பாடதிட்டங்கள் வாழ்க்கைக்குப் பயனுள்ள முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்

தங்கள் காலத்து பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில், சிலாகித்துக் கொள்ளும் சில அற்புத நினைவுகள்?  

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ராமநவமி தினம் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக பானகமும், பருப்பும் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.  வெல்லமும், பருப்பும் வாங்க வகுப்பாசிரியை பணம் கொடுத்துவிட்டு இப்பொருட்களை எந்தக் கடையில் வாங்குவீர்கள் என்று கேட்டார்கள். பிறகு அவர்களே பள்ளிக்கு சிறிய தொலைவிலுள்ள சலாம் ஸ்டோர் என்ற கடையில் வாங்கு என்று சொல்லி அங்குதான் பொருட்கள் தரமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். அதிலிருந்து எனக்குத் தெளிவாக ஒரு விஷயம் புரிந்தது. நாம் கடையில் வாங்கும் பொருட்களுக்கும், கடைக்காரர் மதத்திற்கும் சம்பந்தமில்லை. தரமான பொருள் வாங்குவதே முக்கியம் என்று புரிந்தது. மதத்தை எல்லா விஷயங்களிலும் புகுத்தி வைப்பது தவறு என்றும் புரிந்தது. 

கல்லூரி நாட்களில் நான் அரசியல் கருத்துக்களில் தீவிரமாக இருந்தேன். எங்கோ தூரத்திலிருக்கும் சிறிய வியட்நாம் நாட்டின் மீது ஆக்கிரமித்து குண்டுகள் வீசி வந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள நேரிட்டது. என் பெயரும் உன் பெயரும் வியட்நாம் என்று வீதிகளில் பாடியது மனதில் ஒரு சர்வதேச போக்கை உருவாக்கியது. எங்கெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் நமது குரலை பலமாக எழுப்ப வேண்டும் என்று புரிந்தது. இன்று மாணவர்கள் உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிப் பேசவில்லையே என்ற ஆதங்கம் அதிகரித்துள்ளது. 

தங்களுடைய அனுபவத்தில் பல வழக்குகளைச் சந்தித்திருப்பீர்கள் . மனிதனை பக்குவப் படுத்தும் கல்விமுறையை, தற்சமயம் இருக்கும் கல்வியில் காணமுடிகிறதா?

மனிதனை பக்குவப்படுத்தும் கல்விமுறையை நாம் என்றைக்கும் உருவாக்கவில்லை. ஆரம்பநாட்களில் நமது பள்ளிக்கல்வி முறையால் அழுத்தமோ (அ) மனப்பாடம் செய்து ஒப்பிப்பதோ புகுத்தப்படவில்லை. பள்ளி இறுதித் தேர்வில் 1966ம் வருடம் வரை 500க்கு 400 மதிப்பெண்கள் எவருமே எடுத்ததில்லை. அந்த ஆண்டுதான் தினத்தந்தியில் தமிழ்நாட்டில் முதலில் வரும் மாணவனுக்கு 1001 ரூபாய் பரிசு என்று அறிவித்தார்கள். 1967ம் வருடம் வாசன் என்ற மாணவன் 500க்கு 401 என்று மதிப்பெண் எடுத்து அப்பரிசை பெற்றான். எனக்குத் தெரிந்து அதற்குப் பிறகுதான் மதிப்பெண் வாங்கும் போட்டி அதிகரித்தது. அதேபோல் தனியார் டுடோரியல் கல்லூரிகள் பெருகியது. தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் கோனார் நோட்ஸ் வாங்கிப் படித்துத் தேறியவர்கள் 90 விழுக்காடு மாணவர்கள்.  ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போரினால் இருமொழிக் கொள்கை உருவாகியது. வேலையிழந்த ஹிந்தி ஆசிரியர்கள் தமிழ் கற்பிக்கப் பணிக்கப்பட்டார்கள். அத்துடன் உயிருள்ள தமிழ் உயிர் நீத்தது. 

என்றைக்கு அறிவியல்பூர்வமான கல்வி கற்பிக்க நாம் முற்படவில்லையோ, என்றைக்கு தேர்வு மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயிக்குமோ அன்றைக்கே ஒரு மாணவன் இயந்திரகதியாக ஆக்கப்பட்டான். மனிதனாக பக்குவப்படுத்தும் கல்வியை நாம் மறந்துவிட்டோம். 

 சமூகம், கல்வி நிலையம், வீடு இவை மூன்றில் ஒரு மாணவனை வடிவமைப்பதில் எதற்கு முக்கிய பங்கு உண்டு

மூன்று அமைப்புகளுக்கும் பங்குண்டு. ஆரம்பத்தில் வீடு, கல்வி நிலையங்கள், இறுதியில் சமூகத்திற்குப் பொறுப்புண்டு. ஆனால் மிகப்பெரும் பொறுப்பு வளர்ச்சிப் பருவத்தில் கையாளும் கல்வி நிலையங்களுக்கு உண்டு. 

கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளாகத் தாங்கள் நினைப்பவை?  

மாணவன் ஜனநாயகக் குடியரசில் அவனும் ஒரு பங்கு என்ற உணர்வைத் தரும் நெறிமுறைகளை வளர்க்க வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எக்காலத்திலும் அவன் சாதியுணர்வுக்கு அடிமையாகாமல் சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர வேட்கையில் அவன் வளர்ச்சி பெற வேண்டும். இந்த நெறிமுறைகளை பள்ளிக் காலத்திலேயே பயிற்றுவிப்பதற்கு அறநெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.   

தொடக்கக் கல்வி நிலையங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் தலையீடுகள், வீழ்ச்சியைத் தருகின்றனவா அல்லது வகுப்பு வாத வேற்றுமையை விதைக்கின்றனவா?

1958ம் வருடம் கொண்டுவரப்பட்ட ஊராட்சி சட்டத்திற்கு முன்னால் பள்ளிகள் அனேகமாக  மாவட்ட போர்டுகள் (அ) தனியார் வயம் இருந்தது. ஊராட்சி சட்டம் வந்தபிறகுதான் பள்ளிக் கல்வி ஊராட்சிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. அப்பொழுது எழுப்பப்பட்ட எதிர்ப்புக் குரல்களால் கொஞ்சங்கொஞ்சமாக பள்ளிக்கல்வி மையப்படுத்தப்பட்டு தற்பொழுது எல்லா அதிகாரமும் பள்ளிக் கல்வி இயக்குநகரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னால் அரசமைப்புச் சட்டம் 1993ல் திருத்தப்பட்ட போது பஞ்சாயத்துராஜ் என்ற நோக்கத்துடன் பள்ளிக்கல்வி பொறுப்பு ஊராட்சிகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. 

2009ம் வருடம் கொண்டுவரப்பட்ட கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகக்குழு ஒன்றை ஏற்படுத்தி அதன் கீழ் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்கள் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு பங்களிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை ஊராட்சி அமைப்புகளினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், வகுப்புவாத வேற்றுமை விதைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. 

மாறாக, பள்ளிக்கூடங்கள் சமுதாயத்தின் நீட்சி என்பதால் சமுதாயக் கொடுமைகளும் பள்ளிக்கூடத்தில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆசிரியர்களுக்கும் அதில் பொறுப்பு உண்டு என்பதை நாம் உணர வேண்டும். 

பாடதிட்டம் மற்றும் தேர்வுமுறைகள் பற்றிய தங்களின் பார்வை&

தற்போதைய சூழலில், மாணவர்களுக்குக் கல்வி எப்படியாக அமைய வேண்டும்

பாடதிட்டங்கள் வாழ்க்கைக்குப் பயனுள்ள முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மனப்பாடம் செய்து அதன் மூலம் தேர்வு மதிப்பெண்களைக் கூட்டிக் கொள்வது என்றில்லாமல் தேர்வு முறைகளில் கடுமையான மாற்றங்கள் தேவை. மாணவனை தொடர்ச்சியாகக் கவனித்து மதிப்பீடு செய்யும் முறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நியாயமான போக்கில் ஆசிரியர்கள் ஈடுபட அவர்கள் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் உடற்பயிற்சி, விளையாட்டு, கலை, இசை மற்றும் நடனப் பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டு அவற்றிற்கும் மதிப்பெண்கள் வழங்கும் பாடதிட்ட முறை உருவாக்கப்பட வேண்டும். 

புதிய கல்விக் கொள்கை பற்றித் தங்களுடைய பார்வை

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை பயனளிக்காது. அது மாணவனிடம் எவ்வித மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. அதற்கு மாற்றாக தமிழ்நாடு அரசு நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைத்து தமிழ்நாட்டு கல்விக் கொள்கையை உருவாக்கும்படி பணித்துள்ளது. அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. உடனடியாக அந்த அறிக்கையை அரசு வெளியிட்டால் நாம் அதன் உள்ளடக்கத்தைத் தெரிந்து கொண்டு கருத்து கூறலாம். 

 கல்வி நிலையங்களில் கொண்டுவர வேண்டிய சட்டங்கள் என்று, தாங்கள் நினைப்பவை?  

ஏற்கனவே கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவையெல்லாம் உண்மையிலேயே செயல்படுகின்றனவா என்பதைப் பார்ப்பதற்காக கண்காணிப்புக் குழு ஒன்று தேவை. மேலும் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வருடந்தோறும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். 

ஜூன் 18, 2024 அன்று தலைமைச் செயலகத்தில் தாங்கள் சமர்ப்பித்த அறிக்கையில்,  யாவரும் கவனிக்க வேண்டியதாகத் தாங்கள் குறிப்பிட்டதைப் பற்றிச் சில

கல்வி நிலையங்களில் சாதி வேறுபாடுகளை குறைத்து வன்முறைகளை தவிர்ப்பதற்காக ஆலோசனை வழங்கும்படி ஒரு நபர் குழு என் தலைமையில் அமைக்கப்பட்டது. சுமார் ஒன்பது மாதங்கள் அது குறித்து ஆராய்ந்து 600 பக்கங்களுக்கு மிகுதியாக ஒரு அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் இறுதியில் என்னுடைய பரிந்துரைகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டிய பரிந்துரைகளாக நான் குறிப்பிடுவது பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர்களைத் தவிர்த்தல்,  அனைத்து வகையான பள்ளிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருதல், ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் மாற்றம், பள்ளிகளுக்கான ஒட்டுமொத்த பாடதிட்டங்களில் மாற்றம், மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசிகளை கொண்டுவருவதைத் தடுத்தல், அறநெறி வகுப்புகள் நடத்துதல், மாணவர்களுக்கான ஒழுக்க விதிகள் உருவாக்கப்படுதல், மாணவர் சங்கம் அமைத்து ரகசியத் தேர்தல் நடத்துதல், பள்ளிகளில் மாணவர்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்காணிப்பதற்கு பள்ளி நல அலுவலர் நியமித்தல், சமூகநீதி மாணவர் படை உருவாக்குதல் போன்ற பல பரிந்துரைகளை நான் செய்துள்ளேன். 

 சமூக மாற்றத்தில் கல்வியின் பங்கு?  

           சமூக மாற்றத்திற்கான கல்வியை நாம் பள்ளிக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கும் வரை கல்விக்கு மாற்றத்தில் பங்கு இருக்கப் போவதில்லை. ஆனால் கல்வி கற்பதற்கு தடை ஏதுமில்லை என்ற சூழ்நிலையில் வெறும் சுயமுன்னேற்றத்திற்கான கல்வியாக இல்லாமல் கல்விக்கூடங்களில் தயார் செய்து அனுப்பப்படும் மாணவர்கள் தமக்கும் சமூக மாற்றத்திற்கு பங்குண்டு என்ற நிலையை உணர்த்துவதான ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் சமுதாய மாற்றமும் சாத்தியமாகும். 

இந்த நேர்காணலின் மூலமாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனர்களுக்கு தாங்கள் சொல்ல நினைப்பது?

மாணவர்களுக்கு:-  இந்த நாடு உங்களுக்கு சொந்தமானது, இதன் சுதந்திரத்தையும் செல்வங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது உங்களது கடமை. 

ஆசிரியர்களுக்கு:-  ஊதிய விகிதத்தைப் பெருக்கிக் கொள்வது மட்டுமே உங்கள் நோக்கமாக இல்லாமல் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உங்களுடையது என்று அறிந்து செயல்பட வேண்டும். 

பெற்றோர்களுக்கு:-  உங்களது மகவுகள் நன்றாக முன்னேறி வாழ்ந்தால் மட்டுமே போதாது. அவர்களது முன்னேற்றம் இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்தின் ஒரு பங்கு என்று மட்டுமே நீங்கள் நினைக்க வேண்டும். 

கல்வி நிறுவனங்களுக்குக்கு:-  கல்வியை கடைச் சரக்காக கருதாமல் கடைநிலை சமுதாய மாணவன் ஒருவனும் கற்றுத் தேர வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறுவனங்களை நடத்த வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *