ஒளிப்படக் கலைஞர் என்றாலே, ஸ்டுடியோவில் வேலை செய்பவரை நாம் பார்த்திருப்போம் அல்லது நம் வீட்டு விசேஷங்களுக்குப் படம் எடுப்பவராக இருப்பார்.  அதையும் தாண்டி, விளம்பர துறையில், மாடலிங் செய்பவர்களைப் படம் பிடிக்கும் கலைஞர்களையும்  நமக்குத் தெரியும்.  இதை தவிர காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களைப் பற்றி எத்தனை பேர் கேள்விபட்டிருக்கிறீர்கள்? அவர்கள் வாழ்க்கை முறை, காட்டிற்குச் சென்று அங்குள்ள காட்டுயிர்களைப் படம் பிடிக்கும் முறை, இவற்றைப் பற்றி திருமதி.அனிதா எங்கிற காட்டுயிர் புகைப்படக் கலைஞர்  மிக அழகாக விவரித்துள்ளார். 

அவரை நேரில் சந்திக்க நினைத்தேன், ஆனால் இயலவில்லை. காரணம், அவர் இருப்பது மதுரையில். நான் சென்னையில். தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.  மிக இனிமையாக பேசினார். தற்சமயம் வீடு மாற்றும் சூழலில் இருப்பதால், இரவு 9 மணிக்கு மேல் ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டார். குறுகிய கால அவகாசத்திற்குள், நேரில்  சந்திக்க முடியாத சூழலால், மெய்நிகர் இணையவழி மூலமாக பேசினோம்.

ஒரு காட்டுயிர் புகைப்படக் கலைஞராக, அவர் கோணத்தில் அவர் பார்க்கும் காட்சிகளுக்கும், நாம் காண்பவற்றிற்கும் எத்தனை வேறுபாடுகள்! புகைப்படம் எடுப்பதையும் தாண்டி, வேலையிலும், இல்லத்திலும் எத்தனை பொறுப்புகளை சுமக்கிறார்கள்.!

மகிழ்வுடன் திருமதி.அனிதா அவர்கள், என்னிடம் காண்பித்த அவருடைய வாழ்க்கைப் படங்கள், இனி உங்கள் பார்வைக்கு…

வணக்கம்.

கே. தங்களைப் பற்றிய அறிமுகம் ?

ப.  வணக்கம். நான் அனிதா. பிறந்தது தேனி மாவட்டத்தில். வளர்ந்தது மதுரையில். பள்ளிப் படிப்பு மதுரை ஓ.சி.பி.எம்.மில் முடித்தேன். அதன் பின் மதுரை லேடி டோக் (Lady Doak) கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றேன். இதைத் தொடர்ந்நு, 2 வருடங்கள், UPSC தேர்வு பயிற்சி வகுப்பிற்குச் சென்றேன். ஆனால் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. இனி இதில் நேரத்தை செலவழிக்க வேண்டாம் என்று எண்ணி, MBA வுக்கு முயன்றேன். பொருளாதார சூழலின் காரணமாக அதை மேற்கொள்ள முடியாமல், அதை விட்டு, MSW ‘மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்’ படிப்பை மேற்கொண்டேன். சேர்ந்த 2 வருடங்களிலேயே, அதிக ஈடுபாடு வந்தது. மகிழ்வுடன் பட்டம் பெற்று முடிக்கும் போதே, வயது 24.   ‘இனி வேலைக்கெல்லாம் போக வேண்டாம்’ என்று கூறி, அப்பா என் திருமணத்தை முடித்து வைத்தார்.

கணவர் மென்பொருள் பொறியாளர் (software engineer). அடுத்த 12 வருடங்கள், முழு நேர இல்லத்தரசியாகவே வாழ்ந்து வந்தேன். இதற்கிடையில் 4 ஆண்டுகள் அமெரிக்காவிலும் வசித்தேன்.

கே. கணிதம், MSW போன்ற பட்டங்களைப் பெற்ற நீங்கள், காட்டுயிர் புகைப்படக் கலைஞராக, எப்போது, எப்படி மாறினீர்கள் ?

ப. திருமணமாகி நான் சென்னையில் வசித்து வந்தேன். மதுரையைச் சேர்ந்த என் தோழி, ஶ்ரீ ப்ரியா ரங்கராஜன், மேற்குவங்கத்தில் கலெக்டராகப் பணிபுரிந்து வந்தார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தோழி, மதுரைக்கே வந்துவிட்டார். அவ்வப்பொழுது சிகிச்சைக்காக சென்னை வந்துபோவார். தொடர்ந்து அவருடன் மருத்துவமனைக்குச் சென்று, அவருக்குத் துணையாக இருந்து வந்தேன். சரியாக நான் அமெரிக்கா செல்லும் சமயத்தில், சிகிச்சை பலனின்றி, என் தோழி காலமானார்.

அது எனக்கொரு மிகப் பெரிய அடி. அந்த மனவேதனையுடனேயே, அமெரிக்காவின் சியாட்டல் நகரில் குடியேறினோம். சியாட்டலில் எப்போதும் மழையும்  குளிரும் தான்.  பளிச்சென்று சூரியனைப் பார்ப்பது கடினம். அங்குள்ளவர்களே கூட, எளிதில் மன அழுத்தத்திற்குள்ளாவார்கள். மிகுந்த மன வேதனையுடன், அந்த இடத்திற்குச்  சென்ற நான், மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன் என்பதை உணரும் முன்பே, அதன் பிடியில் சிக்கிக் கொண்டேன்.

என் கணவருக்கும், என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அது என் வாழ்வின் இருண்ட காலம். என் அண்ணி தான் என் நடவடிக்கையைப் பார்த்து, ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தினார். அதன் பின், என் கணவர் என் கையில் ஒரு கேமராவைக் கொடுத்துப் பிடித்தைப் படம் பிடிக்கச் சொன்னார். முதலில் ஆர்வம் இல்லை. பின், படங்கள் எடுக்க ஆரம்பித்தபின், அவற்றை ரசிக்க ஆரம்பித்தேன்.

இன்றளவும், அதன் சம்பந்தமான கற்றலில் இருக்கிறேன். பறவைகளை படம் பிடிப்பதில் தேர்ச்சி பெற்றேன். ஒரு மோசமான நிலையிலிருந்து மீண்டு வர என் கணவர் என் கையில் எதார்த்தமாகக் கொடுத்தது தான் இந்த கேமரா. இன்று, ஒரு ஒளிப்படக் கலைஞராக, எனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டேன். 

கே. இயற்கையைப் பற்றிய தங்களின் புரிதல் என்ன? இயற்கை என நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

ப. ஒரு ஒளிப்படக் கலைஞராக எனக்கு, இயற்கை என்பது ஒரு blessing, ஆசீர்வாதம். ஒவ்வொரு நொடியும், பரந்தவெளியில் நாம் நிற்பதாகட்டும், நம்மை அங்கு கொண்டு நிற்கவைப்பதாகட்டும், அது இயற்கையின் ஆசீர்வாதம் தான். தனிப்பட்ட முறையில், நம் எல்லோராலும் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ முடியும்.

என்னைச் சுற்றி உள்ள பெண்களை நான் பார்க்கிறேன். அம்மா ஆகட்டும், மாமியாராகட்டும், இயற்கையுடன் ஒன்றி இருக்காங்க. அவங்களவுல, இயற்கையை ரசிக்கிறாங்க. இப்போ, ஒரு ஆண் மகன் மோட்டார் பைக்ல, பல மைல் தூரம் கடந்து போய்,  இமயமலை மீது நின்று படம் எடுப்பது தான் ஃபோட்டோகிராபி, nature photography, என்ற கட்டமைப்புக்குள்ள வந்துட்டோம். இல்லைனா, solo travel, தனிமையில் பயணம் செய்து, புகைப்படங்களை வலைதளங்களில் போஸ்ட் செய்பவர்கள் தான் இயற்கையை நேசிப்பவர்கள் போன்ற எண்ணங்கள் உருவாகுது. 

நம் வீட்டுப் பெண்களுக்கு, பைக்கில் பயணம் செய்ய நேரம் இல்லை. இயற்கையை நேசிக்கவென்று, தனியே நேரம் ஒதுக்க மாட்டார்கள். இப்போது என் மாமியார் ஒரே ஒரு பூச்செடியைத் தான் வைத்திருப்பார். ஆனால் தினம் அதை தடவி, வருடிக்கொடுத்து ரசிப்பார். என் அம்மாவும், தான் வளர்க்கும் செடிகளை மிகவும் நேசிப்பார். அது ஒரு அமைதியைக் கொடுக்கும்.

அதேபோல, இவங்கள சுத்தி வர்ற பறவைகளுடைய பெயர்கள் இவங்களுக்குத் தெரியாது. ஆனால், அந்தப் பறவை எப்ப வரும், அதன் இயல்பு என்ன என்று அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். தன் வீட்டில் இருந்தபடியே, இயற்கையுடன் அணுக்கமாக இருக்கமுடியும் என்பதை, நம் வீட்டுப் பெண்கள் நிரூபித்து வருவதை நான் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.

கேமராவை நான் கையில் ஏந்திய பின் உணர்ந்துகொண்டது, இயற்கை பெண்களுக்கு நெருக்கமான  விஷயமாக இருக்கிறது.

கே. நீங்கள் ரசித்த ஒளிப்படக் கலைஞர்?

ப.  இந்த துறை, ஒரு கடல் மாதிரி. பல பிரபலங்கள் இதில் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் வல்லுனர்கள் உண்டு. என் மனதிற்கு நெருக்கமானவர், Saul Leiter என்பவர். அவர் படங்கள், அதிக தெளிவுடன் இருக்காது.

கே. அவர் புகைப்படங்கள் பெரும்பாலும் எதைச் சார்ந்து இருக்கும்?

ப.  Street photography. தெருக்கள் மற்றும் மக்கள் நடமாட்டத்தை எடுப்பார். நம் ஊரில் தெருக்களை படம் எடுக்க வேண்டுமானால், குடிசை பகுதி, வறுமை தோற்றம்தான் அதிகமாக இருக்கும். ஆனால் இவருடையது அப்படி அல்ல. எந்த படமும் நேரடியாக இருக்காது. ஒரு பிம்பமாகவோ, கண்ணாடித் தோற்றமாகவோ, நிழலாகவோ தான் இருக்கும். இந்தப் பாணி என்னை மிகவும் கவர்ந்தது. இதில் நான் தேர்ச்சி பெற வேண்டும்.

அடுத்து அஷோக் சரவணன் அவர்களின் படங்களும் பிரமாதமாக இருக்கும். Multiple exposure முறையில் தேர்ச்சி பெற்றவர். அதேபோல, மணிலா பாலாஜி என்பவர், floral photographyயில் சிறந்தவர். ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு அம்சம் உண்டு. அதை கவனித்து, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வேன்.

கேகாட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே ஆழமான தொடர்பை வளர்ப்பதில் உங்கள் பங்கு ?

ப.  நான் அந்த அளவிற்கு வேலை செய்தேனா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு curiosity, ஆர்வத்தை உண்டுபண்ன முடிந்தது. இது என்ன பறவை? எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விகளை எழுப்ப முடிந்தது. இதில் அடுத்த கட்டமாக, நான் அதிக அளவில் மக்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

கேகாட்டுயிர் ஒளிப்படத்துறையில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

ப.  பெண்களின் பங்களிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. காட்டுயிர் ஒளிப்படங்கள் எடுப்பதில் அதிக பெண்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். 2018வரை எண்ணிக்கை குறைவாகத் தான் இருந்தது. கொரோனா காலகட்டத்திற்குப் பின், அதிக அளவில் ஈடுபடுகிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. பறவைகளைப் பற்றிக் கற்றுக் கொள்வதாகட்டும், ஒளிப்படம் எடுப்பதாகட்டும், வனங்களைப் பாதுகாப்பதாகட்டும், பெண்களிடம் ஒரு நல்ல network இருக்கு.

கேஉங்களுடைய கூட்டுயிர் புகைப்பட பயணத்தைப் பற்றி, சுவாரசிய சம்பவங்களை ஏதேனும், நம் புழுதி வாசகர்களுக்கு விவரித்துச் சொல்லுங்கள்?

ப.  பொதுவா, யாராக இருந்தாலும், காட்டுயிர் புகைப்படம் எடுக்க விரும்பும் நேரம்,அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை, மற்றும் மாலை 4.30 மணிக்கு மேல். இந்த நேரத்தில் தான் பறவைகளும் உற்சாகத்துடன் இருக்கும். காட்டில் நான் தங்கவேண்ணிய சூழல் இருந்தால், 95% என் குடும்பத்துடன் தான் பயணிப்பேன். நான் இதில் ஈடுபட ஆரம்பித்த சமயம், என் மகன் 9ம் வகுப்பு மாணவன். ஆகையால், அவ்வப்பொழுது பள்ளிக்கு விடுமுறை எடுக்க முடிந்தது. காட்டில், அவர்கள் தங்குவதற்கான வசதியான இடத்தை அமைத்துக் கொடுத்து, பாதுகாப்புடன்  இருப்பதை ஊர்ஜிதப் படுத்திய பின் தான், நான் என் வேலையைத் தொடங்குவேன்.

நம் ஊர் காடுகளில், காட்டுயிர் புகைப்படங்கள் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பந்திபூர் ஆகட்டும், முதுமலை ஆகட்டும், மூணார் ஆகட்டும், அங்குள்ள வனதிகாரிகளிடம் (forest rangers) அனுமதி பெற்று, பின் அவர்கள் வாகனத்தில் தான் செல்ல வேண்டும். நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு தான் புகைப்படம் எடுக்க வேண்டும். பறவைகளை எங்கு வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் விதி மீறல்கள் கூடாது. இந்த ஊழலில், முன் கூட்டியே யோசித்து, plan செய்த பின் தான் புறப்பட வேண்டும்.

என்னுடைய முதல் பயணமே, ரொம்ப சுவாரசியமா இருந்தது. கர்நாடகாவின் டேன்டலி (Dandeli) என்ற இடத்திற்குச் சென்றோம். பறவைகளுக்கான டஃப் 10 இடங்களில் ஒன்று. என்னைப் போன்ற புகைப்பட கலைஞர்கள், ஓர் இடத்திற்கு செல்லும் முன், அந்த இடத்தை பற்றிய புரிதலுடன், தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். முக்கியமாக, அங்கு உள்ள வழிகாட்டி guide யார் என்று தெரிந்திருக்க வேண்டும். கைடின் உதவி இல்லாமல், நம்மால் அங்கு வேலை செய்ய முடியாது. நேர விரயம் தான் மிஞ்சும்.

ஒரு நாள் ஒன்றரை நாள் என்றால், தெரிந்தவருடன் செல்வது நல்லது. என் மகன் மற்றும் கணவரிடம் ஆளுக்கொரு கேமராவைக் கொடுத்து, அவர்களையும் படம் பிடிக்கச் சொன்னேன். Hornbill என்ற பறவை, தமிழில், இருவாட்ச்சி என்பார்கள். அந்த பறவை nesting, கூடு கட்டும் சமயம் அது. கைட், இருவாட்ச்சிப் பறவையைப் பற்றி சொல்லிக்கொண்டருந்தார். நாங்கள் அதன் கூட்டிற்கு அருகே காத்திருந்தோம். பெண் இருவாட்ச்சி, கூட்டிற்குள் இருந்தது.

ஆண் பறவை, அத்திப்பழங்களைக் கொண்டு வரச் சென்றிருந்தது. அப்பழங்களை, ஆண் பறவை, தொண்டைக்குழியில் அடக்கி வைத்திருக்குமாம். கூட்டிற்கு வந்ததும், அதை எதுக்களித்து, பெண் பறவைக்கு ஊட்டிவிடுமாம். காலை ஏழு மணிக்கு வந்தது. கூடு கட்டும் சமயத்தில்  நேரே கூட்டிற்கு வராது. அருகே யாராவது இருக்கிறார்களா என்று நொட்டம் விட்டு, பின் தான் கூட்டிற்கருகே வரும். இப்படியாக வந்த ஆண் பறவை, தான் கொண்டு வந்த பழங்களை, எதுக்களித்து ஊட்டிவிட்டதைக் காண முடிந்தது.

என் மகனுடன் மறக்க முடியாத அனுபவம்.

கே. புள்ளினங்களை ஒளிப்படம் எடுப்பதும் அவதானிப்பதும் இருவேறான செயல்முறை.அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

ப. மக்கள் பொதுவா, பறவைகளைப் படம் பிடிப்பார்களேத்  தவிர, அதை பற்றி அதிகம் படிக்க மாட்டார்கள். அதை நான் குறையாகச் சொல்ல வில்லை… ஒரு விருப்பத்தின் பேரால், passionக்காக கூட புகைப்படம் எடுப்பவர்கள் உண்டு. எனக்கு இரண்டிலும்  ஆர்வம் அதிகம். இரண்டையும் ஒரு சேர செய்யும் போது, அது ஒரு நீண்ட பயமாக இருக்கு. ஆனாலும், பறவைகளைப் படம் பிடித்துக் கொண்டே, அவற்றைப் பற்றி படிக்கவும் செய்கிறேன்.

கேகாட்டுயிர்  புகைப்படம் எடுப்பதன் மூலம், வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு குறிப்பிட்ட தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ப.  பள்ளி மாணவர்களுக்கு, கொரோனா காலத்தில், நிறைய வகுப்புகள் எடுத்திருக்கேன். புகைப்படங்கள் எடுப்பதைவிட, பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றி நாம் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். சுற்றி உள்ள பறவைகளைப் பற்றி, அவை எழுப்பும் ஒலிகளைப் பற்றியும் நாம் சொல்லித் தர வேண்டும். இந்த புரிதலை நாம் அவர்களுக்கு கொடுத்தாலே போதும்.

கேஒரு காட்டுயிர் புகைப்படக் கலைஞராக, நீங்கள் புகைப்படம் எடுக்கும் விலங்குகளின் நடவடிக்கைகளை பாதிக்காத வண்ணம், படங்களை எவ்வாறு படம் பிடிக்கிறீர்கள்?

ப.  அந்த விஷயத்துல, நான் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கேன் தொடர்ந்நு இருக்கவும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன். என்னுடைய சீனியர்ஸ், பறவைகளின் வாழ்விடத்தை பாதிக்காத வண்ணம் புகைப்படம் எடுக்க வேண்டும், நாமாக மாற்றங்கள் செய்தால் என்னென்ன பாதிப்புகள் வரும், என்று இதை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப் பேசுபவர் மத்தியில் நாம் இருக்கும் போது, நம் கவனம் இன்னும் கூடுதலாக இருக்கும்.

நான் பின்பற்றும் முறைகள் என்னவென்றால், ஒரு கூட்டைப் புகைப்படம் எடுக்கும்போது, அதை வலைதளங்களில் பகிர மாட்டேன். காரணம், அந்த கூட்டிலிருந்து எத்தனை தூரம் விலகியிருந்து, டெலி லென்ஸ் வழியாக நான் படம் பிடித்தேன் என்று எனக்குத் தான் தெரியும். ஆனால், பார்ப்பவர்களுக்கு அது புரியாது.

ஒரு கூட்டைப் பார்த்த உடனே, கைபேசியில் போய் புகைப்படம் எடுக்க, பறவை பதற நான் பார்த்திருக்கிறேன். இது மிகவும் தவறான செயல். ஒரு பறவையையும் அதன் கூட்டையும் பிரிப்பதற்கான செயல். திரும்ப அந்த பறவை, அந்த கூட்டிற்கு வராமல் போக வாய்ப்புண்டு. அல்லது, குஞ்சுகளுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு.

அடுத்து, புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக, நான் அந்த சூழலை மாற்ற மாட்டேன். ‘இந்தக் கொம்பை நகர்த்தி வை… அதை அங்கே தள்ளி வை…அந்த செடியை அகற்று, பறவையை மறைக்கிறது’ என்றெல்லாம் செய்யவேமாட்டேன்.

அடுத்த முக்கியமான விஷயம், இந்த பறவை இங்கே இருக்குனு தெரியும். இங்கே வரும் என்றும் தெரியும், வரும்வரை நான் காத்திருப்பேன். சில சமயம் வராமல் போகலாம். அப்படி வராமல் போகும் பட்சத்தில், நாளை வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிடுவோம். ஆனால், ஒருசிலர், ஒலி எழுப்புவார்கள். அதாவது, பறவைகளை வரவழைக்கவென்றே ஒரு சில ஒலிகள் உண்டு (recorded  voices). அதைப் போட்டு, பறவைகளை வரவழைப்பார்கள். இது மிக தவறான செயல்.

பல காரணங்களுக்காக, அந்த பறவை வெளியே வராமல் இருக்கும். அதைப் புரிந்துகொள்ளாமல், ஒலிகளை எழுப்பி, அதன் ஆர்வத்தைத் தூண்டி, வரவழைக்கும்போது, பெரும்பாலும் அப்பறவைக்கு நன்மையாக முடிவதில்லை. புகைப்படம் எடுக்க விருப்பமுள்ளவர்கள், இத்துறையில் உள்ளவர்களிடம், எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொண்டு செயல்பட்டால், நல்லது.

கே.  Flash lights உபயோகப்படுத்தலாமா?

ப.  Flash light பறவைகளுக்குப் பெரும்பாலும் உபயோகப்படுத்த மாட்டார்கள். Hummingbird பறவைக்கு தான் உபயோகிப்பார்கள்.

கேவளரும் இளம்தலைமுறையினை காட்டுயிர் ஒளிப்படங்கள் சார்ந்தோ காட்டுயிர் சம்மந்தமான படிப்புகளுக்கோ நீங்கள் பரிந்துரை செய்வீர்களா?ஏன்?

ப.  கண்டிப்பாக பரிந்துரை செய்வேன். ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருக்கு. மென்மொருள் பொறியாளர்கள் (software engineers) அதிகமாகிப்போன இந்த காலகட்டத்தில், எளிதா ஒரு கேமராவை வாங்கி, விலை உயர்ந்த லென்ஸ் வாங்கி, பறவைகளையும், விலங்குகளையும் படம் பிடிக்க, காட்டிற்குள் பயணம் போறாங்க. இதனால, பறவைகளின் வாழ்விடங்கள்ல நிறைய தொந்தரவு வர ஆரம்பிக்குது. இது வெறும் குற்றச்சாட்டல்ல. உண்மையும் கூட. எந்த அளவிற்ககு இதை நாம் ஒழுங்கு படுத்த வேண்டும் என்பது, நாம் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய விஷயம்.

இளைய தலைமுறை நிச்சயம் இதில் வரவேண்டும். சமீபத்தில் Tamil Birders meet தமிழ்ப் பறவையாளர்கள் சந்திப்பு திருச்சியில் நடந்தது. அதில் ஒரு சில பெண்களின் கருத்து என்னவென்றால், மிகப் பெரிய வேட்டைக்காரர்களாக இருந்தவர்கள் தான் பின்னாளில், மிகப் பெரிய conservationist ஆ மாறி, காடுகளை National park ஆகவும், Wild Life sanctuaries ஆகவும் மாற்ற மிகப் பெரிய திட்டங்களைக் கொண்டுவந்தாங்க. உதாரணத்திற்கு, ஜிம் போர்பெட் (Jim Corbett), டிக்லா கேபரியலி (Dinkl Gabriely) போன்றவர்கள்.

இந்தியாவின் பறவை மனிதன் என்று அழைக்கப்படும் சலீம் அலி கூட, சிறுவயதில் வேட்டையாடியவர் தான். ஆக, ஆசையாக இன்று படம் எடுக்க வருபவர்கள் கூட, பின் நாளில் பறவைகளை ஆசையுடன் பார்க்கவும், பாதுகாக்கவும் செய்வார்கள். ஒரு இடத்தில் மைண்ட் மாறிடும்.

எனக்குத் தெரிந்த ஒரு சிறுவன், தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டுயிர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தவன், திடீரென்று ஒரு நாள்.. ‘நான் இரவு நேரங்கள்ல புகைப்படம் எடுப்பதால பறவைகளுக்கு இடைஞ்சலா இருக்குறதா உணர்றேன். இனி இரவு நேரங்கள்ல படம் எடுக்க மாட்டேன்’னு தீர்மானம் எடுத்துட்டான்.  நிறைய பேர் வரணும், அதே சமயத்துல, பொறுப்புணர்ச்சியோட வரணும்.

கே.   சவால்கள் மற்றும் கணிக்க முடியாத சூழல் இருக்கும் ஒரு துறையில், நீங்கள் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்?

ப.   இரண்டு வகையான இடைஞ்சல்கள் இதில் இருக்கு. களத்தில் நான் சந்திப்பது ஒன்று, குடும்பத்தில் சந்திப்பது மற்றொன்று. என் கணவருக்கும் மகனுக்கும், என் மீதும் என் வேலை மீதும் புரிதல் இருக்கு. அவர்களைத் தாண்டி, அடுத்த வட்டத்தில் உள்ளவர்களை சமாளிக்கணும். ‘நான் இப்படித்தான்’ என்று ஒரு வார்த்தைல சொல்லிவிட்டுப் போகலாம்.  ஆனால், மறுபடியும் இங்க தான் வரணும். ‘தனியா போறியே, பயமா இருக்குனு அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

என் கால்கள் சும்மா இருக்காது. போகணும்னு எண்ணம் வந்தா உடனே கிளம்பிடுவேன். ஆனா, எல்லா பாதுகாப்பு முன்னேற்பாடுகளோட தான் கிளம்புவேன். யாரோ ஒருவரை உடன் அழைத்துச் செல்வேன். சில இடங்களில், ஒரு பய உணர்வோடு நின்றிருக்கிறேன். இதுவரை எதுவும் நிகழவில்லை.

கேஇதுபோன்ற தடைகளை எதிர்கொள்ளும் ஆர்வமுள்ள காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?”

ப.  இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மற்ற புகைப்படங்கள் எடுக்கும்போது, வெளிச்சத்தை சரிசெய்து, படம் எடுத்து கிளம்பிவிடலாம். ஆனால், காட்டுயிர் புகைப்படத்தில், நமக்கு முன் இன்னொரு உயிர் இருக்கு என்ற பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். அந்த உயிரைப் பற்றிய புரிதல் நமக்கு இருக்கணும்.

படம் எடுத்து, வலை தளங்களில் போடுவது வேறு. போனேன், பார்த்தேன், படம் பிடித்தேன் என்று இல்லாமல்… ‘நான் இந்த இடத்திற்குப் போனேன், இந்த இனத்தைச் சேர்ந்த பறவையை, இவ்விடத்தில் பார்த்தேன். அச்சமயத்தில் அதன் செயல்பாடு இப்படியாக இருந்தது..’ என்ற ஆவணத்தை நாம் உருவாக்க வேண்டும். 

இன்னைக்கு நாம் பார்க்கும் இனம், நாளை இருக்குமா என்பது சந்தேகம். 2018ல் நான் பார்த்த பறவை இனம், 2022வில் இல்லை. இந்த ஆவணத்தால் என்ன பயன் என்று நினைக்க வேண்டாம். அது என்றைக்காவது தேவைப்படும் முக்கிய ஆவணமாகத் தான் இருக்கும்.

பல மாற்றங்கள் நிகழுது. இந்த முறை, அக்டோபர்ல ஆரம்பிக்க வேண்டிய சீசனே, ரொம்ப தாமதமா ஆரம்பிச்சுது. காரணம் மழை இல்ல. இது தொடர்ந்தால், நம்நிலை என்ன? ஆக, நாம் படம் பிடிக்கும் போது, ஒரு பறவையை மட்டும் நாம் படம் பிடிக்க வில்லை. அதைச் சுற்றிய வாழ்விடங்களையும் படம் எடுத்து, அதை ஆவணப்படுத்த வேண்டும்.

கேபறவைகளுக்கான பருவம் (season) எது?

ப.  உள்ளூர் பறவைகளை எப்பவுமே பார்க்கலாம். தமிழ்நாட்டில், அக்டோபரிலிருந்நு வலசைப் பறவைகள் வரத் தொடங்கிவிடும். வலசைப் பறவைகள் இரண்டு வகை. வட இந்தியாவிலிருந்து வருபவை உண்டு. மத்திய ஆசியகண்டம், மங்கோலியா மற்றும் குளிர் பிரதேசங்களிலிருந்து வருபவையும் உண்டு. மார்ச், ஏப்ரலில் கிளம்பிவிடும்.

கே.   பொழுதுபோக்கு அம்சம் என்னனு கேட்டா, photography னு சொல்லுவாங்க.. photography யே வேலையா இருக்குற உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?

ப.   பாடல்கள் கேட்க பிடிக்கும். புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. பறவைகள் சம்பந்தப்பட்டவை மட்டும் படிப்பதுண்டு. குடும்பத்துடன் பயணம் போக பிடிக்கும். இதைத் தவிர, கேமரா பற்றி தெரிந்துக் கொள்வதும் புகைப்பட நுணுக்கங்களை ஆராய்வதிலும் அதிக நேரம் செலவிடுவேன்.

கேகேமரா சம்பந்தப்பட்டவை எல்லாமே விலை உயர்ந்தவை என்று கேள்விப்பட்டுள்ளேன்..?

ப.   ஆம். நீங்க கேள்வி பட்டது சரிதான். அதுமட்டும் இல்ல, மாதம் ஒரு புது மாடல், புது டெக்னிக் என மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை நாம் கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

கே.   இந்த காட்டுயிர் புகைப்படம், உங்களை எந்த அளவிற்கு empower பண்ணி இருக்கறதா உணர்றீங்க?

ப.   நான் முன் குறிப்பிட்டது போல, என் தோழியை இழந்த உடனே, நான் அமெரிக்காவில் குடியேறிய அந்த காலக் கட்டம், என் வாழ்வின் இருண்ட காலம். கேமராவைக் கையில் பிடிக்க ஆரம்பித்த பின் தான், மெல்ல மாறத் தொடங்கினேன். படம் எடுப்பது, பறவைகள் பற்றி படிப்பது என அதில் ஈடுபட்ட பிறகு, மன அழுத்தத்திலிருந்து மெல்ல வெளிவர  முடிந்தது.

அந்த மோசமான காலக்கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது என் மகன் தான். அவன் அப்போ சின்னப் பையன். நான் மன அழுத்தத்திலிருந்து வெளிவந்தது அவனுக்கு தான் அதிக நன்மையாக இருந்தது. ஒரு தாயாக, சிறுவனை வழிநடத்தி, சொல்லிக்கொடுக்க வேண்டிய முக்கியமாக ஒரு காலம் அது. அதை இனி மாற்ற முடியாது. நடந்துடுச்சு… என் மகன் இழந்த அந்த நாட்கள், இழந்தது தான். என் மகனுக்கு சமைத்துக் கொடுக்க கூட என்னால் முடியவில்லை. பேசாமலேயே இருந்திருகிறேன்.

அதிலிருந்து, என்னை வெளியே கொண்டு வந்தது, இந்த புகைப்படத் துறை தான். Anxiety, பதற்றத்திலிருந்தும் வெளியே வர உதவியது. யாரைப் பார்த்தாலும், பயம் பதற்றமாக இருக்கும். யாரையும் பார்க்கப் பிடிக்காது. இது எல்லாவற்றிலிருந்தும் என்னை வெளிக்கொண்டு வந்தது, photography தான்.

கையில் கேமரா இருந்தாலே எனக்கொரு தனி பலம். “எங்க போனாலும் கேமராவ தூக்கிட்டுப் போவியா..” என்று என்னைப் பார்த்து கேட்காதவர்களே இல்லை. கடந்த 5 வருடங்களாக, ஒரு சின்னக் கேமராவையாவது கையில் எடுத்துச் செல்வேன். இடைப்பட்ட காலத்தில், ஏற்பட்ட சம்பவத்தில் இருந்து, என்னை பழைய நிலைக்குக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், புகைப்பட கலைஞர் என்ற மேன்மையான அந்தஸ்தையும் , தைரியத்தையும், என் கேமரா எனக்கு கொடுத்திருக்கு.

இன்று, இத்துறையில் உள்ள மற்றவர்களின்  பிரச்சனைகளைக் கேட்டு, தீர்வு கொடுக்கும் அளவிற்கு, என் கேமரா என்னை தைரியசாலியாக மாற்றி இருக்கு. இன்றைய நிலையில், என் குடும்பத்தாருக்காக, நானே செலவு செய்து, அவர்களை வெளியே, கூட்டிப்போகும் அளவிற்கு இன்று நான் உயர்ந்து நிற்கிறேன்.

நன்றி.

கே.  இத்துறையில் தாங்கள் பெற்ற அங்கீகாரம் பற்றி?

ப.  நல்ல வரவேற்பிருக்கு. ஆனா, சமயங்கள்ல, கேமரா என் கையில் இருக்கும் போது, யாரும் என் கிட்ட வந்து பேச மாட்டாங்க. என் கணவர் கூட இருந்தா, அவர் கிட்ட கேள்வி கேட்பாங்க. ஓர் அளவுக்கு மேல அவரால விளக்கிச் சொல்ல முடியாது. ‘இனி யார் கேள்வி கேட்டாலும், என்கிட்ட கேட்க சொல்லுங்க’ என்று என் கணவரிடம் சொல்லிவிடுவேன்.

இதற்கு காரணம் என்னனு எனக்கேப் புரியல.  கையில் கேமரா இருந்தாலும், பெண்ணுக்கு போதுமான அங்கீகாரம் இல்லையான்னு யோசிக்கத் தோணும். எந்தத் துறையிலும் , பிரபலமானவர்களா தான் இருந்தா போய் பேசுவாங்களோன்னு தோணும். எனக்குத் தெரிந்த பல பெண்களும் இதை மாதிரியான சூழலை சந்திச்சிருக்காங்க. இது மாற வேண்டும். பெண்களுக்கு அனைத்து நிலைகளிலும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

4 thoughts on “

  1. வாழ்த்துக்கள். அனிதா மேடம். இந்த பெண்கள் தினத்தில் உங்களை பற்றிய
    கட்டுரை வெளிவந்துருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியாழிக்கிறது. உங்களுக்கு உறு துணையாக இருக்கும். அண்ணன் அவருக்கும் என் வாழ்த்துக்கள். பெண் வீட்டுலும் வெளிப்புறத்திலும். சாதிப்பது மிகுந்த சவலான ஒன்று. உங்கள் பயணம் சிறப்பு என் வாழ்த்துக்கள்.

  2. காட்டுயிர் புகை புகைப்பட கலையை பற்றியும், அவருடைய அனுபவத்தைப் பற்றியும் மிக சிறப்பாக தனது பதில் மூலம் விளக்கியுள்ளார்! இது வளரும் கலைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திருமதி அனிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  3. அருமையான, இனிமையான பதிவு. உங்களுடைய நேர்காணல் இளைய புகைப்பட கலைஞர்களுக்கு ஆர்வத்தையும், ஆனந்தத்தையும் தரும் என்பது மறுக்க முடியாதது. பள்ளிக் குழந்தைகள் மத்தியில் புகைப்பட கலை கற்றுத் தர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் ஆலோசனைகளை கூற வேண்டும். தன்னார்வமாக சொல்லித் தரும் புகைப்பட கலைஞர்கள் பற்றிய தகவல்களை நீங்கள் பகிர வேண்டும். உங்கள் ஆர்வம் தொடர்ந்து நடைபெற இறை, இயற்கை உங்களுக்கு வழி கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *