‘அம்மா நிச்சயம் வர்ரேன்னு சொன்னாங்க.. அவங்க அறையில வெயிட் பண்ணுங்க’ என்று பணியாளர் கதவைத் திறந்து, இரண்டு மூன்று நார்காலிகளை எடுத்துப் போட்டார். சில விநாடிகளில், ஒரு நடுத்தர வயது பெண்மணி, அவர் தாயாருடன் அங்கே, அந்த அறையில் நுழைந்தார்.
நல்ல நிறம், நல்ல உயரம். சுடிதார் அணிந்த நாகரீகப் பெண்ணாக காட்சியளித்தார். அமர்ந்த பின்தான், அவர் முகத்தைச் சரியாகப் பார்க்க முடிந்தது… பார்த்து அதிர்ந்தேன். முகத்தில் ரத்தம் கட்டியது போன்ற தழும்புகள். முகக்கவசம் பாதி அணிந்து, அதை மேலும் கீழுமாக சரிசெய்து கொண்டிருந்தார்.
மகளிர் ஆணையம் அளிக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வந்தேன். ஆனால், சலுகைகளைத் தேடி மட்டும் பெண்கள் இங்கே வரவில்லை. இன்றைக்கும், கண்ணியமான, வன்முறையற்ற, தனக்கான அடிப்படை உரிமைகளை தேடிப் பெண்கள் வருகிறார்கள் என்பதை எண்ணி, மனம் கனத்தது. எத்தனைப் புரட்சிகள் வந்தாலும், எத்தனை பெரியார் வந்தாலும் பெண் விடுதலை மட்டும், இன்றளவும், கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
சற்று நேரத்தில், புயல் வேகத்துடன் தன் உதவியாளரிடம் பணிகளை ஆணையிட்டபடியே, ஆணையத் தலைவர், திருமகு ஏ.எஸ் குமரி அவர்கள் உள்ளே நுழைந்தார். தாமதிக்காமல், காத்திருந்தவர்களை உள்ளே அழைத்தார். அப் பெண்மணியை முதலில் செல்லும் படி, அவர்களைப் பார்த்தேன். நாங்கள் காத்திருக்கிறோம், நீங்கள் செல்லுங்கள் என்றார். ஆம்.. அதுவும் சரிதான் என்று உள்ளே நுழைந்தேன்.
தன் உதவியாளரிடம் “அடுத்து, இந்த எண்ணிற்கு அழைத்து அவர்களிடம் பேச வேண்டும். நான்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட விவரமாதலால், மறக்காமல் குறித்து வைத்து நினைவுப் படுத்து” என்று சொல்லியபடியே, என் அறிமுகத்தையும், வந்த நோக்கத்தையும் தெரிந்து கொண்டார்.
பின், தன் உதவியாளரிடம் சில பணிகளை ஒப்படைத்துவிட்டு, நேர்காணலைத் தொடங்கினார்.
கே. வணக்கம் அம்மா. உங்களை பற்றிய அறிமுகம்?
ப. வணக்கம். நான் பிப்ரவரி 15, 2022 அன்று மாண்புமிகு முதல் அமைச்சரால், மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டேன். என்னுடன் ஏழு உறுப்பினர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
கே. இதற்கு முன் எந்த துறையில் பணியாற்றி வந்தீர்கள?
ப. இதற்குமுன், அப்பல்லோ மருத்துவமனையில் அறிவியல் ஆராய்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வந்தேன். அதுமட்டுமல்ல, கடந்த முப்பது ஆண்டுகாலமாக தொழில் சங்கத்தில் பொதுச் செயலராக (General Secretary) இருத்து வருகிறேன். கல்லூரி நாட்களிலிருந்தே, என்னைச் சுற்றி உள்ள பெண்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறேன்.
கே. உங்கள் பயணத்தில் எங்கேனும் தேக்க நிலையை / தடைகளை உணர்ந்தீர்களா?
ப. வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது தான். பெண்கள் என்றாலே போராட்டம் தானே. படிக்கும் போது, கார்டியாலஜிஸ்ட் ஆக வேண்டும் என்று விரும்பினேன், அப்பா தவறிவிட்டார். அதன் காரணமாக, என் ஆசை நிறைவேற வில்லை. என்.சி.சியில் சேர்ந்தேன்.ஏரோ விங் (aero wing) பிரிவில் விமான ஓட்டுனராக எண்ணினேன். ஆனால் அதற்கான உயரம் என்னிடம் இல்லை என்பதால் அதுவும் நிறைவேறவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் தடையும் தடங்கலுமாகத் தான் கடந்து வந்துள்ளேன்.
கே. உங்கள் பயணத்தில், நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்த ஒரு விஷயம் எது. இதை மட்டும் நான் தவறவிட கூடாது என்று எண்ணியது எது?
ப. மகளிர் ஆணையத்திற்கு வந்த பின், இரண்டு விஷயங்களை கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டேன். முன்னெல்லாம், நான் நிறைய பேசுவேன். இப்போ பேசுவதில்லை. காரணம், இங்கே வரும் பெண்களிடம் நான் காதுகொடுத்து கேட்க வேண்டியது, நிறைய இருக்கு. I have to be a very good listener. வெறுமனே புகார்களை வாங்கி வைத்துக்கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் பிரச்சனைகளை கேட்டு உள்வாங்கிகொண்டு, செயல்படுவேன்.
அடுத்து, இங்கே வந்து அமர்ந்த பின்னர், என் வாழ்க்கை முறையே மாறிப் போச்சு. அப்பல்லோ வில் பணியாற்றும்போது இருந்த வசதியான வாழ்க்கை முறை வேறு. இங்கே வரும் பெண்கள், துன்புறுத்தப்பட்டு, ‘அம்மா எனக்கு ஒரு ஏழாயிரம் மாதச் செலவுக்குக் கொடுக்கச் சொல்லுங்க… சாப்பாட்டுக்கு மட்டுமாவது கொடுக்கச் சொல்லுங்க’ என்று இரண்டு மூன்று குழந்தைகளுடன் பெண்கள் இங்கே வந்து முறையிடும்போது, வாழ்க்கையில், பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன். அவர்களில் ஒருவராக மாறி, பணியாற்றத் தொடங்கி விட்டேன்.
கே. மத்திய மாநில அரசின் தரப்பிலிருந்து தரப்படும் சலுகைகளைப் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் இருக்கா?
ப. 2021ல் நான் இந்த அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்தே, தாரக மந்திரம் போல, செல்லும் இடங்களிலெல்லாம், பெண் உரிமை, பெண்களுக்கான சட்டம், பெண் பாதுகாப்பு எண் 181, முதியோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு எண் 14567 பற்றி, தொடர்ந்து பேசி வருகிறேன். அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், ஒருங்கிணைந்த மையங்கள் (One stop centre) இயங்கிக் கொண்டிருக்கு.
எங்கோ ஒரு மாவட்டத்தில் இரவு நேரத்தில், பெண் துன்புறுத்தப்பட்டால், உடனே 181 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். உடனே சென்னை கால் சென்டருக்குத் தகவல் வந்து சேரும்.
கால் சென்டரிலிருந்து, அடுத்த நொடி, அந்த மாவட்ட சமூக நல அலுவலருக்கும், ஒருங்கிணைந்த மையத்திற்கும் தகவல் போகும். அங்குள்ள காவல் நிலையத்தின் உதவியுடன், அப்பெண், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். அடுத்த 5 நாட்களுக்கு, அப்பெண் அங்கே தங்கிக் கொள்ளலாம். தேவைப்படும் மருத்துவம், உணவு, சட்ட ஆலோசனை, கவுன்சிலிங், அனைத்தும் அப்பெண்ணிற்கு வழங்கப்படும்.
மறுபடியும் வீட்டிற்குச் செல்ல விருப்பம் இல்லை என்கின்ற பட்சத்தில், அப்பெண்ணை (குழந்தைகள் இருந்தால், அவர்களுடன்) அரசாங்க விடுதியில் / இல்லங்களில் தங்க அனுமதிக்கப்படுவார். அங்கேயே வாழ்வாதாரத்திற்காக, சிறு தொழிலும் கற்றுத் தரப்படும்.
பல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கு. வெளியே எதுவும் தெரிவதில்லை. ஆன்லைன் வசதிகளும் தயாராகிக் கொண்டிருக்கு. விரைவில் செயல்படத்துவங்கும்.
கே. பெண்களுக்கு தனி மனித சுதந்திரம் வீட்டிலும், சமூகத்திலும் எந்த அளவுக்கு இருக்கு?
ப. ஒவ்வொரு பெண்ணும் திறமைசாலி தான். பெண் ஒருத்தி, குடும்பத்திற்காக மின் கட்டணம் கட்டி, மளிகைப் பொருள் வாங்கி வைத்து, வீட்டை நிர்வகித்தாலே she becomes a good administrator. ஒரு பெண்ணை நீங்கள் எங்கே கொண்டு வைத்தாலும், இதை திறம்படச் செய்வாள்.
இன்றைய பெண்கள் தைரியசாலிகள். கிராமபுறங்களிலிருந்து நிறைய பெட்டிஷன் வருது. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் உங்களால் இங்கே நுழைய முடியாத அளவிற்கு கூட்டம் நிறைந்திருக்கும். மனு கொடுக்க பலர் திரளுவார்கள். நம்மை வலுப்படுத்திக்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டாலே, நம் சுதந்திரம் நம் கையில்.
கே. பழமைவாத தன்மையில் சிக்கிக் கொண்டுள்ள பெண்களுக்கு உங்கள் அறிவுரை?
ப. இன்றைக்கு அப்படியெல்லாம் இருக்காங்களா என்ன? I don’t think so. நான் கடவுள் நமபிக்கை கொண்டவள் தான். ஆனால் பழமைவாதி அல்ல. என் கருத்துக்கள் பெரியாருடையது.
அவ்வளவு ஏன்? “என் மகன் சரியில்ல மா… அவளை விடுவித்து, வேறு திருமணம் செஞ்சு வைங்க..” என்று இங்கே கேட்டு வரும் மாமியார்களும் உண்டு. இன்னைக்கு 70, 75 வயதிற்கு மேலானவர்கள் கூட ஆன்ட்ரோய்ட்ல தான் இருக்காங்க. பழமைவாதம் இல்லைனு தான் தோணுது.
கே. உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?
ப. தற்சமயம், மாதம் ஒரு மாவட்டம் என்ற கணக்கின்படி, 2 அல்லது 3 நாள் சுற்றுப் பயணம் இருக்கும். அந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர், S P, NGOக்களை சந்திப்பேன். பின் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப் படும். கழிப்பறைகள், குளியலறைகள், தங்கும் வசதிகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் ஆராயப்படும்.
அதேபோல, மகளிர் சிறைகளுக்குச் செல்வேன். அங்கே அவர்கள் தங்கும் இடங்களும் பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங், மருத்துவம், சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்.
பத்துப் பெண்களுக்கு மேல் வேலை செய்யும் இடங்களில் ICC (Internal Complaint Committee) அமைக்கப்படும். வேலை இடங்களில் ஏற்படும் இன்னல்களை அங்கே பகிரலாம். இது எல்லாமே, குறிப்புகள் எடுக்கப்பட்டு, கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்.
அடுத்து, 2024ம் ஆண்டிற்கான திட்டங்கள் தயாரா இருக்கு. சுய உதவி குழுக்கள் நிறைய உதவிகள் செய்து வந்தாலும், சீக்கிரம் தொய்வு நிலையை அடையறாங்க. Experts, நிபுணர்களின் ஆலோசனையுடன், தொய்வு நிலையைச் சமாளிக்க பயிர்ச்சிகள் வழங்கப்போகிறோம். 38 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு இப் பயிற்சி அளிக்க உள்ளோம், இதில் முக்கியமாக, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பயிற்சி வழங்கப்படும்.
கே. இந்த இடத்தில் அமர்ந்ததில், எவ்வளவு பெருமிதம் அடைகிறீர்கள்?
ப. மிகவும் சந்தோஷமா உணறேன். எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும், இங்கே வந்து அமர்வேன். காரணம், என்னைத் தேடி வரும் பெண்கள் யாருமே, சந்தோஷமான மனநிலையோடு வருவதில்லை. குறை சொல்ல வரும் நேரத்தில் நான் இங்கே இல்லையென்றால், மேலும் கவலைகொள்வார்கள்.
குடித்து, பெண்ணை அடித்திருப்பான். அந்த பெண், தான் அணிந்திருந்த நைட்டியுடன், இலவச பஸ்ஸில் ஏறி, என்னைத் தேடி ஓடிவருவாள். இப்படி வரும் பெண்களுக்காக, எப்போதும் 10 புடவைகள் என் அறையில் வைத்திருப்பேன். உடன் வரும் குழந்தைகளுக்காக இனிப்பு மிட்டாய்கள் வைத்திருப்பேன். ஒவ்வொரு நொடியும், பெண்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன். நிச்சயம், என் வேலையில் அதிக சந்தோஷமும், ஈடுபாடும் எனக்கு இருக்கு.
கே. Women Empowerment பெண்ணதிகாரம் பற்றிய உங்கள் விளக்கம்?
ப. யாரும் வந்து உங்க கைல கொடுக்கப் போறது இல்ல. உங்க நிலையை பலப்படுத்திக்கோங்க. தரப்படும் உதவிகளும், திட்டங்களும் அனைவருக்கும் தெரிய வேண்டும். அவற்றை அணுகுவதற்கான அறிவையும் தெளிவையும், ஒவ்வொரு பெண்ணும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி.
தெளிந்த நீரோடை போன்ற உரையாடல் ! மிகை உணர்ச்சிகள் இன்றி உண்மைகள் பகிரப்பட்டுள்ளன. வாழ்க.