பெண் என்றாலே, மென்மை, சாந்தம், பொறுமை என்றெல்லாம் வர்ணிப்பார்கள். வரலாற்று கதைகளிலும், கற்பனைக் கதைகளிலும், சினிமாக்களிலும் மட்டுமே, வீர தீர சாகசங்கள் செய்யும் பெண்களைப் பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில்….

“அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது, பொறுப்புகளை மிகுந்த நேர்மையுடன் செயல்படுத்துவதும், பலருடைய வாழ்க்கையை சிறந்த வழியில் மாற்றுவதும் ஆகும்.” என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்து, சொல்லுக்கும் செயலுக்கும் ஏற்றார் போல நடந்துகொண்டிருக்கும் ஒரு வீர நங்கையை பற்றிய நேர்காணல் தான் இது.

திலகவதி ஐ.பி.எஸ்.

 1972ல் பெண்களின் வீர கற்பனைகளை நினைவாக்குவது போல, முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக, திருமிகு கிரண் பேடி அவர்கள், தேர்வானார். இதை அடுத்து, 1976ல், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமிகு திலகவதி அவர்கள், தமிழ் நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். பெரும் அளவில் பாராட்டைப் பெற்ற ஒரு நிகழ்வு இது.

முதல் முறையாக, நான் ஒரு பெண்ணை, போலீஸ் உடையில் பார்த்து வியந்தது திருமதி திலகவதி அவர்களைப் பார்த்து தான். அழகான, சாந்தமான முகத்துடன், கம்பீரமான போலீஸ் உடை என்பது, ஒரு வித்தியாசமான காம்பினேஷனாக, கலவையாக இருந்தது.

என் நண்பர் ஒருவருடைய  குடும்பத்திற்கு, திலகவதி அம்மா பரிட்சயமானவர். நண்பரை சந்திக்கும் போதேல்லாம், அம்மையாரைப் பற்றி விசாரிப்பேன். அவரும் ‘பத்மா என்று ஒரு தோழி, உங்களைப் பற்றி விசாரிப்பார்’ என்று அவரிடம் என்னைப் பற்றி சொல்லி இருக்கிறார். என்னை பார்க்காமலேயே, என் நண்பரிடம், ‘உன் தோழிக்கு என் அன்புப் பரிசு’ என்று கூறி, ரோன்டா பைர்ன் எழுதிய இரகசியம் என்ற புத்தகத்தில், ‘அன்பு பத்மஜாவுக்கு (என் முழு பெயர்), 2022-க்கான வாழ்த்துகளுடன் திலகவதி (28.12.21)’ என்று கையெழுத்திட்டு நண்பர் மூலமாக அனுப்பி வைத்தார்.

சிறு வயதில் நான் பார்த்து வியந்த திலகவதி அம்மாவை, என் நண்பர் வாயிலாக ஒரு அற்புதமான பரிசை எனக்கு அனுப்பிய திலகவதி அம்மா அவர்களை, ஒரு நேர்காணல் செய்வேனென்று, கனவிலும் நினைத்ததில்லை.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திய புழுதி மின்னிதழ் குழுவிற்கு நன்றி.

கைபேசியில் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, சந்திப்பதற்கான வாய்ப்பை கேட்டு, குறிஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தேன். சில நிமிடங்கள் கழித்து, ‘வணக்கம் பத்மா’ என்று ஆரம்பித்து, பதிலைத் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு முறை செய்தி பரிமாறிக்கொள்ளும் போதும், மரியாதை நிறைந்த வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி எழுதி இருப்பார்.

பிறர் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்பது, நீங்கள் பிறரிடம் நடந்துக் கொள்ளும் முறையில் தான் உள்ளது, என்பதற்கான சிறந்த உதாரணமாக திலகவதி அம்மாவினுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் இருந்தது.

‘அம்ருதா’ அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். ஓய்வு பெற்றப் பிறகு, ஓய்வாக வீட்டில் இருக்கலாம் என்று எண்ணாமல், தன்னால் இயன்ற உதவியை இலக்கியத்திற்கும் மக்களுக்கும் செய்துகொண்டு வருகிறார். தன் அலுவக அறைக்குள், மின் விசிறியின் மெல்லிய ஓசைக்கிடையே, தன் பால்ய காலம், பெண் முன்னேற்றம், சமுதாய சீர்கேடுகள், இலக்கியம், பதிப்பகம், காவல் துறை அனுபவங்கள் என பல செய்திகளை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.

சிறிதும் தயக்கமின்றி, அதே காவல்துறை அதிகாரிக்கான ஒரு கம்பீரத்துடன், பல செய்திகளை, பெயர்களுடன் நினைவுக் கூர்ந்து பகிர்ந்தார். 71வயதில் அவருக்கிருந்த நினைவு திறனைக் கண்டு வியந்தேன். இவருடைய அனுபவங்களின் வாயிலாக, நாம் பெரும் அறிவுரைகள என்பது, நிச்சயம் சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.

இனி, திருமதி திலகவதி அம்மையாருடைய நேர்காணலை வாசிப்போம்.

கே. வணக்கம் அம்மா. உங்களை பற்றிய அறிமுகம்?

ப. வணக்கம் மா. நான் பிறந்தது தர்மபுரியில் உள்ள குமாரசாமி பேட்டையில். தர்மபுரி என்றாலே, it is highly notorious. இன்றளவும் அதிகபடியான பெண் குழந்தைகள் கொல்லப்படுவதில் முதல் இடம் என்று data (தரவுகள்) இருக்கு. அப்படியான ஒரு ஊரில் பிறந்தவள் நான். என் அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. அப்பா Ex serviceman (ஓய்வு பெற்ற இராணுவ வீரர்).  அவர் படித்ததே இராணுவத்தில் சேர்ந்த பிறகு தான். மிகவும் வித்தியாசமான சிந்தனை கொண்டவர். என் பெற்றோருக்கு நான் ஒரே குழந்தை. அடுத்து ஒரு குழந்தை வேணும்னு முயற்சி கூட பண்ணல. “ஆயிரம் தான் இருந்தாலும், ஒரு ஆண் குழந்தை இல்லைனா எப்படி டீச்சர்?” என்று தெருவில் உள்ள மற்ற பெண்கள் எல்லாம் கேட்பாங்க. அம்மாவின் ஒரே பதில், “யார் சொன்னா எனக்கு ஆண் பிள்ளை இல்லையென்று, இவ தான் எனக்கு ஆண் பிள்ளையும், பெண்பிள்ளையும் கூட” என்பார். ‘கோவிலுக்கு நேந்துகோ’, ‘டாக்டரைப் போய் பாரு’ என்று யார் எது சொன்னாலும், அம்மா கேட்கமாட்டார். இத்தனைக்கும் அவர்கள் அதிகம் படித்தவர்களோ, உலக விவரங்கள் அதிகம் தெரிந்தவர்களோ, பெண்ணியத்தை பற்றி அதிகம் அறிந்தவர்களோ இல்லை.

இன்று எனக்கு வயது 71 ஆகுது. திரும்பிப் பார்க்கும் போது, 71வருடங்களுக்கு முன், இப்படி ஒற்றுமையாக முடிவெடுத்தார்கள் என்பதை எப்படி பார்ப்பதென்றே தெரியவில்லை. இன்றைக்கும் பல குடும்பங்களில், ஆண் பிள்ளைகள் மேல் ஒரு தனிப் பற்று உண்டு. வறுமையில் இருப்பவர்கள் கூட, ஆண் பிள்ளை பிறக்கும் வரை, வரிசையாக பெண் பிள்ளைகளை பெற்று கொள்கிறார்கள்.

இந்த ஒரு முடிவில் மட்டுமே, அப்பாவும் அம்மாவும் ஒற்றுமையா இருந்தாங்க. மற்ற எல்லா விஷயத்திலும் வட துருவம் தென் துருவம் தான். அம்மா, பெரியார் சிந்தனைகளை பின்பற்றுபவர். கடவுள் நம்பிக்கை கிடையாது. எந்த பண்டிகையும் கொண்டாட மாட்டார். அவர் பட்டுடுத்தி நான் பார்த்தே இல்லை. அம்மா ஒரு நாளும் பவுடர் பூசியதில்லை, மஞ்சள் தேய்துக் கொண்டதில்லை, பொட்டு வைத்து கொண்டதும் இல்லை. எதுவுமே அவருக்குப் பிடிக்காது. இதனால், நானும் அப்படியே வளர்ந்தேன்.

முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு அறையில் இருக்கும். நான் பள்ளிக்குப் போகும் சமயத்தில், அம்மா அந்த அறையை பூட்டிட்டு போய்டுவாங்க. நானும் கண்ணாடி பார்க்காமலேயே, தலையை மட்டும் சீவிக்கொண்டு கிளம்பிடுவேன். மற்றபடி எந்த அலங்காரமும் செய்துக் கொண்டதில்லை. “ஏன் பொட்டு இல்லாமல் வர்ரே….”னு கேட்பாங்க. “சாந்து உள்ள இருக்கு”னு சொல்லி, வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கேட்பேன். அதற்கு அம்மா, “அதெல்லாம் ஒன்னும் முக்கியமான விஷயமே இல்ல. படிக்கிற புள்ள புஸ்தகத்தை விட்டு போனா தான் தப்பு. பொட்டில்லாம போனா தப்பில்ல”னு சொல்லுவாங்க.

இதற்கு நேர்மாறானவர் என் அப்பா. தீவிர பக்தி உள்ளவர். எந்த இடத்தில் சாமியார் இருக்கார்னு சொன்னாலும் சமாதி இருக்குனு சொன்னாலும், உடனே கிளம்பிடுவார். ஒரு நாளும் காலை பூசை முடிக்காமல் சாப்பிட்டதே கிடையாது. அதேபோல, நான் வீட்டில் இருந்தால், என்னையும் பூஜை அறைக்கு அழைத்து போவார். அங்கிருக்குற ஸ்தோத்திரங்களை யெல்லாம் சொல்லனும், கந்த சஷ்டி கவசத்தை மனப்பாடமா சொல்லனும். இதற்கு பின், விபூதியை என் நெற்றி நிறைய பூசி விடுவார். பக்கத்தில் டியூஷன் வாத்தியார் வீட்டிற்குச் சென்றால், 60, 70 மாணவர்கள் இருப்பாங்க. எல்லாரும் ‘கே.பி.சுந்தராம்பாள் வந்துட்டாங்க’னு கிண்டல் பண்ணுவாங்க.

அப்பா, வியாழன் தோரும் சாய்பாபாவுக்காக சாம்பிராணி போடுவார். “அந்த புகையெல்லாம் போன பிறகு வந்து சொல்லு” என்று அம்மா எதிர் வீட்டு வாசலில் போய் உட்கார்ந்துகொள்வார். “அந்த காலத்துல, மின்சாரம் கிடையாது, அதனால எண்ணொய் விட்டு விளக்கேத்திட்டு இருந்தாங்க. ஆனா, இப்ப எதுக்கு உங்க அப்பா நல்லெண்ணை, நெய் எல்லாம் விட்டு விளக்கேத்துறாரு..?” என்று அம்மா என்னிடம் கேட்பார். எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடு.

அப்பா காந்தி படம் மாட்டி இருப்பார். எனக்கு இன்னும் நினைவுல இருக்கு.. சுதந்திரத் தாயின் புகைப்படம், அவருக்கு முன்னால் ஒரு விளக்கு எரியும், அந்த விளக்கின் ஜுவாலை, காந்திஜியின் முகத்தில் வெளிச்சமாகப் படும். பக்கவாட்டில் நின்றபடி, காந்தி அதை பார்த்து கொண்டிருப்பார். எங்க அம்மா உடனே சுபாஷ் சந்திர போசுடைய படத்தை வாங்கி மாட்டுவார். அம்மா எப்போதும் அண்ணாவைப் பற்றியும் தமிழக மேடை பேச்சாளர்கள் பற்றியும் பேசுவார். அப்பாவுக்கு காமராஜரும் கக்கனும் தான் பிரியம். இவர்களுடைய இந்த உரையாடல்களைக் கேட்டு வளர்ந்தவள் நான். இது போன்ற அமைப்பு இன்று எத்தனை குழந்தைகளுக்கு கிட்டும்?

பின் தங்கிய மாவட்டமாக கருதப்பட்ட தர்மபுரியிலும், இப்படி பட்ட exposure இருக்கத்தான் செய்தது. எனக்கு 11, 12 வயது இருக்கும் போதே, நல்ல வாட்டசாட்டமா இருப்பேன். என் பெரியப்பா, “பொண்ணு வளர்ந்துட்டா. இனி பள்ளிகூடமெல்லாம் போக வேண்டாம். இந்த வருஷத்தோட நிப்பாட்டிடு. இல்லைனா, ஒரு தப்பான முன்னுதாரணமா ஆயிடும்”னு சொன்னார்.  எங்க அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இருந்த உறவை நான் சொன்னா, இந்த காலத்துல யாரும் நம்ப கூட மாட்டாங்க. அப்பாவுக்கு அவர் வெரும் அண்ணன் இல்லை. ஒரு குரு ஸ்தானத்தில் இருக்க கூடியவர். ஆனால், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் பேச்சைக் கேட்க வில்லை.

நான் SSLC படிக்கும் சமயம், என் தலைமை ஆசிரியை அப்பாவை அழைத்து, “படிப்பில் சுட்டியா இருக்கா. கல்யாணம் பண்ணி வெச்சுடாதீங்க. மேலே படிக்க வைங்க. கண்டிப்பா ஏதோ ஓரு துறையில சாதிப்பா” என்றார். அப்பாவை பொறுத்த வரை, discipline ரொம்ப முக்கியம். நேரத்தை கடைபிடிக்க வேண்டும், பொய் பேசக் கூடாது. எங்கள் ஊரிலிருந்து, 7கிமி தொலைவில் உள்ள கடத்தூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்குள்ள கன்னியாஸ்திரிகளைக் காட்டுவார். அவர்கள் மீது அதிக மதிப்பு கொண்டவர் அப்பா. “இந்த வயசுல கல்யாணம், குடும்பம் னு இல்லாம, மக்கள் சேவையில் இருக்காங்க பாரு. நம் பெண்கள் தலை முடி வளர்க்க எவ்வளவு நேரம் செலவு செய்றாங்க, ஆனா இவங்கள பாரு…  அதையெல்லாம் வெட்டிட்டு, நேரத்தை எவ்வளவு பயனுள்ளதா ஆக்குறாங்க பாரு” என்பார்.

பின் அப்பா என்னை வேலூரில் உள்ள ஆக்ஸிலியம் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் சேர்த்து விட்டார். இது எனக்கு நன்மையாகவே முடிந்தது. காரணம், அங்கு சேர்ந்த பிறகு நான் பைபிளை முழுமையாக படித்தேன். அங்கிருந்த சிஸ்டர்கள், மோரல் சயின்ஸ் வகுப்பு நடத்துவாரகள். அந்த வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்கள், இன்றளவும் என்னை வழி நடத்தி வருகிறது. அங்கு பட்டம் பெற்ற பின், இங்கு ஸ்டெல்லாவில் சேர்ந்து எம்.ஏ முடித்தேன். பின் பொது தேர்வு எழுதி, போலீசில் சேர்ந்தேன்.

கே.  அம்மா ஒரு வழி, அப்பா ஒரு வழி. இந்த சூழலில், உங்களுக்கு எது adaptive ஆ இருந்தது? உங்கள் தேர்வு எதுவாக இருந்தது?

ப.  சின்ன வயசுல, பெருசா முடிவெடுக்க முடியல. ஆனா, அம்மா சொல்றது, எளிமையாகப்  புரிந்தது. வாழ்க்கையில் செலுத்த கூடிய, apply பண்ணிப் பார்க்க கூடிய விஷயமா இருந்தது. அப்பா சொன்ன விஷயங்கள் எல்லாமே, metaphysical ஆ இருந்தது. இந்த முறையில் மந்திரம் சொன்னா இப்படி, இந்த முறையில ஜபம் பண்ணனும் என்று சொல்வதெல்லாம், விளைவு என்னனு என்னால உணர முடியல. செய்யலேனா, அப்பா வருத்தப்படுவாரேனு, அவர் சொன்னதையெல்லாம் செஞ்சேன்.

கே.  காவல் துறை என்ற பாதையைத் தேர்ந்தெடுக்க, உங்களைத் தூண்டியது எது?

ப.  சுயமரியாதை சிந்தையோடு தான் நான் வளர்ந்தேன். திமுக தலைவர்கள் எழுதிய பத்திரிக்கைகளை, எங்க வீட்டு திண்ணையில உட்கார்ந்து விவாதிப்பாங்க. இதில் சுப்ரமணிம் சார் தான் எனக்கு தமிழக வரலாறை சொல்லிக் கொடுத்தவர். அண்ணாவின் மேடைப் பேச்சைக் கேட்க, அப்பா அழைத்துச் செல்வார். இதையெல்லாம் கேட்டு வளர்ந்த எனக்கு, தன்மானமும், சுய மரியாதையும் உடன் வளர்ந்தன. தாய் தந்தை ஆனாலும், எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்ற சிந்தனையும் வளர்ந்தது.

இதன் அடிப்படையில், கல்லூரி முடிக்கும் போதே, வங்கித் தேர்வு, குரூப் 1 தேர்வு, என எல்லா பொதுத் தேர்வுகளையும் எழுதினேன். என் பெரியப்பா மகன் ஒருவர், அரசு அலுவலகத்தில் விசாரிப்பார். “உன் தங்கை நல்லா எழுதி இருக்காங்க. நிச்சயம் தேர்வாவாங்க” என்று சொல்வார்கள். காசு கொடுத்தால் வேலை நிச்சயம் என்ற வதந்திகளெல்லாம் இருந்தது. ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. தபால்காரர் தெய்வமாய் தெரிவார். ‘ஒரு போஸ்ட் கார்டு வராதா, you are selected என்ற வாசகத்தை படிக்க மாட்டேனா…’ என்று ஏங்குவேன். ஆனால், செலக்‌ஷன் லிஸ்டல் என் பெயர் வராது. சோர்ந்து போவேன்.

என்னை பொறுத்தவரை, வேலைக்குச் செல்வது என்பது, சம்பாதித்து சுயமாக யாரையும் எதிர்பார்காமல் வாழ்வதற்கு மட்டும் அல்ல, என் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை செயல்படுத்த ஒரு வழியும் கூட. சமூக பங்களிப்பிற்கான ஒரு வாய்ப்பு. நேரத்தை உபயோகமாக செலவிட வேண்டும். இப்படியாக, UPSC தேர்வு எழுதி, ஐ.பி.எஸ் ஸில் தேர்வானேன். இதுவே நல்ல வேலை தான், போதும் இனி தேர்வு எழுத வேண்டாம் என்னு அப்பா சொல்லி விட்டார்.

எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. காரணம், அச்சமயத்தில், Freedom at midnight என்ற புத்தகத்தை படித்து கொண்டிருந்தேன். ‘அப்பாடா, இனி தேர்வுக்கு படிக்க வேண்டாம். தடையில்லாமல் இந்த புத்தகத்தை படிக்கலாம்’ என்ற நிம்மதி. பல பரிட்சைகள் எழுதி, தோல்வியுற்ற எனக்கு, இந்த ஐ.பி.எஸ். பதவி என்பது, வராது வந்த மாமணியைப் போல. நான் தேர்வாகும் நான்கு வருடங்கள் முன், கிரண் பேடி தேர்வானார். 1972, கலைஞரின் ஆட்சியில், முதன்முறையாக 4 பெண் சப் இன்ஸ்பெக்டரும், 20 கான்ஸ்டபிள்களும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்த பெண்கள் போலீஸ் துறையில் வேலை செய்யும் போது, நான் மட்டும் ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணமும் உத்வேகமும் தோன்றியது.

கே.  சமூகத்தில் ஒரு பெண், எந்த மாதிரியானச் சூழலில் குற்றம் நிகழ்த்தும் சூழலுக்குத் தள்ளப்படுகிறாள்.

ப.  குற்றங்களில் இரண்டு வகை உண்டு. கொடுங்குற்றங்கள் மற்றும் தினசரி நிகழக் கூடிய சிறு குற்றங்கள். உதாரணத்திற்கு, பெண்கள் சிறைச் சாலையில் பார்த்தீங்கன்னா, சாராயம் காய்ச்சுபவர்களும், அதை விற்பவர்களும்தான் 50% இருப்பார்கள். அவங்க வீட்டு ஆம்பளைங்க தான் சாராயம் காய்ச்சுவாங்க. ஆனா, விற்கும் இடத்திலேயோ, காய்ச்சும் இடத்திலோ, அவங்க வீட்டுப் பெண்களை நிக்க வெச்சுட்டு போய்டுவாங்க. காரணம், ஆரம்ப காலத்தில், இந்த பெண்களை எளிதில் கைது செய்ய மாட்டாங்க. இவங்கள எங்க கூட்டிட்டு வர்றது?, எங்க தங்க வைக்கிறது?, ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, யார் பதில் சொல்வது? காவல்துறையே கையை பிசைஞ்சுகிட்டு நிப்பாங்க. அந்த நிலமையை உண்டாக்குவது தான் இவர்களுடைய நோக்கம்.

அதன் பின் பெண் காவல் நிலையம், பெண் போலீஸ், பெண் குற்றவாளிகளை நடத்துவதற்கான பயிற்சி இதெல்லாம் கொடுக்கப்பட்டது. பெண்களை கைது பண்றாங்க, ஆனா, இந்த நடைமுறை மட்டும் மாறவே இல்ல.

அடுத்து, விபச்சார வழக்குகள். ஆண்களால் துன்புறுத்தப்பட்டு, வற்புறுத்தப்பட்டு, கட்டாயப் படுத்தி, ஈடுபட வைக்கிறார்கள். அதற்கும் தலைமையில் ஒரு பெண் இருப்பார். ஆனால் இவர்களை இயக்கிக் கொண்டிருப்பது ஒரு ஆணாகத்தான் இருக்கும்.

இதைத் தவிற, தற்காலத்தில், குடும்பங்களுக்குள் நடக்க கூடிய கொலைகள் அதிகரிக்கிறது. கணவனை பிடிக்காத மனைவி, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் மனைவி, அம்மாவை கொலை செய்யும் மகன், இதெல்லாமே சமீப காலமா நான் பார்க்குறேன். இவை எல்லாமே, சமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த குற்றங்கள்.

இதற்கான காரணங்கள்னு பார்த்தா, பேராசை,  இயலாமை, திருமணத்திற்கு மீறிய உறவுகள்.

கே. ஒரு பெண் தன்னை எவ்விதங்களில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்? உண்மையில் Empowerment என்றால் என்ன?

ப.  ஒரு பெண், முதலில் , மனதளவில் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். தன்னால் முடியும் என்ற நம்பிக்கை அவசியம். பெண் தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும். எந்த ஊர் ராஜாவும் வெள்ளைக் குதிரையில் வந்து உங்களை காப்பாத்த மாட்டார். நீயே தான் உனக்கு காவல் என்ற அளவில், உன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கென்று போர்வீர்ராகவோ, குத்துச் சண்டை போட்டியளராகவோ இருக்க வேண்டாம்.

முதலில், எல்லா நிலையிலும் alert-ஆ இருக்கனும். ஒரு நிகழ்வுக்குப் பின், அடுத்து என்ன என்று மனம் கடகடனு சிந்திக்கனும். மனப் பயிற்சியும் துணிச்சலும் வேண்டும்.

அடுத்து, முக்கியமான விஷயம் emotion உணர்வுகள். உணர்ச்சி ரீதியா, யாரையும் நம்பி இருக்கக் கூடாது. உணர்வு சார்ந்து அடுத்தவரை ஊன்று கோலாக பயன்படுத்திக் கொள்வது தேவையில்லை. நட்புடன், இனிமையாகப் பழகலாம். அதில் தவறில்லை. அது வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும். ஆனால், அவர் இல்லாமல் நான் இல்லை, எது நடந்தாலும் உடனே போய் அவரிடம் சொல்ல வேண்டும், போன்ற emotional crutch எல்லாம் வேண்டாம். இப்படி நினைப்பவர்களால் தான் நமக்குத் துண்பம் வரும்.

கலைஞர் சொன்னது போல, கூடா நட்பு கேடாய் முடியும். இது நடந்ததை நாம் எல்லோருமே கண்ணால் பார்த்திருக்கோம். எவ்வளவு அதிகாரம் பெற்ற மனிதராக இருந்தாலும், அவர்களை உடன் வைத்துக் கொண்டு surrender ஆக வேண்டாம். இந்த சார்பு நிலை யாருக்கும் தேவையில்லை.

அடுத்து, பொருளாதாரம். பணத்திற்காக யாரையும் எதிர்பார்க்கக் கூடாது. நம் தேவைகளை நாமே பார்த்துக் கொள்ளும் அளவிற்கான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலிக்கான ஒரு மாத்திரை வாங்கக் கூட பிறர் கையை நம்பி இருப்பது வாழ்க்கை அல்ல. பிடித்த உடை வாங்கிக் கொள்ள, உங்க தோழி வந்தா ஒரு காபி டிபன் வாங்கிக் கொடுக்க, இதற்கெல்லாம் பணம் தேவை. அரசு பதவிதான் என்றில்லை. படிப்பிற்கேற்ற வேலையைத் தேடி கொள்ளலாம், அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம், வியாபாரம் தொடங்கலாம், ஒரு பொட்டிக் கடை வைக்கலாம், விவசாயியாக இருக்கலாம்.

உங்களுக்கென்று ஒரு வருமானம் அவசியம். சுருக்கமாகச் சொல்லப் போனால், உணர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற தேவைகளுக்கு, யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.

கே.  காவல் துறையில் தாங்கள் கற்றுக் கொண்டமுதல் மறக்க முடியாத பாடம், என்னவாக இருந்தது?

ப.  என் முதல் பாடம் அகாடமியில் தான். வெளியில் இருந்து நிறைய பேர் வந்து பாடம் நடத்திட்டு போவாங்க. காவல் துறையில் பணியாற்றுவது, வாழ்க்கை பாடங்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. அதன்பின் பயிற்சிக்காக வேலூர் வந்தேன். அங்கே, வயதில் மூத்த காவல் துறையினர் இருந்தாங்க.

அதுல, நடராஜர் என்பவரின் அறிவுறைகள் எனக்கு ரொம்ப வித்தியாசமா பட்டுது. அவர் சொல்வார், “காவல் துறையில, நிறைய பேர் லஞ்சம் வாங்குவாங்க. அது வாங்குவது கூடத் தவறில்லை. ஆனா, எப்படி வாங்கனும்னு ஒரு கணக்கு இருக்கு” என்பார். எனக்கு ஆச்சர்யம் இருக்கும் இவர் என்ன சொல்ல வராறுன்னே புரியாது. உடனே விளக்குவார்,  “இப்மோ மா.. ஒரு வீட்ல கொலை நடந்த உடனே அந்தக் கொலைகாரன், ஆயிரக் கணக்கில் நமக்கு பணம் தரத் தயாரா இருப்பான். அந்த பணம் நமக்குத் தேவையில்லை. அதை விட, கொலையுண்ட அந்த வீட்டு மனிதர்களிடம் போய் நீ பணம் கேள். எதற்குன்னா, நமக்கு அந்த கொலைகாரன் பற்றிய தகவல் வரும். இந்த ஊரில் இருக்கிறான், உதாரணத்திற்கு பெங்களூரில் இருப்பதாகத் தகவல் வரும். நீ இங்கே வேலூரில் இருந்து உடனே கிளம்பினால் அவனைப் பிடிக்கலாம். பெங்களூர் வரை உடனே சென்று வர அவர்களிடமே பணம் கேள். வேலையை துரிதமா தாமதிக்காமல் முடி. அவர்களிருக்கும் வேதனையில் எப்படி கேட்க என்று யோசிக்க வேண்டாம். ஒரு காவலாளியாக, அவர்களுக்கு உதவி செய்ய, அவர்களிடம் இந்த உதவியை கேட்டு நீ செய்யலாம்” என்பார்.

அதை அவர் சொல்லக் காரணம், என்னனு பார்தீங்கன்னா, இன்று உள்ள வசதிகள் எங்களுக்கு அப்ப கிடையாது. குற்றவாளியிடம் பல ஆயிரங்கள் வாங்குவதை விட, இது எவ்வளவோ மேல் என்பார்.

அடுத்து. நான் ஒரு பெண் என்பதால் இதைச் சொன்னாறானு தெரியல, நிறைய வீடுகள்ல களவு போகும். 100 பவுன் 200பவுன் திருட்டு மோகும். அதை கண்டுபிடித்து, திரும்ப கொடுக்கும் போது, “100பவுன் இருக்கு… திரும்ப கொடுக்க போறோம். இதில் இருந்து ஒரு தோடோ, சின்ன நெக்லஸோ எடுத்தா, அவங்களுக்குத் தெரியவாபோகுது? மொத்தம் 97 பவுன் தான் கிடைச்சதுனு சொன்னா, கிடைத்த வரை போதும்னு தான் சந்தோஷப் படுவாங்க… அப்படீங்கற எண்ணத்தோட, அந்த சின்ன நகைக்கு நீ ஒரு நாளும் ஆசை படாதே”னு சொல்லுவார். காரணத்தையும் அவரே சொல்லுவார், “நாம கண்டுபிடிக்கும் அந்தத் திருட்டு பொருள், சிவன் சொத்து. அதுல ஒரு போதும் நீ கை வைக்காதே” என்று எனக்கு அவர் சொல்லிக் கொடுத்தது, என் மனசுல பசுமையா பதிஞ்சு போச்சு.

கே. உங்களுடைய வாசிப்பும் எழுத்தும்?

ப.  காவல்துறை பணி என்பது, எனக்கு 22 வயதில் வாய்த்தது. ஆனால், எழுத்தும் இலக்கியமும், எனக்கு 8 வயது முதலே அறிமுகம். எங்க வீட்டு பக்கத்துல, கந்தசாமி  என்பவர் குடியிருந்தார். அவரிடம் பாடம் படிக்க போவேன். பூங்குன்றன் என்ற புனைப் பெயரில் நிறைய எழுதுவார். அவருடைய கவிதைகளுக்கு, முதல் வாசகியும் விமர்சகரும் நான் தான்.

அடுத்து, அவருடைய பழக்கம் என்னனா, ஈசீ சேர்ல கண்ணை மூடி படுத்திருப்பார். என் கையில், மூ.வா. உரையுடன் திருக்குறளை கொடுத்து, விளக்க உரையுடன் வாசிக்கச் சொல்லி, அவர் காதில் கேட்டு கொண்டிருப்பார். இப்படியாக பல இலக்கியங்களை நான் அவருக்கு வாசித்தேன். அதுமட்டும் அல்ல, அவர் வேலை செய்யும் பள்ளியின் நூலக மேலாளரும் அவர்தான். நிறைய புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வந்து, லெட்ஜரில் குறிப்பார். இந்த வேலையில் நானும் உதவியாக இருப்பேன். இப்படியாக, புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் அதிகரித்தது.

தெருவில் யார் புதிதாக குடி வந்தாலும், அவங்க வீட்ல புஸ்தகம் இருக்குனு தெரிஞ்சா, உடனே ஆர்வமா போய் பார்ப்பேன். புஸ்தகம் இல்லைனா, அவங்க கூட பழக மாட்டேன். அதேபோல, எங்க வீட்டுக்கு பால் கொண்டு வந்து கொடுக்கும் வெங்கடேசன் என்பவர், வங்கியில் பியூன் வேலை பார்த்து வந்தார். அவங்க அம்மாவும் அப்பாவும் கல்கியின் தீவிர வாசகர்கள். என்றைக்கு கல்கி ஆரம்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து எல்லா பதிவுகளையும் பைண்டிங் பண்ணி வெச்சிருந்தாங்க. அதை ஆர்வத்தோடு வாங்கி வந்து படிச்சேன்.

இப்படியாக ஒரு சமயம், ஒரு டீச்சர் தம்பதி, எங்க தெருவுல குடிவந்தாங்க. அந்த அம்மா ஒரு தீவிர கம்யூனிஸ்ட். அந்த காலத்திலேயே அவங்க வீட்டுகாரர ‘காம்ரேட்’ன்னு தான் கூப்பிடுவாங்க. அவங்க, நூலகத்திலிருந்து நிறைய புஸ்தகங்கள வாங்கிட்டு வந்து படிக்கிறத நான் பார்ப்பேன். எனக்கு ஆச்சரியமா இருக்கும். ‘பள்ளிக்கு வெளியே இப்படி நூலகம்னு ஒன்னு இருக்கா? அங்க போய் யார் வேண்டுமானாலும் புஸ்தகம் எடுத்து வந்து வீட்ல வச்சு படிக்கலாமா..’னு ஆச்சரியமா பார்ப்பேன். அவங்க படிச்சிட்டு மேசை மீது வைத்த புத்தகங்கள நான் கேட்டு வாசிப்பேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து, அவங்களே என்னை லைப்ரரிக்கு கூட்டிட்டு போய், அவங்களே பணம் கட்டி சேர்த்து விட்டாங்க.

அவங்க என்னமோ சேர்த்து விட்டுட்டாங்க… ஆனா, நான் அங்க ஒவ்வொரு முறையும் பதுங்கி பதுங்கி தான் போகனும். தெருவுல ஆள் நடமாட்டம் இல்லாத சமயமே பார்த்து, நூலகத்துக்குள்ள ஓடிபோய், அவர் எடுத்து வைத்திருந்த புஸ்தகங்கள வாகிட்டு ஓடி வந்துடுவேன். காரணம், பெண்பிள்ளைகள் இது போன்ற இடங்களுக்கு செல்வதை கூட கிண்டலாக பேசிய காலம் அது. இது ஒரு பக்கம் இருக்க, வீட்டிலும் என் நிலைமை வேறு. அப்பாவுக்கு, பாடப் புத்தகங்களை தவிர, வேறு எந்த புஸ்தகமும் படிக்ககூடாது. இதையெல்லாம் படிச்சா பொண்ணு கெட்டுபோய்டுவா என்பது தான் அவருடைய காரணம்.

ஒன்பது மணிக்கெல்லாம் அப்பா லைட்ட அணைச்சுடுவார். பரிட்சைக்கு படிக்கனும்னு  சொன்னா கூட, ‘இத்தனை நாள் படிக்காததை இந்த ராத்திரியில உட்கார்ந்து படிக்கப் போறியா’னு கேட்பார். இவர் இப்படி செய்வார்னு தெரிஞ்சு, முன்கூட்டியே தலையனைக்கு கீழ டார்ச் லைட் ஒளிச்சு வெச்சுடுவேன். அதை கொண்டு, புத்தகம் படிப்பேன். இப்படியாக எல்லா ரஷ்ஷிய இலக்கியங்கள வாசிச்சேன். டால்ஸ்டாய், செக்காவ், மைக்கல் ஷொடொகொ, இப்படி பல எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

அம்மா பாரதியார் பாடல்கள் புத்தகத்த வீட்ல வச்சு இருந்தாங்க. அதை நான் முழுசா மனப்பாடம் பண்ணேன். ‘கண்ணீர் விட்டு வளர்த்தேன் சர்வேசா..’ என்ற பாடலை நான் எப்போ கேட்டாலும், வாசிச்சாலும், கண் கலங்கும். அதே போல, வா.வூ.சீ. பற்றிய அவர் பாடல். வா.வு.சீ மேல எனக்கு அதீத பற்று உண்டு. எல்லாரும் தான் சுதந்திரத்திற்கு போரடினாங்க. ஆனா, அந்த சுதந்திர போராட்ட தீயில், தன் குடும்பத்தையே ஆகுதியாக கொடுத்தவர் வா.வு.சீ. தியாகத்தை உணராத நாடா இருக்கே, தியாகத்தை உணராத மக்களா இருக்காங்களேனு நினைக்கும் போது மனசு வலிக்கும்.

இப்படி பட்ட மக்கள் போடும் ஓட்டில் தான் அரசியல் தலைவர்கள் வர்றாங்க. இது ஒரு நச்சு ஓட்டமா மாறி போச்சுன்னு தோணும். இதற்காக போடப்பட்ட விதை தான் என் அம்ருதா பிரசுரம்.

கே. அதிகாரத்தின் உயர் பதியில் இருந்த தங்களுக்கு, மிக மென்மையான மனித உணர்வுகளை பதிவு செய்யும் எழுத்துத் துறை, எப்படி சாத்தியமானது

ப. எனக்கு தெரிஞ்சது இலக்கியம் மட்டும் தான். காவல்துறை பணி ஒரு கட்டத்தோட நிறைவு பெற்றது. இப்போ நான் போய் கேஸ் கண்டுபிடிக்க முடியாது. ஆனா இலக்கியம் அப்படி இல்ல. நான் நிறைய படிச்சிருக்கேன், நிறைய எழுதுவேன். சிவகாமியின் சபதம் படிக்கும் போதெல்லாம், என் மனசை ரொம்ப பாதிக்கும். அகிலனுடைய வேங்கை மைந்தன், பாவை விளக்கு எல்லாம் அழுதுட்டே வாசிப்பேன். பின் யோசிக்க ஆரம்பிச்சேன். ஒரு எழுத்துக்கு இவ்வளவு வலிமையா? அழவைக்கிறாங்க, சிரிக்க வைக்கிறாங்க, இது எப்படி சாத்தியம்னு யோசிச்சுப் பார்ப்பேன்.

இப்போ எல்லோரும் சொல்லும் வார்த்தை, decoding, கட்டுடைத்தல். இந்த வார்த்தை எனக்கு அப்போ தெரியல. ஆனா, பள்ளி பருவத்திலேயே நான் அதை செய்திருக்கேன்.  அதன் பின் எதை வைத்து, கதாபாத்திரங்களை  உருவாக்கி, நம்ம மனச பாதிக்கச் செய்றாங்கனு யோசிச்சு, மறுபடியும் இந்த

கோணத்தில் முழு புத்தகமும் படிப்பேன். இப்படியாக எழுத்தின் மீது ஆர்வம் அதிகமாச்சு.

அடுத்து, நிறைய புது எழுத்தாளர்கள், வெளிச்சம் படாத எழுத்தாளர்கள், சிறு கிராமங்களில் இருக்கக் கூடியவர்கள், இவங்களுடைய பல படைப்புகள் வெளிவராமலேயே இருக்கு. இன்னோரு பக்கம், மூத்த எழுத்தாளர்கள் பலரை நாம் மறந்துட்டோம். திரும்பத் திரும்ப நாம சொல்ற பெயர்கள் புதுமை பித்தனும், ஜெயகாந்தனும், ஜானகிராமனும் தான். ஆனா, அழகிரிசாமி பத்தி நிறைய பேசுறதில்ல. இது போன்ற மூத்த எழுத்தாளர்களுடைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரணும்.

இலங்கையில் ஒரு பெண்மணி. இலங்கையில், முதல் தமிழ் நாவலை எழுதியவர். அவரை யாருக்கும் தெரியாது. கோதை நாயகியை பற்றி யாரும் பேசுவதில்லை. பாரதிக்கு இணையாக, பல நெருக்கடிகளுக்கு இடையே எழுதியவர். இத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. அவர் செல்லச் சொல்ல, அவருடைய உறவுக்காரப் பெண் அதை எழுதுவார்.

ஒரு முறை நான் கோபிச் சட்டிபாளையம் சென்ற போது, அங்கே ஒரு பேராசிரியர், 18ம் நூற்றூண்டின் முடிவில் அப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய பெண்கள் சிலர், தாலாட்டு பாடல்களையும், ஒப்பாரிப் பாடல்களையும் எழுத்து வடிவில் சேகரிச்சிருந்தாங்க. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் ஒன்று இரண்டு பதிவுகளே கிடைத்தன.

படிப்பு இருக்கோ இல்லையோ, இலக்கியம் சார்ந்த படைப்பாளிகள் பலர் இருந்திருக்காங்க. இந்த பதிப்பகத்தின் வாயிலாக, இப்படியானவர்களுடைய படைப்புகளை வெளிக் கொண்டு வரணும் என்பது தான் என் நோக்கம்.

கே.  பதிப்பகம் ஆரம்பித்த பின்,  ‘இதுல மட்டும் உறுதியா இருக்கனும்என்று இன்று வரை தாங்கள் கடை பிடிப்பது

ப. நானே ஒரு பதிப்பகம் நடத்தறேன். நானே ஒரு வார பத்திரிக்கையும் நடத்தறேன். ஆனால், ‘என்னை முன்னிலைப் படுத்தும் விதமா, ஒரு நாளும் இருக்க கூடாது’ என்பதில் உறுதியா இருப்பேன். ‘அமிர்தா’ என்ற மாத பத்திரிக்கை தொடங்கி, 18 வருஷமாச்சு. இதுவரை என்னுடைய ஒரு கட்டுரை கூட அதில் வெளிவந்ததில்லை. என்னை முன்னிலைப் படுத்த ஒரு நாளும் அதை பயன்படுத்த மாட்டேன். இலக்கியத்தை பரப்பி, வளர்ப்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும்.

கே.  காவல் துறையை விட்டு , வேரொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ.. என்று எப்போதாவது எண்ணியதுண்டா?

ப. இல்லை. உறுதியாகக் கிடையாது. காவல் துறை பணி எனக்கு மகிழ்ச்சியும் மன நிறைவையும் தரக்கூடியதாக தான் இருந்தது. நான் செய்ய நினைத்ததை பல விஷயங்கள், சுருக்கமா சொல்லப் போனால், ஒருவருடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும், அவருடைய மனசுல நம்பிக்கை ஒளியை ஏற்ற வேண்டும் என்பதெல்லாம் நான் செய்ய விரும்பிய விஷயங்கள். இதையெல்லாம் நான் செய்வதற்கு, எனக்கு ஒரு அதிகாரத்தையும் காவல் துறை கொடுத்தது. என்னுடைய கை வெறும் கையாக நீளாமல், அதற்குப் பின்னால் இன்னும் ஒரு லட்சம் காவல் வீரர்கள் சேர்ந்து அந்த பணியில் ஈடுபட்டு செய்ய கூடிய துறை அது.

இது போக, பலவிதமான மனிதர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காவல் துறையில் பணியாற்றிய போது, சிரமத்தோடு என்னை வந்து சந்தித்த பெண்கள், அவங்க தாயார் இடம் கூட, சில விஷயங்கள பகிர்ந்திருக்க மாட்டாங்க. ஆனா’ என்கிட்ட பகிர்ந்துக்குவாங்க. அதற்கு காரணம், நான் அதிகாரத்துடன் இருக்கேன் என்பது தான். இப்படியாக பல மனிதர்கள், சிந்தனைகள், சூழல்கள், சூழல் மாற்றங்கள் என பலவற்றை கற்பித்தது காவல் துறை தான். இது எல்லாமே என் எழுத்துக்கு உரம் சேர்த்தது, மறுபக்கம், என் இலக்கிய வாசிப்பு, மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள உதவியது. ஒன்றுக்கு ஒன்றாக, இரு பணிகளுமே உதவியாக அமைந்தது.

கே. பெண்கள் அரசு அதிகார பீடத்திற்கு செல்வதற்கு தடையாக இருப்பதும் எது

ப.  பெரியார் சொன்னது போல, இது 500 ஆண்டு கால இருட்டு. பெண் அடங்கி நடக்கணும், ஆண் என்பவன் ஆளப்பிறந்தவன், வீரன், பெண் என்றால் அன்பு, பெண் என்றால் கற்பு… இப்படியாக சில குணங்களை விதிச்சு வச்சுட்டாங்க. இந்த சிந்தனை ஓட்டத்திற்கு பெண்கள் பலியானாங்க. காலம் காலமாக தொடர்ந்து வந்த இந்த மரபு தான் தடை. அதை உடைத்து ஒரு பெண் செயல்பட்டால், ‘என்ன அடங்காப்பிடாரியா இருக்காளே… தான்தோன்றியா இருக்காளே..’னு பேச ஆரம்பிப்பாங்க. பல வீட்டில் பெண்களே இப்படி பேசறாங்க. இப்படி பட்ட சிந்தனை தான், நம் பெண்கள் முன்னேற தடையா இருக்கு.

கே. அதை எப்படி சமாளித்து எதிர்கொள்வது?

ப. இன்று பெண்கள் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். வேலைக்குச் செல்லவோ, சுய தொழில் செய்யவோ, கற்றுக் கொண்டார்கள். பெண்கள், தான் பெற்ற கல்வியின் பயனை முழுமையா பெறனும். ஒரு தோடு போலவோ, செயின் போலவோ மாட்டிக் கொள்வதற்கல்ல கல்வி. ‘கற்ற பின் நிற்க அதற்குத் தக”. அதுபோல, இவர்கள் படிப்பின் மூலமாக யாரைத் தெரிந்து கொண்டார்கள்? இந்திராகாந்தி அம்மையாரைப் பற்றி தெரிந்து கொண்டார்களா? பண்டார நாயிகே பற்றி வாசித்தார்களா? இவர்களின் மூலமாக, நல்லதைச் செய்தவர்கள், எப்படி முன்னேறி, தன்னை சுற்றி உள்ளவர்களையும் முன்னேற்றி, நாட்டுக்கு சேவை செய்தார்கள் எனப்தை  தெரிந்துகொள்ளலாம.

கல்வியை தவறாக பயண்படுத்தினால், அவப்பெயர் அடைவார்கள் என்பதற்கும் உதாரணங்கள் உண்டு. பொது வாழ்வில் எப்படி நடந்துக்க கூடாது என்பற்கான உதாரணங்களும் உண்டு. இந்த இரண்டையும் படித்து, உங்கள் மனதில் தோன்றும் ஒரு மாடலை (model) கொண்டு பணி செய்யுங்கள்.

 குறிப்பாக, அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது, அரசாங்க பணியில், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடனே இருக்க வேண்டும். நம் constitution (அரசியலமைப்பு) ஒரு மிகப் பிரமாதமான constitution. அதில் சொல்லப்பட்ட விஷயங்களை செயல்படுத்துவது மட்டுமே ஒரு அரசாங்க பணியாளரின் நோக்கமாக இருக்க வேண்டும். நம் மக்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்.

பெண்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள இன்று நிறைய வழிகள் இருக்கு. அன்றைய வீர நங்கைகள், வேலு நாச்சியார், கிட்டூர் ராணி போன்றவர்களைப் பாருங்கள்…. வேலு நாச்சியார் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பல மோழிகளில் பாண்டித்யம் பெற்றவர். இது போல நாமும் ஆகலாமே! ஆனால், இன்றைய பெண்களின் எண்ணம், எப்படி இடையை குறைப்பது? எப்படி அந்த நடிகையை போல் ஆவது? அது என்ன… ஜீரோ வா?

Size zero அம்மா.

ஆ.. இது போன்ற சிந்தனைகளில் தான் இருக்காங்க. இன்று அதிகாரத்தில் நிறைய பெண்கள் இருக்காங்க, ஆனால் இவர்களில் பலர், குஷ்வந்த சிங், ஒரு பெண்கள் மாநாட்டில் சென்னது போல, “அதிகாரத்தில் உள்ள பெண்கள் பலர் வந்திருந்தனர். ஆனால், இவர்களில் பலர், பிரபலமான ஆண்களின் படுக்கை வழியாகவே வந்தவர்கள்” என்றார். அதாவது, பிரபலமானவரின் மகளாகவோ, அல்லது காதலியாகவோ இருந்து ஆட்சியை கைபற்றியவர்கள் என்று குறிப்பிட்டார். இதுபோல இல்லாமல், இன்னும் நிறையபெண்கள் சுயம்புவாக இயங்கி, களத்தில் இறங்கி, மக்களை சந்தித்து, நம்பிக்கை பெற்று ஆட்சிக்கு வரும்படியாக இருந்தால், அது மிகவும் நல்ல முன்னேற்றமாக இருக்கும்.

இன்றைய நாளிலிருந்து, பல பெண்கள் இப்படியாக முன்னேற, நடைபோட ஆரம்பிக்கலாம்.

கே. தாங்கள் பெருமிதம் அடைந்த தருணம்? கடந்து வந்த மைல் கற்கள்?

ப.  ஒருமுறை ஆண்டி மடத்திற்கு, ஒரு திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தேன். சிமென்ட் கெஸ்ட் அவுஸில் தங்கியிருந்தேன். அங்கிருந்து 20, 25 கி.மீ பயணித்து, திருமணத்திற்கு போக வேண்டும். ஒரு கூட் ரோட்டில் போலீஸ்வண்டி போய்கொண்டருந்த போது, ஒரு பெண்மணி, நடு ரோட்டில் கைகளை அசைத்து, ஜாடை காட்டிகொண்டிருந்தார். ஏதோ லிப்ட் கேட்டு நிக்கிறாங்க போலனு நெனச்சு, டிரைவர் வண்டிய நிருத்தாம போய்ட்டார். திருமண வீட்டில் ஒரு பெண் என் பக்கத்துல உட்கார்ந்தாங்க. “அம்மா என்னை நினைவிருக்கா”னு கேட்டாங்க. எனக்கு உண்மையிலேயே ஞாபகம் இல்ல.

“யாருமா? நாம இதுக்கு முன்னால சந்திச்சிருக்கோமா?”

“என்ன மா, நான் தான் சரோஜா. இங்க தான் நர்ஸ் வேலை பார்க்குறேன். இன்னைக்கி பேப்பர்ல நீங்க இங்க வரப் போறதா படிச்சேன். அதனால தான் வழியிலேயே காத்திருந்து, உங்க வண்டியை கை காட்டி நிறுத்தப் பார்தேன். இப்ப தான் தெரியுது, நீங்க என்ன சுத்தமா மறந்துட்டுங்கனு” என்றார்.

அப்பெண்மணியை நான் சந்திக்கும் போது, அவருக்கு 16, 17 வயசிருக்கும். இப்போ திருமணம் ஆக, குழந்தைகள் பெற்று, ஆளே அடையாளம் நெரியவில்லை. நான் அவருக்கு செய்த உதவிகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டின் சிறந்த நர்ஸுக்கான விருதை பெற்றுள்ளார். கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அந்த பெண்ணைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். என்னை சந்திக்கும் போது, மிக மோசமான நிலையில் இருந்தார். என்னை பார்க்காமல் இருந்தால் போயே இருப்பாள். என்னால் முடிந்த வகையில் பலருக்கு உதவி செய்தேன். என்னை தேடி வந்து நன்றி சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். மாதம் தோறும், எனக்கு வரும் சம்பளத்திலிருந்து, வீட்டு பட்ஜெட் போக, தனியே ஒரு வங்கி கணக்கு தொடங்கி, அதில் ஒரு தொகையை போட்டுக் கொண்டே வருவேன். இப்படி தேவை படும் பெண்களுக்கு பயன்படும் என்பதால்.

பேப்பரில் படித்து, ரோட்டில் காத்திருந்து, என்னை அந்த பெண் சந்திக்க வந்தது, மறக்கமுடியாத நிகழ்வு.

கே.  இன்னும் கடந்து போக வேண்டிய தூரம்? அடுத்த இலக்கு?

ப. நிறைய கணவுகள் இருக்கு. ஆனால், இதற்குமேல் என் காலம் எவ்வளவுனு எனக்கு தெரியல. அத்துடன், மேலும் பணி செய்ய,  உடல் பலமும், பொருளாதார பலமும் இல்லை.

இன்றைய தேதியில், முதியோர் படும் துன்பம், மன வேதனையை கொடுக்குது. மதுரவாயில் (சென்னை) பகுதியில், ஒரு முதிய தம்பதி, ரோட்டில், தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி, பற்றவைத்து கொண்டனர். விசாரித்ததில், அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். நல்லா படிக்க வெச்சுருக்காங்க. இருவரும் வெளிநாட்ல இருக்காங்க. இவங்கள கவனிக்க

யாரும் இல்லை.

எப்போதாவது சமயம் கிடைக்கும் போது முதியோர் இல்லம் போய், அவர்களுடன் பேசுவேன். அவர்கள் கதையை கேட்டால் கண்ணில் ரத்தம் வரும். சில பெற்றோர்கள் இறந்து போன செய்தியை தெரிவித்தாலும், ‘பணம் அனுப்பறேன், இறுதி சடங்க நீங்களே செஞ்சு முடிச்சிடுங்க’ என்று சொல்லும் பிள்ளைகள் உண்டு. கொஞ்சம் பாசம் உள்ள பிள்ளைகள், அதை ஃபோட்டோபிடித்து அனுப்புங்க என்பார்கள். 

என் ஆசை என்னனா, நட்சத்திர அந்தஸ்துடன், நிறைய அறைகள் கொண்ட பெரிய கட்டிடத்தை உருவாக்கனும். தேவைப்படும் முதியவர்கள், நேரே உள்ளே வந்து தங்கி கொள்ளலாம். அவர்களுக்கான ஒரு ஆதரவு கிடைக்கும் வரை தங்கலாம். அதேபோல, கணவனால் பாதிக்கப்பட்ட பெண், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும். வந்து தங்கலாம். தனக்கொரு வழி பிறக்கும் வரை, இங்கே இருக்கலாம். நல்லா சாப்பிடலாம், ஆடலாம், பாடலாம், சந்தோஷமா இருந்துட்டு போகலாம்.

அடுத்த ஆசை, கோச்சிங் சென்டர். இன்று ஐ.ஏ.எஸ் பயிற்சி ஒரு பெரிய வியாபாரமாகவே மாறிப்போச்சு. அரசாங்கத்தில் பயிற்சி கூடங்கள் இருக்கு. ஆனா, அதில் சேரவே, தேர்வு எழுத வேண்டும். என் ஆசை என்னனா, ஒரு பயிற்சி கூடம் அமைத்து, படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளாக, வருமானம் குறைவான குடும்பத்திலிருந்து வந்த பிள்ளைகளாக, ஆர்வம் உள்ள பிள்ளைகளாக பார்த்து இவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இது எதுவும் நிறைவேறவில்லை.

கே. உங்கள் பயணத்தையும், தனிப்பட்ட குடும்ப வாழ்கையையும் எப்படி சம நிலைப் படுத்திக் கொண்டுபோணிங்க?  Work life balance.

ப. நேர மேலான்மை தான் எல்லாமே. கட்டாயமாக ஒருசில உதவிகளை உள்கள் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர்களை உடன் வைத்திருப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பிள்ளைகளிடம் பேச வேண்டும். அவர்களுடைய நிலையில், நம் வேலையை புரிய வைக்க வேண்டும்.

நான் என் பிள்ளையை அமரவைத்து, ‘உன் அம்மா மற்ற அம்மாக்கள் போல இல்லை. கொஞ்சம் ஸ்பெஷல் தான். இன்றைக்கு, பாராளுமன்றத்திலேயே குறைந்த அளவில் தான் பெண்கள் இருக்காங்க. எல்லா இடத்திலேயும் அப்படி தான். அப்படி இருக்கும்போது, அம்மா ஒரு பெருமையான இடத்தில இருக்கேன். இதுல சந்தோஷமா, பெருமையா’ என்று கேட்டால், அவன் நிச்சயம் பெருமை தான் என்பான். “அப்படியானால் நீ அம்மாவுக்கு சில உதவிகள் செய்ய வேண்டும்..” என்று, மகனை ஒரு பெரியவர் போல பாவித்து பேசுவேன். நான் டீச்சர் மீட்டிங் வருவதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும்போது உன் ஆசிரியர்களை போய் பார்பேன் என்று அவனுக்கு புரிய வைப்பேன்.

குழந்தைகள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். இப்படியாக ஒரு புரிதலுடன் செயல்படுங்கள்.

கே. காவல் துறை பணியை மேற்கொள்ள நினைக்கும் மற்றவர்களுக்கு, நீங்கள் அளிக்கும் ஆலோசனை (டிப்ஸ்)

ப.  இன்றைக்கு, காவல்துறையின் அனைத்து மட்டத்திற்கும் பரிட்சை உண்டு. சில வருடங்கள் முன், உடல் ஆரோகியத்தை தான் பார்ப்பார்கள். இப்போ, பரிட்சையில், பொது அறிவு ரொம்ப முக்கியம். சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சமீபத்திய செய்திள், இதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவரா என்று பார்பார்கள். இதைத் தவிர, உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஓடுவது, கயிறு ஏறுவது, போன்றவை.

கே. தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்கள்?

ப.  அது ஒரு பெரிய பட்டியலே இருக்கு. (சிரித்தார்)

கே. சில புத்தகங்கள் அல்லது எழுத்தாளர்களை சொல்லுங்களேன்?

ப.  இந்தியாவை பொருத்தவரை, ரபீந்திரநாத் தாகூர், பிரேம் சந்த்

நம் ஊரில், பாரதியார்.

வெளிநாடுகளில், டால்ஸ்டாய், செக்காவ், இப்படி பலர்.

கே. தங்களுடைய பொழுதுபோக்கு அம்சங்கள்?

ப. பாட்டு கேட்க பிடிக்கும். சினிமா பார்ப்பேன். உலகளவில், பிரபல இயக்குனர்களின் படங்களை பார்ப்பேன். இன்றைய நவீன உலகில் பல வசதிகள் உண்டு. நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றில் நிறைய நல்ல படங்கள் இருக்கு

கே.  டாக்குமென்டரீஸ் பார்பீர்களா?

ப. பார்ப்பேன். National geographic documentaries நிறைய பார்ப்பேன்.

கே.  இறுதியாக, புழுதிபெண்ணதிகாரம்வாயிலாக, தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்கள்?

ப.  பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆணுக்கு உள்ள அத்தனை திறமைகளும் பெண்ணுக்கும் உண்டு. என்ன, ஆண் 50கி அரிசி மூட்டையை தூக்க முடிந்தால், பெண் 25கிலோவாக, இரண்டு பைகளை தூக்கி வரலாம். அவ்வளவுதான். இருக்கும் வேலைகளை பெண்கள் செய்து பழக வேண்டும். லைட் மாற்றுவதாக இருக்கட்டும், வங்கி வேலையாக இருக்கட்டும், ஷேர் மார்கெட் என்றால் என்ன, பண மேலான்மை என்றால் என்ன, இது எல்லாமே தெரிந்து கொள்ளவேண்டும்.

மொபிலிட்டி ரொம்ப முக்கியம். கார் ஓட்டத் தெரிந்தால் போதாது. டையர் பஞ்சர் ஆனால், ஜாக்கி மாற்ற தெரிய வேண்டும். கரண்ட ஃபியூஸ் போனால், ஒரு ஆண் வந்து மாற்றும் வரை காத்திருக்க கூடாது. அது ஆணின் வேலை என்றால், பின் எங்கிருந்து வரும் சமத்துவம்? நீங்கள் எதிலெல்லாம் புழங்குறீங்களோ, அவற்றையெல்லாம் கையாளத் தெரிய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆணுக்கு பெண் சமம் தான், ஆனால் ஆண் குடித்தால், நானும் குடிப்பேன். ஆண் சகரெட் பிடித்தால் நானும் பிடிப்பேன் என்பது சமத்துவமோ, விடுதலையோ அல்ல.

மனித நாகரீகம் கண்டுபிடித்த அற்புதமான ஏற்பாடு தான் திருமணம். பெண்ணுக்கு ஆணின் தேவை இருக்கு, ஆணுக்கு பெண்ணின் தேவை இருக்கு. ஆக முறைப் படுத்தி நடந்து செல்ல வேண்டும்.

முக்கியமாக, நம் குழந்தைகளை நல்வழி படுத்தி வளர்தெடுக்கும் கடமை நமக்கு இருக்கு. ஆண் பெண் இருவருமாக சேர்ந்து, குழந்தை வளர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுங்கள். இன்று திருமண உறவை விட்டு வெளியேரும் தம்பதிகள், குழந்தைகளை நிராகரிக்கும் கொடுமை நடந்து கொண்டிருக்கு. எவ்வளவு பெரிய கொடுமை இது? இப்படி கவனம் செலுத்தப்படாத குழந்தைகள் தான் நாளைய குற்றவாளிகளாகும் சூழல் உருவாகுது.

ஆக, விடுதலை உணர்வுடன், குடும்பத்தைக் கட்டிக் காத்து, இருவரும் அனுசரித்து, வாழ்க்கையை சிறப்பாக நடத்திச் செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளையும் அதே மனநிலையுடன் வளர்த்தெடுங்கள்.

வாழ்த்து, நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *