
தேவை கொஞ்சம் புரிதல்!
பிள்ளை வளர்ப்பு பற்றி ஒரு சின்ன முன்னுரையுடன் கட்டுரையை ஆரம்பிக்கலாமா?
இன்று எந்தவித கடினமான ,குழப்பமான, அழுத்தமான ப்ராஜெக்ட்டை விட பெற்றோரை படுத்துவது இந்தப் பிள்ளை வளர்ப்பு தான் .
எந்த முறையில் வளர்க்க வேண்டும்? நம்ம பழைய ஒழுக்கமான பழக்கத்திலா ? அல்லது நவீன முறையிலா? இரண்டும் அல்லாமல் நம் சொந்த எண்ணப்படி வளர்க்கலாமா? என பெற்றோர்கள் திண்டாடுவதை தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம்.
எவ்வாறு இதை கொண்டு போனால் ஓரளவு மன அழுத்தம் இன்றி வளர்க்கலாம் என்ற கேள்விக்கு பதிலாக இந்த கட்டுரை அமையும் என்ன நம்புகிறேன்!
பெரியவர்கள் குறிப்பிடும் அந்த கால வளர்ப்பு, மற்றும் இந்த கால வளர்ப்பு என்று அலசினாலும்,பாசம் பண்பு, சமூக நடத்தை போன்ற சில விஷயங்கள் பொதுவானது தான்.
வருமானத்தின் அளவு எப்போது அதிகமானதோ அப்போதே பிள்ளைகளின்
மனதும் உடம்பும் குணமும் சீர்கெட ஆரம்பித்து விட்டது எனலாம்.
எப்படி என்று பார்க்கலாம்!
1. எனக்கு தெரிந்த ஒரு பள்ளி படிக்கும் பெண்ணின் பாக்கெட் மணி ஆயிரம் ரூபாய். ஒரு
நடுத்தர குடும்பத்தின் ஒரு வாரத்திற்கான செலவுக்கான பணம் அது அல்லவா அந்த தொகை ?அதைக் கொடுக்கும் பெற்றோரோ போன தலைமுறையை சேர்ந்தவர். எனவே அங்கே ஆரம்பிக்கிறது தவறு. மெத்த படித்த பெற்றோரே இவ்வாறான தேவைக்கு அதிகமான பணம் கொடுக்கும் பழக்கத்தின் மூலம் பிள்ளைகளின் திடீர் நடத்தை மாற்றத்திற்கு( sudden behavioral changes) பிள்ளையார் சுழி போடுகிறார்கள். எனவே உங்கள் பணக்காரத்தனத்தை இவ்வாறு காட்டி வெற்றியடைவதாக நினைத்துக் கொண்டு வளர்ப்பில் தோல்வியடையாதீர்கள்.
2. பிள்ளைகள் முதல் உலகம் நீங்கள். அவர்கள் உங்களின் பிம்பம் என்பதை நினைவில் வைத்து பொறுப்புடன் வளர்த்தாலே போதுமானது.
3. அதிகமான கற்பித்தலும்(Teaching) வேண்டாம். அதிகமான அலட்சியமும்(Flexibility) வேண்டாம்.
4. பிள்ளைகள் உங்கள் மூலமாக பிறந்தவர்கள் மட்டுமே உங்களுக்காக பிறந்தவர்கள் அல்ல.
5. நீங்கள் அனுபவிக்காததை அவர்கள் அனுபவிக்கட்டும் என்று நினைப்பது தவறில்லை. அதில் எல்லை (limitations)அவசியம்.
6. உங்களால் சாதிக்க முடியாததை சாதிக்க வந்த உங்களின் ரோபோ அல்லது கிளோனிங் வடிவம் அல்ல அவர்கள். இதை கத்துக்கோ. அந்த கிளாசுக்கு போ என்று
அவர்களை 12 மணி நேரமும் பிஸியாக வைத்துக் கொள்ள எந்த புத்தகத்திலும் சட்டத்திலும் எழுதியிருக்கவில்லை- இது பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
எங்கே தவறு?
நான் விஜயா ஹெல்த் சென்டரில்VHC, (வடபழனி- சென்னை) பணிபுரிந்த போது எனது விசிட்டிங் கார்டில்10-18 வயது பிள்ளைகளுக்கான பேரண்டிங் கவுன்சிலர் என்று குறிப்பிட்டிருப்பேன். ஆனால் 4 -7 வயது குழந்தைகளை கூட அதீத கோபம் , அடம், பொருட்களை தூக்கி எறிவது (Temper tantrums) போன்ற புகார்களுடன் கூட்டி வருவார்கள்.
அயல்நாட்டில் வசிக்கும் ஒரு இளம் பெண்மணி தனது மூன்றரை வயதே ஆன குழந்தை மேற்கண்ட குணங்களை அடிக்கடி காட்டுவதாக கூறினார். நான் பொதுவாகவே தனித்தனியாக பேசும் வழக்கம் .ஆதலால் தனியாக குழந்தையிடம் பேச்சு கொடுத்தேன். அது மழலையாக இருந்தாலும் ஓரளவு தெளிவாகவே சொன்னது என்னவென்றால், அம்மா அப்பா எப்போதும் சண்டை போடுபவர்கள். பொருட்களை தூக்கி எறிவார்கள் .அம்மா நிறைய கோப( கெட்ட) வார்த்தை பேசுவார்கள். அப்படியா? என்று கேட்டதற்கு அந்த பெண்மணி ஆம் என்று ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து என்னிடம் வந்த பெரும்பாலான எல்லா கவுன்சிலிங்கிலும் குறைகள் பிள்ளைகளிடம் கண்டிப்பாக குறைவாகவே இருந்தது கவுன்சிலிங் வருவது என்னவோ பிள்ளைகளுக்காக.. தவறு என்னவோ பெற்றோர்களிடம் ..என்ன கொடுமை சரவணன்! என்று தோன்றும்.
எது சரியான அணுகுமுறை?
சாதிக்கும் பிள்ளைகளை உருவாக்க நினைக்கும் பெற்றோர் சரியான மனநிலையில் பிள்ளைகளை வளர்ப்பது மிக அவசியமாகிறது.
தெளிவில்லாத எந்த வளர்ப்பும் சரியாக அமைய வாய்ப்பில்லை.
பரபரவென்று வளர்ப்பது ஆரோக்கியமானதா என்றால் இல்லை. நிதானமான அணுகுமுறை நல்லது!
அடுத்து பெற்றோர் தவிர்க்க வேண்டிய விஷயம் எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பு இருந்தால் அழுத்தம் வரும் அழுத்தம் இருந்தால் படபடப்பு வரும் விளைவு? படபடப்புடன் பிள்ளைகளை அணுகும் போது அதிகமாக மதிப்பெண்களும் வாங்க வாய்ப்புகள் குறைவு.. சரியான ஆளுமைத்திறன் குணாதிசயத்துடன் வளரவும் வாய்ப்புகள் குறைவு. எனவே பெற்றோரின் கவனம் பிள்ளைகளின் நடத்தை வாழ்க்கைத் திறன்கள் ஆளுமைத்திறன் குணாதிசயம் இவற்றில் இருக்க வேண்டுமே தவிர படி, படி, படி .. சாதிச்சிடு.. சாதிச்சிடு என்பதில் மட்டுமே இருக்கக் கூடாது.
உறவுகளின் மேன்மை:
இன்று எத்தனை பிள்ளைகள் முதியோர்களை, உறவினர்களை கண்டால் நட்பாக சிரித்து ஒரு தலையசைப்புடன் ஹலோ நல்லா இருக்கீங்களா? என்று கேட்கின்றனர்? நேற்று ஒரு ரீல்ஸ் பார்த்தேன். அதுல அந்த அம்மா16 அல்லது 17 வயது பெண்ணுக்கு சொல்லி தராங்க.. அத்தை மாமா வந்திருக்காங்க. எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ன்னு கேளு.
அந்தப் பெண்ணும் எப்படி நல்லா இருக்கீங்க என்று கேட்டு வைக்கிறது! இது வெளிப்பார்வைக்கு காமெடியாக தெரிந்தாலும் இதுதான் இன்றைய நிலை! உறவுகளின் மேன்மையை பிள்ளைகளுக்கு அவ்வப்போது கற்றுத் தருதல் அவசியம்.
நம்பிக்கை வையுங்கள்:
நான் ஏற்கனவே சொன்னது போல அவர்கள் ஒரு தனி ஆளுமை. அவர்களுக்கான சுதந்திரத்தையும் கட்டாயமாக தந்தாக வேண்டும். என்ன படிப்பில் சேரலாம்? எந்த காலேஜில் சேரலாம்? எதில் வேலை வாய்ப்பு அதிகம்? போன்றவற்றில் கூட பெற்றோர்கள் தலையீடு அதிகம் இல்லாமல் கொள்வது இன்னும் நல்லது என்று இங்கு அமெரிக்காவில் பதின் பருவத்தினர் தங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கும் முறையை பார்த்து தெரிந்து கொண்டேன். படிப்பை தேர்ந்தெடுத்து விட்டு ,அப்ளிகேஷன் எல்லாம் நிறைவு பண்ணிவிட்டு கையெழுத்திற்கு மட்டும்தான் பெற்றோரிடம் வருகிறார்கள். இது அவர்களின் தைரியத்தை, தன்னம்பிக்கையை முயற்சியை வளர்க்க உதவும்.
நம்மிடம் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் பிள்ளைகள் பின்னாடியே நிழல் போல தொடர்வது நீங்கள் எல்.கே.ஜி இல் பார்த்த பிள்ளை வேறு.12 வருடம் படித்துவிட்டு, (வெளி உலகத்தை ஓரளவு பார்த்துவிட்டு) வெளியே வரும் பிள்ளை வேறு.
நானும் பெற்றோர்களை பற்றி குறை சொல்லக்கூடாது என்று நினைத்து தான் இந்த கட்டுரையை ஆரம்பித்தேன். பிள்ளை வளர்ப்பில் இங்கு நிறைய குறைகள் தென்படுகிறதே
என்ன செய்ய ?
அடுத்து ஒரு சில Do’s and Don’ts பார்த்து விடுவோம்.
Do’s :
* குழந்தைக்கு இரண்டு மூன்று வயதிலேயே கண்டிப்பாக தனியாக சாப்பிட பழக்க வேண்டும்.
அரைகுறையாக உள்ளே போனாலும் பரவாயில்லை சோறு ஊட்டுகிறேன் பேர்வழி என்று அம்மாக்கள் இதுவரை சந்தித்த மன அழுத்தம், இனிமேலாவது குறைந்தே ஆக வேண்டும்
* இரவு பிள்ளைகளை தூங்க வைக்கும் போது உங்கள் கையில் மொபைல் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது ஒரு கதை சொல்லி தூங்க வைக்க வேண்டும் (அது உங்களின் சிறு வயது அல்லது தற்போதைய அனுபவ கதையாக கூட இருக்கலாம்)
கதை பிள்ளைகளின் மனதில் மேஜிக் செய்யும் திறன் கொண்டது.
* ஆண் -பெண் குழந்தைகளை எதுவுமே சொல்லாமல் வளத்தாலே போதுமானது. உதாரணமாக நீ ஆண் பிள்ளை நீ கோபப்படலாம் வீரமானவன் . பெண் பிள்ளையை நீ அடங்கி தான் போக வேண்டும்.. இப்படி எல்லாம் ஒரு தயாரிப்பும் வேண்டாம்.
வேண்டுமானால் இது செய்யுங்கள். நான் பிள்ளைகளை பெண் பிள்ளைகளை மதிக்கவும் பாதுகாக்கவும், பெண் பிள்ளைகளை தைரியத்தை வளர்த்துக் கொள்ளவும் சொல்லலாம்.
* ஒரு மூன்று வயது குழந்தைக்கு தம்பி அல்லது தங்கை பாப்பா பிறந்த ஒரே இரவில் அவர்களை அக்கா / அண்ணா வாக மாறிக்கொள்ள சொல்ல வேண்டாம். இது இளம் பெற்றோர் செய்யும் ஆக சிறந்த அராஜகம்!
* 3-10 வயது பிள்ளைகளிடம்NO மற்றும் STOP இரண்டு வார்த்தைகளையும் கண்டிப்பாக பயன்படுத்தாதீர்கள். பலன் இருக்காது. மாறாக இன்னும் அதிகமாக வேண்டாம் என்பதை செய்வார்கள். மாற்று வார்த்தைகள் அல்லது விளைவுகள் இவற்றை கொண்டு புரிய வைக்கவும்.
* இதை செய் என்பதை விட உதாரணமாக உன்னுடைய பொருட்களை நீயே அடுக்கி வைத்து விடு என்பதை விட அதை நீ செய்தால் உனக்கு ஒரு கிப்ட் தருவேன் என்று சொல்லும்போது உற்சாகத்துடன் அதை செய்வார்கள். இதை Rewarding என்று சொல்வார்கள்.
* சீக்கிரம் தூங்க வைத்து பழக்கவும்.
* அவர்கள் செய்யும் எந்த ஒரு சிறிய விஷயத்துக்கும் பாராட்டி பேசும்போது குறும்புத்தனத்தை அதிகமாக்காமல் குறைக்கலாம்.
மேற்கண்டவை சிறு பிள்ளைகளுக்கு
இனி பதின் பருவத்தினருக்கான Do’s ஐ பார்ப்போம்.
1. பிள்ளைகள் மேல் நம்பிக்கை வைக்கவும்.
2. நான் உன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் என்று காட்டி கொள்ளாமல் நட்புணர்வுடன் கண்காணிக்கவும்.
3. அளவான உணவு அளவான அறிவுரை
சமூக நடத்தை
உடல் நலத்தின் முக்கியத்துவம், இவற்றை புரிய வைத்தாலே போதும்
4. அமைதியான, முடிந்தால் கலகலப்பான குடும்ப சூழ்நிலை முக்கியம்.
Don’ts
*ஒப்பிடுதல் (comparison)எதிர்பார்ப்பு(Expectations) மட்டம் தட்டுதல்(Degrading) கண்டிப்பாக வேண்டாம்.
* அது உனக்கு வேண்டாம்
உன்னால் முடியாது என அவர்களது முயற்சிகளை தடுக்க வேண்டாம்.
* பிள்ளைகளின் தனித்துவத்தில் பெற்றோர் அதிகம் தலையிடுவது அவர்களது தனித்தன்மையை , திறமையை உணர விடாமல் செய்துவிடும்.
* எந்த உறவுக்குமே அவர்களுக்கான சுதந்திரம் தேவை. அது பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
பொதுவாக கருத்தில் கொள்ள வேண்டியவை:
*அக்கறை இருக்கலாம் . அதீத அக்கறை, அதீத பற்றுதல், இவை அவர்களுக்கு சலிப்பை உண்டாக்கி விட வாய்ப்பு உண்டு. கூடவே நாளடைவில் இந்த சலிப்பே வெறுப்பாக கோபமாக மாறி உங்களிடம் இடைவெளி ஏற்படும் வரை கொண்டு சென்று விடும்.
இது பல பெற்றோர், இன்று அனுபவப்படும் ஒரு விஷயம்.
பின்னர் கவுன்சிலிங் வரும்போது என் பிள்ளை என்னிடமிருந்து விலகி விட்டது போல தோன்றுகிறது என்ற வருத்தப்பட்டு பலன் இல்லை.
* எனவே பௌண்டரி (Boundary)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்த எல்லைக்கோடுடன்
பிள்ளைகளை நெருங்க வேண்டும்.
*எங்களுக்கு பிறந்து விட்டதாலேயே
நாங்கள் நினைக்கிற படி, நாங்கள் சொல்கிறபடி நீ வளர வேண்டும் . முடிவுகளை நாங்கள் தான் எடுப்போம் என்ற பெற்றோரின் மனப்பாங்கு இவை மாற வேண்டிய காலகட்டம் இது.
*இந்த எளிய விஷயத்தை பெற்றோர் புரிந்து கொண்டாலே பல வீடுகளில் பதின் பருவத்தினரின் பிரச்சினைகள் இருக்காது.
*பிள்ளைகளிடம் நடத்தை மாற்றம் வரும்போது , (உதாரணமாக திடீரென அமைதியாகி விடுவது, காரணமே இல்லாமல் கோபப்படுவது ,வாதம் செய்வது ,பொய் சொல்லுதல், அதிகமாக தனிமையில் இருத்தல்..) பெற்றோர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் உட்கார்ந்து மனம் விட்டு பேச வேண்டும். *எதுவானாலும் என்னிடம் நீ பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை கொடுங்கள்.
இது அவர்களை லேசாக்கும்.
*பிள்ளைகள் ஓரளவு விவரம் தெரியும் அளவு வளர்ந்து விட்டால் அவர்களிடம் வீட்டில் வருமானம் செலவு போன்றவற்றை ஓரளவு அவர்களுக்கு சொல்லலாம் அப்போது அவர்கள் தகுதிக்கு மீறி ஆடம்பர வாழ்க்கைக்கு , ஆடம்பர பொருளுக்கு உங்களிடம்
மல்லுக்கு நிக்க மாட்டார்கள்.
* இதுதான் வீட்டின் வருமானம் செலவு என்ற புரிதலுடன் படிப்பிலும் கவனம் செலுத்துவார்கள். *முன்பெல்லாம் பெற்றோரின் மொபைல் அவ்வப்போது எடுத்து பயன்படுத்துவார்கள். இப்போது பிள்ளைகளே விலை அதிகமான மொபைல்ல தான் உபயோகப்படுத்துகிறார்கள். அதில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள்? எதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்? என்பதை கட்டாயம் கண்காணிக்க வேண்டும் *இன்று சமூகத்தில் நடக்கும் பலவித சிறிய பெரிய குற்றங்களுக்கு மொபைல் போனின் பங்கு பெரியதாக உள்ளது.
*இங்கும் டைம் லிமிட் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் மொபைல் பயன்படுத்த பழகிவிட்டாலே போதும். இன்று பெரும்பாலான பெற்றோர் புலம்புவது.. எந்நேரமும் கேமில் இருக்கிறான் என்பதே.குறிப்பிட்ட நேரம் மொபைல் பயன்படுத்த பழகிவிட்டாலே மேற்கண்ட பிரச்சனையை தவிர்க்கலாம்.
*தேவைக்கு அதிகமாக பெற்றோர் பிள்ளைகளை பாதுகாக்கும் போது(Over protecting) அதுவே அவர்களை உங்களை எல்லாவற்றிற்கும் சார்ந்து இருக்க செய்துவிடும்.
*எவ்வளவுக்கு எவ்வளவு தானாக செயல் படுகிறார்களோ
அவ்வளவு தன்னம்பிக்கையுடன் வளருவார்கள் .
*நான் பார்க்கும் நிறைய பெற்றோர் பிள்ளைகளை மட்டுமே அதிகமாக கண்காணிப்பதில் தொடர்வதில் அக்கறை செலுத்துவதில் தங்களுக்கு வேண்டிய சிறிய சந்தோஷம் தரும் விஷயங்களை கூட செய்து கொள்ளாமல் ஒருவித மன அழுத்தத்தோடையே தங்கள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதை படிக்கும் நிறைய பெற்றோர்களுக்கு இது பொருந்தும். இது தேவையா என்று யோசிக்கவும்.
*அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷமே. இது கணவர் மனைவி பெற்றோர் பிள்ளை
மற்ற உறவுகள் எல்லாருக்குமே பொருந்தும்.Just give their own space they need. அவரவர்களுக்கான இடைவெளி மிக முக்கியம்
ஒரு மனநல ஆலோசகராக பெற்றோர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்ட இந்த கட்டுரையை பெற்றோர் கவனமாக படித்து, தங்கள் நிறை குறைகளை திருத்திக்கொள்ள வேண்டி கொள்கிறேன். நன்றி! வணக்கம்!