ய நீ யாரு?” என்று ஒருவர் இன்னொருவருடன் சண்டை போட்டுகிட்டிருந்தாரு. இன்றைக்கும் சென்னைக்கு 300கிமி தொலைவில், ஆண்டான் அடிமை போன்றவார்த்தைகளை கேட்க ஆச்சரியமாக இருந்தது. சண்டை போடும் இருவரையும் சமாதானம் செய்து பிரித்து விட்டு, “100ரூ க்காக அடிச்சிகாதீங்க, 100ரூ தானே, நான் தர்றேன்” என்றேன். அதற்கு அவர், “100ரூபாய்னாலும், அது என் ஆண்டேயோட காசா தான் இருக்கணும், ஏன்னா எனக்கு அதுல உரிமை இருக்கு” என்றார்.

தான் ஒரு அடிமையாக சுரண்டப்படுவதைக் கூட உணராமல், அதைப் பெருமையாக நினைக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பார்த்து, மன வேதனை அடைந்தேன். இவ்வளவு வளர்ந்த சமூகத்தில் கூட, ஒரு வீட்டில் வேலை செய்வதற்குக் கூட, நீ தான் போகணும், நான் தான் போகணும் என்று அடித்துக்கொள்கிறார்கள்.

பின் அவ்வூரைச் சேர்ந்த லயோலா பேராசிரியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து, இதைப் பற்றிப் பேசினேன். “ஆமாம். இன்னமும் அந்த ஊரில் சாதி பிரிவினை உண்டு. கல்லறை கூட தனித் தனியே தான் “ என்றார்.

அப்போ என் மனதில் எழுந்த கேள்வி ஒன்று நான்… “அனைவரும் சமம் என்று சொன்ன ஒரு மதம் கிறித்துவம். எந்த மதத்திலிருந்து விடுபட, எந்த பிரச்சனையிலிருந்து விடுபட இவர்கள் கிறித்வத்திற்கு வந்தாங்க? சனாதனத்திலிருந்து விடுபட தான் கிறித்தவத்திற்கு வந்தாங்க. ஆனா, அங்கிருந்து வந்த பிறகும், ஏன் சாதிய்தை முதுகில் தொத்திக்கொண்டு, பிரச்சனையை உருவாக்குறாங்க? அந்த இடத்தில் வேலை இல்லையென்றால், வேறு இடத்தில் வேலை செய்துகொள்வோம் என்ற தன்னம்பிக்கைக் கூட இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே’ என்று சிந்திக்க ஆரம்பித்தேன். இதைப் பற்றி ஆய்வு செய்ய, அடுத்தடுத்த ஊர்களுக்குப் பயணம் செய்தேன்.  இதே பிரச்சனை எல்லா ஊர்களிலும் இருந்தது. இதைத் தனியா எழுதணும்னு முடிவு செஞ்சேன்.

இதற்குத் தொடக்கமா இருந்தது, தோழர் திருமாவுடைய மணிவிழா மலர். தோழர் வன்னியரசு கேட்டுக்கொண்டதன் பெயரில், இரண்டு பகுதிகளாக எழுதினேன் – தலித் மக்களின் பேட்டிகளை ஒரு புத்தகமாகவும், என் கள ஆய்வுகளை மற்றொரு புத்தகமாகவும் எழுதி வெளியிட்டேன்.

கே. நீங்க சொல்றது, எனக்கு தொ.பா. அய்யாவை தான் நினைவு படுத்துது. சாதி ஒரு எதார்த்தமான கொடூரம் னு சொல்லியிருக்காரு. சாதிங்கற கட்டமைப்பிலிருந்து, மக்கள் வெளிவருவது மிகக் கடினம். மக்கள் மதம் மாறினாலும், சாதியை விடமாட்டாங்க னு எவ்வளவு ஆழமா சொல்லி இருக்கார்?

ப. I completely endorse what he said. மக்கள் மதம் மாறினாலும், அங்கே வந்த பிறகு, the victims themselves play perpetrators here. பார்ப்பனிய மனநிலை இங்கும் தொடர்கிறது.

புது சமூகத்தில் தொடரும் இன்னொரு பாங்கு என்னவென்றால், என்ன பிரச்சனை வந்தாலும், உடனே பார்பனர்களை குறை சொல்கிறோம். இது தவறு. பார்ப்பனர்கள் அனைவருமே பார்ப்பனியத்தை சுமப்பதில்லை. ‘பார்ப்பனியம்’ is a phenomena (நடக்கும் ஒரு நிகழ்வு). பார்ப்பனியம் பார்ப்பனர்களிடமும் இருக்கு, இடைநிலை சாதியினரிடமும் இருக்கு, தலித் மக்களிடமும் இருக்கு. இடைநிலை சாதியினர் இன்றைக்கு அதை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டுள்ள காரணத்தினால் தான், குறிப்பாக கிறித்துவத்தில் இவ்வளவு பிரச்சனைகள்.

இதை எந்த திருச்சபைகளும் கேள்வி கேட்பதில்லை. போப் இரண்டாம் ஜான் பால் இதை கேள்வி கேட்டிருக்கார். 20வருடங்கள் ஆன பிறகும், நிலைமை மாறவில்லை. தமிழ்நாட்டில் 18 பிஷப்புகளில், ஒரேஒருவர் தான்  தலித்.

புத்தகத்தை நான் எழுதிவிட்டேன். ஆனால் என் ஆற்றாமை அடங்கவில்லை. எனக்கு இது ஒரு புத்தகம், அவ்வளவுதான். ஆனால் நான் பேட்டி எடுக்கும் போது, வருத்தத்துடன் பேசிய பலருக்கு, ‘இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாதா.. என்கிற ஒரு எதிர்பார்ப்பு. நான் மறுபடியும் எப்படி அவர்களை பார்ப்பேன்…

 (மனதில் கனத்த சோகம், நிவேதா அவர்களின் முகத்தில் படர, அடுத்த கேள்விக்கு மாறினேன்.)

கே. ’Her Stories’ பற்றி மக்களுக்கு என்ன சொல்ல விழைகிறீர்கள்?

ப.  Her Stories பதிப்பகம், எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லாமல், நானும் தோழர் வள்ளிதாசனும், அஹானாவும் தொடங்கியது தான். வரலாற்றில் மறந்துபோன, மறக்கப்பட்ட பெண்களைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, 2019ல் முகநூல் பதிவாக ஆரம்பித்தது.

முகநூலில் பெண்கள் பிரச்சனைகளைப் பற்றி எழுதும்போது, நிறைய பேர் கருத்து தெரிவித்து, நீண்ட விவாதங்கள் நிகழும். இப்படி காத்தரமாக எழுதும் பெண்களை, கட்டுரை எழுதிக் கொடுக்கச் சொன்னோம். சாந்தி சண்முகம் என்பவர், துபாயில் வசிக்கிறார். மெல்லிய நகைச்சுவையோடு எழுதுவார்.  துபாய் வாழ்க்கைமுறையை பற்றி எழுதி கொடுக்கச் சொன்னோம்.  ‘தமிழ் பொண்ணு இன் துபாய் மண்ணு’ என்ற தலைப்பில் எழுதினார். நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல, ரமாதேவி ரவீந்திரசாமி என்ற ஆசிரியை, ஏழு முறை ஐ.நா சென்று வந்தவர். அதைத் தொடராக எழுதச் சொன்னேன். ‘அடுக்களை டூ ஐ.நா’ என்று எழுதினார். அதுவும் ஹிட் ஆச்சு. 2011ல் பதிப்பகம. துவங்கினேன். இந்த பதிவுகளையெல்லாம் புத்தகமாக வெளியிட்டேன்.

பதிப்பகத்தில் இதுவரை 90 புத்தகங்கள் வெளியாகி இருக்கு. பெண்களிடம் நல்ல வரவேற்பு இருக்கு. கீதா இளங்கோவன் அவர்கள் எழுதிய ‘துப்பட்டா போடுங்க தோழி’ தான் எங்க பெஸ்ட் செல்லர், அதிகம் விற்பனையான புத்தகம். இன்றளவும் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு. அடுத்து கீதா அவர்கள் எழுதிய புத்தகம் ‘பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணும்’. இளைஞர்களிடம் இருக்கும் ‘எனக்கு இதுதான் வேண்டும்’ என்ற உறுதி மனப்பான்மையைப் பற்றி சொல்லும் புத்தகம். இளைய தலைமுறையினரைச் சென்றடைய, இந்த Her Stories ரொம்ப உதவியா இருக்கு.

கே.  தங்களுடைய அடுத்தப் படைப்பு, எதை குறி்வைத்து இருக்கும்

ப.  இரண்டு விஷயங்கள் இருக்கு. ‘கிறித்துவத்தில் சாதி’யின் அடுத்த பகுதி. அடுத்து, கிறுத்துவத்தில், பெண்களின் பங்களிப்பு. குறிப்பாக, வெளிநாட்டு கிரித்துவ மிஷினரியைச் சேர்ந்த பெண்கள். வெறுமனே அவர்களுடைய வாழ்க்கை வரலாறாக இல்லாமல், அவர்கள் இங்கே ஆரம்பித்த பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், இன்றளவும் எப்படி இயங்கிக் கொண்டிருக்கு, அப்பெண்களின் நினைவாவது அங்கிருக்கா, என்பதெல்லாம் பார்த்து எழுத வேண்டும்.

கே. ’பெண்ணதிகாரம்’ Women Empowerment’ உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும். ஒரு பெண் எம்பவராக வேண்டுமானால், எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்?

ப.  கல்வி ரொம்ப முக்கியம். அதுவும் வேலைக்கான, கல்வியாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

 அடுத்து passion. மனதிற்குப் பிடித்தமான ஏதோ ஒன்றை செய்து கொண்டிருங்கள். தயவு செய்து, சமையல் என் passion என்று சொல்லாதீர்கள் (அதை வைத்து சம்பாதிப்பதானால் சரி). சமையல் என்பது அடிப்படை வாழ்க்கைக்கானத் தேவை.

மூன்றாவதாக, பொருளாதார சுதந்திரம். யாரையும், எதற்கும், எதிர்ப்பார்க்காமல், என் வேலையை நான் பார்த்துக்கொள்வேன், என் பணத்தை நான் மேலாண்மை செய்து கொள்வேன், என்ற தெளிவு இருக்க வேண்டும்.

நான்காவதாக, body rights. எனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கணும், எப்ப குழந்தைப் பெத்துக்கணும், எப்ப கருத்தடை செய்யணும், நான் தான் செய்ய வேண்டுமா, போன்ற உரிமைகள் என்னுடையது என்ற தெளிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.

கே.  புழுதி பத்திரிக்கையின் மூலமாக, தாங்கள் வாசகர்களிடம் பகிர விரும்பும் ஏதாவது சில கருத்துக்கள்?

ப.  பெண்ணியவாதி என்றாலே, என்னை ஏற இறங்கப் பார்ப்பார்கள். ஏதோ சண்டை போடும் ஒரு நபராக பார்ப்பார்கள். இன்னும் ஒரு சிலர், பெண்ணியம் பேசுபவர்களை, குடித்து விட்டு பெண்ணியம் பேசுகிறார், தம் அடித்து பெண்ணியம் பேசுகிறார் போன்ற விமர்சனங்களை வைப்பார்கள். பெண்ணியம் என்பது கருத்து. அந்த கருத்திற்கு எதிர் கருத்து இருந்தால், அதை முன் வையுங்கள். அதை விட்டுவிட்டு, தனி நபர் தாக்குதல் வேண்டாம். தனிப்பட்ட விஷயங்களில் தலையிட யாருக்கும் உரிமை  இல்லை.

ஒரு பெண்ணியவாதியாக, எங்கள் கருத்து என்ன… நாங்களும் வளருவோம். நீங்களும் உடன் சேர்ந்து வளரவேண்டும், என்று தான் சொல்கிறோம். சேர்ந்து ஒண்ணா முன்னேறிப் போலாம் என்று தான் பெண்ணியம் சொல்கிறது. இதில் ஏன் வேற்றுமை? ஆண்கள் உடனே தன் மனைவியிடம், அவளுடன் சேராதே என்பார்கள். காரணம் அச்சம். அதிகாரம் பறிபோகும் அச்சம்.

குடும்பம் என்பது சமத்துவம். அந்தப் புரிதல் ஆண்களிடம் இல்லை. பெண்ணியவாதியைக் கண்டு பயப்பட வேண்டாம், என்று ஆண்களிடம் சொல்ல நினைக்கிறேன்.

கே.  தாங்கள் விரும்பி வாசிக்கும் புத்தகங்கள்?

ப. Alchemist. ரசவாதி. சிறு வயது முதல், ஆங்கிலம் அதிகம் வாசிப்பேன். ‘ரசவாதி’ என் மனதிற்கு நெருக்கமான புத்தகம். குழப்பம் அல்லது தேக்க நிலை இருந்தால், ரசவாதி புத்தகத்தை எடுத்து கொள்வேன். இப்போ ஆய்வுப் புத்தகங்கள் தான் நிறைய வாசிக்கிறேன். தொ.பா, ஆ.சிவசுப்ரமணியம் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள். பெரிய கனத்த விஷயங்களை, சுருக்கமாகச் சொல்லக் கூடியவர்கள். அதைத் தவிர, வரலாற்றில் பெண்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கப் பிடிக்கும்.

கே. இறுதியாக, தங்களுக்குப் பிடித்த பொழுது போக்கு அம்சங்கள்?

ப. (கலகலவென சிரித்தார்).. கைப்புள்ளைக்கு நேரமே இல்லையே… இதுல எங்கிருந்து பொழுது போக்கு… ம்… நேரம் கிடைத்தால், K drama, K series பார்க்க பிடிக்கும். கொரியன் டிராமா ஒரு ஃபேன்டஸி உலகம். உண்மையான கொரியா அப்படியாக இல்லை தான். ஆனால், இந்த தொடர்களில் வரும் ஆண்கள், மென்மையான பெண்ணியத் தன்மையுடன் இருப்பார்கள். அதை பார்க்கப் பிடிக்கும். மற்றபடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிப்பேன்.

நன்றி.

One thought on “

  1. வியக்க வைக்கும் சாதனையாளர் நீங்கள் என்பது இந்தப் பேட்டி மூலம் அறிகிறேன். உங்கள் ஒரு பதிவு ஒன்றில் கிறிஸ்தவத்தில் சாதியம் பற்றித் தகவல் கேட்டது. இதுபற்றி என் மாமா முறை உறவினர் வின்சென்ட் மனோகரன் அவர்களிடம் கேட்டேன், தெரியும் என்றார். மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *