ஒரு காலை வேளை, திருமிகு சித்ரா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

“ஹலோ.. சித்ரா ஹியர்..”

“ஹலோ  மேம். பத்மா பேசுறேன்.”

“ஹாய் பத்மா… எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு.”

“ஐ ஆம் ஃபைன் மேம். ஒரு பெண் தொழில்முனைவோராக, உங்களை  ஒரு நேர்காணலுக்குகாகச் சந்திக்கணும். எப்போ வரலாம்?”

“ஓ…  எனக்கு தெரிஞ்சத சொல்றேன். ஒரு தோழியா நீங்க என்ன சந்திக்க ஷோரூம் வாங்க. காபி சாப்டிட்டேப்  பேசலாம்.”

அண்ணாநகர் மையப் பகுதியில் பிரம்மாண்டமான தனிஷ்க் ஜவுளி கடை. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட நகைகளையும், மணப்பெண் கோலத்தில் நயன்தாராவின் அழகிய புகைப் படங்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே, மூன்றாவது மாடிக்குச் சென்றேன். ஒரு பெரிய அறையில், வரிசையாக நாற்காலிகளும், சுவரில் எழுதும் பலகையும் மாட்டப்பட்டிருந்தது. நகைக் கடையில், வகுப்பறையா..? என்று சிந்தித்தபடி, இடது புறம் உள்ள திருமதி சித்ரா அவர்களின் அறைக்குள் நுழைந்தேன்.

தன் இருக்கைக்குப் பின்னால், பல விதமான ஊக்கமளிக்கும் (motivational) வாசகங்களுக்கிடையே, ஒரு சாமி படம் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை வாசித்த அதே உற்சாகத்துடன், என் நேர்காணலை ஆரம்பித்தேன்.

கே. வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகம்?

ப. “வணக்கம். நான் சித்ரா சிவகுமார். 1997முதல் டைடன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இன்று, டைடன் நிறுவனத்தின், 14 ஷோரூம்களை நடத்த வருகிறேன். டைடன் கண்ணாடி கடைகள் -3, டைடன் கைக் கடிகாரக் கடைகள் – 4, தனிஷ்க் நகைக் கடை – 2, (சென்னை மற்றும் காஞ்சிபுரம்), மியா நவ நாகரீக நகைக் கடை -1, கேரட் லேன் வைர நகைகடை -1.”

கே. உங்களுடைய ஆரம்ப நாட்கள் ?

ப. “என் தந்தை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஹரியானாவில் பணியாற்றத் தொடங்கினார்.  அங்கிருந்து பல மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல். கிட்டத்தட்ட, 13, 14 பள்ளிகளில் படித்தவள்  நான். சில பள்ளிகளில் ஆறு மாத காலம் தான் இருந்திருப்பேன். இது எனக்கொரு மிகப்பெரிய பலமாக மாறிப்போனதாக, பின் நாளில் உணர்ந்தேன். இன்று என்னை, எங்கே கொண்டு விட்டாலும், இரண்டு மணி நேரம் போதும்… அந்தச் சூழலுக்குத் தகுந்தாற் போல, நான் மாறிவிடுவேன்.  என் தந்தை வழி தாத்தா, ஒரு பேராசிரியர். மற்றும் தாய் வழி தாத்தா, வேதங்களில் பண்டிதர். ஆக, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த குடும்பம், எங்களுடையது.

 கல்லூரியில் எனக்கு விருப்பமான மரபியல் (Genetic science) தேர்வு செய்து, டில்லி பல்கலைகழகத்தின் முதன்மை மதிப்பெண் பெற்றேன். என் கனவு, தந்தை போல ஒரு அரசாங்க அதிகாரியாக வேண்டும், அல்லது, வெளிநாடு சென்று மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பது தான்.”

கே. ஒரு தொழிலதிபராகவேண்டும் என்ற உங்களுடைய கனவைப் பற்றி ?

ப. கேள்வியைக் கேட்டதும் ஒரு புன்சிரிப்பைச் சிந்தி விட்டுத் தொடர்ந்தார்..

“பள்ளி, கல்லூரி நாட்களில், பல பிரபல தொழிலதிபர்களை நான் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம், படிப்பறிவு இல்லாதவர்களும், கறுப்புப் பணத்தைக் கையாள்பவர்களும் தான் தொழில் செய்து, அதிபர்கள் எனக் காண்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணியிருந்தேன். அதனாலேயே, எக்காரணம் கொண்டும் ‘நான் தொழிலில் மட்டும் இறங்க கூடாது’  என்பதில் தீவிரமாக இருந்தேன். பின், என் கணவரை சந்தித்தப் பின், என் புரிதலில் உள்ள தவறை உணர்ந்துகொண்டேன்.

1997ல், டைடன் நிறுவத்தின் கிளைகளுக்கான அறிவிப்பு வந்தது. ‘ஒரு அரை மணி நேரம், நீ அலுவலகம் வந்து போ’ என்றார். ஆனால், இன்று வரை, ஒரு நாளும், அரை மணியுடன் என் வேலை முடிந்ததில்லை.

கே. பெண் தொழில்முனைவோர்கள், இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்னவாக இருக்கும்?

ப. வாழ்க்கையில் சவால் என்பது அனைவருக்குமானது. ஒரு பெண்ணுக்கு இது அதிகப்படியாகத் தோன்றக் காரணம், உள்ளுணர்வில், தன்னை நம்பி குடும்ப பொறுப்புகள், பிள்ளைகள், மாமனார், மாமியார், வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான். இது ஒருவகையான குற்ற உணர்வாகவே மாறிப்போகும். Hence, it becomes very challenging. இதைத் தவிர்க்க, குடும்பத்தினரையும் உங்கள் சப்போர்ட் சிஸ்டமாக (support system), துணையாகக் கொண்டு, செயல்பட்டால், எளிதில் சமாளிக்கலாம்.

மற்றபடி, தொழிலில், சவால் என்பது, அனைவருக்கும் ஒன்று தான். பொருளாதாரம், வங்கிக் கடன் பெறுவது, விநியோகம், மார்கெட்டிங் அனைவரும் இவற்றை சமாளிக்க வேண்டும்.

கே. இன்று அதிகம் உச்சரிக்கப்படும் வாசகம் – Work life balance – வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமன்படுத்துவது. இதை நீங்கள் எவ்வாறு கொண்டு செல்கிறீர்கள்?

ப. சமன்படுத்துவதென்று ஒன்று இல்லவே இல்லை. இரண்டு மணி நேரம் அலுவலகத்திலும், இரண்டு மணி நேரம் வீட்டிலும் யாரும் வேலை செய்ய முடியாது. It is a matter of priority. எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். திருமணத்திற்குப் பின் MSc படிப்பை முடித்து பட்டம் பெற்றேன். என் மகன் விக்ரம் பிறந்தான். MPhil தொடர நினைத்தேன், ஆனால் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதற்காக எண்ணத்தைக் கை விட்டேன்.

தொழில் தொடங்கிய பின்னும், மகன் பள்ளி சென்ற பின் தான் கடைக்குச் செல்வேன். மகன் திரும்பி வரும் நேரம், நான் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்வேன். மறுபடியும் ஐந்து மணிக்கு அவன் பேட்மிட்டன் விளையாடச் சென்றால், எட்டு மணிக்குத் தான் திரும்புவான். அந்த மூன்று மணி நேரம், நான் மீண்டும் கடைக்குத் திரும்புவேன். இப்படியாக, எதற்கு முன்னுரிமை என்று பார்த்து, சமாளித்து வந்தேன்.

இன்று அவருக்குத் திருமணமாகி, தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் இருக்கிறார். நான் என் நிறுவனத்தைப் பார்த்து கொண்டு, பிற தொழில் முனைவோர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் முன்னுரிமை செலுத்தி,  என் நேரத்தைப் பயனுள்ளதாகப் பார்த்துக் கொள்கிறேன்.

கே. டாடா நிறுவணம் பெண்களுக்காக எடுக்கும் முன்னெடுப்புகளைப் பற்றி?

ப. எங்கள் குழுமத்தில் மொத்தம் 150 பேர் வேலை செய்கிறார்கள். அதில் 70% பெண்கள் தான். டைடன் நிறுவனத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. டைடன் நிறுவனத்தின் முக்கியப் பதவிகளில், நீங்கள் பெண்களைக் காணலாம். ரீட்டெயில் கடை என்பது, பெண்கள் வேலை செய்ய மிகப் பொருத்தமான இடம். முதலில் டைடன் நிறுவனத்துடன் வேலை செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், எடுத்த வேலையை சிறப்பாகச் செய்ய தீர்மானித்தேன்.

வியாபாரத்தில், அவர்களுக்கென்று சில மதிப்பீடுகள் (ratings) உண்டு. நம் வேலையின் ஆற்றலை நிர்ணயிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் வழங்கப்படும். டைடன் அண்ணா நகர் மற்றும் தனிஷ்க் அண்ணா நகர், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டைடன் நிறுவனம், உரிமையாளர்களுக்கு மட்டும் அல்லாமல், பணியாளர்களையும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்கும் போட்டி, பரிசு ரேட்டிங், விருது என அனைத்தையும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

கே. உங்கள் நிறுவனத்தில் உள்ள பெண்களைப் பற்றி?

ப. என்னிடம் பணியாற்றும் பெண்களிடம் நான் தொடர்ந்து உரையாடுவேன். நான் கவனித்து வந்த விஷயம் ஒன்று, இப்பெண்கள், வேலைக்கு வந்த பின், அவர்களின் குடும்பங்களில் ஒரு முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். பிள்ளைகளிடம் மதிப்பைப் பெறுகின்றனர். குடும்பத்திற்காக சம்பாதிப்பதால் மட்டும் அல்ல, வெளியே வந்து வேலை செய்வதால் பலவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். பணத்தைக் கையாள, வங்கி சேவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள, பிள்ளைகளின் மேற்படிப்பைப் பற்றி விவாதிக்க, வீடு வாங்க, கடன் பெற, என குடும்பத்தின் முன்னேற்றத்தற்காக சிந்தித்து செயல்படுகின்றனர். எனக்குத் தெரிந்து, இங்குள்ள பெண்கள் பலரின் வாழ்க்கை முறை நல்லவிதமாக மாறி உள்ளதைப் பார்த்திருக்கிறேன்.

கடந்த 25 வருடங்களாக, 250 பெண்கள் வேலை செய்துள்ளனர். வேலையிலிருந்து விடை பெற்றவர்களும் கூட, என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். TIE () எனும் குழுமத்தில் ஒரு அங்கத்தினராக இருப்பதால், தொழில் தொடங்க வரும் பெண்களுக்கு, ஆரம்ப நிலையில் பல விதங்களில் பயிற்சியும் ஊக்கமும் அளித்து வருகிறேன்.

கே. பெண் தொழில்முனைவோர்களுக்கு, உங்கள் ஆலோசனை ?

ப. Passion, dedication, consistency. உந்துதல், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி.. இவை மூன்றும் அத்தியாவசியமானது. குறுக்கு வழியில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. தொழில் என்பது ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போன்றது. அது ஒரு நீண்ட தூர பயணம். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து, பல பெண் தொழில்முனைவோர்களை குறிப்பாக, புதிதாக திருமணமான பெண்களை நான் சந்திக்கும் போது, கணவன் மனைவிக்கிடையே பொருளாதார பிரச்சனை வருவதை நான் பார்க்கிறேன். மாதம் தோறும் நான் எவ்வளவு தருவது, நீ எவ்வளவு தரவேண்டும் போன்ற வாக்குவாதங்களால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நிறுவனத்தை நடத்த திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல குடும்பத்தை நடத்தவும், திட்டமிடுதல் மிக அவசியம். என் இலக்கு, உன் இலக்கு என்று இல்லாமல், ஒரு குடும்பம் என்பது, நம் இலக்காக மாற வேண்டும். அதன்படி ஆலோசித்து, முன்னேறிச் செல்லுங்கள்.

கே. உங்களுடைய அடுத்த இலக்கு ?

ப. மூன்று விஷயங்கள் தற்போது உள்ளன.

முதலாவதாக, பிறர் வந்து வேலை செய்ய, என் நிறுவனம் ஒரு சிறந்த இடமாக அமைய வேண்டும். Great places to work என்று ஒரு சில இடங்களையே குறிப்பிடுவார்கள். அந்த இலக்கை அடையும் பயணத்தை நோக்கி நகர்ந்து செல்கிறேன்.

அடுத்து, என்னிடம் பணியாற்றுபவர்களின் (wealthஐ) செல்வத்தை அதிகரிக்க ஆசைப் படுகிறேன். Wealth is different from money. பணம் என்பது, நம் கையில் இருக்கும் காசு. செல்வம் என்பது, சேமிப்பு, முதலீடு, பங்குகள் மற்றும் இதர சேவைகளின்  மூலம், பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதாகும். அதைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறேன்.

மூன்றாவதாக, நானும் என் கணவரும் சேர்ந்து இந்த நிறுவனத்தை முன்னேற்றிச் செல்வதை விட, மக்கள் அனைவரின் பங்களிப்புடன் இந்த நிறுவனம் முன்னேற வேண்டும், என்று ஆசைப் படுகிறேன்.

கே. இறுதியாக, உங்களைச் சுற்றி உள்ள தோழிகளுக்கு நீங்கள் பகிர விரும்பும் அட்வைஸ் ?

ப. என் கல்லூரி காலம் முதல், என் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் என் ஆலோசனை – போய் விளையாடுங்கள். உங்களால் முடிந்த ஏதோ ஒரு sportஐ தேர்வு செய்து விளையாடுங்கள். விளையாட்டு, நமக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கும். வெற்றி என்றால் என்ன, தோல்வி என்றால் என்ன என்பதையும், இவ்விரண்டையும் சமாளிக்கும் திறனையும் வளர்க்க உதவும். வாழ்க்கையில், தோல்வியைச் சந்திக்கும் போது, தொய்ந்து போகாமல், அடுத்த ஆட்டத்திற்குத் தயாராகும் மனோநிலையை, விளையாட்டின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

அதேபோல, விளையாடும் போது, your energy gets channelised. ஒரு மனதாக செயல்படுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் ஆரோக்கியம் மேம்படும். ஒவ்வொரு பெண்ணிற்கும் உடல் மற்றும் மன ஆரோகியம் மிக மிக அவசியம். பொழுதுபோக்கிற்காக, துப்பாக்கி சுடுதலில் (rifle shooting) ஈடுபடுவேன். இது என் நினைவாற்றலைப் பலப்படுத்த உதவும். வயது கடந்து செல்லும் பொது, தொழிலில் கவனம் செலுத்த, மனதிற்கு இதுபோன்ற பயிற்சிகள் மிக அவசியம்.

இறுதியாக, நான் சொல்ல விரும்புவது, இந்த உலகம் அனைவருக்குமானது. வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். நாம் மனதளவில் பக்குவப்பட்டால்,  தடைகளைக் கூட படிக்கற்களாக மாற்றி, முன்னேறிச் செல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, சக மனிதரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி.

One thought on “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *