முகநூலில் வந்த ஒரு பதிவைப் பார்த்து,  ‘இந்திர நீலம்’ எனும் புத்தகத்தை வாங்கி வாசித்தேன். பெண்ணியம் சார்ந்த, துணிச்சல் மிக்க வாசிப்பிற்கு, நான் அதிகம் பழக்கப்படாத அன்றைய சூழலில், இந்திர நீலத்தை வாசித்து, அதிர்ந்தேன். “நம் உள்ளங்கைப் பண்டமாகக் காமம் இருப்பினும், அதை விரும்பியபடியெல்லாம் சுவைத்திட முடிவதில்லை.”

“நூற்றாண்டுகளாகப் பெண்ணின் உடல் திறவுகோலற்று, கணவன் மட்டுமே தேவைப்படும்போது உருட்டி விளையாடும் விளையாட்டுப் பொருளாக இருந்திருக்கிறது.” என்ற துணிச்சல் மிக்க ஆசாரியர் முன்னுரை வரிகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.

எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல்? எப்படி பட்ட சிந்தனை? வெறும் சிந்தனை என்பதை விட, ஒவ்வொரு வரிகளிலும் உள்ள பளிச்சென்றத் தெளிவு, என்னை மிகவும் கவர்ந்தது. சும்மாவா… வெண்ணிலா என்ற பெயருக்கு ஏற்றவாறு, பெண்ணியத்தை எவ்விதத்திலும் தேய்ந்து போக விடாமல், ஒவ்வொரு கதையிலும் முழு நிலவாய் பிரகாசித்தார்.

புழுதியின்  ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக, அவரை நேர்காணல் செய்ய தொலைபேசியில் அழைத்தேன். யார், எவர் என்ற கேள்விகளின் ஊடாக, தெளிவுப் படுத்திக் கொண்டு, ‘நாளை சந்திப்பிற்கான நேரத்தைத் தெரியப் படுத்துகிறேன்’ என்றார். சொன்னது போலவே, நேரத்தையும் முகவரியையும் கைபேசியில் பகிர்ந்தார். Tamil Nadu Archives என்று இருந்தது. முகவரியைத் தொடர்ந்து, கம்பீரமானதொரு சிகப்பு நிற வெள்ளைக்கார துரை காலத்து கட்டிடத்திற்குள் நுழைந்தேன். படியேறி, அவர் அறைமுன் சென்றதும், உள்ளிருந்து வரும்படி கை அசைத்தார். திருமிகு கவிஞர் வெண்ணிலா அவர்களின் அறைக்குள் நுழைந்தேன்.

ஆம். தமிழ்நாடு ஆணவக்காப்பகத்தின் துணை பதிப்பாசிரியராக நியமிக்கப் பட்டுள்ளார். அறிமுகப்படுத்திக் கொண்டு, நேர்காணலைத் தொடங்கினேன். பல கவிதைகள், சிறு கதைகள், தொகுப்பு நூல்கள், கட்டுரைகளை எழுதியவர், துளியும் ஆரவாரம் இன்றி, அமைதியாய் பதிலளித்தார்.

நேர்காணல் முடித்து, ‘ஒரு புகைப் படம் ப்ளீஸ்…’ என்றேன்.  ‘நான் எடுக்கச் சொல்றேன். இங்கே வேண்டாம், சரியா வராது. கீழே என்ட்ரென்ஸ்ல எடுத்துக்கலாமா?’ என்று,  என்னுடன் படி இறங்கி, சிறிது தூரம் நடந்து, முன் வாயிலில் ஒருவரை புகைப்படம் எடுக்கச் சொன்னார். தனக்கும், தன்னை தேடி வருபவர்களுக்கும், முக்கியத்துவம் கொடுத்து, தான் சம்பந்தப்பட்டச் செயல்களை முழுமையடையச் செய்யும் முழு நிலவாய், திருமிகு வெண்ணிலா அவர்களை, நான் பார்த்தேன்.

பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் வெண்ணிலா அவர்களின் நேர்காணல், ‘புழுதி’  வாசகர்களின் பார்வைக்கு…

ஆ.வெண்ணிலா – (53)  

தமிழ்நாடு ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுத் துறை துணை பதிப்பாசிரியர் (sub editor)

கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்,

அகனி வெளியீட்டின் உரிமையாளர்.

கேவணக்கம்உங்களைப் பற்றிய அறிமுகம்?

ப.    வணக்கம். நான் வெண்ணிலா. கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாமே வந்தவாசியில். இப்போ இரண்டரை வருடங்களா சென்னைல இருக்கேன். தற்சமயம், தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் assistant editor ஆ இருக்கேன்.

கே.     கணவன் மனைவி என்பதைத் தாண்டிஇரு  எழுத்தாளர்கள் கொண்ட வீடு உங்களுடையது. இருவரும் எப்படி எழுத்துப்பணிகளை சமாளிக்கிறீர்கள்?

ப.      திருமணத்திற்கு முன்னாடியே எங்கள் இரண்டு பேருக்கும் இடையே அறிமுகம் இருக்கு. எழுத்தாளர்னு தெரிஞ்சு, அந்த காரணத்திற்குத் தான் கல்யாணமே பண்ணிகிட்டோம். அதைத் தவிர, அவங்கவங்க எழுத்துத் துரைல, அவங்கவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வேலை செய்வோம். யாரும் யாருடைய எழுத்து நடையிலோ, விஷயங்களிலோ தலையிடுவதில்லை. But basic understanding, அடிப்படைப் புரிதல் நிச்சயம் உண்டு. இப்போ, பொதுவா வீடுகள்ல, அல்லது குடும்பங்கள்ல, நாம எழுதணும், வெளியே அதுக்காக பயணம் பண்ணனும்னு வரும்போது, எவ்வளவு தூரம் பொதுவா குடும்பத்துல ஒத்துக்குவாங்கன்னு தெரியாது. அந்த மாதிரி எழுதுறதுக்காக நேரம் கொடுக்குறது, பயணம் போறதுன்னு, நா ஒரு எழுத்தாளராவே வாழறதுக்கு அப்படியே இன்னொரு எழுத்தாளரோடு இருக்கும் போது, ரொம்ப இலகுவா இருக்கு.

கே.     எழுதும் போது நிறைய ஆய்வுகள் மேற்கொண்டிருப்பீர்கள். இன்று, தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திலேயே பணியாற்றுவதை பற்றிய உங்கள் உணர்வு?

ப.      என்னுடைய ‘நீரதிகாரம்’ தொடர் எழுதுறதுக்காகத் தான் நான் ஆவணக்காப்பகத்தைத் தேடி வந்தேன். அதுக்கு முன்னாடியும் வந்திருக்கேன், ஒண்ணு, ரெண்டு ஆவணங்கள் பார்த்து, எழுதிட்டுப் போயிருக்கேன். இது பெரிய treasure (பொக்கிஷம்). ஆசியாவிலேயே பெரிய காப்பகம். ஏறத்தாழ 40 கோடி பக்கங்கள் கொண்ட பல ஆவணங்கள் இங்கே புதையல் மாதிரி இருக்கு.

நமக்குத் தேவையாதுனு மட்டும் பார்க்காம, நிறைய ஆய்வு பணிக்காக வர்றவங்களுக்கு உபயோகமா இருக்கணும். முன் இருந்த commissioner  (ஆணையர்)உம் சரி, இப்போ இருக்கிற அதிகாரிகளும் சரி, இங்க உள்ள ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்யறதுக்கான முயற்சிகள பண்ணிகிட்டிருக்கங்க. ஏன்னா, அது மட்டுமே ஒரு eternal preservation ஆ (காலத்திற்கும் நிலைத்த தன்மை கொண்டதாக) இருக்கும்.

என்னோட தனிப்பட்ட விதத்துல பார்க்கும் போது, இங்க இருக்குற காலங்கள், இந்த பழமையான கட்டடதத்தைப்  பார்க்குறது, மாலை நேரங்கள்ல நடந்து போகும்போது ரொம்ப பெருமிதமான உணர்வு வரும். 500 வருட ஆவணங்கள்… வரலாறு… தனக்குள்ள வச்சுருக்குற இடத்துல, நான் இருக்கேன். எவ்வளவு பெரிய stalwarts (வல்லவர்கள்)  இதுக்குள்ள நடந்து போயிருக்காங்க. எத்தனை பெரிய மனிதர்கள் இங்கே வேலை பார்த்திருப்பாங்க! எத்தனைக் கனவுகளோட பிரிட்டீஷ் இதை உருவாக்கி இருக்குனு நினைக்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கே.     ஒரு பெண் எழுத்தாளராய், நீங்கள் சந்தித்த  இன்னல்கள் ( எழுத்தாளர் சமூகத்திலும், சமுதாயத்திலும்) அதை தாங்கள் எதிர்கொண்டு முன்னேறியதை பற்றி ?

ப.       பெரிய இன்னல்கள்னு எதுவும் இல்ல.

கே.    கேள்விகள் எதுவும் வரவில்லையா?

ப.     கேள்விகள் வரத்தான் செய்யும். கேள்விகளை எழுப்பாத கலை, இலக்கிய செயல்பாடு எதுவும் சரியில்லை என்று அர்த்தம். சமூகத்துல கேள்விகள் உருவாகுது, எதிர் விமரசனம் வருதுன்னா தான், நாம சரியான பாதையில போய்கிட்டிருக்கோம்னு அர்த்தம். ஆனா, இது எதுவுமே என் பயணத்தைத் தடை பண்ணாது, நிறுத்தாது. It is a part of my life.

கே.     தங்களின் எழுத்திற்கான ஆதாரப்புள்ளியாக எதை நினைக்கிறீர்கள்?

ப.      அன்பு தான். என்னுடைய எல்லா எழுத்துக்குமே மையமா இருக்குறது அன்பு – Universal love.  மனுஷங்க மேலே உள்ள அன்பு, நேசித்தலை மட்டும் தான் நான் தொடர்ந்து சொல்வேன். ஒரு போருக்குப் பின்னாடி, இல்ல சமூகத்துடைய பல பிரச்சனைகளுக்குப் பின்னாடி, மனிதம் உயிர்த்து எழுந்து வருதுன்னா, அதுக்கு பின்புலம் அன்பு மட்டும் தான். ஆக, ஏதோ ஒரு வகைல, அன்பு தான் என் எல்லா எழுத்துக்களிலும் சொல்வேன். முக்கியமா, கவிதைகள்ல.

கே.    நீரதிகாரம் எழுத உங்களை உந்தித்தள்ளியது எது?

ப.      ஆரம்பத்துல ரொம்ப சுவாரஸ்யமால்லாம் எனக்குத் தோணவே இல்ல. என்னோட நண்பர் திரு. இராஜேந்திரன் IAS அவர்கள் ஒரு சினிமா படத்திற்காக script (திரைகதை) பண்ணியிருந்தாரு. அப்போதான், இப்படி ஒரு விஷயம் இருக்கு, content இருக்குன்னே தெரிஞ்சுது. பின், விகடன்ல ஒரு வாய்ப்பு வந்தபோது, அது தானாவே இழுத்துடுச்சு.

கதை நடப்பது தென் மாவட்டம், நான் வட மாவட்டம். அந்த ஊர் வாழ்வியலோட எனக்கு பெரிய உறவு  கிடையாது. ஆனா, ஒரு எழுத்தாளர் எந்த வாழ்வியலோடயும் தன்னை அடையாளப்படுத்திக்க முடியும். ஆங்கிலேயர் வாழ்க்கை முறையை கூட, நான், அதுல வாழ்ந்து பார்த்த உணர்வோட தான் எழுதி இருப்பேன். ஒரு எழுத்தாளருக்கு இது சாத்தியமான விஷயம் தான்.

இப்படியாக, ‘நீரதிகாரம்’ எழுதத் தொடங்கினேன். ஆனா, இவ்வளவு நீண்ட கால பயணமா இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. சில நிகழ்வுகளுக்குக் காரண காரியம் சொல்லமுடியாதபடி, எப்படி நடந்துச்சுனு நமக்கே தெரியாது. நிகழ்ந்திருக்கு… ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கே.    இந்த கதைக்கான ஆய்வுகளை மேற்கொண்டதில்உங்களுக்கென  இருக்கும் பசுமையான சில நினைவுகளைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்?

ப.       நிறைய மனிதர்களை சந்திக்க முடிஞ்சது. இந்த கதை வந்து, ஒரு நாலு, ஐந்து தலைமுறைக்கு முன்னாடி, 1100கள்ல  நடக்குது. 135 வருஷங்கள் கடந்து வந்துட்டோம். இப்போ, ஐந்தாவது தலைமுறைல இருக்கோம். அந்த வம்சாவழியினரைக் கண்டு பிடிச்சது ரொம்ப சந்தோஷம். குறிப்பா இதில் வரும் நிவான் கேரக்டர் ஒருத்தர். ராமையங்கார் னு பேரு. அவர் மெட்ராஸ் பிரசிடென்ஸியைச் சேர்ந்தவரு. அவர் வேலை பார்த்தது, திருவாங்கூர்ல. அவருடைய  வம்சாவழியைப்  பத்தி ஆய்வு பண்ணும் போது, அவருடைய மகள் வழிப் பேரனை என்னால கண்டுபிடிக்க முடிஞ்சுது. அவரோட நான் பேசினேன்.

இதுல ரொம்ப அழகான ஒரு விஷயம் என்னனா, கதைக்குள்ள சில கேரக்டர்கள நாம திட்டமிடமாட்டோம். கதையோட ஓட்டத்துல எழுதும்போது, தானா அமையும். அப்படி இருக்கும் போது, கதைல, ராமையா வீட்ல, பென்னிகுவிக்கோட அவர் பேசிகிட்டு இருப்பார். அப்போ, ஒரு குட்டிப் பையன் ஓடி வருவான். அவருடைய பேரன், பேரு பத்மநாபன்னு சொல்லி, ராமையா அறிமுகப்படுத்துவார். அந்த பேர் வெச்சதுக்கு கூட எனக்குக் காரணம்  தெரியாது. என்ன யூகத்துல வெச்சேன்னா, ஐயங்கார் குடும்பம். திருவணந்தபுரத்துல வேலை செய்றாரு. அனந்தன் அங்க இருக்கான். அந்த சுவாமியோட பெயர் பத்மநாபன். இந்த பேரனுக்கு அந்த பேர் வெச்சிக்கலாம்னு நெனச்சு, பத்மநாபன்னு பெயர் வெச்சேன்.

இந்த கதை வந்த கொஞ்ச நாள்ல, அந்த குடும்பத்துல இருந்து, எனக்கு மெஸேஜ் போட்டாங்க. ராமையங்காருக்கு நாலு மகள்கள். அதுல, மூன்றாவது மகள் பெயர் கமலா. அவங்களுடைய மூத்த மகன் பேரு பத்மநாபன் னு சொல்லி போட்டிருந்தாங்க. இத எப்படி எடுத்துகறதுனு தெரியல. அந்த குறுஞ்செய்திய வாசிச்சு, ஒரு அரை மணி நேரம், எனக்கு ஒண்ணுமேப் புரியல. எப்படி வந்து, ஒரு காலத்திக்குப் பின்னாடி போய்,  ஒரு கதையை நாம எழுதினா கூட, அதுல நடந்த உண்மைகள் நடந்தது, நடந்தமாறி உணர்வதற்கான சில தருணங்கள் நமக்குக் கிடைக்குது. அந்த தருணம், உண்மையிலேயே எனக்கு ரொம்ப முக்கியமாப் பட்டுது.

அதே மாதிரி, பூஞ்சார சமஸ்தானம். மதுரை பாண்டிய வம்சாவளியில இருந்து புறப்பட்டு போய், இன்னைக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையில அவங்க இருக்காங்க. நாம, சேர, சோழ, பாண்டிய வம்சாவழியினர்னு யாரையுமே பார்க்கல. நிறைய பேர் ‘நாங்க சோழர்களோட வம்சத்துல வந்தவங்க’னு சொல்றாங்க. ஆனா, ஒரு அரச குடும்பமா, திருவாங்கூர் சமஸ்தானத்தோட chieftains ஆ இருக்கற, பூஞ்சார சமஸ்தானத்துடைய அந்த வேர,  நான் கண்டுபுடுச்சேன். 

மதுரைல இருந்து போன மன்னான்களை (ஆதிவாசிகள்) பார்த்தேன். இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் இந்த தொடருக்குள்ள  இருக்கு. குறிப்பா, அந்த மனிதர்களுடையத் தொடர்ச்சியைப் பார்க்க முடிஞ்சது. அதைத் தான் ரொம்ப முக்கியமாப் பார்க்குரேன்.

கே.    வெளியீட்டுத் துறையில் தற்போதைய நிலை என்ன?

ப.     நாங்க பதிப்பகம் தொடங்கினது, ஏதோ விற்பனைக்கான இடமா அதைத் தொடங்கல. புஸ்தகம் போடணும், விற்கணும்னு,  வணிகமா நாங்க அதைப் பார்க்கல. எங்களுக்குப் பிடித்த தமிழ் இலக்கியத்தினுடைய  மற்றும் தமிழ் வரலாற்றினுடைய அரிதான புத்தகங்கள் முயற்சி பண்ணி, கொண்டு வரணும்ங்கரது தான்  எங்களுடைய நோக்கமா இருந்தது. அதுக்கு தான் நாங்க publication house ஆரம்பிச்சோம். அதுல, எங்களுக்குப் பிடித்த மாதிரி நிறைய அரிதான புத்தகங்களக் கோண்டு வந்தருக்கோம்.

ராதிகா சாந்தவனம்   (Radhika Santawanam)னு சொல்லி, 18ம் நூற்றாண்டு தஞ்சாவூர் அரசர், பிரதாப சிங்கனிடம் இருந்த தேவதாசி எழுதிய ஒரு புத்தகம். பெங்களூர் நாகரத்தினம்மாள் அதை பதிப்பிச்சு, பின்  தடை செய்யப்பட்டது. அந்த புத்தகத்தை தெலுங்கிலிருந்து முதல் முறையா,  நாங்க தமிழ்ல மொழி பெயர்த்திருக்கோம். இதுவரை 100 காபி கூட வித்திருக்காது (சிரித்தார்). ஆனா, அதுக்குரிய தடையயைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு, அதை மொழிபெயர்த்து வாங்குறதுக்கு, ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் செலவு பண்ணியிருக்கேன். செலவு பண்ணி, முதலீடு பண்ணி, எத்தனைப் பிரதிகள் வித்திருக்குனு பார்த்தா, 100 கூட இல்ல. ஆனால், நாங்க அதைப் பொருட் படுத்துறது இல்ல. எங்க திருப்திக்கான ஒரு வேலையா, தமிழ் இலக்கிய வரலாற்றிற்கான contribution ஆ தான் பார்த்தோம்.

பொதுவா, பதிப்பகச் சூழல் நல்லா இருக்கு. நிறைய பேர் நல்ல புத்தகங்கள் போடுறாங்க. நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்யறாங்க. அதற்கான வரவேற்பு, கேரளாவை ஒப்பிடும் போதோ, பிற உலக நாடுகளைப் பார்க்கும்  போது, எண்ணிக்கை அளவிலான வெற்றியை நம்மால் கொண்டு வர முடியல. ஆனா, பதிப்பாளர்களுக்கானப் பங்கை, அவங்க செஞ்சிகிட்டு வர்ராங்க.

தமிழ் சூழல்ல பார்த்தீங்கன்னா, எழுத்தாளர் தான் இப்போ பதிப்பாளர்களாவே இருக்காங்க. இது, ஒரு வகையில, ஆரோக்கியமான சூழல் இல்ல. ஏன்னா, படைப்புக்கு மட்டுமே இருக்கக் கூடிய எழுத்தாளர்கள், பதிப்புத் துறைக்கு வர்றதுங்கறது, அவங்க எழுத்தாற்றலை மடைமாற்றுற ஒரு விஷயம் தான். வணிகத்தைப் பற்றியோ, வர்த்தகத்தைப் பற்றியோ… தன்னோட புத்தகத்தை விற்கணும்னு ஒரு எழுத்தாளனை நினைக்க வெக்கிறது, இந்த சமூகத்துடைய அவலம்.  அது தமிழ் சூழல்ல நடந்துட்டே தான் இருக்கு. ஆனால், குறைந்த பட்சம், நாமாவது முயற்சி செய்யணும் என்ற எண்ணம் தான் எழுத்தாளர்கள்கிட்ட வந்திருக்கு. தமிழ்ல கணக்கெடுத்தோம்னா, பெரும்பாலான எழுத்தாளர்கள், பதிப்பளர்களா மாறிட்டேதான் இருக்காங்க.  

கே.    இன்றையச் சூழலில், (competitive world) தங்கள் படைப்புகளை வெளியிட விரும்பும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு  நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?

ப.     ஒரு எழுத்தாளர் எழுத ஆரம்பிக்கும் போதே, அதை கண்டுபிடிச்சு வந்துருவாங்க. யாருடைய ஆலோசனையும் மனசுல இருக்காது. எழுத்தே வழியைக் காட்டும். எழுதி முடிக்கும் போதே, அதுக்கான வழியும் அந்த எழுத்துக்குள்ளேயே வரும்.

கே.      ஓர் ஆசிரியராக,எழுத்தாளராக, இந்த சமூகத்தின் மீது உங்களின் பார்வை என்ன?

ப.         நிறைய சவால்கள் இருக்கு. எல்லா காலகட்டதிலும் , கால மாற்றத்தோட இருக்கும் போது, நாம எதிர்கொள்வது சவால்கள் தான். ஒரு எழுத்தாளரா, அதாவது, நமக்கு மட்டும் இல்ல, அந்தந்த காலகட்டத்து எழுத்தாளர்களான புதுமைப்பித்தனுக்கும் சவால்கள் இருந்திருக்கு, பாரதிக்கும் இருந்திருக்கு. எல்லா காலத்துலயும், அவங்க சமூகத்தோட முரண் படும்போது தான் எழுத்து வரும். சமூகத்துல என்னெல்லாம் சிக்கல்கள் இருக்கு, பிரச்சனைகள் இருக்கு, என்பதெல்லாம் எழுத்தாளருடைய கண்ணுக்குத் தான் நல்லாத் தெரியும்.

எதை எழுதணும், உளச்சிக்கலுக்குரிய இடம் எதுன்னு, அவங்களால தான் பார்த்து எழுத முடியும். அப்போ, எழுத்தாளர்கள் எப்பவுமே, சமூகத்தோட உடன்பட முடியாத இடத்துல தான் இருப்பாங்க. ஒரு main stream ஓட அவங்க ஓடிகிட்டே இருக்க மாட்டாங்க. இன்று எல்லா எழுத்தாளர்களும் நடக்குற நிகழ்வுகள்ல இருந்து, விலகி நின்னு பார்க்கும்போது தான், இந்த சமூகத்தைப் புரிஞ்சிக்க முடியும்.

கே.       சமகால பெண் சமூகம் எப்படி இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?அவர்களுக்கு தாங்கள் அளிக்க விரும்பும் வார்த்தைகள்?

ப.      பெண் சமூகம் நிறைய வளர்ச்சி அடைஞ்சிருக்கு. ஆனா, இன்னும் வரணும். நாம பார்க்குறது, ஒரு ஒளிமயமான, focus செய்யப்படுற இடங்கள் தான். இன்னும் தெரியாத இடங்கள்ல, நிறைய பெண்கள், வழி காட்ட ஆட்கள் இல்லாமல் இருக்காங்க. சரியான பாதையை புரிஞ்சிக்கக் கூடிய கல்வியோ, பொருளாதாரச் சூழலோ இல்லாத பெண்கள் இன்னும் எங்கெங்கோ இருட்டுக்குள்ள இருக்காங்க. அவங்க எல்லாருக்குமான உலகமா, நம்ம உலகம் மாறனும்ணு.

கே.     உங்களைப் பாதித்த/ சிந்தனையைத் தூண்டியப் புத்தகம் எது?

ப.       ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு புத்தகம் பிடிக்கும். ஆய்வு சார்ந்து, மன நிலை சார்ந்து மாறிகிட்டே இருக்கும். அந்தந்த நேரத்திற்கான ஒளின்னு ஒண்ணு இருக்கு.  ‘நீரதிகாரம்’ எழுதும்போது, பிரிட்டீஷ் ஆவணங்களும், அது தொடர்பான புத்தகங்களும் என் தேர்வா இருந்தது

ஆனா, வாழ்நாளுக்குமான புத்தகங்கள், தமிழ் புனைவுல எப்பவுமே, தீ. ஜா. ஏன்னா, நாம சோர்ந்து போறதுங்கறது, அறிவு சோர்வா இருக்காது.உணர்வு பூர்வமான சோர்வாதான் இருக்கும். மன ரீதியா சோர்ந்து போவோம். அப்படியாக சோர்ந்து போகும் போது, தீ. ஜா. கிட்ட நான் அடைக்கலம் ஆவேன். தீ.ஜா வுடைய ஒரு பக்கம், ஒரு நாவல், ஒரு கதைன்னு, ஏதோ ஒன்று படிக்கப் பிடிக்கும்.

அதேபோல, வண்ணநிலவனுடைய எழுத்துக்கள் எல்லாமே பிடிக்கும். மத்தபடி, நிறைய எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் எல்லாமே நமக்கு வழிகாட்டிகளா தான் இருக்கு.

கே.     மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் புத்தகம் எது?

ப.       இப்பொ சமீபத்தில், ஆனந்தரங்கன் பிள்ளையுடையது. தமிழில், முதல் உரை நடை. அந்த உரைநடை எவ்வளவு செறிவா, சுவாரசியமா, எத்தனைக் கோணங்கள் கொண்டதா இருக்குனு புரிஞ்சுக்க முடியுது. ஆக, ஆனந்தரங்கன் பிள்ளையினுடைய  ‘நாட் குறிப்புகள்’.

கே.     எந்த எழுத்தாளருடைய writing style உங்களை அதிகம் கவர்ந்தது?

ப.     வண்ணநிலவன் அவர்களுடைய எழுத்து.  ரொம்ப சுருக்கமா இருக்கும். நிறைய வளவளன்னு எழுத மாட்டார். அவருடைய ‘ரெயினீஸ் ஐயர் தெரு’, 100 பக்கம் கொண்ட நாவல் தான். ஆனா, அதுல ஒரு வார்த்தை கூட நாம தனியா எடுத்துட முடியாது. தனியா எடுத்துட்டா, அந்த மொத்த textம்மே இல்லாத மாறி ஆயிடும். அப்படியாக, செதுக்கி வெச்ச மாதிரியான எழுத்து, வண்ணநிலவனுடையது.

கே.     நீங்கள் எழுத நினைக்கும் ஒரு விஷயம், இந்த ஒரு சம்பவத்தை பற்றி அல்லது  நடைமுறையைப் பற்றி என் எழுத்தின் மூலமா வெளிப்படுத்தணும்னு நினைக்கிற ஒன்று?

ப.      (சிறு யோசனைக்குப் பிறகு) நான் என்னோட பாலியகால வாழ்க்கையை எழுதணும்னு, ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேன். அதை ‘சாலாம்புரி’ நாவலா எழுதிட்டேன். எழுதாம தள்ளிப் போனது எதுவும் இல்ல. ஆனா எழுதுவதற்கான தேர்வுகள் நிறைய இருக்கு. ‘சாலாம்புரி’தான் கொஞ்சம் தாமதமாச்சு. ஏறக்குறைய 10வருட கால தாமதம். என் முதல் நாவல் கங்காபுரத்துக்குப் பிறகு எழுத முடிங்சுது.

கே.       உங்களுடைய அடுத்த கதைக் களம்?

ப.       இரண்டு  மூன்று இருக்கு. அதில் ஒன்று, நேதாஜியினுடைய, நாடு கடந்நு சென்று, இந்திய தேசிய ராணுவத்தை அமைக்கிற அந்த பயணத்தை எழுதணும்னு இருக்கேன்.

கே.      Women Empowerment, பெண்கள் சுய அதிகாரம் பற்றிய உங்கள் சிந்தனை?

 ப.        இன்னைக்கி அது ஒரு தனி சப்ஜெக்ட் மாதிரி பேசுறதுல, எனக்கு உடன்பாடில்ல. தன்னைப் பற்றிய விழப்புணர்வு இருக்குற எல்லா பெண்களுமே, தன்னை சக்தி கொண்ட ஆளா மாத்திப்பாங்க. கிராமத்துல இருக்குற பாட்டி, அம்மா, பாட்டியோட அம்மா, அவங்களுக்கெல்லாம் படிப்பறிவோ, உலக ஞானமோ இருக்காது. ஆனா, அவங்களுக்குத் தேவையான நேரத்துல அவங்க ரொம்ப பவர்ஃபுல்லா (powerful) இருப்பாங்க.

ஒரு சமுதாயத்துலப் போராடுவதை  விட, குடும்பத்துக்குள்ள போராடுவது தான் ரொம்ப கஷ்டம். சமுதாயத்துல, யாரோ ஒரு தெரியாத நபரோட போராடப் போறோம். ஆனா, தெரிஞ்சவங்களோடப்  போராடத்  தான் பலம் வேணும், மனோ திடம் வேணும். இப்படியாக, நம் குடும்பத்தில் இருக்குற மூதாதையர்களைப் பார்த்து, அவங்க கதைகளைக் கேட்டாலே,  அதுவே நமக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.  ஒவ்வொரு பெண்ணும் வெளியில போய் உதாரணத்தை தேட வேண்டியதே கிடையாது. அவங்க வீட்டுக் கதைகளக் கேட்டாலேப் போதும்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *